Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

print
நாம் இது வரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக எளிமையான ஒருவர் மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்கள் என்றால் மிகையாகாது. நமது பாரதி விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்புற செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

மகா பெரியவா அவர்களை பற்றி பாலன் அவர்களின் கருத்து என்ன? அவரை பற்றி ஏதேனும் பேசியிருக்கிறாரா அல்லது எழுதியிருக்கிறாரா என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டு வந்தது.

என்ன ஆச்சரியம்… அடுத்த சில நாட்களில் அதற்கு விடை கிடைத்தது.

மகா பெரியவா அவர்களை பற்றி பாலன் அவர்கள் கூறியிருக்கும் நெகிழ வைக்கும் அனுபவம் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்னர்… பாரதி விழா முடிந்த பிறகு அவரை சந்தித்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்..

பாரதி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரு.வீ.கே.டி.பாலன் அவர்கள் கலந்து கொள்வது இறுதி செய்யப்பட்டவுடன் அவரை பற்றி நாம் அறிந்துகொள்ள உதவிய ‘ஒத்தையடிப் பாதை’ நூல் தனக்கு ஒரு ஐந்து பிரதிகள் வேண்டும் என்றும், முடிந்தால் வாங்கித் தரும்படியும் பாரதி விழாவிற்கு வரும்போது பெற்றுகொள்வதாகவும் சொல்லியிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி, விழாவின் போது ‘ஒத்தையடிப் பாதை’ சுமார் ஐந்து பிரதிகளை அவரிடம் ஒப்படைத்தோம்.

Othaiyadi Paadhaiஅப்புறம் நாம் அதை மறந்தேவிட்டோம். ஒரு நாள் பாலன் அவர்களிடம் இருந்து அலைபேசி வந்தது. “என்ன தம்பி அந்த புக் வாங்கிக் கொடுத்தீங்க… அதுக்கு பணம் வாங்கிக்கவேயில்லையே… நானும் மறந்துட்டேன். நாளைக்கோ நாளன்னைக்கோ ஆபீஸ் வரமுடியுமா?”

“சார்….நானே உங்களை சந்திக்கனும்னு நினைச்சிகிட்டிருந்தேன். அந்த புத்தகங்களுக்கான பணத்தை வாங்கிக்கிறதுக்கு இல்லை. உங்களுக்கு எங்கள் தளம் சார்பா ஒரு பரிசு கொடுக்கணும். விழாவின்போதே கொடுத்திருக்கணும். டென்ஷன்ல விட்டுப்போச்சு… மன்னிக்கனும்.”

“தம்பி… அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உங்க அன்பு ஒன்னே போதும். நீங்க நாளைக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு வாங்க…”

மறுநாள் மாலை, அலுவலகம் முடிந்ததும் நண்பர் ஹரிஹரசுதனை அழைத்துக்கொண்டு எழும்பூரில் உள்ள மதுரா டிராவல்ஸ் அலுவலகம் சென்றோம். நம்மை வரவேற்றவர், விழா நடந்த விதம் பற்றி சிலாகித்து கூறினார். தொடர்ந்து அந்த புத்தங்கங்களுக்கான தொகை எவ்வளவு என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்… நான் வந்ததே உங்களை சந்திச்சி இதை கொடுக்கத்தான்” – தயாராக வைத்திருந்த நமது தினசரி பிரார்த்தனை லேமினேட்டட் படத்தை காண்பித்தோம்.

 நண்பர் ஹரிஹரசுதன் திரு.வீ.கே.டி.பாலன் அவர்களுக்கு நம் தளத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்குகிறார்

நண்பர் ஹரிஹரசுதன் திரு.வீ.கே.டி.பாலன் அவர்களுக்கு நம் தளத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்குகிறார்

“முதல்ல நீங்க புக்குக்கு எவ்ளோ ஆச்சு சொல்லுங்க… அப்போ தான் நான் அந்த படத்தை வாங்கிக்குவேன்” என்றார்.

நம்மிடம் அந்த புத்தகங்களுக்கான பணத்தை கொடுத்தபின்னர் தான் மேற்கொண்டு பேசவே செய்தார்.

“இது எங்கள் வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் அன்புப் பரிசு!” என்று கூறி நண்பர் ஹரிஹரன் மூலம் அவருக்கு நமது தளத்தின் பிரார்த்தனை படம் வழங்கப்பட்டது.

வாங்கியவர் நிறுத்தி நிதானமாக அந்த படத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிரார்த்தனை வரிகளை படித்தார்.

Madura Travels Balan Sir

“அனுபவிச்சு எழுதியிருக்கு… ஒவ்வொன்னும் மிக மிக அருமை. ரொம்ப நன்றி தம்பி!” என்று சொல்லி, தனது  தனது அறையில் மாட்டச் சொன்னார்.

நமக்கும் ஹரிஹரனுக்கும் தனது ‘சொல்லத் துடிக்குது மனசு’ நூலை பரிசாக கொடுத்தார். நம்மிடம் மேலும் சில பிரதிகள் கொடுத்தவர், “இதை இதோட அருமை தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கொடுக்கணும்!” என்றார் உரிமையுடன்.

இந்த நூலை பற்றி ஏற்கனவே நாம் ஓரிரு பதிவில் கூறியிருக்கிறோம். பக்தி இலக்கியங்களை படிக்கிறீர்களோ இல்லையோ இந்த நூலை நிச்சயம் நீங்கள் படிக்கவேண்டும். உங்களது சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் நூல் இது. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அடிபட்டு அடிபட்டு கற்றுகொண்ட மனிதர் எழுதியது அல்லவா?

அந்த நூலில் இடம்பெற்றுள்ள, மஹா பெரியவா அவர்கள் தொடர்புடைய ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை சம்பவத்தை இதோ உங்களுக்கு தருகிறோம்….

கைவீசம்மா… கைவீசு!

இவர்கள் பிறக்க என்ன காரணம் என்று மருத்துவத்துறை சொல்கின்ற உண்மை என்னவென்றால், இரத்த சொந்தங்களுக்குள் திருமணம் முடிப்பதால், நெருங்கிய ரத்த ஒற்றுமைகளின் காரணமாக இத்தகைய குழந்தைகள் பிறக்கின்றனர் என்பதுதான். ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கையின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குத் திருமணம் முடிப்பது, சித்தப்பா பெரியப்பா குழந்தைகளுக்குள் திருமணம் முடிப்பது போன்றவற்றை மருத்துவர்கள் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

நம் தளம் சார்பாக பிரேமவாசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது....
நம் தளம் சார்பாக பிரேமவாசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது….

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் தான் இத்தகைய மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பச் சொத்து வெளியே போய்விடக்கூடாது என்பதைத் தவிர இத்தகைய திருமணங்களுக்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. குழந்தைகளே சொத்தாக இருக்க வேண்டிய குடும்பங்களில் வெறும் சொத்துக்காக இப்படி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பிறக்கச் செய்து விடுகிறார்கள்.

மனவளர்ச்சி குன்றிப் பிறந்த இந்தக் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாத கள்ளங்கபடமற்ற மனம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. தங்களுக்குச் சுற்றுப்புறச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக்கூட அவர்கள் அறிவதில்லை. அவர்களை எந்தச் சட்டமும் கூடத் தண்டிக்கமுடியாத அளவுக்கு ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை அவர்கள் அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பரிதாபத் திற்குரியவர்கள், அவர்களை வளர்க்கும் தாய் தந்தையர்தாம்.

இத்தகைய பெற்றோரின் மற்றக் குழந்தைகள் நன்றாக இருந்தாலும்கூட உறவினர்களும், சுற்றி இருப்பவர்களும் இந்தக் குழந்தைகளையே காரணம் காட்டி, சாபம் என்பார்கள். குழந்தை இப்படிப் பிறந்துவிட்டதே என்பதைவிட, இத்தகைய மன உளைச்சல்கள்தான் அவர்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தக் குழந்தைகள் வளர்ந்தபிறகும்கூடச் சிறுநீர், மலம் கழிப்பதிலிருந்து குளித்து உடை மாற்றுவது வரை பெற்றோர்தான் கவனிக்கவேண்டும். அத்தகைய பெற்றோரைப் பாவிகளாகப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

20 வருடத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளர். அவர் தனக்கு என்ன மனக்குறை என்றாலும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாரை (மஹா பெரியவர் ) நேரில் சந்தித்துத் தனது குறைகளைக் கொட்டிவிடுவார். அந்த வங்கி மேலாளர் தனது கதையைச் சொன்னார்.

“என் மனத்தில் இருந்த நெடுநாளைய பாரத்தை இறக்க காஞ்சி மடம் சென்றேன். அங்கே என்னைப்போலவே பலரும் தங்கள் மன வேதனையைப் பெரியவரிடம் தெரிவித்து ஆறுதல் மருந்தையும் கவலையிலிருந்து விடுபடு வதற்கான மார்க்கத்தையும் பெற்றுக் கொண்டி ருந்தார்கள். என்னுடைய முறை வந்தது. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்தார். அந்த மணித்துளியிலேயே நான் என்னை இழந்துவிட்டேன். வெடித்து அழுதுவிட்டேன். கதறினேன். பக்கத்திலே இருந்தவர்கள் என் கையைப் பிடித்து வெளியேற்றக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால் பெரியவரோ, அவர் அழுது தீர்க்கட்டும். பாரம் இறங்கும் என்று சொல்லிவிட்டார். நான் அழுதுமுடித்து அமைதி பெற்றேன்.

“இப்போது சொல் உன் துன்பத்தை” என்றார் பெரியவர்.

“எனக்கு இருப்பது இரண்டே குழந்தைகள். இரண்டுமே மூளை வளர்ச்சி குறைந்தவை. இவற்றைப் வளர்க்க நானும் என் மனைவியும் போராடுகிறோம். எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று சொல்லி கதறி அழுதேன்.

மீண்டும் நான் அமைதி அடைந்தபின் பெரியவர் சொன்னார்…… “இந்தக் குழந்தைகள்தான் கடவுளின் குழந்தைகள். இவர்கள் நிச்சயமாக எந்தக் காலத்திலும் எந்தப் பாவமும் செய்யப் போவதில்லை. இத்தகைய குழந்தைகளை எப்படிப்பட்ட பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறான். உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒப்பற்ற இதயம் இருக்கவேண்டும். நீ அழுவதில் பயனில்லை. இந்த இரண்டு குழந்தைகளும் இறைவன் உங்களுக்களித்த வரம்’ என்றார். அந்த நிமிடத்திலேயே என் பாரம் குறைந்து, கடவுள் தந்த அந்தக் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்க ஆரம்பித்தேன்” என்றார் வங்கி மேலாளரான அந்த நண்பர்.

அவர் சொல்லி முடித்தபோது அவர் கண்களில் மட்டுமல்ல, என் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

என்னுடைய பிறந்தநாளை நான் அறிவிப்பதுமில்லை. கொண்டாடுவதுமில்லை. அண்மையில் எனக்குப் பிறந்தநாள் வந்தபோது நான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்க முடிவு செய்து, குடும்பத்தினருடன் மணலி அருகேயுள்ள ‘அருணோதயம்’ என்கிற காப்பகத்துக்குச் சென்றேன். அய்யப்பன் என்பவர்தான் இதனை நடத்தி வருகிறார். திருமணம் முடிக்காத இளைஞர்.

உள்ளே நுழைந்தபோது, சோபா மீது ஒருவன், பக்கத்தில் அலமாரி மீது ஒட்டிக்கொண்டு ஒருவன், கீழே படுத்துக்கொண்டு சிலர், வாசலில் சிலர் என ஆங்காங்கே கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். நேர்த்தியான முறையில் அவர்கள் அமரவும் பேசவுமில்லை. 50, 60 குழந்தைகள் இருக்கும். அய்யப்பன் ஒவ்வொரு குழந்தையின் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

DSC_6337

அய்யப்பன் சொன்ன இன்னொரு தகவல் என்னை அதிர வைத்தது. அந்தக் குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது, அது மூளை வளர்ச்சி குன்றியிருக்கிறது எனத் தெரிந்தவுடன் நடுத்தெருவில் விட்டுவிட்டுத் தாய் சென்று விட்டாள். குப்பைத்தொட்டியின் பக்கத்திலே அந்தக் குழந்தை கிடக்க அதனை, தெருநாய் ஒன்று கடித்துக் குதறிச் சின்னாபின்னப் படுத்தி யிருக்கிறது. கொஞ்சமாக உயிர் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில், விடிகாலை வேளையில் அய்யப்பனுக்குச் சிலர் தகவல் தெரிவிக்க, அவர் அந்தக் குழந்தையைத் தனது காப்பகத்திற்குக் கொண்டு வந்து மருத்துவ சிகிச்சைகள் செய்து காப்பாற்றியிருக்கிறார். பெற்றவர்களே மிருகங்களைவிடக் கேவலமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடை பெறத்தான் செய்கின்றன. அந்த நாய் கடித்ததைவிட, தாய் தூக்கிவீசிவிட்டுச் சென்ற சம்பவம்தான் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அந்தக் குழந்தையின் சோகக் கதையைக் கேட்டு முடித்த மறுநொடி இன்னொரு சிறுவன் என் சட்டையைப் பிடித்து விட்டான். என்னை உலுக்கி, சட்டைப்பையிலிருந்த பேனா, பர்ஸ் எல்லா வற்றையும் தூக்கிவீசிவிட்டு, சட்டையைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் கையிலிருந்த அழுக்கெல்லாம் என் உடம்பிலும் வேட்டியிலும் ஒட்டிக் கொண்டது. வேட்டி யையும் அவன் இழுக்கிறான். நான் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மனவளர்ச்சிக் குன்றிய அந்தச் சிறுவன் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து அய்யப்பன் பதறிப் போய்விட்டார். என் மனைவியும் பதறுகிறார்.

என்னிடமிருந்த அந்தச் சிறுவனைப் பிரிக்க அய்யப்பன் முயற்சி செய்தார். நான், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அந்தச் சிறுவனின் நடவடிக்கைகளை அனுமதித்தேன். எந்தளவுக்கு அவன் சட்டையைக் கிழிக்கிறான், எவ்வளவு அழுக்குகளை என் மீது ஒட்டுகிறான்  என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் அனுமதித்தேன். முற்று முழுதாகச் சட்டை கிழிந்துவிட்டது. பேனாவை எடுத்துக் குத்த வருவது போலப் பாவனை செய்கிறான். குத்தவும் செய்யலாம். ஆனால், அத்தனையும் அவனை அறியாமல் செய்தவை. நான் அவன் கையிலிருந்து பேனாவை லாவகமாக என் வசமாக்கிக் கொண்டு, அவனை என்னோடு கட்டி அணைத்தேன். அவன் எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக நடந்துகொண்டானோ நான் அவ்வளவுக்கவ்வளவு அவனிடம் அன்பாக நடந்து கொண்டேன். சிறிதுநேரத்தில், அவனுக்கு என்ன தோன்றியதோ, என் அரவணைப்பிலிருந்த அவன், என் கிழிந்த சட்டையின் துண்டுகளையெல்லாம் ஒட்ட முடியுமா? எனப் பரபரத்தான். பேனாவை என் சட்டைப்பையில் வைத்தான். என் முகத்தைத் துடைத்து விட்டான். என்னோடு அவன் நெருங்கிவிட்டான்.எல்லா ஜீவராசிகளுக்கும் அன்பு ஒன்றே அருமருந்து. அதைத்தான் அந்தச் சிறுவன் என்னிடமும் எதிர்பார்த்திருக்கிறான்.

– ‘சொல்ல துடிக்குது மனசு’ நூலில் மதுரா டிராவல் திரு.வீ.கே.டி. பாலன்

===============================================================

நமது பாரதி விழாவின் வீடியோ முழுதும் தயாராகிவிட்டது.
தேவார முரசு திரு.சிவக்குமார், மதுரா ட்ராவல்ஸ் திரு.வீ.கே.டி.பாலன், திரு.பாஸ்கர பாரதி, திருமதி. பாசிடிவ் கௌசல்யா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் நம் விழாவில் என்ன பேசினார்கள் என்பதை அவசியம் இந்த வீடியோவை பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நம் பாரதி விழா முழு வீடியோ

===============================================================
Also check :

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==============================================================

[END]

5 thoughts on “‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

  1. Very heart touching artlcle. I am also very much interested to study “solla thudikuthu manathu’. The incidence narrated by Mr Balan in Arunodayam Kaapakagam really heart touching incidence. Really he is a great man. My Namaskar to Mr Balan.

    I never forget the Bharathi Vizha function which was conducted by Right Mantra and heard the wonderful speeches of Sri Sivakakumar, Sri Bakarabharathi, Sri VKD Balan, Smt Kousalya etc. We enjoyed the day in a grand manner.

    Regards
    Uma

  2. மிகவும் பாராட்டத்தக்க விஷயம் திரு ஐயப்பன் செய்து கொண்டிருப்பது. இம்மாதிரியான மனித நேயம் உள்ளவர்கள் இருப்பதினால்தான் இவ்வுலகில் இன்னும் இயற்கை நம்முடன் இருக்கிறது. வாழ்க வளமுடன்.

    கேகே
    நவி மும்பை

  3. A very nice article about Mr. Balan and the service is doing is so great and can not be described in words.

  4. டியர் சார்
    எனுக்கும் ஒரு சிறப்பு குழந்தை உள்ளது, அவனுக்கு ஆடிசம் , 6 வருடமாக ட்ரைனிங் கொடுக்கிறோம், நான் இதுவரை ஆராய்ச்சி செய்
    தா வரை, இந்த முதல் ப்ரொப்லெம் பித்ரு தோஷம் , தில ஹோமாம், கோ தானம் செய்ய நிறைய முன்னேற்றம் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *