விபத்து காரணமாக முதுகெலும்பு ஒடிந்து, தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற பல ஜீவன்களுக்கு அடைக்கலம் தரும் ஆலமரமாய் நிற்கிறார் ஒருவர். அவர் தான் வடலூரை சேர்ந்த 70 வயதாகும் திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள்.
ஸ்வாமிகள் என்றவுடன் ஏதோ சாமியார் என்று நினைத்துவிடாதீர்கள். பெயரில் தான் சுவாமிகள் என்ற வார்த்தை இருக்கிறதே தவிர, இவர் ஒரு மிகப் பெரிய தொண்டர். தொண்டுக்கென்றே தம்மை அற்பணித்துக்கொண்டவர்.
இவர் கதையை படியுங்கள்… நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
நாம் இதுவரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக வித்தியாசமானவர் இந்த சிவப்பிரகாச சுவாமிகள். நம்மையெல்லாம் வெட்கப்படவைப்பவர். டிசம்பரில் நடைபெற்ற நமது பாரதி விழாவுக்கு இவர் தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேர சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவரால் வர இயலவில்லை.
சுவாமிகளை இதுவரை நாம் இரண்டு முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு சென்ற நவம்பர் இறுதியில் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சென்றபோது. அடுத்தது இதோ இந்த மாதம் முதல் வாரம் சென்றபோது. இரு சந்திப்பின் போதும் நாம் கண்டவற்றை, நமக்கு கிடைத்த அனுபவங்களை தொகுத்து தந்திருக்கிறோம்.
“உன்னால் என் உடலைத் தான் முடக்க முடியும்…. என் மனதை அல்ல!”
வடலூர் சத்தியஞான சபைக்கு வருவோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இந்த பகுதியில் தான் ‘ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை’யை நிறுவி, வாழ்க்கையில் கைவிடப்பட்ட ஜீவன்களுக்கு ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.
சுவாமிகளை நாம் முதல் முறை சந்தித்தபோது அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அவரால் எழுந்து நடமாட முடியாது. படுத்துக்கொண்டு தான் அவரால் எதையும் செய்ய முடியும். ஆனால், இந்த நிலையிலும் அவர் முகத்தில் தவழும் புன்னகை இருக்கிறதே…. விதியையே ஏளனம் செய்யும் புன்னகை அது. “உன்னால் என் உடலைத் தான் முடக்க முடியும்…. என் மனதை அல்ல!” என்று விதிக்கே சவால் விடும் புன்னகை அது.
சுவாமிகளின் சொந்த ஊர் பல்லடம். பெற்றோர் வைத்த பெயர் கணேசன். சிறிய வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. காஞ்சி தொண்டை மண்டல ஆதீனத்தில் சேர்ந்து சமய இலக்கியங்கள் படித்தார். படித்ததை வைத்து சமய சொற்பொழிவுகளுக்கு செல்வார். அப்போது தான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சொற்பொழிவுகளில் கிடைத்த வருவாயை வைத்து 1989 இல் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலாக இருக்கிறது.
சொற்பொழிவு வருமானத்தின் மூலம் ஒரு பெருந்தொண்டு!
சுவாமிகளின் முக்கிய பணியே அந்த நாள் முதல் இன்று வரை சொற்பொழிவு தான். தேவாரம், திருவாசகம், திருக்குறள், கந்தபுராணம் என்று தனக்கு தெரிந்த பக்தி இலக்கியங்களை பற்றி ஊர் ஊராக போய் சொற்பொழிவு நிகழ்த்துவார். அதன் மூலம் கிடைக்கும் பொருளை கொண்டு உதவுவார். ஆரம்பத்தில் நடந்து சென்றவர் பின்னர் சைக்கிளில் மைக்கை கட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தார்.
சுவாமிகள் ஆதரவற்றோரை வைத்து பராமரிப்பது தெரிந்து பலர் தங்களால் இயன்றதை அவருக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுப்பார்கள். கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று சொல்லமாட்டார். அரிசி, தவிடு, காய்கறி கழிவுகள் என எது கிடைத்தாலும் அதைக் கொண்டு வந்து உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வார்.
2004-ல் சாலை விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவடம் கடுமையாக பாதிப்பட, அதற்கு பிறகு இவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இருப்பினும் இவரை நம்பி உள்ள ஜீவன்களை கைவிட முடியாதே… படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும் சொற்பொழிவுகளுக்கு போய்க்கொண்டு தான் இருக்கிறார்.
நீங்கள் யோசிக்க வேண்டிய இடம் இது தான்.
தனக்கு இப்படி ஆனவுடன் இவர் ஆதரவற்றோர்களை அரவணைக்கும் இந்த தொண்டை துவங்கவில்லை. ஏற்கனவே இவர் அதை செய்து வந்தவர் தான். தனது சொற்பொழிவு மூலம் கிடைத்த அத்தனை பணத்தையும் கொண்டு பலரை காப்பாற்றியவர் தான். இறைவனுக்கு ப்ரீதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவந்தவர் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், விபத்து ஏற்பட்டு முதுகெலும்பு உடைந்து இவரை கட்டிலிலேயே முடக்கி போட்டுவிடுகிறது. இந்த இடத்தில் நாமாக இருந்தால், விரக்தியில் “போய்யா நல்லது செஞ்சி என்னத்தை கண்டேன்…” என்று அனைத்தையும் விட்டுவிட்டு, போயிருப்போம். வாழ்வை எதிர்கொள்ள தெரியாத கோழைகள் என்றால் தற்கொலை முடிவை நாடியிருப்போம். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் செய்தது என்ன? அங்கே தான் அவர் உண்மையில் மகானாகிறார். அந்த நிலையிலும் தனது பணியையோ தொண்டையோ அவர் நிறுத்தவில்லை. இது தான் மனிதனுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்.
இவருடைய நிலையை பார்த்து பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் என சிலர், இவருக்கு உதவிவருகிறார்கள். அவர்களால் தான் இதை தொடர்ந்து நடத்த முடிவதாக குறிப்பிடுகிறார் சுவாமி.
இப்போதும் இவர் ஆஸ்ரமத்துக்கு ஏதேனும் தேவை என்று நினைத்தால் அது எவர் மூலமேனும் தானாக வந்து சேர்ந்துவிடும். கேட்பது தனக்காக அல்லவே. தன்னை நம்பியிருக்கும் ஆதரவற்ற ஜீவன்களுக்காகத் தானே.
சுவாமிகளுடன் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் மாதினியார். திருநாவுக்கரசரின் தாயார் பெயரை இவருக்கு சூட்டியிருக்கிறார் சுவாமிகள். எட்டு மாத குழந்தையாக இருந்தபோது அனாதையாக விடப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டவள் இவள். தன் குழந்தயை போன்றே மாதினியை வளர்த்து வருகிறார் சுவாமிகள்.
மதுரையில் சமீபத்தில் அதலை என்னும் ஊரில் உள்ள சிவன்கோவிலின் சித்திரைத் திருவிழாவில் இவர்களின் அறக்கட்டளை சார்பாக சுமார் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்திற்காக சமையல் செய்ய அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருக்க, சமையல் எண்ணை மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்துள்ளது.
அங்கிருந்து சுவாமிகளுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொன்னால், அவர் ஏதாவது ஏற்பாடு செய்வார் என்பதால் அவருக்கு போன் செய்யலாம் என்று நினைத்த தருணம், யாரோ ஒருவர் திடீர் என “அன்னதானத்திற்கு என் பங்காக சமையல் எண்ணை வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறி ஐந்து எண்ணை டின்களை வைத்துவிட்டு போய்விட்டாராம். இப்படிப் பல பல சம்பவங்கள் உண்டு.
எப்படி இது சாத்தியம்?
மகான்கள் நினைப்பது நடக்கிறதே… எப்படி ?
பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது இது. மகா பெரியவர் ஒரு முறை சிதம்பரம் யாத்திரை செல்லும்போது, வழியில் பசியாறுவதற்கு அன்னதானத்துக்கு பெயர் பெற்ற ஒரு வீட்டை பற்றி கேள்விப்பட்டு அந்த வீட்டில் பரிவாரங்களுடன் போய் நின்றார். வீட்டின் உரிமையாளருக்கோ தெய்வமே தன் வீட்டில் வந்து நிற்கிறதே என்று இன்ப அதிர்ச்சி. பதட்டம். அவர் வீட்டம்மாவுக்கோ ஒரு படி மேலே சந்தோஷம் பிடிபடவில்லை.
“ஸ்வாமிகள் எங்க கிரகத்துக்கு எழுந்தருள என்ன புண்ணியம் செஞ்சிருக்கோமோ?” என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் தம்பதிகள்.
ஒரு பக்கம் கண்கண்ட தெய்வம் இல்லத்தில் எழுந்தருளியதால் வந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தாலும் மறுபக்கம் இவர்களை உபசரித்து வயிறார சாப்பாடு போட தேவையான அரிசியோ மளிகை பொருட்களோ வீட்டில் இல்லை என்கிற துக்கம் வேறு ஆட்டிப்படைத்தது. இருக்கும் ஒரு மூட்டை அரிசி வைத்துக்கொண்டு தான் தன் குடும்பத்தின் சாப்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். இவர்களுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கியை சரியாக தராது நிலம் பெற்று உழுது வந்தவர்கள் காலம் கடத்திவந்தார்கள். வாடகை வேறு வசூலாகவில்லை. அதை வசூல் செய்வதற்கு எதையும் பிரயோகம் பண்ணும் நிலையில் இவர்களும் இல்லை.
மகா ஸ்வாமிகளுடன் வந்திருக்கும் பரிவாரங்கள் இரண்டு நாட்கள் தங்கினால் போதும் மொத்த அரிசியும் காலியாகிவிடும். என்ன செய்வது தர்மசங்கடத்தில் நெளிந்தார் மனிதர்.
இவரின் சங்கடமும் துக்கமும் சுவாமிகளுக்கு தெரியாதா என்ன….
“உன் வீட்டில ஸ்டோர் ரூம் எங்கே இருக்கு?” என்று கேட்டபடி விறுவிறுவென உள்ளே நுழைந்தார். நேரே ஸ்டோர் ரூமை தேடிப் போய் அங்கே இருந்த ஒரே ஒரு மூட்டை அரிசி மீது சிறிது சாய்ந்தபடி, ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தார்.
“சரி… நான் புறப்படுறேன்…”
கணவனும் மனைவியும் விழுந்து ஆசிபெறுகிறார்கள்.
“நடராஜர் அருளால ஷேமமா இருப்பேள்” என்று ஆசீர்வதித்துவிட்டு கிளம்பிவிடுகிறது ஞான சாகரம்.
(இது பற்றி இன்னொரு விதமும் சொல்கிறார்கள். அவர் மகா பெரியவாவுக்கும் அவருடன் வந்த பரிவாரங்களுக்கும் உணவிட தயாராகத் தான் இருந்தார் என்றும் ஆனால் மகா பெரியவா தான் அவர் நிலைமை உணர்ந்து மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், விரும்தோம்பலில் தேர்ந்தவர்கள் அதை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டார்கள்.)
மகா சுவாமிகள் வந்து சென்ற அடுத்த நாள் முதல், அதுவரை பாக்கியை தராமல் இழுத்தடித்தவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக குத்தகை பாக்கியை, அரிசி மற்றும் நெல் மூட்டைகளாக மாட்டு வண்டிகளில் அனுப்ப, இவர் வீட்டு ஸ்டோர் ரூமே கொள்ளாத அளவிற்கு அரிசி மூட்டைகள் நிரம்பிவிடுகிறது. மேலும் இவர்களுக்கு வரவேண்டிய இதர வருவாய் மற்றும் வாடகை அனைத்தும் தாமகவே வசூலாகிவிடுகிறது.
நான்கைந்து நாட்கள் போனது. நெல்லும் அரிசியும் மளிகை பொருட்களும் நிரம்பி வழியும் ஸ்டோர் ரூமை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
“அந்த மகானின் ஸ்பரிசம் பட்ட நேரம், ஸ்டோர் ரூம் இப்படி நிரம்பி வழிகிறதே. என்ன அற்புதமோ மாயமோ அனைத்தும் இப்படி தானாகவே வசூலாகிவிட்டதே. தேடி வந்த தெய்வத்தை “ஒரு வேளை உங்கள் பரிவாரங்களுடன் தங்குங்கள்… வயிறார சாப்பிடுங்கள்” என்று சொல்ல முடியாத பாவியாகிவிட்டேனே… அரிசியும் மளிகை பொருட்களும் நிரம்பி வழியும் இப்போது அவர்கள் வரக்கூடாதா?” என்றவாறு சிந்தித்தபடி இருக்க… வாசலில் திடீர் என பரபரப்பு ஏற்பட்டது.
என்ன ஏது என்று வெளியே சென்று பார்த்தால், கையில் தண்டத்துடன், மகா பெரியவர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்.
“என்ன இப்போ உன் வீட்டுக்கு வரலாமா? ஒரு நாள் தங்கியிருந்து பசியாறிட்டு போலாமா?” சிரித்தபடி பரம்பொருள் கேட்க, “ஸ்வாமீ….” கதறியபடியே…. காலில் விழுந்தார் இவர்.
இறைவனின் மெய்த் தொண்டர்கள், சித்து வேலைகளோ அல்லது மந்திர வித்தைகளோ செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. அவர்கள் ஒன்றை நினைத்தால், அவர்கள் இதயக் கமலத்துக்குள் குடியிருக்கும் இறைவன் அதை நடத்தி வைப்பான். அவ்வளவே.
மகா பெரியவா அவர்கள் தொடர்புடைய பல அற்புதங்களை நிகழ்த்தியது வேறு யாருமல்ல… அவருடைய உள்ளத்தில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகாம்பரேஸ்வரர் தான்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ
என்ற வள்ளலாரின் பாடலுக்கு இணங்க, நல்லோர் இதயம், இறைவன் வாழும் ஆலயம் ஆகும்.
சுயநலம் என்பதே சிறிதும் இன்றி தான் வாழும் காலத்தே மானுடம் உய்ய மக்களுக்கு நல்வழியை காட்டி, தான் செய்த உபதேசப்படி வாழ்ந்து காட்டிய மகா பெரியவாவின் இதயத்தில் குடிகொண்டுள்ள அந்த சர்வேஸ்வரன் தான் அவரது விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றி பக்தர்களின் வாழ்வில் அற்புதங்களை நடத்தி வருகிறார்.
அதே போன்று தான் சிவப்பிரகாச சுவாமிகளும். இவர் ஏதாவது தேவை என்று நினைத்தால் அதை செய்து தர அடுத்த நொடி இறைவன் யாரையேனும் அனுப்பிவிடுவான். இவரது ஆஸ்ரமத்துக்கு உதவிட நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. (பதிவின் இறுதியில் அது பற்றி விளக்கியிருக்கிறோம்).
பாமரர்க்கும் பக்தி இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் உன்னத பணி
முதுகுத் தண்டு மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும், ஒரு சிறு வாகனத்தில் படுத்தவாறே, பல இடங்களுக்கும், குறிப்பாக கிராமங்களுக்கு பிரயாணம் செய்து, இனிய, எளிய கொங்கு தமிழில், ஊக்கமான குரலில், பாடல்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார் சிவப்பிரகாச சுவாமிகள். சிறப்பான தமிழ் இலக்கியங்களான திருக்குறள், பெரிய புராணம் மற்றும் திருவருட்பா ஆகியவற்றை படிப்பறிவில்லாத மக்களும் சுவைக்கும் வகையில் கிராமங்களையும் எட்ட வைத்துக்கொண்டிருப்பது, இவரின் மிக சிறந்த சேவையாகும்.
‘செவி உணவும், அவி உணவும்’ குறைவற்று வழங்குவதே சுவாமிகளின், வாழ்க்கை குறிக்கோளாகும்.
சுவாமிகளால் எழுந்து நடக்க முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் சக்கர நாற்காலியில் உட்காரமுடியும். அவ்வளவு தான். (இவருக்கு சிறுநீர் மற்றும் மலஜலம் ஆகியவை பைகள் மூலம் வெளியேற்றப்படுகிறது!)
ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு செல்வதற்கு லோடு வேனைத் தான் பயன்படுத்தி வந்தார். அதில் இவரை ஏற்றவும், இறக்கவும் அனைவரும் படும் சிரமத்தையும், சுவாமிகள் படும் சிரமத்தையும் மனதில் கொண்டு, இவருடைய நலம் விரும்பிகள் மற்றும் அன்புக்குரியவர்கள் சிலர் இணைந்து ரீ-கண்டிஷன் செய்யப்பட்ட டெம்போ டிராவலரை வாங்கித் தந்துள்ளனர்.
நம்மிடம் பேசும்போது இந்த வண்டி போகம்பட்டியில் வைத்து வைத்து வழங்கப்பட்டது என்றார். அது போகர் வாழ்ந்த ஊர் என்று குறிப்பிட்டவர், அந்த ஊரில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்ததை நினைவு கூர்ந்தார்.
“அப்பா முதலில் இறந்தார். கோமாவில் இருந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அம்மாவும் இறந்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் கோப்பெருந்தேவி இறந்தது போன்ற அதிர்ச்சி மரணம் என்றும் என் அம்மா மரணத்தை வர்ணிக்க முடியாது” என்று சொல்லித் தொடர்ந்தார். “இரண்டு பேருக்கும் ஒரே குழி. சடங்கு செய்வதற்காக குளிப்பாட்டி முடித்ததும், குழியில் அந்த இரண்டு உடம்புகளையும் இறக்கும் போது அந்த இடத்தில் மட்டும் சுற்றிலும் மழை பெய்தது !” என்ற போது சுவாமியின் குரல் தாழ்ந்து விட்டது. பெற்றவர்களின் மரணத்தை நினைக்கும்போது கண்ணீர் சிந்தாதவர் எவரேனும் உண்டா என்ன?
“இங்கு வளர்ந்த பல பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செய்து குடுத்துருக்கோம். அவங்க கணவன், குழந்தைகளோட அடிக்கடி எங்கள வந்து பாக்குறப்ப மனசு லேசாகிப் போகும். சொந்த பந்தங்கள் யாரும் இல்லாம இந்த இல்லம் மட்டுமே சொந்தம்னு நினைச்சிட்டு இருந்த அவங்களுக்கும் புதுசா உறவுகள் கிடைச்ச ஒரு சந்தோஷம்” என்று கூறி பெருமிதப்படுகிறார் சுவாமிகள்.
என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் திருமண நாள், மற்றும் பிறந்த நாள், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றை இங்கு வந்து கொண்டாடுவார்கள். இங்குள்ள குழந்தைகளுடன் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு உணவையும் அளித்துவிட்டு போவார்கள். அன்று முழுதும் இந்த குழந்தைகள் குதூகலத்துடன் தான் இருப்பார்கள். என்.எல்.சி. நிர்வாகம் அடிக்கடி இங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, குழந்தைகளையும் பெரியவங்களையும் ஓரளவு பார்த்துக்கொள்கிறார்கள்.
“இங்கிருக்கிற பெரியவங்களுக்கு காலம் கடந்துருச்சு. ஆனா, இந்தக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணும். இவங்க அத்தனை பேரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைக் கடைபிடிக்கத் தொடங்கிட்டாங்கன்னா போதும்; நிச்சயம் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” நம்பிக்கையுடன் சொன்னார் சிவப்பிரகாசம்.
ஓட்டுப் போட போகாத சோம்பேறிகள் இவரை பார்த்து வெட்கப்படவேண்டும்!
அவர் பேசும்போது அவர் விரலை தற்செயலாக பார்க்க நேரிட்டது. விரலில் வாக்களித்த மை காணப்பட்டது.
“சுவாமி…. இந்த நிலையிலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்ல வோட்டு போட்டிருக்கீங்க போல… வாழ்த்துக்கள். நன்றிகள். அப்படியே ஒரு நிமிஷம் உங்க விரலை காட்டுங்க…. ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன். எங்க சென்னையில் நிறைய சோம்பேறிகள் ஆபீஸ்ல லீவ் கொடுத்தும் ஓட்டு போடப் போகலை. இந்த போட்டோவை போட்டு தான் அவங்களுக்கெல்லாம் சூடு வைக்கணும்!” என்று சுவாமிகளை விரலை காட்ட வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
கழுத்துக்கு கீழே உடலே செயலிழந்து படுத்த படுக்கை தான் வாழ்க்கை என்ற ரீதியில் வாழ்ந்து வரும் ஒருவர் தவறாது வாக்குரிமையை செலுத்தியுள்ள சூழ்நிலையில், எதேதோ காரணங்கள் சொல்லி தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தாத சோம்பேறிகள் நிச்சயம் இவரை பார்த்து வெட்கப்படவேண்டும்.
இந்த இல்லத்துக்கு முதல் முறை நாம் சென்ற போது நண்பர் சௌந்தரவேல் நம்முடன் வந்திருந்தார். இரண்டாம் முறை நாம் மட்டும் தான் சென்றிருந்தோம்.
இரண்டு முறையும் அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுக்க பிஸ்கெட்டுகளை ஒரு பெட்டி நிறைய வாங்கிக்கொண்டு தான் சென்றோம்.
குழந்தைகள் இங்கே ஆசிரியர்கள்!
அங்கு வரிசையில் நின்ற குழந்தைகளுக்கு அதை தந்தபோது அவர்கள் ஒவ்வொருவராக அதை பெற்று கொண்டு நன்றி கூறிவிட்டு சென்ற பாங்கு, அத்தனை அழகு. கொடுப்பதில் உள்ள இன்பம்… வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என்கிற ஒளவையின் வரிகளுக்கு இணங்க, இளமையிலேயே வறுமையை அனுபவித்து சூழ்நிலைகளால் கைவிடப்பட்டு இது போன்ற ஒரு இல்லத்தில் வளர்ந்தாலும் இந்த குழந்தைகளிடம் இருக்கும் அந்த மகிழ்ச்சி… வாவ்… இவர்கள் குழந்தைகள் அல்ல. நம் ஆசிரியர்கள்.
குழந்தைகள் இங்கு திருக்குறள், திருவருட்பா, சைவ இலக்கியங்கள் ஆகியவை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்கப்படுகிறார்கள். அதன் பாதிப்பு நன்கு தெரிகிறது.
நாம் பேசிமுடித்துவிட்டு இறுதியில் சுவாமிகளுக்கு சால்வை அணிவித்து, நாம் கொண்டு சென்ற நம் தளத்தின் பிரார்த்தனை படத்தை அன்பளிப்பாக வழங்கினோம்.
“சுவாமி, இந்த குழந்தைகளுக்கு இதுல இருக்குற இந்த பிரார்த்தனையை படிக்கச் சொல்லி மனப்பாடம் செய்ய வெச்சி, தினமும் அவங்களை காலைல இதை சொல்ல வெச்சீங்கன்னா சந்தோஷப்படுவேன்!” என்றோம்.
அந்த பிரார்த்தனனையை படித்துப் பார்த்தவர், “ரொம்ப நல்லாயிருக்கே! கண்டிப்பா தினமும் சொல்லச் சொல்றேன்” என்றார்.
அடுத்து நம்மை சிற்றுண்டி தயாராக இருப்பதாகவும் சாப்பிட போகுமாறும் கேட்டுக்கொண்டார். சுவாமிகளிடம் விடைபெற்றுக்கொண்டு, சிற்றுண்டி சாப்பிட சென்றோம். மாணவர்களுடனே சேர்ந்து சாப்பிட்டோம்.
(மாணவர்களுடன் நாம் மேற்கொண்டு செலவிட்ட தருணங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.)
அடுத்து முதியோர் இல்லம் சென்றோம்.
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லே!
சுமார் 30 வயோதிகர்கள், தங்களையே தங்களால் கவனித்துக் கொள்ள இயலாத நிலையில் இருப்பவர்கள், கவனிப்பார் எவருமின்றி அனாதையானவர்கள், முதுமையின் காரணமாக தங்கள் பிள்ளைகளாலேயே இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் என்று இங்கு உள்ள முதியவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை. இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, உதவியாளர்கள் மூலம் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய பெரியோர்கள் இந்த ஆசிரமத்திலேயே இறக்க நேரிடின், உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறது.
(சென்ற முறை இந்த ஹால் ஷெட் போன்ற அமைப்பில் இருந்தது. இந்த முறை சென்றபோது, நன்றாக நான்கு பக்கமும் சுவர்கள் எழுப்பி நன்றாக கட்டிவிட்டார்கள்.)
இங்கு அடைக்கலம் பெற்று வரும் முதியோர்களையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இவர்கள் அனைவரும் ஒரு பெரிய ஹாலில் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கொசு வலையுடன் கூடிய கட்டில் உண்டு.
இது தவிர, எழுந்து நடமாடக்கூட முடியாத நிலையில் உள்ள முதியோர்களுக்கு தனி அறை ஒன்று உண்டு. சுமார் மூன்று பேர் அந்த அறையில் தங்கலாம். கட்டிலுக்கு பதில் அங்கு மேடை தான் இருக்கும். கட்டில் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. (இயற்கை உபாதையை தணிக்க கூட எழுந்திருக்க முடியாத அளவு பலகீனமானவர்கள்).
அந்த அறைக்கு நாம் சென்ற போது, அங்கிருந்த ஒரு வயதான அம்மா, நம்மிடம் ஏதோ சைகை காட்டி எதையோ சொல்ல முற்பட்டார்கள். நமக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அருகில் இருந்த மற்றொரு வயதான அம்மா தான் நமக்கு அதை புரியவைத்தார்கள். சாப்பிடுவதற்காக தாம் மேடையைவிட்டு இறங்கியதாகவும், மறுபடியும் தன்னை மேடையேற்றி விடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்கள்.
இதையடுத்து நாமும் நண்பர் சௌந்தரவேலும் முதலில் அந்த அம்மாவின் ஆடையை சரி செய்தோம். எங்கு கையை வைத்து அவர்களை தூக்குவது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. காரணம், உடல்நிலை பலகீனமாக இருந்தது. பின்னர் ஜாக்கிரதையாக இருவரும் சேர்ந்து மேடையில் அமரவைத்தோம்.நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து அவரை ஜாக்கிரதையாக தூக்கி மேடையில் உட்கார வைத்தவுடன், அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த நிலையிலும் கையெடுத்து கும்பிட்டு நமக்கு நன்றி சொன்னபோது ஒரு நொடி உடலெல்லாம் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது. முதுமை தான் எத்தனை கொடுமை… அதுவும் கவனிப்பார் எவருமின்றி முதுமையில் உழல்வது நரகத்துக்கு எல்லாம் நரகம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பாட்ஷா படத்தில், பாடிய “எட்டாம் எட்டுக்கு மேலே இருந்தா நிம்மதியில்லே..” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
இதை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் – வாழ்வாங்கு வாழ்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வயதான காலத்தில் எவருக்கும் எந்த பாரமும் இன்றி நோய் நொடி எதுவும் இன்றி நிம்மதியாக போய் சேர்ந்தால் அதுவே போதும் தான் தோன்றும்.
முதுமை மிகவும் கொடிது. அதுவும் நோய்நொடியில் கழிக்கும் முதுமை மிக மிக கொடிது.
இந்த படத்தில் காணப்படுபவர், வீரைய்யன். ஒரு காலை இழந்தவர் இவர். “உன்னையெல்லாம் வெச்சு சோறு போட முடியாது. எங்கேயாவது போய் பிச்சை எடுத்து பிழைச்சுக்கோ போ” என்று தனது பிள்ளைகளால் விரட்டிவிடப்பட்டவர். யாரோ இந்த இல்லத்தை பற்றி கூறியதை கேட்டு இங்கு அடைக்கலம் பெற்றிருந்தார். சென்ற முறை நாம் சென்றபோது, இவரை சந்தித்து இவரது கதையை கேட்டு கண்கலங்கினோம். ஆறுதல் சொன்னோம். ஆனால் இந்த முறை சென்ற போது இவர் இல்லை. ஆம்… வீரைய்யன் இறைவனடி சேர்ந்துவிட்டாராம்.
பிறக்கும்போதே போலியோ அட்டாக்
இதோ இங்குள்ள குழந்தை…. பிறக்கும்போதே போலியோ அட்டாக்குடன் பிறந்த குழந்தை இவள். தற்போது எட்டு வயதாகிறது. ஏழை பெற்றோர்களால் பராமரிக்க முடியவில்லை என்று, இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். போலியோவுடன் ஆட்டிசம் குறைபாடும் உண்டு.
ஆனாலும் இங்குள்ள குழந்தைகளுடன் அவள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள்.
இப்படி இங்குள்ள ஒவ்வொரு குழந்தை மற்றும் முதியவர்கள் பின்னேயும் ஒரு நெஞ்சை உருக்கும் பின்னணி இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் பின்னேயும் நம்மை கண்ணீர் வடிக்க வைக்கும் கதை இருக்கிறது.
இங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் குடியினால் சீரழிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். தந்தைக்கு இருந்த குடிப்பழக்கத்தால், கணவன்-மனைவி இடையே சண்டை மூண்டு, முடிவில் மனைவியை கணவன் கொலை செய்து சிறைக்கு சென்றுவிட, குழந்தைகள் அனாதையாகிவிட்டனர். இப்படிப் பலப் பல உதாரணங்கள் இங்கு உண்டு.
(இல்லத்தை பற்றியும் இங்கு குழந்தைகளுடனும் பெரியவர்களுடனும் நாம் எப்படி நேரத்தை செலவிட்டோம் என்பது பற்றியும் தனி பதிவு வருகிறது. எனக்கு அது இல்லே… இது இல்லே…. ஆண்டவன் சோதிக்கிறான்… என்று சதா புலம்புகிறவர்களா நீங்கள்? அந்த பதிவை .. படிங்க. வந்து இங்கே ஒரு முறை பாருங்க சார்… நீங்கள் எல்லாம் எந்தளவு கொடுத்து வைத்தவர் என்று புரியும்.)
============================================================
இந்த இல்லத்துக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகள் !
சென்ற முறை இந்த இல்லத்துக்கு வந்த போதே இங்கு நம் தளம் சார்பாக ஏதேனும் உதவி செய்ய நினைத்தோம். சிவப்பிரகாச சுவாமிகளிடம் பேசியபோது இல்லத்தின் தண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு ஒன்று தோண்டுவது (போர்) தான் உடனடி தேவை என்று புரிந்துகொண்டோம்.
இதையடுத்து அந்த பெரும்பணிக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதாக வாக்களித்தோம். இந்த பதிவை அளித்துவிட்டு நிதி திரட்டி தருவதாக உத்தேசித்திருந்தோம். இதற்கிடையே நண்பர் ஒருவரிடம் பேசும்போது இந்த இல்லம் பற்றியும் இவர்கள் தேவை பற்றியும் நாம் குறிப்பிட, அவர் உடனடியாக நமக்கு ஒரு நல்ல தொகையையை அனுப்பி நீங்கள் கலெக்ட் செய்யும் தொகையுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே, சுவாமிகளிடம் பேசும்போது, மீண்டும் ஒருமுறை இல்லத்துக்கு சென்றுவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் வேறு சில விஷயங்களும் சுவாமிகளிடம் பேசவேண்டியிருந்தது. தவிர, இல்லத்தில் உள்ள முதியோர்களுடனும் குழந்தைகளுடனும் கொஞ்ச நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு தோன்றியது.
சுவாமிகளும் பதிவை அளிப்பதற்கு முன்பு ஒருமுறை நாம் வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரியப்பட, சமீபத்தில் நாள் ஒரு நாள் ஒரு வார இறுதியில் மீண்டும் வடலூர் சென்று சுவாமிகளை சந்தித்தோம். மேலும் பல தகவல்களை சுவாமிகளிடம் பேசி திரட்ட முடிந்தது.
ஆழ்குழாய் கிணறு தோண்ட நாம் உதவுவதாக கூறியபோது, அதன் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு ஒரு தனியார் குழுமம் செய்து தர முன்வந்துள்ளார்கள் என்றும் கூறினார்.
நாம் நிச்சயம் இந்த இல்லத்துக்கு ஏதேனும் செய்ய விரும்புவதாக கூறியபோது, கொஞ்சம் இருங்க என்று கூறியவர், தனது டயரியை எடுத்தார். அதில், ‘இல்லத்தின் உடனடி தேவைகள்’ என்று எழுதப்பட்டிருந்த பட்டியலை நமக்கு காண்பித்து, “இதெல்லாம் வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.
அவர் எழுதியுள்ள பட்டியல் படி, முதியோர்கள் பிரிவில் சுமார் எட்டு சீலிங் பேன், (இப்போது அங்கு இரண்டு தான் உள்ளது), மெயின் ஹால் & சமையல் கூடத்தில் எக்ஹாஸ்ட் பேன்கள், இல்லத்துக்கு வருபவர்கள் அமர பி.வி.சி. சேர்கள் ஒரு பத்து, தலையணைகள் ஒரு பத்து, குழாயுடன் கூடிய தண்ணீர் அருந்தும் டிரம்கள் இரண்டு என்று தேவைப்படுவதாக தெரிகிறது.
“ஒன்னும் பிரச்னையில்லே சுவாமி…. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ளே எங்க வாசகர்களோட இங்கே வர்றோம். வரும்போது இதெல்லாம் வாங்கிட்டு வர்றோம். கவலையை விடுங்க…”
“ரொம்ப நன்றிப்பா…. இதெல்லாம் வாங்கித் தந்தாலே பெரிய உதவியா இருக்கும்” என்றார்.
“இது தவிர வேறு எது தேவைன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க. எங்களால என்ன முடியுமோ நிச்சயம் வாங்கிட்டு வர்றோம்.” என்று உறுதியளித்திருக்கிறோம்.
இவை தவிர இங்குள்ள குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ரெடிமேட் ஆடைகள் வாங்கித் தர தீர்மானித்துள்ளோம். அதற்காக ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டுவந்துள்ளோம்.
வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டு ஞாயிறு காலை வடலூர் சென்று, இல்லத்தில் குளித்து முடித்து குழந்தைகளுடன் சேர்ந்தே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்கு நாம் வாங்கிச் செல்லும் ஆடைகளை அளித்துவிட்டு, சுவாமிகளிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, முதியோர் இல்லத்தை பார்வையிட்டு, அவர்களுக்கு சேலை & வேஷ்டிகள் இவற்றை அளித்துவிட்டு, பின்னர் வடலூரில் வள்ளலார் தொடர்புடைய சித்தி வளாகம், வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த கருங்குழி வீடு, பல் துலக்கும் குச்சியால் உருவாக்கிய தீஞ்சுவை நீரோடை, அணையா அடுப்பு கொண்ட சத்திய தருமச் சாலை ஆகியவற்றை தரிசித்துவிட்டு அங்கேயே அன்னமும் சாப்பிட்டுவிட்டு ஞாயிறு இரவு மீண்டும் இறையருளால் சென்னை திரும்புவதாக பிளான்.
நம்முடன் வர விரும்பும் வாசக அன்பர்கள் மற்றும் நம் நண்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். ஏற்பாடுகளை செய்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும்.
கீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிதியளிக்கும்போது நம் தளத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து நிதியளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தளத்தின் நிர்வாகச் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. நீங்கள் அளிக்கும் நிதியை கொண்டே இந்த தளம் நடத்தப்படுகிறது. நம் தளத்துக்கு விளம்பர வருவாயோ அல்லது இதர வருவாயோ எதுவும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி!
============================================================
Also check :
வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!
============================================================
[END]
தங்கள் வடலூர் சென்று சிவப்ரகாச சுவாமிகள் ஆஷ்ரமம் பற்றி மிகவும் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் நேரில்சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது.
இந்த வயதில் தன் உடல் நலம் பற்றி கவலை கொள்ளாமல்,ஆஷ்ரமத்தை சிறப்பாக நடத்தி வரும் சிவப்ரகாச சுவாமிகள் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். அவருடன் இறைவன் கூட இருந்து அவரை வழிநடத்துகிறார். அவர் தன் தாய் தந்தையரை பற்றி சொல்லும் பாரா படிக்கும் பொழுது நம் கண்களும் கலங்குகிறது
முதியோர் இல்லம் பற்றி படிக்கும் பொழுது நம் நெஞ்சம் கனக்கிறது.
அங்குள்ள குழந்தைகள் சுவாமிகளின் ஆசைகேற்ப வளர்ந்து பெரிய நிலையை அடைய வேண்டும்.
நமக்கும் வடலூர் வர விருப்பம். இறை அருள் இருந்தால் கண்டிப்பாக வருவோம். நாமும் நம்மால் ஆன உதவியை இந்த முதியோர் இல்லத்திற்கு செய்வோம் சிறு துளி பேரு வெள்ளம்
நன்றி
உமா
மிக மிக நல்லதொரு பதிவு,
சுவாமிகளை பற்றி படிக்கும் போது மனம் பெருமிதம் கொள்கிறது.
சுவாமிகளின் மனதிடம் அவர் உடல் நிலை பற்றி கவலைபடாமல் மற்றவர்களுக்காக அவர் செய்யும் தொண்டு பிரமிக்க வைக்கிறது.
போகர் வாழ்ந்த ஊரில் அவரின் சிறுவயது நினைவுகளும் அவர் பெற்றோர் மறைவும் கண்ணில் நீர் துளிர்க்க செய்கிறது.
அந்த குழந்தைகள் இறைவனின் குழந்தைகள். அவர் அவர்களை பாதுகாப்பாக சுவாமிகளின் கையில் ஒப்படைத்துள்ளார்.
சுந்தர் சார் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் உதவியுடன் அந்த இல்லத்தின் தேவைகள் நிறைவேற ஒரு சந்தர்பம் ஆண்டவன் கொடுத்துள்ளார்.
ஓட்டு போடாதவர்களுக்கு ஒரு சவுக்கடி மாதிரி வார்த்தைகள் நன்றாக உள்ளது.
குழந்தைகளை பார்க்கும் போது மனம் கரைகிறது,
உங்கள் எழுத்து திறமை அபாரம்.எங்களையும் உங்கள் கூடவே பயணிக்க செய்து சிறு சிறு நிகழ்வுகளையும் பகிர்ந்து எப்போது அந்த இல்லம் போய் சுவாமிகளை பார்ப்போம் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டிர்கள்.
ஏனோ படித்தவுடன் மனம் மிக கனமாக உள்ளது.
“தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து”சுந்தர் சார் இது உங்களுக்கு கச்சிதமாய் பொருந்தும் சார் …
“நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால் உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம்.உயர்ந்தபீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு ஏ பிச்சைக்காரா! இதை வங்கிக்கொள் என்று நீ சொல்லாதே. மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.[…..விவேகனந்தர் ]”
“தொண்டு செய் , அதை அன்பால் நன்று செய் …அதை இன்றே செய்”
[…… மேல்மருவத்தூர் அடிகளார் ].
த்மக்கென முயலாது பிறர்கென முயல்பவர் தலைவர்
…..புரநானூறு
நல்லதை செய்தவன் யாரும் ஒருபோதும் கெட்டதில்லை ……….கீதை
“அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயம்
அன்பான பணி செய்ய ஆளாக்கி விட்டுவிடு
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்போமே”….தாயுமானவர்
///விபத்து ஏற்பட்டு முதுகெலும்பு உடைந்து இவரை கட்டிலிலேயே முடக்கி போட்டுவிடுகிறது. இந்த இடத்தில் நாமாக இருந்தால், விரக்தியில் “போய்யா நல்லது செஞ்சி என்னத்தை கண்டேன்…” என்று அனைத்தையும் விட்டுவிட்டு, போயிருப்போம். வாழ்வை எதிர்கொள்ள தெரியாத கோழைகள் என்றால் தற்கொலை முடிவை நாடியிருப்போம். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் செய்தது என்ன? அங்கே தான் அவர் உண்மையில் மகானாகிறார். அந்த நிலையிலும் தனது பணியையோ தொண்டையோ அவர் நிறுத்தவில்லை. இது தான் மனிதனுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம். ///-
உங்களது கட்டுரைகளில் அடிக்கடி பல தன்னம்பிக்கை மனிதர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் .இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நம்மாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.. ஒரு மனிதனுக்கு பொன் பொருள் அளித்து அவனுக்கு உதவுவதை விட.. உரிய நேரத்தி அவனுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது என்பது கோடான கோடி வீரம் பெற்றதற்கு சமம் .அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம் போன்றது .
அதை நமது தளம் பிரார்த்தனை கிளப் மூலம் மிகச்சரியாகவே செய்து வருகிறது …
வாழ்க்கையில் இனி நம்மை கண்டுகொள்ள யாரும் இல்லை என கவலைப்படுபவர்களை இனம் கண்டு அவர்களையும் கவுரவிப்பது இந்த தளத்தின் மிகமிக சிறப்பு ..
சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் நடிகர்களையும் .நடிகைகளையும் மற்றும் அரசியல் வாதிகளையும் அழைத்து விளம்பரம் தேடும் பல இணைய தளங்களையும் பார்த்துள்ளேன் ..அவ்வாறில்லாமல் நீதியையும் ,நியாயத்தையும் .தர்மத்தையும் தேடி உங்களது பயணம் தொடர்கிறது…உங்களுடன் இணைந்ததற்கு ..சந்தோசப்படுகிறேன்..
என்றும் நன்றிகளுடன் ..