Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > All in One > ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

print
ஆண்டவன் போடும் கணக்கு!

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்ல்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போது. யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில்   இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான்.

முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நிறம் கழித்து ஒரு ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினார்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தான்.  என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.  இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.

சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.

————————————————-
வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.

எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

[END]

6 thoughts on “ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

  1. என் வாழ்வில் நடந்த பல விடயங்களை நான் இப்படி தான் ஏற்று கொண்டுருக்கிறேன்…

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது !

    எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது !

    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் !!

  2. என்னை துயரில் இருந்து தூக்கி நிறுத்தும் பதிவாக இதை நான் பார்கிறேன். வணக்கம்.

  3. மனது கவலையாக இருந்தது RECHARGE செய்துகொண்டேன் ..

    தேங்க்ஸ் ஒன்ஸ் AGAIN .

    மனோகரன்.

  4. சுந்தர் சார், சூப்பர் ஸ்டோரி. நன்றி.

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *