Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

print
ம் தளம் சார்பாக கடந்த மார்ச் மாதம் (சிவராத்திரி) முதல் உழவாரப்பணி தொடங்கி இதுவரை நான்கு கோவில்களில் செய்துவிட்டோம். நண்பர்களும் திரளாக பங்கேற்று இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘பரவாயில்லையே… கோவிலை தேர்வு செய்து உழவாரப்பணி செய்வது சுலபமாக இருக்கிறதே’ என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அது எத்தனை தவறு என்று பிறகு தான் புரிந்தது. காரணம், இம்முறை பணி செய்ய கோவில் கிடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

நாம் உழவாரப்பணி செய்யும் கோவில் பல நூற்றாண்டுகளை கடந்து தொன்மை வாய்ந்ததாகவும் அதே சமயம் வருவாய் குறைவாக உள்ளதாகவும் இருக்கவேண்டும் என்பதை முக்கிய அம்சமாக கருதுகிறேன். காரணம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல பாடல் பெற்ற தலங்களும், வைணவ திவ்ய தேசங்களும் தமிழகத்தில் உள்ளன.

முந்தைய பதிவு ஒன்றில் நாம் கூறியபடி வருமானம் மிக்க கோவில்களையே எவரும் கண்டு கொள்ளாதபோது வருமானம் குறைவாக உள்ள கோவில்களை எவர் கண்டுகொள்ளப்போகிறார்கள்?

இந்நிலையில் சென்ற மாதம் உழவாரப்பணிக்காக பேரம்பாக்கம் நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லும்போது வழியில் இருந்த மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயத்திற்கு (பல நூற்றாண்டுகள் கடந்த மூல நட்சத்திர பரிகாரத் தலம் இது) நம் தளம் சார்பாக வாசகர் ஒருவர் அளித்த தீப எண்ணையை அளித்ததும் அப்போது கோவிலின் எலக்ட்ரிகல் பிட்டிங்ஸ் மற்றும் மின்சார பல்புகள் தேவை பற்றி அறிந்து அதற்கு ஈசன் நம்மை பயன்படுத்திக் கொண்டதும் நீங்கள் அறிவீர்கள்.

மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயம்

நமது அடுத்த உழவாரப்பணி செய்ய ஏற்ற கோவில் இது தான் என்று அப்போது முடிவு செய்து அதற்கு அனுமதியும் பெற்ற நிலையில், நம் உழவாரப்பணியின் தேதியை இறுதி செய்துவிட்டு ஒரு நாள் கோவில் அர்ச்சகரிடம்  கூறியபோது வேறு ஒரு குழுவினர் அந்த தேதியில் பணி செய்ய அனுமதி கேட்டிருப்பதாகவும் அதற்கு தாம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் கூறினார். நாம் ஏமாற்றமடைந்தாலும் நம்மை விட பன்மடங்கு பெரிய குழுவினராக அவர்கள் இருப்பதாக பட்டதால் மகிழ்ச்சியுடன் என்னை தேற்றிகொண்டேன்.

உண்மையில் நமது 15 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவால் சிங்கீஸ்வரர் போன்ற பெரிய ஆலயத்தில் முழுமையாக உழவாரப்பணி செய்ய இயலாது. (மூலவர் தவிர பல பிரதான சன்னதிகள் இந்த ஆலயத்தில் உண்டு. ஒவ்வொரு சன்னதிக்கும் 5 பேர் இருந்தால் தான் ஓரளவு பணியாவது செய்ய முடியும்.) அதுவும் 5 மணிநேரத்தில் செய்ய வாய்ப்பே இல்லை.

சிங்கீஸ்வரர் காரணமில்லாமல் எதுவும் செய்யமாட்டார் என்று நான் நம்பியதால் அந்த கோவிலில் உழவாரப்பணி திட்டத்தை கைவிட்டுவிட்டு முதலில் ஒப்புக்கொண்ட கோபுரத்தில் விளக்கு அமைப்பது மற்றும் பழைய எலக்ட்ரிகல் பிட்டிங்ஸ்களை பழுது பார்ப்பது மற்றும் புதியவற்றை நிறுவுவது ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தினேன்.

மேற்படி எலக்ட்ரிகல் பணி தொடங்கியபோது என்னாலோ நண்பர்களாலோ சென்னையிலிருந்து பல கி.மீ. தொலைவில் உள்ள அந்த கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியாது என்பதால், நாம் கேட்டுகொண்டதற்கிணங்க என் தந்தை இந்த கைங்கரியத்தில் எனக்கு பெரிதும் உதவினார். பலமுறை மப்பேடு சென்று வந்த அவர் இறுதியில் ஒரு நாள் முழுக்க கோவிலில் தங்கியிருந்து எலக்ட்ரிகல் பிட்டிங்க்ஸ் மற்றும் கோபுர லைட்டுகள் அமைப்பதில் எலக்ட்ரீசியனுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒத்துழைப்பு இல்லையேல் இது சாத்தியப்பட்டிருக்காது.

சிங்கீஸ்வரர் உழவாரப்பணி செய்ய நம்மை அழைக்க மறுத்துவிட்டதால் வேறு கோவிலை இறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது. ஆடி மாதத்தில் அம்மன் கோவில் எதிலாவது செய்யலாம் என்றால் அதிலும் சிக்கல். பல கோவில்கள் நல்ல வருவாயை ஈட்டுகின்றன. நலிவுற்றிருக்கும் ஒரு சில கோவில்களில் உழவாரப்பணி செய்யலாம் என்றால் அவை பாரம்பரியம் மிக்கதாக இல்லை. (நாம் பணி செய்யும் கோவில் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று ஏன் கருதுகிறோம் என்றால்  அந்தக் காலத்தில் கோவில்கள் வருவாயை மனதில் கொண்டு கட்டப்படவில்லை!) இருந்த ஒரு சில கோவில்களில் அனுமதி கிடைப்பதில் பல சிக்கல்கள். என்னால் வேலையை விட்டுவிட்டு இது தொடர்பாக அனுமதி கேட்க எங்கும் நினைத்தபடி சென்று வர இயலாத நிலை.

இந்நிலையில், மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் எலக்ட்ரிகல் பிட்டிங்க்ஸ் அமைக்கும் பணி முடிவடைந்து சில நாட்கள் கழித்து கோபுரத்தில் விளக்கு பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்கு நாங்கள் அனைவரும் பட்டபாட்டை வைத்து ஒரு படமே எடுக்கலாம்.

கோபுரத்தின் இரண்டாம் நிலையில் தேனீக்கள் மிகப் பெரிய கூடு கட்டியிருந்தது. எனவே அதை அப்புறப்படுத்திவிட்டு தான் விளக்குகள் மாட்ட முடியும். தேனீக்கள் இருக்கும் நிலையில் கோபுரத்தில் எலக்ட்ரீசியன் ஏறுவது ரிஸ்க் என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்கள். எனவே கோபுரத்தில் மின்விளக்குகள் அமைப்பது மேலும் தள்ளிப் போனது. தீயணைப்பு துறையினர் வரும்வரை காத்திருந்தோம்.

தீயணைப்பு துறையினர் வந்து கூட்டை அப்புறப்படுத்திய பிறகு அடுத்த நாள் கோபுரத்தில் விளக்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

இந்நிலையில் விளக்குகள் அமைக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய என் தந்தை கோவில் கோபுரத்தின் அழகை வர்ணிக்க எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வார இறுதியில் எப்படியும் சென்று அதை கண்டு ரசித்து புகைப்படமெடுத்து உங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று துடியாய் துடித்தேன். ஆனால் தொடர்ந்து வந்த விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை பழனி திருவாசகம் முற்றோதலுக்கு சென்றுவிட்டபடியால் மப்பேடு செல்லமுடியவில்லை. அடுத்து வந்த ஞாயிறு எனக்கு அலுவலகம் இருந்தபடியால் செல்லமுடியவில்லை. எனவே அடுத்து வரக்கூடிய வார இறுதியில் நிச்சயம் மப்பேடு சென்று விடவேண்டும் என்று முடிவு செய்தோம். ஞாயிறும் (12/08/2013) வந்தது.

ஏப்ரல் மாதம் திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி செய்யும்போது, திருமழிசை – பட்டாபிராம் சாலையில் உள்ள சித்துக்காடு என்ற கிராமத்தில் மிக மிக தொன்மையான பராமரிப்பற்ற சைவ வைணவ தலங்கள் இரண்டு அருகருகே இருப்பதாகவும் அங்கு நம் பணி தேவைப்படலாம் என்றும் போய் பார்க்கும்படியும் கோவில் அர்ச்சகர் நம்மிடம் சொல்லியிருந்தார். எனவே ஞாயிறு காலை சித்துக்காடு சென்று பார்த்துவிட்டு, மாலை மப்பேடு சென்று கோபுரத்தை புகைப்படம் எடுத்து வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

திருமழிசையிலிருந்து சித்துக்காடு செல்லும் சாலை

இதையடுத்து ஞாயிறு காலை எழுந்து வழக்கமான பணிகள் முடித்து திருமழிசையை அடுத்துள்ள சித்துக்காட்டிற்கு பயணமானேன். சித்துக்காட்டிற்க்கு செல்லும் வழி, மிக மிக ரம்மியமாக பார்ப்போர் மனதை மயக்கும் விதம் இருந்தது.

சித்துக்காடு செல்லும் சாலை – ஊர் பெயரை கவனியுங்கள்

திருமழிசையிலிருந்து 7 கி.மீ. தூரம் பயணம் செய்த பின் சித்துக்காடு வர, அங்கு சிவன் கோவிலையும் பெருமாள் கோவிலையும் அருகருகே காண நேர்ந்தபோது பரவசமானேன்.

சித்துக்காடு தாத்திரீஸ்வரர் ஆலயம்

ஒரு புறம் பெருமாள் கோவிலும் மறுபுறம் சிவன் கோவிலும்… கோவில் குளக்கரையும் தென்னை மரங்களும்…அடடா…. சென்னைக்குள் இப்படி சைவ-வைணவ சங்கமமா என்று வியப்பின் உச்சிக்கு சென்றேன்.

சிவன் கோவில் – இறைவன் பெயர் தாத்திரீஸ்வரர். அம்பாள் பெயர் பூங்குழலி.

பெருமாள் கோவில் – இறைவன் பெயர் சுந்தரராஜப் பெருமாள். தாயார் பெயர் சுந்தரவல்லி.

சுந்தரராஜப் பெருமாள் ஆலயம்

செளகந்திகாபுரம், ஹரிசரணநல்லூர் என்றெல்லாம் போற்றப்பட்ட தலமான இங்கே படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் இருவரும் தவத்தில் ஈடுபட்டனர். இந்தத் தலத்தில் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர். பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்தேன். சிவன் கோவிலில் நாம் செல்லும்போது அர்ச்சகர் இல்லை. பெருமாள் கோவிலில் அர்ச்சகர் இருந்தார்.

உழவாரப்பணி குறித்து விசாரித்தபோது சமீபத்தில் தான் ஒரு மிகப் பெரிய குழு இரண்டு பஸ்களில் வந்து இரண்டு ஆலயத்திற்கும் உழவாரப்பணி செய்துவிட்டு சென்றதாக கூறினார்.

“என்ன இங்கேயும் வந்துட்டாங்களா?” என்று ஒரு பக்கம் நாம் அதிர்ச்சியடைந்தாலும் மறுபக்கம் மனம் சந்தோஷப்பட்டது. இது போன்று வெளியுலகினர் அதிகம் அறிந்திராத ஆலயங்களுக்கு தேடி வந்து கைங்கரியங்கள் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு வகையில் நமக்கு நிம்மதி தரும் விஷயம்.

வந்த குழுவினர் மிகப் பெரிய குழுவினர் போல… சுமார் 150 பேருக்கு கோவில் வளாகத்திலேயே நான்கு அடுப்புக்கள் வைத்து உணவு சமைத்திருக்கிறார்கள்.

கோவிலை பார்த்தபோது நமது பணியின் தேவைகள் இருப்பது போல எனக்கு தோன்றினாலும் ஏற்கனவே பணி செய்துவிட்ட கோவிலில் பணி செய்ய மனம் ஒப்பவில்லை.

தாத்திரீஸ்வரர் ஆலயம்

வேறு ஏதேனும் தேவை என்றால் நம்மை அழைக்கும்படி சொல்லி என் நம்பரை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

கிளம்பினேன் என்றாலும் அந்த ஊரை விட்டு வெளியே வரவே மனம் இல்லை. நகரத்து பரபரப்புக்களில் இருந்து விடுபட்ட, தூய்மையான காற்றுடைய, சைவ வைணவ தலங்கள் அருகருகே அமைந்துள்ள இப்படி ஒரு அழகான இடத்தை விட்டு வர யாருக்கு மனம் வரும்?

மூன்று மணிநேரங்கள் கழிந்துவிட்டிருந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன், சாப்பிட்டுவிட்டு சற்று ஒய்வு எடுத்துவிட்டு கடிகாரத்தை பார்த்தால் மணி 2.30 pm.

மப்பேட்டிற்கு ஒரு 4.00 மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும். 5.30 மணிக்கு அங்கிருக்க வேண்டும். அந்தி சாயும் நேரத்தில் தான் விளக்கொளி வீசும் கோபுரத்தை புகைப்படமெடுக்கமுடியும்.

எனவே 4.00 மணிக்கு மப்பேடு பயணம்.

குமணஞ்சாவடி சந்திப்பை தாண்டும்போது, மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் நினைவுக்கு வந்தது. சுக்கிரன் பரிகாரத் தலமான இக்கோவிலை பற்றி பலருக்கு தெரியாது. சென்னையில் உள்ள நவக்கிரக பரிகாரத் தலங்களில் இது ஒன்று. இந்த கோவிலில் உழவாரப்பணி பற்றி பேசிப் பார்ப்போம். ஒப்புக்கொண்டால் இங்கேயே அடுத்த பணியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து மாங்காட்டை  நோக்கி வண்டியை திருப்பினேன்.

மாங்காடு வெள்ளீஸ்வரர்

வெள்ளீஸ்வரர் கோவில் குருக்களை சந்தித்து விஷயத்தை சொன்னபோது, “இப்போ சமீபத்துல தான் சார் வந்து உழவாரப்பணி செஞ்சிட்டு போனாங்க… எதுக்கும் நீங்க மாங்காடு காமாட்சியம்மன் அலுவலகத்துல விசாரிச்சி பாருங்க…இந்த கோவிலோட கண்ட்ரோல் அவங்க தான்…” என்று கூற…. எனக்கு தலையே சுத்திவிட்டது. “என்ன இங்கேயும் நமக்கு வேலை இல்லையா? என்னடா இது சிவன் நம்மளை இப்படி சோதனை பண்றான்?” மனம் தவித்தது.

காமாட்சி அம்மன் பாதம்

வெளியே வரும்போது காமாட்சி அம்மன் பாதத்தை அங்கு காண நேர்ந்தது. உங்களுக்காக அப்படியே அதை புகைப்படமெடுத்துவந்தேன்.

அடுத்து நேரே பேரம்பாக்கம் (மப்பேடு) நோக்கி எனது பைக்கை செலுத்த, ஒரு மணிநேரத்தில் மப்பேட்டை அடைந்துவிட்டேன். ஆனால் நாம் செல்லும் நேரம் நல்ல வெளிச்சம் இருந்தபடியால் கோபுரத்தில் விளக்குகளை போடவில்லை.

நேரத்தை நொடிகூட வீணாக்கக்கூடாது… பிரார்த்தனை நேரம் வேறு நெருங்கிவிட்டது என்பதால், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலை நோக்கி பயணித்தேன். மப்பேட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் பேரம்பாக்கம் அமைந்துள்ளது. ஊருக்கு உள்ளே சற்று ஒதுக்குபுறத்தில் சோளீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மப்பேடு செல்லும் போது… ரம்மியமான மாலை வேளை

அங்கு ஆவலுடன் சென்றோம். ஆனால் வெளியே இருந்து பார்க்கும்போதே தெரிந்துவிட்டது இங்கு நம் பணி தேவைப்படாது என்று. காரணம் கோவிலே சலவைக்கு போட்டு எடுத்தது போன்று ‘பளிச்’ என்று இருந்தது.

அர்ச்சகரிடம் விசாரித்தபோது சமீபத்தில் தான் இங்கு மிக சிறப்பாக உழவாரப்பணி நடைபெற்றதாக கூறினார்.

============================================================
(இந்த பதிவில் காணப்படும் புகைப்படங்கள் கடும் உழைப்பில் விளைந்தவை. காப்புரிமை பெற்றவை. எடுத்தாளுபவர்கள் அவசியம் நம் தளத்தின் முகவரி அளிக்கவேண்டும் என்று நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
============================================================

பேரம்பாக்கம் சோளீஸ்வரர் ஆலயம்

“நீ வேண்டவே வேண்டாம் போடா… எனக்கு நிறைய பேர் இருக்காங்க” என்று சிவன் சொல்வதை போல எனக்கு தோன்றியது.

தரிசனத்திற்கு உள்ளே அழைத்தார்…. சோளீஸ்வரரை சற்று ஏக்கத்துடன் கண்குளிர தரிசித்தேன்.

கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஐயனே… ஜென்மம் கடைத்தேறி உன்னருள் பெறுவதற்கு கண்கண்ட மருந்தாக இந்த எளியவர்கள் உழவாரப்பணியை கருதுகிறோம். ஆனால் நீ என்னடாவென்றால் இம்முறை எங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாயே…? நாங்கள் ஏதேனும் குற்றம் குறை செய்திருந்தால் அப்பன் நீ பொறுத்துக்கொண்டு, உனக்கு தொடர்ந்து சேவை செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்கவேண்டும்” என்று மன்றாடி கேட்டுக்கொண்டேன்.

நாம் சிவனை தரிசித்தபோது ஒரு இளைஞர் மூலவருக்கு முன்பாக அமர்ந்து தேவாரத் திருப்பதிகத்தை படித்துக்கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ, நம் தளத்தின் விசிட்டிங் கார்டை அவருக்கு அளித்து நேரம் கிடைக்கும்போது தளத்தை பார்க்கும்படி சொல்லியிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்தோம். அர்ச்சகரிடம் நம்மை விரிவாக அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

சோளீஸ்வரர் ஆலயம் – விக்னேஸ்வரர் சன்னதி

“நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கும் தலம் இது. திங்கட்கிழமை இங்கு மிகவும் விசேஷம். பலர் வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்து திங்கட்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்வர்” என்று கூறினார். நம்மையும் நமது வாசகர்களையும் ஒரு திங்கள் சுமார் 3 மணிநேரம் செலவிடக்கூடிய அளவிற்கு வரச் சொல்லியிருக்கிறார். அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டுவிட்டு அன்னதானத்தில் பங்கேற்று பிரசாதம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார். ஈசன் அருளிருந்தால் ஒரு நாள் செல்வோம்.

மாலை வேளையில் சோளீஸ்வரர் ஆலயம்

நேரம் அப்போது சரியாக 5.30. ரைட் மந்த்ரா பிரார்த்தனை நேரம்.

நேரே விக்னேஸ்வரர் சன்னதி முன்பாக அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டுவிட்டு பின்னர் பிரார்த்தனை செய்தேன். ஆயிரம் சொல்லுங்கள்… பிள்ளையாரை பார்க்கும்போது மனதில் ஏற்படும் ஒரு நம்பிக்கையும் சந்தோஷமும் தனி.

“எங்கள் பிரார்த்தனைகளை நீ தான் கணேசா நிறைவேற்றித் தரவேணும்” என்று கேட்டுக்கொண்டு அவனிடம் விடைபெற்று, கொடிமரத்திற்கு அப்பால் நமஸ்கரித்துவிட்டு அர்ச்சகரிடமும் விடைபெற்றுவிட்டு வெளியே வந்தோம்.
மணி 6.00 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தி சாயும் நேரம். இப்போது மப்பேடு சென்றால் சரியாக இருக்கும் என்று தோன்றவே, உடனே மீண்டும் மப்பேடு நோக்கி பயணம்.

ஒரு விஷயம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நான் வந்த நோக்கம் நிறைவேறவில்லை. அதாவது உழவாரப்பணிக்கு கோவில் கிடைக்கவில்லை.

மப்பேடு அடைந்தபோது கோவிலில் கோபுரத்தில் விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தது. ‘சிவ சிவ’ என்னும் எழுத்துக்கள் நியான் விளக்குகளில் ஜொலித்துக்கொண்டிருந்தது காணக் கிடைக்காத காட்சி.

ஜொலிக்கும் சிங்கீஸ்வரர் ராஜ கோபுரம்

கோபுரத்தையே ஒரு ஐந்து நிமிடம் ரசித்துக்கொண்டிருந்தேன்.

உள்ளே சென்றவுடன் அர்ச்சகர் நம்மை வரவேற்றார். சிங்கீஸ்வரரை தரிசித்தேன். ஏனோ தெரியவில்லை அப்போது இறைவனிடம் பேச வார்த்தைகள் வரவில்லை. மௌனமே மொழியாகிவிட்டது.

அர்ச்சகர் நம் தளம் சார்பாக போடப்பட்ட லைட் ஃபிட்டிங்குகளை காண்பித்தார். சன்னதியே ஜொலித்துக்கொண்டிருந்தது.

சென்ற முறை சிங்கீஸ்வரரை காற்றோட்டமில்லாத ஒரு வித புழுக்கத்தில் தரிசித்தோம். ஆனால் இம்முறை சூழ்நிலை மிகவும் குளிர்ச்சியாக ஜில்லென்று இருந்தது. என்னவென்று பார்த்தால் மேலே புத்தம் புது ஸ்ப்ளிட் ஏ.சி. மெஷின் ஒன்று மாட்டப்பட்டிருந்தது.

“சார்… உள்ளூர்ல ஒரு அன்பர் சுவாமி சன்னதிக்கும் , அம்பாள் சன்னதிக்கும் ஏ.சி. வாங்கி கொடுத்திருக்கார். ஃபேன் ரிப்பேர் செஞ்சி மாட்டலாம்னா… தீபாராதனை காண்பிச்சி பக்தர்கள் கண்ல ஒத்திக்க வெளியே வரும்போது ஃபேன் காத்துல தீபம் அணைஞ்சிடுது. சிலர் அதை அபசகுனமா நினைக்கிறாங்க. அதனால ஏ.சி. மாட்டிட்டோம்.” என்றார்.

அவர் கூறுவது முற்றிலும் சரி…. தவிர அவன் சன்னதி காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தால் தான் நாம் குளிர்ச்சியாக இருக்க முடியும்.

சுவாமிக்கு முன்னதாக ஸ்டீல் பைப்புகள் வைத்து கூட்டத்தை ஒழுங்கபடுத்தும் தடுப்புக்கள் வேறு போட்டிருந்தார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு வேலையை அவன் கேட்டு செய்து கொண்டது புரிந்தது. சிவனா கொக்கா…?

அடுத்து  அம்பாள் சன்னதி. சென்ற முறை செல்லும்போது ஒரு விளக்கில் ஜொலித்த சன்னதி இம்முறை ஜெகஜோதியாக காட்சியளித்தது.

புஷ்பகுஜாம்பாளை கண்குளிர தரிசித்துக்கொண்டிருந்தேன். இங்கும் மௌனமே மொழியானது. நான் மெய்மறந்து தரிசித்துக்கொண்டிருக்க அர்ச்சகர நம்மை தொந்தரவு செய்ய விரும்பாது… “நீங்க இங்கேயே இருங்க… அங்கே எல்லா வேலையும் முடிச்சிட்டு சன்னதியை சாத்திட்டு வர்ரேன்… ” என்றார்.

அம்பாள் சன்னதியில் ஏ.சி.

சரி என்று அம்பாள் முன்னே அமர்ந்தேன். ஏற்கனவே  சோளீஸ்வரர் சன்னதியில் விக்னேஸ்வரன் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டாலும் “அம்மா தனியா இருக்காங்களே… இங்கேயும் பிரார்த்தனை செஞ்சிடுவோம்” என்று கருதி நம் பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை இங்கே ஒரு முறை செய்தேன். தனிப்பட்ட சில புலம்பல்களும் அரங்கேறின. (வேற யார் கிட்டேங்க போய் நான் சொல்லுவேன்?). பிறகு தியானத்தில் ஆழ்ந்துவிட சுமார் 20 நிமிடத்தில் அர்ச்சகர் வந்துவிட்டார்.

“சரிங்க ஐயா… நான் கிளம்பறேன். நல்ல தரிசனம்… ரொம்ப நன்றி.” என்றேன்.

“இருங்க பள்ளியறை பூஜையை பார்த்துட்டு போகலாம்” என்றார். பள்ளியறை அங்கு தான் இருந்தது.

அடடா… எப்பேர்ப்பட்ட பாக்கியம்…காத்திருந்து பள்ளியறை பூஜையை கண்குளிர கண்டேன்.

இருளில் ஜொலிக்கும் அம்பாள் சன்னதி மண்டபம்

“இன்னைக்கு நீ வேலை செய்ய வேண்டாம்டா… பேசாம என் பள்ளியறை பூஜையை பாரு” என்று ஈசன் நம்மிடம் சொன்னதாக பட்டது எனக்கு. (காரணம் அன்று தான் வேறொரு குழுவினர் அங்கு உழவாரப்பணி செய்திருந்தனர்.)

அர்ச்சகர் சுவாமியையும் அம்பாளையும் ஊஞ்சலில் வைத்து ஆவாகனம் செய்து மந்திரங்கள் சொல்லி பள்ளியறை பூஜை செய்தார்.

“ஏதாவது பதிகம் பாடுங்க…” என்று நம்மை பார்த்து கூற… திடீரென்று கிடைத்த அந்த அரிதினும் அரிய வாய்ப்பை எண்ணி திக்கு முக்காடி போனேன். இருப்பினும் திடீர் கட்டளையால் என் ஹார்ட் டிஸ்க் மக்கர் செய்தது. சட்டென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. “காதலாகி கசிந்து” தான் நினைவுக்கு வந்தது.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

இரண்டு பாடலையும் சற்று உரக்க பாடினேன். (கத்தினேன் என்பதே பொருத்தமாக இருக்கும்!)

அடுத்து பள்ளியறை பூஜையை காண வந்திருந்த ஒரு குடும்பத்திலிருந்து பெண் ஒருவர் சில பாடல்கள் பாடினார். (நாங்கள் மொத்தம் நான்கு பேர் தான் அங்கிருந்தோம்.)

பின்னர் அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காண்பித்தார். முடிவில் பிரசாதமாக உத்தரணியில் பால் தந்தார்கள். சுவாமிக்கு பக்கத்தில் ஒரு அட்டையில் சில பாடல்கள் அடங்கிய ஒரு அச்சிடப்பட்ட தாள் ஒட்டப்பட்டிருந்தது. “அதை பார்க்கலாமா?” என்று ஆவல் மிகுதியில் கேட்டேன்.

“தாராளமா எடுத்து பாருங்கள்… அப்படியே அந்த கடைசியில் இருக்கும் பாட்டை படிங்க” என்றார் அர்ச்சகர்.

அடுத்த நொடி கைகள் அதை மின்னல் வேகத்தில் எடுக்க, பாடலை படித்தேன்.

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

– கந்த புராணம்

அப்பா… அப்பா… இந்த நான்கு வரிகளில் தான் எத்தனை அர்த்தம்…. எத்தனை ஆழம்… எத்தனை அழகு…. எத்தனை செறிவு…. படிக்கும்போதே அமுதை அள்ளி பருகியது போன்று ஒரு உணர்வு…

வாசக அன்பர்கள் இந்த பாடலை மனப்பாடம் செய்து கோவிலுக்கு சென்று ஆலய தரிசனத்தை நிறைவு செய்யும்போது பாடலை மனதில் ஒரு முறை சொல்லுங்கள். சர்வ மங்களம் பெருகும்.

பூஜை முடிந்து வீட்டுக்கு கிளம்ப எத்தனிக்கையில், “இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க… வீட்டுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போங்க…” என்று கூற அவரது அன்பான வார்த்தைகளை தட்ட முடியவில்லை. கோவிலுக்கு அருகிலேயே ஒரு தனி வீட்டில் குடியிருக்கிறார் அர்ச்சகர்.

நம்மை வரவேற்று உபசரித்து காபி கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது நாம் உழவாரப்பணி செய்ய கோவிலை தேடிக்கொண்டிருக்கும் கதையை அவரிடம் சொன்னேன். “நீங்கள் தான் உங்க சிங்கீஸ்வரருக்கு பணி செய்யும் வாய்ப்பை எங்களுக்கு தர மறுத்துவிட்டீர்கள்” என்று கூற, “அவங்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டுருந்தாங்க சார்… தவிர உங்க கிட்டேயிருந்து கன்பர்மேஷன் வர லேட்டாயிடுச்சு… அவங்க வேற ரொம்ப நாளா கேட்டுக்கிட்டுருந்தபடியால் அவங்களை செய்ய சொல்லிட்டேன்” என்றார்.

“நாங்கள் செய்வதை விட அவர்கள் மிகச் சிறப்பாக நிச்சயம் செய்திருப்பார்கள்” என்றேன்.

“ரொம்ப நல்லா செஞ்சாங்க… ஒரு பெரிய டீமே வந்தது. நிறைய வேலை பார்த்தாங்க…!” என்றார்.

“நாங்க பணி செய்றதுக்கு பக்கத்துல ஏதாவது தொன்மையான வருமானம் குறைவா இருக்குற கோவில் இருந்தா சொல்லுங்களேன் ” என்றேன் காஷுவலாக அவரிடம். அப்போது அவர் REFER செய்தது தான் இந்த வாரம் நாம் உழவாரப்பணி மேற்கொள்ளவிருக்கும் இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாயகேஸ்வரர் திருத்தலம்.

மிகவும் தொன்மையான ஆலயம் அது என்றும் யோக தக்ஷினாமூர்த்தி எழுந்தருளியுள்ள தேவாரப் பாடல் பெற்ற குருபரிகாரத் தலமும் கூட என்றும் கூறினார் அவர். இது போதாதா நமக்கு ? கோடுபோட்டா நாம ரோடு போட்டு பில்டிங் கட்டிடமாட்டோமா…

இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாயகேஸ்வரர் திருத்தலம்

கிளம்புவதற்கு முன்னர் தம்பதி சமேதராக அவரை மனைவியுடன் நிற்க சொல்லி அவர்கள் கால்களில் பூஜையறை முன்பாக வீழ்ந்து ஆசிபெற்றேன். நம் தள வாசகர்களின் நலனும் பிறகு வேறொன்றும் வேண்டிக்கொண்டேன். (வேறென்ன உங்களுக்கு தான் தெரியுமே…. சரி…சரி…!)

உழவாரப்பணிக்கு தகுந்த கோவிலை தேடிய அந்த ஞாயிறு அன்று மட்டும் சுமார் 150 கி.மீ. பைக்கில் சுற்றியிருப்பேன்.

எப்படியோ என் தேடல் வீண்போகவில்லை. வீண்போகவும் போகாது. தேடல் இருக்கும் வரை தான் வாழ்க்கை என்பதை நான் நன்கறிவேன்.

ஆகையால் தான் சொர்கத்திற்கு இணையான பேரழுகுடைய ஒரு தலத்தை இறைவன் நமக்கு பணி செய்ய காட்டியிருக்கிறான்.

என்ன சொல்ல…

இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் இருக்கிறது;  கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் இருக்கிறது!

============================================================
(இந்த பதிவில் காணப்படும் புகைப்படங்கள் கடும் உழைப்பில் விளைந்தவை. காப்புரிமை பெற்றவை. எடுத்தாளுபவர்கள் அவசியம் நம் தளத்தின் முகவரி அளிக்கவேண்டும் என்று நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
============================================================

உழவாரப்பணிஅறிவிப்பு :

நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி – வரும் ஞாயிறு 25/08/2013 அன்று திருஞானசம்பந்தர் பாடிய – தேவாரப் பாடல் பெற்ற குரு பரிகாரத் தலமான யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள கனககுசாம்பிகை சமேத அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553 காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவனருளால் நடைபெறும். மேற்படி உழவாரப்பணியில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலைபேசியில் தொடர்புகொள்ள விரும்புகிறவர்கள் மாலை 7.30 க்கு மேல் 9840169215 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

வேனில் செல்ல ஏற்பாடாகியுள்ளது. கைங்கரியத்தில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு தளம் சார்பாக காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படும்.

கோவிலில் வழக்கமான துப்புரவு மற்றும் தூய்மை செய்யும் பணிகளுடன் கூடவே நால்வர் சன்னதி, சூரியன்,  சந்திரன், தக்ஷிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளுக்கு மல்டி கலர் பெயிண்ட் பூசும் கைங்கரியம் (தகுந்த நபர்களை வைத்து), எலக்ட்ரிகல் ஃபிட்டிங்க்ஸ் பழுது பார்ப்பது மற்றும் புதிதாக போடுவது, கோவிலை பற்றிய அறிவிப்புடன் கூடிய சிமென்ட்டினால் ஆன CONCRETE CEMENT SLAB BOARDS தயார் செய்து பிரதான இடங்களில் நிறுவுவது உள்ளிட்டவை நம் தளம் சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நம் உழவாரப்பணி நண்பர்கள் இது தொடர்பாக உதவுவதாக கூறியிருக்கிறார்கள்.

[END]

29 thoughts on “எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

  1. சுந்தர்ஜி

    வாழ்க , வளர்க , ஆண்டவன் அருள் ஆசியுடன்.

  2. சுந்தர் சார்

    சார் ஓவ்வவொரு புகைப்படம் அழகோ அழகு சார்.. இதை எடுக்க எவ்வளவு சிரம பட்டு இருக்கங்க சார் இந்த அழக பார்த்தாவே மனதுக்கு ஒரு நிம்மதியா இருக்கு சார் கோபர தருசினம் கோடி புண்ணியம் சொல்லுவாங்க..

    சிவன் இன்றி ஓர் அணுவும் அசையாது சார்..

    பசுமையான பதிவு சார்

    நன்றி நன்றி

  3. கோவிலில் பல்ப் மற்றும் எலக்ட்ரிகல் பிட்டிங் போட்டோம் என்று சொன்னிர்கள். அந்த ஒரு வார்த்தைக்கு எவ்வளவு உழைத்து இருக்கிறிர்கள் என்று தெரிகிறது.
    யாவர்க்கும் சொல்வது எளிது அதை செயல் படுத்தும் போது நீங்கள் கொடுக்கும் உழைப்பு அதிகம்.
    விளக்கு அமைக்கும் பணியில் நம் தந்தையின் பங்கு அதிகம் அவருக்கு நம் தள வாசகர்கள் அனைவரும் கடமை பட்டுள்ளோம்
    இந்த ஜென்மம் கடைத்தேறி அவன் அருள் பெறுவதற்கும் மறு பிறவி இல்லாமல் அவன் பதம் சேர உளவார பணி ஒன்றே என் முடிவு
    நியான் விளக்கின் ஒளி மூலம் சிவ சிவ என்னும் எழுத்து என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
    “இறைவனிடம் பேச வார்த்தைகள் வரவில்லை. மௌனமே மொழியாகிவிட்டது.” இப்போது புரிகிறதா அன்று ஒரு நாள் இதே வார்த்தையை நான் மெசேஜ் பண்ணினேன் என்று.
    பழனி முற்றோதல் படித்து விட்டு எனக்கு மனம் நிறைந்து உடம்பே லேசானது போல் இருந்தது

  4. வணக்கம் சுந்தர் அண்ணா,
    உழவார பணிக்காக கோவில்களை தேடி தேடி, தொடர்ச்சியாக விடா முயற்சியோடூ செய்றது பெரிய விஷயம். இந்த பணிக்காக உங்க அப்பாவும் அவங்க பங்களிப்பை கொடுத்து இருக்காங்க. இது வரை அவங்க செய்த புண்ணியம் தான், இது போன்ற நல்ல வலை தளத்தையும், பிரேமவாசம் போன்ற காப்பகங்களுக்கும் நற்பணி செய்யவும், அதன் மூலமா உங்களை என் போன்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க கடவுள் வரம் அருளி உள்ளார்.

    நன்றி.

  5. எப்படியோ உங்களை உழவாரப்பணிக்கு என தேட வைத்து பல நாமங்களில் தரிசனங்களை அள்ளி இறைவன் நமக்கு தந்துவிட்டார்.
    படங்கள் அனைத்தும் ஜொலிக்கின்றன. காமாட்சி பாதம் அருமையிலும் அருமை. படம் எடுக்க கொஞ்சம் ரிஸ்க்தான். பொதுவாக பள்ளியறை பூஜை பார்த்தால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள். அதுவும் நீங்கள் ப்ளான் பண்ணாமல் ஈசன் அருளால் கிடைத்துள்ளது. கொடுத்துவைத்தவர் சார் நீங்கள்.

  6. பதிவும் படங்களும் மிக அருமை.இறைவனின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றி. தங்கள்நவிருப்பமும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
    அர்ச்சனா.

  7. சுந்தர்ஜி,

    சின்கீஸ்வரர் ஜொளிகின்றார். என் பக்தன் என்னை அழகு படுத்தி பார்க்கின்றான் என்று கம்பீரமாக சொல்வதை போல் உள்ளது.
    தங்கள் அப்பா இந்த அரும்பணியில் அவரை ஈடுபடுத்தி கொண்டு
    அரும் பணி ஆற்றிய அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் செயலை செய்வதற்கு தங்களை மிகவும் சோதிக்கின்றான். இது அவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.படங்கள் அனைத்தும் ஜொலிக்கின்றன. பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது.

    மொத்தத்தில் உங்கள் உழைப்பு என்றுமே வீண் போகாது.

    நல்லதொரு காலம் விரைவில்.

    நன்றி

  8. சுந்தர் சார், இந்த பதிவிலிருந்து எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது எங்கலுக்கு தெள்ள தெளிவாக தெரிகிரது…அத்தனை உழைப்பிர்க்கும் ஆண்டவன் ஒரு கணக்கு வைத்திருப்பான்..அதற்க்கான ஊதியத்தை அவன் கண்டிப்பாக உங்களுக்கு கொடுப்பான்..(மனம்போல் வாழ்வு) உங்கல் நல்ல மனதிற்கு நல்லது நடக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்திக்கின்றேண்…

    ஆண்டவன் இல்லத்தை தேடி அவருடைய பணிக்காக நீங்கள் ஒருவர் ஓடுவதைவிட நம் தள வாசகர்களுக்கு தெரிந்த புராதன கோயில், வருமானம் குறைவாக சரியான பராமரிப்பு இல்லாத கோவில், ஏதாவது உள்ளதா என வினவினால் கண்டிப்பாக பல கோவில்கள் நமக்கு கிடைக்கும். அதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்…

    மேலும் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, காரணம் என்னுடைய சுவாதி நட்சத்திர பரிகாரஸ்தலம் அது, அந்த கோவிலில் நமது உழவாரப்பணி கிடைத்திருந்தால் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம்..அதனை புகைப்படமாக கொடுத்தமைக்கு நன்றிகள்.

    1. சந்திரசேகரன் அவர்களே, நிச்சயம் அவரவர் பகுதியில் உள்ள தொன்மையான அதிகம் அறியப்படாத வருவாய் இன்றி தவிக்கும் ஆலயத்தை பற்றி தகவல்களை எனக்கு அளியுங்கள். நிச்சயம் அது எனக்கு பணியை இறுதி செய்வதற்கு உதவியாக இருக்கும்.

      மேலும் தாதிரீஸ்வரர் கோவிலில் கட்டிட பணிகள் நடந்துவருவதால் அது நிறைவடையும் நேரத்தில் நமது கைங்கரியம் தேவைப்படலாம்.அப்போது அனுமதி பெற்று நிச்சயம் செய்யலாம்.

      – சுந்தர்

  9. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    கிடைப்பதற்கரிய கோவிலில் உழவாரப்பணி செய்து பல வெற்றிகளை குவிக்க செய்ய ஆண்டவன் அலையவிட்டு தான் வழி காட்டி இருக்கிறான், ஆனந்தமாக ஏற்று வெற்றிகளையும் அருளையும் பருகுவோம்.

    எவ்வளவு கடினமோ அந்த அளவுக்கு உயர்வையும் அள்ளி அள்ளி அருள்கிறான் என்பதற்கு சாட்சி உங்கள் உழைப்பும் இந்த பதிவும் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    நன்றி நன்றி நன்றி.

  10. சுந்தர்,
    அருமையான பதிவு. எவ்வளவு நீண்ட பயணம்… படிக்கப் படிக்க வாசகர்களை சுவாரஸ்யமாக இழுத்துக் கொண்டே செல்கிறீர்கள். வாழ்த்துக்கள். இறைவன் உங்கள் பணிக்கும் ஏதேனும் ஒரு கோயிலில் காத்துக் கொண்டிருப்பார். தமிழ்நாட்டில் கோயில்களுக்கா பஞ்சம்?

    1. நன்றி சார். இறைவன் ஏதேனும் ஒரு சன்னதியில் காத்துகொண்டிருப்பார் என்கிற நம்பிக்கையில் தான் என் பயணம் போய்க்கொண்டிருக்கிறது.
      – சுந்தர்

  11. ///இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் இருக்கிறது; கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் இருக்கிறது! -///

    மிகப் பெரிய விஷயத்தை ஒரு பதிவின் மூலம் மிக அழகாக தெரிவித்துள்ளீர்கள்
    .
    சென்றமுறை நாம் தரிசித்த சின்கீஸ்வரர் ஆலயமா இது? நம்பவே முடியவில்லை சுந்தர்…..கைங்கரியத்திற்கு உதவிய நம் நண்பர்களுக்கும் முதலில் உங்கள் அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும்….அடுத்த முறை உங்கள் இல்லத்திற்கு வரும்போது உங்கள் அப்பாவிடம் தவறாமல் நன்றி தெரிவிக்கிறேன்…..
    .
    ////பிறகு வேறொன்றும் வேண்டிக்கொண்டேன். (வேறென்ன உங்களுக்கு தான் தெரியுமே…. சரி…சரி…!)//////

    தெரியுது தெரியுது…..இந்தபதிவில் நீங்கள் குறிபிட்டதைபோல் தேடல் இருக்கும் வரைதான் வாழ்கை என்பது நிதர்சனமான உண்மை. .

    உங்கள் சொந்த வாழ்விலும் அதுபோன்ற ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து உங்கள் தேடல் முடிவுக்கு வர அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்…

    அனைத்து புகைப்படங்களும் மிக அருமை சுந்தர்….அதிலும் அந்த மாலை வேளை அந்தி சாயும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கிறது…..

    மாரீஸ் கண்ணன்

  12. அய்யா தங்களின் வேலைக்கு நடுவே இத்தனை பணிகளையும் செய்வதற்கு அந்த எல்லாம் வல்ல ஈசன் தான் தங்களுக்கு அருள் புரிகிறான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் தாங்கள் செய்து வரும் இந்த பணியை நானும் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகள்ளக நினைக்கிறேன் ஆனால் இன்றுவரை நான் சூழ்நிலை கைதியாக மட்டுமே உள்ளேன் தங்கள் பணிமேலும் சிறப்பு பெற ஈசன் அருள் புரியட்டும்.

    நானும் இந்த அரிய வாய்ப்பில் அளந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள்.

    மேலும் பேரம்பக்க்கம் மற்றும் அதை சுற்றி சுமார் 25க்கும் மேற்பட்ட சிவ ஸ்தலங்கள் உள்ளன தங்களுக்கு தேவை பட்டாள் அதை பற்றி தகவல் தெரிவிக்கக நான் தயாராக உள்ளேன்.

    சிவ சிவ ஓம் .

    1. மிக்க நன்றி.

      எனது மின்னஞ்சல் முகவரிக்கு தகவலை அனுப்புங்கள். உண்மையில் உதவியாக இருக்கும்.

      தங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.

      – சுந்தர்
      simplesundar@gmail.com

  13. ” “என்ன இங்கேயும் வந்துட்டாங்களா?” என்று ஒரு பக்கம் நாம் அதிர்ச்சியடைந்தாலும் மறுபக்கம் மனம் சந்தோஷப்பட்டது. “– தங்கள் சிரமம் குறித்து கஷ்டமாக இருந்தாலும் இந்த வரிகளை படித்ததும் சிரித்துவிட்டேன் .

  14. எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
    ஒரு வரி திருக்குறள் அருமை .

    எங்கள் அனைவரையும் உடன் அழைத்து சென்று,நீங்கள் சென்ற இடமெல்லாம் காண்பித்து அழைத்துவர மிகுந்த சிரமபட்டு வார்த்தைகளும்,வசனங்களும்,உரையாடும் விதமும் அருமையக உள்ளது .படிக்கும் போது மெய்சிலிர்க்கும் அனுபவம்

    கடும் உழைப்பில் விளைந்த புகைப்படங்கள் உயீரோட்டமகா அமைத்துள்ள விதம் அருமை .

    திரைப்படம் பார்ப்பவர்களுக்கு திரைக்கு பின்னால் என்ன பிரச்சனைகள் என்பது போல் ,பதிவு எழதுவது,உழவாரபனி அமைப்பிற்கு தாங்கள்,உழைப்பிற்கு நாங்கள் என்றென்றும் துணையாக இருப்போம் .

    அம்மை ,அப்பன் ,மகனிடத்தில் புலம்பல் ,வேண்டுதல் எங்கள் கண் முன் நிறுத்தி விட்டீர்கள் .

    மொத்தத்தில் முத்தான முக்கியமாக .முடிவினை சொல்வதற்கு எங்களை ஏங்கவைத்த விதம் அருமை ……

    -பாராட்டுகள்

    நன்றி .
    -மனோகர்

  15. திரு சுந்தர் அவர்களுக்கு
    உங்கள் பதிவை படித்தேன் அபார நடை
    உங்கள் கூடவே பயணம் செய்தது போன்ற உணர்வு
    வாழ்த்துகள்

    அன்புடன்
    முருகராஜ்

    1. தங்கள் வருகை ஒரு இன்ப அதிர்ச்சி !!

      அவனை பற்றி எழுதுகையில் சிந்தனைக்கு ஒரு தனி சக்தி வந்துவிடுகிறது சார்.

      பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

      – சுந்தர்

  16. இறைவன் நம்பியவர்களை கொஞ்சம் சோதிப்பார் ,ஆனால் கை விட மாட்டார்

  17. சுந்தர் சார்,
    மிகவும் சந்தோசம். மிக பெரிய விஷயம். உங்களை நினைக்கையில் மிக பெருமையாக உள்ளது. கோபுரம் மிக அழகாக உள்ளது.
    நன்றியுடன் அருண்.

    1. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
      – சுந்தர்

      1. dear Sundarji
        i could see hardwork and dedication towards the tasks with our Site.. Its easy to comment but the efforts you are putting is really much appreicaited.
        Im sure every time if you come out of temple how much satisfaction you get..
        I wish many more sucess and all good things come to you and all our site readers.
        Advanced First Anniversary Wishes to our Site.. Wishing to reach new heights as you wish.

        All is well.

        Gokul

  18. சுந்தர், உங்களுடைய விடா முயற்சியும் உத்வேகமும் பிரமிப்பை தருகிறது. இந்தப்பதிவில் உள்ள ஒவ்வொரு புகைப்படமும் மிகவும் அருமை. உங்களது எழுத்து நடை அதைவிட அருமை. சொந்த வேலை காரணமாக சற்றே தாமதமாக அளித்த கருத்து பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். இருந்தாலும் உங்களுடைய இத்தனை முயற்சிகளின் பலனாக கிடைத்த இந்தப்பதிவை படித்தபிறகு அதற்கு ஒரு பின்னூட்டம் கூட நான் கொடுக்கவில்லையென்றால், என்னை விட ஒரு சோம்பேறி வேறு யாரும் இருக்க மாட்டார்கள். வாழ்த்துக்கள் சுந்தர்.

  19. What a search!!no one would have dared to go to such extreme measures for others—150 km s is no mean task—that too in a 2 wheeler—it definitely takes a toll on the body—but U proved again that “WHEN THERE IS A WILL, THERE IS A WAY”..
    Another lesson learnt fro U and UR experience!!!
    So much difficulty and efforts u put for ever uzhavarapani …it’ s the icing on the cake!!efforts +work..adds to the beauty!!!
    As far as those I know personally, U are the one who uses TIME most EFFICIENTLY!!admire u for that very much!! RESPECT TIME—everything is under our control–!!
    Photos are superb!!!
    Hats off!!!
    Regards
    R.HariHaraSudan.
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  20. ஒரு தாய் எப்படி பத்து மாதங்கள் தவமாய் தவமிருந்து ஒரு பிள்ளையை பெற்று எடுக்கிறாரோ அது போல ஒவ்வொரு பதிப்புக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது என்பதை உங்களின் இந்த பதிவு தெளிவாக விளக்குகிறது !!!

    உங்களுடைய இத்தனை இடையறாத பணிகளுக்கு இடையில் நமது வாசகர்களுக்காக நீங்கள் எடுத்துகொள்ளும் முயற்சி பாராட்டினாலும் தகும் !!!

    தொடரட்டும் உங்கள் தேடல்
    எங்களுக்காகவும் கூட :))

  21. சுந்தர் சார் காட்டூர் மலைகோயில் காலபைரவர் திருகோயில் காத்து கிடக்கிறது …நீங்க தான் பைரவர் கோயில் பணிக்கு உகந்த
    சரியான மனிதர் …..
    சிவாய நம…..பைரவமே சிவம்…..

  22. திரு சுந்தர் அவர்களுக்கு எனது கோடானுகோடி வணக்கங்கள். சென்ற வாரம் சின்கீஸ்வரர் ஆலயம் சென்றோம் . உண்மையிலேயே நீங்கள் செய்துள்ள பணிகள் மிகவும் பாரட்டக்கு உரியது. உங்கள் நற்காரியங்களுக்கு இறைவன் துணை இருக்க நானும் வேண்டுகிறேன்.எனக்கும் ஏதாவது நன்கொடை அனுப்ப/பங்கு பெற மனம் விருபுகிறது. எப்படி என்று விளக்கவும். நன்றி. பாண்டுரங்கன், Bengaluru. 08-12-2013.

    1. மிக்க நன்றி சார்.

      http://rightmantra.com/?page_id=7762

      இந்த லிங்கை செக் செய்யவும். இதில் நமது பணிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. நமது வங்கிக்கணக்கு எண்ணும் தரப்பட்டுள்ளது.

      – சுந்தர்

Leave a Reply to MURUGARAJ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *