பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், எதற்கு மானிடனாக பிறந்து மரவுரி தரித்து காட்டிலும் மேட்டிலும் திரியவேண்டும்?
திரேதா யுகத்தில் மக்கள், “இறைவன் படைத்த வேதங்களின் படி வாழ்வது சாத்தியமேயில்லை” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். எனவே, தான் வகுத்த வேதங்களின் படி, தானே வாழ்ந்துகாட்டுவதாக கூறி மகாவிஷ்ணு இராமாவதாரம் எடுத்தார். எம்பெருமானை விட்டுவிட்டு ஆதிசேஷன் மட்டும் பாற்கடலில் இருப்பாரா என்ன? அவர் லக்ஷ்மனனாக அவதரித்தார்.
இராமாவதாரத்தில் இராமபிரான் எங்குமே தன்னை சகல சக்தியும் படைத்த கடவுள் போல காட்டிக்கொள்ளவில்லை. அதை பிரயோகிக்கவும் இல்லை. மனிதனாகவே வாழ்ந்து இறைத்தன்மையை நிலை நாட்டினார். மனிதன் படும் அத்தனை துன்பங்களையும் தானும் அனுபவித்தார். வனவாசம் செய்த போதும், தனது மனைவியை பிரிந்து தவித்தபோதும் எந்த சூழ்நிலையிலும் தனது நித்திய கடமைகளை நிறைவேற்றாமல் இருந்ததில்லை. எனவே தான் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மற்ற அவதாரங்களைவிட இராமாவதாரம் சற்று உயர்த்தி சொல்லப்படுகிறது.
ராம நவமியன்று நாம் செய்யவேண்டியது என்ன என்பது பற்றி மஹா பெரியவா அவர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார்கள். பின்பற்றி பலனடையவேண்டியது அவரவர் கைகளில்.
(இது போன்ற விஷேட நாட்கள் பற்றி இரண்டொரு நாள் முன்கூட்டியே பதிவளித்தால், பதிவில் கூறப்படும் விஷயங்களை பின்பற்ற எளிமையாக இருக்கும் என்று நண்பர்கள் கருத்து தெரிவித்ததையடுத்து சற்று முன்கூட்டியே தருகிறோம். இராமநவமி தினத்தன்று மற்றொரு பதிவு இடம்பெறும்.)
===========================================================
ராம நவமியன்று நாம் செய்யவேண்டியது என்ன?
நன்மையும்
செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்
(கம்ப ராமாயணம் – சிறப்புப் பாயிரம் 14)
ஸ்ரீராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்காணும் பாகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே.
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஒங்கவே.
ஒருபகல் உலகெல்லாம் உதரத்துட் பொதிந்
தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.
(கம்ப ராமாயணம்: பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)
இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிரமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றிக் கொண்டு, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.
மங்கள கீதம் பாட
மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்.
மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் – பின்
அபிடேகஞ் செய்தார்.
சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்த்தார்
(கம்ப ராமாயணம்: யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)
ராமபிரானின் சிரத்தின் மேல் பொன் கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தவர்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.
நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.
(நன்றி : தெய்வத்தின் குரல், tamil.thehindu.com)
===========================================================
Also check :
ராமரை நம் நெஞ்சில் நிறுத்தி பட்டாபிஷேகம் செய்யும் மகா பெரியவா – ஸ்ரீ ராமநவமி ஸ்பெஷல் 1
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!
ராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!
குறைந்த நேரத்தில் படித்து முடிக்க ஏகஸ்லோக இராமாயணம் & காயத்ரி இராமாயணம்!
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
===========================================================
[END]
ஸ்ரீ ராம நவமி பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்.
அன்று எல்லோரும் உபவாசம் இருந்து இறை அருள் பெறுவோம்
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
நன்றி
உமா
சுந்தர் சார் வணக்கம்
அனைத்து தகவலும் அருமை
nandri
விஷேச நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது, பயனுள்ளதாகவே இருக்கும் நன்றி. ஜி.
அருமையான கட்டுரை …..ஸ்ரீ ராம ஜெய ராம ….ஜெய ஜெய ராம…….
சிவாய நம