Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

print
பிறந்தநாளன்று நங்கநல்லூர் நிலாச்சாரலில் உள்ள பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்து நாமும் அவர்களுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசை இருந்தது. காலை ஹோமம் முதலானவைகளை ஏற்பாடு செய்திருந்தபடியாலும் மதியம் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததாலும் இரவு டின்னர் அவர்களுடன் சாப்பிடுவது என்று முடிவானது. அது தான் எனக்கும் சௌகரியம். அலுவலகம் முடிந்து நேரே நங்கநல்லூர் செல்வதற்கு சௌகரியாமாய் இருக்கும்.

இதையடுத்து நிலாச்சாரலில் 26 நவம்பர் செவ்வாய் இரவு டின்னர் ஸ்பான்ஸர் செய்துவிடுவதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்துவிடுமாறும் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

“என்ன விசேஷம் அன்னைக்கு?” என்றார்.

நம் பிறந்தநாள் விபரத்தை கூறினேன். வாழ்த்துக்கள் கூறியவர்… “எல்லாம் அரேன்ஜ் பண்ணிடுறேன். நீங்கள் நிச்சயம் நிலாச்சாரலுக்கு அன்னைக்கு வந்தாகனும்” என்று அன்புக்கட்டளையே இட்டார். (சிலர் உணவை ஸ்பான்சர் செய்தாலும் நேரில் வரமுடியாமல் போய்விடுவதுண்டு.)

இதற்கிடையே மாலை ஒரு 5.30க்கு தம்பி குட்டி சந்திரனிடம் இருந்து ஃபோன்.

“சார்…. எத்தனை மணிக்கு வீட்டுக்கு கிளம்புவீங்க?”

“ஒரு 7.00 மணிக்கு. ஏன்பா?”

“ஒண்ணுமில்லே…உங்க ஆபீஸ் கிட்டே நாம வழக்கமா சந்திக்கிற இடத்துல வெயிட் பண்ணுங்க… நான் வந்துடுறேன்…”

“ஏன்… என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லே… வந்து சொல்றேன்…”

சஸ்பென்ஸ் வைத்தபடி குட்டி சந்திரன் போனை வைத்துவிட… சரியாக அலுவலகம் முடிந்து 7.00 மணி வாக்கில் குட்டி சந்திரனை சந்தித்தேன்.

என் பைக்கில் ஏறி உட்கார்ந்தவர், “நேரே ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்ட் போங்க…”

என்ன எதுவும் புரியலியே….

ஒன்றும் பேசாமல் ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்ட்டுக்கு வண்டியை விட, அங்கே கேட் அருகே உள்ள, நம் நண்பர் ஹரிஹரசுதன் காத்திருந்தார்.

“ஹேப்பி…. பர்த்டே அண்ணா…” என்று சொல்லி, ஒரு சிறு அன்பளிப்பை தந்தார்கள்.

“எதுக்குப்பா.. இதெல்லாம்? உங்க அன்பு ஒன்றே போதும் என்கிற போது இதெல்லாம் எதுக்கு?”

“அண்ணா.. இதை தனிப்பட்ட ஹரியாவோ சந்திரனாவோ நாங்க செய்யலே… ரைட் மந்த்ரா ரீடர்ஸ் சார்பா இதை செய்றோம்” என்றார். (பய புள்ளைங்க… என்னமா பேசுதுங்க!)

DSC06119

“உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டே இதை ஏற்றுகொள்கிறேன்!”

நிலாச்சாரல் மாணவிகள் ஞாபகத்துக்கு வந்தார்கள். அம்மாணவிகளுடன் டின்னர் சாப்பிட சென்றுகொண்டிருக்கும் விஷயத்தை கூறி, இவர்களையும் என்னுடன் நிலாச்சாரல் வருமாறு கேட்டுக்கொண்டேன்.

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் நம்முடன் இரண்டு நண்பர்கள் வரும் விஷயத்தை சொன்னேன்.

“ஒன்னும் பிரச்னையில்லே… எக்ஸ்ட்ரா நாலு பேர் வந்தாலும் ஓ.கே. சாப்பாடு எக்ஸ்ட்ரா தான் சொல்லியிருக்கேன்” என்றார்.

அடுத்து நந்தனம் ஓய்.எம்.சி.ஏ.விலிருந்து நிலாச்சாரல் பயணம். முக்கால் மணிநேரத்தில் நங்கநல்லூர் சென்றுவிட்டோம்.

ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மதியம் பேசும்போது மாணவிகளுக்கு என் தனிப்பட்ட செலவில் குடை வாங்கித் தரவிரும்புவதாக கூறி, “எத்தனை குடை வேண்டும்?” என்று கேட்டேன். “குடை இருக்கு சார்… இப்போ தான் ரீசண்ட்டா வாங்கி கொடுத்தேன்.” என்றார்.

“காலுக்கு செருப்பு வாங்கி தரலாமா?” என்றேன். “அதுவும் இருக்கு சார். அவங்களுக்கு இப்போ தேவை மாதுளம்பழம் தான். அவங்களுக்கு IRON DEFICIENCY இருக்கு. டாக்டர் டெய்லி மாதுளம்பழம் சாப்பிட சொல்றார். ஆனா மாதுளம் விக்கிற விலையில் என்னால தான் வாங்கித் தர முடியலை” என்றார்.

DSC06122“சார்… கவலைப்படதீங்க… நான் வரும்போது மாதுளம்பழம் வாங்கிட்டு வர்றேன்” என்றேன்.

நங்கநல்லூர் சென்றவுடன் அங்கு ஒரு சாலையோர கடையில் மாதுளம்பழம் வாங்கிக்கொண்டோம்.

நிலாச்சாரல் சென்றவுடன் மாணவிகளை பார்த்து நலம் விசாரித்துவிட்டு நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தேன். குட்டி சந்திரனுக்கு மட்டும் அவர் பெயர் காரணத்தை கேட்டார்கள்.

“அவர் தனுஷ் ஃபேன். தனுஷோட ‘குட்டி’ படம் வந்தப்போ தன்னோட பேர் முன்னாடி ‘குட்டி’ சேர்த்துகிட்டார்!” என்று சும்மா அள்ளிவிட்டேன்.

DSC06123

மாணவிகள் கொல்லென்று சிரித்துவிட்டனர். சந்திரன் நெளிந்துகொண்டிருந்தான். (ஆனா அவன் பேர் முன்னாடி ஏன் ‘குட்டி’ ன்னு சேர்த்துகிட்டான்னு எனக்கு உண்மையில் தெரியாதுங்க. நீங்க வேணும்னா அவனை கேட்டுச் சொல்லுங்க!)

ராதாகிருஷ்ணன் அவர்களிடம்  நண்பர்களை அறிமுகப்படுத்தினேன்.

“வாங்க எல்லாம் மாடிக்கு போய்டுவோம். காத்தோட்டமா இருக்கும். அங்கே தான் சாப்பிடப்போறோம்.” என்றார்.

மாடியில் அனைவரும் அசெம்பிள் ஆக… ஒரு மாணவியை அழைத்து ஏதோ சொன்னார் ராதாகிருஷ்ணன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு பார்சல் வந்தது. பிரித்தால் அதில் கேக்.

“சார்…. உங்களுக்காகத் தான். கட் பண்ணுங்க…!” என்றார்.

“உங்க அன்புக்கு நன்றி சார்….. நான் கேக் வேட்டியெல்லாம் பர்த்டே கொண்டாடுறதில்லையே…” என்றேன்.

DSC06128

“உங்க பர்த்டேன்னு சொன்னதும்.. சுந்தர் சாருக்கு நாம் கேக் வாங்கிகொடுத்து கட் பண்ண சொல்லனும்னு அவங்க தான் சொன்னாங்க. அவங்க ஆசைப்படுறாங்களேன்னு தான் கேக் ஏற்பாடு செய்தேன்” என்றார்.

“உங்க அன்புக்கு முன்னே நான் சரண்டர்… ஆனா மெழுகுவர்த்தியெல்லாம் ஏத்தி அணைக்க வேண்டாம்…அப்படியே கட் செய்யலாம். ஆனா எனக்கு பதிலா இவங்க யாராவது கட் பண்ணா நல்லாயிருக்கும்” என்றேன்.

DSC06131

இதை சொன்னதற்கு காரணம் நான் கேக் கட் செய்யக்கூடாது என்பதற்காக அல்ல. அம்மாணவிகள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும் தான்.

ஆனால் அவர்களோ “நீங்கள் தான் சார் கட் பண்ணனும்” என்று விடாப்பிடியாக மறுத்துவிட்டார்கள்.

DSC06136

கடைசீயில், அனைவரும் வாழ்த்து பாடல் பாட …. கேக் கட் செய்யப்பட்டது. அனைவருக்கும் கேக் கட் செய்து தட்டில் வைத்து தந்தேன்.

சாப்பிட உட்காருவதற்கு முன்னர், ராதாகிருஷ்ணன் ஒரு விஷயம் சொன்னார்.

ராயர் கொடுத்த பிறந்த நாள் பரிசு!

“நான் தினமும் சாயந்திரம் 8.00 மணிக்கு நங்கநல்லூர் ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்துக்கு போறது வழக்கம். அங்கே பூஜைக்கு மணியடிப்பது நான் தான். இன்னைக்கு பூஜையப்போ சுந்தர் சாருக்கு இன்னைக்கு பர்த்டே… என்ன கிப்ட் கொடுக்குறதுன்னு தெரியலே… அவருக்கு கொடுக்க நம்மாலே எதுவும் முடியலியேன்னு நினைச்சிக்கிட்டுருந்தேன். கொஞ்ச நேரத்துல என் தோளை ஒருத்தர் தட்டினார். திரும்பிப் பார்த்தேன்.

ராதாகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினர்...!
ராதாகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினர்…!

கோவிலுக்கு ரெகுலரா வர்றவர் அவர். என்னை நல்லா தெரியும். ராதாகிருஷ்ணன், இந்தாங்க இந்த புக்ஸை உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது கொடுங்க. அருமையான ஸ்லோக புஸ்தகம். இதுக்கு பணம் எதுவும் வேண்டாம். ஏதாவது கொடுக்கணும்னு ப்ரியப்பட்டீங்கன்னா அதை மடத்து உண்டியலில் போடுங்க…” அப்படின்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போய்ட்டார்.

சுந்தர் சாருக்கு கொடுக்க எதுவுமே இல்லையேன்னு நினைக்கும்போது ராயரே இதை கொடுத்தனுப்பியிருக்காருன்னு நினைச்சேன். ஒன்னுக்கு ரெண்டு புக் எக்ஸ்ட்ரா கொடுத்தது மூலம், அவர் கூட வர்ற ரெண்டு பேரை பத்தியும் ராயருக்கு தெரிஞ்சிருக்கு.

இது தான் அந்த புக் என்று கூறி அந்த புக்கை நமக்கு பரிசளித்தார்.

DSC06140

அடுத்து நண்பர்களுக்கும் பரிசளித்தார். இதிலென்ன விசேஷம் என்றால் ஹரிஹரசுதன் மிகத் தீவிர ராகவேந்திர பக்தர். அடிக்கடி மந்த்ராலயம் சென்று வருபவர். சந்திரன் தடுக்கி விழுந்தால் திருவல்லிக்கேணி பிருந்தாவனம் செல்பவர்.

யாரை எப்படியெல்லாம் ஒன்னு சேர்த்து எங்கே வெச்சு தான் விரும்பியதை ராயர் கொடுக்குறார் பாருங்க… இன்னைக்கு மாலை வரை… ஹரியும், சந்திரனும் என்னுடன் நிலாச்சாரல் வருவார்கள் என்பது எனக்கு தெரியாது. இங்கே எங்களுக்கு இந்த நூல் பரிசாக கிடைக்கும் என்று தெரியாது.

இதற்க்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

DSC06149

DSC06150

இறைவன் விரும்பும் ஒரு பாதையில் அவன் விருப்படி நாம் வாழத் துவங்கினாலே போதும் நமக்கு தேவையானது தகுதியுடையவர்கள் மூலம் நம்மை தேடி வரும். இதை பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஆகையால் இப்போதெல்லாம் எதற்கு பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

“எது வந்தபோதும் சரி… நம் கடமையை செய்வோம். பலனை அவன் நிச்சயம் பார்த்துக்கொள்வான்.” – என்பதிய என் வேதமாக இருக்கிறது.

DSC06145

இங்கே அடுத்து மாணவிகளிடம், “உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன்… சொல்லலாமா?”

கதை என்றவுடன் அவர்களக்கு ஒரே குஷி. “சொல்லுங்க… சொல்லுங்க… அண்ணா….” என்றார்கள் கோரசாக.

நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். நீங்கள் பசியோடு இருப்பீர்கள் என்று கூறி, சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்கு நம் தளத்தில் பிறந்தநாளன்று நம் தளத்தில் பதிவிட்ட “கோவில் விக்கிரகமும் தரையில் பதிக்கபப்ட்டுள்ள கல்லும் பேசிக்கொண்ட கதை” யை அவர்களிடம் சொன்னேன்.

கதையை கூறி முடித்து, விக்ரகம் எப்படி உளி தந்த அனைத்து அடிகளையும் தாங்கிக்கொண்டு அழகிய சிலையாக மாறியதோ அதே போல, நாமும் நமக்கு வரும் சோதனைகளை இறைவன் அவற்றை நமது நன்மைக்கே, நமது முன்னேற்றத்துக்கே தருவதாக கருதி அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். ஒரு நாள் சோதனையனைத்தும் சாதனையாக மாறும்!” என்றேன்.

DSC06157

அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.

“சூப்பர்… சூப்பர்… கதை அண்ணா” என்றார்கள்.

அடுத்து அவர்களுடன் ஜோக் அடித்து, ஒருவருக்கொருவர் டீஸ் செய்துகொண்டு சாப்பிட்டோம்.

சப்பாத்தி குருமா, ஜாங்கிரி, ரைஸ், காரக்குழம்பு, ரசம், பொரியல், தயிர் என பிரமாதமான உணவு. அதுவும் பார்வையற்ற இம்மானவிகளுடன் அவர்கள் சிரித்து மகிழும்படி சாப்பிட்டது உண்மையில் அத்தனை நிறைவாக இருந்தது.

DSC06162

“அண்ணா… நீங்க அடுத்து எப்போண்ணா இங்கே வருவீங்க?” என்றார்கள்.

“ஏம்மா… அடிக்கடி வருவேன். எப்போ வரணும்னு சொல்லுங்க… வர்றேன்….”

“நியூ இயருக்கு கட்டாயம்… வாங்கண்ணா…” என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

“அவசியம் வருகிறேன்… உங்களுக்கு ஏதேனும் தேவையென்றால் சார் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்… வரும்போது வாங்கி வருகிறேன். இந்த வருஷம் நியூ இயர் உங்க கூடத் தான்!”

“ஹைய்யா….” என்று கோரஸுடன் அவர்கள் குரல் எழுப்பியபோது, என் கண்களின் ஓரத்தில் நீர் எட்டிப்பார்த்தது. அது….பிறர் நிறைவில் பெருமிதத்தை கண்ட ஆனந்தக்கண்ணீர்!

==============================================================

மனப்போராட்டமும் மனத்தெளிவும்!

இந்த பதிவை அளிப்பதா வேண்டாமா என்று எனக்குள் ஒரே மனப்போராட்டம். இந்த உலகில் இப்படியெல்லாம் கூட சந்தோஷம் இருக்கிறது… என்பதை உங்களுக்கு உணர்த்தவே இங்கு பதிவு செய்கிறேன்.

பிறந்தநாளன்று வெளியே தெரியாமல் எண்ணற்ற நல்ல காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி வருபவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு முன்பு இதெல்லாம் தூசு என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்று இணையம் போய்க்கொண்டிருக்கும் போக்கில், இது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பற்றி நிச்சயம் நான்கு பேருக்கு தெரியப்படுத்தவேண்டியிருக்கிறது. தறிகெட்டு போய்கொண்டிருக்கும் ஒரு சிலரை திருத்தவாவது இது போன்ற பதிவுகள் உதவும் என்பதாலேயே இந்த பதிவை அளித்தேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

மேலும் சுந்தர் என்னும் தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல இது  சுந்தர் மைனஸ் ரைட்மந்த்ரா மிகப் பெரிய பூஜ்யம் என்பதை எவரும் ஒப்புக்கொள்வார்கள். அப்படியெனில், இங்கு கிடைத்த சிறப்பும் சந்தோஷமும் யாருக்காக என்று யோசித்து பாருங்கள்… இந்த பதிவை நான் ஏன் அளித்தேன் என்று புரியும்!

==============================================================
நிலாச்சாரலில் தீபாவளியை கொண்டாடியது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். விரைவில் அளிக்கப்படும்! தாமதத்திற்கு மன்னிக்கவும்!!
==============================================================

[END]

8 thoughts on “இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

  1. சுந்தர் அண்ணா அருமையான சம்பவம் வாசிக்கும்போதே கண்கள் பனித்தன வாழ்த்துக்கள் அண்ணா

  2. சுந்தர்ஜி, நிலா சாரல் குழந்தைகளுடன் நீங்கள் பர்த்டே கொண்டாடியதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ஹரிஹரசுதனுக்கும், குட்டிக்கும் உங்களுடன் சேர்ந்து ராகவேந்திரர் புக் கிடைத்தது அவர்கள் செய்த புண்ணியம்,

    அடுத்த முறை நிலா சாரல் சென்றால் நான் மிகவும் கேட்டதாக சொல்லவும்.

    நன்றி
    உமா

  3. சுந்தர்ஜி,

    கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்! உங்களை பாராட்ட அடியேனுக்கு தகுதி இல்லை. வணங்குகிறேன்! எல்லாம் அவன் செயல். நாங்களும் ஒரு வகையில் கொடுத்து வைத்துள்ளோம், உங்களை வழிகாட்டியாக அடைந்ததற்கு. நன்றி

  4. சுந்தர்ஜி

    உங்கள் சேவைக்கு ஒரு ராயல் சலுட். பிறந்தநாள் அன்று
    நிலாச்சாரலில் உள்ள பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்து அவர்களுடன ஒரு தோழமையுடன், அவர்களின் உடன் பிறந்த சகோதரராய் பார்கிறபோது உண்மையேல் உள்ளம் நெகில்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது.
    அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் கண்களின் வழியாக இந்த உலகத்தை
    பார்த்தார்கள்.

    இவ்வாறு பார்க்கும்போது நானும் ஒரு சபதம் எடுத்துகொள்கிறேன்.
    பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாளில் நாமால் முடிந்த அளவு
    பிறருக்கு உதவி செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

  5. எந்த கமெண்டும் போட முடியாத அளவுக்கு சுந்தர் எல்லாவற்றையும் எழுதிவிட்டார். ஸ்ரீ ராகவேந்திரரின் அருளையும் அவரது மகிமையையும் நமக்கு உணர்த்தும் விதமாக உள்ள இந்த பதிவு, அவரது விசேஷ நாளான வியாழக்கிழமை அன்று நமக்கெல்லாம் கிடைத்துள்ளது இன்னும் சிறப்பு.

    நிலாச்சாரல் சகோதரிகள் மத்தியில் சுந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் மனதிற்கு மகிழ்ச்சியும் புதிய நம்பிக்கையும் தருகிறது. உண்மையிலேயே இது உங்கள் முதல் பிறந்த நாள்தான் சுந்தர்.

  6. டியர் Sundar,

    ப்ளீஸ் கிவ் மீ தி அட்ரஸ் ஒப் நிலாசாரல்

    ந.Venkat.

  7. ஆனந்த கண்ணீர் வருகிறது.பாராட்ட வார்த்தைகள் இல்லை.தங்களின் நற்பணிகள் மென்மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகிறோம்.

Leave a Reply to Archana Murali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *