Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஒரு துரோகத்தின் முன்னால்…

ஒரு துரோகத்தின் முன்னால்…

print
ந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம். ஏன் பிரச்னைகள் என்பதையே சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால் துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்தை சந்திக்கின்றனர்.

உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில் எவருக்கும் இருக்க முடியாது. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் கூட சமயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை தாங்க முடியாது கலங்கிவிடுகின்றனர். ஏன் தெரியுமா? மற்ற விஷயங்களில் அறிந்தோ அறியாமலோ நமது பங்கு இருக்கும். ஆனால் துரோகத்தில் பெரும்பாலும் அதை நமக்கு இழைப்பவர் பங்கு மட்டுமே இருக்கும். எனவே துரோகத்தை தாங்கும் சக்தி மட்டும் எவருக்கும் இருப்பதில்லை.

கணவன் மனைவிக்கு செய்யும் துரோகம்.
மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம்.
நண்பன் இழைக்கும் துரோகம்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் துரோகம்
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தங்களுக்குள் செய்யும் துரோகம்.
ஆசிரியருக்கு மாணவன் இழைக்கும் துரோகம்.
காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் இழைக்கும் துரோகம்.

இப்படி துரோகங்களையும் அதன் வகைகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

stone steps

என்னை பொருத்தவரை வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணிவிடலாம். ஆனால் என் முதுகில் குத்தியவர்களை மட்டும் எண்ணவே முடியாது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் துரோகங்களையே கேடயமாக்கி கொள்ள பழகிக்கொண்டு  விட்டேன். என் முன்னேற்றத்திற்கு அவற்றை தான் படிக்கற்களாக பயன்படுத்தினேன். இந்த கோட்டையின் படிக்கட்டுக்கள் துரோகங்களினாலும் அவமதிப்புக்களினாலும் கட்டப்பட்டது என்றால் மிகையாகாது.

நான் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்த – கனவில் கூட எனக்கு துரோகம் இழைப்பார்கள் என்று நினைக்காதவர்களெல்லாம் – எனக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என் ஊழ்வினையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

சரி… நம்ம கதையை விடுங்க… துவக்கிய விஷயத்துக்கு வருவோம்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னை தொடர்புகொண்டு தனக்கு இழைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை துரோகத்தை சொல்லி என்னிடம் அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய குமுறல் புரிந்து கொள்ளக்கூடியதே. எனவே என்ன சொல்லி அவருக்கு ஆறுதல் கூறுவதென்று எனக்கு புரியவில்லை. விட்டால் ஏதேனும் தவறான முடிவுக்கு போய்விடுவார் போல இருந்தது.

“வாழ்க்கை எனும் சாலையில் துரோகம் என்னும் மைல்கல்லை சந்திக்காமல் எவரும் பயணம் செய்ய முடியாது. TAKE IT EASY. யார் எப்படி நடந்துகொண்டாலும் நீங்கள் உண்மையாய் இருங்கள். அது போதும்! சில விஷயங்கள் நடப்பது நமது நன்மைக்குத் தான் என்பதை காலம் புரியவைக்கும். எனவே எதற்கும் கலங்காது நமது கடமையை நாம் பாட்டுக்கு செய்துகொண்டு போய்கொண்டே இருக்கவேண்டும்!!” என்று பலவாறாக அவருக்கு ஆறுதல் கூறி அவரை சகஜ நிலைமைக்கு கொண்டு வருவதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்போது அவரிடம் நான் பகிர்ந்துகொண்டது தான் கீழ்கண்ட இந்த கவிதை. இதை படித்ததும் நம் தளத்தில் இதை வெளியிடுமாறும், தன்னை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கவிதையை நான் விகடனில் படித்து சில ஆண்டுகள் இருக்கும். அடுத்தடுத்து துரோகங்களை சந்தித்து வந்த எனக்கு அன்றைய சூழலில் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது இந்த கவிதை. எழுதியவருக்கு என் மனமார்ந்த நன்றி. வெளியிட்ட விகடனுக்கும் என் நன்றி!

============================================

ஒரு துரோகத்தின் முன்னால்…

ஒரு துரோகத்தின் முன்னால்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப் பற்றிச் சில குறிப்புகள்…

சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம்;
ஒருவேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம்

Hands in rain

அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்றுவிடலாமென்று
நினைத்துவிடாதீர்கள்.
அது
அன்பை… காத்திருப்பை
தியாகத்தை… துயரத்தை
ஒருபோதும்
ஏறிட்டுப் பார்க்காது.

மூக்கு நுனியில்
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெருங்கோபம்
நியாயமானதென்றாலும்,
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ
சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்.
உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும்.

அது சற்றும் பொருட்படுத்தாது
விட்டுவிடுங்கள் அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி
வாசல் வரை சென்று
வழியனுப்பிப் பாருங்கள்.
தலைகுனிந்தவாறு
விடைபெறாமலேயே
சென்றுவிடக்கூடும்.

அதிகம் கடினம் என்றாலும்
பெருங்கருணைகொண்டு
மன்னித்துவிடுங்கள்
அடுத்த நிமிடமே
அது இறந்துவிடும்!

– சுமதிராம்
ஆனந்த விகடன் ( 9th Nov 2011)

============================================

[END]

13 thoughts on “ஒரு துரோகத்தின் முன்னால்…

  1. அவசியமான பதிவு

    துரோகம்

    இந்த வார்த்தையை ஒரு முறை உச்சரித்து பாருங்கள்
    உங்களை அறியாமலேயே உங்களுக்குள் கோபம் கொப்பளித்துகிளம்பும்

    அதுவும் நமக்கு மிகவும் நெருக்கமான நம்பிக்கையான ஒருவர் நமக்கு அதை இழைக்கும் போது அதன் வலி மிகவும் கொடுமையானது

    அது ஆறாத வடுவாக இருந்து உள்ளத்தை மட்டுமல்லாது உடலையும் ரணப்படுத்தும்

    எப்போது ஒருவர் துரோகம் செய்ய முற்படுகிறார்?

    கொஞ்சம் ஆழமாக சிந்துப்போமேய்யானால் நமக்கு ஆச்சரியமும் சலிப்பும் தான் மிஞ்சும்

    எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பழகிக்கொண்டிருந்த இருவர் ஒரு கட்டத்துக்கு மேல் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது அவரிடமிருந்து கிடைக்காத பட்சத்தில் அதே சமயம் அவர் எதிர்பார்த்த விஷயம் மற்றவர் மூலம் கிடைக்குமானால் அங்கு தான் முதல் பிளவு நிகழ்கிறது

    பிளவு நாளடைவில் பகைமை என்னும் செடியாக முளைக்க துவங்கி சிறிது சிறிதாக துரோகம் செய்யும் மனநிலை என்ற விருட்ச்சமாகிறது

    இதில் யாரை நொந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை

    சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறுவார் :
    எவரேனும் ஒருவர் நம் மனதில் உள்ள கருத்துக்கு மாறாக ஒரு கருத்தை நமக்குள் திணிக்க நினைத்து எப்போதும் நம்மை பார்க்கும்போதெல்லாம் அதற்க்கான முயற்சிகளில் இறங்குவாரானால் அதற்காக அவரிடத்தில் கோபம் கொள்ள கூடாது மாறாக அவருடைய கருத்தை அவர் கூறுகிறார் அது அவரது கண்ணோட்டம் என்ற அளவில் அதை விட்டுவிட்டு நமது பணியை தொடர்வது சாலச்சிறந்தது – கேட்கும் மனநிலையில் இருப்பவரிடம் பொறுமையாக விளக்கி கூறலாம் தப்பில்லை – மாறாக மற்றவரிடம் விவாதிப்பது வீண் வேலை

    எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி நமது கடமையை நாம் சரிவர செய்வோமேயானால் எதிர்பார்க்காதது எல்லாம் நம்மை நாடி தாமாக வரும்

    வாழ்க வளமுடன் !!!

  2. வணக்கம் சார்

    நம்பிக்கை துரோகத்தின் வலி என்ன என்று எனக்கு தெரியும் சார்

    சில விஷயங்கள் நடப்பது நமது நன்மைக்குத் தான் என்பதை காலம் புரியவைதிருந்தலும் துரோகத்தின் வலியை மறக்க முடியாது சார் அந்த மாதிரி நபர்களை பார்க்கும் போது ஆண்டவன் மேலல மட்டுமே தா சார் கோபம் வருது. ஆண்டவன் துணை இருந்தால் எதையம் தாண்டி வெற்றி முடியம் சார் .. அருமையான கவிதை சார்..

    நன்றி

  3. துரோகம் !!! எப்படி இதை செய்ய மனசு வருது .

    // சில விஷயங்கள் நடப்பது நமது நன்மைக்குத் தான் என்பதை காலம் புரியவைக்கும் // — இந்த வாக்கியம் என் வாழ்வில் 100% நிஜம் அண்ணா

    உங்களை போல் சரியான நேரத்தில் எனக்கு ஆறுதல் கூற யாரும் இல்லாமல், நானே எனக்கு கூறிய ஆறுதல்கள் என்னை இன்று வரை மனிதனாக வாழ வைத்து கொண்டிருக்கிறது .

    இரண்டு வழிகளில் துரோகத்தை நாம் உபயோகிக்கலாம்.
    1. பகைவரை அழிக்க நம்மை தயார் செய்வது,
    2. நம்மை மாமனிதனாக உருவாக்க அதை பயன்படுத்துவது .

    முதல் வழி எதிரிகளோடு நம்மையும் புதைகுழியில் புதைதுவிடும் என்பது நினைவில் வைத்து, இரண்டாவது வழியில் நடந்தால் உலகம் போற்றும் மனிதனாக மாறுவது நிச்சயம்.

    இப்பொழுது எனக்கு துரோகம் நேரும் போது சிறிது வருத்தம் இருந்தாலும், மனதில் மூலையில் ஒரு மகிழ்ச்சி குடி கொள்கிறது. கடவுள் என்னை உயரத்திற்கு அழைத்து செல்லபோவதை உணர்த்தும் அசரீரி ஆக துரோகத்தை உணர்கிறேன்.

    அற்புதமான பதிவிற்கு நன்றி…

  4. நல்ல கருத்து ஐயா. இதிலே சிறிது திருத்தமும் கூட. மற்றவர்கள் நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என கூறும்போது, அந்த வினையைப் போல நாமும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பிறருக்கு செய்து இருப்போம் அல்லது செய்து கொண்டிருக்கிறோம் என்பது எல்லோருக்கும் பொருந்தும். வேண்டுமானால் அளவு வேறுபடலாம். நீங்கள் உங்களுக்கு சரி என நினைத்து செய்வது மற்றவரை காயப் படுத்தி நீங்கள் செய்ததது துரோகம் என எண்ண வைக்கலாம். நம் மனதில் பின்னோக்கிப் பார்த்தல் தெரியும் நாம் செய்துள்ள தவறுகள் / பிழைகள். குறைந்தபட்சம் இதற்கு சம்பத்தப் பட்டவர்கள் தங்கள் தவறுக்கு மனவருந்தி தம்மை திருத்திக் கொள்ளலாம். இதைத் தவிர, பணம், மண், புகழ் இவைகளால் தான் பெரும்பாலான துரோகம் அதிகமாக நடக்கிறது என்பது பேருண்மை. மற்றவைகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி நினைக்க வைக்கும் ஆற்றல் படைத்தது.

  5. சுமதிராம் அவர்களின் கவிதை – மிகவும் யதார்த்தம். துரோகத்தை எதிர்கொள்வதற்கு அருமையான வழி.

    நாம் எல்லோரும் கலி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த யுகத்தில் துரோகம் என்பது காலத்தின் கட்டாயம். துரோகத்தை தாங்குவது ஏன் கடினம் தெரியுமா – உடலில் உண்டான வலி மறைந்து விடும். ஆனால் மனதில் ஏற்பட்ட வலி அவ்வளவு எளிதில் குறையாது. அது காலப்போக்கில்தான் குறையும் பின் மறையும்.

    எத்தனையோ மகா பாவங்கள் நமக்கு பழகிவிட்டபிறகு, துரோகமும் பழகிவிடும்.

    அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம், வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம். ஆகவே தன்மானம் உள்ளவர்களுக்கு துரோகம்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள்.

  6. ///“வாழ்க்கை எனும் சாலையில் துரோகம் என்னும் மைல்கல்லை சந்திக்காமல் எவரும் பயணம் செய்ய முடியாது. TAKE IT EASY. – ///

    ஒருவனுக்கு துரோகம் செய்யப்படுகிறது என்றால் அதை அவன் TAKE IT EASI ஆகா எடுத்துக்கொள்ள கூடாது..அப்படி எடுத்துக்கொண்டால் அவனால் எதையும் சாதிக்க முடியாது அதை அவன் திரும்பத்திரும்ப நினைத்து ..துரோகம் செய்பவர்கல் வெட்கி தலை குனியும்வண்ணம் மேலேவரவேண்டும் (பழி வாங்குதல் அல்ல) இதைத்தான் இறைவன் நம்மை சோதிக்கின்றான் என்றால் அவன் பார்வை நம்மீது விழ ஆரம்பித்துள்ளது என்று தாங்கள் அடிக்கடி சொல்லியுள்ளீர்கள்…

    இதைத்தான் தாங்கள் வெற்றி படிக்கட்டுகலாக்கியுல்லீர்கள் …அப்படி தாங்கள் வெற்றிபடிக்கட்டுகலாக்கியதர்க்கு காரணம் தாங்கள் திரும்ப திரும்ப துரோகத்தை நினைத்ததுதான் …

    இது என் மனதில்பட்டது தவறு இருந்தால் மன்னிக்கவும்..

    1. நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் நண்பர் என்னிடம் பேசும்போது அவர் இருந்த மனநிலையை மனதில் கொண்டு அவரை தேற்றுவதற்கும் சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்குமே TAKE IT EASY என்று சொன்னேன். மற்றபடி, நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு நாம் வாழ்க்கையில் ஜெயித்து தான் பதிலடி கொடுக்கவேண்டும்.

      – சுந்தர்

  7. உண்மையில் நேரிடையாக எதிர்க்கும் எதிரிகள் ,விரோதிகளை விட கூடவே இருந்து கழுத்தறுக்கும் துரோகிகள் தான் மிக மிக ஆபத்தானவர்கள்

  8. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்று
    நன்று உளக் கெடும் (திருக்குறள்)

    1. மிக பொருத்தமான குறளை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி சார். சில சமயம் அப்படி நினைத்து தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

      – சுந்தர்

  9. சூப்பர் கவிதை சார் ..

    துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது.

    உயிர் போகும் வலியை கூட சில நேரம் தாங்கிக்கொள்ள இயலும். ஆனால் துரோகத்தை தாங்கி கொள்ளும் சக்தி மட்டும் இந்த உலகில் எவருக்கும் இருக்க முடியாது.

    உணர்வுபுர்வமான வார்த்தைகள் …உண்மையும் கூட

  10. வணக்கம் சார் ஒரு துரோகம் நடத்து அதை என்னைல் மரகமுடியவில்லை .சூப்பர் கவிதையில் மாற …………………

  11. ஒரு துரோகத்தின் முன்னால் கவிதை மிக அருமை. சுமதி ராம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நமக்கு துரோகம் செய்ப வர்களை அவர்கள் வெட்கித் தலை குனியும் படி அவர்களுக்கு அறிய படிப்பினையை உணர்த்த வேண்டும்.

    //இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல் //

    துரோகத்தை சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது என்பது 100% உண்மை.

    //உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்//

    என்னுடன் கூட இருந்து என் வளர்ச்சியை தடை செய்தவர்களை என்நாள் ஒரு நாளும் மறக்க முடியாது.

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி
    uma

Leave a Reply to Baba Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *