Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

print
டுக்காவேரியை சேர்ந்த ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவாவின் அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி கிடைத்தது பற்றியும், அதற்கு சாட்சியாக குடமுருட்டி நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் ப்ரஸன்ன மஹாகணபதியை பற்றியும் படித்ததில் இருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை எப்படியாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாக நம்மை ஆட்கொண்டிருந்தது.

ஏற்கனவே திரு.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா’ நூலில் இது பற்றி படித்தபோது இதே போன்று ஆவல் எழுந்தது. ஆனால் இந்த முறை ஆவல் பேராவலாக மாறிவிட்டது.

================================================================
இந்த பதிவின் முதல் பாகத்தை படித்த பின்பே இதை படிக்கவேண்டும். அப்போது தான் உங்களால் பதிவில் ஒன்ற முடியும்.
முதல் பாகத்திற்கு :
தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!
================================================================

நடுக்காவேரிக்கு சென்று மஹாகணபதியை தரிசிப்பது என்று முடிவானவுடன், அப்படியே நாம் நீண்ட நாட்களாக செல்ல விரும்பிய கோவில்களுக்கும் செல்லலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்றபடி பயண திட்டத்தை வகுத்துக்கொண்டோம்.

நாம் பிறந்த ஊரான பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்கா ஜம்புகேஸ்வரரையும் ஸ்ரீரங்கத்திற்கு சென்று அரங்கனையும் தரிசிக்க விரும்பினோம். ஆனால், அடுத்த மாத மத்தியில் திருச்சிக்கு ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது. அப்போது ஒரு நாள் முன்னதாக சென்று, இரண்டு கோவில்களையும் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு திருச்சியில் உள்ள வேறு சில தலங்கள், நடுக்காவேரி மஹாகணபதி, திருவையாறு ஐயாறப்பர் கோவிலையும் தரிசித்துவிட்டு வருவது என்று முடிவானது.

கல்லணை போகும் வழியில் காவிரியின் தோற்றம்
கல்லணை போகும் வழியில் காவிரியின் தோற்றம்

மேலும் நாம் சில கோவில்களில் பரிகார பூஜைகளும் செய்ய வேண்டியிருந்ததால் பெற்றோரையும் உடன் அழைத்து செல்ல தீர்மானித்தோம்.

நடுக்காவேரிக்கு செல்லும் விஷயத்தை நம் பெற்றோரிடம் சொன்னாலும், அங்கு எந்த கோவிலுக்கு போகிறோம் அதன் விசேஷம் என்ன என்று அவர்களிடம் சொல்லவில்லை. சர்ப்ரைஸாக சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

DSC01372

இதையடுத்து, சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பி மறுநாள் அதிகாலை 3.45 அளவில் திருச்சி ஜங்க்ஷன் வந்து சேர்ந்தோம். முந்தைய தினமே பிரார்த்தனை கிளப் மூலம் அறிமுகமான நண்பர் சிவக்குமார் அவர்களின் உதவியுடன் டாக்சி ஏற்பாடு செய்திருந்தபடியால் சற்று சௌகரியமாக இருந்தது.

DSC01375

நாம் செய்ய நினைத்த பரிகாரத்தை முடித்துவிட்டு வேறு சில ஷேத்ரங்களையும் தரிசித்துவிட்டு அங்கிருந்து நேரே கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளி வழியாக நடுக்காவேரி பயணம்.

திருச்சி மாவட்டத்தை டிரைவர் நன்கு அறிந்திருந்தாலும் நடுக்காவேரி மற்றும் திருவையாறு பகுதி அவருக்கு புதிது. எனவே ஆங்காங்கே விசாரித்துகொண்டு சென்றுகொண்டிருந்தோம்.

DSC01377

அப்போது தான் பெற்றோரிடம் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவிலின் வரலாற்றை பற்றி கூறினோம். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். நம்மை விட தற்போது அவர்களுக்கு அந்த கோவிலை பார்க்க ஆவல் அதிகமாகிவிட்டது.

நடுக்காவேரிக்கு சென்றபிறகு குறிப்பிட்ட அந்த கோவிலை கண்டுபிடிக்கமுடியவில்லை. விசாரித்ததில் அந்த பகுதியில் எவருக்கும் தெரியவுமில்லை.

DSC01379

ஒரு பஸ் நிறுத்தத்தில், நான்கைந்து பேர் நின்றுகொண்டிருக்க, அவர்களிடம் விசாரிப்போம் என்று விசாரித்தால்… அவர்கள் ‘குடி’மகன்கள் போல. நம் கார் அருகே ஒருவர் வந்தார், “என்னா கேட்டே… காவிரிக்கரை பிள்ளையார் கோவிலா? தலைவா நீ ஒன்னு பண்ணு. அப்படியே வண்டியை திருப்பி நேரே போ. திருச்சி வரும். அங்கே காவிரிக் கரை ஓரமா மலையில ஒரு கோவில் இருக்கும். அது தான் காவிரிக்கரை பிள்ளையார் கோவில்!” என்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு வழி சொன்னார்.

இவர்களிடம் வழி கேட்பது வீண் வேலை என்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தோம். அந்த பகுதியில் அக்ரஹாரம் இருக்கிறது. (ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதிகள் வசித்தார்களே அதே அக்ரஹாரம்). அக்ரஹாரத்தில் விசாரித்தால் சொல்லிவிடுவார்கள் என்று கருதி அக்ரஹாரத்தை தேடி புறப்பட்டோம். அப்போது அந்த ஒரு இடத்தில் சாலையோரம் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார்.

சாலையோரம் இருந்த சிவன் கோவில்
சாலையோரம் இருந்த சிவன் கோவில்

அவரை பார்த்தவுடன் “அம்மா… இங்கே காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் எங்கே இருக்கு?”

அருகில் தெரிந்த ஒரு சிறிய சந்தை காண்பித்து, “இதோ… இதுக்குள்ளே போனீங்கன்னா.. ஆத்தோரம் ஒரு கோவில் தெரியும். அது தான் ப்ரஸன்ன மஹாகணபதி கோவில்” என்றார்.

நமக்கு ஒரே குதூகலமாகிவிட்டது. அப்பாடா ஒரு வழியா கோவில் இருந்த இடத்தை கண்டுபிடிச்சாச்சு.

“அம்மா… மஹா பெரியவர் சொல்லி கட்டின கோவில் அது தானே?”

“ஆமா.. அதே தான். ஜீ.டி.வி.ல கூட ரீசண்ட்டா சாமிநாதன் சார் அந்த கோவிலை பத்தி சொன்னார். ஆனா இப்போ அந்த கோவில்ல யாரும் இருக்கமட்டாங்களே… கோவிலும் பூட்டியிருக்குமே…”

“எத்தனை மணிக்கு திறப்பாங்கம்மா? நாங்க இதை முடிச்சிட்டு திருவையாறு போகணும்”

வழிகாட்டிய லலிதாம்பாள்!
வழிகாட்டிய லலிதாம்பாள்!

“குருக்கள் வீடு உள்ள பெருமாள் கோவில் பக்கத்துல இருக்குற ரெண்டாவது வீடு. அவர் வீட்டுக்கு போனீங்கன்னா…அவரே உங்க கூட வந்து கோவிலை திறந்து தரிசனம் செய்துவைப்பார்… ராமச்சந்திர ஐயரோட வீடு உள்ளே அக்ரஹாரத்துல அதே தெருவுல தான் இருக்கு. அவர் பையன் கணேசன் இருப்பார். அவரை நீங்க பார்க்கலாம். குருக்கள் கிட்டே சொன்னீங்கன்னா அவரே உங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போவார்” என்றார்.

“ரொம்ப நன்றிம்மா…”

“நீங்கள்லாம் எங்க ஊருக்கு வர்றது எங்களுக்கு பெருமையா இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே. ரொம்ப சந்தோஷமா இருக்கு!” அவர் ஊர் கோவிலை தேடி நாம் வந்ததில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

“அம்மா அந்த கோவில் பேக்ட்ராப்ல தெரியுற மாதிரி கொஞ்சம் நில்லுங்களேன் உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்…” என்றோம் ஆவலுடன்.

“என்னை எடுத்து என்ன ஆகப்போகுது… அந்த கோவிலையாவது எடுங்க… ” என்று சாலையோரத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலை காண்பித்தவாறே சொன்னார்.

“நாங்க அட்ரெஸ் தெரியாம தவிச்சுகிட்டு இருந்தோம்… நல்லவேளை ஆண்டவனா பார்த்து உங்களை அனுப்பி வெச்சான்மா…”

சற்று தயக்கம் கலந்த உற்சாகத்துடன் அவர் நின்றுக்கொண்டிருக்கும்போதே நாம் ஃபோட்டோ எடுத்துவிட்டோம்.

காரில் ஏறி கிளம்பும்போது கேட்டோம். “நன்றிம்மா. உங்க பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“நான் அக்ரஹாரத்துல தான் இருக்கேன். பேரு லலிதாம்பாள்!” என்றார்.

DSCN2105

அட… அம்மாவே வந்து வழிகாட்டியிருக்காங்க என்று நினைத்துக்கொண்டு கையெடுத்து அவர்களை கும்பிட்டுக்கொண்டே அக்ரஹாரம் சென்றோம்.

DSCN2112செல்லும் வழியில் ஒரு தாமரை தடாகம் நம்மை ஈர்க்க, வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சென்று அதன் அழகை படம் பிடித்தோம். இப்போதெல்லாம்… தாமரை தடாகம் விடுங்கள்… தாமரை பூவையே பார்க்க முடிவதில்லை…

அடுத்த சில வினாடிகளில் அக்ரஹாரம் வந்துவிட்டது. சிறிய பெருமாள் கோவில் ஒன்று அருகே உள்ளது. கோவிலுக்கு பின்புறம் பக்கவாட்டில் இருந்தது ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் தண்டபாணி குருக்கள்வீடு.

நல்லவேளை. திண்ணையிலே அமர்ந்திருந்தார் தண்டபாணி குருக்கள்.

ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவரின் அருளால் குழந்தை பிறந்தது பற்றியும் தொடர்ந்து ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் எழும்பியது பற்றியும் சாமிநாதன் அவர்கள் தனது நூலிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அது குறித்து சொன்னதையும் குறிப்பிட்டு சென்னையிலிருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தை சொன்னோம்.

“கோவிலை திறந்து தரிசனம் செய்துவைக்கவேண்டும்… உங்களை காரிலேயே அழைத்து சென்று மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடுகிறோம்!” என்றோம்.

“ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி வீடு இங்கே பக்கத்துல தான் இருக்கு. அவங்க பிள்ளை கணேசன் கூட வீட்டுல தான் இருப்பார்னு நினைக்கிறேன். அவங்க கிட்டே போய் பேசிட்டு வாங்க… அதுக்குள்ளே நான் இங்கே தயாராக இருக்கேன்….” என்றார்.

“அடடா…. பெரியாவாவின் அருளால் பிறந்திருக்கும் அவரை சந்தித்து சில வார்த்தைகள் பேசமுடிந்தால்  அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனா நான் ஷேத்ரங்களுக்கெல்லாம் போய் பரிகாரமெல்லாம் பண்ணிட்டு  வந்திருக்கேன். யார் கிரகத்துக்கும் போகவேண்டாம்னு நினைக்கிறேன். வேற ஒன்னும் இல்லே சுவாமி” என்றோம் சற்று தயக்கத்துடன்.

நமது தயக்கத்தின் காரணத்தை புரிந்துகொண்டவர் “சரி… விடுங்க அடுத்த முறை வரும்போது அவரை பார்த்துக்கலாம். நாம கோவிலுக்கு போகலாம்!”

“பிள்ளையாருக்கு அர்ச்சனை பண்ண தேங்காய் பூ பழம் ஊதுபத்தி இங்கே கிடைக்குமா?”

“இந்த ஊர்ல அதெல்லாம் கிடைக்காது. நீங்க ஒன்னு பண்ணுங்க… ஒரு ரெண்டு கி.மீ. தூரத்துல பக்கத்து ஊருக்கு போய் தேங்காய், பூ, பழம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க… நானும் அதுக்குள்ளே தயாரா இருக்கேன்” என்றார்.

சரியென்று சொல்லி, பக்கத்தில் சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு சென்று, தேங்கிய, பூ, பழம், கல்கண்டு உள்ளிட்ட பொருட்களை  வாங்கிக்கொண்டோம்.

மறுபடியும் அக்ரஹாரத்திற்குள் செல்லலாம் என்று வண்டியை திருப்ப நினைத்தால், சாலையிலேயே குருக்கள் எங்களுக்காக காத்திருந்தார்.

அவரை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்தினோம்.

“நீங்க போங்க… நான் இதோ இவர் பேசிக்கிட்டே நடந்து வர்றேன்” என்று அவர் அருகில் இருந்த ஒருவரை காண்பித்தபடி சொன்னார். அவரது தெருவில் வசிக்கும் அதே அக்ரஹாரத்துக்காரர் போல.

“இதோ அந்த தெருவுல போய் திரும்பின உடனே கோவில் வந்துடும். பக்கத்துல தான்… நீங்க போங்க” என்றார் மீண்டும்.

தெருமுனையில் இருந்து பார்த்தபோது, நதிக்கரையில் மஹாகணபதி கோவில் தெரிந்தது.

 கோவிலுக்கு நடந்து செல்லும் குருக்கள் மற்றும் அவர் நண்பர்!

கோவிலுக்கு நடந்து செல்லும் குருக்கள் மற்றும் அவர் நண்பர்!

பூட்டப்பட்டிருந்த கேட்டை திறந்தார். உள்ளே கணபதியை சேவித்தபடி ஒவ்வொருவராக சென்றோம்.

கோவில் திறக்கப்படுகிறது
கோவில் திறக்கப்படுகிறது

வெளியே பின்னமடைந்திருந்த பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது. அது தான் கரையை தோண்டும்போது கிடைத்த ஒரிஜினல் விக்ரகமாம். பின்னமடைந்திருந்தபடியால் அதை வெளியே வைத்துவிட்டு உள்ளே புதிய விக்ரகத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

மூர்த்தி சிறிதானால் என்ன? கீர்த்தி பெரிது இவருக்கு. மஹா பெரியவர் அருள்வாக்கால் வெளிப்பட்டவராயிற்றே.

பிரகாரம் எங்கும் புதர் மண்டிக்கிடந்தது. உள்ளே பிரகாரத்தை வலம் வரமுடியாத புதர்கள் மண்டிக்கிடந்தன. பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நம்மை ஏன் மஹா பெரியவர் இங்கே வரவழைத்தார் என்று புரிந்தது.

DSCN2118

கோவில் கட்டி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த 70 ஆண்டுகளில் எத்தனை வெள்ளத்தை சந்தித்திருக்கும் குடமுருட்டி ஆறு? எனவே கோவிலின் மதில் சுவர் சேதமடைந்திருந்தது. கோவில் அவசியம் புனருத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பது புரிந்தது.

DSCN2119

நம்மை பற்றியும் நமது பணியை பற்றியும் நம் தளத்தை பற்றியும் சுவாமிநாதன் அவர்களுடனான நட்பை பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினோம்.

நாம் இந்த கோவிலின் புகைப்படத்தை தான் எடுக்க நினைத்தோம். ஆனால், தன்னையும் தரிசிக்க வைத்துவிட்டான் ஆனைமுகன். அந்த வகையில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினரின் வீட்டுக்கு சென்று அவர்கள் மகன் கணேசன் அவர்களை சந்திக்க வாய்ப்பிருந்தும் முடியாமல் போனது நம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை வந்து நிச்சயம் அவர்களை சந்தித்து ஆசிபெற்றுவிடவேண்டும் என்று உறுதி பூண்டோம்.

DSCN2120

குருக்கள் விளக்கை ஏற்றினார். நாம் கொண்டு சென்றிருந்த நமது ஜாதக காப்பியை குருக்களிடம் கொடுத்து, “பிள்ளையார் பாதத்துல வெச்சி அர்ச்சனை பண்ணி கொடுங்க சுவாமி” என்றோம். தொடர்ந்து நாம் வாங்கி சென்ற மலர்ச்சரம் கணபதிக்கு சூட்டப்பட்டு அர்ச்சனை நடந்தது. இறுதியில் குருக்கள் கற்பூர தீபாராதனை காண்பித்தார். அனைவரும் ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

DSCN2136

நாம் நம் வாசகர்களுக்காகவும் அந்த வார பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்களுக்காகவும் வேண்டிக்கொண்டோம்.

நம் பெற்றோர் நமது தேவை ஒன்றை பற்றி (வேற என்ன?) குருக்களிடம் கூறிக்கொண்டிருந்தனர்.

“இவனை நினைச்சு தான் சுவாமி எங்களுக்கு ஒரே கவலையா இருக்கு. ஏன் இப்படி திருமணம் தள்ளிப் போகுதுன்னு தெரியலே…” – ஒரு பெற்றோராக தங்கள் கவலையை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

நம் ஜாதகத்தை பிரித்து பார்த்த குருக்கள், நம்மை பார்த்து “இங்கே வந்து இவரை தரிசனம் பண்ணிட்டீங்க இல்ல… கவலையே படாதீங்க… சீக்கிரமே விவாக ப்ராப்தம் வந்துடும். விவாகத்துக்கு அப்புறம் தம்பதி சமேதரா வந்து பிள்ளையாரை தரிசனம் பண்ணுங்க. முடிஞ்சா முதல் பத்திரிக்கையை இவருக்கு வையுங்க…” என்றார்.

“நிச்சயம் சுவாமி… இவருக்கு முதல் பத்திரிக்கை வைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன கிடைக்க முடியும்?” என்றோம்.

நம் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த பெரியவர் நம்மிடம், நாம் யார், எங்கிருந்து வருகிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், இந்த கோவிலை பற்றி எப்படி தெரியும் போன்ற பிற விபரங்களை கேட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் சொன்னோம்.

DSCN2122

குருக்கள் என்ன நினைத்தாரோ சின்னசாமி ஐயரின் கிரகத்துக்கு மஹா பெரியவா விஜயம் செய்தது பற்றியும் ராமச்சந்திரன் அவர்களுக்கு இந்த இடத்தில் பிள்ளையார் கோவில் கட்ட ஆணையிட்டது பற்றியும் கோவில் எழும்பியதை தொடர்ந்து ஸீதாலக்ஷ்மி அவர்கள் கருத்தரித்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பற்றியும் நமக்கு எடுத்து கூறினார்.

இதை ஏன் இங்கே மறுஒலிபரப்பு பண்றார்? நாம் தான் இதையெல்லாம் பற்றி பேசிவிட்டோமே… வேறு ஏதேனும் புதிய தகவலை கூறக்கூடாதா?” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டோம்.

அடுத்த வினாடி குருக்கள், “மஹா பெரியாவின் அருள்வாக்கால் பிறந்த அந்த கணேசன் வேற யாரும் இல்லே… உங்க பக்கத்துல நிற்கிறாரே அவர் தான்!” என்று கூறி நமது பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரை காண்பிக்க, நமக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Periyava with Natarajar

சந்தோஷம் கலந்த ஒரு அதிர்ச்சியில் உறைந்தோம். அந்த கணம் எங்களுக்குள் எழும்பிய அதிர்ச்சி கலந்த பரவசத்தை விவரிக்க இலக்கியத்தில் கூட வார்த்தைகள் இருக்காது.

“சார்… சார்… நீங்க தானா அந்த அதிர்ஷ்ட குழந்தை… இது தெரியாமலே உங்க பக்கத்துல நின்னுகிட்டு .. இருந்தோமே…. உங்களை சந்திக்க வீட்டு வரவேண்டியது சார். பரிகாரத்துக்கு போய்ட்டு வந்து வேறு ஒருத்தர் கிரஹத்துக்கு போக வேண்டாம் அடுத்த முறை பார்த்துக்கலாம்னு விட்டுட்டோம். ஆனா உங்க கூடவே நாங்க இந்த பிள்ளையாரை தரிசனம் பண்ணினோம் என்றால் அது மஹா பெரியவரின் கருணைதான். இந்த ஆனைமுகனின் அருள் தான் சார். உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்!”

மஹா பெரியவாவின் அருளால் பிறந்த கணேசன் இவர் தான்! இவர் வயது 72!!
மஹா பெரியவாவின் அருளால் பிறந்த கணேசன் இவர் தான்! இவர் வயது 72!!

“நான் தான் அந்த கணேசன். மஹா பெரியவாவின் அருளால் பிறந்தவன்!” என்றார் பணிவுடன் அவர்.

குருக்கள் சொன்னார் : “நீங்க பூ, பழம் வாங்க போனவுடனே இவருக்கு ஃபோன் போட்டேன். இந்த மாதிரி மெட்ராஸ்ல இருந்து சாமிநாதனோட நண்பர் சுந்தர்னு ஒருத்தர் வந்திருக்கார். உங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன். ஆனா அவங்க பரிகாரத்துக்கு போய்ட்டு வந்திருக்குறதாலே யார் வீட்டுக்கும் போகவேண்டாம்னு ஃபீல் பண்றாங்க… நீங்க வேனும்னா வரமுடியுமா?ன்னு கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா இவர் வீட்டுல  இல்லை. மொபைலையும் வீட்டுலேயே வெச்சிட்டு எங்கயே வெளியில போய்ட்டார். சரி நாம கிளம்பி போய் மெயின் ரோட்டுல நிற்போம்… நீங்களும் பூ பழம் அதுக்குள்ளே வாங்கிட்டு வந்துடுவீங்கன்னு மெயின் ரோட்டுல உங்க காருக்காக நின்னுக்கிட்டுருந்தேன். அந்த நேரம் பார்த்து இவர் பஸ்ல இருந்து இறங்கினார். விஷயத்தை சொன்னேன். ‘ஓ…தாராளமா பார்க்கலாமே… நானும் உங்களோட கோவிலுக்கு வர்றேன். கோவில்லை வெச்சே அவங்களை பார்த்துடலாம்’னார். அப்படியே கூட்டிகிட்டு வந்துட்டேன்” என்றார்.

“எல்லாம் அந்த லலிதாம்பிகையோட அருள் தான் சார். கோவிலை அடையாளம் காட்டியது முதல் இவரை அங்கு வரவழைத்தது முதல் எல்லாம் தனது மகனின் உதவியுடன் அன்னை நடத்திய  திருவிளையாடல் தான் இது!” என்றோம்.

நெகிழ்ச்சியில் நமக்கு உள்ளம் உருகி கண்கள் கசிந்தது.

கணபதியின் அருளால் பிறந்த கணேசன் அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இது கனவா நனவா… நம்மை கிள்ளி பார்த்துக்கொண்டோம்.

தொடர்ந்து திரு.கணேசனிடம் பேசிக்கொண்டிருந்தோம். நம்மை பற்றி கேட்டார். நமது உத்தியோகம் பற்றியும் நமது தளத்தை பற்றியும் அதன் நோக்கத்தை பற்றியும் தளம் மூலம் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகள் பற்றியும் கூறினோம்.

DSCN2126

“ரொம்ப நல்ல விஷயம்.. கேட்கவே சந்தோஷமா இருக்கு!” என்றார் கணு.

“உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள் சார்…”

“எங்க தாத்தா பேர் சின்னசாமி ஐயர். அப்பா பேரு ராமச்சந்திரன். அம்மா பேரு சீதாலக்ஷ்மி. மஹா பெரியவரின் அருளானையின் படி புதைந்துகிடந்த அஸ்திவாரத்தின் மேல் 1942 இல் இந்த கோவிலை கட்டினாங்க. நான் 1943 இல் பிறந்தேன். இயற்பெயர் வைத்தீஸ்வரன். பிள்ளையார் கோவில் கட்டி பிறந்ததனால் கணேசன் என்று பெயர் வைத்தார்கள். அது நாளடைவில் கணு என்றாகிவிட்டது. இப்போதும் இந்த ஊரில் கணு என்றால் தான் என்னை தெரியும். நான் தஞ்சாவூர் ஜில்லாவுல ASSISTANT TREASURY ஆபிசரா இருந்து ரிட்டையர் ஆயிட்டேன். ஒரு பையன் ஒரு பொண்ணு.  பொண்ணு ஜெயஸ்ரீ, மருமகன் ரவிசங்கர். பேத்திகள் ஷிவானி, தேஜஸ்வினி. பையன் பேரு பிரசன்ன வெங்கடேசன் மருமகள் கிருத்திகா. பேரன் சர்வேஷ், பேத்தி அமிர்த லக்ஷ்மி.”

“இவனுக்கும் நாங்க கணேஷ்னு தான் பேரு வெச்சிருக்கோம். வீட்டுல இவனை கூப்பிடுறது கணேஷ்னு தான்!” என்றார் அப்பா. (வெளியில தான் நம்ம பேர் சுந்தர். வீட்டுல நம்ம பேர் : கணேஷ்!)

“இதுவரைக்கும் இந்த கோவில் பல வெள்ளங்களை சந்தித்துவிட்டது. அத்தனையும் தாங்கி நின்னுக்கிட்டுருக்கு. காம்பவுண்ட் சுவர் மட்டும் கொஞ்சம் சிதிலமடைந்துவிட்டது!” என்றார் கணு சற்று கவலையுடன்.

குடமுருட்டி ஆற்றிலிருந்து கோவிலின் பக்கவாட்டு தோற்றம்
குடமுருட்டி ஆற்றிலிருந்து கோவிலின் பக்கவாட்டு தோற்றம்

“கோவிலை புனருத்தாரணம் செய்வதை பிறகு பார்த்துக்கொள்கிறோம். இப்போதைக்கு கோவிலில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி, சில சில சிமெண்ட் பூச்சு வேலைகளை செய்து, எலக்ட்ரிகல் பணிகள் செய்து, வெள்ளையடித்து தருகிறோம். அடுத்த மாதம் நண்பர்களுடன் வருகிறோம். உள்ளூரில்  இருந்து நீங்கள் இரண்டு பேரை கூலிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கணு அவர்களிடம் கூறியிருக்கிறோம்.

தானும் இந்த பணியை விரைந்து மேற்கொள்ள விரும்புவதாகவும் நம்முடன் இணைந்து இந்த பணியை செய்வதாகவும் திரு.கணு அவர்கள் கூறினார்.

தண்டபாணி குருக்களுக்கும் கணு அவர்களுக்கும் நமது ‘தினசரி பிரார்த்தனை’ லேமினேஷன் படத்தை பரிசளித்தோம்.

பிரார்த்தனையை படித்து பார்த்தவர், “ரொம்ப பிரமாதமாக இருக்கு. தேங்க் யூ தேங்க் யூ” என்றார்.

தண்டபாணி குருக்கள் அவருக்கு கொடுத்த படத்தை கோவிலின் உள்ளே வைத்தார்.

வெளியே வந்து சற்று பேசிக்கொண்டிருந்தோம். நாம் யாரை தேடிச் சென்றோமோ அவரே நம்முடன் வந்திருந்து ஆனைமுகன் தரிசனத்திலும் பங்கேற்றது நம்மை மகிழ்ச்சியில் கரைபுரளச் செய்தது.

அந்த நேரம் பார்த்து நமக்கு நம் வாசகி ஒருவரிடம் இருந்து அலைபேசி வந்தது. சந்தான ப்ராப்தி வேண்டி நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை சமர்பித்திருந்ததாகவும் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது என்கிற நல்ல விஷயத்தையும் கூறினார். மேலும் தன் தாயாருக்காக ஒரு பிரார்த்தனையை நாம் அன்றைய பிரார்த்தனையில் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். (நாம் அந்த கோவிலில் இருந்தது ஞாயிற்றுக் கிழமை பிற்பகல். அதாவது ஒரு 3.00-4.00 மணியிருக்கும்.)

அடுத்து திருவையாறு ஐயாரப்பறை நாம் தரிசிக்க செல்வதாகவும் பிரார்த்தனை நேரத்தில் (Sunday 5.30 – 5.45 pm) அங்கு தான் இருப்போம் என்றும் மறக்காமல் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினோம். அங்கு கணபதி முன்பாகவும் அவருக்காக வேண்டிக்கொண்டோம்.

தண்டபாணி குருக்கள்
தண்டபாணி குருக்கள்

நாம் இங்கு புறப்படும் முன்னதாகவே இது பற்றி சுவாமிநாதன் அவர்களிடம் கூறியிருந்தோம். சுவாமிநாதன் அவர்களுடன் அவரை பேசவைக்க விரும்பி, திரு.சுவாமிநாதன் அவர்களை நமது அலைபேசியில் தொடர்புகொண்டு விஷயத்தை கூறி, கணு அவர்கள் தற்போது நமக்கருகில் நின்றுகொண்டிருக்கும் விஷயத்தையும் அவர் பேச விரும்பும் விஷயத்தையும், கூறி நமது அலைபேசியை கணு அவர்களிடம் கொடுத்தோம்.

கணு சுவாமிநாதன் அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி கூறினார். சற்று நேரம் பேசிவிட்டு மீண்டும் அலைபேசி நம் கைக்கு வர, எதிர்முனையில் திரு.சுவாமிநாதன் பெரு மகிழ்ச்சியுடன் இருப்பது புரிந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் சுந்தர். சென்னை வந்தவுடனே நான் உங்களை கூப்பிடுறேன்!” என்றார். (அது சமயம் அவர் வெளியூரில் இருந்தார்.)

திரு.கணு மற்றும் திரு.தண்டபாணி குருக்கள் இருவரிடமும் ஆசி பெற விரும்பி கோவிலுக்கு வெளியே, அவர்களை நிற்கச் சொல்லி அவர்கள் காலில் வீழ்ந்து ஆசிபெற்றோம்.

எல்லா வளங்களும் குறைவின்றி பெற்று இருவரும் வாழ்த்தினார்கள்.

கணபதி இருக்க கவலை எதற்கு...
கணபதி இருக்க கவலை எதற்கு…

“நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். நம்மை பொருத்தவரை நம்பிக்கை தான் மூச்சே!! அதாவது அவன் அருள் நமக்கு என்றும் உண்டு என்கிற நம்பிக்கை!” என்றோம்.

“எங்கிருந்தோ இவரை தேடி இங்கே வந்திருக்கீங்க… அவர் உங்களை எப்படி மறப்பார்? இந்த ப்ரஸன்ன மஹாகணபதியின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு! சீக்கிரமே அதை புரிந்துகொள்வீர்கள்!!” என்றார் கணு, அமைதியாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு அமர்ந்து கொண்டிருந்த ப்ரஸன்ன மஹாகணபதியை காட்டியபடி.

(குறிப்பு : இந்த கணபதி வரப்ரசாதி என்பதால் இந்த கோவிலுக்கு நாம் செய்யவிருக்கும் கைங்கரியத்தில் நண்பர்கள் நம்முடன் வந்திருந்து பங்குகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை. எண்ணம் தான் முக்கியம். எத்தனை பேர் வந்தாலும் சந்தோஷம். அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை இதற்கான பயணம் இருக்கும். தேதியை இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்துவிடுவோம்.  சனிக்கிழமை இரவு புறப்பட்டு நடுக்காவேரி சென்று ஞாயிறு காலை 8.00 மணி முதல் மலை 4.00 மணிக்குள் அனைத்து பணிகளையும் இங்கு முடித்துவிட்டு மாலை அப்படியே திருவையாறு சென்று அங்கு ஐயாரப்பரையும் வேறு சில கோவில்களையும் தரிசித்துவிட்டு அன்றிரவு சென்னை திரும்பலாம். வரவிருப்பமுள்ள நண்பர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அநேகமாக பஸ் அல்லது ட்ரெயின் பயணமாகத் தான் இருக்கும்.)

[END]

12 thoughts on “நடுக்காவேரி மகாகணபதி தரிசனம் – பிள்ளையை பார்க்க வழி காட்டிய அன்னை!

  1. அன்புள்ள கணேஷ் (எ) சுந்தர் சார் வணக்கம்.
    வியக்க வைக்கும் ஒரு பதிவை தந்ததற்கும், நடுகாவேரி கோவிலில் எல்லோருக்காகவும் பிரார்த்தனை பண்ணியதற்கும் மிக்க நன்றி.
    நீர் இல்லாவிட்டாலும் ஒரு ஓடை போல ஓடினாலும் கூட காவிரி அழகு தான்.
    லலிதாம்பாள் அவர்கள் உருவத்தில் அந்த அம்மனே தான் வந்து வழிகாட்டினார்கள்.
    கண் கண்ட தெய்வத்தின் அருளால் பிறந்த அந்த குழந்தை அத்தனை நேரமும் உங்களுடனே இருந்தது உங்களுக்கு தெரியவில்லை. விபரம் கேள்விப்பட்டவுடன் படிக்கும் எங்களுக்கே பிரமிப்பு தாளவில்லை.
    உங்களுக்கு கணேசன் அவர்களை அறிமுகபடுத்தி மிக பெரிய ஆச்சிரியத்தையும் சந்தோசத்தையும் மட்டுமல்ல அவரின் ஆசிர்வததையும் மகா பெரியவா அவர்கள் கொடுத்துள்ளார்.
    மிக பெரிய புண்ணியம் செய்து இருக்கீங்க.
    உங்களை விட நம் பெற்றோர் மிகவும் புளகாங்கிதம் அடைந்து இருப்பார்கள்.
    இந்த மாதிரி அதிசயம் அவரை அன்றி வேறு யாரால் நடத்த முடியும்.
    நடராஜ படம் கண்களை கொள்ளை கொள்கிறது.
    நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் துணை நிற்க நம் வாசகர்கள் எப்போதும் உங்களுடன் உண்டு.
    எல்லாம் அவன் செயல்.
    பிரமிப்பு தரும் ஒரு பதிவு தந்ததற்கு நன்றி சார்.

  2. டியர் சுந்தர்ஜி,

    Presentation of this article is really wonderful. நீங்கள் போன வாரம் தான்” மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே” பாட்டு publish பண்ணினீர்கள். உங்களுக்கு வழிகாட்டியாக வந்தது அந்த லலிதாம்பிகையே. கட்டுரை பாதி படித்து கொண்டிருக்கும் பொழுது, மகா பெரியாரின் அருள்வாக்கால் பிறந்த திரு கணேசன் அவர்களை நீங்கள் சந்திக்காமல் விட்டீர்களே என்று எண்ணினேன். அந்த மகா பெரியவரே நீங்கள் திரு கணேசனை சந்திக்க உதவி இருக்கிறார். மகா பெரியவரின் அருளால் நீங்கள் அவரை சந்தித்தது நீங்கள் செய்த மிக பெரும் பாக்கியம். திரு கணேஷ் (சுந்தர்) அவர்களே, உங்கள் கல்யாண கனவு வெகு விரைவில் நிறைவேரும் . முதல் பத்திரிக்கையை அந்த பிள்ளையாருக்கு சமர்ப்பித்து விடுங்கள்.

    //(குறிப்பு : இந்த கணபதி வரப்ரசாதி என்பதால் இந்த கோவிலுக்கு நாம் செய்யவிருக்கும் கைங்கரியத்தில் நண்பர்கள் நம்முடன் வந்திருந்து பங்குகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை. எண்ணம் தான் முக்கியம். எத்தனை பேர் வந்தாலும் சந்தோஷம். அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை இதற்கான பயணம் இருக்கும். தேதியை இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்துவிடுவோம். சனிக்கிழமை இரவு புறப்பட்டு நடுக்காவேரி சென்று ஞாயிறு காலை 8.00 மணி முதல் மலை 4.00 மணிக்குள் அனைத்து பணிகளையும் இங்கு முடித்துவிட்டு மாலை அப்படியே திருவையாறு சென்று அங்கு ஐயாரப்பரையும் வேறு சில கோவில்களையும் தரிசித்துவிட்டு அன்றிரவு சென்னை திரும்பலாம். வரவிருப்பமுள்ள நண்பர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அநேகமாக பஸ் அல்லது ட்ரெயின் பயணமாகத் தான் இருக்கும்.) //
    we are very much interested to participate. We will let you know and confirm through mail.

    ””ஷீக்ர விவாக ப்ராப்தி ரஸ்து ”’

    நன்றி

    உமா

  3. உண்மையிலேயே ஆத்மா திருப்தி தந்த ஒரு பதிவு. இதை வெறும் பதிவு என்று மட்டும் சொல்லிவிடமுடியாது, இது ஒரு அற்புதமான அனுபவம். பாரத நாடு ஒரு புண்ணிய பூமி என்பதற்கு இது போன்ற அனுபவங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

    சுந்தரைபோல் உண்மையான பக்தியுடன் மற்றவர்களுக்கு நன்மை நடக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் இருந்தால் நிச்சயம் இறைவனின் ஆசீர்வாதம் நம் எல்லோருக்கும் உண்டு.

    எல்லாம் காஞ்சி மகாபெரியவாளின் அருள்!

    1. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
      அதை பெற்றுத் தந்த பெருமை குருவுக்கே!!
      நன்றி.
      – சுந்தர்

  4. மிகவும் அருமையான பதிவு.படிக்க படிக்க நம்மையும் அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது.

  5. வணக்கம் சுந்தர் சார் ,

    மிகவும் அற்புதமான பதிவு

    nandri

  6. மிக நல்ல அனுபவ பகிர்வு சுந்தர். வாழ்க்கையை வாழ வேண்டிய விதத்தில் வாழ்பவர் நீங்கள் என்பது மிகத் தெளிவாக உங்களின் எண்ணத்திலும் எழுத்திலும் தெரிகிறது . என் குரு எப்பொழுதும் உங்களை ஆசிர்வதித்து கொண்டிருப்பார் .

    நன்றி

  7. கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே

  8. அந்த மகபெரியவாவின் ஆசியாலும் இந்த ப்ரஸன்ன மஹாகணபதியின் அருளாலும் சீக்கிரமே உங்களின் முதல் திருமனபத்திரிகையை இந்த தளத்தில் சமர்பீர்கள்…
    .
    கோவிலுக்கு சென்று அந்த இறைவனை தரிசிக்கவும் உழவரபணி செய்யவும் மிகவும் அவளோடு காத்திருக்கிறோம்

    மாரீஸ் கண்ணன்

  9. பணி சுமை காரணமாகவும் ,என்னுடைய login id .net block செய்யப்பட்டதின் காரணமாகவும் ,சைட் பக்கம் வரமுடியல மன்னிக்கவேண்டும் ஜி …

    இந்த பதிவின் முதல்பாகம் படித்தது முதல் எனக்கும் அந்த ஆலய தரிசனம் ஆவல் ஈர்க்கப்பட்டு தவிக்கிறேன் .எல்லாம் காஞ்சி மகாபெரியவாளின் அருள் மூலம் நடக்கும் .

    \\நடுக்காவேரிக்கு சென்றபிறகு குறிப்பிட்ட அந்த கோவிலை கண்டுபிடிக்கமுடியவில்லை. விசாரித்ததில் அந்த பகுதியில் எவருக்கும் தெரியவுமில்லை.\\

    \\நான் அக்ரஹாரத்துல தான் இருக்கேன். பேரு லலிதாம்பாள்!” என்றார் \\.

    \\“எல்லாம் அந்த லலிதாம்பிகையோட அருள் தான் சார். கோவிலை அடையாளம் காட்டியது முதல் இவரை அங்கு வரவழைத்தது முதல் எல்லாம் தனது மகனின் உதவியுடன் அன்னை நடத்திய திருவிளையாடல் தான் இது!” என்றோம்.

    நெகிழ்ச்சியில் நமக்கு உள்ளம் உருகி கண்கள் கசிந்தது.\\

    \\ கணபதியின் அருளால் பிறந்த கணேசன் அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இது கனவா நனவா… நம்மை கிள்ளி பார்த்துக்கொண்டோம்.\\

    ””””“இவனுக்கும் நாங்க கணேஷ்னு தான் பேரு வெச்சிருக்கோம். வீட்டுல இவனை கூப்பிடுறது கணேஷ்னு தான்!” என்றார் அப்பா. (வெளியில தான் நம்ம பேர் சுந்தர். வீட்டுல நம்ம பேர் : கணேஷ்!)\\

    இப்பதான் தெரிகிறது ஏன் இந்த கணேசனை “அந்த கணேஷ் ஏன் follow கூப்பிட்டார்னு “……

    நிச்சயம் நம் தல வாசகர்களுடன் அந்த ஆலயத்தினை சீரமைத்து பலனடைவோம் .

    வாழ்த்துகளுடன்
    -மனோகர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *