பறவையினங்களை காக்கவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனத்தை காக்கவும் அது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவும் உலகம் முழுதும் இன்று (March 20) ‘சிட்டுக்குருவிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இது சம்பந்தமாக ஏதேனும் பதிவளிக்கலாம் என்று நினைத்தபோது, சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற தங்களால் ஆன முயற்சிகளை செய்துவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜன் மற்றும் தனிஷ் என்கிற அண்ணன் தங்கை இருவரை பற்றிய செய்தி கிடைத்தது. அவர்களின் அலைபேசி எண்ணை எப்படியோ பெற்று, அவர்களிடம் பேசி செய்தியை பெற்று பதிவை தயார் செய்துவிட்டோம். ஆனால் புகைப்படங்களை மாலை கல்லூரியிலிருந்து வந்தபின்னர் தான் அனுப்ப இயலும் என்று ஜேசுராஜன் கூறியதை அடுத்து, சரி மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று அலுவலகம் சென்றுவிட்டோம்.
இதோ ஜேசுராஜன் அவர்கள் புகைப்படங்களை அனுப்பிவிட்டதையடுத்து பதிவை அளிக்கிறோம். (கடுமையான மின்வெட்டுக்கிடையே மிகவும் கஷ்டப்பட்டு தனது மடிக்கணினியிலிருந்து ஒவ்வொரு புகைப்படமாக அவர் அனுப்பினார்!)
சிட்டுக்குருவிகள் தினத்துக்கு இதை விட ஒரு பொருத்தமான பதிவை அளிக்க முடியாது என்பதை படித்த பின்பு நீங்களே உணர்வீர்கள்.
சேவை செய்ய கோடிகளோ லட்சங்களோ தேவையில்லை. சமூக அக்கறையும் இதயத்தின் ஓரத்தில் சிறு துளி ஈரமும் இருந்தால் போதும் என்பதையே இந்த அண்ணனும் தங்கையும் உணர்த்துகிறார்கள்.
கோவிலுக்கு போவதும் சாமி கும்பிடுவதும் மட்டும் புண்ணியமில்லீங்க. இதுவும் கூட ஒருவகையில் மிகப் பெரிய புண்ணியம் தான்.
=======================================================================
சிட்டுக்குருவிகளுக்கு ஒரு வீடு !
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ் (வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள்.
தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்–தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.
மேலும் இன்று சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.
சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.
மேலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்தும் விளக்கினர். அதன்படி பூச்சிக்கொல்லிகள், அயல் தாவரங்கள் பெருகிவிட்டதன் காரணமாக குருவி குஞ்சுகளுக்கு முக்கிய உணவான புழுக்கள் கிடைப்பதில்லை. முதல் 15 நாளைக்கு குருவிக்குஞ்சுகளின் முக்கிய உணவு இந்தச் சிறு புழுக்கள்தான். அது இல்லையென்றால், குஞ்சுகள் வளர்வது தடைபட்டுவிடும். வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் மற்றும் தோட்டங்களில்தான் சிட்டுக்குருவிகள் சிறிய புழுக்களைத் தேடும். இன்றைக்கு அப்படிப்பட்ட தோட்டங்கள் நகரங்களில் இல்லை. பெரும்பாலான கிராமங்களிலும் இல்லை.

வீட்டுத் தோட்டங்கள், வயல்கள், செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்து விடுகின்றன. பூச்சிக்கொல்லியால் தானியங்களும் நஞ்சாகின்றன. இது சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. தானியங்களும் அரிசியும் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால் வளர்ந்த சிட்டுக்குருவிகள் உண்ணத் தேவையான தானியங்கள் எங்குமே சிதறுவதில்லை.
நவீனக் கட்டடங்களில் குருவிகள் கூடு அமைப்பதற்கான வசதியில்லை. ஓட்டு வீடுகள், சுவரில் பொந்து, இடைவெளி வைத்து கட்டப்பட்ட வீடுகளில் தான் குருவிகள் வழக்கமாக கூடுகட்டும். குருவிகள் ஓய்வெடுக்கும் வேலிப் புதர்ச் செடிகளுக்குப் பதிலாக சிமெண்ட் சுவர்களும், இரும்பு வேலிகளும் தற்போது போடப்படுகின்றன.
தங்களது இந்த சேவையில், தங்கள் பெற்றோர் திரு.கோவில் பிச்சை மற்றும் சுசிலா அம்மாள் ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருப்பதாக கூறும் திரு.ஜேசுராஜன், எல்லா பெருமையும் அவர்களையே சாரும் என்று கூறுகிறார்.
எங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்று திரு.ஜேசுராஜன் அவர்களை கேட்டபோது, “நாம் அனைவரும் மனது வைத்தால் அரிய பறவையினங்களை அழிவிலிருந்து காப்பாற்றலாம். அதன் மூலம் இயற்கையை காப்பாற்றலாம். இயற்கையை நம் காப்பாற்றினால் இயற்கை நம்மை காப்பாற்றும்” என்றார்.
அவரது தொண்டிற்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.
உலக சிட்டுக்குருவி தினமான இன்று (மார்ச் 20) சிட்டுக்குருவி இனத்தை வாழ வைக்க மக்களாகிய நாமும் உறுதுணையாக இருப்போம்.
======================================================================
பாரதியை விட நூறு மடங்கு…
குருவிக்கூடு செய்வது எளிது. ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் / மண் பானையில் வைக்கோலை வைத்து கயிற்றிலோ நூலிலோ தொங்கவிட்டால் போதும். சிறு சிறு தானிய வகைகள், உப்பு போடாத அரிசி சாதம் இவை போதும் சிட்டுக்குருவிகள் உண்ண.
மகாகவி பாரதி தான் சாப்பாட்டுக்கே வழியின்றி வறுமையில் உழன்ற காலத்தில் அவரது மனைவி செல்லம்மாள் அக்கம்பக்கத்து வீடுகளில் அரிசி பருப்பு கடன் வாங்கி வந்து சமைப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வாங்கி வந்து சமைக்கும்போது, முற்றத்தில் சிட்டுக்குருவிகளை கண்ட பாரதி, செல்லம்மாள் வாங்கி வந்த தானியங்களை அவற்றுக்கிரைத்து சந்தோஷப்படுவாராம்.
பாரதியை விட நூறு மடங்கு நல்ல நிலையில் நம்மை வைத்திருக்கிறான் இறைவன். ஆனால் பாரதி செய்ததில் நூறில் ஒரு பங்காவது நாம் செய்ய வேண்டாமா?
நம் வீட்டு பால்கனியிலும் உடனடியாக ஒரு குருவிக்கூடு வைக்க முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் எப்படி?
(கூடு வைப்பது என்பது அனைவராலும் முடியாது. கோடைக்காலம் வருகிறது. எனவே கூடு வைக்கவில்லை என்றாலும் பறவைகளுக்கு ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் உணவுமாவது வையுங்கள். அது போதும்.)
======================================================================
[END]
Also check :
இதுதான் நிஜமான மனித நேயம். வாழ்க நற்பணியாளர்கள்.
டியர் சுந்தர்ஜி
சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற தங்களால் ஆன முயற்சிகளை செய்துவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜன் மற்றும் தனிஷ் என்கிற அண்ணன் தங்கை இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் இருவரும் செய்து வரும் தொண்டு மிக பெரியது. .இப்பொழுதெல்லாம் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது.
//நம் வீட்டு பால்கனியிலும் உடனடியாக ஒரு குருவிக்கூடு வைக்க முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் எப்படி?//
நாங்களும் எங்கள் வீடு பால்கனியில் குருவி கூடு வைக்க முடிவு செய்துள்ளோம்.
நன்றி
உமா
இந்த வயதில் இத்தனை பெரிய விஷயத்தை இவர்கள் செய்கிறார்கள் என்றால் மிகவும் பாரட்டதக்கது….இவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்….
சுந்தர் சார் வணக்கம்
அழியும் சிட்டுகுருவி இனத்தை காப்பாற்ற அண்ணன் தங்கை இருவரும் எடுக்கும் முயற்சி பாராட்டுவதற்குரியது.
கோவிலுக்கு போவதும் சாமி கும்பிடுவதும் சுயநலம் சார்ந்த புண்ணியம். அனால் இந்த அண்ணன் தங்கை இருவரும் தங்கள் பெற்றவர்கள் ஆசிர்வாதத்துடன் செய்வது அவர்கள் தலைமுறைக்கே புண்ணியம் சேர்க்கும்.
சேவை செய்ய கோடிகளோ லட்சங்களோ தேவையில்லை. சமூக அக்கறையும் இதயத்தின் ஓரத்தில் சிறு துளி ஈரமும் இருந்தால் போதும் என்பதையே இந்த அண்ணனும் தங்கையும் உணர்த்துகிறார்கள்.
சிட்டுக்குருவிகளின் வாழும் இடம் அதன் தண்ணீர் தேவை இவைகளை உணர்ந்து செயல்பட ஆண்டவன் அவர்களுக்கு நல்ல மனதை கொடுத்துள்ளான்.
“தானியங்களும் அரிசியும் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால் வளர்ந்த சிட்டுக்குருவிகள் உண்ணத் தேவையான தானியங்கள் எங்குமே சிதறுவதில்லை.” குருவிகளுக்கு உணவு கிடைக்காத ஒரு காரணத்தை கூறிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
இலவச வீடுகள் மாதிரி இலவச கூடுகள் மற்றும் உணவுகள் இதுவும் ஒரு வகை தானம் தான்.
அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் கடவுள் துணை நிற்கட்டும்.
கூடு வைப்பது என்பது அனைவராலும் முடியாது. கோடைக்காலம் வருகிறது. எனவே கூடு வைக்கவில்லை என்றாலும் பறவைகளுக்கு ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் உணவுமாவது வையுங்கள். அது போதும்.) கண்டிப்பாக இப்போதே நீங்கள் சொன்னதை செய்கிறோம்.
நன்றி.
சுந்தர் சார் வணக்கம் ……சிட்டு குருவி இனத்தை காப்பாற்ற ஜேசுராஜன் மற்றும் தனிஷ் இவர்களது பெற்றோர்கள் செய்து வரும் தொண்டுகள் மிகப் பெரியது …..இவர்கள் தொண்டு மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…… நாங்களும் எங்கள் வீடுகளில் கூடு வைக்கவில்லை என்றாலும் பறவைகளுக்கு ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் உணவும் வைக்க தொடங்குகிறோம் ……. நன்றி தனலட்சுமி ……
குருவிக்கு எனவே தானிய பைகள் இந்த நாட்டில் கிடைக்கும். குருவிக்கு வைத்த தானியம் மண்ணில் விழுந்து, அது நெற்பயிர் போல் முளைத்து, அதில் இருந்தே குருவிகள் தானியத்தை கொத்தி தின்றதை பார்த்த போது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மார்ச் 20 குருவிகள் தினம் என்பது எனக்கு புதிய தகவல். நன்றி
இந்த உலகம் இன்னும் சுழல்வது இவர்கள் போன்றவர்களால் தான்
இன்றைய தலைமுறைகள் Facebook போன்ற தளங்களில் நேரத்தை வீணாக செலவிடும் போது இவர்கள் செய்யும் இந்த சேவை நம்மை சிந்திக்க வைக்கிறது !!!
இன்று உலக சிட்டுக்குருவி தினம். நாம் அனைவரும் சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் பாதுக்காக்க வேண்டியது நமது கடமையாகும்.
இப்பொழுதே சிட்டு குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்டது , நம் வருங்கால சந்ததியினருக்கு சிட்டுக் குருவி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.
நம் வீட்டு மாடியிலோ அல்லது பால்கனி யிலோ சிட்டு குருவிகளுக்கு என தானியம் மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும்/
இப்பொழுது கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. மற்ற பறவைகளும் நாம் வைக்கும் தானியத்தையும் தண்ணீரையும் குடித்து அதன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும், இதனால் நமக்கும் கொஞ்சம் கடுகளவு புண்ணியம் சேரும்.
நம் தள வாசகர்கள் கண்டிப்பாக இதை செய்வார்கள்
நன்றி
உமா வெங்கட்