Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 21, 2024
Please specify the group
Home > Featured > மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

print
சியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்கிற பெயர் மெரினாவுக்கு உண்டு. மாலை வேளைகளில் கடற்கரை மணலில் காலாற நடந்து சென்று, பரந்து காணப்படும் வங்காள விரிகுடாவையும் ஓயாமல் அது எழுப்பும் அலைகளையும் பார்த்து ரசிப்பதே ஒரு தனி இன்பம் தான்.

DSC01490

அழகிருக்கும் இடத்தில் ஆபத்து இருப்பது இயல்பு தானே? மெரினாவின் ஆர்பரிக்கும் அலைகளால் சுண்டி இழுக்கப்பட்டு கடலுக்குள் கால் பதிப்பவர்கள் உற்சாக மிகுதியால் சற்று ஆழமான பகுதிக்கு செல்வதும் ஆக்ரோஷ அலைகள் அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்று விடுவதும் தொடர் கதையாகி வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் மெரினாவில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 க்கும் மேல். இவர்களின் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் டீன் ஏஜ் பருவத்தினர் என்பது தான் சோகம்.

என்னெனவோ கனவு கண்டு பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் சடலங்களாக கரை ஒதுங்கும்போது எப்படி இருக்கும்?

மேற்படி அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்படுபவர்களில் பலர் உயிர் பிழைப்பது யாரால் தெரியுமா? ஒரு ரியல் ஹீரோவால் !

அவரைத் தான் நாம் பார்க்க சென்றுகொண்டிருக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக வித்தியாசமானவர்.

கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ இவர்! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்! இவரது சேவைக்கு இவர் பணம் எதுவும் பெற்றுகொள்வதில்லை என்பது தான் இவர் சிறப்பு. இன்றும் கடலில் யாரவது மூழ்கிவிட்டால் அண்ணாசதுக்கம் போலீசார் கூப்பிடுவது இவரைத்தான்.

DSC01529

இவரைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் நம்மிடம் ஏற்பட்டுவிட்டது. இவரிடம் செல்போன் கிடையாது. எனவே இவர் சரியாக எங்கிருப்பார் என்று தெரியவில்லை. நமக்கு கிடைத்த ஒரே தகவல்… எம்.ஜி.ஆர். சமாதிக்கும் கலங்கரை விளக்கத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் தான் இவர் எப்போதும் இருப்பார் என்பது தான்.

ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டு கடந்த சனிக்கிழமை மாலை மெரீனா சென்றோம். நம்முடன் நண்பர் குட்டி சந்திரன் வந்திருந்தார்.

மெரினாவின் ஜனசமுத்திரத்துக்கு நடுவே மொபைல் இல்லாத ஒருவரை கண்டுபிடிப்பது என்ன சாதாரண விஷயமா? ஒரு சில கடைகளில் விசாரித்தபோது அப்படி யாரையுமே தெரியாது என்றனர். (இந்த இடத்தில் மட்டும் 500 கடைகளுக்கும் மேல் உள்ளன!). மேலும் சில கடைகளில் விசாரித்தபடி இருந்தோம். ஒருவழியாக நாம் தேடிச் சென்ற ஹீரோவை கண்டுபிடித்துவிட்டோம்.

தூரத்தில் ஒரு சிறு குழந்தைக்குண்டான மகிழ்ச்சியில் அலையில் விளையாடிக்கொண்டிருந்தார்.

கரையில் நின்று கூப்பிட்டோம். அருகே வந்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரை சந்தித்து பாராட்ட வந்திருக்கும் விபரத்தை சொன்னோம்.

DSC01437

“வாங்கண்ணே… கரையில நின்னு பேசுவோம்!”

“மொபைல் கூட இல்லையே…. எப்படி உங்களை கண்டுபிடிக்கிறதுன்னு கவலைப்பட்டுகிட்டே வந்தோம்…..”

“உங்களுக்கு லக் அண்ணே. போனவாரம் என்னை பத்தி கேள்விப்பட்டு மீடியாவுல இருந்து வீடியோ காமிராவெல்லாம் எடுத்துகிட்டு வந்திருக்காங்க. என்னை பிடிக்க முடியலே. அவங்க இங்கே இருந்தா நான் அங்கே லைட் ஹவுஸ் கிட்டே இருப்பேன். அங்கே இருந்தா இங்கே இருப்பேன். உங்களுக்குக் லக். எப்படியோ வந்தவுடனே கண்டுபிடிச்சிட்டீங்க!” என்றார் சிரித்துக்கொண்டே.

எல்லாம் அவன் செயல்.

21 வயதாகும் வெங்கடேஷுக்கு கடல்தான் வசிப்பிடம். எப்போதும் கடலில் தான் இருப்பார். வீடு… வீடு விட்டால் கடல்… என்று தனது வாழ்க்கையை வகுத்துக்கொண்டு விட்டார் இவர்.

DSC01445

விலை மதிப்பில்லா பல உயிர்களை காக்க இப்படி ஒருவர் அங்கு இருக்கவேண்டும் என்று இறைவன் கருதியதாலோ என்னவோ இவரை அங்கேயே விட்டுவிட்டான்.

“தாத்தா மீன் வியாபாரம் செஞ்சிகிட்டு இருந்தார். கடல்ல கட்டுமரத்துல போய் அவர் மீன் பிடிக்கும்போது நானும் கூட போவேன். அப்படியே நீச்சலும் கத்துகிட்டேன். கடல் அலையில் விளையாடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என்று கூறும் வெங்கடேஷ், நாம் போகும்போது கூட அலையில் ஸ்கேட்டிங் போர்ட் வைத்து விளையாடிக்கொண்டு தானிருந்தார்.

“செல்போன் கையில இருந்தா அது இடைஞ்சல் சார். திடீர் திடீர்னு கடல்ல இறங்கி யாரையாச்சும் காப்பாத்த இறங்கவேண்டியிருக்கும். அப்போ செல்போனை பாத்துக்க ஆளை தேடமுடியாதில்லையா? அதான் அதை வெச்சிக்கலை.” – செல்போன் அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கும் நமகெல்லாம் நிச்சயம் இவரது வார்த்தைகள் சவுக்கடி தான்.

இவர் வீடு அமைந்திருப்பது சிந்தாதிரிப்பேட்டை என்றாலும் எந்நேரமும் இருப்பது கடற்கரையில் தான்.

“இங்கேயே இருந்தா எப்படி? படிக்கலையா தம்பி நீங்க?”

“ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் தான் சார் படிச்சேன். சில வருஷத்துக்கு முந்தி அம்மா ஏதோ பிரச்னையில உடம்புல மண்ணெண்ணெய் ஊத்தி பத்த வெச்சிகிச்சி. அதுக்கப்புறம் வாழ்க்கையே வெறுத்துடிச்சி. படிப்பு ஏறலை. அதுமுதல் கடற்கரையே கதின்னு வாழ்ந்துட்டேன். என்னை பொருத்தவரை இப்போ கடல் தான் என் அம்மா!” என்கிறார் சற்று உணர்ச்சிவசப்பட்டு.

DSC01447

“வேலைக்கு எங்காவது போகலாமே?”

“இங்கே பக்கத்துல ஒரு கடையில வேலை கிடைச்சது. திடீர் திடீர்னு கடல்ல மூழ்கினவங்களை தேடவும் கப்பாத்தவும் போகவேண்டியிருந்ததாலே அந்த வேலையும் போச்சு. நமக்கு வேலையெல்லாம் செட்டாவாதுன்னு அப்புறம் வேலை தேடுறதையே விட்டுட்டேன்.” என்று கூறும் வெங்கடேஷ்க்கு தற்போது போலீசார் பலர் நண்பர்கள்.

“பாரா போலீஸ் வரும்போது அவங்க கூட நானும் சேர்ந்து கடல்ல யாரும் இறங்காம பார்த்துக்குவேன். இங்கே வர்ற சில பசங்க… பொண்ணுங்க உடம்பு நனையும்போது அதை செல்போன்ல ஃபோட்டோ எடுப்பாங்க. அவங்க கூட சண்டைபோட்டு மொபலை பிடுங்கி போலீஸ்கிட்டே கொடுத்துடுவேன்!”

“யாரையாவது அலை இழுத்துகிட்டு போய்டுச்சுன்னா உடனே கடல்ல குதிச்சிடுவேன். அலைகள்ல நிறைய விதம் இருக்கு. எனக்கு எல்லா விதமான அலையிலயும் நல்லா நீந்தி பழக்கம். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி… அவங்க எவ்வளவு வெயிட்டா இருந்தாலும் சரி… எப்படியாவது கரைக்கு இழுத்துகிட்டு வந்துடுவேன். ஒரே ஒரு தடவை மட்டும் மூணு பசங்க அலையில் மாட்டிக்கிட்டாங்க. அதுல ரெண்டு பேரை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சுது. இன்னொருத்தன் ‘காப்பாத்துங்க அண்ணா காப்பாத்துங்க அண்ணா’ன்னு கத்திகிட்டே கண்ணெதிரே மூழ்கிட்டான். அதை மட்டும் என்னால மறக்கவே முடியாது…”

DSC01465 copy

இவரது வாழ்க்கையில் கடலோர கவிதைகளும் உண்டு.

அது பற்றி கூறும்போது…

“ஒரு தரம் ஒரு பொண்ணை அலை இழுத்துகிட்டு போய்டிச்சு. நான் பாய்ஞ்சு காப்பாத்தி கரைக்கு கொண்டாந்தேன். பெரிய பணக்கார வீட்டு பொண்ணுன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் நாலஞ்சு தடவை என்னை பார்க்க இங்கே வந்து, “உன்னை என்னால மறக்கவே முடியாது”ன்னு சொல்லிச்சு. இப்போ கொஞ்ச நாளா ஆளை காணோம். என்னனு தெரியலே” என்று தன்னுடைய கவலையை பகிர்ந்துகொண்டார்.

“கவலைப்படாதீங்க பிரதர். நமக்குன்னு உரியது என்னைக்கும் நம்மளை விட்டுப் போகாது. நிச்சயம் திரும்பவும் வரும். வாழ்த்துக்கள்!” என்றோம்.

“நாம இருக்குற லெவலுக்கு அதெல்லாம் செட்டாவாதுண்ணே… பணத்துக்கு என்னைக் கண்டா அலர்ஜி… எனக்கு பணத்தை கண்டா அலர்ஜி” என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார் வெங்கடேஷ்.

அலையில் சிக்கினவங்களை மீட்டு தூக்கிகிட்டு வரும்போது சொந்தக்காரங்க… போலீஸ்காரங்க எல்லாரும் பணம் தருவாங்க. ஆனா நான் சல்லிக்காசு வாங்கமாட்டேன். ஒருத்தரு என்னை காசு வாங்கியே தீரணும்னு மிரட்டிக்கூட பார்த்தாரு. நாம மசியலே. ஒருதரம் பணத்தை .. வாங்கிகிட்டா அப்புறம், ‘எவன் கடல்ல விழுவான், நமக்கு எவ்வளவு காசு கிடைக்கும்’னு தான் புத்தி போவும். அதுனால, இந்த உதவிக்கு பணத்தை நான் வாங்கிக்கிறதில்லை. ஏதோ நம்மால் முடிஞ்சத செய்வோம். நம்மள ஆண்டவன் பாத்துக்குவான்’’

DSC01482

“பணமே வேண்டாம்னு சொன்னா சாப்பாட்டுக்கு என்ன தம்பி பண்ணுவே?”

“கடல்ல இருக்கும்போது பசிக்கவே பசிக்காதுண்ணே. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் நான் சாப்பிடுவேன். போலீஸ்காரங்க பணமா கொடுத்தா வாங்கமாட்டேன். டிபன் வாங்கித் தந்தா மட்டும் சாப்பிடுவேன்.”

போலீசாரிடம் இவரை பற்றி பேசினால் அவன், இவன் என்று கூறாமல் மரியாதையாக அவர், இவர் என்று சொல்ல வேண்டுமாம். இல்லையென்றால் அடி நிச்சயமாம். அந்தளவு வெங்கடேஷ் மீது போலீசாருக்கு தனி பாசம் + மரியாதை.

“சரி… தம்பி உன்னோட எதிர்கால லட்சியம் என்ன? இப்படியே இருந்திடலாம்னு முடிவா?”

‘‘எனக்கு போலீசாவனும்னு ரொம்ப ஆசைண்ணே. இங்கே மெரினா போலீஸ் ஸ்டேஷன்லயே போலீசா வேலைக்கு சேர்ந்து இந்த வேலைய இன்னும் நல்லா சின்சியரா செய்யணும். ஏன்னா… போலீஸ் யூனிபார்ம் போட்டா அதோட பவரே தனி. நாம் என்ன தான் கத்தினாலும் சில பேரு நம்ம பேச்சை மீறி கடலுக்குள்ளே ஆபத்து புரியாம போறாங்க. தவிர போலீசாயிட்டேன்னு வெச்சிக்கோங்க… ஒரு தப்பு தண்டா என் கண் முன்னாடி நடக்க விடமாட்டேன்ல…”

DSC01440

“ஒன்னு போலீஸ் வேலை இல்லன்னா, இங்கயே ஒரு கடை வைக்கணும். அதான் என்னோட ஆசை’’ என்று நம்பிக்கையுடன் கூறும் வெங்கடேஷிடம் மது, புகையிலை உள்ளிட்ட எந்த தீய பழக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகே ஆவாய். WHAT YOU THINK YOU BECOME. வாழ்த்துக்கள் தம்பி!”

அப்படியே நம் பேச்சு ஆன்மிகம் நோக்கி திரும்பியது.

“உனக்கு பிடிச்ச சாமி யாருப்பா?”

“எனக்கு ஐயப்ப சாமின்னா உசிருன்னே. இதுவரைக்கு நிறைய தரம் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன்!” என்றார்.

சாமியே சரணம் ஐயப்பா…

இவரது இந்த பணியில் உள்ள ரிஸ்க்குகள் பற்றி கேட்டப்போது…

“அதை ஏன்ணே கேக்குறீங்க… போனமாசம் ஒருத்தன் இதோ அந்த இடத்துல தான் மூழ்கிட்டான். (சற்று தொலைவில் உள்ள கடல்பரப்பை காட்டுகிறார்). அவனை காப்பாத்தப் போனேன்… அவன் பயத்துல என்னோட கையை கடிச்சிட்டான். கையில காயம் ஏற்பட்டு வலது கை பலூன் மாதிரி வீங்கி ஒரு வாரம் ஆஸ்பிட்டல்ல இருந்தேன்!” தனது விழுப்புண்ணை நமக்கு காட்டினார். அடப்பாவமே… இப்படியெல்லாம் கூட பிரச்னை வருமா?

உதவி ஏதேனும் தேவைப்பட்டால் தயங்காமல் நம்மிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டோம்.

கையில் உள்ள ஸ்கேட்டிங் போர்டை காண்பித்து, “இந்த மாதிரி போர்டு ஒரு மூணு நாலு வாங்கிக்கொடுங்க அது போதும். மூழ்குறவங்களை காப்பாத்துறதுக்கு ரொம்ப உதவியா இருக்கும். ஒரு போர்டு விலை ரூ.400 இல்லே ரூ.500 இருக்கும்” என்றார்.

அடுத்த வாரம் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறோம். (நண்பர்கள் எவரேனும் இதற்கு ஸ்பான்சர் செய்து இதை வாங்கித் தரவிரும்பினால், நம்மை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். உங்கள் உதவி பல உயிர்களை காக்க உதவும்.)

DSC01493

“இங்கே வேற என்ன மாதிரியான சங்கடங்களை நீங்க சந்திக்க வேண்டியிருக்கு?”

“அதையேண்ணே கேக்குறீங்க. என்னால நிறைய காதல் ஜோடிங்க பிரிஞ்சிருக்கு. அதுக்கு நான் காரணமில்லை. ஆனா பசங்க நான் தான் காரணம்னு சொல்வாங்க…”

ஆஹா…. ஹீரோவுக்குள் ஒரு வில்லனா?

“அது என்ன கதைப்பா? கொஞ்சம் சொல்லு!”

“இங்கே பொண்ணுங்க பசங்களோட வருவாங்க. பொண்ணுங்களுக்கு கடல்ல இறங்குற ஆர்வம் பொதுவா அதிகமாயிருக்கும். சில சமயம் பொண்ணுங்களை அலை இழுத்துகிட்டு போய்டும். பசங்க எதுவும் செய்ய முடியாம கரையில் நின்னு கூச்சல் போடுவாங்க. நான் பக்கத்துல எங்கேயாவது இருந்தேன்னா உடனே கடல்ல பாய்ஞ்சு அவங்களை காப்பாத்தி இழுத்துட்டு வருவேன். காப்பாத்த வேண்டியவன் கரையில் நின்னு கையை பிசைஞ்சிக்கிட்டு நின்னதையும் எங்கிருந்தோ வந்த நான் அவங்களை காப்பாத்தி இழுத்துகிட்டு வந்தேன் என்பதையும் பெண்களால ஜீரணிக்க முடியாது. “உன்னை நம்பி நான் என் வாழ்க்கையை ஒப்படைக்க முடியாது. குட்பை!” அப்படின்னு பொண்ணுங்க அவங்க பாய்ஃப்ரெண்ட்ஸ் கிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க. இது மாதிரி ஒரு நாலஞ்சு ஜோடிங்க பிரிஞ்சிருக்கு. இதுக்கு பசங்க என் மேல கோவிச்சுக்குவாங்க. அதுக்கு நான் என்னண்ணே பண்ண முடியும்? நான் போகலேன்னா அந்த பொண்ணுங்களோட உயிருக்கே ஆபத்தாயில்லே போய்டும்? அது அவங்களுக்கு எவ்ளோ பெரிய பழி…?”

நமக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவர் சேவையில் இப்படியெல்லாம் கூட சங்கடங்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

நமது சந்திப்பு இறுதி கட்டத்தை நெருங்கியதையடுத்து நாம் அவருக்கு பரிசளிக்க கொண்டு சென்றிருந்த நமது தளத்தின் ஷீல்டு மற்றும் வீட்டில் மாட்ட விவேகானந்தர் படம் ஒன்றையும் பரிசளித்தோம்.

“உங்களை போன்ற தன்னலமற்ற இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் தானே குரு. அதனால் அவர் படத்தை உங்களுக்கு தருகிறோம்” என்றோம்.

“தேங்க்ஸ் அண்ணா…”

DSC01434

அடுத்து ஷீல்டு. “இதை எங்கள் ஒட்டுமொத்த வாசகர்கள் சார்பாக, உங்க தன்னலமற்ற சேவையை பாராட்டி தருகிறோம். வாழ்வில் நீங்கள் மேன்மேலும் சிறப்புக்கள் பெற வாழ்த்துக்கள்!” என்று கூறியபடி நமது தளத்தின் ஷீல்டை கொடுத்தோம்.

அடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இதையெல்லாம் அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் ஒருசிலர் பார்த்தபடி இருந்தனர். ஒரு மாதிரி கிண்டலாக இருந்தது அவர்கள் பார்வை.

அவர்கள் அருகில் சென்றோம்.

“உங்களுக்கு பிடிச்ச நடிகர் யார்?”

நமது திடீர் கேள்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவர் எதுக்கு திடீர்னு வந்து பிடிச்ச நடிகர் யார்னு கேட்கிறார்… பதிலளிக்க சற்று தயங்கினர்.

“சும்மா சொல்லுங்க… யாரோட ரசிகர் நீங்க?”

ஒரு நடிகரின் பெயரைச் சொன்னார்கள்.

“அவர்…… ரீல் ஹீரோ. இவர்………… ரியல் ஹீரோ. அவர் சினிமாவுல தான் கடல்ல மூழ்கினவங்களை காப்பாத்துவார். இவர் நிஜத்துலேயே காப்பாத்துவார். இது வரைக்கும் கடல்ல மூழ்கினவங்களை 300 பேர் வரைக்கும் இவர் காப்பாத்தியிருக்கார். இவரை ஹானர் பண்றதுக்கு தான் இங்கே இவரை தேடி வந்தோம்”

“Ohh…….” வெட்கப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டார்கள்.

DSC01522

அவர்களிடமே நம் காமிராவை கொடுத்து அவர்களையே எங்களை புகைப்படம் எடுக்கச் சொன்னோம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சூரியன் மறையத் தொடங்கினான்.

“இனிமே பாரா போலீஸ் வந்துடுவாங்க. அவங்க யாரையும் கடல்ல இறங்க விடமாட்டாங்க. நாம போவோம்ணே… இன்னைக்கு அவ்ளோ தான் நம்ம டூட்டி!” என்றவருடன் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

“இந்தா தம்பி இதை டிபன் சாப்பிட இதை வெச்சிக்கோ…” கைகைளில் நூறு ரூபாய் நோட்டை திணித்தோம்.

சற்று தயங்கினார். “இதுவரைக்கும் யார்கிட்டேயும் பணம் வாங்கிக்கிட்டதில்லே… உங்க கிட்டே உங்க கையாலே வாங்கிக்கணும்னு தோணுதுண்ணா!” என்று கூறியபடி வாங்கிக்கொண்டார்.

“ரொம்ப நன்றி தம்பி!”

அது நேரே சபரிமலை ஐயப்பனிடம் சென்று சேரும் என்று நமக்கு தெரியும்!

வெங்கடேஷ் அவர்களை பற்றி வள்ளுவர் கூட கூறியிருக்கிறார் தெரியுமா?

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். (குறள் 1021)

(பொருளை கூகுள் செய்து பார்ப்பீர்கள் என நம்புகிறோம்!)

“எதிர்காலத்தில் எங்கள் தளத்தின் விழா மேடைக்கு உங்களை நேரில் அழைத்து கௌரவிப்போம். மறுக்காமல் வரவேண்டும்” என்று சற்று உரிமையுடன் கூறினோம்.

“நீங்க கூப்பிட்டா நான் நிச்சயம் வர்றேன்ணா” என்றார் வெங்கட்.

ஒரு நிஜ ஹீரோவை சந்தித்து, அவரிடம் சிறிது நேரம் செலவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட திருப்தியுடன் புறப்பட்டோம்.

தனது வாழ்வை தியாகம் செய்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கும் வெங்கடேஷின் முகம் மனதில் நிழலாடும் அதே நேரம், யாருக்கும் பயனற்ற உருப்படியில்லாத விஷயங்களில் தங்களது பொன்னான நேரத்தையும் வாழ்வையும் வீணடித்துக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களும் நினைவுக்கு வந்தார்கள். என்ன செய்வது? விதி வலியதல்லவா??

[END]

19 thoughts on “மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

 1. தன்னிகரில்லா சேவை ! அம்மாவின் பார்வைக்கு கொண்டு போங்க, கண்டிப்பாக போலீஸ் ஆக்கிடலாம்.

  1. ஏற்கனவே இவரின் சில நலம்விரும்பிகளும் நண்பர்களும் அதற்க்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இவரைப் பற்றிய ஃபைலை முதல்வர் பார்ப்பார் என்று கருதுகிறேன்.

   – சுந்தர்

   1. Dear Mr வெங்கடேஷ்,
    “ஊக்கம் மிக்க, அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யக்கூடிய நூறு இளைஞர்கள்/யுவதிகளைக் கொடுங்கள்,

    உலகையே மாற்றிக் காட்டுகிறேன்”

    அந்த நூறு இளைஞர்களில் ஒருவர் Mr VIP வெங்கடேஷ்.

    ‘பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது தான் உண்மையான மனிதநேயம்’
    என்ற
    சுவாமி விவேகானந்தர்.

    டூ வெள் ஆல் THE BEST

 2. சுந்தர் சார் வணக்கம் ……இன்றைய பதிவு மிக அருமை ……மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ இவர்தான்………..இன்றைய வாழ்கையில் அடுத்தவர் உயிரின் மேல் அக்கறை வைத்து பல உயிர்களை காப்பற்றி கொண்டு இருக்கும் இவர் ரியல் ஹீரோ ……… என்னை பொருத்தவரை இப்போ கடல் தான் என் அம்மா மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்…….“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகே ஆவாய்…………சபரி மலை அய்யப்பன் அருளால் வெங்கடேஷ் அவரின் விரும்பிய எண்ணம் நிறைவேற மேலும் அவர் பல உயிர்களை காப்பாற்ற வாழ்த்துக்கள் ……. நன்றி தனலட்சுமி ……..

 3. சுந்தர்ஜி,

  உண்மையில் தாங்கள் சந்தித்த திரு வெங்கடேஷ் அவர்கள் ஒரு ரியல் ஹீரோதான் . வாழ்கையில் இப்படியும் ஒருவர் சத்தம் இன்றி பல உயிர்களை காப்பாற்றிய அவருக்கு கடவுள் எந்த ஒரு குறையும் வைக்க மாட்டார். அவர் எண்ணியது ஈடேற வாழ்த்துக்கள். மனதார எவ்வளவு தாய்மார்கள் அவரை நீ நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இருப்பார்கள். அந்த வாழ்த்துக்கள் வீண் போகாது.

  பணம் , பணம் என்று அலையும் மக்கள் மததியில் அவர் சொன்ன வாசகம் உண்மையில் கண் கலங்க வைத்து விட்டது.
  ………………..அலையில் சிக்கினவங்களை மீட்டு தூக்கிகிட்டு வரும்போது சொந்தக்காரங்க… போலீஸ்காரங்க எல்லாரும் பணம் தருவாங்க. ஆனா நான் சல்லிக்காசு வாங்கமாட்டேன். ஒருத்தரு என்னை காசு வாங்கியே தீரணும்னு மிரட்டிக்கூட பார்த்தாரு. நாம மசியலே. ஒருதரம் பணத்தை .. வாங்கிகிட்டா அப்புறம், ‘எவன் கடல்ல விழுவான், நமக்கு எவ்வளவு காசு கிடைக்கும்’னு தான் புத்தி போவும். அதுனால, இந்த உதவிக்கு பணத்தை நான் வாங்கிக்கிறதில்லை. ஏதோ நம்மால் முடிஞ்சத செய்வோம். நம்மள ஆண்டவன் பாத்துக்குவான்’…………………………

  ஆண்டவன் சுந்தர் என்னும் கருவியை கொண்டு அவரை பார்க்க வைத்து விட்டான் இனி அவருக்கு ஒரு குறையும் இல்லை. இனி அவர் வாழ்கையில் முன்னேறும் நாள் விரைவில்…………………………..

  இப்படி ஒரு ரியல் ஹீரோவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்காக hats of you தொடரட்டும் தாங்கள் நற்பணிகள்.

 4. அற்புதம். இது ஒரு நிஜ தேடல்…நிஜ கதாநாயகன்…இது போல் நிறைய எதிர் பார்க்கிறோம்..

 5. facebook போன்ற உபயோகம் இல்லாத ஒன்றில் மூழ்கி பொழுதை கழிக்கும் இக்காலத்தில்,,, கடலில் மூழ்கி உயிரை காப்பாற்றும் இவரது செயல் வியக்க வைக்கிறது….
  அவருக்கு இது ஒரு அங்கிகரிக்க பட்ட வேலையாக அமைந்தால் அனைவருக்கும் நல்லது

 6. தன்னல மற்ற சேவை செய்யும் வெங்கடேஷிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், அவருக்கு அவர் விரும்பிய படி வேலை கிடைக்க இறைவன் கண்டிப்பாக துணை நிற்பான்,

  மூன்று மாதங்களுக்கு முன் என் close relative ஒருவர் மெரினா கடலில் விழுந்து பிழைத்து உள்ளார்கள். யாரோ ஒரு பையன் தான் காப்பற்றினான் என்று சொன்னார்கள். அனேகமாக வெங்கடேஷ் தான் காப்பாற்றி இருக்க வேண்டும்

  இவர் தான் உண்மையிலேயே நிஜ ஹீரோ. வாழ்க அவர் தொண்டுள்ளம்.

  நன்றி
  உமா

 7. சுந்தர் சார் வணக்கம்
  சாதனையாளர்கள் மாலையில் சேர்ந்திருக்கும் இன்னொரு முத்து தான் திரு.வெங்கட் அவர்கள்.
  அவர் செய்யும் சேவை மிக மகத்தானது. போகும் உயிரை இழுத்து பிடிக்கும் கடவுள் மாதிரி உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றி கரை சேர்ப்பது மிக உன்னதமான செயல்.
  21 வயது சராசரி ஆண்மகனுக்கு இருக்கும் படிப்பு, வேலை அதனால் வரும் பணத்தின் தேடல் இப்படி எந்தவொரு ஆசைக்கும் இணங்காமல் மற்ற உயிர்களை காப்பதே நம் கடமை என்று வாழும் இவர் பாராட்ட தக்கவர்.
  இந்த மாதிரி நிஜ ஹீரோக்களை சாதனையாளர்கள் பட்டியல் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்கள் பணிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
  அவர் ஆசைபடும் போலீஸ் வேலை அவருக்கு அரசாங்கம் கொடுத்தால் அது அவர் செய்யும் இந்தபணிக்கு ஒரு கௌரவம் கிடைத்தது போல இருக்கும்

 8. தன்னலமற்ற மனிதர் வெங்கடேஷ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம். வெட்டியாக பொழுதை கழிக்கும் சோம்பேறிகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வெங்கடேஷ் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவரை நம் தளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காண்பித்த சுந்தருக்கு நன்றி.

  என் கடன் பணிசெய்து கிடப்பதே – இதன் உண்மையான பொருள் இப்பொழுதான் விளங்குகிறது.

 9. கடவுள் இல்லை என்று சொன்ன மிக பெரிய கடவுள் – “பெரியார்” என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு. அது போல இவர் ஒரு நடமாடும் கடவுள். வள்ளலார் கூறிய ஜீவ காருண்யம் இதுவே.

 10. நமது ரியல் ஹீரோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..

 11. It is really Great to meet through Rightmantra persons like Venkatesh . When you badly in need of money you will have to say NO … that is what called வறுமையிலும் நேர்மை

  மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
  கீழல்லார் கீழல் லவர். Kural 973

 12. தம்பி வெங்கடேஷ் அவர்களுக்கு எமது நன்றியும் பாராட்டுகளையும் தெருவித்து கொள்கிறேன். கடவுள் அவர்களுக்கு
  நல்ல பணியை தந்திருக்கிறார்.

  சுந்தர் சார் நல்ல பதிவு தேடல் தொடரட்டும் ஆண்டவன் துணையோடு…

 13. \\\ “”அவர்…… ரீல் ஹீரோ. இவர்………… ரியல் ஹீரோ. அவர் சினிமாவுல தான் கடல்ல மூழ்கினவங்களை காப்பாத்துவார். இவர் நிஜத்துலேயே காப்பாத்துவார். இது வரைக்கும் கடல்ல மூழ்கினவங்களை 300 பேர் வரைக்கும் இவர் காப்பாத்தியிருக்கார். இவரை ஹானர் பண்றதுக்கு தான் இங்கே இவரை தேடி வந்தோம்” “Ohh…….” வெட்கப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டார்கள்.

  அவர்களிடமே நம் காமிராவை கொடுத்து அவர்களையே எங்களை புகைப்படம் எடுக்கச் சொன்னோம்.\\\

  நண்பர் சாதனையாளர் வெங்கடேஷ் அவர்களுக்கு எமது நன்றியும் பாராட்டுகளையும் தெருவித்து கொள்கிறேன்.

  திறமை ,தைரியம்,தன்னம்பிக்கை வெற்றிபெற -நல்லுள்ளங்களின் முயற்சியால் நல்லதே நடக்கும் .

  சாதனையாளர்களின் சாதனைகளை வெளிபடுத்தும் -எங்கள் சுந்தர்ஜி மிகசிறந்த சாதனையாளர் ….

  நன்றிகளுடன் ,
  -மனோகர்

 14. Ni enbadhu udala, peyara, uyira…
  Mundrum ellai seyale….

  Right example for this gentleman / boy ….!!!

  Sorry for the Movie song example…There is no other words to describe better than this…

 15. எங்கள் குடும்பத்தின் ராயல் வணக்கம் தம்பி வெங்கடேஷ் அவர்ஹளுக்கும் ,உங்களுக்கும்.
  யப்ப்டிகு
  சிவநேசன் அண்ட் பாமிலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *