Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

print
ங்களில் எத்தனையோ பேர் உங்கள் தினசரி வாழ்க்கையில், அலுவலகத்தில், நட்பில், உறவில், வியாபாரத்தில், இக்கட்டான தருணங்களில்  தர்மத்தின் பக்கம் நின்றிருந்து அதனால் பல இன்னல்களை சந்தித்திருப்பீர்கள். ஏன் கெட்டபெயரும் சம்பாதித்திருப்பீர்கள். தர்மத்தின் பக்கம் நின்றதற்காக இப்படி ஒரு தண்டனையா என்று புழுங்கி தவித்திருப்பீர்கள். ‘நல்லதுக்கே காலமில்லே’ என்கிற விரக்தி கூட பல சமயங்களில் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித’ என்று தான். “தர்மத்தை நீங்கள் காப்பாற்றினால், தர்மம் உங்களை காப்பாற்றும்” என்பதே அதன் பொருளாகும். தர்மம் தாழ்ந்ததாகவும், அதர்மம் வாழ்ந்ததாகவும் சரித்திரமேயில்லை. சற்று தாமதமானாலும் தர்மம் வென்றே தீரும்.

தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டு, பக்தி செய்து ஒழுகி, தர்மத்தின் பக்கம் நின்று ஒருவர் பெறும் துன்பங்கள் ஒருவகையில் மிகப் பெரிய வரங்கள். ஆம்… சாபத்தின் தோற்றத்தில் உள்ள வரங்கள். ஆங்கிலத்தில் இதை BLESSING IN DISGUISE என்று கூறுவார்கள். மனதுக்கு பக்குவம் ஏற்படும்போது தான் அது சாபமல்ல வரம் என்று நமக்கு புரியும்.

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அர்ஜூனன் ஒரு சாபத்தின் காரணமாக திருநங்கையாக மாறியது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் பின்னணியில் நடந்தவைகளை பார்த்தால் அது சாபமல்ல, வரம் என்பது புரியும்.

இது பற்றி ஒரு விழாவில் நாம் கேட்ட கதையை இங்கு தருகிறோம்.

===================================================================

தர்மத்தின் பக்கம்  நிற்பவர்களுக்கு சாபம் கூட வரமாக மாறும்!

கௌரவர்களிடம் சூதாடி பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து  நின்ற நேரம். நிபந்தனைப்படி 12 ஆண்டுகள் வனவாசத்திலும் ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசத்திலும் (தலைமறைவு வாழ்க்கை) கழிக்கவேண்டும். பாண்டவர்கள் சொல்லொண்ணா துயரில் இருந்தார்கள். அருகில் இருந்து அவர்களை தேற்றி நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

அப்போது தான் துரியோதனின் தூண்டுதலின் பேரில் துர்வாச முனிவர் enஅங்கு வந்து ஒரு புயலை கிளப்பிவிட்டு சென்றிருந்தார். சாப்பிட்டுவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து வைத்துவிடவேண்டும். மறுபடியும் அடுத்த வேளைக்கு தான் அது உணவு தரும். இது தெரிந்து வேண்டுமென்றே துர்வாச முனிவரை உணவு நேரத்திற்கு பிறகு இவர்களிடம் அனுப்பிவைத்தான் துரியோதனன். நல்லவேளையாக கிருஷ்ணர் தலையிட்டு ஒரு திருவிளையாடல் நிகழ்த்தி துர்வாசரை ஓடவைத்தார்.

Lord Krishna with Pandavas

எதற்குமே சட்டென்று கோபப்படும் துர்வாசர் இந்த களேபரத்தில் உணவளிக்க முடியாத தங்களை எங்கே சபித்துவிடுவாரோ என்ற பயம் பாண்டவர்களுக்கு.

“கிருஷ்ணா இந்த முனிவர்கள் சபிப்பதிலிருந்து தங்களை எவருமே காத்துக்கொள்ள முடியாதா?”

கண்ணன் மர்மப் புன்னகையுடன், “ஏன் காத்துக்கொள்ள வேண்டும்? சாபங்கள் பெரும்பாலும் வரங்களே. இப்போது அது உனக்கு புரியாது!” என்றான்.

“கண்ணா! வரம்தான் இறைவனின் அருள். சாபம் எப்படி அருளாக இருக்க முடியும்?”

“முடியும். சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவானாலும் இறைவனின் தீர்ப்பு என்று ஏற்று வாழ்ந்தால் சாபத்தினால்கூட நன்மை காண முடியும். சாபம் வரமாக மாறும் சந்தர்ப்பம் அர்ஜுனன் வாழ்விலும் நேரலாம். யார் கண்டது?”

சில காலம் கழித்து இந்திரனை சந்தித்து சில சக்திமிக்க ஆயுதங்களை பெற அர்ஜூனன் தேவலோகம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு வகையில் இந்திரனின் மகன் தானே அர்ஜூனன். குந்திதேவி, இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்தல்லவா அர்ஜுனனைப் பெற்றாள்?

தேவலோகத்தில் அர்ஜூனனை தற்செயலாக பார்த்த ஊர்வசி அர்ஜூனனின் அழகில் அவள் மனதை பறிகொடுத்தாள். அர்ஜூனன் வீரன் மட்டுமல்ல பேரழகன். ஊர்வசி மயங்கியதில் வியப்பென்ன?

அன்றிரவு அர்ஜூனன் தங்கியிருந்த மாளிகைக்கு ரகசியமாக சென்றாள் ஊர்வசி. வாயில் கதவு தட்டப்பட, அந்த நேரத்தில் தன்னை யார் வந்து சந்திக்கப்போகிறார்கள் என்று யோசித்தபடி கதவை திறந்தால்…. அங்கே ஊர்வசி!!

அர்ஜூனன் சற்று சபல புத்தி உடையவன் தான். ஆனால் இந்த தேவலோகப் பெண்ணைப் பார்த்ததும் அவன் மனத்தில் காதல் எழவில்லை. ஏனோ மரியாதைதான் எழுந்தது. தன் மன உணர்வுகளை எண்ணி அவனுக்கே திகைப்பாக இருந்தது.

“நான் தான் ஊர்வசி. என் அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் ஏனோ என் மனம் உன்னை விரும்புகிறது. உன்னை அடையவே நான் இந்த இரவில் இங்கு வந்தோம்.”

அர்ஜூனன் சற்று அதிர்ச்சியடைந்தாலும் அதை காட்டிக்கொள்ளாது மிகுந்த மதிப்போடு அவளை உள்ளே அழைத்த அவன் ஓர் ஆசனத்தில் அமரவைத்து, திடீரென அவள் காலில் விழுந்து வணங்கினான்!

அவள் பதறிப்போய் காலை நகர்த்திக் கொண்டாள்.

“அம்மா! தாங்கள் என் தாய்க்கு நிகரல்லவா? தேவேந்திரன் எனக்குத் தந்தை முறையாக வேண்டும் என்றால் தாங்கள் எனக்குத் தாய் தானே?”

ஊர்வசியின் மனத்தில் கடும் சீற்றமும் எழுந்தது.

“என்னைத் தாய் என்று சொல்லி அவமானப்படுத்தாதே! நான் உன்மேல் ஆசைகொண்டு உன்னைத் தேடிவந்த பெண். தாய்-மகன் உறவு என்பது இருதரப்பிலும் ஏற்கப்பட வேண்டும். நீ என்னைத் தாய் என்று சொல்வதால் மட்டும் நான் உன் தாயாகிவிட மாட்டேன்.”

அர்ஜுனன் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான்: “என் மனநிலையை நான் தெரிவித்தேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. அன்னைக்கு சமமான உங்களை என்னால் தொட முடியாது!”

“ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ, பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவாய்!” ஊர்வசி சாபமிட அர்ஜுனன் திடுக்கிட்டான்.

தர்மத்தின் வழி நின்றதற்கு தண்டனையா? அர்ஜூனன் துடித்தான்.

“தாயே! சற்றே சிந்தித்துப் பாருங்கள். தங்கள் இச்சைக்கு நான் உடன்பட்டால் தாய்க்கு நிகரானவளை அடைந்தேன் என்று சான்றோர் என்னைப் பழிக்க மாட்டார்களா? அறவழியில் செல்ல நினைத்தவனைச் சபிப்பது எவ்வகையில் தர்மமாகும்? என் நிலை உணர்ந்து எனக்குத் தாங்கள் சாபவிமோசனம் அருள வேண்டும்!”

அர்ஜுனன் தரப்பில் இருந்த நியாயத்தை ஊர்வசி மெலிதாக உணர்ந்துகொண்டாள்.

“ஆம். நீ சொல்வது சரிதான். ஆனால் சபித்தது சபித்ததுதான். வேண்டுமானால் சாபத்தின் தாக்கத்தை குறைக்க இயலும். நீ உன் வாழ்வில் ஓராண்டு மட்டும் அலித்தன்மை பெறக் கடவாய். அது நீ விரும்புகிற எந்த ஆண்டாக வேண்டுமானாலும் நீயே தேர்வு செய்து கொள்ளலாம்!” சொன்ன ஊர்வசி, அந்த மாளிகையை விட்டு வெளியேறினாள்.

தேவேந்திரனிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கானகம் திரும்பினான்.

கண்ணன் அவனைச் சந்திக்கக் வந்தபோது அர்ஜுனன் விழிகளில் கண்ணீர் ஆறாக பெருகியது.

மாபெரும் வீரன் அர்ஜூனன் இப்படி அழுவது கண்டு கண்ணன் அதிர்ந்தான். அர்ஜுனனின் சோகத்திற்கு என்ன காரணம் என வினவினான் கண்ணன். அர்ஜுனன் ஊர்வசியின் சாபத்தைப் பற்றிச் சொன்னான்.

கண்ணனோ, “அர்ஜூனா ஊர்வசி உனக்கு அளித்தது சாபமல்ல… வரம்!”

“என்ன கண்ணா சொல்கிறாய்… ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் அலியாக மாறுவது வரமா?’

“அர்ஜுனா! பதிமூன்று வருட வனவாச காலத்தில் கடைசி ஓராண்டை நீங்கள் ஆறுபேரும் அஞ்ஞாத வாசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அஞ்ஞாத வாசத்தில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது. பெரும் வீரனான நீ மிடுக்கான தோற்றமுடையவனாய் இருக்கிறாயே? உன்னை எவ்விதம் ஒளித்து வாழ்வாய்? ஊர்வசியின் சாபத்தால் நீ அலித்தன்மை அடையும் ஓராண்டாக அந்தக் கடைசி ஆண்டைத் தேர்வு செய்துகொள். உன் தோற்றம், இயல்பு அனைத்தும் மாறும். உன்னை யாராலும் கண்டுபிடிக்க இயலாது!”

அர்ஜூனனுக்கு அப்போதுதான், தான் இன்னும் ஓராண்டு அஞ்ஞாதவாசத்தில் கழிக்க வேண்டும் என்பதே நினைவுக்கு வந்தது. கண்ணன் கூறுவது போல, அந்த ஓராண்டை ஊர்வசி கொடுத்த சாபத்தை ஏற்றுக்கொண்டு கழித்துவிடலாம்.

கண்ணன் மீண்டும் புன்னகைத்தபடி சொன்னான், “ஊர்வசி கொடுத்தது சாபமல்ல, வரம். நீ அறநெறி தவறாமல் அவளைத் தாயாக ஏற்றாய். அந்த அறநெறி அவள் அளித்த சாபத்தை உனக்கு வரமாக மாற்றிவிட்டது!”

இதைக் கேட்டு அர்ஜூனன் உட்பட பாண்டவர் ஐவர் முகத்திலும் பாஞ்சாலி முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

பரந்தாமன் விளக்கினான்: “மூடிய இரும்புக் கதவைப் பார்த்து வருந்துகிறார்கள் மக்கள். ஆனால் அதைவிடப் பிரகாசமான தங்கக் கதவைத் திறப்பதற்காகவே தற்காலிகமாக அந்த இரும்புக் கதவு மூடப்படுகிறது என்பதைப் பின்னர்தான் அறிகிறார்கள். கடவுள் சக்தி மக்களைக் காப்பதற்குத்தானே எப்போதும் காத்திருக்கிறது! தற்காலிக சோகங்களை எண்ணி வருந்துவானேன்? நிரந்தர ஆனந்தத்தை நோக்கி நடக்க வேண்டியதுதானே?’’

(‘அமுத சுரபி’ ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ஒரு விழாவில் கூற கேட்டது இது!)

14 thoughts on “தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

  1. Dear Mr sundar

    மிகவும் அருமையான கதை. தற்கால சூழலுக்கு ஏற்ற கதையை பதிவு செய்திருக்கிறீர்கள்

    நல்லதுக்கு காலமில்லை என்று அடிக்கடி புலம்பி இருக்கிறோம். இப்பொழுது தான் தெரிகிறது, புலம்பலுக்கு பின் நல்ல காலம் வரும் என்று.

    ”தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், பிறகு தர்மமே கடைசியில் வெல்லும்.”

    இவ்வளவு அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி.

    போட்டோ சுபெர்ப்.

    நன்றி
    உமா

  2. “வரமா சாபமா
    பாண்டவர் கதை நன்றாக உள்ளது.
    சாபத்தையும் வரமாக மாற்றி கொள்ள கண்ணன் வரம் கொடுத்தான்.
    ” சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவானாலும் இறைவனின் தீர்ப்பு என்று ஏற்று வாழ்ந்தால் சாபத்தினால்கூட நன்மை காண முடியும்.”
    தர்மத்தின் வழி நடந்தால் எல்லாம் நல்லவிதமாக முடியும்.

  3. சுந்தர்ஜி
    அர்ஜுனனுக்கு கண்ணன் போல நமக்கு ரைட் மந்திரா தளம் தான் வழி காட்டி வருகிறது . உங்கள் நடுக்காவேரி விஜயம் விரைவில் ஜெயத்தை கொடுக்கட்டும். அற்புதமான நிகழ்வுகளும், அதை பற்றிய பதிவுகளும் தொடர்வதில் மஹா பெரியவா உம்மோடு இருப்பது தெரிகிறது. அனைவரும் நலம் பெற உழைக்கும் உங்களுக்கு அவர் வழி கொடுக்கட்டும் . நன்றி

  4. \\\ “மூடிய இரும்புக் கதவைப் பார்த்து வருந்துகிறார்கள் மக்கள். ஆனால் அதைவிடப் பிரகாசமான தங்கக் கதவைத் திறப்பதற்காகவே தற்காலிகமாக அந்த இரும்புக் கதவு மூடப்படுகிறது என்பதைப் பின்னர்தான் அறிகிறார்கள். கடவுள் சக்தி மக்களைக் காப்பதற்குத்தானே எப்போதும் காத்திருக்கிறது! தற்காலிக சோகங்களை எண்ணி வருந்துவானேன்? நிரந்தர ஆனந்தத்தை நோக்கி நடக்க வேண்டியதுதானே?’’\\\

    monday spl , wednesday spl கிடைத்து விட்டது .

    நன்றி …

    மனோகர்

  5. நமது புராணங்கள் புரிய வைக்கும் உண்மைகள் தான் எத்தனை கோடி . வழக்கை பாடங்களின் தொகுப்பு …உண்மையை / உட்பொருளை சரி வர புரிந்து கொள்வதை விட்டு அவற்றை குறை கூறுவது சரியல்ல . நல்ல பதிவு ..
    அமுத சுரபி’ ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் சுந்தருடன் சேர்த்து நன்றி

  6. டியர் சுந்தர்,

    நானும் கூட எனக்கு வரும் பிரச்சனைகளை வரமாக தான் எடுத்து கொள்ளுகிறேன். தங்களின் பதிவு அதை உறுதி செய்கிறது

  7. என் அப்பா எனக்கு அடிக்கடி சொன்னது – ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித’. அவர் காலமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் அவர் எனக்கு சொன்ன இதுபோன்ற நல்ல விஷயங்கள் என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த பதிவின் மூலம் தர்மத்தை காப்பதன் பொருளை நன்றாக புரிந்து கொண்டேன். ஒரு வகையில் என் தகப்பனார் இல்லாத குறையை ரைட்மந்த்ரா நீக்கிவிட்டது. காலத்திற்க்கேற்ற பதிவிற்கு நன்றி சுந்தர்.

  8. இதை படித்ததும், பாரதியார் பாஞ்சாலி சபதம் பாடலில் சொன்ன வரிகள் “தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் . தர்மம் மறுபடி வெல்லும்.” தான் ஞாபகத்திக்கு வருகிறது.
    சொல்வது எளிது. கடை பிடிப்பது கடினம் என்று நாம் நினைக்கலாம்.
    ஆனால் ஒவ்வொரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் உண்டு.
    அதை புரிந்து கொள்ள நமக்கு அறிவு பத்தாது.
    நாம் கடவுள் மீது 100% நம்பிக்கை வைத்தால் நமக்கு எது நல்லதோ (அது கசப்பு மருந்தாக இருந்தாலும்) அதை கண்டிப்பாக தருவார்.
    கடவுள் நம்மிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை.

  9. மிகவும் அருமையான கதை. இந்த பதிவு கொடுத்ததுக்கு நன்றி சார் .

  10. மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சியன் பதிவு எத்துனை அர்த்தம் தருகிறது என்றால்….முழு பதிவும் வாழ்வின் பல அர்த்தங்களை தரும் என்பதில் வியபென்ன……நமது புராணங்கள் புரிய வைக்கும் உண்மைகள் தான் எத்தனை கோடி………………
    .

  11. சுந்தர் சார் மிகவும் அருமையான பதிவு …சிவாய சிவ

  12. சுந்தர்ஜி , மிகவும் மனதில் பதியக்கூடிய பதிப்பு. ஒரு சிற்பியின் கையில் உளியாய் உள்ளது இப்பதிப்பு. நிச்சயம் செதுக்கப்படுவோம் நன்றி

  13. திரு சுந்தர்ஜி

    வரமா சாபமா என்ற மகாபாரத கதை என் மனதில் இருந்த சோகத்தை குறைத்துள்ளது. இதுபோல விபரங்களை தேடி தேடி எங்களுக்கு கொடுத்தமைக்கு தங்களுக்கு
    கோடான கோடி நன்றிகள் தெரிவித்துகொள்கிறேன்.

    மேலும் இதுபோல பல விஷயங்களை படிப்பதின் மூலம் நல்ல தெளிவு பிறக்கும் என்பது உண்மை. வாழ்க தங்களின் ஆன்மீக தொண்டு.

    மன நிறைவுடன்
    வரதராஜன்-கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *