தொடரை கூடுமானவரை சுவாரஸ்யமாக/பயனுள்ளதாக தர முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.
தினசரி நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வரும் சேகர் என்பவரை பற்றி புகைப்படங்களுடன் கூடிய விரிவான ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன்பு நாம் அளித்திருந்தது நினைவிருக்கலாம். சேகர் அவர்கள் நமக்கு நெருங்கிய நண்பராகி நமது பிரார்த்தனை கிளப்புக்கு கூட தலைமை ஏற்றதும் நினைவிருக்கலாம்.
கிளிகளுக்கு உணவளித்து வரும் சேகர் அவர்களின் மகத்தான பணியில், நம்மையும் இணைத்துக்கொள்ள விரும்பி, ஒவ்வொரு மாதமும் நம் தளம் சார்பாக கிளிகளுக்கு 50 கிலோ முதல் 100 கிலோ வரை அரிசி வாங்கித் தரப்படும் என்று அவரிடம் கூறியிருந்தோம்.
இந்த மாதத்திற்கான அரிசி (தரமான இட்லி அரிசி) சுமார் 50 கிலோவை கோபாலபுரம் அமுதம் சூப்பர் மார்க்கெட்டில் சில நாட்களுக்கு முன்னர் வாங்கித் தந்தோம். (இதற்காக இரண்டு நாட்கள் மாலை முழுதும் நாமும் சேகர் அவர்களும் கடை கடையாக ஏறி இறங்கியது தனிக்கதை!) இவற்றை பதப்படுத்தி கிளிகளுக்கு அவர் வைப்பார்.
சரி… விஷயத்திற்கு வருகிறோம்.
சேகர் அவர்களை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை தெரிந்துகொள்ளாமல் வருவதில்லை.
இதற்கு முன்பு ஒருமுறை கிளிகள் அவர் வீட்டுக்கு வந்து உணவு உண்டுவிட்டு சுதந்திரமாக பறந்து செல்வதை பார்த்த ஒருவர், மனம் மாறி, தான் கூண்டில் வைத்து வளர்த்து வந்த கிளிகளை கொண்டு வந்து இவரிடம் விட்டுவிட்டு சென்ற கதையை நாம் உங்களிடம் கூறியது நினைவிருக்கலாம்.
இதோ இன்னுமொரு சம்பவம்.
சமீபத்தில் ஒரு நாள், கையில் ஒரு கிளிக்கூண்டுடன் அவரை சந்தித்த ஒருவர், “சார்… இதை ஆசைப்பட்டு வீட்டுக்கு வாங்கிட்டு வந்தேன்… ஆனா… இதுங்க ராப்பகலா எப்போ பார்த்தாலும் கீச் கீச்னு கத்திகிட்டே இருக்கு. என் வொய்ஃபுக்கு அது பிடிக்கலே… இதே எங்காவது போய்ட்டு தொலைச்சிட்டு வாய்யா அப்போதான் உன்னை வீட்டுக்குள்ளே சேர்ப்பேன்னு சொல்லிட்டா. அவ கிட்டே சண்டை போடுற தெம்பு எனக்கில்லே. உங்களை பத்தி கேள்விப்பட்டேன்… அதான் இங்கே கொண்டு வந்து விடலாம்னு வந்தேன்” என்று கூறினார்.
கிளிகளை பார்க்கையில், பறக்காமல் இருக்க ஒரு பக்க இறக்கை கடைக்காரர்களால் கத்திரித்து விடப்பட்டிருந்தது.
இவர் எதுவும் சொல்லவில்லை. “நல்லவேளை வொய்ஃப் சொன்னான்னு நாய் கிட்டேயோ பூனை கிட்டேயோ போடாம இங்கே கொண்டு வந்தீங்களே… சரி நான் பார்த்துக்குறேன்….” என்று கூறியபடி அந்த கூண்டை வாங்கிக்கொண்டார்.
சுதந்திரத்தை இழந்த அந்த கிளிகள் அன்று இரவு முழுதும் கத்திக்கொண்டே இருந்துள்ளன. மறுநாள் காலை மாடியில் கிளிகள் வந்து உணவருந்திவிட்டு செல்லும் பகுதிக்கு அருகில் அந்த கூண்டை வைத்துவிட்டார்.
சரியாக காலை 6.00 மணிக்கெல்லாம் தன்னுடைய இனத்தவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கு படையெடுத்து வந்ததை பார்த்த இந்த கிளிகள் பல மடங்கு சத்ததுடன் இந்த முறை ‘கீச் கீச் கீச் கீச்’ என்று கத்த துவங்கின.
அவற்றின் முந்தைய கத்தல்களுக்கும் இந்த கத்தல்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.
இதற்கு முன்பு கத்தியது சுதந்திரத்தை பறிகொடுத்து ஒரு வித அச்சத்தில் கத்திய கத்தல்கள் . இந்த முறை தன் இனத்தவர்களை பார்த்துவிட்ட சந்தோஷத்தில் கத்துகின்ற கத்தல்கள்.
“சார்… அவங்க இனத்தை பார்த்ததும் அதுங்களுக்கு ஒரே குஷி. கீச் கீச்… கீச்…கீச்னு கத்திகிட்டே இருந்துதுங்க. இதுங்க கத்துறதை பார்த்தவுடனே அதுங்களுக்கு பயம் வந்துடுச்சு. நம்மளையும் இந்த மாதிரி பிடிச்சி கூண்டுல அடைச்சிடுவாங்களோன்னு அதுங்க அரிசி சாப்பிடுறதுக்கு உட்காரவேயில்லை. அப்புறம் நான் இதுங்களை உள்ளே கொண்டு போய் வெச்சிட்டேன்.”
“இறக்கையை கட் பண்ணியிருக்குறதால அதுங்களால பறக்க முடியாது. இப்போ வெளியே விட்டா ஆபத்து. பூனை ஏதாவது புடிச்சிட்டு போய்டும். இறக்கை வளர்ந்தவுடனே அதுங்களை வெளியே விடனும்!” என்றார் அக்கறையுடன்.
அவர் சொல்லி முடிக்கும்போது இறக்கை வெட்டப்பட்ட அந்த கிளிகளின் உருவம் மனதில் நிழலாடியது.
பறவையை படைத்தது இறைவனின் படைப்பு!
அவற்றின் சுதந்திரத்தை பறிக்க கூண்டை படைத்தது மனிதனின் புத்தி!!
பறவைகளை இப்படி கூண்டில் அடைத்து விற்பதோ வளர்ப்பதோ சட்டப்படி சரியா என்பதை நாம் ஆராய முற்பட்டபோது, வனப்பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் என்பவர் கோவையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய விபரம் கிடைத்தது.
திரு.செந்தில்குமார் அவர்கள் அந்நிகழ்ச்சியில் கூறியதாவது: “மனிதர்களை போலவே, அனைத்து உயரினங்களும் அதன் வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும். பறவைகள் சுதந்திரத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவை. அதை கூண்டில் அடைத்து வளர்ப்பது, அதன் சுதந்திரத்தை பறிப்பதாகும். இச்செயல், வனவிலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு சட்டப்படி குற்றம். இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பலர், வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்த்து வருகின்றனர். இது தவறான செயல். முன்பு இருந்ததை விட, விலங்குகள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் அவை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை!” என்றார் ஆணித்தரமாக.
சந்தோஷமாக சுதந்திரமாக பறந்து திரிய வேண்டிய பறவைகளை PET SHOP என்ற பெயரில் கூண்டில் அடைத்து விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவற்றை கூண்டில் அடைத்து அதுவும் இறைக்கைகளை வெட்டி அடைத்து விற்பனை செய்யவோ வளர்க்கவோ சட்டத்தில் இடமில்லை என்று தெரிந்தும் இந்த கடைகள் நகரில் எப்படி செயல்படுகின்றன என்பது புரியவில்லை.மேற்படி கடைகளுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் நம் தளம் சார்பாக பொது நலவழக்கு ஒன்று தொடர முடிவு செய்துள்ளோம். அதே போன்று கிளிகளை கூண்டில் அடைத்து ‘கிளி ஜோதிடம்’ என்ற பெயரில் அவற்றை துன்புறுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
சட்டம் படித்துள்ள சமூக அக்கறை மிகுந்த வாசக அன்பர்கள் (வழக்கறிஞர்கள்) எவராவது இது விஷயத்தில் வழக்கு தொடர நமக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நம்மை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசியிலோ தொடர்புகொள்ளவும்.
ஏழரை நாழிகைகள் பறவைகளை கூண்டில் அடைத்து வைத்த பாவத்திற்காக பத்ராசல ராமதாசர் என்னும் மகான் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். மகானுக்கே அந்த கதி என்றால் சராசரி மனிதர்களுக்கு? பட்சிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவத்திலும் கொடிய பாவம்.
மனிதர்கள் தவறு செய்கிறார்கள். சிறைத் தண்டனை அனுபவிக்கிறார்கள். பறவைகள் என்ன தவறு செய்ய முடியும்?
பறவைகளை வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட , ஒரு மரத்தை நடுங்கள்…பறவைகளே அதில் நன்றாக கூடு கட்டி வாழும்!
(அனுபவங்கள் தொடரும்)
========================================================
Also check :
சுந்தர்ஜி,
அருமையான படைப்பு. இப்படி பறவைகளை இறகை வெட்டி கூட்டில் அடைப்பது சட்ட விரோத செயல்லாகும்.பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள் யாரிடம் சொல்லி அழும்.
திரு சேகர அவர்களுக்கு மட்டும்தான் அவற்றின் முந்தைய கத்தல்களுக்கும் இந்த கத்தல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியம். அந்த கூண்டு கிளி பிர கிளிகளை போல் சுந்தந்திரமாக பறப்பதற்கு அந்த இறைவனை பிரார்த்தித்து கொள்கின்றேன்.
தாங்களும் அந்த கிளிகள் போல சுதந்திரமாக சுற்றி திரிந்து , தேனீக்கள் போல் சுறு சுறுப்பாக தினமும் ஒரு தகவல்களை கொடுகின்றீர்கள் . நாங்களும் அந்த அமிர்தத்தை தினமும் ரைட் மந்த்ரா என்னும் கூட்டில் இருந்து கொண்டு பருகுகின்றோம்.
வாழ்க வளமுடன்.
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்கள் பதிவு மிகவும் அருமை
வணக்கம் சார்
பதிவு நன்றாக உள்ளது. நல்லவேளை அந்த மனிதர் கூண்டை திரு.சேகர் சார் அவர்களிடம் கொடுத்தார், அதனால் அது உயிர் பிழைத்தது.
தன் இனத்தை பார்ப்பதற்கு முன்னும் பின்னும் அதன் குரலை உள்ள வித்தியாசத்தை பற்றி படிக்கும் போது நம்மை அறியாமல் புன்னகை வருகிறது.
பறவைகளை கூண்டில் அடைத்து விற்பதும் வளர்ப்பதும் கண்டிக்க வேண்டிய செயல்.
மனம் விட்டு பேசலாமா? 1
=========================
தொடரின் தலைப்பு அருமை.பறவைகள் பறப்பதை பார்த்து ரசிப்பவர்க்கு அதன் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும் .
வீட்டில் கிளி ,மைனா வளர்க்கலாம்.தவறு ஒன்றும் இல்லை .கூண்டில் அடைக்காமல் பாசம் செலுத்தி வளர்த்தால் பல இடங்கள் சுற்றிவிட்டு நம் வீட்டிற்க்கும் வந்து செல்லும் .
வழக்கு போடுவதெல்லாம் வேண்டாம் .அவரவர்களின் பாவமூட்டைகளை அவர்களே சுமக்கட்டும் .
அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி …
-மனோகர் .
அவர்கள் பாவமூட்டையை அவர்கள் சுமப்பார்கள் என்பது உறுதி. ஆனால் அனைத்தையும் நாம் வேடிக்கை பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லையே? இந்த செயல் தடுக்கப்படவேண்டும் என்பதே நம் நோக்கம்.
– சுந்தர்
வாழ்க அவர் தம் பணி. வளர்க அவர் தம் தொண்டு.
நம்மை போலவே பறவைகளும் அவைகளது இருப்பிடத்தில் சந்தோசமாக இருக்கட்டும்.
பறவைகளை போலவே மீன்களையும் சிறிய தொட்டியில் நாம் அடைத்து வைக்கிறோம். சுதந்திரமாக நீந்தி விளையாட வேண்டியவற்றை சிறிய தொட்டியில் முடக்குகிறோம். அவற்றை என்ன செய்வது?
ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி தான்.
வசதியும் சூழலும் இருப்பவர்கள் மட்டுமே மீன் வளர்க்கவேண்டும். மீனை வளர்த்தால் மட்டும் போதாது… முறையாக பராமரிப்பது அவசியம்.
– சுந்தர்
கடைசிவரி- ”மரத்தை நடுங்கள் ….அவைகள் கூடு கட்டி வாழும்” என்பது சூப்பர்.