Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

print
து நம் புத்தாண்டு ஆலய தரிசனத்தின் இரண்டாம் பாகம். குன்றத்தூர் சேக்கிழார் மனிமண்டபத்திலிருந்து மதியம் வீட்டுக்கு வந்து சற்று ஒய்வு எடுத்துக்கொண்ட பின்னர் இரண்டு மணிநேரம் பதிவுகளை தயார் செய்வதிலும், நமது அறையை சுத்தம் செய்வதிலும் சென்றது.

மாலை வானகரம் சென்று அங்கு, மச்சக்கார முருகன் என்றழைக்கப்படும் முருகனை தரிசித்தோம். பேச்சுத் திறன் குறைந்த குழந்தைகள் இவரை தரிசித்தால் விரைவில் பேச்சு வரும். நமது ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை அந்த ஆலயத்தில் முருகனுக்கு அர்ச்சனை செய்தபிறகு அங்கு சன்னதியிலேயே நடைபெற்றது.

வானகரம் மச்சக்கார முருகன்
வானகரம் மச்சக்கார முருகன்

மறுநாள் தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு அன்று நமக்கு அலுவலகம் உள்ளதா அல்லது விடுமுறையா என்று கடைசி வரை தெரியாத காரணத்தால் எதையும் திட்டமிடமுடியவில்லை. சனிக்கிழமை மாலை தான் திங்கள் விடுமுறை என்று தெரியும். எனவே புத்தாண்டுக்கு நாம் செய்ய நினைத்த அன்னதானம் உள்ளிட்ட வழக்கமான சில பணிகள் செய்ய முடியவில்லை. மேலும் நாம் வழக்கமாக செய்யும் ஆலயங்களில் SLOT வேறு கிடைக்கவில்லை.

எனவே குன்றத்தூர் முருகன் கோவில், குமணன்சாவடி கண்ணபிரான் கோவில் உள்ளிட்ட சில கோவில்களுக்கு பூக்களும் மாலைகளும் எண்ணை டின்னும் வாங்கித் தந்ததோடு சரி. (ஒவ்வொரு விஷேட நாளின்போதும் பண்டிகையின் போதும், ஆலயங்களுக்கு பூக்களும் மாலைகளும் வாங்கித் தரும் கைங்கரியத்தை நாம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே!)

வேலை நாளில் கூட எப்படியாவது வீட்டுக்கு வந்தவுடன் அமர்ந்து பதிவு எழுதிவிடலாம். ஆனால் விடுமுறை நாளில் எழுதுவது மிகவும் கஷ்டம். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் இந்த தளத்தை நடத்த முடியுமா அல்லது நாம் போக நினைக்கும் தூரம் தான் போக முடியுமா? கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது என்பது நமக்கு தெரியாதா என்ன?

முந்தைய தினம் குன்றத்தூர் சென்று முருகனை தரிசித்திருந்தாலும் மறுநாள் புத்தாண்டு அன்றும் அவனை தரிசிக்க ஆவல் கொண்டோம். வருடத்தின் முதல் நாளில் முருகனை தரிசிப்பதில் உள்ள ஆனந்தம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

DSC02008

போரூரில் ஈஸ்வரன் கோவில் தெருவில், பாலசுப்ரமணியர் கோவில் என்று முருகன் கோவில் ஒன்று உள்ளது. (இந்த கோவில் தொடர்புடைய பதிவுகள் நாம் ஏற்கனவே சில அளித்திருக்கிறோம்.). வாரியார் ஸ்வாமிகள் அடிக்கல் நாட்டிய கோவில் இது. மிக மிக அழகான அற்புதமான கோவில். இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றால் அப்படியே இந்த கோவிலுக்கும் சென்றுவிட்டு வாருங்கள். ஒரே தெருவில் அருகருகே அமைந்துள்ளது.

பங்குனி உத்திரம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் ஜெகஜோதியாக இருந்தது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களில் முருகன் ராஜ அலங்காரத்தில் மாலை காட்சி தருவார் என்று
கூறியிருந்தபடியால் ராஜ அலங்காரத்தில் குமரன் எப்படி காட்சி தருவான் என்று கற்பனை செய்தபடி சென்றோம்.

நாம் சென்ற நேரம் சரியான கூட்டம். மூலவர் சன்னதியின் திரையை மூடியிருந்தார்கள். அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் மிகப் பெரிய க்யூ நின்றுகொண்டிருந்தது.

இத்துனை கூட்டத்தில் அர்ச்சனை செய்யமுடியாது என்பதால் அர்ச்சனைக்கு என தனியே ஒரு உற்சவரை எழுப்பியிருந்தார்கள். அங்கு சென்று அர்ச்சனை செய்தோம். நம் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்தவர்கள் என அனைவருக்காகவும் முருகனிடம் பிரார்த்தனை செய்தோம்.

DSC01994

அர்ச்சனை முடிந்த பின்னர் பிரகாரத்தை வலம் வந்தோம். மூலவரை பார்க்க க்யூவில் நின்றால் எப்படியும் அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிடும். க்யூ கொஞ்சம் நகரட்டும் அப்புறம் சேர்ந்துகொள்ளலாம் என்று கோவிலை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு பக்கம் பெரிய பெரிய பாத்திரங்களில் பிரசாதம் தயாராகிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் பெண்கள் விளக்கேற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் பூக்கள் கூடை கூடையாக வந்து இறங்கிக்கொண்டிருந்தன. ஒரு திருவிழாவுக்கு உரிய பரபரப்பில் பாலசுப்ரமணியர் கோவில் காணப்பட்டது.

DSC02002

நாம் சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்த விஸ்தாரமான மண்டபத்தின் ஒரு ஓரம் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் சகிதம் ஆறேழு பேர் கொண்ட மங்கள இசை குழுவினர் வந்து அமர்ந்தனர். அடி தூள்… மங்கள் இசை ஏற்பாடு செஞ்சிருக்காங்க போல… அவர்களை பார்த்ததும் நமக்கு முகம் பிரகாசமாகிவிட்டது. கூட்டம் குறையும் வரை சிறிது நேரம் மங்கள இசையை கேட்டுக்கொண்டிருக்கலாம் என்பது நம் கணக்கு.

குழுவினர் சற்றைக்கெல்லாம் ஆயத்தமாகி நாதஸ்வரத்திலும் தவிலிலும் “அழகென்ற சொல்லுக்கு முருகா”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” போன்ற காலத்தால் அழியாத முருகனின்  பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தனர்.

DSC01996

அதற்குள் மண்டபத்தில் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காரம் முடிந்து மூலவரின் திரையை விலக்கிவிட்டார்கள் போல. நாம் நினைத்தது உண்மை தான். ராஜ அலங்காரத்துடன் பாலசுப்ரமணியர் திவ்ய தரிசனம் தந்துகொண்டிருந்தார்.

“முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முன் நான்காகும்
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும் கண்டான் அவன் தவம் செப்பற் பாற்றோ”

என்ற கச்சியப்ப சுவாமிகளின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

DSC02001

இப்போது வேண்டாம்… கூட்டம் சற்று குறையட்டும்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மங்கள வாத்தியக்காரர்களிடம் மீண்டும் வந்து, அவர்கள் அருகே நின்று மங்கள இசையை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

இந்த மங்கள இசைக்குழுவினருக்கு ஏதாவது செய்யவேண்டுமே… என்ன செய்வது… ஓரிருவர் என்றால் ஆளுக்கு நம்மால் இயன்ற தொகை ஏதேனும் தரலாம். ஆனால் இவர்கள் மொத்தம் ஏழு பேர் இருக்கிறார்களே… என்ன செய்வது என்று யோசித்தோம்.

பேசாமல் ஏதாவது கூல்ட்ரிங்க்ஸ் பெரிய பாட்டில் வாங்கி வந்து ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுக்கலாம். வெயில் காலம் வேறு என்பதால் நிச்சயம் சந்தோஷமாக குடிப்பார்கள் என்று தோன்றியது.  எதற்கும் அவர்களிடமே கேட்டுவிடலாம். நாம் பாட்டுக்கு வாங்கிக்கொண்டு போய் அவர்கள் குடிக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது?

DSC02004

தவில் வாசித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் சென்று அவரை நோக்கி குனிந்து அவரிடம் மட்டும் சன்னமாக, “குடிக்க ஜூஸ் ஏதாவது வாங்கித் தந்தா குடிப்பீங்களா?” என்று கேட்டோம். நம்மை சட்டென்று நிமிர்ந்து பார்த்தவர், “தாராளமா சார்…!” என்றார்.

அப்பா… அனுமதி கிடைத்துவிட்டது. வெளியே சென்றோம். பெப்சி, கோக் போன்ற பானங்களை கொடுக்க நமக்கு விருப்பம் இல்லை. தெருவை சற்று அலசி ஆராய்ந்ததில் சற்று தள்ளி ஒரு தள்ளுவண்டியில், கிர்ணிப் பழ ஜூஸ் விற்றுக்கொண்டிருந்தார்கள். சூழ்நிலை சுத்த பத்தமாக இருந்தது. கிர்ணிப் பழ ஜூஸ் வாங்கி ஆளுக்கு ஒரு டம்பளர் கொடுத்துவிடுவோம். அடியார்களுக்கு தாகம் தனித்தது போல ஆச்சு. நம்ம ஆள் ஒருத்தருக்கு வியாபாரம் செஞ்சது போலவும் ஆச்சு என்று கருதி, “ஏழு டம்பளர் ஜூஸ் கொடுப்பா… எதிரே கோவிலுக்கு எடுத்துட்டு போகணும்” என்றோம்.

கடையில் இருந்த இளைஞர், “ஏழு கிளாஸா? இதோ ஒரு நிமிஷம் சார்” என்று கூறிவிட்டு எங்கோ சென்று ஒரு அழகான சிறிய பிளாஸ்டிக் ட்ரேவுடன் திரும்பி வந்தார். ஏழு பிளாஸ்டிக் டம்ப்ளர்களில் பழச்சாறை நிரப்பி அதை அந்த ட்ரேவில் வைத்தார். ஆறு கிளாஸ்கள் தான் வைக்க முடிந்தது. “நான் ட்ரேவை எடுத்துக்குறேன். நீங்கள் அந்த ஒரு கிளாசை எடுத்துக்கோங்க. கொஞ்சம் என் கூட வந்தீங்கன்னா உள்ள மேளக் கச்சேரி வாசிக்கிறவங்க கிட்டே கொடுத்துட்டு வந்துடலாம். வர்றீங்களா?” என்றோம்.

நாம் ட்ரேவை எடுத்துக்கொண்டு செல்ல, நம் பின்னே அவர் அந்த பாக்கி கிளாசை எடுத்துக்கொண்டு வந்தார். நேரே மங்கள வாத்தியக்காரர்களிடம் சென்று ஆளுக்கு ஒரு கிளாஸ் கொடுத்தோம்.

அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே புழுக்கத்தில் அவர்கள் வாசித்துக்கொண்டிருந்தபடியால் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.

கடைப் பையன் ட்ரேயை எடுத்துக்கொண்டு போய்விட நாம் ஓரமாக நின்றுகொண்டோம்.

அவர்கள் அனைவரும் கிளாசை எடுத்து, பழச்சாறை ஒரு வாய் குடித்த பின்பு தான் நமக்கு நிம்மதியாக இருந்தது.

ஜூஸ் எப்படி இருந்தது என்று நமக்கு சந்தேகம் இருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, “எப்படி சார் இருந்தது? நல்லா இருந்ததா?” என்று கேட்டோம்.

அவர்கள் ஏதும் பேசவில்லை. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னார்கள். அந்த பார்வை தான் சொன்ன அர்த்தங்கள் எத்தனை எத்தனை.

பொதுவாக மங்கள வாத்தியக்காரர்களை இது போன்ற நிகழ்சிகளில் விசேடங்களில் விழா ஏற்பாட்டாளர்களை தவிர வேறு யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்,  யாரோ முன் பின் தெரியாத ஒருவர் தேடி வந்து தாகம் தீர்த்ததை எண்ணி அவர்கள் உள்ள எத்தனை குளிர்ந்திருக்கும் என்று யூகித்துப் பாருங்கள்.

க்யூவில் நின்று அனைவரும் அங்கு முருகனை தரிசித்துக்கொண்டிருக்க, இதோ நாம் நம் குமரனை இந்த அடியார்கள் வடிவில் கண்டு ஆனந்தமடைந்தோம். அவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ, தாகம் தனிந்தார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் நம் முருகன் தாகம்  தனிந்திருப்பான். ஏனெனில், அவன் அடியார்களுக்கு செய்யும் சேவை அவனுக்கே செய்யும் சேவையல்லவா?

இதற்கு என்ன செலவு ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஏழு கிளாஸ் ஜூஸ் ரூ.70/-. ஆனால் இதில் கிடைத்த திருப்தியும் மனநிறைவும் இருக்கிறதே… அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இதையெல்லாம் நாம் பகிர்ந்துகொள்வதன் நோக்கம், ஆலய தரிசனத்தில், இது போன்ற விஷேடங்களில் நீங்கள் கலந்துகொண்டால் நீங்களும் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, எளிமையான பகவத் சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே.

கோவிலுக்கு போவதும் இறைவனை வணங்குவதும் மட்டுமே பக்தி அல்ல. ஆலய தரிசனமும் அல்ல. அது சுயநலம். அவன் அடியவர்களுக்கு செய்யும் சேவையே உண்மையான பக்தி. மெய்யான ஆன்மிகம்.

அடுத்து க்யூவில் போய் சேர்ந்துகொண்டோம். எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருந்தோம். ராஜ அலங்காரத்தில் முருகன் ஜொலித்துக்கொண்டிருந்தார்.  தலையில் கிரீடம், தங்கக் கவசம், ரோஜா மாலை என மிகவும் சிரத்தையுடன் அலங்காரம் செய்திருந்தார்கள் குமரனுக்கு. முருகன் என்றாலே அழகு தான். அழகுக்கு அழகு சேர்ப்பது என்றால் அது இது தான் போல….

நம் முறை வந்தது அருகே சென்றோம்.

நம் தளத்தின் சிறந்த எதிர்காலத்திற்க்காகவும், நம் வாசகர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் பிரார்த்தனை செய்துகொண்டோம்.

அடுத்து நம் பிரார்த்தனை. “ஐயனே எந்த பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியாது. ஆனாலும் நீ இந்த எளியோனை தடுத்தாட்கொண்டாய். உன் அருள் இல்லாவிட்டால் இந்த கருவேப்பிலை துளசி ஆகியிருக்குமா? இதற்கே நான் பல பிறவிகள் எடுத்து உனக்கு நன்றிக் கடன் தீர்க்கவேண்டும். பிறவிகள் எடுப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன் அடியார்களுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தையும் அதற்குரிய வலிமையையும் மட்டும் தவறாமல் நீ எனக்கு தரவேண்டும். வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.

மண் வேண்டேன் பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்.
நவமணிகள் வேண்டேன் பிறவா நிலையும் வேண்டேன்.
வேண்டுவது யாவும் உன் அடியார்களுக்கு தொண்டு
செய்யும் பேறு ஒன்றே!

வெளியே வந்து ஜூஸ் வாங்கியதற்கு பணம் செட்டில் செய்தோம்.

அந்த ஜூஸ் கடை இளைஞர் நம்மிடம்…. “அவங்க யார் சார்? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”

“இல்லை!”

“ஒருவேளை நீங்க அவங்க கச்சேரியை ஏற்பாடு பண்ணீங்களா?”

“இல்லை!”

அவருடைய வியப்பு மேலும் அதிகரித்தது.

“கோவில்ல ஐயரா சேர்ந்திருக்கீங்களா?”

“இல்லை!”

“அவங்க உங்களை கேட்டாங்களா?”

“இல்லை!”

“பின்னே ஏன் ஜூஸ் வாங்கிக்கொடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“எல்லாரும் பொதுவா கடவுளை கருவறையில தான் பார்ப்பாங்க. ஆனா நான் இது போன்ற விஷயங்களில் தான் பார்ப்பேன்!” என்றேன்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அந்த இளைஞர் நமது தோளை தட்டிக்கொடுத்தார். கைகளை பற்றிக் கைகுலுக்கினார்.

எழுபது ரூபாயில் பத்து ரூபாயை நம்மிடம் திருப்பி தந்துவிட்டார்.

நாம் “ஏன்?” என்பது போல பார்த்தோம்….

“பரவாயில்லே இருக்கட்டும் சார்… உங்க கூட சேர்ந்து நானும் கொஞ்சம் கடவுளை பார்த்துக்குறேன்!” என்றார்.

இவர் சொல்லி முடிக்க, முருகன் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது.

================================================================
Also Check :

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

================================================================

[END]

10 thoughts on “கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

  1. மண் வேண்டேன் பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்.
    நவமணிகள் வேண்டேன் பிறவா நிலையும் வேண்டேன்.
    வேண்டுவது யாவும் உன் அடியார்களுக்கு தொண்டு
    செய்யும் பேறு ஒன்றே! …அருமையான வைர வரிகள் சுந்தர் சார் …உங்கள் மூலமா அந்த தள்ளுவண்டியில், கிர்ணிப் பழ ஜூஸ் விற்றுக்கொண்டிருந்த பையன் செய்த சேவையும் ,அதற்கு நீங்கள் துணை நிண்டதும் சிறந்த சேவை …சார்.எல்லாம் அவன் சையல்…

  2. சுந்தர் ஜி rightmantra.com தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் அமர்க்களம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. நல்ல ஆரம்பம் ,அற்புதமான ஆனந்தமான முடிவு .

    கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபதில் ஆரமித்து,எங்கள் அனைவரையும் உடன் அழைத்து கொண்டு முருகப்பெருமானின் ராஜா அலங்காரத்தை தரிசித்து வைத்து ,அதில் வெற்றியும் கண்டு உள்ளீர் வாழ்த்துக்கள் .

    நமது தளம் அடுத்ததொரு மிகப்பெரிய வெற்றிப்பயணத்தை தொடர வாழ்த்துக்கள் .

    -மனோகர்

  3. ஆலய தர்சன புத்தாண்டு பதிவு மிகவும் அருமையான உயிரோட்டமுள்ள தத்துவபூர்வமான சிந்திக்க வைக்கும் பதிவு.. ஜூஸ் வாங்கி கொடுத்து நீங்கள் மட்டும் புண்ணியம் தேடி கொள்ளாமல் ஜூஸ் விற்பவருக்கும் புண்ணியம் தேடி தந்து இருக்கிறீர்கள்

    ரைட் மந்த்ரா வெற்றி பாதையை நோக்கி பயணிக்க எமது வாழ்த்துக்கள்.

    முருகன் படங்கள் அருமையாக உள்ளது.

    இதே போல் ஆங்கில புத்தாண்டு பதிவையும் எதிர்பார்கிறோம் 2014 ம் ஆண்டு முடிவதற்குள் பப்ளிஷ் பண்ணவும்

    நன்றி
    உமா

  4. சுந்தர் சார்,
    தமிழ் புத்தாண்டு உங்களுக்கு குருவருளும் திருவருளும் சேர்ந்து அவர்களின் நல்லாசியுடன் ஆரம்பித்து உள்ளது.
    சேக்கிழார் மணிமண்டபமும் முருகனும் மேலும் மேலும் உங்களுக்கு நீங்கள் வேண்டியதை கொடுத்து அருள் புரிய வேண்டும்.
    நல்ல நாள் முக்கியமான நல்ல என்றல் நீங்கள் என்ன பண்ண போகிறிர்கள் என்று கொஞ்சமாவது தெரியும். ஆனால் இந்த தமிழ் புத்தாண்டு திடிர் ப்ரோக்ராம்மாக ஆனால் மிக சிறப்பாக அமைந்து விட்டது. அடியார்களுக்கு தொண்டு செய்வதிலும் ஒருவகை என்று புதிதாக எங்களுக்கு எல்லோரிடமும் இறைவனை காணும் பக்குவத்தை அறிமுகபடுத்தி இருக்கிறிர்கள்.
    எல்லாரும் பொதுவா கடவுளை கருவறையில தான் பார்ப்பாங்க. ஆனா நான் இது போன்ற விஷயங்களில் தான் பார்ப்பேன்!” என்று சொல்லி அவரையும் இது போன்ற காரியங்களை இனி ஈடுபட வைத்துளிர்கள்.
    என்றும் உங்களுக்கு ஜெயமே உண்டாகும்.

  5. நல்லது செய்ய வேண்டுமென்று ஒவ்வொருவர் மனதிலிருந்தாலும் கூடவே தயக்கம் இருக்கும். அப்படி தயங்குபவர்களையும் தங்களின் தன்னலமற்ற சேவையால் இழுத்து வந்து விடுவீர்கள்…………இனிமேல் நான் செல்லும் இடங்களீலும் இது போன்றதொரு சேவையை செய்ய வேண்டுமென்ற என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன்.
    நேற்று எனது கணவருக்கு பிறந்த நாள்………ஆகையால் கோவிலுக்கு செல்ல எண்ணியபோது, எனக்கு நாக தோஷம் உள்ளதால் நாகருக்கு அபிஷேகம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்………வெள்ளிக்கிழமையாதலால் இரண்டு விஷயங்களுக்காகவும் சென்னிமலை செல்லும் வழியில் வாய்க்கால்
    மேடு எனும் பேருந்து நிறுத்தத்திலிருந்து உட்புறமாக இரண்டு கல் தொலைவு செல்லக்கூடிய இடத்தில் உள்ள நாகர் ஆலயத்திற்குச் செல்ல முடிவு செய்தோம். என் அக்கா குழந்தைகளையும் அழைத்துச் சென்றதால் அவர்களுக்கவும் எங்களனைவருக்காகவும் கட்டுசாதம் செய்ய முடிவு செய்தோம், கூடவே இன்னமும் அதிகம் எடுத்துச் சென்றால் அங்கு வரும் பக்தர்களுக்குக் கொடுகலாமே என்று தயார் செய்து கொண்டு சென்றோம்……….ஆனால் அங்கு சென்ற பிறகு தான் அங்கேயே தயார் செய்யும் உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவார்கள், வீட்டிலிருந்து கொண்டு சென்றால் கொடுக்க அனுமதிப்பதில்லை என்று…….. மனம் சிறுதளவு வருத்தப் பட்டது….உடனே சாதத்தை எடுத்துக் கொண்டு திண்டல் மலை முருகன் கோவிலுக்குச் சென்றோம்…அங்கும் அண்ணதானம் முடிந்து கோவில் நடை சார்த்தி விட்டார்கள்……..என்ன செய்யதென்று தவித்தோம்……உடனே, அருகினில் இருந்த கடையில் காகிததட்டுகள் வாங்கி கிட்டத்தட்ட 55 பேருக்கு உணவை கொடுத்தோம்…….உணவு அளித்து முடித்தபோது…..அருகினில் ஒருதம்பதியினர் கைக்குழந்தையோடு அமர்ந்து பேசிக்கொண்டனர்….சுவாமி தரிசனமும் நல்லபடியாக அமைந்தது……..மதிய உணவுக்கு திருப்தியாக உணவும் கிடைத்தது. வேறென்ன வேண்டுமென்றார்கள்……………
    என்கணவரின் பிறந்த நாளீல் இந்த வார்த்தையை தவிர வேறென்ன வேண்டுமெங்களுக்கு.

  6. நல்ல முயற்சி. நல்ல எண்ணம். உமா அவர்களின் கடைசி வரிகளை ஆமோதிக்கிறேன்.

  7. ஜூஸ் கடை இளைஞர்தான் உண்மையிலேயே புண்ணியவான். அவர் கடைக்கு கிடைத்த பாத்து ருபாய் லாபத்தையும் விட்டுக்கொடுத்து சுந்தரின் நல்ல காரியத்தில் பங்கெடுத்தது எனக்கு ஒரு நல்ல பாடம்.

    ஆலய தரிசனத்தின் இன்னொரு மனிதநேய பக்கத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய சுந்தருக்கு நன்றி.

  8. “பெப்சி, கோக் போன்ற பானங்களை கொடுக்க நமக்கு விருப்பம் இல்லை” எதுக்காக இல்லனாலும் இதுக்காகவே உங்கள பாராட்டலாம்… ! Great Sundar Sir…

  9. சுந்தர் சார்,
    மிக அருமையான புத்தாண்டு துவக்கம் .தான் மட்டும் நற் காரியத்தில் ஈடுபடுத்தி கொள்வதுடு நிற்க்காமல் , பிறரையும் செய்ய தூண்டுவதே Sundar ஜின் சிறப்பு. சேவைகளில் தலை சிறந்த சேவை நல் எண்ணங்களை மனதில் விதைப்பதே . தொடரட்டும் உங்களின் சேவை…

    ரேவதி வெங்கடேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *