Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > வருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்!

வருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்!

print

மீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்த என்னை பாதித்த செய்தி ஒன்றை ஒன்றை அப்படியே தருகிறேன். தமிழகத்தில் கோவில்களின் நலன் எந்தளவு கவனிப்பாரின்றி உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  ‘வருமானம் உள்ளவை’, ‘வருமானம் அற்றவை’ என்ற வேறுபாடு எதுவும் இன்றி தமிழகத்தில் கோவில்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தத்திற்குரிய விஷயம்.  இது குறித்த விழிப்புணர்வு அவசியம் நம் அனைவருக்கும் தேவை என்பதால் இந்த பதிவை அனைவரும் முழுமையாக படிக்கவும்.

சிவன் கோவில் ஒன்றின் பரிதாப நிலை (Source : http://sivasankaravijayam.blogspot.in)

==========================================

கோடிக்கணக்கில் வருவாய் இருந்தும் கும்பாபிஷேகம் காணாத கோயில்கள்

இந்திய கலாசாரத்தின் ஆணிவேர்களாகவும், அடையாளமாகவும் விளங்கி வருபவை திருக்கோயில்களே. இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தை ஒரு மெல்லிய நூலிழையில் வலுவாக பிணைத்து காத்து வரும் பெருமைமிகு சின்னங்கள் கோயில்கள். இத்தகைய கோயில்களுக்கு அந்நாட்களில் அரசர்களும், தனவந்தர்களும், பெரும் அரசு பொறுப்பில் இருந்தவர்களும் அசையும், அசையா சொத்துகளை உடமையாக்கி வைத்திருந்தனர். இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த கோயில்களில் அன்றாட பூஜைகள் தடையின்றி நடக்கவும், கோயில்களை நம்பியுள்ள அர்ச்சகர்கள், பிற பணியாளர்களின் ஊதியத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதோடு கோயில்கள் கல்விச்சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், கலாசார பண்பாட்டு மையங்களாகவும், அவசர காலங்களிலும், இயற்கை சீற்றங்களின் போதும் மக்களை காக்கும் மையங்களாகவும் திகழ்ந்தன.

இன்று கோயில்களுக்கு சொந்தமான அந்த சொத்துகள் அனைத்தும் அப்படியே உள்ளதா என்றால் இல்லை. அதே நேரத்தில் இன்றளவும் சொத்துகளுடன் வருவாய் வாய்ப்புள்ள கோயில்களும் ஏராளமாக உள்ளன. சொத்துகள் இருந்தபோதிலும் அவை ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருவாய் சரிவர வராமல் உள்ள திருக்கோயில்களும் உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,500 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் சொத்துகள் மூலம் வரும் வருவாய், உண்டியல் வருவாய், தரிசன டிக்கெட்டுகள், பிரசாத விற்பனை என மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு ஈட்டும் வருவாய் இன அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக ஈட்டப்படும் வருவாய் ரூ.300 கோடியை தாண்டுகிறது. இந்த வருவாயில் கோயில் பூஜை, அர்ச்சகர், பிற பணியாளர்களுக்கு சம்பளம், அன்னதான திட்டம் என்று போக, மீதியுள்ள தொகை மொத்தமாக அரசின் கஜானாவை சென்றடைகிறது.

இந்த வருவாயை கொண்டுதான் பாழடைந்து வரும் கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளை கடந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும், ஒரு கால பூஜைக்கே தடுமாறும் கோயில்களை அடையாளம் கண்டு அந்த கோயில்களில் ஒரு கால பூஜைக்காவது வழிவகை செய்யப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் 520 கோயில்களில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதற்காக ரூ. 7 லட்சம் செலவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள திருக்கோயில்களின் சொத்துகளை மீட்க வேண்டும். குத்தகை, பாக்கி இனங்கள் அனைத்தும் வசூலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்து சமய ஆன்மிகவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் பங்களிப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 536 கோயில்களும், உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் ஆயிரம் திருக்கோயில்களும், பிற சிறிய கிராமப்புற கோயில்களும் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட கோயில்கள் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர், ரத்தினகிரி பாலமுருகன், வேலப்பாடி வரதராஜ பெருமாள், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில், ஒடுகத்தூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் என்று பட்டியல் நீள்கிறது. தமிழகத்தில் அதிக வருவாய் உடைய கோயில்களாக பழனி, திருத்தணி, திருச்செந்தூர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் உள்ளன.

அத்துடன் கோயில் உண்டியல் வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு செல்லாமல், அந்த நிதியை நலிவடைந்த கோயில்களுக்கு பரவலாக்கப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்பதே ஆன்மீகவாதிகளின் எதிர்பார்ப்பு.

திருக்கோயில்களின் அசையா சொத்துகள்: கோயில்களுக்கு சொந்தமாக ஆண்டுக்கு இருபோகம் விளையக்கூடிய 4 லட்சத்து 78 ஆயிரத்து 546 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இவற்றை 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேர் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர். பல்வேறு அரசு மற்றும் பொது உபயோகங்களுக்காக 135.69 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துகள் தொடர்பாக கடந்த மார்ச் 31ம் தேதி வரை 33,347 வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 17,191 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு ரூ.14.86 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 16,156 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுடன் தொடர்புடைய நிலுவைத்தொகை ரூ.18.45 கோடியாகும். அசையா சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.59 கோடி வருவாய் கிடைக்கிறது.

வறுமையில் வாடும் கோயில் ஊழியர்கள்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் கிளார்க் என்றால் கோயில் வருவாய் அடிப்படையில் ரூ.1,500 முதல் ரூ.3,000ம் வரையும் அதற்கு கீழே உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள், பிற பணியாளர்கள் அனைவரும் ரூ.1,500 வரையே ஊதியமாக பெறுகின்றனர். இதிலும் ரூ.100 முதல் ரூ.750 வரை ஊதியம் பெறும் ஊழியர்களும் வருகின்றனர். இந்த வருவாயில் வாழ்க்கையை நடத்துவது கஷ்டம் என்பதால் இதற்கும் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, திருக்கோயில் பணியாளர்களையும் அரசு ஊழியர்களை போல பணிவரன்முறைபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கோயில்களின் வருவாய்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,488 கோயில்களும், மடங்கள் 56ம், கோயிலுடன் இணைந்த மடங்கள் 58ம், சமண கோயில்கள் 17, சிறப்பு அறக்கட்டளை கோயில்களாக 1,721 கோயில்களும், சிறப்பு நிர்வாகத்தின் கீழ் 189 கோயில்களும் என 38,529 உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்கள் 34,336, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.2 லட்சத்துக்குள் வருவாய் உள்ள கோயில்கள் 3,402. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சத்துக்குள் வருவாய் உள்ளவை 557, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோயில்கள் 234.கிராமப்புற திருக்கோயில் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் 10 கோயில்கள் முதல்கட்டமாக இந்த நிதி ஆண்டில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபரி நிதியில் இருந்து ரூ.2 கோடி நிதி கடந்த நிதி ஆண்டு பெறப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 256 கோயில்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிதி ஆண்டு மேலும் 300க்கும் மேற்பட்ட கோயில்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு கால பூஜைக்கு வழி

ஒரு கால பூஜையும் நடைபெறாமல் தள்ளாடும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 931 கோயில்களில் ஒரு கால பூஜை தொடர்ந்து நடைபெற ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 539 கோயில்களில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.10 ஆயிரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்பு ரூ.90 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. அதில் இருந்து வரும் ரூ.750 வட்டியை கொண்டு கோயில் பூசாரி ஒரு கால பூஜையை தொடர்ந்து மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

[நன்றி : தினகரன் நாளிதழ் | www.dinakaran.com]

==========================================

7 thoughts on “வருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்!

  1. எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவோம் என்பது இலுக்கு.
    அக்கு வேறு ஆணி வேராக புள்ளி விவரங்களுடன் தினகரன் நாளிதல் வெளியிட்டு உள்ளது.
    அதை நம் தளத்தில் போட்டது நாங்களும் அதை படித்து கோவில்களின் நிலை அறிந்தோம்.
    இந்து சமய அறா நிலைய துறை எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கிறது.
    ஊழல் பெருகிவிட்ட நிலையில் சாதாரண மக்களால் வேடிக்கை பார்க்க தான் முடிகிறது.

  2. வணக்கம்

    கோவிலில் நடக்கும் ஊழலை தடுத்தால் போதும் என்று நினைக்கிறேன்.

    ரூ 750 ஐ வைத்து ஒரு கால பூஜையை செய்வது என்பது சற்று கடினம். இப்போ இருக்கிற விலைவாசிக்கு …ஒரு மாலை ரூ20 * 30 = 600 மற்றும் உதிரி பூக்கள் ரூ5*30 = 150 ……600+150 = 750/-

    பொதுவாக நாம் கோவிலில் சிவன் அல்லது முருகர் மூலவராக இருந்தால் நிச்சயமாக விநாயகர் , சிவன் , பார்வதி , நவ கிரகங்கள்; ..போன்ற தெய்வங்கள் இருக்கும் …என் வீடு அருகில் இருக்கும் கோவிலில் 36 தெய்வங்கள் உள்ளன.

    முருகர் மூலவர். அதனால் அவருக்கு மட்டும் ஒரு மாலை …சில சமயம் எம் பெருமான் சிவனுக்கு பூக்கள் இல்லாமல் இருக்கும் …அதை பார்க்கும் பொது எனக்கு ஒர வருத்தமாக இருக்கும் …என் தந்தை வீடு இல் உள்ள சில்ல பூக்கள் கொடுப்பார் ….வருமானத்தை சுரட்டும் அரசியல்வாதிகள் இதை இன்னும் அதிக படிக்க வேண்டும்..இதுவே என்னோட தாழ்மயான வேண்டுகோள்.

  3. இந்த புள்ளி விவரங்களை படிக்குபோது எப்படி மனதில் செட் செய்வது என தெரியவில்லை ஆனால் அபார ஊழல்,ஆக்கிரமிப்பு,அரசியல் இதில் பின்னி கிடக்கிறது என்பது மட்டும் புரிகிறது ,நமது அரசாங்கம் போடும் திட்டம் முழுவதும் எப்பதான் முழுமையாக கடைசி இடத்தை சென்றடைகிறது சொல்லுங்க ஆளாளுக்கு சுரண்டியதுபோக மிச்சமீதி இருந்த அத கொடுப்பாங்க…அப்படி இல்லனா அதிக வருமானம் உள்ள கோவில்களுக்கு மட்டும் நமது அரசாங்கம் அதிக அக்கறை காட்டுது…

    இதேபோல்எனக்குதெரிந்த பழங்கால சிவன் கோயில் ஒன்று (சிங்கபெருமாள் கோவில் இருந்து ஏழு கிலோமீட்ரர் தூரம் )தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது ,கோவிலின் பூமிக்குள் பழைய சிலைகளும் புதைந்து கிடக்கின்றது ஒரு சில தன் ஆர்வலர் அதற்க்கு போராடி வருகின்றனர்…

    தமிழ் நாட்டு கோவிலின் நிலைமையை கோடிட்டு காட்டிய சுந்தர் சார் அவர்களுக்கு நன்றிகல்…

  4. வணக்கம் சுந்தர் சார்

    கோவிலில் நடக்கும் ஊழலை தடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். –

    அனைவரும் கண்டிப்பாக படிக்கச் வேண்டிய பதிவு சார் மற்றும் இதை பர்த்தவது அரநிலைதுறை திருந்த வேண்டும் சார் ..

    நல்ல பதிவு..

  5. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    தமிழ் நாட்டு கோவில்களை பற்றிய மிக அறிய புள்ளி விபரங்களை தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நம் தளம் அறியட்டும். ஆன்மிகம் அரும்பட்டும். அருட் கொடைகள் மலரட்டும். சிவனடி சிரிக்கட்டும்.

  6. சுந்தர்ஜி
    ” உழவார பணியின்போது சில அர்ச்சகர்கள் கோவிலில் நடக்கும் பலவற்றை வெளிப்படையாக வெளியிட வேண்டாம் என சொன்னார்கள். அதனால் அவற்றை வெளியிட முடியவில்லை” என முன்பு ஒரு பதிவில் போதிய வருமானம் இருந்தும் சரியான பராமரிப்பு இல்லாதது குறித்து ஆதங்கப்பட்டீர்கள். உங்கள் ஆதங்கம் தினகரன் பதிவு மூலம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதை பார்த்த பிறகாவது ஏதேனும் நல்ல மாற்றங்கள் நடந்தால் பரவாயில்லை.
    எல்லாம் அவர் செயல். நன்றி

  7. வருத்தம் தரக்கூடிய செய்தி !!!

    ஆன்மீகத்திலும் அரசியல் புகுந்துவிட்டதை நினைக்கையில் மனம் கணக்கிறது – அரசிற்கு வருவாய் ஈட்டுவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன – பக்த்தர்கள் காணிக்கையாக தரும் அந்த பணத்தில்தான் இவர்கள் நாட்டை காக்க வேண்டுமா ? – எப்போது வருமானம் அதிகமாக ஈட்டும் கோவில்களிலிருந்து வரும் உபரி வருவாய் இப்படி கேட்பாரற்று கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் ஒரு வேலை பூஜையாவது நடக்க பயன்படுத்தப்படுமோ அப்போது தான் இந்த நிலை மாறும்

    புதிய கோவில்களை கட்டுவதை காட்டிலும் அந்த தொகையினை கொண்டு இதுபோன்ற நலிந்த கோவில்களை புனரமைக்க செலவிடப்படுமேயானால் ஆன்மீக அன்பர்கள் மனம்மட்டுமல்லாது அந்த பரமனின் மனமும் குளிரும் !!!

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply to kumaran-bangalore Cancel reply

Your email address will not be published. Required fields are marked *