Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > தேடி வந்த ராஜா… பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா? கிருஸ்துமஸ் ஸ்பெஷல்!

தேடி வந்த ராஜா… பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா? கிருஸ்துமஸ் ஸ்பெஷல்!

print
Ramakrishna Paramahamsa_வ்வுலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

அவரை நினைவு கூறி, கிருஸ்துமஸ் சிறப்பு பதிவை அளிக்கிறோம்.

கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

மக்களை தேடி வந்த மன்னன்!

ஓர் அரசன் ஒருமுறை தம் நாட்டு மக்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்து, அவர்களுடைய கவலைகளையும் பிரச்னைகளையும் நீக்க விரும்பினான். இதற்காகப் பொது இடமொன்றில் தாம் அமரப் போவதாகவும் தர்பாரில் கூறினான்.

இச்செய்தி நாட்டு மக்களுக்குத் தண்டோரா போட்டுத் தெரிவிக்கப்பட்டது. அரசன் ஒரு மரத்தடியை இதற்காகத் தேர்ந்தெடுத்தான். அங்கு அவரை
யார் வேண்டுமானாலும் சந்தித்துக் குறைகளைச் சொல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசன் உட்கார்ந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய குடில்கள் அமைத்து, அவற்றில் உணவுப் பண்டங்கள் துவங்கி நகைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. ‘யாருக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்; அனைத்தும் இலவசம்!’ தன் இருக்கையில் அமர்ந்தபடி நடப்பதை கவனித்தான் மன்னன்.

ஆனால், யாரும் அவனைத் தேடி வரவில்லை. தங்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளிக்கொண்டுப் போக குடில்களை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களுள் ஒரு வாலிபன் மட்டும் அரசனிடம் வந்தான். அரசன் அவனைப் பார்த்து, ‘‘இங்கு இருக்கும் இலவசப் பொருட்களில் நீ எதையும் எடுத்துக் கொள்ளவில்லையா?’’ என்று கேட்டான். அதற்கு அவன், ‘‘அரசே என்னுடைய நோக்கம் உங்களைக் காண்பதுதான். எனக்கு நீங்கள் தரும் பொருள் ஒரு பொருட்டல்ல; மாறாக நம் குடிமக்களின் நல்வாழ்வுக்காக நான் ஓரிரு திட்டங்களைத் தங்கள் முன் சமர்ப்பிக்கத்தான் வந்துள்ளேன்!’’ என்றான். அதைக் கேட்டு மனமகிழ்ந்தான் மன்னன்.

தன்னைவிட பொருள் மீது பற்றுக்கொண்டு ஓடும் மக்களுள் இப்படியும் ஓர் இளைஞன்! இவனும் அந்த மக்களுடைய நலனுக்காகத் தன்னிடம் பேசவே வந்திருக்கிறான். தனக்கென்று எதையும் இவன் கோரிப் பெற விரும்பவில்லை! உடனே, ‘‘நீதான் இனி என் வாரிசு. என் அனைத்துச் சொத்துகளுக்கும் சொந்தமானவன்’’ என்று சொல்லி அவனைக் கட்டித் தழுவினான். ஆக…. தேடிவந்த ராஜாவிடம் பயன் பெற்றவர் ஒருவர் மட்டுமே!

சுயநலத்தை களைதலே இறைவனின் அருளை பெற மிக எளிய வழி!

Jesusஇயேசு கிறிஸ்துவும் இதையேதான் கூறியுள்ளார். ‘‘சொர்க்கத்தின் ராஜ்யத்தை முதலில் தேடுங்கள். மற்ற அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும்.’’

‘‘உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள்; இற்றுப் போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்குதான் உங்கள் உள்ளமும் இருக்கும். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’’ என்றார். அப்பொழுது பேதுரு, ‘‘ஆண்டவரே நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா அல்லது எல்லாருக்குமா?’’ என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், ‘‘தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?

தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியை செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவருடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.

ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடி வாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்’’ என்றார். (லூக்கா 12: 33-48)

நெஞ்சம் தூயதாய் இருக்க வேண்டும். அது திண்ணியதாயும் இருக்க வேண்டும். இல்லையேல் சொல்லும் செயலும் மாறுபடும். சிலர் நல்ல எண்ணத்தோடு சொல்வார்கள். நெஞ்சில் உரம் இல்லாததால் நிலை கலங்குவர். வாக்களித்தபடி நடக்க மாட்டார்கள். சொன்ன சொல்லுக்கு மாறுபட நடப்பவர் சிறந்த மனிதர் ஆகமாட்டார். எவரையும் தாழ்த்திப் பார்க்காதீர்கள். இந்த உலகத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் கிடையாது. அதேபோல் இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்களும் கிடையாது.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு துறையில் கொஞ்சம் தெரியும். அது நமக்குத் தெரியாததாக இருக்கும். அவர் சமூகத்தில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் சரி, அவரிடம் நாம் கற்க வேண்டிய ஒன்று இருக்கும். அதைக் கற்க முயற்சி செய்வோம். இதை அன்றாட ஒரு முயற்சியாகக் கொள்வோம். திறந்த மனதோடு எவரையும் அணுகுவோம். எப்பொழுதும் ஒரு அசாதாரண ஆற்றல் படைத்தவர்களைக் கண்டால் அவரிடம் நமக்குக் கற்பதற்கு ஒன்று இருக்கிறது என்பதை நம்புவோம். அப்படி ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்பொழுது நாம் ஏதாவது கற்று சந்திப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோமா என்று நம்மையே கேட்டுக் கொள்வோம். அல்லது சந்திப்பை வீணாக்கி விட்டோமா என்றும் கேட்டுக் கொள்வோம். இந்த உலகத்தில் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

(நன்றி : ‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ | தினகரன் ஆன்மீக மலர்)

[END]

 

6 thoughts on “தேடி வந்த ராஜா… பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா? கிருஸ்துமஸ் ஸ்பெஷல்!

  1. கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    -மனோகர்

  2. சுந்தர்ஜி,
    கிறிஸ்து பிறந்த நாளான இன்று ஒரு அருமையான பதிவு அனைவருக்கும். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தேவனின் கிருபையும் நம் தளத்தில் பொங்கி வழியட்டும் இன்னாளில். ஈசனும் ஏசுவும் ஒன்றே என்ற கருத்து எப்போதும் எனக்குண்டு. மஹா பெரியவா கூட ஒரு சமயம் இதற்கு ஒரு நல்ல விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதாவது ஜீசஸ் கிரிஸ்ட் என்பது ஈசனும் (இயேசு) கிருஷ்ணனும் (கிரிஸ்ட்) இணைந்த வடிவம் என்று சமிபத்தில் எங்கோ நெட்டில் படித்தேன்.

    தள வாசகர்கள் அனைவருக்கும் இனிமையான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இன்னாளில் அனைவரும் நலம் பெற வேண்டிகொள்வோம். நன்றி

  3. சுந்தர்ஜி
    நம் தளம் சார்பாக கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! –

    சுயநலத்தை களைதலே இறைவனின் அருளை பெற மிக எளிய வழி! சூப்பர்

  4. டியர் சுந்தர்ஜி

    கதை மிக அருமை. கற்றது கை அளவு. கல்லாதது உலகளவு . பதிவிற்கு மிக்க நன்றி. Belated chirstmas wishes .

    ///ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு துறையில் கொஞ்சம் தெரியும். அது நமக்குத் தெரியாததாக இருக்கும். அவர் சமூகத்தில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் சரி, அவரிடம் நாம் கற்க வேண்டிய ஒன்று இருக்கும். அதைக் கற்க முயற்சி செய்வோம். இதை அன்றாட ஒரு முயற்சியாகக் கொள்வோம். திறந்த மனதோடு எவரையும் அணுகுவோம். எப்பொழுதும் ஒரு அசாதாரண ஆற்றல் படைத்தவர்களைக் கண்டால் அவரிடம் நமக்குக் கற்பதற்கு ஒன்று இருக்கிறது என்பதை நம்புவோம். அப்படி ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்பொழுது நாம் ஏதாவது கற்று சந்திப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோமா என்று நம்மையே கேட்டுக் கொள்வோம். அல்லது சந்திப்பை வீணாக்கி விட்டோமா என்றும் கேட்டுக் கொள்வோம். இந்த உலகத்தில் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.//

    நன்றி
    உமா

  5. அன்பும், கருணையும் வாழ்வின் அழியாச்செல்வம்,இதுதான் ஏசுவின் இனிய போதனை. வாழ்வில் இதை கடைப்பிடித்து நடப்பது நம் கடமை
    பாரிஸ் ஜமால் -நிறுவனத்தலைவர், பிரான்சு தமிழ் சங்கம், பாரிஸ்

Leave a Reply to radhamani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *