வாக்களிப்பது நம் கடமையா? என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ ஒரு அந்நியனுக்கு அடிமையாயிருப்பதை விட நான் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பெற்றது தானே சுதந்திரம். அந்த உரிமையைப் பயன்படுத்தாது போனால் அது நம் மடத்தனம் தானே…
இந்தியா ஜனநாயக அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்பும் நிறைவான ஓட்டு சதவிகிதத்தை அடையாதது வருத்தற்திற்குரிய விஷயம். வரும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்ற விஷயத்தை தீர்மானிக்கப்போவது நாம் ஒவ்வொருவரும் தான் என்பதை உணராத மக்கள் மனநிலை ஒரு முக்கிய காரணம்.
ஏழையோ, படிக்காதவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ, பெண்களோ யாராய் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு 18 வயது நிரம்பி இருக்கிறதா? உங்கள் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கையில். நமக்கு அடிப்படை உரிமைகளை வழங்கும் ஜனநாயகத்திற்கு வலு சேக்க கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுகளின் விழுக்காடு ஜனநாயகத்தின் லிமையை எடுத்துக்காட்டும் கண்ணாடி.
ஓட்டெனும் சீட்டு நம்மை ஆளவேண்டியவருக்கு நாம் கொடுக்கும் உத்தரவு. சினிமா தியேட்டர், சீரியல், மதுக்கடை என பல இடங்களில் பொன்னான நேரத்தை வீணாக்கும் நாம் ஓட்டளிக்க கொஞ்சம் நேரத்தை செலவிட யோசிப்போமானால் விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுத தவறியவர்கள் ஆகிவிடுவோம். இந்த உரிமையைப் பல சமயங்களில் பணம், அதிகாரம், சாதிச்செல்வாக்கு, பயமுறுத்தல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால் அது யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல தனக்குத் தானே செய்து கொள்ளும் சதி. ஓட்டுக்கு பணம் வாங்குவது மனசாட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டப்படி குற்றமும் கூட. ஓட்டுப்போட பணம் வாங்குபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை என்பது பலரும் அறியாத விஷயம்.
ஜனநாயகத்தில் மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனால் அதை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
எஸ்எம்எஸ் மூலம் நமக்கான வாக்குச்சாவடியைத் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எபிக் என்று டைப் செய்து அத்துடன் தங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணையும் டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு அனுப்பினால் எந்த வாக்குச்சாவடி என்ற தகவலை பெறலாம்.
இந்தியத் தேர்தல் அரசியலில் இன்னமும் எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. அதனால் நான் எதற்கு வாக்களிக்கவேண்டும் என்று சிலர் ஒதுங்கிப்போவதில் அர்த்தமில்லை. நம்பிக்கை இல்லை என்று ஒதுங்கியிருப்பது எந்த விதத்திலும் பயனளிக்காது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு யாருக்கும் ஓட்டளிக்கக் பிடிக்கவில்லையென்றாலும் ‘நோட்டா’ என்பதற்கு வாக்களிக்கலாம் என்ற புதியதொரு வழிமுறையும் உண்டு. ஓட்டுப்போட மறந்துபோனால் வாக்கின் வலிமையை உணராதவர்களாகிவிடுவோம்.
வாக்காளர் என்பது பெருமைக்குரிய விஷயமல்லவா. நான் இந்த நாட்டின் பிரஜை என்று சொல்லிக்கொள்வதில் சந்தோஷம் இல்லையா? எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குறிப்பதும் இந்த தார்மீக உரிமையைத்தானே. நியாமான முறையில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டளியுங்கள். பெண்களே நீங்கள் போராடிப்பெற்ற சுதந்திரத்தை வீட்டிலிருப்பவர்களுக்காக விட்டுக்கொடுக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள். காரணம் ஓட்டுரிமை நம் எதிர்காலத்தின் குரல்.
வாக்களிப்பது நமது கடமை, உரிமை. அதை விற்கக்கூடாது. அப்படி ஓட்டுக்கு பணம் வாங்குகிறவர்களை நாம் பார்த்தால் அவர்களிடம் வாக்களிப்பது நமது இன்றியமையாத கடமை. அதை நாம் விலைக்கு விற்கக்கூடாது என்று எடுத்துக்கூற வேண்டும். வெறும் ஆயிரம் ரூபாய்க்காக 5 வருடம் எதிர்காலத்தை விற்று விடாதீர்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், பின்னர் யார் தான் ஓட்டு போடுவார்கள்?
வாக்கை செலுத்தும் முன் கீழ்கண்ட உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.
* என் வாக்கு உயிருக்கு சமமானது. விலை மதிப்பீடு செய்ய முடியாதது.
* என் வாக்கு என்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கிறது
* என் வாக்கு ஐந்தாண்டு ஆட்சிக்கான அதிகாரம்
* வாக்களிக்க பணம் வாங்குவது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்கு தெரியும்.
* என் வாக்கு என் உரிமை, கடமை, பெருமை!
* என் மனசாட்சிப்படியே நான் வாக்களிப்பேன்.
* ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ உந்தப்பட்டு நான் வாக்களிக்கமாட்டேன்.
* நான் வாக்களிப்பது மட்டுமின்றி என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்கள் வாக்குரிமையை செல்த்திவிட்டனரா என்று உறுதி செய்து கொள்வேன்.
நம் தளவாசகர்கள் அனைவரும் நாளை எந்த வித சாக்கும் போக்கும் சொல்லாமல் வாக்குச் சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்கவேண்டும். சூழ்நிலைகள் மீது பழியை போட்டு வாக்குச் சாவடிக்கு செல்ல மறுக்கும் சோம்பேறிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான்.
நீங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி, சென்ற முறை தாங்கள் அளித்த வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றியது என்பதை கணிக்க தவறாதீர்கள். வாய்ச்சொல் வீரார்களையும் மணலால் கயிறு திரிப்பவர்களையும் புறக்கணியுங்கள்.
நமக்கு தேவை செயல்வீரர்கள். அதற்க்கு ஏற்ப உங்கள் வாக்கு அமையட்டும்.
வாழ்க இந்தியா! வளர்க தமிழ்நாடு!!
[END]
Definitely I will vote for the right candidate
Regards
Uma
சரியான நேரத்தில் ஒரு நச் பதிவு. ஜனநாயகத்தைப்பற்றி இதைவிட ஒரு தெளிவான எளிதான விளக்கம் இருக்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் அடிக்கடி சொல்வார் – முதல்ல நம்ம கடமையை செய்வோம் அப்புறம் உரிமைக்கு போராடுவோம்.
நம் கடமை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையாவது தவறாமல் வாக்களிக்கவேண்டும். அதையும் செய்யத்தவறிவிட்டு பிறகு ஆட்சியாளர்களை குறைகூறுவதில் எந்த நியாயமும் இல்லை. அர்த்தமுள்ள பதிவுக்கு நன்றி சுந்தர்.
Comment: பேச்சுப் பாேட்டியில் எனது குரல் ஓங்க உதவியது இந்த பதிப்பு…….
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். எங்கே, எந்த பள்ளி / கல்லூரி என்று சொன்னால் வாசகர்கள் மகிழ்ச்சியடைவார்களே.
மின்னஞ்சல் முகவரி : editor@rightmantra.com
நான் கட்டுரை போட்டில் பரிசு பெற இந்த பதிப்புகள் உதவியது ..