சென்ற செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பேரம்பாக்கம் சென்று தலைவரை அவசியம் பார்ப்பது என்று முடிவானது. விடுமுறை நாட்களில் இது போன்ற பண்டிகைகள் வந்தால் அது வேறு விஷயம். ஆனால் வேலை நாட்களில் வந்தால் கஷ்டம் தான். ஏனெனில், பேரம்பாக்கம் நம் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 46 கி.மீ. தூரம். (அப் & டவுன் எப்படியும் 95 கி.மீ.!!)
டூ-வீலரில் சென்றால் பேரம்பாக்கம் போய் சேர எப்படியும் ஒரு மணிநேரத்துக்கு மேலாகிவிடுகிறது. ஆனால் நரசிம்ம ஜெயந்தி அன்று அவரை தரிசிக்கா விட்டால் எப்படி ? எனவே, அதிகாலை சீக்கிரம் எழுந்து 5 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டால், எப்படியும் 9 மணிக்குள் திரும்பிவிடலாம். சற்று லேட்டானாலும் அலுவலகம் போய் சேர்ந்துவிடலாம் என்று முடிவ செய்தோம்.
முந்தைய தினம் திங்கள் மாலை அலுவலகத்தில் சற்று வேலை அதிகம் இருந்தபடியால் வீட்டிற்கு வந்து நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் பதிவு எதுவும் மறுநாளுக்காக தயார் செய்ய முடியவில்லை. எனவே சென்ற ஆண்டு நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி நாம் வெளியிட்ட பதிவுகளையே மீண்டும் பதிவிட்டோம். ஏற்கனவே ஒரு முறை வெளியிட்டிருந்தாலும் அதற்கு இந்த முறையும் வரவேற்பு இருந்தது.
பேரம்பாக்கத்தின் அழகு அப்படி.
இந்த முறை செவ்வாய் அன்று காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்துவிட்டு கிளம்புவதற்கு 5.00 ஆகிவிட்டது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குவீன்ஸ் லேண்ட் தாண்டி சவீதா மெடிக்கல் காலேஜ் அருகில் பிரியும் அரக்கோணம் சாலையில் திரும்பவேண்டும். அங்கிருந்து பேரம்பாக்கம் சரியாக 23 கி.மீ. தூரம்.
இந்த சாலையில் பயணிப்பதே ஒரு இனிமையான அனுபவம் தான். செல்லும் வழியெங்கும் பசுமையான மரங்களும், புல்வெளிகளும், வயல்வெளிகளும், பார்ப்பதற்கு அத்தனை அழகு.
ஆனால் இம்முறை அரக்கோணம் சாலையில் நுழைந்ததுமே நமக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பல இடங்களில் சாலையின் இரு மருங்கிலும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையே பொட்டல் காடாக இருந்தது. (நீங்கள் இங்கு புகைப்படங்களில் பார்க்கும் ஒரு சில மரங்களையும் இந்நேரம் வெட்டி வீழ்த்தியிருப்பார்கள்.)
ஏதோ இங்கே தான் வெட்டியிருக்காங்க … என்னன்னு தெரியலே… என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு சென்றால், செல்லும் வழியெங்கும் மரங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
தண்டலம் கூட் ரோடு, வளர்புரம், மப்படு என எங்குமே மரங்கள் இல்லை. சுமார் 80% மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. நமக்கு என்னவோ போலிருந்தது. எத்தனை ஆண்டுகள் இந்த சாலையில் இந்த மரங்களை ரசிப்பதற்கென்றே சென்று வந்திருப்போம். இப்படி செய்து விட்டார்களே பாவிகள் யார் வேலை இது என்ன காரணம்… ஒன்றுமே புரியவில்லை.
வழியில் ஒரு மரத்தை புகைப்படம் எடுத்தபோது, அங்கே இருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்தோம்.
“ROAD WIDENING க்காக வெட்டியிருக்காங்க சார். நாலு வழிப் பாதை வரப்போகுது இங்கே…”
“இப்போ இங்கே நான்கு வழி பாதை போடணும்னு என்ன சார் அவசியம்? அப்படி ஒன்னும் போக்குவரத்து நெருக்கடி இந்த பக்கம் இல்லையே….”
“தெரியலே சார்… நான் சின்ன வயசா இருக்கும்போதுலேர்ந்து இந்த மரத்தை பார்த்திருக்கேன். என் கண் எதிரேயே வெட்டிட்டாங்க… சார்…” கண்கலங்கியவாறே நம்மிடம் பேசினார்.
“எப்படி சார் ஊர்காரங்க எல்லாம் எல்ப்படி இத்தனை மரத்தை வெட்றதை பார்த்துக்கிட்டே நின்னீங்க? பசுமையை அழிச்சிட்டு என்ன வளர்ச்சி வேண்டிகிடக்கு?”
“நாங்க என்ன சார் பண்றது… நாம ஏதாவது ஆர்ப்பாட்டம் கீர்பாட்டம் பண்ணா தூக்கி உள்ளே வெச்சிடுவோம்னு சொல்லி பயமுறுத்துறாங்க…”
அவர் சொல்வது வாஸ்தவம் தான். பிரச்னை என்று வந்தால் அவர்கள் தானே சந்திக்க வேண்டும்.
சற்று தூரம் தள்ளி போனபோது… மப்பேடு வந்தது. இதே சிங்கீஸ்வரர் கோவிலை மரங்களினூடே நாம் அளித்த முந்தைய படங்களை பாருங்கள். இப்போது அளித்திருக்கும் படங்களையும் பாருங்கள்…
பசுமையை அழித்துவிட்டு இப்படி ஒரு வளர்ச்சி நமக்கு தேவையா?
அப்படியே மரங்களை சாலை விரிவாக்கத்துக்காக வெட்டினார்கள் என்றால், புதிதாக போடப்படும் சாலையின் இரு பக்கங்களுள் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிப்பார்களா?
நண்பர் பசுமைக் காவலர் முல்லைவனத்திடம் இது பற்றி பேசியிருக்கிறோம். அவர் RTI மூலம் விபரங்களை பெற்றுதருவதாகவும், அவரும் மேல் நடவடிக்கையில் இறங்குவதாகவும் கூறியிருக்கிறார்.
மப்பேடு தாண்டி பேரம்பாக்கம் செல்லும் வழி கூட விட்டுவைக்கப்படவில்லை. எல்லாம் பாலைவனமாக காட்சியளித்தது.
மப்பேடு கோவில் அருகே மரங்கள் வெட்டப்பட்டது நமக்கு கண்ணீரையே வரவழைத்துவிட்டது. விழியில் பொங்கிய கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தோம்.
“இறைவா வளர்ச்சி என்ற பெயரில் பசுமை சூறையாடப்பட்டு ஏற்கனவே நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாகவிட்டது. மழையும் பொய்த்துவிட்டது. பசுமைக்கு பெயர் பெற்ற பேரம்பாக்கமும் இப்படி பொட்டல்காடாகிவிட்டதே… இனி எங்கே போய் இப்படி ஒரு அழகை தேடுவேன்…” மனம் வலித்தது.
சரி… இதை தடுக்க நம்மால் இயன்ற எதையாவது செய்வோம்… என்று மனதை தேற்றிக்கொண்டபடி கூவம் கிராமம் வழியாக பேரம்பாக்கம் சென்றோம்.
பேரம்பாக்கம் எல்லைக்குள் நுழைந்தது தான் தாமதம்…. எங்கெங்கு பார்க்கிலும் பசுமை பசுமை. ஆறுதலடைந்தது.
ஒரு பக்கம் நாரைகளும் கொக்குகளும் வயல்வெளியில் காணப்பட்டன. மறுபக்கம் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒரு பக்கம் வயலுக்கு நீர் பாய்ந்துகொண்டிருந்தது.
நேரமாகிவிட்டது…. கோவிலுக்கு போய்விட்டு ரிட்டர்ன் வரும்போது இந்த அழகை படம்பிடிக்கலாம் என்று கோவிலுக்கு சென்றுவிட்டோம்.
நாம் சென்ற நேரம் (எப்படியும் 6.30 AM) இருக்கும். கூட்டம் அதிகமில்லை. அப்போது தான் பக்தர்கள் வர ஆரம்பித்த நேரம்.
இந்த கோவிலில் கோவிலுக்கு முன்புறமே கோ-சாலை உண்டு. முன்பெல்லாம் மூன்று நான்கு பசுக்கள் மட்டுமே இருந்தன. இப்போது பசுக்கள் பல்கிப் பெருகிவிட்டன. ஆகையல முன்னெப்போதையும் விட பல கன்றுக்குட்டிகள் நம்மை வரவேற்றன. நாம பசுக்களிடமும் கண்ருக்குட்டிகளிடம் வைத்துள்ள பாசம் நீங்கள் அறிந்ததே. அவற்றிடம் சிறிது நேரம் செலவழித்து அவைகளிடம் அவர்கள் பாஷையில் பேசிவிட்டுத் தான் இறைவனையே தரிசிக்க செல்வோம்.
இவங்களை கவனிக்காம தலைவரை பார்க்க போகக்கூடாது என்று முதலில் அங்கிருந்த இரண்டு பசுக்களுக்கு அகத்திக்கீரைகள் வாங்கிக் கொடுத்தோம். அவைகள் ஆவலுடன் சாப்பிடும் வரை அருகே நின்றிருந்தோம்.
பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை கொடுப்பதை பார்த்துவிட்டு கன்றுக்குட்டிகள் ஓடிவந்து நம்மை சூழ்ந்துகொண்டன.
“டேய் குட்டிப்பசங்களா இருங்கடா… உள்ளே போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடுறேன்… அதுக்கப்புறம் ப்ரீயா உங்க கூட டயம் ஸ்பென்ட் பண்றேன். கேட்டதெல்லாம் வாங்கித் தர்றேன்” என்று கூறியபடி அவைகளை தடவிக்கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். நம் பின்னேயே ஓடிவந்தன அவை.
உள்ள அர்ச்சனை டிக்கட் வாங்கிக்கொண்டு க்யூவில் நின்றோம். நல்லவேளை சற்று சீக்கிரம் வந்துவிட்டோம். கூட்டம் அதிகம் வர ஆரம்பித்தது.
ஐந்து நிமிடம் தியானம் செய்தபடியே நின்றிருக்க, இதோ என் நரசிம்மன் முன்னே.
கண்கள் பனிக்க, இதயம் துடிக்க, நெஞ்சம் விம்ம காதலாகி கசிந்துருகி என்று சம்பந்தர் பாடிய படி ஒரு திவ்யதரிசனம்.
‘ஸிம்ஹ முகே ரெளத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாப விமோசனம் துரித நிவாரணம்
லக்ஷ்மி கடாக்ஷம் ஸர்வாபீஷ்டம்
அநேஹம் தேஹி லக்ஷ்மிந்ருஸிம்ஹ’
(ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் ஸ்தோத்திரமாகும். இதை அவருடைய படத்தின் முன்பு பசும்பால் நைவேத்தியம் செய்து 24 முறைகள் சொல்லி வந்தால் நமக்குத் தெரிந்த பிரச்சினைகள், கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகள் ஆகிய யாவற்றையும் ஒருங்கே நிவர்த்தியடைய வைக்கும். அசைவ உணவுப் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.)
“ஐயனே… எங்கள் பல வருட வாழ்க்கை, உன் கணக்குப் படி சில நொடிகள் தான். ஆனால் அந்த சில நொடிகள் நாங்கள் படும்பாட்டை நீ அறிய மாட்டாய். உன்னிடமும் சரி… உன் மருமகனிடமும் சரி…. எனக்கு அளவற்ற பாசம் உண்டு… இந்த எளியவன் தவறுகள் ஏதேனும் செய்திருப்பின் அவற்றை பொறுத்துக் கொண்டு அல்லவைகளை நீக்கி நல்லவைகளை பெருக்கி அருள வேண்டும். வல்லமை தருவாய் இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே! உன்னை தரிசிக்க வரும் வழியில் இப்படி பசுமையை சூறையாடிவிட்டார்களே… நீ தான் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும்! மற்றபடி உன் அவதாரத் திருநாள் அன்று உன்னை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றி”
இதற்கு மேல் ஒன்றும் கேட்க தெரியவில்லை. நம் நண்பர்களுக்காகவும் வாசகர்களுக்காகவும் பிரார்த்திக்கொண்டோம். சில நிமிடங்களில் துளசியும் தீர்த்தமும் தர, அவற்றை பெற்றுக்கொண்டு, சடாரி பெற்ற பின்னர் ஐயனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
பிரகாரத்தை மும்முறை வலம் வந்தோம். பக்தர்கள் கூட்டம் அதற்குள் பன்மடங்கு அதிகரித்தது.
சூடான வெண்பொங்கல் பிரசாதம் தந்தார்கள். சாப்பிட்டபடி கோவிலை பக்தர்கள் கூட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தோம்.
கொடிமரத்துக்கு அப்பால் நமஸ்கரித்துவிட்டு கோவிலின் அழகை புகைப்படங்கள் எடுத்தோம். எத்தனை முறை புகைப்படங்கள் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக இருக்கிறது இந்த ஆலயம்.
கோவிலில் அறங்காவலர் திரு.நந்தகுமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
எதிரே பிரம்மோற்சவம் நோட்டீஸ் கண்ணில் பட்டது. “எடுத்துக்கோங்க சார்..” என்றார். எடுத்துப் பார்த்தோம். 19 ஜூன் முதல் 30 ஜூன் வரை 12 நாட்கள் பிரம்மோற்சவம்.
சென்ற ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இந்த ஆலயத்தில் உழவாரப்பணி செய்திருந்தோம். இந்த ஆண்டும் செய்ய விருப்பம் தெரிவித்தோம். நரசிம்மர் அருளால் இந்த ஆண்டு ஜூன் 15 அன்று இங்கு உழவாரப்பணி செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது.
நரசிம்ம ஜெயந்தி என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். அர்ச்சகர் முதல் அனைவரும் பிஸியாக இருந்தார்கள். உழவாரப்பணி மற்றும் ஆலயத்தின் தேவைகள் குறித்து அன்று பேசவோ சர்வே செய்யவோ முடியவில்லை. எனவே இன்னொரு நாள் வந்து அனைவரிடமும் பேசி சர்வே செய்துவிட்டு வருவது என்று தீர்மானித்துள்ளோம்.
சென்ற முறை நாம் இங்கு செய்த உழவாரப்பணி பெரிதும் பாராட்டப்பட்டது. மிகச் சிறப்பாக நடைபெற்றது. அது தொடர்பான பதிவு கூட பெண்டிங் இருக்கிறது. விரைவில் வழங்கப்படும்.
(வரும் ஜூன் 8 குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் உழவாரப்பணி நடைபெறும், ஜூன் 15 பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயத்தில் நடைபெறும்.)
வெளியே வந்தோம்… விஷேட நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு திடீர் கடைகள் முளைத்துவிடும். அர்ச்சனைக்கான தேங்காய்ப் பூ மற்றும் பழம், அகத்தி கீரைகள் ஆகியவை கிடைக்கும்.
கோ-சாலையில் ஓரிரண்டு பசுக்களுக்குத் தான் வரும்போது அகத்திக்கீரை கொடுத்தோம்.. பாக்கி பசுக்களுக்கு ஏதேனும் வாங்கி தரவேண்டுமே… அகத்திக்கீரைகள் ஒரு நான்கைந்து கட்டுக்கள் வாங்கி அனைத்து பசுக்களுக்கும் கொடுத்தோம். கன்றுக்குட்டிகள் நம்மையே சுற்றி சுற்றி வந்தன.
கன்றுக்குட்டிகள் உண்பதற்கு ஏற்ப சற்று கனிந்த வாழைப்பழங்களாக கொஞ்சம் வாங்கி ஆளுக்கு ரெண்டு பழம் கொடுத்தோம்.(ஊட்டினோம்!). நகரத்து பரபரப்புக்களையும் சத்தத்தையும் நினைக்கும்போது இவற்றை பிரிய மனசேயில்லை. பேசாமல் இங்கேயே எங்கேயாவது உட்கார்ந்துகொண்டு இவற்றை பராமரிக்கும் வேலை இருந்தல அதை பார்த்துக்கொண்டு இருந்துவிடலாமா என்று கூட ஒரு கணம் மனம் நினைத்தது. நம்மை காயப்படுத்த இவற்றுக்கு தெரியாது. இவற்றுக்கு தெரிந்ததெல்லாம் விசுவாசம் ஒன்று மட்டுமே.
ராஜகோபுரத்தை ஒரு நிமிடம் பார்த்தோம். அங்கு சுற்றிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து போட்டோ எடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டோம்.
(அவன் எடுத்தது தான் இந்த படங்கள்!)
நரசிம்ம ஜெயந்தி அன்னைக்கு நரசிம்மரை தரிசனம் பண்ணியாச்சு. கோ-சம்ரோக்ஷனம் ஓரளவு பண்ணியாச்சு. இருந்தாலும் ஒரு மனநிறைவு ஏற்படவில்லை. தலைவர் பிறந்தநாளை அவர் மனம் குளிரும்படி இன்னும் நல்லா கொண்டாடனுமே… லீவ் நாளா இருந்தா பரவாயில்லே… ஆபீஸ் வேற போகணும்… என்ன செய்றது…. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியபடி வண்டியை ஸ்டார்ட் செய்து கோவிலுக்கு அருகே முனையில் திரும்பினோம்…
வரும்போது வயலில் வேலை செய்த விவசாயிகளும் பெண்களும் நினைவுக்கு வந்தார்கள். வெயிலில் வேலை செய்யும் அவர்களுக்கு ஏதேனும் வாங்கித் தர முடிந்தால் நன்றாக இருக்குமே… மஹா பெரியவா ஒரு முறை இது போன்ற வயலில் வேலை செய்பவர்களுக்கு மோர் வாங்கிக்கொடுக்கும்படி ஒரு பெண்மணியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.
திருப்பத்தில் ஒரு பெரியவர் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தார்.
“ஐயா பெரியவரே… இங்கே இளநீர் எங்கேயாச்சும் கிடைக்குமா? ஒரு 15 – 20 இளநீர் வேணும்”
“இளநீர்காரர் வருவார். ஆனா வர்றதுக்கு லேட்டாவுமே… ஒரு 11 மணிக்கு மேல வருவார்.”
“11 மணிக்கு மேலயே… அவ்ளோ நேரம் ஆகுமா? நான் ஆபீஸ் போகணும் ஐயா… வேற பக்கத்துல எங்கேயாச்சும் கிடைக்குமா?”
“எதுக்கு ? வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களா?”
“இல்லே… வர்ற வழியில் வயல்ல வேலை செய்றவங்களை பார்த்தேன்… அவங்களுக்கு வாங்கி தரத்தான்”
“அப்போன்னா ஒன்னு பண்ணுங்க. நேரே பேரம்பாக்கம் போங்க. அங்கே மெயின் ரோட்டுல கிடைக்கும்!”
மெயின்ரோட்டிலிருந்து நாம் கோவிலுக்கு வருவது ஷார்ட் ரூட் என்பதால் அவர் சொன்ன வழி நமக்கு புரியவில்லை. திருதிருவென விழித்தோம்.
அருகே நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு, “டேய் சார் கூட மெயின்ரோடு வரைக்கும் போய்ட்டு வாடா… அங்கே இளநீர் விக்கிதான்னு பாரு…. 20 இளநீ வேணுமாம்…இருந்தா அப்படியே இளநீ காரரை கூட்டிட்டு வந்துடு”
சிறுவன் நம் பைக்கில் உட்கார நேராக பேரம்பாக்கம் மெயின்ரோடு சென்றோம். ஆனால் அங்கு இளநீர் கிடைக்கவில்லை.
நேரம் ஓடிகொண்டிருந்தது. இவை அனைத்தையும் முடித்துவிட்டு அலுவலகம் செல்லவேண்டும். பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நாம் முடிவு செய்துவிட்டால் எப்பாடுபட்டாவது அதை செய்து முடித்துவிடுவோம். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.
திரும்பவம் கோவிலுக்கே வந்தோம். வரும் வழியில் அந்த ஊரின் மளிகை கடை தென்பட்டது.
இளநீ கிடைக்கிற மாதிரி தெரியலே. பேசாம எல்லாருக்கும் மோர் ஒரு பாக்கெட் வாங்கி கொடுத்துடுவோம் என்று தோன்றியது.
“தம்பி இந்த கடையில மோர் கிடைக்குமா?”
“கிடைக்கும் சார்…”
வண்டியை நிறுத்திவிட்டு மோர் பாக்கெட் 20 வாங்கிக்கொண்டோம்.
“கொஞ்சம் கூட வர்றியா தம்பி…. ஊர் எல்லையில வயல்ல வேலை செய்றவங்களுக்கு இதை கொடுக்கணும்… நான் திரும்ப உன்னை கொண்டு வந்து இங்கேயே கோவில் கிட்டேயே விட்டுடுறேன் விட்டுடுறேன்”
“சரிங்க சார்… ஒன்னும் பிரச்னையில்லே…..போலாம்”
வண்டியை வேகமாக முடுக்க, அடுத்த சில நொடிகளில் விவசாயம் நடைபெறும் வயலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தோம்.
அந்த சிறுவன் நமக்கு உன்னே நடக்க… நாம் பின் தொடர்ந்தோம்.
காலை வரப்பு மீது வைக்க, கால் வழுக்கிக்கொண்டு சென்றதோடு புதைந்தும் போனது… பேன்ட் சேறாகிவிட்டது….
நேரே வீட்டுக்கு தான் போகவேண்டும் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாமும் உடன் சென்றிருப்போம். ஆனால் நேரே அலுவலகம் செல்லவேண்டும் என்பதால், தயங்கினோம். (பேலன்ஸ் தவறி வயலுக்குள்ளே விழுந்துட்டா அப்படிங்கிற பயம் தான்!)
“தம்பி நான் இங்கேயே நிக்கிறேன்… நீ கொஞ்சம் போய் அவங்ககிட்டே கொடுத்துட்டு வந்துடுறியா?”
“சரிங்க சார்… நீங்க இங்கேயே நில்லுங்க… நான் கொடுத்துட்டு வந்துடுறேன்” என்று கூறியபடி, விடு விடுவென வேகமாக வரப்பு மீது நடந்தான் அந்த சிறுவன்.
அவன் மோர் பாக்கெட்டை அங்கு வேலை செய்த பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்க, அவர்கள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்கள். வெயில் வேறு அடித்து வெளுக்க ஆரம்பித்த நேரம் அது.
“யார் கொடுத்தாங்கப்பா?” அவர்கள் கேட்க, நம்மை கைகாட்டினான் சிறுவன்.
“இன்னைக்கு நரசிம்ம ஜெயந்தி. நரசிம்மர் கோவிலுக்கு வந்தேன். போகும்போது உங்களை பார்த்துகிட்டே தான் போனேன்… ஏதோ உங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு தோணிச்சி…. அதான். இளநீர் வாங்கித் தரணும்னு எனக்கு ஆசை. ஆனா இளநீர் இந்த ஊர்ல கிடைக்கலே… அதான் மோர் வாங்கிட்டு வந்தேன்”
“இளநீர் வேணாம்பா… இளநீர் குடிக்கமாட்டேன் நான். மோர் தான் சரி…” என்றார் அந்த அம்மா. அவருக்கு எப்படியும் 65 – 70 வயதிருக்கும். அந்த வயதிலும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
இவர்களை போன்றவர்கள் சேற்றில் காலை வைக்கவில்லையென்றால் நாம் எப்படி சோற்றில் கை வைக்க முடியும்?
“அம்மா… வேற எதாச்சும் உங்களுக்கு வேணுமா?”
“அப்படியே நாஷ்டா வாங்கிக் கொடேன் கண்ணு….”
நாம் இதை எதிர்பார்க்கவில்லை. திறந்து நம்ம தலைவரோட நாளன்னைக்கு “எனக்கு சாப்பிட டிபன் வேண்டும்” என்று அவர்கள் வாய் திறந்து கேட்டது சந்தோஷமாக இருந்தது. அப்பாடா… நரசிம்ம ஜெயந்திக்கு அன்னதானம் பண்ணனும்னு நினைச்சிட்டுருந்தோம். அது இப்போ கைகூடிடிச்சு. உள்ளுக்குள் இரே குதூகலம்.
“என்ன வாங்கிட்டு வர? எத்தனை பேருக்கு வாங்கிட்டு வர?”
“ஏதோ உன்னால முடிஞ்சதை வாங்கிட்டு வா ராசா…. ஒரு நாலு பேருக்கு வாங்கிட்டு வா போதும்”
“என்ன வேணும்னு சொல்லுங்க… பாட்டி.. அப்போதானே எனக்கு வாங்கிட்டு வர ஈசியா இருக்கும்”
“நாலு இட்லி வாங்கினு வா போதும் ராசா”
“ஒ.கே. நாலு இட்லி ஒரு வடை வாங்கிட்டு வர்றேன். நீங்கள் நாலு பேருக்கு கேட்டீங்க. நான் எட்டு பேருக்கு வாங்கிட்டு வர்றேன்…. எல்லாரும் சாப்பிடுங்க…..”
(இந்த உரையாடல் சற்று தூரத்தில் இருந்தபடி நடந்தது!)
மோர் கொடுத்து முடித்துவிட்டு சிறுவன் நம் அருகே வந்தான். அடுத்து அந்த சிறுவனை நோக்கி “தம்பி… இவங்க டிபன் கேக்கிறாங்க… இங்கே எங்கே இட்லி கிடைக்கும் இப்போ?”
“சார் கோவில் கிட்டே நாம் திரும்பினோம் இல்லியா அங்கேயே ஒரு கடை இருக்கு. அங்கேயே வாங்கிக்கலாம்..”
“இப்போ இருக்குமா?”
“இருக்கும்…. இன்னைக்கு கோவிலுக்கு நிறைய கூட்ட வரும்கறதால கொஞ்சம் கூடவே எல்லாம் போட்டிருப்பாங்க… உடனே போலாம்!”
மீண்டும் கோவிலை நோக்கி பயணம்.
வழியில் அச்சிறுவனிடம் விவசாயிகள் பற்றியும் விவசாயத்தின் அருமை பற்றியும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.
“தம்பி… நான் ஏன் இதை செய்றேன்னு தெரியுமா?”
“தெரியலையே… சொல்லுங்க சார்….”
“விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. கடவுளுக்கு இணையானவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது நம்மோட கடமை. பணம் சம்பாதிக்கிறதுக்கு இந்த உலகத்துல ஆயிரம் தொழில் இருக்கு. ஆனா உணவை சம்பாதிக்க விவசாயம் மட்டுமே இருக்கு. நம்மால எல்லா விவசாயிகளுக்கும் இது மாதிரி சேவை செய்ய முடியலேன்னாலும் ஒரு நாலு பேருக்கு செஞ்சா கூட போதும். நீயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவங்களுக்கு உதவி பண்ணனும். குடிக்க தண்ணி கொண்டு போய் கொடுக்கலாம். உங்க வீட்டுல பண்டிகை நாளன்னைக்கு பலகாரம் செஞ்சா அம்மாகிட்டே அதுல கொஞ்சம் வாங்கிட்டு வந்து இவங்களுக்கு கொடுக்கலாம்… இப்படி உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்யனும்… என்ன…”
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் 1031)
“நிச்சயம் சார்… எங்கிருந்தோ வர்ற நீங்களே எங்க ஊர்க்காரங்களுக்கு செய்யும்போது நான் செய்ய மாட்டேனா என்ன?”
பேசிக்கொண்டே வந்ததில் ஊர் வந்துவிட்டது. டிபன் கடைக்கு முன் நிறுத்தி, 4 இட்லி + ஒரு வடை = 8 பார்சல்கள் ஆர்டர் செய்தோம்.
நாம் இந்த சிறுவனுடன் வண்டியில் வந்து நின்றதும்… அவன் நண்பர்கள் “டேய் எங்கேடா போன… எங்கேடா போன…..”
நண்பன் தங்களைவிட்டு எங்கேயே முக்கியமான விஷயத்துக்கு போய்விட்ட உணர்வு அவர்களுக்கு. சிறுவர்களுக்கே உரிய குணம் அது.
அவன் விஷயத்தை விளக்கி கூறியதும்…. “சார்… சார்… நானும் உங்க கூட வண்டியில வர்றேன் சார்… நானும் உங்க கூட வண்டியில வர்றேன் சார்…” என்று சுமார் மூன்று நான்கு சிறுவர்கள் நம்மை மொய்த்துக்கொண்டனர்.
“மூணு பேருக்கு மேல வண்டியில போக முடியாதேப்பா …. உங்கள்ள யாராவது ஒருத்தர் வாங்க… ”
அவர்களாக பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
“நான் வர்றேன் சார்… திரும்ப இங்கேயே கொண்டாந்து விட்டுடுறீங்களா?”
“நிச்சயமா….”
நாங்கள் பேசிக்கொண்டிருக்க…. கடையில் வேகமாக பார்சல் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
“எங்கே இருந்து வர்றீங்க? ஏன் வாங்கித் தர்றீங்க? அது உங்க நிலமா?” இப்படி இந்த சிறுவன் நம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடாய்ந்துவிட்டான்.
அவனுக்கு பொறுமையாக பதில் சொன்னேன்.
“ஓ… சமூக சேவையா??”
“இல்லை… கடமை!” என்றோம்.
பார்சல்கள் தயாராகிவிட… மூவரும் மீண்டும் உழவு நடைபெறும் வயல் நோக்கி புறப்பட்டோம்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த டிபன் கேட்ட அந்த அம்மாவை மட்டும் கூப்பிட்டு… அவர்களிடம் பார்சல்களை ஒப்படைத்தோம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (குறள் 1033)
“பாட்டி 4 பேருக்கு டிபன் கேட்டீங்க… எட்டு பேருக்கு வாங்கிட்டு வந்திருக்கோம்… இந்தாங்க” என்று கூறி அந்த சிறுவர்களை வைத்தே அந்த பார்சல்களை அவர்களிடம் ஒப்படைத்தோம்.
“ரொம்ப சந்தோஷம் தம்பி… நல்லா இரு ராசா… நல்லா இரு”
“வேற எதாச்சும் வேணுமா?”
“வெத்தலை பாக்கு வேணும்… நீ காசு கொடு. நான் வாங்கிக்கிறேன்” என்றார்.
வயதானவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது அறங்களுள் மிகச் சிறந்த அறமாகும். இதைச் செய்யவே கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
பாட்டி கையில் ஒரு பத்து ரூபாய் கொடுத்து… “இதை வெத்தலை பாக்குக்கு வெச்சிக்கோ பாட்டி…” என்று கூறி விடைபெற்றோம்.
சிறுவர்களுடன் பேசிக்கொண்டே வந்து, அவர்களை கோவில் அருகே திரும்ப எத்தனிக்கையில் எதிரே பெட்டிக்கடை தென்பட்டது. அந்த பாட்டி கேட்ட, வெத்தலை பாக்கு நினைவுக்கு வந்தது.
பாட்டி கொடுத்த காசுக்கு நாளைக்கு வெத்தலை வாங்கிகிடட்டும். நாம இப்போ வெத்தலை பாக்கு வாங்கிக்கொடுப்போம் என்று கருதி இங்கு ஒரு பத்து ரூபாய்க்கு வெத்தலை + பாக்கு + சுண்ணாம்பு வாங்கிக்கொண்டோம்.
சிறுவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
“சார் உங்க பேர் என்ன?” என்று கேட்க…
“நான்….. கோடியில ஒருத்தன்… (அதாவது அவனோட பக்த கோடிகள்ல ஒருத்தன்!) ரெண்டு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ்… சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்! வர்றேன்…!!”
மீண்டும் வயலுக்கு வந்து, வண்டியை நிறுத்திவிட்டு பாட்டியை அழைத்து அந்த தாம்பூலத்தை கொடுத்துவிட்டு தான் கிளம்பினோம்.
இவை அனைத்தும் செய்யப்பட்டது நம் தளம் சார்பாகத் தான்.
(அடுத்த முறை விவசாயிகள் வயலில் வேலை செய்வதை பார்த்தால், கோவில் கோபுரத்தை பார்த்தால் கையெடுத்து கும்பிடுவதை போல அவர்களையும் கையெடுத்து கும்பிடுங்கள். முடிந்தால் அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுங்கள். கையில் கொடுக்க எதுவும் இல்லையா? ஆளுக்கு ஒரு ஐம்பது ரூபாயோ நூறு ரூபாயோ கொடுங்கள். இதைவிட புண்ணியம் வேறு இருக்க முடியாது!)
ஆபீஸ்க்கு அன்னைக்கு ஒரு மணிநேரம் லேட்! நாம் லேட்டா என்னைக்கு போறோமோ அன்னைக்கு தானே பாஸ் நமக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருப்பாரு. அன்னைக்கும் அது தான் நடந்தது..! வேற என்ன…. பொய்மையும் வாய்மையிடத்த… குறள் வழி சமாளிப்பு தான்! (ஹி…ஹி!!!)
[END]
தங்கள் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி. மிகவும் superb ஆகவும் live ஆகவும் உள்ளது. மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது, நாம் நியூ இயர் அன்று பே ரம்பாக்கமும் சிங் கீஸ்வரர் கோயிலும் சென்ற பொழுது வழி நெடுகிலும் பசுமையாக இருந்தது கண் கொள்ளக் காட்சியாகும்.
கோ சம்ரோக்ஷனம் நம் தளம் சார்பாக செய்யப்பட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. இதனால் நம் தள வாசகர்களுக்கும் சிறிதளவு புண்ணியம் கிடைக்கும். பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் உணவு கொடுத்து அவற்றை மகிழ்வித்து மகிழ்ந்துள்ளீர்கள்.
பேரம்பாக்கம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் மீண்டும் உழவாரபணி செய்ய அழைத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி
குன்றத்தூர் உழவார பணியும், பேரம்பாக்கம் உழவார பணியும் இனிதே நடைபெற எமது வாழ்த்துக்கள்
வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு மோரும் டிபனும், தாம்பூலமும் வாங்கி கொடுத்து விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் .உங்களுடன் வந்த சிறுவர்களுக்கும் நல்லது செய்ய ஊக்குவித்து விட்டீர்கள் .
நாமும் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வோம்
நன்றி
உமா
அய்யா, உங்கள் பனி வெரி வெரி எச்செல்லேன்ட், பாராட்டுகள்.
அருமையான பதிவு.
Great Sundar G
I always expecting these kind of services from all.
Always my support for you..
Thanks
Nagaraj T.
மிக நீண்ட பதிவு.
படிக்க படிக்க மிக இனிமையாக போனது.
எப்போதும் போல உடன் பயணித்த உணர்வு.
மரங்கள் வெட்ட பட்டதை பார்க்கும் போது மனம் மிகவும் வேதனை பட்டது. நரசிம்ஹ ஜெயந்தி அன்று நீங்கள் நினைத்த மற்றும் எதிர்பார்க்காத பல விசயங்களை நடத்தி முடித்த திருப்தி உங்கள் சொற்களில் உள்ளது.
எங்கள் எல்லோருக்கும் அதுவே சந்தோசம்.
நன்றி
எனக்கு தெரிந்த வரையில் மரங்களை வெட்டி சாலைகளை அகலப்படுத்துவதற்கு முன்பு EIA அதாவது Environment Impact Assessment செய்வார்கள். MoEF அதாவது Ministry of Environment & Forests அனுமதி கொடுத்தபிறகு மரங்களை வெட்டலாம். ஆனால் வெட்டியா மரங்களுக்கு பதிலாக சாலைகளை அமைத்தபிறகு மரக்கன்றுகளை நடவேண்டும். அந்த நரசிம்ஹன்தான் இவர்களுக்கு நல்ல புத்தி தரவேண்டும்.
மீண்டும் ஒரு மனநிறைவான பதிவு. சிறுவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி உண்மையானது.
Nice to read. மரங்கள் வெட்ட பட்டு இருப்பதை பார்க்கும் போது மனம் வலிக்கின்றது.
மரங்கள் வெட்டப்பட்டது பசுமை க்கொலை நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில் வெகு சீக்கிரம் இதற்கு ஒரு பதில் கிடைக்கும் என நம்புவோம் என் கதா நாயகன் (என்னைப்பொறுத்த வரை நரசிம்மன் மட்டும்தான் உண்மை கதாநாயகன்) நிச்சயம் சரியான நேரத்தில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார் .