தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை நோக்கி, அவர்கள் அருளால் அன்றைய தினம் நல்லபடியாக விடிந்து, நற்செயல்களால் நிறைந்து உய்விக்க வேண்டுமெனப் பிரார்த்தித்து இயற்றப்பட்டவை அவை. இறைவனுக்கு எக்கணமும் மங்களகரமானதே; ஒவ்வொரு விடியலும் நன்மையானதே; இந்தச் சுப்ரபாதங்கள் யாவும் நம் நலனைக் கோரியே இயற்றப்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு இயற்றப்பட்ட சுப்ரபாதங்களில் அரிதாகக் காணப்படும் ஸ்ரீஅனுமனின் சுப்ரபாதத்தினை கண்டெடுத்து உதவியவர் ஸ்ரீ டி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரிகள். அதற்கு தகுந்தபடி தமிழுரை வழங்கியவர் பண்டிதர் ஸ்ரீ எஸ். ரங்கநாத சர்மா.
ஆஞ்சநேயரை எப்போதும் தியானித்துக் கொண்டு எந்த காரியத்தில் இறங்கினாலும் வெற்றி பெறலாம் என்பது அனுபவித்து அறிந்தவர்கள் வாக்கு. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரப் பிரியர். இக்கலியுகத்தில், தன்னை வணங்கும் யாருக்கும் விரைவாக, நிறைவாக அருள்புரியும் அன்புத் தெய்வம். ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், ப்ரம்மசர்யம் என்று எல்லா நிலைகளிலும் தன்னை உயர்த்திக் கொண்ட ராம பக்தன் இவர். ஆஞ்சநேயரை உளமார நினைத்து நெக்குருகி வழிபட்டால் நல்ல புத்தி, உடல் வலிமை, பெரும் புகழ், பயமின்மை, நோய் நிவர்த்தி, திருமண பாக்கியம், நன்மக்கட்பேறு ஆகிய எல்லா நலன்களையும் அருளுவார். வெற்றியைத் தவிர வேறு எதையும் காணாதவர் அனுமன். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இவரது ஸ்மரணையுடன் அனுதினமும் நம் கடமைகளைத் தொடங்குவோமாக!
சமஸ்கிருத வார்த்தைகளை படிக்க தெரியாதவர்கள் மற்றும் படிக்க சிரமப்படுகிறவர்கள் தமிழ் பொருளை படிக்கலாம். ( இது ஆடியோ சி.டி. வடிவில் கிடைக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துகிறோம்.)
ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்
கணநாதம் நமஸ்க்ருத்ய தத்யாத்வா தேவீம் ஸரஸ்வதீம் |
யதாசக்தி ப்ரவக்ஷ்யாமி ஸுப்ரபாதம் ஹநூமத: || 1
ஸ்ரீ விநாயகரையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் த்யானம் செய்து கொண்டு ஸ்ரீ பக்த ஹனுமானுக்கு என் புத்தி சக்திக்கு ஏற்றவாறு ‘சுப்ரபாதம்’ என்ற ஸ்தோத்ரத்தைக் கூற விரும்புகிறேன். 1
ஹநூமந் நஞ்சனாஸூநோ! வாயுப்த்ர! மஹாபல |
பகவத்க்ருபயா வக்ஷ்யே ஸுப்ரபாதம் தவாத்ய போ: || 2
மிகுந்த பராக்ரமசாலியும், அஞ்சனாதேவி-வாயு தேவன் தம்பதிக்குப் புத்ரனுமான ஹே ஹனுமானே! கடவுள் கிருபையால் எங்களுக்கு நல்ல பொழுது விடியப் பிரார்த்தித்து இந்தச் சுப்ரபாத ஸ்தோத்திரத்தைப் பாடப்போகிறேன். 2
ஸ்ரீராமசந்த்ர-சரணாம்புஜ-மத்தப்
ஸ்ரீசந்த்ரசூட-வரகர்வித-ராவணாரே
ஸ்ரீராமதூத! கருணாகர! தீனபந்தோ!
வாதாத்மஜாத்ய க்ருபயா குரு ஸுப்ரபாதம் || 3
தாமரை மலர்களில் தேன் அருந்த மொய்த்திருக்கும் வண்டுகள் போல் ஸ்ரீ இராமபிரானின் சரணாரவிந்தங்களில் பக்தி செய்து லயித்திருப்பவரும், ஸ்ரீ பரமேச்வரனிடமிருந்து வரம் பெற்று கர்வமடைந்துள்ள இராவணனை அடக்கியவரும், ஸ்ரீஇராமதூதரும், கருணைக்கடலும், ஏழைபங்காளனுமாகிய வாயு குமாரனே! தயவு செய்து இன்று நல்ல பொழுது விடியச் செய்வாயாக!
ரக்ஷோதிராஜ மநிகேதநமாததான்:
க்ருத்வா ஸ்வவாஸமத பார்த்த ரதத்வஜாக்ரே |
லப்த்வாப்யமோக பல வீர்யபராக்ரமாம்ஸ்ச
ஸத்பி: ஸ்துத: குரு கபீச்வர ஸுப்ரபாதம் || 4
இராக்ஷஸத் தலைவன் இராவணனை இருக்க இடமின்றித் தவிக்க விட்டும், அர்ஜுனனின் தேரிலுள்ள கொடியின் மேல் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டும், எங்கும் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அளவற்ற பலம், வீரம், பராக்ரமத்தைப் பெற்றுக் கொண்டும் இருக்கிற ஹனுமானே! நல்லவர் யாவராலும் புகழப்படுகின்ற நீ எங்களுக்கெல்லாம் நல்ல விடிவு கிட்டச் செய்வீராக! 4
வாதாபிதாந கருணாம்புதிஜாதசந்த்ர!
வாதாதிரோக சமநாய க்ருதாவதார! |
வாதாத்மஜேதி புவிஸந்நுத! புண்யகீர்த்தே!
சாகாம்ருகாட்ட்ய! க்ருபயா குருஸுப்ரபாதம் || 5
வாயுதேவனென்ற கருணைக் கடலில் தோன்றிய சந்திரனே! வாதரோகம் முதலிய ரோகங்களை அகற்றப் பிறந்தவரே! வாதாத்மஜன்! வாயுகுமாரன் எனப் புகழப் பெற்ற, புண்ய புருஷரான வானரத் தலைவரே! யாவருக்கும் நல்ல விடிவு நல்கிடுக. 5
நிர்மத்த்ய ராமசரிதாம்ருதவாரிராசிம்
வால்மீகி ராப மணிரத்னம் அஹோ! பவந்தம் |
ரத்னாங்கிதா ச ரகுநாதசரித்ரமாலா
வாதாத்மஜாத்ய க்ருபயா குருஸுப்ரபாதம் || 6
வால்மீகி ஸ்ரீஇராமனின் அம்ருதமயமான சரித்திரத்தை வர்ணிக்கும் ஸ்ரீஇராமாயணம் என்னும் கடலைக் கடைந்து ஓர் உயர்ந்த ரத்னமாக விளங்கும் உம்மைக் கண்டெடுத்தார். அதன் பயனாய் ரகுநாதனின் சரித்திரம் ஆகிய ஹாரத்திற்கு நடுநாயகமாய் ஒரு ரத்தினம் அழகுற அமைந்தது. அத்தகைய பேறு பெற்ற வாயுகுமாரனே! உன் கருணையால் இன்றைய பொழுதை நல்ல பொழுது ஆக்கிடுவீர்.
வக்தும் த்வதீய குணசீல பராக்ரமாதீன்
சேஷோ ந சாலமிஹ ஸோபி ஸஹஸ்ரஜிஹ்வ: |
மன்யே, ஸ ஏவ வதநானி பஹூனி லப்த்வா
கர்த்தும் ததாலமிதி, கல்பய ஸுப்ரபாதம் || 7
ஹே ஆஞ்சனேய! உன் குணங்கள், ஒழுக்கம், பராக்ரமம் போன்றவற்றை வர்ணித்துக் கூற ஆயிரம் நாக்குகள் படைத்த அந்த ஆதிசேஷனும் திறமைசாலி ஆகமாட்டான். ஒரு வேளை, அந்த ஆதிசேஷன் ஆயிரக் கணக்கான முகங்களை எடுத்துக் கொண்டு அவ்வாறு செய்ய முடியுமோ என்னவோ எனச் சந்தேகிக்கிறேன். தயவுசெய்து இன்று நல்ல பொழுது விடியச் செய்வீராக! 7
ஸ்வாமின்! யதத்ய சதயோஜன விஸ்தராப்தி:
தீர்ணஸ்த்வயா பவனநந்தன! நைவ சித்ரம் |
பக்தாஸ்து தே பவபயோதி மஹோ தரீதும்
சக்தா பவந்தி க்ருபயா குரு ஸுப்ரபாதம் || 8
ஸ்வாமி! வாயுகுமார! நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள பெருங்கடலை நீர் தாண்டிவிட்டீர் என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஏனெனில் உம் பக்தர்கள், சம்சாரக் கடலைக் கூடத் தாண்டும் திறமையுள்ளவர் ஆவார்களே! தயவுசெய்து எங்களுக்கு நல்ல பொழுது விடிய அருள் புரிக! 9
உல்லங்க்ய ஸிந்துமதி துஸ்தரமம்புஜாக்ஷீம்
ஸீதாம் நிரீக்ஷ்ய விநிஹத்ய நிசாசராம்ஸ்ய |
த்ருஷ்டாங்கநேதி ரகுநாதமபி ப்ருவந்தம்
யாசே பவந்தமிஹ, கலப்பய ஸுப்ரபாதம் || 9
ஹே ஆஞ்சனேய! யாராலும் தாண்ட முடியாத சமுத்திரத்தைத் தாண்டி, செந்தாமரை மலர் போன்று அழகிய கண்கள் படைத்த சீதாதேவியைப் பார்த்துவிட்டு, இராக்ஷஸர்களையும் கொன்று விட்டு, ‘கண்டேன் சீதையை’ என்று ஸ்ரீஇராமபிரானுக்கு நற்செய்தியையும் சொன்ன உம்மிடம் எங்களுக்கு ‘நல்ல பொழுது புலரச் செய்க’ எனப் பிரார்த்திக்கிறேன். 9
ராமாங்குளீயமணிநா ஜனகாத்மஜா ஸா
ஸீதார்பிதேந மணிநா ரகுநாயகோபி |
ஆச்வாஸிதௌ ஹ பவதா, ஹநுமன்! ஜயார்ஹௌ
தஸ்மாத் த்வமேவ பஜதாம் குரு ஸுப்ரபாதம் || 10
ஸ்ரீஇராமன் கொடுத்த மோதிரத்தை சீதையினிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ஸ்ரீஇராமனிடமும் கொடுத்து அவ்விருவரும் உம்மால் ஆறுதல் அடையும்படி செய்யப்பட்டார்களல்லவா! ஆகவே, தாங்களே தங்களுடைய பக்தர்களுக்கு நல்ல பொழுது விடிவதைச் செய்து கொடுப்பீராக! 10
த்ருத்வா ஹநூமம்ஸ்தவ திவ்ய ரூபம்
பார்த்தோ த்வஜே சத்ருகணான் விஜிக்யே |
ரக்ஷ:புரே கோஷித ராம வீர்ய:
ஜேதா ஸமேஷாம் குரு ஸுப்ரபாதம் || 11
ஹே ஹநுமன்! முன்பு அர்ஜுனன், உம் திவ்ய மூர்த்தியைத் தன் தேர்க் கொடியின் நடுவில் அமைத்துக் கொண்டு தன் சத்ருக்களை வென்றான். இராவணனின் தலைநகரமான இலங்கையில் இராமனது வீர்யத்தையும், பராக்ரமத்தையும் பறைசாற்றி அனைவரையும் வென்றவர் ஆகிய தாங்கள் எங்கள் அனைவருக்கும் நல்ல பொழுது விடியச் செய்க. 11
யத் விச்வரூபம் தவ வாயுஸூநோ!
விச்வாஸ்ய பூதம் ஜனகாத்மஜாயா: |
பபூவ பீமஸ்ய பயானகம் தத்
ஸர்வத்ர பூத்யை குரு ஸுப்ரபாதம் || 12
ஹே வாயு குமாரா! உம் விச்வரூபம் சீதாதேவிக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது. ஆனால் அதுவே பீமனுக்குப் பயமளிப்பதாய் அமைந்தது. அத்தகைய பெருமை கொண்ட வீரனே! எங்கும் நன்மை உண்டாக நல்ல பொழுதை விடியச் செய்வீராக! 12
கதாதரம் பிங்க விசால நேத்ரம்
கடோரகாத்ரம் ப்ருது தீர்கபாஹும் |
த்ருஷ்ட்வாஹவே த்வாம் ரஜனீசராஸ்தே
பீதிம் கதா: ஸ்யு: குரு ஸுப்ரபாதம் || 13
கையில் கதையைத் தரிக்கின்றவரும், மஞ்சள் நிறமான விசாலமான கண்களுடையவரும், உறுதியான சரீரம் படைத்தவரும், திறன் மிகுந்த-பருமனான-நீண்ட கைகள் உடையவருமாகிய உம்மை யுத்த களத்தில் கண்ட மாத்திரத்தில் அத்தனை பலசாலி இராக்ஷஸர்களும் பயத்தால் ஓடி விடுவார்கள் அன்றோ! ஹே ஹநுமன்! நீங்கள் நல்ல பொழுது விடிவதை அருள்வீராக! 13
ஜிதேந்த்ரியை ஸ்சாத குணோபபந்நை:
த்ரஷ்டும் ஹி சக்யா ஜனகாத்மஜா ஸா |
த்ருஷ்டா த்வயா யத்தநுமன் வரிஷ்டோ
ஜிதேந்த்ர்யஸ்த்வம் குரு ஸுப்ரபாதம் || 14
இந்திரியங்களைக் கட்டுப்படுத்தும் திறமையுள்ளவர்களும், உயர்ந்த குணங்கள் படைத்தவர்களும்தான் சீதையைக் காண முடியும். ஹே ஹநுமானே! நீங்கள் சீதையைக் காண முடிந்திருக்கிறது என்பதாலேயே நீங்கள் சிறந்த ‘ஜிதேந்திரியன்’ என்பது புலனாகிறது. அத்தகைய நீங்கள் எங்களுக்கு நல்ல பொழுது விடியச் செய்திடுக. 14
தைர்யே ச சௌர்யே ச பராக்ரமே ச
வீர்யே ச தேஜஸ்யத புத்தி சக்தௌ |
ராமேண துல்யோஸி பிதேவ கத்யாம்
ஸ்ரீவாயுஸூநோ! குரு ஸுப்ரபாதம் || 15
ஹே வாயு குமார! தைர்யத்திலும், சௌர்யம், பராக்கிரமம், வீர்யம், தேஜஸ், மற்றும் புத்தி சக்தி ஆகியவற்றில் தாங்கள் இராமனுக்குச் சமமானவர். வேகத்திலோ உம் தந்தை வாயுதேவனுக்குச் சமமானவர். இவ்வளவு பெருமையுடைய நீங்கள் நல்ல பொழுது விடிவைத் தந்தருள்வீராக!
ஆயுஷ்ய மாரோக்யமதா பிஜாத்யம்
தைர்யம் ச வித்யாம் ச யச: ச்ரியஞ்ச |
பக்தாஸ்த்வதீயா ஹநுமன் லபந்தே
ஸ்ரீவாயுஸூநோ! குரு ஸுப்ரபாதம் || 16
வாயு குமாரனாகிய ஓ ஹநுமானே! உங்களை வழிபடுகிற பக்தர்கள் யாவரும் நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், ஸத்குலத்தில் தோன்றி ஸதாசாரத்தைக் கடைப்பிடிப்பதையும், தைர்யம், வித்யை, கீர்த்தி, மற்றும், எல்லாவித சம்பத்துகளையும் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள், யாவருக்கும் நல்ல பொழுது விடியச் செய்வீராக! 16
ஜயதி ஜயதி ராமோ ஜானகீ வல்லபோயம்
இதி நிசிசர வீத்த்யாம் கோஷயம்ஸ்தத் ப்ரதாபம் |
கவிகுல பதி ப்ருத்ய: பாதயன் சத்ருவர்கான்
ஸததகதி தநூஜ: கல்பயேத் ஸுப்ரபாதம் || 17
“ஜனக புத்ரி சீதாதேவியின் நாதனாகிய ஸ்ரீஇராமன் எங்கும் எப்போதும் வெற்றி பெறுகிறார்” என்று இராக்ஷஸ நகர வீதியில் உரத்த குரலில் கோஷம் போட்டு அவரது பராக்ரமத்தைப் பிரகடனம் செய்து, சத்ருவர்கத்தினரை அழித்து தன் பெருமையைப் புலப்படுத்திய, வானரத் தலைவன் சுக்ரீவனின் சேவகனாகிய, இந்த வாயு குமாரன் ஆஞ்சனேயன் நமக்கு நற்பொழுதைத் தர வேண்டும். 17
கத்வா பஞ்சமபூதவர்த்ம ஹநுமம்ஸ்-
தீர்த்வா த்விதீயம் ஜவாத்
த்ருஷ்ட்வா தாம் ப்ரதமாத்மஜாம் பரபுரம்
தக்த்த்வா த்ருதீயேன ச|
ராக்ஞ: ஸூர்யகுலோத்பவஸ்ய கதவான்
தாஸ்யம் துரீயாத்மஜ!
மாதா தன்யதராஞ்ஜனாத்ரபவதா
த்வம் ஸுப்ரபாதம் குரு || 18
பஞ்ச பூதங்களில் நான்காவதான வாயுவின் குமாரனே! ஹே ஹநுமன்! நீங்கள் ஐந்தாவது பூதமான ஆகாசத்தை அடைந்து, இரண்டாவதான ‘அப்’ என்னும் சமுத்திரத்தை விரைவாகக் கடந்து, அங்கே முதலாவதான பூமியின் புத்ரியான சீதையைச் சந்தித்து, பின்னர் மூன்றாவதான அக்னியால் சத்ரு நகரத்தை எரித்து விட்டு, திரும்பி வந்து, சூர்யவம்சத்தரசனாகிய ஸ்ரீஇராமனின் தாசனாகி நின்றாயல்லவா! இத்தகைய வீர தீர் பராக்ரமசாலியான உம்மைப் பெற்ற தாய் அஞ்சனை எவ்வளவு பெரும் பாக்கியசாலி என்று கூறவும் வேண்டுமா? நீங்கள் எங்களுக்கு நல்ல பொழுது விடியச் செய்க!
க்ஞாத்வா லக்ஷ்மணமப்ரமேயமநகம்
சக்த்யாரி பிஸ்தாடிதம்
கத்வா ஹ்யோக்ஷதிபர்வதஞ்ச ஹநுமன்!
த்ருத்வா ஜவேநாகத: |
த்ருஷ்ட்வா ப்ப்ராதர முத்திதம் ரகுபதிஸ்-
த்வா மாலிலிங்க ஸ்வயம்
வந்தே த்வாம் மம ரோகஹாரிண மதஸ்-
த்வம் ஸுப்ரபாதம் குரு || 19
ஹே ஹநுமானே! அளவற்ற பெருமையுடையவனும், குற்றமற்றவனுமான லக்ஷ்மணன், சத்ருகளால் சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கிடப்பதையறிந்தவுடன் ஹிமயமலையிலுள்ள ஔஷதி கிரிக்கு ஓடிச் சென்று ‘ஸஞ்ஜீவனி, மூலிகையை எடுத்துக் கொண்டு நீங்கள் திரும்பியதும், அம் மூலிகையால் லக்ஷ்மணன் உணர்வு பெற்று எழுந்து விட்டானல்லவா! அதைக் கண்ட ஸ்ரீஇராமனும் ஓடி வந்து உம்மைக் கட்டித் தழுவிக் கொண்டாரன்றோ! அத்தகைய பெருமை பெற்ற, ஔஷதி மலையைத் தாங்கிய, வியாதிகளை அகற்றும் திறமையுடைய உம்மை வணங்குகிறேன். எமக்கு நற்பொழுது விடிய அருள் புரிவீர். 19
வாமே வாலிதநூபவஸ்ச ஹரிராட்
ருக்ஷ: ஸ்வயம் தக்ஷிணே
பஸ்சாந்நீல நளாதயஸ் ச புரத:
ஸர்வே ஸ்திதா வானரா: |
மத்த்யே ஹேமஸரோ ஜகோமளருசிம்
வந்தே ப வந்தம் முதா
ஸீதாதத்த ஸுரத்னஹார ருசிரம்,
த்வம் ஸுப்ரபாதம் குரு || 20
ஹே ஹநுமான், உம் இடப்பக்கத்தில் அங்கதனும், வலப்பக்கத்தில் ஜாம்பவானும், பின்னால் நீலன், நளன் முதலிய வானரர்களும் புடைசூழ்ந்து நிற்க, தாங்கள் அவர்களின் நடுவில் தங்கத்தாமரை போன்று பளபளக்கும் மேனியனாய் ஸீதை மனமகிழ்ந்து அளித்த ரத்தின ஹாரத்தால் சோபிதனாய் இருக்கும் கோலத்தை நான் வணங்குகிறேன். எமக்கு நற்பொழுது விடியச் செய்வீர்! 20
வாமே ஹ்யோஷதிபர்வதம் கரதலே
திவ்யாம் கதாம் தக்ஷிணே
கட்யாம் சாருண மம்பரம் மணியுதாம்
மாலாம் ததா வக்ஷஸி |
சித்தே ராகவ பாத பத்ம யுகளம்
த்ருத்வா ஜபந்தம் ஸதா
வந்தே த்வாமிஹ காம பூரமநிசம்
த்வம் ஸுப்ரபாதம் குரு || 21
ஹே ஹநுமன்! இடக்கையில் ஔஷதிமலையையும், வலக்கையில் திவ்யமான கதையையும், இடுப்பில் சிவந்த வஸ்திரத்தையும், மார்பில் மணிமாலையையும் ஹருதயத்தில் ஸ்ரீஇராமனின் திருவடிகளையும் தரித்துக் கொண்டு சதா ஸ்ரீஇராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிற அடியார்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்கின்ற உம்மை நான் வணங்குகிறேன். எனக்கு நல்ல பொழுது விடியச் செய்க! 21
வாதாத்மஜேதி, ரகுநந்தனஸேவகேதி,
கல்யாணதேதி, கலகல்மஷ நாசகேதி |
கீசேச்வரேதி, கவிமானஸ ரஞ்சகேதி
லங்கார்தனேதி வததாம் குரு ஸுப்ரபாதம் || 22
வாயு குமாரனே! ஸ்ரீஇராமனின் தாசனே! மங்களம் தருபவனே! கலிதோஷங்களைக் களைபவனே! வானரர் தலைவனே! கவிகளின் மனத்தில் களிப்பு அளிப்பவனே! இலங்கையை அழித்தவனே! என்றெல்லாம் உம்மைப் புகழ்ந்து பேசுகின்ற அனைவருக்கும் நல்ல பொழுது விடியச் செய்வீராக. 22
மித்ரஸ்ய சிஷ்ய: ப்ரதிதஸ் த்வமேவ
மித்ரஸ்ய ஸூநோரபி மந்த்ரிவர்ய: |
மித்ரஸ்ய வம்சாதிபதேஸ்ச தூத:
மித்ரம்பஜே த்வாம் குரு ஸுப்ரபாதம் || 23
ஹே ஆஞ்சனேய! சூரியனுக்குச் சிஷ்யனாகவும், சூரியகுமாரன் சுக்ரீவனுக்கு மந்திரியாகவும், சூர்ய வம்சத்தரசன் ஸ்ரீஇராமனுக்குத் தூதனாகவும் தாங்கள் விளங்குகிறீர்கள். நானும் என் உற்ற நண்பனாக-ஆபத்பாந்தவனாகத் தங்களை வழிபடுகிறேன். எங்களுக்கு நல்ல பொழுது ஏற்படச் செய்வீராக. 23
யேவா ப்ரபாதே புரதஸ்தவேதம்
படந்தி பக்த்யா ந்நு ஸுப்ரபாதம் |
ச்ருண்வந்தி யே வா த்வயி பத்த சித்தா:
தேஷாம் ப்ரபாதம் குரு ஸுப்ரபாதம் || 24
ப்ரபோ! ஆஞ்சனேய! யாரெல்லாம் உம் முன்னிலையில் இந்த சுப்ரபாத ஸ்தோத்திரத்தைப் பக்தியுடன் படிப்பார்களோ அல்லது மனத்தில் உம்மைத் தியானம் செய்துகொண்டு பிறர் படிப்பதைக் கேட்பார்களோ அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் நல்ல பொழுதாகும்படி அருள்பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.24
[END]
ஸ்ரீஅனுமனின் சுப்ரபாதத்தினை கண்டெடுத்து உதவியவர் ஸ்ரீ டி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரிகள். அதற்கு தகுந்தபடி தமிழுரை வழங்கிய பண்டிதர் ஸ்ரீ எஸ். ரங்கநாத சர்மா அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
தினமும் காலை அனுமன் சாலிசா படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். இனிமேல் அனுமன் சுப்ரபாதத்தையும் படித்து பயன் பெறுவோம்.
இந்த பதிவை அளித்ததற்கு நன்றி
ஆஞ்சநேயர் போட்டோ நன்றாக உள்ளது
நன்றி
உமா
சிறப்பான பயன் தரக்கூடிய பதிவு……………..பதிவிற்கும், படங்களுக்கும் நன்றிகள்……………
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்கள் பதிவு மிகவும் அருமை
நன்றி
Thanks
http://www.youtube.com/watch?v=86AqCFhwIyw
this is in tamil SONG BY P.B.SRINIVAS….
ஐயா இனிய காலை வணக்கம்.
இந்த பதிவை இந்த இனிய காலை நேரத்தில் படித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மீண்டும் ஒரு முறை இந்த நாள் இனிமையாக அமையும் என்று நம்புகிறேன்.
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜயம் ஸ்ரீ ராமஜயம்….