Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்!

சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்!

print
சாதனையாளர்களை தேடி புறப்பட்ட நம் பயணத்தில் இதுவரை ஆறு சாதனையாளர்களை சந்தித்து விட்டேன்.  என் வாழ்நாளில் 1001 சாதனையாளர்களை சந்திப்பது என்று இலக்கு வைத்திருக்கிறேன். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஒரு ஆசான்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. அப்படியிருக்கும்போது ஒவ்வொரு சாதனையாளரும் எத்தனை ஆசான்கள் என்று நினைத்துப் பாருங்கள். இதுவரை நாம் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்னுமளவிற்கு ஒருவரையொருவர் விஞ்சி நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையை  எதிர்கொண்ட விதமும் அவர்கள் கடந்து வந்த பாதையும் நமக்கு பிரமிப்பூட்டுகின்றது. வாழ்க்கையை குறித்த, இந்த உலகத்தை குறித்த, ஒரு புதிய பரிமாணத்தை எனக்கு உணர்த்துகின்றது. அவர்களுடன் எல்லாம் பேசியதாலும் பழகியதாலும் என்னவோ எனக்கும் அவர்களின் சாதனைத் தாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. என்னிடம் இருந்த பல தீய குணங்கள் என்னை விட்டு ஓடியே போய்விட்டன. “உன் விதியை தீர்மானிப்பவன் வேறு யாருமல்ல…. நீயே!” என்னும் வாக்கியம் அழுத்தந்திருத்தமாக என் மனதில் பதிந்துவிட்டது.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)

சென்ற மாதம் என் முகநூலில் நண்பர் ஜேசுதாஸ் என்பவர் (இவர் ஒரு பெரும் சாதனையாளர், தொழிலதிபர், ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்) வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே RESTAURANT துறையில் வெற்றிக்கொடி நாட்டிய ஒரு பெண்ணை பற்றி ஒரு பழைய பத்திரிகை செய்தியை பகிர்ந்திருந்தார். செய்தி என்னவோ சிறியது தான். ஆனால் படித்தவுடன் அவரது சாதனையின் விஸ்தீரணம் எனக்கு புரிந்துவிட்டது…. அடுத்து நாம் சந்திக்கவேண்டிய சாதனையாளர் இவர் தான் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்.

“மும்பைக்கும் சென்னைக்கும் இடையே பறந்து கொண்டிருக்கும் அவரை எப்படியாவது சென்னையில் வைத்து சந்தித்தே தீரவேண்டும்.. நம் தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்துவிடவேண்டும்” என்கிற வெறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. இருப்பினும் எங்கு, எப்படி, அவரை தொடர்புகொள்வது… ஒன்றும் புரியவில்லை. எனது பலம் என்று நான் கருதுவது எனது விடாமுயற்சி தான். ஒரு விஷயத்தை முடிக்கவேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை முடிக்கும் வரை எனக்கு இருப்பு கொள்ளாது. வேறு எதிலும் என் மனம் கவனம் செலுத்தாது. அதையே ஒரு தவமாக நினைக்கத் துவங்கி, என் மனதின் முழு ஆற்றலை அதற்கு செலுத்துவேன். (அற்பத்தனமான விஷயங்களுக்கு மனதின் இந்த சக்தியை பயன்படுத்தமாட்டேன் !) கிட்டத்தட்ட ஒருவாரம் பத்து நாள் இருக்கும். தொடர் முயற்சி + தேடலின் முடிவாக எனக்கு ஒரு தொலைபேசி எண் கிடைத்தது.

அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து, “உங்கள் இயக்குனரை சந்திக்க விரும்புகிறேன். ஒரு சில நிமிடங்கள் போதும். எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா?” என்று கேட்டேன்.

எனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அடுத்து ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த எண்ணை தொடர்புகொண்டு அதே உரையாடல். இம்முறையும் அதே ரெஸ்பான்ஸ்.

நான்காவது முறை… வேறு ஒரு எண் கிடைத்தது. அந்த எண்ணுடன் தொடர்புகொண்டு பேசியபோது முதல் இரண்டு நாட்கள் என் அழைப்பை ஏற்கவேயில்லை.

நான்காவது நாள் தான் பதில் கிடைத்தது. “நீங்கள் யார்? எதற்கு சந்திக்க வேண்டும் ?” என்று எதிர்முனையில் கேட்க – நாம், “ரைட்மந்த்ரா.காம் என்கிற சுயமுன்னேற்ற + ஆன்மீக தளத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் இயக்குனரின் சாதனை சரித்திரத்தை அண்மையில் கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டதிலிருந்து எப்படியாவது அவரை சந்திக்கவேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது. அவரை சந்திக்க நீங்கள உதவ முடியுமா? சரி… நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றோம்.

நான் தான் “பிரவீன் ராஜ்குமார். நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்களோ அவரின் மகன்!” என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. “சார்…சார்… உங்க கிட்டே பேசுவேன்னு நினைச்சு கூட  பார்க்கலை. உங்கம் அம்மாவோட சக்சஸ் ஸ்டோரியை படிச்சதுல இருந்து எனக்கு எப்படியாவது அவங்களை சந்திக்கனும்னு ஆசை சார். எங்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல். அவர் ஜஸ்ட் சில நிமிடங்கள் அப்பாயின்மென்ட் கொடுத்தா போதும். அவரை சந்தித்து எங்கள் தளம் சார்பாக ஒரு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்ய விரும்புகிறேன் சார்…” என்றேன்.

(பெரும்பாலும் இது போன்ற PHONE FOLLOW-UP கால்களை எனது தேநீர் இடைவேளையிலும் மதிய உணவு இடைவேளையிலும் தான் வைத்து கொள்வேன். ஜஸ்ட் 5 நிமிடங்கள் எனக்கு போதும். மகத்தான காரியங்களுக்கு விதைகளை தூவ!)

“ஓ.கே. சுந்தர். நிச்சயம். நீங்க ரெண்டு நாள் கழிச்சி கால் பண்ணுங்க….” என்றார்.

அவர் இப்படி பாஸிட்டிவாக சொன்னதிலேயே எனக்கு வயிறு நிறைந்துவிட்டது. சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்து கால் செய்தேன். பிரவீன் ரெஸ்பான்ஸ் தரவில்லை.

பெரிய மனுஷன் ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருப்பார். எதுக்கும் திரும்பவும் ரெண்டு நாள் கழிச்சி முயற்சி பண்ணுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டேன்.

எனக்கு என் இலக்கு தான் முக்கியமே தவிர இடையே என் பயணத்தில் நான் சந்திக்கும் மான அவமானங்கள் எல்லாம் எனக்கு ஒரு விஷயமே அல்ல. “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” என்பதை என் மனதில்  ஆணியடித்து வைத்திருக்கிறேன்.

அவர் எரிச்சலுராத அளவில் அவருக்கு அப்பாயின்மென்ட் குறித்து நினைவூட்டி வந்தேன்.

ஒரு நாள் வழக்கம் போல, டீ பிரேக் முடித்து திரும்பவும் அலுவலகம் நுழையும் தருணம் பிரவீன் அவர்களிடம் இருந்து ஃபோன் வந்தது.

“சுந்தர்… ஒரு நிமிஷம் அம்மா பேசனும்னு சொல்றாங்க…” என்று எதிர்முனையில் ஃபோனை அவர் அம்மாவிடம் கொடுக்க… எனக்கு அந்த இன்ப அதிர்ச்சியில் இதயமே நின்றுவிட்டது.

தட்டு .. தடுமாறி…நாக்கு குழறி ஒருவழியாக என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அவர்களிடம் பேசினேன்.  அவர் நலனை விசாரித்துவிட்டு, நம்மை பற்றியும் நமது தளத்தை பற்றியும் கூறினேன். சாதனையாளர்களை  தேடி புறப்பட்டிருக்கும் நமது பயணத்தை பற்றி எடுத்துகூறி, அவரை சந்தித்து அவரை கௌரவிக்க விரும்புவதாக சொன்னேன். நான் பணிக்கு செல்லும் விபரம் தெரிந்ததால் பெரிய மனதுடன் “எப்போது முடியுமோ அப்போது  வாருங்கள் சுந்தர்” என்று கூறி வீட்டு முகவரியை எனக்கு சொன்னார்கள். அவரின் பர்சனல் நம்பரையும் தந்தார்கள்.

அப்பாயின்மென்ட் கொடுத்துவிட்டாரே தவிர எனக்கு அவரை சென்று சந்திக்க நாளை ஒதுக்க முடியவில்லை. காரணம் வாரநாட்களில் இடைவிடாத பணி. தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என் அலுவலகம் இருந்தது. இது போன்ற பரபரப்புக்களிலிருந்து விடுபட்டு சற்று ரிலாக்ஸான மனதுடன் அவரை  சந்திக்க விரும்பினேன். மேலும் பெரிய மனிதர் என்பதால் சந்திப்பின்போது நான் அணிந்திருக்கும் உடை, அப்போது என்னுடைய தோற்றம் என எல்லாவற்றிலும் கவனம்  செலுத்தவேண்டும். இதற்க்கு ஒரு விடுமுறை  நாளே ஏற்றது. எனவே சில வாரங்கள் கழித்து வந்த ஒரு ஞாயிறு அவரை சந்திப்பது என்று  முடிவானது. அவருக்கும் தகவல் தெரிவித்தேன். மனோகரன் அந்த சமயம் சில பல காரணங்களினால் சற்று தன்னம்பிக்கை குறைந்து, மனமுடைந்து காணப்பட்டார். எனவே மனோகரனையும், சாதிக்கவேண்டும் என்கிற வெறி இருந்த இன்னொரு நண்பர் நாராயணனையும் அழைத்து செல்வது என்று முடிவு செய்தேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், சந்திப்புக்கு இரண்டே நாட்கள் இருக்கும் சூழ்நிலையில், “இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்க ஆபீஸ் வரணும்” என்றார்கள். (மாதம் இரண்டு மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் எனக்கு அலுவலகம் உண்டு.) “எனக்கு முக்கிய பர்சனல் வேலை ஒன்னு இருக்கு. வந்தாலும் மதியம் 2.00 மணி வரைக்கும் தான் வேலை செய்யமுடியும்” என்று கூறிவிட்டேன். சரி என்று ஒப்புக்கொண்டார்கள். எப்படியோ வேலை முடிஞ்சா சரி… என்பது அவர்கள் எண்ணம்.

துரதிஷ்டவசமாக ஞாயிறு காலை 9.30 க்கு அலுவலகம் வரவேண்டிய நான் அன்று 11.30 க்கு தான் வந்தேன். எனவே கூட சற்று நேரம் இருந்து வேலையை முடிக்கவேண்டிய சூழல். எனவே மதியம் 2.00க்கு பதில் 4.00க்கு தான் கிளம்ப முடிந்தது.

சந்திப்புக்கு 4.30 – 5.00 மணிக்குள் வருவதாக திரு.பிரவீனிடம் சொல்லியிருந்தேன். நம்முடன் வருவதாக சொன்ன நண்பர் மனோகரனும் நாராயணனும் என் அலுவலகம் அருகே வேறொரு பகுதியில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு பொக்கே வாங்குவது, சால்வை வாங்குவது உள்ளிட்ட வேலைகளை கொடுத்து, தயாராக இருக்கும்படி சொன்னேன்.

சரியாக 4.00 மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன். வந்த இருவரிடமுமே டூ-வீலர் இல்லை. மனோகரன் திருவள்ளூரிலிருந்து வந்திருக்கிறார். நாராயணனிடம் டூ-வீலர் கிடையாது. என் ஒருவன் டூ-வீலரில் மூன்று பேர் எப்படி செல்வது… ? நேரமோ ஓடிக்கொண்டிருக்கின்றது. சரி… என்னுடைய பைக்கை என் அலுவலகம் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு வேளச்சேரிக்கு கால்டாக்சி ஒன்றை பிடிப்பது என்று முடிவு செய்தோம். (சென்னையில ஆட்டோவில் போகுமளவிற்கு எங்களுக்கு வசதி கிடையாதுங்க!!!!).

வழக்கம் போல கால்டாக்சி டிரைவர் எங்கோ இருந்துகொண்டு, அருகில் இருப்பதாகவும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் அரை மணிநேரமாக அதையே சொல்லி எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். கால்டாக்சி அலுவலகத்திற்கு போன் செய்து நிலைமையை விளக்கி அவர்களுக்கு டோஸ் விட, பக்கத்துல தான் சார் இருக்கார். இன்னும் 2 நிமிஷத்துல வந்துடுவார்…” என்று அவர்களும் அதையேத் தான் சொன்னார்கள்.

சரி..இதை கேன்சல் பண்ணிட்டு வேற வண்டி புக் செய்யலாம் என்று முடிவு செய்த தருணம்…டாக்சி வந்துவிட்டது. அடித்து பிடித்து ஏறி.. அவரிடம் நாம் அவசரப்பட்டதன் காரணத்தை கூறி “அரை மணிநேரத்துக்குள்ளே வேளச்சேரி போகணும்பா…” என்றேன்.

“போய்டலாம் சார்… கவலைப்படாதீங்க” என்றார். சொன்னபடியே சரியாக 5.00 மணிக்கு வேளச்சேரியில் நாம் சந்திக்க விரும்பும் அந்த சாதனைச் சிகரத்தின் அப்பார்ட்மென்ட் வாசலில் டாக்சி நின்றது. (ரூ.250/- பில் வந்தது.)

சாதனையாளர்களின் நேரம் மிக மிக முக்கியம். ஒவ்வொரு நொடியையும் அவர்கள் மிகப் பெரும் செல்வமாக கருதுவார்கள். எனவே அவர்களை சந்திக்க செல்லும்போது சொன்ன நேரத்தில் நாம் எப்பாடுபட்டாவது ஆஜராகிவிடவேண்டும்.

அவரது டூப்லெக்ஸ் வீட்டை தேடிப் பிடித்து காலிங் பெல்லை அழுத்த, பணியாள் வந்து திறந்தார்.

“மேடமை பார்க்க வந்திருக்கோம். வரச் சொல்லியிருக்காங்க…” என்றேன்.

“கொஞ்சம் நேரம் உட்காருங்க….மேடம் வருவாங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். நாம் சோபாவில் “அப்பாடா….” என்று நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தோம்.

யார் இந்த சாதனையாளர்… அவரை சந்திக்க ஏன் இந்த பெரும்பாடு….? அப்படி என்ன பெரிய சாதனை செய்துவிட்டார் இவர்?

சரி… ஓ.கே. அவரை பற்றி ஒரு சின்ன முன்னுரை கொடுக்குறேன்… .நீங்களே சொல்லுங்கள்… அவரை சந்திக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அர்த்தமுடையதா இல்லையா என்று….!

பெற்றோர் எதிர்ப்பை மீறி வேற்று மதத்தை சேர்ந்தவருடன் காதல் திருமணம், தோல்வியில் முடிந்த அந்த திருமண வாழ்க்கை, தினமும் குடிக்க பணம் கேட்டு அடித்து உதைக்கும் போதைக்கு அடிமையான காதல் கணவர், தன்னை நம்பி இரண்டு குழந்தைகள், தாங்க முடியாத வறுமை…… 30 வருடங்களுக்கு முன்பு மெரினாவில் தள்ளு வண்டியில் தனது வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது இவரின் நிலைமை இது தான்.

இன்றைக்கு… இவரது குழுமத்தின் உணவகங்களின் ஒரு நாள் விற்பனை மட்டும் சில லட்சங்களை தாண்டும்!!

அவர் தான் திருமதி.பேட்ரீசியா நாராயண். SANDHEEPA CHAIN OF RESTAURANTS என்கிற குழுமத்தின் இயக்குனர் இவர். சென்னையில் மட்டும் இவரது குழுமத்திற்கு 14 கிளைகள் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு, FICCI எனப்படும் வர்த்தக அமைப்பு, இவருக்கு BEST WOMAN ENTREPRENEUR விருது வழங்கி கௌரவித்தது. (FICCI = Federation of Indian Chambers of Commerce and Industry).

வாழ்க்கையில்  அனைவருக்கும் இவர் ஒரு ரோல் மாடல். திக்கு தெரியாமல் தவிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.

விதியை புரட்டிப் போட்ட இவரது சாதனை சரித்திரம் + இவரது பிரத்யேக பேட்டி… நாளை நமது தளத்தில்!

[END]

13 thoughts on “சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்!

  1. சுந்தர் சார்

    “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” .. உண்மை தான் சார்

    தங்களின் பொறுமைக்கும் விட முயற்சிக்கும் கிடைக்கும் பலன் அருமையோ அருமை சார்..

    நாளை பதிவு எதிர் பார்த்து இருக்கேன் சார்..

    நன்றி..

  2. வணக்கம் சுந்தர் அண்ணா,
    ஒரு நல்ல படத்தோட முடிவு மாதிரி ஒவ்வொரு வரியிலும் உங்களுக்கு ஏற்பட்ட இதயத்துடிப்ப எங்களுக்கும் ஏற்படுதிடிங்க. ஆனால், அந்த துடிப்பு 30 வருஷ தவத்திற்கு பிறகு அவங்களுக்கு கிடைத்த வரத்தோட வலிமை இப்போ என்னவென்று நீங்கள் இப்போ ஏற்படுத்தின துடிப்பு எனக்கு புரிய வைக்கிறது. உங்களோட நாளைய பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  3. சுந்தர் சார்,
    உங்கள் பதிவை மிக ஆவலுடன் எதிர் பார்கிறேன்.
    நன்றியுடன் அருண்

  4. சுந்தர்ஜி,

    படிக்கும்போதே உங்களோடு நாமும் வந்த மாதிரி பரபரப்பாக இருந்தது. அவரது பேட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது ” – மிகச் சரியான வாசகம். ஒரு சிறு கற்பூரத்தை வைத்து தொடங்கி பெரிய ஹோமம் நடத்துவது போல் முக நூலில் கிடைத்த சிறு தகவலை வைத்து இத்தனை பெரிய முயற்சி செயத்தற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  5. சுந்தர்ஜி,

    தேனீக்கள் ஒரு போதும் சோர்ந்து இருப்பதில்லை. நறுமணத்தை நுகர்வதில் தேனீக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. அதே போல் தாங்களும் முக நூலில் கிடைத்த சிறு தகவலை வைத்து தேடி தேடி
    திருமதி.பேட்ரீசியா நாராயண். SANDHEEPA CHAIN OF RESTAURANTS இயக்குனர் ஆன இவரை பேட்டி எடுத்து ………………… அப்பப்பா…………..
    உங்களை தவிர யாராலும் முடியாது.

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்

    நன்றி.

  6. மிகவும் விறுவிறுப்பான பதிவு சுந்தர்….

    அந்த சென்னையில் ஆட்டோ சவாரி மேட்டர் மேட்டர் சரியான காமெடி. இங்கு ஆட்டோவில் செல்வதைவிட கால் டாக்ஸி 1000 மடங்கு மேல்…..என்பது உண்மையில்லும் உண்மை.

    இந்த சந்திப்பை வெளியூரில் இருந்தபடியால் தவறவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன். எத்தனை பெரிய மனிதரை சந்திக்கும் வைப்பை இழந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது.

    இருப்பினும் நீங்கள் சந்தித்தது நாங்கள் அனைவரும் சந்தித்தது போன்று இருந்தது.

  7. சுந்தர்ஜி, உங்களது விடாமுயற்சிக்கு எங்கள் பாராட்டுகள். எப்படியாவது ஒரு காரியத்தை எடுக்க வேண்டும் முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சாதித்து விடுகிறீர்கள். நீரே ஒரு சாதனையாளர் தான்.

    கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன்
    அதுவே கடலளவு ஆனாலும் மயங்கமாட்டேன்

    என்ற கொள்கையுள்ள இந்த சாதனையாளரை வாழ்த்துவோம்.
    அன்பே சிவம்

  8. சாதனையாலர்கலை மென்மேலும் சந்தித்து அவர்கலுடைய வெற்றிக்கு பயன்பட்ட பார்முலாவை எங்கலுக்கும் தெரிவிக்க வெண்டுகிறோம்..
    வழ்த்துக்கல்…நன்ரி.

  9. ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஒரு ஆசான்’ அந்த வகையில் நீங்கள் தான் எங்களுடைய ஆசான் சுந்தர் அண்ணா.

    ஒரு செயலை எப்படியாவது எடுக்க வேண்டும் முடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சாதித்து விடுகிறீர்கள். நீங்களே ஒரு சாதனையாளர் தான்.

    உங்கள் மூலமாக ஒவ்வொரு சாதனையாளர்களின் அறிமுகமும் மற்றும் அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்ட விதமும் அவர்கள் கடந்து வந்த பாதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

    சோதனைகள் இல்லாதது வெற்றி அல்ல, சோதனைகளைத் தாண்டி முன்னேறுவதே வெற்றி என்பதற்கு பேட்ரிசியா நாராயண் நல்லதொரு உதாரணம் அல்லவா?

    உங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  10. The efforts that u have put to get an appointment worth few minutes is MIND BLOWING—seriously no one else would have kept trying so much—If I had been in your position I would have tried maximum thrice and then would have left it-thinking “destiny.”..BUT YOU PROVED THAT MEN ARE MASTERS OF THEIR OWN DESTINY!!!HATS off anna!!

    With just a small piece of article U have made a meeting–!!again proves that people who wanna MAKE THINGS HAPPEN WILL MAKE IT HAPPEN , HOWEVER TOUGH OR IMPOSSIBLE IT MIGHT BE!!

    Never say die attitude is ur biggest strength –and U also keep saying me always that—“HISTORY IS CREATED ONLY BY PERSISTENT EFFORTS AND NOT BY LUCK.”—U Preach what U practice!!

    Learnt an awesome lesson from this article and from you!!
    This small intro itself has inspired me so much, then imagine what the main article will do!!!!! unbelievable!!
    And unfortunate that I couldn’t come for this one of a LIFETIME EXPERIENCE…but I am Blessed!! Because your gonna re-create the MAGIC IN UR NEXT ARTICLE!!

    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  11. மிகவும் மகிழ்ச்சி அடைய வைகிறது. நீங்கள் அதிவேகமாக வெற்றி பயணத்தில் பயணித்து கொண்டிருகிரீர். மேலும் சிறக்க என் vazthugal Anna 🙂

  12. நீண்டநாளாக எதிர்பார்த்த பதிவு .

    சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்! இந்த பயணத்தில் எனக்கும் அழைப்பு விடுத்து வாய்ப்பினை வழங்கிய சுந்தர்ஜி அவர்களின் குறிப்பறிதல் அபாரம்.
    சுந்தர் ஜி இந்த பதிவில் படிக்கும் போதே இவ்வளவு விறுவிறுப்பு என்றால், உடன் சென்ற எங்களுக்கு சினிமா போன்று கார் இருக்கை முனையில் நிறுத்துவது போல் , சந்திக்கும் நபரின் சிறு குறிப்பினை விவரித்தார் .
    கேட்கும் போதே கண்கள் குளமாகி ,மறைத்துக்கொண்டேன் .கால்டாக்ஸி டிரைவர் நாங்கள் விவாதிப்பதை மிகவும் மனதில் நிறுத்தி கொண்டார் இன்று தான் சொல்லவேண்டும் .வேகத்தை கூட்டி சரியான நேரத்திற்கு எங்களை சேர்த்தார் .
    இன்று என்னை செதுக்கிக்கொள்ள தூண்டுகோலாக அமைந்த சந்திப்பு .

    -நன்றி

  13. ஒவ்வொரு பதிவுக்கு பின்னால் எவ்வளவு தேடல்கள், உடல் உழைப்பு, மனப்போராட்டம், பதட்டம் இறுதியில் மட்டற்ற மகிழ்ச்சி நினைத்து பார்க்கையில் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!

    சுயநலமே பெரிதென நினைக்கும் இந்த கால கட்டத்தில் தனது இடையறாத பணிகளுக்கு நடுவே நமக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி அளவிடமுடியாதது !!!

    உங்களுடைய இந்த தேடுதல் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்கும் அத்துணை நல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !!!

    சற்றே தாமதமாக வந்தாலும் உங்களை நீங்கள் விரும்பிய இடத்துக்கு நீங்கள் ஒத்துக்கொண்ட நேரத்துக்குள்ளாக பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அந்த கால் டாக்சி ஓட்டுனருக்கும் எமது நன்றிகள் :))

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply to Gowri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *