Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > பிறரைப் பற்றி அவதூறு சொன்னால் நமக்கு கிடைக்கும் வெகுமதி! – MONDAY MORNING SPL 44

பிறரைப் பற்றி அவதூறு சொன்னால் நமக்கு கிடைக்கும் வெகுமதி! – MONDAY MORNING SPL 44

print
ரு மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல், அப்படியே விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை இடுவர். இதனால், தங்களுக்கு புண்ணியம் சேருமென அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்ட, அந்த மன்னன், அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தின் ஒரு உருண்டையைப் போட்டான். மகரிஷியும் வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே போய்விட்டான்.

King & Saint

மறுநாள், மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்க்கு தயாராக இரு!” என்று என சொல்லிவிட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். விளையாட்டாக செய்த தவறுக்கு வருந்தினான். தானதர்மம் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அங்கு தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை வரவழைத்து, அவர்களது  திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறி அனுப்பி விடுவான். இதையே தினசரி வழக்கமாக கொண்டிருந்தான்.

இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான், என்றனர். இப்படியாக பல பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள், பார்வையற்ற தன் கணவரை அழைத்து வந்த ஒரு கற்புக்கரசி, அரசரின் குடிலின் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்த கணவன், “நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார்.

“அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப் பெண்.

“ஓ! தானம் கொடுப்பதாகச்சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர். அந்தப்பெண் பதறிப்போய் உடனே அவரது வாயைப் பொத்தினாள்.

“சுவாமி…! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு இவன் கன்னியர்க்கு தானதர்மம் செய்து, நற்போதனைகளைச் செய்தான். ஆனால், இவனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாணமலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாகப் பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள்” என்றாள்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

(நன்றி : சைவநீதி | Kumar Esan)

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (குறள் 194)

நண்பர் ஒருவர் நம் முகநூலில் பகிர்ந்த கதை இது. (ஓவியத்தை நமது தளத்தின் பிரத்யேக ஓவியர் திரு.ரமீஸ் வரைந்திருக்கிறார்.)

இன்றைய உலகிற்கு அவசியம் தேவையான கதை இது. உண்மை என்ன ஏது என்று தெரியாமலே காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம செய்த பாவத்தை சுமக்கவே நமக்கு இந்த ஒரு ஜென்மா போதுமா என்று தெரியாது. இதுல தேவையில்லாமல் புறம்பேசி மத்தவங்க பாவத்தை நாம ஏன் சுமக்கனும்?

ஏற்கனவே இது தொடர்பாக வேறு ஒரு பதிவை நாம் சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தோம். அவசியம் அதையும் படிக்கவும்.

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================
[END]

5 thoughts on “பிறரைப் பற்றி அவதூறு சொன்னால் நமக்கு கிடைக்கும் வெகுமதி! – MONDAY MORNING SPL 44

  1. நன்றி இதை அனைவரும் கடைபித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்

  2. ஓவியர் திரு ரமீஸ் அவர்களுக்கு என்னுடைய பிரதியேக வணக்கம் அவரது ஓவியத்தில் வரலாற்று உண்மைகள் நேரில் நிற்பது போல் உள்ளது.

  3. Very true Sundar, must be followed by everyone, Nowadays everyone passes comments about celebrities without knowing whether it is true or not.

    It has become a fashion in the social networking sites to tease the celebrities, that platform could be used for something better.

  4. பாவம் எது என்று தெரியாமலேயே நாம் பாவ மூட்டைகளை சேர்த்துக் கொண்டு இருக்கிறோம்.
    இந்த கதையை படித்த பின்பு, உண்மையோ பொய்யோ யாரைப் பற்றியும் நாம் தவறாக பேசக் கூடாது.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *