Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!

கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!

print
ண்டிகை மற்றும் விஷேட நாட்கள் எப்போது முழுமை பெறுகின்றன தெரியுமா? நாம் எப்படி இனிப்பும், அறுசுவை விருந்தும், படைத்து உண்டு மகிழ்ந்து சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறோமோ அதே போன்று அன்று அப்படி கொண்டாட வழியில்லாதவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையானவைகளை செய்து, அவர்களை மகிழ்ச்சியுறச் செய்து அவர்களையும் நம் கொண்டாட்டத்தில் இணைக்கிறோமோ அப்போது தான் நமது கொண்டாட்டம் முழுமை பெறும்.

இத்தகு கொண்டாட்டமே இறைவனுக்கு ப்ரீதியானவை. முழுமையானவை. ஆகையால் தான் அந்தக் காலங்களில் பண்டிகை நாட்களில் விருந்தோம்பலையும் அன்னதானத்தையும் தவறாது கடைபிடித்து வந்தார்கள்.

அன்னதானம், கோ-சம்ரோக்ஷனம் என்று விஷேட நாட்களை நம் தளம் எப்படி கொண்டாடி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் கண்ணன் பிறந்த ‘கோகுலாஷ்டமி’ என்றால் சும்மாவா? எத்தனை பெரிய பண்டிகை? நமக்கு எத்தனை பெரிய பொறுப்பு?

அந்த நந்தகோபன் மனம் குளிரும்படி இந்த கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். நாம் முதலில் செய்ய நினைத்தது ஏதாவது வைணவ ஆலய  பசுக்களுக்கு தீவனம் வாங்கி தரவேண்டும் என்று தான். ஆனால் அதில் நடைமுறை சிக்கல்கள். வாங்கித் தருவது ஒரு மூட்டையோ அல்லது பல மூட்டையோ, வருவாய் குறைவாக உள்ள கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்து அந்த கைங்கரியத்தை செய்ய வேண்டும். அந்த தீவனம் சரியாக பசுக்களுக்கு போய் சேரவேண்டும். நான் அப்போது அங்கு இருக்க வேண்டும். எனவே அப்படி ஒரு சரியான கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்து தீவனம் அளிக்க தற்சமயம் நேரம் கிடையாது. எனவே அதை பிறகு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணனுக்கு ப்ரீதியான ஏதாவது ஒன்றை செய்து அவன் மனதை கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

கெருகம்பாக்கத்தில் அமைந்துள்ள உடல் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகமான பிரேமவாசத்திற்கு நம் தளம் சார்பாக ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மழை ஒரே இடத்தில் பொழிவதற்கு பதில் பரவலாக பல்வேறு இடங்களில் பெய்வது தானே முறை?  எனவே நாம் செய்வது பெரிய உதவியோ அல்லது சிறிய உதவியோ அது பரந்து விரிந்து பல்வேறு இடங்களுக்கு சென்று சேரவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. நண்பர்களும் அதை ஆமோதித்தார்கள். எனவே இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு வேறு எங்கேனும் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது மனதில் உதித்தது தான் ‘சேவாலயா’.

‘சேவாலயா’ பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்து ஆன்மீக கண்காட்சியில் தான் அறிந்தேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரு.முரளி என்பவர் தலைமையில் மகத்தான பணிகளை செய்து வருகிறது இந்த அமைப்பு. சென்னை நகருக்கு வெளியே புறநகரில் திருநின்றவூர் – பெரியபாளையம் சாலையில் கசுவா என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது சேவாலயா.

பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், கோ-சாலை உள்ளிட்டவைகளை நிர்வகித்து வருகிறது இந்த அமைப்பு. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் இப்பள்ளி மாணவர்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக கல்வி கற்பவர்கள் என்பது முக்கியமான விஷயம். வேளாண்மை இப்பள்ளியில் ஒரு பாடம். எத்தனை பெரிய விஷயம்!!

மாணவர்களுக்கு கல்வியை தாண்டி நல்லொழுக்கம், தேசபக்தி, சகிப்புத் தன்மை இவற்றை இங்கு போதிக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதைத் தாண்டியும் ‘கிராமப்புற பொருளாதார மேம்பாடு’ என்ற நிலைக்கு சேவாலயா பயணித்துக் கொண்டிருக்கிறது. சேவாலயாவின் பணிகளை பற்றி எழுத வேண்டும் என்றால் குறைந்தது 10 பதிவுகளாவது நாம் அளிக்கவேண்டியிருக்கும்.

சேவாலயாவின் அக்கறை மனிதர்கள் மீது மட்டுமல்ல விலங்குகள் மீதும் உண்டு. கசாப்பு கடைகளுக்கு விற்கப்படும், கறவை நின்றுபோன அடிமாடுகளை மீட்டு கொண்டு வந்து ‘வினோபாஜி கோஷாலா’ என்ற பெயரில் பராமரிக்கிறார்கள். இந்த மாடுகளின் சாணத்தை கொண்டு ‘பயோ-கேஸ்’ என்ற இயற்கை எரிவாயு உருவாக்கி, தங்களின் எரிவாயுத் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். சாணம் வைத்து மண்புழு உரம் என்ற இயற்கை உரத்தை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். சுருங்கச் சொன்னால் இது ஒரு ‘சுதேசி மாதிரி இந்தியா.’

சுருங்கச் சொன்னால் விவேகானந்தரும், பாரதியும், காந்தியும் கண்ட கனவை ‘சேவாலயா’ நிறைவேற்றிவருகிறது.

சேவாலயாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்து நம் கண்ணனின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தோம். இது பற்றி முடிவு செய்த போது செவ்வாய் மலை 7.00 இருக்கும். உடனே சேவாலயாவை தொடர்பு கொண்ட போது அதன் பொறுப்பாளர் திரு.சிவா என்பவருடன் பேச நேர்ந்தது.

அவரிடம் அலைபேசியில் நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு கிருஷ்ண ஜயந்தியை சேவாலயா குழந்தைகளுடன் கொண்டாட விரும்புவதாக சொன்னோம். மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றார் திரு.சிவா. அவரிடம் தொடர்ந்து ஆலோசனை செய்கையில் நம் தளம் சார்பாக சுமார் 300 குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கித் தருவது என்று முடிவானது. அங்கேயே பணத்தை கட்டி ஏதாவது தயார் செய்யலாம் என்றால் அதற்கு நேரமில்லை. ஏனெனில் காலை நான் மேற்படி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அலுவலகம் வரவேண்டும். கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அதிகபட்சம் ஒரு இரண்டு மணிநேரம் பர்மிஷன் போட  முடியும். அதற்கு மேல் கேட்டால் பர்மனெண்ட் பர்மிஷன் தான் கிடைக்கும் (?!).

வடபழனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சென்று விசாரித்த போது 300 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு இனிப்பு + காரம் என்றால் 4 பெரிய அட்டைபெட்டிகள் வருமே என்றும், அதுவும் தற்போது ஸ்டாக் இல்லைஎன்றும் கூறினார்கள். மேலும் பட்ஜெட் வேறு மிக அதிகம் (ரூ.12,000/-). எனவே மேலும் நான்கைந்து கடைகளை விசாரிக்க எங்குமே சரிபட்டு வரவில்லை. பட்ஜெட் ஒத்துவந்த கடைகளில் ஸ்டாக் இல்லை. ஸ்டாக் இருக்கும், கடைகளில் விலை அதிகமாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இனிப்பு தரப்படும் விஷயத்தை சேவாலயாவில் கன்பர்ம் செய்யவேண்டும்.

கடைசியில் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள நாம் எப்போதாவது வீட்டிற்கு இனிப்பு மற்றும் பலகாரங்கள் வாங்கும் ஸ்ரீ காமாட்சி பவனில் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் உடனடி ஸ்டாக்காக இனிப்புக்கள் கிடைத்தன. (மொத்தம் ரூ.3000/- ஆனது. இது முழுக்க முழுக்க நம் தனிப்பட்ட செலவு தான்.) சுமார் 11 கிலோ பால்கோவா, பாதுஷா, மைசூர் பாக், சோன் பப்டி உள்ளிட்ட இனிப்புக்கள் சிறிய  பாக்ஸில் பேக்கிங் செய்யப்பட்டு ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் வைத்து என் பைக்கிலேயே கயிறு மூலம் பின்பக்கத்தில் வைத்து கட்டித் தந்தார்கள். வேறு எந்த கடையிலாவது வாங்கினால் இதையெல்லாம் செய்து தருவார்களா என்பது சந்தேகமே….

கடையின் பொறுப்பாளர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நாம் இதை கொடுக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன், விலையை சற்று குறைத்துக் கொண்டதுடன், அரை கிலோ மதிப்புள்ள இனிப்புக்களை இலவசமாக அவர்களது கடை சார்பாக குழந்தைகளுக்கு தந்தார். அவரின் பெரிய மனதிற்கு நெகிழ்ந்து போய் நன்றி சொன்னேன்.

இறுதியில் 11.5 கிலோ இனிப்புக்க்கள் எங்கள் கண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு விநியோகிக்க தயார்.

இனிப்புக்கள் ரெடி. அடுத்து நண்பர்கள் பலரை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி காலை 7.00 மணியளவில் சேவாலயா வர இயலுமா என்று கேட்டேன். திடீரென்று கேட்டதால் – அனைவருக்கும் பற்பல கமிட்மெண்ட்டுகள் வேறு இருந்தபடியால் எவராலும் வர இயலாத சூழ்நிலை. நண்பர் மனோகரன் திருவள்ளூர் என்பதால் அவருக்கு திருநின்றவூர் வருவதற்கு சற்று சுலபமாக இருக்கும் என்று கருதி அவரை அழைத்தேன். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை தான் என்றும் ஆனாலும் இன்று பணிக்கு சென்று ஓ.டி . பார்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். வேண்டுமானால் பர்மிஷன் போட்டுவிட்டு வருகிறேன். 10 மணிக்குள் தான் திரும்பவேண்டும் என்றும் கூறி ஒப்புக்கொண்டார்.

நாம் முந்தைய நாள் இரவு கிருஷ்ண ஜெயந்தி பதிவை தயார் செய்வதற்கு விழித்திருந்த படியால் காலை எழுந்திருக்க சற்று தாமதாமாகிவிட்டது. (எப்படி பார்த்தாலும் 5 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதில்லை நாம்.)

எழுந்து, குளித்து, பதிவை நிறைவு செய்து போஸ்ட் செய்துவிட்டு கிளம்ப சற்று லேட்டாகிவிட்டது. நண்பர் மனோகரன் நமக்கு முன்னதாக சேவாலயா வந்து காத்திருந்தார்.

நாம் சென்றவுடன் பொறுப்பாளர் திரு.சிவா என்பவரை சேவாலயா  அலுவலகத்தில் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நம் தளத்தின் பணிகள் மற்றும் இதர விஷயங்களை பற்றி விளக்கினேன்.

நமக்காக காத்திருந்தவர்கள் நாம் செல்ல தாமதமானதையொட்டி பூஜையை ஏற்கனவே முடித்துவிட்டிருந்தார்கள். நாம் அங்கு 8.00 மணிக்கு இருக்கவேண்டியது. ஆனால் எனக்கு இங்கு வீட்டிலிருந்து கிளம்பவே 7.45 மணியாகிவிட்டது. எனவே நாம் செல்வதற்கு முன்னர் பூஜை முடிந்துவிட்டது. எனவே மதிய உணவின் போது இனிப்புக்களை கொடுப்பதாகவும், இப்போதைக்கு இனிப்புக்களை குழந்தைகளுக்கு ஒப்படைப்பது வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

எங்கு வைத்து ஒப்படைப்பது என்று கேட்டபோது, இதோ திறந்தவெளியில் மரத்தின் கீழேயே வைத்துகொள்ளலாம் என்று கூறினார். நாம் நின்று அந்த இடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே குழந்தைகள் கீழே அமர்ந்துவிட்டனர். “சார்… குழந்தைகள் கீழே தரையில்  உட்காரவேண்டாமே…” என்றே சங்கடத்துடன்.

“ஒன்னும் பிரச்னையில்லை. வளாகமே எங்கும் சுத்தமாக இருக்கும். மேலும் அவர்கள் சிறுவயது முதல் தவழ்ந்து விளையாடிய இடம் இது.” என்றார் சிவா.

தொடர்ந்து இனிப்புக்கள் குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு தான் எத்தனை சந்தோஷம்.

ஆதரவற்ற – பெற்றோர் யார் என்று தெரியாத – குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பது புரிந்தது. ஒரே துருதுருப்பு மற்றும் குறும்பு.

குழந்தைகள் மத்தியில் ஒரு சிற்றுரை நிகழ்த்தினேன்.

“குட்டீஸ்…. இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?”

எல்லோரும் கோரசாக “கிருஷ்ண ஜெயந்தி” என்று கத்தினார்கள்.

“ஆம்… இன்றைக்கு “கிருஷ்ண ஜெயந்தி”. நம் கண்ணனின் பிறந்தநாள்.  நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நம் கண்ணன் அவதரித்த நாள் இன்று. கண்ணனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். அதுவும் உங்களை போன்ற குழந்தைகள் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். ஏனெனில் சிறைச்சாலையில் தான் அவன் பிறந்தான். ஒரு வகையில் அவனும் ஆதரவற்ற குழந்தைதான்.

உங்களுக்கு பெற்றோரும் அவனே. நண்பனும் அவனே. ஆசானும் அவனே. உங்கள் பொறுப்பாளர் சிவா சாரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். நேற்று மாலை வரை இங்கு வந்து உங்களை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. கண்ணனின் திருவுளப்படி திடீரென்று தோன்றியது தான் இந்த யோசனை. எனவே இந்த இனிப்புக்களுக்கு நீங்கள் அந்த கோபாலனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அனைவரும் உங்கள் கடமையை உணர்ந்து நல்லொழுக்கங்களுடன் படித்து முன்னேறி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடி தரவேண்டும். உங்களை வளர்த்து ஆளாக்கிய சேவாலயாவிற்கும் ஏதேனும் செய்யவேண்டும். செய்வீர்களா?” என்று நாம் கேட்க, மறுபடியும் கோரஸாக “செய்வோம் சார்!!!!!!” என்றனர்.

“இந்த செயலுக்கான பலன் நம் வாசகர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் நமது பணிகளுக்கு உற்ற துணையாய் விளங்கிவரும் நம் நண்பர்களுக்கும் போய் சேரட்டும். இந்த இனிப்புக்களை அந்த கிருஷ்ணனிடமே ஒப்படைக்கிறேன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று மனதில் பிரார்த்தித்தபடி இனிப்புக்களை ஒப்படைத்தோம்.

தொடர்ந்து சேவாலயாவிற்கு நமது காலண்டர் பரிசளிக்கப்பட்டது. பதிலுக்கு சேவாலயா சார்பில் நமக்கு ஒரு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

நமக்கு மேலே வலப்புறம் யார் படம் தெரிகிறது என்று பார்த்தீர்களா? (இந்த புகைப்படத்தை இந்த பதிவுக்காக அப்லோட் செய்யும்போது தான் கவனித்தேன். அவனின்றி நானில்லை!)

(அருகே நீங்கள் நாம் காலண்டர் கொடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படத்தை முதலில் இங்கு வெளியிட நாம் விரும்பவில்லை. இருப்பினும் மேலே நமக்கு வலது புறம் இருக்கும் ‘அந்த’ படத்திற்காகத் தான் வெளியிட்டுள்ளோம்.)

வெளியே வந்தோம். பல சிறுவர்கள் நம்மிடம் வந்து “தேங்க்யூ அங்கிள்… தேங்க்யூ அங்கிள்….” என்று கூறி கைகொடுத்தது நெஞ்சை நெகிழ வைக்கும் ஒன்று!

பின்னர் பொறுப்பாளர் சிவா அவர்கள் பூஜையறை, சமையற்கூடம், டைனிங் ஹால் உள்ளிட்டவைகளை சுற்றிக் காண்பித்தார். அனைத்தும் மிக சுத்தமாக இருந்தன. மருந்துக்கு கூட ஒரு ஈ, எறும்பை பார்க்க முடியவில்லை.

டைனிங் ஹால் நன்கு விசாலமாக இருந்தது. ஒரே நேரத்தில் இங்கு 400 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.

கோசாலையை நாமே விரும்பி சுற்றிப் பார்த்தோம். இறைச்சி கடைகளுக்கு செல்லும் பசுக்கள் மீட்கப்பட்டு இங்கு பராமரிக்கப் படுகின்றன். ஒவ்வொரு வெள்ளியும் இங்குள்ள கோசாலையில் கோ-பூஜை செய்யப்படுகிறது. (விரைவில் நம் தளம் சார்பாக கோ-பூஜை இங்கு நடத்தப்படவுள்ளது. ஒரு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்து காலை 6-7 நடக்கும் கோ-பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, வளாகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் மாணவர்களுக்கு காலை உணவையும் அளித்துவிட்டு திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். வேனில் தான் பயணம். வரவிரும்பும் அன்பர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தேதியை இறுதி செய்தவுடன் தகவல் சொல்கிறேன்.)

மறுபடியும் அலுவலகம் வந்து சிறிது நேரம் திரு.சிவா அவர்களுடன் பேசிவிட்டு விடைபெற்றோம். இனி நமது தளத்தின் சார்பாக இங்கு ரெகுலராக அன்னதானம் மற்றும் இதர அறப்பணிகள் நடைபெறும் என்று கூறிவிட்டு வந்தேன்.

(அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் மதியம் இருந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுவதை கண்டு ரசிக்க முடியாத நிலை குறித்து வருந்தினேன். கவலைவேண்டாம், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுவதை புகைப்படமெடுத்து தாம் மின்னஞ்சல் செய்வதாக திரு.சிவா சொன்னார். அப்படி அனுப்பிய படம் தான் கடைசீயில் நீங்கள் காண்பது. )

பிறகு திருநின்றவூர் வந்து அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 10.15.am. மனோகனுக்கு மிகவும் லேட்டாகிவிட்டபடியால் கடைசியில் விடுப்பு எடுத்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டுகொண்டேன். “இன்னைக்கு லீவ் நாள் தான் ஜி. கம்பெனி போனா ஓ.டி. கிடைக்குமேன்னு பார்த்தேன். பரவாயில்லை. இன்னைக்கு ஒரு நாள் வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்துக்குறேன்” என்று கூறி விடைபெற்று சென்றார்.

நாம் அலுவலகம் வந்து சேர்ந்தோம். வழக்கமான பணிகள். கரும்பு மிஷினில் விடப்படும் கரும்பு சக்கையாகி வெளியே வருவதை போல, மாலை 8.00 மணிக்கு ஒரு சக்கையாக வெளியே வந்தோம்.

நாம் அளித்த இனிப்பு குழந்தைகளுக்கு மதிய உணவின் போது வழங்கப்படுகிறது

மாலை ஏதாவது கோவிலுக்கு சென்று கண்ணனை தரிசிக்க எண்ணியிருந்தேன். ஆனால் நேரமாகிவிட்டபடியால் முடியவில்லை.

கோவிலுக்கு போகாவிட்டால் என்ன கிருஷ்ண ஜெயந்தியை தான் நாம் மிக சிறப்பாக கண்ணன் மனம் குளிரும்படி காலையே கொண்டாடிவிட்டோமே!

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (குறள் 356)

[END]

9 thoughts on “கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!

  1. மக்கள் தொண்டு மகேசன் தொண்டு .இந்த கிருஷ்ண ஜெயந்தியை நீங்கள் சிறப்பான முறையில் கொண்டாடீநீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி

    நன்றி
    வெங்கடேஷ் பாபு

  2. சேவாலயாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சுந்தர். நம் தளம் சார்பாக நடந்த கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாட்டம் குழந்தைகளின் சந்தோஷம் மிகுந்த மனநிறைவை தருகிறது. சேவாலயா போதிக்கும் சத்விஷயங்கள் மனதிற்கு புதிய நம்பிக்கை தருகிறது.

    ‘நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது, இவர் வர வேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது’. இந்த பாடல் வரிகளின் உண்மையான அர்த்தம் இப்போது புரிகிறது. நன்றி சுந்தர்.

  3. சுந்தர்ஜி
    ஊரில் அல்லார் பலர் இருந்தாலும் நல்லார் ஒருவர் இருந்தாலே அவர் பொருட்டு மழை பொழியும் என்று திருக்குறள் கூறும். அதைப்போல சேவாலயா போன்ற அமைப்புகளை நடத்தி வரும் அன்பர்களுக்கும் அதற்கு உதவும் உங்களை போல் நல்லவர்களுக்காகவும் தான் இன்றைய காலத்தில் நல்ல மழை பொழிகிறது.

    கிருஷ்ணரை பல வடிவங்களில் கொண்டாடினாலும் அவனது குழந்தை பருவம் தான் எல்லோர்க்கும் பிடித்தது. அந்த பருவத்தில் உள்ள குழந்தைகளோடு நம் தளம் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியது பெருமைமிக்கது. ஆனால் எத்தனை பணிகளுக்கு இடையில் நீங்கள் இதை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறீர்கள் என்பதுதான் மிகவும் பாராட்டத்தக்கது. இதற்காக உதவிய நண்பர் மனோகரன் அவர்களுக்கும் நம் தளம் சார்பாக நன்றி.

  4. வணக்கம் சுந்தர் சார்

    தங்களுக்கு கிடைக்கும் மிக சிறிய மணி துளிகளையம் எவ்வளவு அழகாக உபோயகபடுதரங்க சார்..

    மிகவும் அருமையான பதிவு..

  5. ///பண்டிகை மற்றும் விஷேட நாட்கள் எப்போது முழுமை பெறுகின்றன தெரியுமா? நாம் எப்படி இனிப்பும், அறுசுவை விருந்தும், படைத்து உண்டு மகிழ்ந்து சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறோமோ அதே போன்று அன்று அப்படி கொண்டாட வழியில்லாதவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையானவைகளை செய்து, அவர்களை மகிழ்ச்சியுறச் செய்து அவர்களையும் நம் கொண்டாட்டத்தில் இணைக்கிறோமோ அப்போது தான் ///

    கைம்மாறு கருதாமல் செய்கின்ற சேவை எப்போதும் வணக்கத்திற்குரியது. சுந்தர் சார் செய்கின்ற இந்த சேவை எப்போதும் பாராட்டுக்குரியது…

  6. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கின்ற விதமாக கிருஷ்ண ஜெயந்தியை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் கொண்டாடி உள்ளீர்கள். சேவைககாகவே ஒரு ஆலயம். மிகவும் புனிதமான சேவை . கூடிய விரைவில் முன் ஏற்பாட்டுடன் உங்களை சந்திக்கிறேன். நமஸ்காரம். மோகன்

    1. மிக்க நன்றி சார். உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
      – சுந்தர்

  7. சுந்தர் சார்,
    கிருஷ்ணா ஜெயந்தியை இதை விட மிக சிறப்பாக செய்ய முடியாது. சூப்பர்.
    நீங்கள் அழைத்தபோது நான் தான் உங்களை அன்று சந்திக்க முடியாமல் போயிற்று.
    நன்றியுடன் அருண்.

Leave a Reply to Venkatesh Babu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *