Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > எழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்!

எழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்!

print
சிரியப் பணியின் இலக்கணங்கள் தற்போது மாறிவிட்டாலும் நாளை பாரதத்தின் தூண்களாம் மாணவர்கள் ஏற்றம் பெற தன்னலம் கருதாது உழைக்கும் ஆசிரியர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வந்தனங்கள்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பதிவு எழுத நினைத்தேன். ஆனால் பல்வேறு அலுவல்களில் ஈடுப்பட்டுள்ளமையால் நேரம் கிட்டவில்லை. எனவே தினமலர் மற்றும் கல்ச்சுரல் இந்தியா ஆகிய தளங்களில் இருந்து இரு கட்டுரைகளை எடுத்து அவற்றை ஒன்றாக்கி தந்திருக்கிறேன்.

உங்கள் வாழ்நாளில் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த அனைத்து ஆசிரியர்களையும் இன்று நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்களின் தொடர்பு எண் ஏதேனும் இருந்தால் அவர்களை அழைத்து வாழ்த்து கூறுங்கள். முடிந்தால் நேரில் சென்று ஆசி பெறுங்கள். உங்களில் ஒருவர் இதை செய்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்.

ஒரு நல்ல ஆசிரியருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து நாட்டிற்கும் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி.டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களை இந்த இனிய நாளில் நினைவு கூர்கிறோம்.

அது மட்டுமல்ல ஒப்ற்ற சுதந்திர போராட்ட வீரர் – செக்கிழுத்த செம்மல் – வ.உ.சி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய சிறப்பு பதிவு இன்று எப்படியும் அளிக்கப்பட்டுவிடும்.

“நீ எந்த நாடு?” என்று எவரேனும் எந்த சூழ்நிலையிலும் உங்களிடம் கேட்டால், “கப்பலோட்டிய தமிழன் திரு.வ.உ.சி. பிறந்த நாடு எங்கள் நாடு” என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்.

======================================================

யாருக்காக ஆசிரியர் தினம்?

வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.

ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.

அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?

ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

இவர்களே போற்றத்தக்கவர்கள்!

எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!

ஆசிரியர் தின வரலாறு

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

(நன்றி : kalvimalar.dinamalar.com | tamil.culturalindia.net)

9 thoughts on “எழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்!

  1. சுந்தர் சார்,
    இன்று ஆசிரியர் தினத்திற்காக மிக சிறப்பான பதிவை தந்துள்ளீர்கள். இன்று இந்த அளவிற்கு நாம் உயர்ந்தோம் என்றால் அதற்கு நம் ஆசிரியர்கள் தான் காரணம். கண்டிப்பாக இந்நாளில் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிரிகின்றோம்.
    நன்றியுடன் அருண்.

  2. சுந்தர்ஜி,

    ஒரு சிறந்த ஆசிரியர் ஒரு சிறந்த மாணவனை உருவாக்க முடியும் ஒரு சிறந்த மாணவன் ஆசிரியர் தினத்தன்று அவரிடம் ஆசி பெறுவது ஒவொரு மாணவ மாணவியின் கடைமகளுள் ஒன்றாக கருத வேண்டும்.

    உங்கள் வாழ்நாளில் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த அனைத்து ஆசிரியர்களையும் இன்று நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்களின் தொடர்பு எண் ஏதேனும் இருந்தால் அவர்களை அழைத்து வாழ்த்து கூறுங்கள். முடிந்தால் நேரில் சென்று ஆசி பெறுங்கள என்று தாங்கள் கூறியதின் பெயரில் எனக்கு எந்த ஆசிரியரும் தொடர்பு கொள்ளும் வகையில் இல்லை. என்ன செய்வது என்று யோசனை செய்தேன்.

    என் அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் அவர்களின் தந்தை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். அவர் பெயர் வரதராஜன். இசாக்கொளத்தூர் ( வந்த வாசியில் இருந்து 25 km
    தொலைவில் உள்ளது) அவர் ஓய்வு பெற்ற 25 வருடங்கள் ஆகின்றது.
    அவர் வயது 80 ஆகின்றது. இருந்த போதும் அவர் 25 வருடங்களாக பணம் ஏதும் பெற்று கொள்ளாமல் குழந்தைகளுக்கு தமிழ் ஆசிரியர்ராக தமிழ் பாடம் கற்று கொடுத்து கொண்டு உள்ளார். தவிரவும் பொது அறிவு வினா விடை என்று குழந்தைகள்
    எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புத்தகம் போட்டு உள்ளார்.
    அவருடைய இந்த சேவையை எண்ணி நான் வியப்பது உண்டு. தக்க சமயத்தில் தாங்கள் கூறியதின் பெயரில் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று விட்டேன்.அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி.

    அந்த ஆசிரியர் அவர்களின் phone number 95516 56865.

    ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது.
    இதற்கு முன் உதாரணமாக திரு வரதராஜன் அவர்கள் இருகின்றார்.

    1. மிகவும் நெகிழ்ச்சியான விஷயம். நன்றி நன்றி நன்றி!!
      – சுந்தர்

  3. ஒரு ஆசிரியன் என்ற வகையிலே கூறுகிறேன் . மிகவும் சிறந்த ஒரு பதிவு . எங்கள் சமுதாயத்தைப் பற்றி இந்த அளவிற்கு நம் தளத்தில் ஒரு தேர்ச்சியான சிறப்பான பதிவு செய்தமைக்கு மரியாதை செய்ததற்கு நன்றி கலந்த வணக்கங்கள். அன்புடன் மோகன்

    1. ஒரு ஆசிரியரிடம் இந்த பதிவு பாராட்டு பெற்றது உண்மையில் நான் செய்த பேறு. நன்றி சார்.
      – சுந்தர்

  4. \\உங்கள் வாழ்நாளில் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த அனைத்து ஆசிரியர்களையும் இன்று நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்களின் தொடர்பு எண் ஏதேனும் இருந்தால் அவர்களை அழைத்து வாழ்த்து கூறுங்கள். முடிந்தால் நேரில் சென்று ஆசி பெறுங்கள்.\\

    என்னுடைய பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி வழியல் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து பெற்றேன் .

    அறிவுறுத்தியமைக்கு நன்றி .
    மனோகர் .

  5. ஹாய் அங்கிள்…என் பெயர் நிவேதிதா. உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை. நான் ஆப்பிரிக்காவில் 11 வகுப்பு படிக்கிறேன். நம் நாட்டை பற்றி தங்கள் மூலமாக நிறைய தெரிந்துகொள்கிறேன். என் அம்மாவும் உங்கள் தளத்தின் வாசகி. இந்த ஆசிரியர் தின கட்டுரை மிகவும் அருமை. நன்றி.

    1. ஹாய் நிவேதிதா… என் தங்கையின் குழந்தை பேர் கூட நிவேதிதா தான்.

      பிறந்த ஊருக்கு புகழைச் சேர்த்து வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்.

      உங்கள் அம்மாவுக்கு என் நன்றிகள்…

      அவ்வப்போது அவர்களை இங்கு கமெண்ட் பகுதியில் பார்ப்பதுண்டு.

      – சுந்தர்

  6. அறியாமை இருள் அகற்றி அறிவு என்னும் ஞானத்தை போதிக்கும் குரு தாய் தந்தைக்கு நிகரானவர்

    நாம் நன்மை செய்தால் நம்மை உற்சாகப்படுத்தி பாராட்டுவதற்கும் தவறு செய்தால் அறிவுரை கூறி திருத்தும் உரிமை நமது பெற்றோருக்கு அடுத்தபடியாக நமது குருவிர்க்குதான் உண்டு

    வாழ்க்கையில் படிப்படியாக நாம் முன்னேற குருவானவர் ஏணியாக இருந்து நம்மை உயர்த்துகிறார் – அத்தகைய சிறப்புடைய குருவிற்கு ஒரு மாணவன் செய்யும் உயர்ந்த கைம்மாறு தமது சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து பிறர்க்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து “இந்த மாணவனின் குரு மிகுந்த போற்றுதலுக்குரியவர் – அவருடைய போதனைகளும் பண்புகளுமே இவன் இத்தைகைய பெருமையையும் பாராட்டுதலையும் பெறுவதற்கு காரணம் ” என்ற மற்றவரின் வாழ்த்துக்கள் தான்

    குருவை போற்றுவோம்
    அவர்தம் பெருமை நாளும் பெருகிட பாடுபடுவோம் !!!

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *