தாங்கள் நினைப்பது நடக்கவில்லை, கேட்பது கிடைக்கவில்லை என்றதும் விதி மீதும் இறைவன் மீதும் பழியை போட்டு வீட்டுக்குள் முடங்கிவிடுபவர்க்ள மத்தியில் நிச்சயம் திரு.கண்ணப்பன் ஒரு ரோல் மாடல் தான்.
சிங்கப்பூரை சேர்ந்த நம் தள வாசகரான ராமசாமி என்பவர் (இவர் சொந்த ஊர் திருச்சி) சில மாதங்களுக்கு முன்பு கண்ணப்பன் குறித்த தகவலை நமக்கு அனுப்பியிருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது கண்ணப்பனை பேட்டி எடுத்து வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார். ‘திருச்சி செல்லும்போது நிச்சயம் கண்ணப்பனை சந்தித்து அவரை கௌரவித்து, பேட்டியும் எடுத்து நம் தளத்தில் வெளியிடுவதாகவும், அது வரை சற்று பொறுமையாக இருக்கும்படியும் அவரை கேட்டுக்கொண்டோம். திரு.ராமசாமியிடம் சொன்னது போலவே சமீபத்திய திருச்சி பயணத்தில் கண்ணப்பன் அவர்களை சந்தித்தோம்.
திருச்சி உறையூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்த கண்ணப்பன் அந்த பகுதி மக்களை பொருத்தவரை ஒரு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். பார்வையில்லாவிட்டாலும் தன்னுடைய துறைக்கு தேவையான அறிவையும் தொழில்நுட்ப திறமையையும் போராடி கற்றுகொண்டார் கண்ணப்பன். அங்கே தான் அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.
கண்ணப்பன் உறையூரில் பாண்டமங்கலத்தில் இருக்கிறார் என்கிற தகவல் மட்டுமே நம்மிடம் இருந்தது. மற்றபடி அவர் மொபைல் நம்பரோ அல்லது முகவரியோ நம்மிடம் இல்லை. காலை வயலூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து அபிஷேக ஆராதனைகள் முடித்த பின்பு, குடும்பத்தினரை அனுப்பிவிட்டு வரும் வழியில் நாம் உறையூர் சென்றோம். திருச்சி வெயில் மண்டையை பிளந்தது. நான்கைந்து இடத்தில் விசாரித்ததில் ஐந்தாவது இடத்தில் கண்ணப்பனை தமக்கு தெரியும் என்றும் அவரது மெக்கானிக் ஷாப் இருக்கும் இடத்தையும் சொன்னார்கள்.
ஏதாவது வாங்கிக்கொண்டு செல்லலாம் என்றால், நாம் போகும் நேரம் கடை இருக்குமா கண்ணப்பன் இருப்பாரா அவரை சந்திக்க முடியுமா என்றெல்லாம் உறுதியாக தெரியாமல் என்ன வாங்கிக்கொண்டு செல்வது. முதலில் கண்ணப்பனை கண்டுபிடிப்போம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நேரே நமக்கு கிடைத்த முகவரிக்கு பயணமானோம்.
பாண்டமங்கலத்தில் குறிப்பிட்ட தெருவுக்கு சென்றதுமே கண்ணப்பனின் கடையை கண்டுபிடித்துவிட்டோம்.
கடையில் ஒரு நான்கைந்து இளைஞர்கள் இருந்தார்கள்.
“இங்கே மிஸ்டர் கண்ணப்பன் யாரு?”
“இதோ இவர் தான்!”
நடுநாயகமாக உட்கார்ந்து டூ-வீலர் ஒன்றை பழுது பார்த்துக்கொண்டிருந்த அவரை காட்டினார்கள்.
அருகே சென்று கைகுலுக்கினோம்.
“வணக்கம் மிஸ்டர் கண்ணப்பன். உங்களை சந்திக்கிறதுக்காக மெட்ராஸ்ல இருந்து வர்றோம்!”
தொடர்ந்து நம்மையும் நமது தளத்தை பற்றியும், ரோல் மாடல் சந்திப்புக்காக அவரை காண வந்திருக்கும் விஷயத்தையும் கூறினோம்.
நம்மை வரவேற்றவர் தந்து நண்பர்களிடம் கூறி, நமக்கு ஒரு சேர் எடுத்து போடும்படி சொன்னார்.
“ஒரு நிமிஷம்…இங்கே பக்கத்துல பழக்கடை ஏதாவது இருக்குமா?”
“இங்கே இல்லே சார்… மார்கெட் தான் போகனும்”
“உங்களை ஹானர் பண்ணனும். ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் போய் பழங்கள் வாங்கிட்டு வந்துடுறேன்”
“எதுக்கு சார் அதெல்லாம். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க என்ன சாப்பிடுறீங்க? காபி, டீ, ஜூஸ் ??”
“நான் அப்புறம் சாப்பிடுறேன். முதல்ல போய் பழங்கள் வாங்கிட்டு வந்துடுறேன்.”
“வேணும்னா அந்த வண்டியை எடுத்துட்டு போங்க சார்” என்று கூறி ஒரு பைக்கை நமக்கு கொடுத்தார்.
நேராக மார்க்கெட் போய் பழங்களும், பக்கத்திலேயே ஒரு ஜவுளி கடை இருந்தபடியால் ஒரு சால்வையும் வாங்கிக்கொண்டோம். பத்து நிமிடத்தில் திரும்பிவிட்டோம்.
அவருக்கு பல விதங்களில் உறுதுணையாக இருக்கும் அவர் நண்பர்களை பார்த்து கேள்வியை வீசினோம். “எத்தனையோ கி.மீ. தூரத்துல இருந்து கண்ணப்பனை பார்க்க நான் ஏன் வந்தேன் தெரியுமா?”
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். ஒருவர், “அவரை இண்டர்வ்யூ பண்ண!”
“அது ஓ.கே. இண்டர்வ்யூ பண்ணனும்னா எவ்வளவோ பேர் இருக்காங்களே… அது ஏன் கண்ணப்பனை இண்டர்வ்யூ பண்ணனும்?”
நாமே தொடர்ந்தோம்…. “ஏன்னா… கண்ணப்பனோட தன்னம்பிக்கையையும் அவரது திறமையையும் பாராட்ட தான். பார்வையில்லையே என்று சோர்ந்துவிடாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் உங்கள் நண்பரை எங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த!”
தொடர்ந்து கண்ணப்பனின் நண்பர்களை வைத்தே கண்ணப்பன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கச் செய்து, அவருக்கு நம் தளம் சார்பாக பழங்கள் வழங்கப்பட்டது.
நண்பர்கள் அனைவருடனும் அதை பகிர்ந்து சாப்பிடுவதாக அவர் சொன்னபோது நமக்கு நெஞ்சம் நிறைந்தது. அகமும் புறமும் குளிர்ந்தது.
கண்ணப்பன் பிறவியிலிருந்தே பார்வையற்றவர் அல்ல. அவருக்கு நான்கு வயது இருக்கும்போது ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் நோயால் இரு கண்களிலும் பார்வை பறிபோனது. அதனால் என்ன…நான் முன்னேறுவதற்கு பார்வையின்மை ஒரு தடையே இல்லை என்று சாதித்து காட்டிவிட்டார் திரு.கண்ணப்பன்.
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த கண்ணப்பன் தற்போது உறையூரில் பாண்டமங்கலத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்.
“என்னால் எந்த மாடல் எந்த மேக் பைக்கையும் ரிப்பேர் செய்ய முடியும். பாகங்களை விரலால் தடவிப் பார்த்தே அதில் உள்ள பிரச்னையை சொல்லிவிடுவேன். எனக்கு சிறு வயதிலேயே பார்வை போய்விட்டபடியால், பைக்குகள் எப்படி இருக்கும் என்று VISUALIZE மட்டுமே செய்யமுடியும்.” என்று கூறும் கண்ணப்பன், 2000 ஆம் ஆண்டிலிருந்து தனது மெக்கானிக் பயணத்தை துவக்கினார்.
அந்த பகுதியில் உள்ள ஸ்ரீனி, மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு மெக்கானிக்குகள் தான் இவருக்கு தொழில் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே வீட்டில் சைக்கிள்களை ரிப்பேர் செய்து பழகிக்கொண்டார். அந்த அனுபவமே டூ-வீலர் மெக்கானிக்காக மாறவேண்டும் என்பதில் இவருக்கு உந்துதலாக இருந்தது.
“என்னுடைய வாழ்க்கையையே இந்த துறைக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். என்னுடைய அப்பா, அம்மா, என்னுடைய அண்ணா, அண்ணி ஆகியோர் எனக்கு மிகவும் உதவியாக இருந்து எனக்கு உத்வேகம் கொடுத்து வருகிறார்கள். இந்த துறையில் சாதிக்கவேண்டும் என்பதைத் தவிர எனக்கு தனிப்பட்ட ஆசைகள் எதுவும் கிடையாது. என் கஸ்டமர்களுக்கு எப்போது நல்லதொரு சேவையை வழங்க விரும்புகிறேன்!” – ஒரு கர்ம வீரனை போல பேசுகிறார் கண்ணப்பன்.
கண்ணப்பனின் கதையை கேட்கும்போது கீழ்கண்ட குறள் தான் நினைவுக்கு வந்தது. (பொருளை கூகுள் செய்து பார்க்கவும்!)
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. (குறள் 591)
இவருடைய பணியை இவரது வாடிக்கையாளர்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள். அந்த நற்பெயர் இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்று தந்து வருகிறது.
நாம் பேசிக்கொண்டிருந்த போது, தனது பைக் ஒன்றை சர்வீசுக்காக கொண்டு வந்த அந்த பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் கூறுகையில், “பல வருடங்களாக எனக்கு கண்ணப்பனை தெரியும். அபார திறமைசாலி. எஞ்சின் சத்தத்தை வைத்தே என்ன ப்ராப்ளம் என்று கூறும் அவரின் திறமையை கண்டு வியந்திருக்கிறேன். புதிதாக நானோ என் நண்பர்களோ டூ-வீலர் ஏதேனும் வாங்கினால், இவரை அழைத்துச் சென்று இவர் முன்னிலையில் தான் வாங்குவேன். பழைய வண்டி வாங்குவதாக இருந்தாலும் சரி இவர் ஸ்டார்ட் செய்து பார்த்து ஓ.கே. சொன்னால் தான் வாங்குவேன். இந்த வண்டி கூட இவர் வாங்கித் தந்தது தான்!” என்றார்.
இவரது மெக்கானிக் ஷாப் பக்கத்தில் கடை வைத்துள்ள வசந்த் என்பவர் கூறுகையில், “இவருடைய வேலையில் மட்டும் குறையே சொல்ல முடியாது. அந்தளவு அட்சர சுத்தமாக இருக்கும் வேலை. பார்வையுள்ளவர்கள் கூட வேளையில் ஏதாவது தவறு செய்வார்கள். ஆனால் கண்ணப்பன் ஒருபோதும் செய்யமாட்டார்! ஒரு வேலை எடுத்தால் அது முடியும் வரை அடுத்த வேலையை தொடமாட்டார். இவருடைய திறமையையும் அர்பணிப்பு உணர்வையும் பார்த்த ஒரு மிகப் பெரிய டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு தன்னுடைய ராமநாதபுரம் பணிமனையில் வேலை அளித்தது. இருப்பினும் ஒருவருக்கு கீழே வேலை செய்ய பிடிக்காமல் சொந்தமாக கடை வைத்திருக்கிறார்!” என்றார்.
கண்ணப்பனுக்கு அரசு ஏதேனும் உதவி செய்தால் அவர் மேன்மேலும் இந்த துறையில் சாதனை படைப்பார் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
கண்ணப்பனுக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ரஜினி. ரஜினியை இவர் பார்த்ததில்லை. அவர் எப்படி இருப்பார் என்றும் தெரியாது. ஆனாலும் அவரது குரலை கேட்டு அவர் ரசிகனாகிவிட்டதாக கூறுகிறார் கண்ணப்பன். அவரை சந்திக்க நேர்ந்தால் அதை விட எனக்கு சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது என்றும் கூறுகிறார் கண்ணப்பன்.
அதற்கான முயற்சியை நாம் செய்துவிட்டோம். பலனளிப்பது ஆண்டவன் கைகளில்.
சந்திப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியதையடுத்து, சாதனையாளர் சந்திப்பில் நமது தளத்தின் சார்பாக வழங்கப்படும் ‘தினசரி பிரார்ததனை’ படத்தை அவருக்கு கொடுத்தோம்.
“கண்ணப்பன், இதை உங்க கடையில மாட்டுறீங்க. உங்க நண்பர்கள் உதவியுடன் இதை மனப்பாடம் செய்து தினசரி இதை சொல்லவேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்!” என்றோம்.
“அப்படி என்ன சார் அதுல போட்டிருக்கு?” ஆவல் அடக்க முடியாமல் கேட்டார் கண்ணப்பன்.
ஒவ்வொரு வரியாக நிறுத்தி நிதானமாக படித்து காண்பித்தோம்.
“ரொம்ப நல்லாயிருக்கு சார். ரொம்ப தேங்க்ஸ். இனிமே தினமும் இதை சொல்லிட்டு தான் வேலையைவே ஆரம்பிப்பேன்” என்று சொல்லும் கண்ணப்பன் தனது கடைக்கு ‘சாஸ்தா ஆட்டோமொபைல்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார். ஆம்….சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தர். ஒவ்வொரு வருடமும் நண்பர்களுடன் சேர்ந்து சபரிமலைக்கு செல்ல இவர் தவறுவதேயில்லையாம்.
(நாம் இதற்கு முன் சந்தித்த மெரீனா வெங்கட்டும் தான் ஐயப்ப பக்தர் என்று சொன்னது நினைவிருக்கிறதா? அடுத்த ஆண்டு, மெரீனா வெங்கட்டுடனும், கண்ணப்பனுடனும் இணைந்து நாம் மூவருமாக சேர்ந்து சபரிமலை செல்லவிருக்கிறோம்.)
“தொழில் ரீதியாக எதிர்காலத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்ய காத்திருக்கிறோம்!” என்று கூறி விடைபெற்றோம். கண்ணப்பனுக்கு பலவிதங்களில் உறுதுணையாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் நன்றி சொன்னோம்.
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
[END]
நன்றி !
தன்னம்பிக்கை மட்டுமே விழியாக கொண்ட கண்ணப்பனுக்கு எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் வழித்துணையாக இருப்பான். வாழ்க வளமுடன்!
சுந்தர் !
நீங்களும் கர்ம வீரர்தான்.
உங்களுக்கும் அந்த இறைவன் வழித்துணை என்பது நீங்கள் கண்ணப்பனின் முகவரியை அடைந்ததில் இருந்தே உணரமுடிகிறது!
திரு கண்ணப்பனை நம் தளத்திற்காக role model interview எடுத்து பதிவு அளித்தமைக்கு நன்றி. கண்ணப்பனின் திறமை பாராட்ட தக்கது. அவர் வாழ்கையில் மேலும் மேலும் உயர இறைவன் அருள் புரியட்டும்
நன்றி
உமா
கண்ணப்பன் !!… மிகுந்த பிரமிப்பாக உள்ளது.. கண், கை, கால்கள் நன்றாக இருந்தும் வேலை வெட்டி இல்லாமல் சோம்பேறிகளாக, அவர்கள் வீட்டிற்கும், உலகத்துக்கும் பாரமாக இருப்பவர்கள் இவரை பார்த்தாவது திருந்தவேண்டும்.
சுந்தர்.. நீங்கள் ஐயப்பனை எதோ ஒரு காரணத்தினால் மறந்திருந்தாலும் அவன் அவனுடைய பக்தர்கள் மூலமாக உங்களை சபரி மலைக்கே அழைத்துவிட்டான்.
நல்ல நேரம் உங்களை நெருங்கிவிட்டது. நீங்கள் நினைத்ததை அடைய காலம் கனிந்து விட்டதாகவே எண்ணுகிறேன்.
வாழ்க !! வளர்க உங்கள் தொண்டு !!.
அருமையான பதிவு சார் …..தன்னம்பிக்கை சிகரம் …வாழ்க வளர்க கண்ணப்பன் அவர்கள் ….
உழைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு திரு கண்ணப்பன் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு .வளர்க அவரது திறமை ..
அன்று அந்த கண்ணப்பன் தமது கண்ணை அந்த அம்மை அப்பனுக்கு பொருத்தி வற்றாத புகழ் பெற்றார்
இன்று இந்த கண்ணப்பனோ பார்வை பறிபோனதை எண்ணி வருந்தாமல் தமது துறையில் பலரும் போற்றும்படி வாழ்ந்துகாட்டி கண்ணிருந்தும் குருடர்களாய் நடமாடும் பலருக்கு ஒரு கலந்கரைவிளக்கமாக திகழ்கிறார்
நுட்பமான பணித்தேவையை கொண்ட இந்த வாகன துறையில் அவரது அசாதாரண அனுபவம் நம்மை வியக்க வைக்கிறது
அவர் மென்மேலும் தமது பணியில் உயர்ந்து விளங்கிடவும் , மனநிம்மதியோடும் உடல் ஆரோக்கியத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல அந்த பரம்பொருள் எப்போதும் துணை நின்று அருள் புரிவாராக
நண்பர் ராமசாமி அவர்களுக்கு விஷேஷ நன்றிகள்
மற்றும் வழக்கம்போல் நமது சுந்தர் ஜி அவர்களுக்கு நமது பாராட்டுதல்கள்
மனம்போல் எல்லாம் மங்கலமாய் நடைபெற வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !!!
வாழ்க வளமுடன்
பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளர்கள் பலரை அறிந்துள்ளேன்……….இருப்பினும் திரு. கண்ணப்பன் அவர்களின் திறமை பாராட்டுக்குரியது…….அவருக்கும் அவரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்……….நன்றி…….
மேலும்……….பார்வைத்திறன் மாற்றுத்திறனாளர்களுக்கு அவர்களின் குறையைக் கண்டு அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கும் தொழிலைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
கண்ணப்பன் , Wish you all success for your future. God always with you..
சூப்பர் சுந்தர் அண்ணா… நமது தளத்தை ரெகுலராக பார்த்து வருகிறேன் .. கலக்கல்… தொடரட்டும் உங்கள் சேவை…
கண்ணப்பன் கலக்கிட்டாரு ..
என்றென்றும் ஜி.உதய் ..
வாழ்க வளமுடன்
மாற்று திரனாலி திரு கண்ணப்பன் அவர்கள் அடுத்தவருக்கு ஒரு முன்மாதிரி . அவர்களை குன்றிள்ளிட்ட விளக்காக அனைவரும் அறியும் வண்ணம் செய்தமைக்கு நன்றி .
சார் இந்த தளத்துக்கு நான் ரொம்ப புதுசு,இந்த பதிவுகள் எல்லாம் இப்போதான் படிக்கிறேன்.
உங்கள் அனைத்து பதிவுகளும் நெஞ்சை தொடுகிறது சார்.இவ்ளோ நாள் வாழ்கைய வாழாமலே போன மாதிரி உணர்வு ஏற்படுது.ரைட் மந்த்ரா வை கண்ணில் காட்டிய கடவுளுக்கு மிக்க நன்றி .