Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > “இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

print
ஹா பெரியவா அவர்கள் மேல் நம் வாசகர்களுக்கு பேரன்பும் அளவிடமுடியாத பக்தியும் இருப்பது நமக்கு தெரியும். ஒரு சிலருக்கு சில பல காரணங்களினால் சில சந்தேகங்கள் இருப்பதும் நமக்கு தெரியும். அது பற்றி தனியாக ஒரு பதிவெழுதி நாம் இயன்றளவு  தெளிவுபடுத்திவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள இந்துமதம்’ நூலை தற்செயலாக படித்துக்கொண்டிருந்தோம். அந்நூலில் மஹா பெரியவரை பற்றி பல இடங்களில் கவியரசு கண்ணதாசன் சிலாகித்து எழுதியிருப்பதை கண்டு அகமகிழ்ந்தோம்.

நாம் எம் குருவிடம் வேண்டிக்கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான். “ஸ்வாமி…உங்கள் அருமையோ பெருமையோ தெரியாத எவரிடமும் தயை கூர்ந்து என்னை சேர்ப்பித்துவிடாதீர்கள். அவர்கள் மீது எனக்கு ஈடுபாடு வருமாறு செய்துவிடாதீர்கள்!” என்பதே அது.

(இதை இன்றளவும் என் குரு நிறைவேற்றி வருகிறார் என்பதே அவர் கருணைக்கு சான்று. வடலூரிலிருந்து பாரதி விழாவிற்கு வருவதாக இருந்த சிறப்பு விருந்தினர் ஒருவர் வர இயலாத சூழ்நிலை ஏற்பட, திரு.வீ.கே.டி. பாலன் அவர்களை கடைசி நேரத்தில் பேசி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் பெற்றோம். பாலன் அவர்களின் மனிதநேயமும், இறை நம்பிக்கையும் நமக்கு நன்றாக தெரிந்தது என்றாலும், நம் குருவை பற்றி இவருடைய கருத்து என்னவாக இருக்கும்? அவரை இவர் ஏற்றுக்கொண்டிருக்கிறாரா?” என்றெல்லாம் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு காரணம் இருக்கிறது. மஹா பெரியவரை பற்றிய துவேஷ கருத்துக்களை பலர் அராயாமலே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், வீ.கே.டி.பாலன் அவர்களுக்கு மஹா பெரியவா மேல் மிகுந்த மதிப்பும் பக்தியும் இருப்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் தெரிந்துகொண்டோம். அகமகிழ்ந்தோம். ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். அது எந்த சூழ்நிலை? என்ன நடந்தது ? வேறொரு பதிவில் பார்ப்போமே…!)

Back to Kannadasan….

நாத்திக கருத்துகளில் புரையோடிபோய், நித்தம் கடவுள் மறுப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த கண்ணதாசன் அவர்கள் ஆன்மீகத்தின் பாதைக்கு திரும்பியதும் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ உள்ளிட்ட பல அழியாப் புகழ் பெற்ற காவியங்களை படைத்ததின் பின்னணியிலும் மஹா பெரியவா தான் இருந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

(Check : கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!)

நாம் பக்தி செய்து ஒழுகும் குருவின் மேல், நமக்கு மிகவும் பிடித்த ஒரு சரித்திர புருஷனுக்கும் பக்தியும் அன்பும் இருந்தது கண்டு மெய்சிலிர்த்தோம் அகமகிழ்ந்தோம். ஏனெனில், வள்ளுவர், விவேகானந்தர், பாரதிக்கு அடுத்து கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு தான் நாம் அதிகம்  மதிப்பளிக்கிறோம்.

மஹா பெரியவா அவர்கள் மேல் பக்தி செலுத்துவது குறித்து இப்போது சிலருக்கு இருக்கும் சந்தேங்கள் அப்போதும் இருந்துள்ளது. அவற்றுக்கெல்லாம் கவியரசர் மிக மிக அற்புதமாக விளக்கமளித்திருக்கிறார்.

“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், இந்து மதம் என்றால் என்ன?” என்று கேட்டால் “மஹா பெரியவர்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் என்று கண்ணதாசன் கீழ் கண்ட கட்டுரையில் கூறியிருப்பதை கவனியுங்கள். இதை அவர் சொன்ன ஆண்டு 1973. தற்போது நடப்பது 2013. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்.

கவிஞன் வாக்கு பொய்க்காது அல்லவா..! இல்லையெனில், தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி பொழுதை போக்கிக்கொண்டிருந்த எமக்கு மஹா பெரியவா அவர்கள் மேல் ஈடுபாடு வந்து இன்று அவரை பற்றி பதிவு எழுதிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? சற்று யோசித்துப் பாருங்கள்.

ஒருவேளை எம் முற்பிறப்பில் குரு நடந்து சென்ற பாதையில் ஊறிய எறும்பாக இருந்திருப்போமோ என்னவோ… இல்லையெனில், சம்பந்தமேயில்லாமல் எமக்கு அவர் மேல் ஈடுபாடு வரக்காரணம் என்ன?

உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக்கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதைவிட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.

(மஹா பெரியவா ஒரு முறை, (1973) தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிக்கொண்டிருந்தார். ஆச்சயம் அவர் எழுதிய அத்தியாயம் இது.)

=========================================================

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே!

க்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.

அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார்.

Kannadasan_abt Mahaperiyavaஇந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல்  போய்க் கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.

தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது .

பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.

முதிர்ந்த ஞானிகள்  யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள்..

அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.

ஒரு ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

”இது  என்ன  பார்வை? ஆற்றில் வெறும் தண்ணீர் தான் ஓடுகிறது” என்று எண்ணினான் மற்றொருவன்.

ஆனால் ஆற்றைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றிற்று?

‘ஆறு என்ற ஒன்று ஆண்டவனால் படைக்கப்படவில்லை.  வெறும் நீரை மட்டுமே இறைவன் படைத்தான்.  அது ஆறாக உருக்கொண்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக் கொண்டது. மனிதருக்கில்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறதே’ என்று வியந்தானாம்.

சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை.

உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.

அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார்.

அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று.

அது ஆன்ம யாத்திரை.

நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.

அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.

ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை.

முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப்  பாதுகாக்கிறது.

Maha periyava padha yatra
காலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்துகொண்டிருந்தபோது…!

மகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக  நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது.

கங்கை நதியில்  எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப்  பட்சி பனித்துளியைத் தான் நாடுகிறது.

சில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன.

சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.

மகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது.  பசுமையானது.

இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன.

லௌகிகவாதிக்கு இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன.

உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.

அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள்.

அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.

லோகயாத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது.

மகா யோகம் மலர்கள் தூவுகிறது.

மகாராஜக்களுக்கு  இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது.  அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை.  அங்கி போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தொஷப்பட்டார்களாம் .

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல.  பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண்  பேரொளி.

அவரது பெருமை இப்போது தெரியாது.  இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால்  என்ன?” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது  நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது.

கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.

செஞ்சி கோட்டைக்குப்  போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல.

காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.

ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரளுகிறது.

இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.

தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.

பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.

ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.

மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.

பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.

யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.

ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.

அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை.

அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.

அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

(நன்றி : கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எட்டாம் பாகம்)

=========================================================

[END]

11 thoughts on ““இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

  1. சகோதரா,
    இந்த பதிவு உங்கள் பதிவுகளில் ஒரு மாணிக்கம் என்றால் அது மிகை அல்ல….மஹா பரியவாளைப் பற்றி என்னும் போதே மெய் சிலிர்க்கும்…படத்தைப் பார்க்கும் போதோ…மகிழ்ச்சி துள்ளும்…அவரைப் பற்றி படிக்கும் போதோ கண்ணில் தரை தாரையாய் கண்ணீர் பெருகும்…அந்த சமயங்களில் எழும் உணர்சிகளை வார்த்தைகளில் வர்ணிப்பது மிகக் கடினம்….சகோதரா….மேற்கூறிய அணைத்து உணர்வுகளுடன்….உடல் நடுங்கியது…சிலிர்த்தது…நானும் தற்போது கவியரசுவின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கின்றேன்….என்ன ஒரு பொருத்தம்….உண்மை தான்…மனிதர்கள் நமக்கு இருக்கும் பொது ஒன்றின் அருமை தேராது..இழந்த பின்னர் வருந்துவோம்…ஆனால் இம் மகான் நம்மை விட்டு அகலவில்லை…நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வழியாக…வாழ்க வளமுடன்…இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்…
    _/\_

  2. excellent சுந்தர் சார்.
    அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கண்ணதாசன் அவர்கள் எழுதிள்ள எல்லா வரிகளும் அருமை.
    எனக்கு தெரிந்து ஆன்மிகத்தில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் எல்லோருமே மகா பெரியவர் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
    அவரின் கருணை மிக வாய்க்கபட்டவர்கள்.
    உங்களின் எழுத்துக்களை படிப்பதால் எங்களை போன்ற எளியோரும் அவர் பெருமை பற்றி தெரிந்துகொள்ளமுடிகிறது.
    மகா பெரியவர் அவர்கள் வெறும் காலுடன் யாத்திரை செல்லும் போது என நீங்கள் வெளியுட்டுள்ள படம் அரிதினும் அரிதானது.
    மிகவும் நன்றி. வணக்கம்.

  3. சுந்தர்ஜி
    நாடங்கும் உள்ள சங்கர பீடங்களில் மகாபெரியவாவின் 19 வது ஆராதனை விழா(29.12.2013) நடைபெற்று இருக்கும் இந்த வேளையில் மகிமைமிக்க மஹா பெரியவாவை பற்றி படிப்பதற்கு எங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருடைய பல மகிமைகளை படித்தாலும் மீண்டும் மீண்டும் அவர் அருளைப்பற்றி படிப்பதில், கேட்பதில் அவ்வளவு சுகம். எது ஏதோ நிகழ்ந்து கடைசியில் அவரிடம் நாம் அனைவரும் சரணாகதி அடைய நாம் எல்லோரும் பூர்வத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருப்போம் என நினைக்கிறேன்.
    இருந்தாலும் நேரடியாக பார்த்தவர்கள் குரு மகானை பற்றி எழுதி இருப்பதை படிக்கும்போது, அவர் வாழ்ந்த காலத்தில் அவரை நேரில் பார்க்கமுடியவில்லை என்று மிகவும் வருத்தபடுவேன். என் சகோதரன்(அவரின் மகிமை தெரியாத வயது) கூட அவரின் கடைசிகாலத்தில் ஆசி பெற்று திருப்பாவை புத்தகம் பெற்று வந்துள்ளான்.

    நம் தளத்தின் மூலம் தங்கள் வார்த்தைகளின்படி அவர் அதிர்ஷ்டானம் சென்று பாதுகா பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாக கருதிகிறேன். இன்று இந்த பதிவினை படிக்கும்போது அந்த பூஜையும் அதிஸ்டானமும் என் நினைவில் நின்றாடுகிறது. நம் தள வாசகர்கள் எல்லோருக்கும் அவரின் ஆசி கிடைத்து அனைவரும் வாழ்வில் வளம் பெற வேண்டும்.
    நன்றி

  4. புத்தாண்டை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், 2013ம் வருடத்தின் கடைசி நாளில் மஹா பெரியவாளைப் பற்றிய அதுவும் கவியரசர் கண்ணோட்டத்தில் உள்ள இந்தப் பதிவு மிக மிக அற்புதம்.
    இந்தத் தொகுப்பினை நமக்கு அளித்த மாமனிதர் சுந்தர்ஜிக்கு நன்றி நன்றி நன்றி.

    வாழக வளமுடன்
    அன்பே சிவம்.

  5. நண்பரே, அருமையான பதிவு. அற்புதமான கருத்துகள். குருவை பேசுவதே புண்ணியம். அவர் தாழ் பணிவதே வாழ்வின் அர்த்தம். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  6. காஞ்சி மகாபெரியவர் நடந்து வரும் அழகை பாருங்கள். மானிட உள்ளத்தில் உள்ள இருள் அகற்ற வரும் ஞான சூரியன் போல் உள்ளார்.
    அந்த நடையில் உள்ள கம்பீரத்தை பாருங்கள். யாம் இருக்க பயமேன் என்பது போல் உள்ளது.

    ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர.

  7. சுந்தர்ஜி
    புத்தாண்டின் ஒரு முத்தாய் உங்கள் பதிவு.
    மகா பெரியவர் தான் வாழ்ந்த காலத்தில் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல. ஏன் தற்போது கூட அவரது ஆத்யந்த பக்தர்களின் வாழ்வில் அவர் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு குறைவே இல்லை.

    தன்னை சந்திக்க வரும் எத்தனையோ பேருக்கு தன்னுடைய புண்ணியத்தின் பலன்களை வழங்கி அவர்களின் கர்மவினைகளை உடைத்தெறிந்து நல்லது நடக்க வைத்தவர் மகா பெரியவர்.
    இதுபோல் நம் மகா பெரியவர் அவர்களை பத்தி கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பதை கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
    “கவியரசுவின் அர்த்தமுள்ள இந்து மதம்” நாம் சந்ததியர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

    இந்த புத்தாண்டு அனைவருக்கும் இனிதாய் அமைய மகா பெரியவா
    அவர்களை அன்புடன் அவர்தாள் வணங்கி வேண்டுகிறேன்.
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
    நன்றி

  8. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றினை
    பற்றுக பற்று விடற்கு – திருக்குறள்

    “குருவருளே திருவருள்”

  9. அன்பு சார்,

    உங்கள் பதிவை நான் தாமதமாகத் தான் பார்த்தேன். இருப்பினும் ஒரு உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். கடந்த 29 டிசம்பர் அன்று கும்பகோணத்தில் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். அன்று அவர் பேசியது மகா பெரியவரை பற்றித்தான். இந்த பதிவை படித்தவுடன் பெரியவரின் மகிமை புரிந்தது. நன்றி.

  10. மதிப்புக்குரிய அனைவருக்கும்,

    மஹா பெரியவளைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள மற்றும் படித்து அனுபவிக்க face book இல் sri sri sri maha periyava சென்று படித்து பாருங்கள் . நீங்கள் பிறவி பயனை அடைந்தவர்கள் ஆவீர்கள். யாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருக்கிறேன், தெய்வத்தின் குரல் வாங்கி படியுங்கள்.

  11. சுந்தர்ஜி

    மகாபெரியவா பதிவு மிக அருமையாக உள்ளது

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை

    வாழ்க வளமுடன்

    ஜெயந்தி

Leave a Reply to S.JAYENTHE Cancel reply

Your email address will not be published. Required fields are marked *