Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…

கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…

print
ன் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவர்களுள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். எனது மனசாட்சியை தட்டியெழுப்பி நான் பிறந்ததன் பயனை எனக்கு உணர்த்தியவர் அவர். அவரது பாடல்களுக்கு மிகப் பெரிய ரசிகன் நான். அவரது வாழ்க்கைக்கு அதைவிட பெரிய ரசிகன் நான்.

எனது பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது அவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் அரும்பெரும் பொக்கிஷம் தான். ஜூன் 24 – அவரது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நமது தளத்தில் அடுத்தடுத்து நீங்கள் சற்றும் எதிர்பாராத விசேஷ பதிவுகள் வரவிருக்கின்றன.

முதல் பதிவாக ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் இருந்து ஒரு அருமையான நமது மனசாட்சியை தட்டி எழுப்பக்கூடிய அத்தியாயத்தை தருகிறேன்.

பாவிகளே பிரார்த்தியுங்கள்

(இது எல்லாப் பாவிகளுக்கும் அல்ல; அப்பாவிகளுக்கு மட்டும்!)

எங்கள் இறைவா! மூல முதல்வனே!

அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம்.

தாழ்ந்து கிடந்த எங்கள் கரங்கள் மேலெழுகின்றன. இரு கை கூப்பி வணங்குகிறோம்.

கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.

சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்குக் கொடு.

கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துவிடு.

சூன்யத்தில் பிறந்த இதயம் வளர வளரக் காட்சிக்கு வருவது நியதி. ஆனால் எங்கள் இதயம் வளரவில்லை.

அது வளர்ச்சிக்குப் பிறகும் சூன்யமாகவே இருந்தது.

கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப்பிடிப்பது போல் ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாபத்தில் சிக்கினோம்.

அறிந்தோ, அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு.

நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.

மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்.

எங்கள் கடிவாளம் ஆசையின் கையிலிருந்ததால் எங்கள் பயணத்தையும் ஆன்மா நடத்த முடியவில்லை.

ஆசை அழைத்த வழி சென்றோம்; தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளை உணர்ந்தோம்.

மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்குத் தெரியவில்லை.

கையினால் தொட்டுப் பார்த்தபோதும் கண்டு கொள்ள முடியவில்லை.

மூன்றாவது, மூக்கிலே வைத்தபோதுதான் முழுதும் புரிந்தது.

இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களே தவிர அக்கிரமக்காரன் செய்யும் காரியங்களல்ல.

நாங்கள் நடந்து சென்ற இருள் காட்டில் எங்கள் அறிவுச் சுடர் எரியவில்லை.

காற்றை மட்டுமே நம்பிப்போகும் பாய்மரப் படகுபோல், ஆசையை மட்டுமே நம்பி எங்கள் வாழ்க்கைப் படகு போய்விட்டது.

நாங்கள் பிறர்மனை நயந்திருந்தால் அது எங்கள் பெண்ணாசையின் குற்றம்.

நாங்கள் பிறர் பொருள் விழைந்திருந்தால் அது எங்கள் பொன்னாசையின் குற்றம்.

நாங்கள் பிறர் நிலம் கவர்ந்திருந்தால் அது எங்கள் மண்ணாசையின் குற்றம்.

ஆசைகளை சிருஷ்டித்து, அந்த விளையாட்டில் எங்களைச்சிக்க வைத்து, வேடிக்கை பார்த்த எங்கள் பரம்பொருளே!

நிலைக்கும் என்று நாங்கள் எண்ணியவையெல்லாம் நிலையாதனவென்று இப்போது அறிந்தோம்.

மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகள், பசுமை இலைகளைப் பார்த்து ஏங்குவதுபோல்,பாவிகளாகிய நாங்கள் உத்தமமான ஞானிகளைப் பார்த்து, அப்படியே நாமும் வாழக்கூடாதா என்று ஏங்குகிறோம்.

அந்த வாழ்க்கையை, ஏ, ஹரிஹரனே எங்களுக்கு அருள்வாயாக!

சமைக்கப்பட்ட சேவல் கூவ முடியாதென்பது எங்களுக்குத் தெரியும்.

முழுக்க தன்னைத் அழித்துக்கொண்டுவிட்ட மனிதன் உன்னை வேண்ட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் முழுக்க எங்களை அழித்துக்கொள்ளவில்லை.

பாதி வழியிலேயே எங்களுக்குக் கண் திறந்துவிட்டது.

எங்கள் இறகுகள்தான் பறிக்கப்பட்டிருகின்றன.

நாங்கள் கொல்லப்படவும் இல்லை.சமைக்கப்படவுமில்லை.

இந்த நிலையில் ஏ,ஏசுநாதா!

எங்கள் இறகுகள் மறுபடியும் வளர அனுமதி.

கண்ணென்பது நல்லவற்றைக் காணுவதற்காகவும், செவி என்பது நன்மொழிகளைக் கேட்பதற்காகவும், நாசி என்பது நறுமணங்களை நுகர்வதற்காகவும் , வாய் என்பது நல்ல சேதிகளைச்சொல்வதற்காகவும், கை என்பது உதவி பெறத் தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், கால் என்பது நல்லோரை நோக்கி நடப்பதற்காகவும் என்பதை நாங்கள் அறியாமற் போனோம்.

இந்த அங்கங்களில் ஒன்று அறியாமல் பிழை செய்திருந்தால் ஏ, ஆனந்த மூர்தியே! அந்த அங்கங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடு.

‘தீர்க்கப்பட முடியாத நோய் எங்களுக்கு வராதவாறு, திருத்தாண்டவ மூர்த்தியே, எங்களுக்கு அருள் செய்!

மீன், பூச்சியைத் தின்பது பசியால்.

அந்த மீனை நாரை கொத்துவது பசியால்.

அந்த மனிதன் தவறுகள் செய்வதும் பசியால்.

எங்கள் தவறுகளுக்குப் பசி மட்டுமே காரணமாக இருந்தால், உடனடியாக மன்னித்துவிடு.

இந்த ஆசைக்கு அறியாமையே காரணம் என்றால் அந்த அறிவை நாங்கள் அடையாதவாறு தடுத்தது நீதான் என்பதால், நாங்கள் நிம்மதியாக வாழ உடனே அனுமதித்துவிடு.

பலாப்பழத்தில், சுளையைத் தேடி எடுக்க ஒரு கத்தி தேவைப்படுவதுபோல், லௌகீக வாழ்க்கையில் நியாயத்தைக் கண்டுகொள்ளப் புத்தி தேவைப்படுகிறது.

அந்தப் புத்தி எங்களுக்கு இல்லாமற் போய் விட்டது என்பதைச்சொல்லிக் கொள்ள, நாங்கள் வெட்கப்படவில்லை.

‘ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதைக் கண்டு கொள்ளும்போது, அறிவாளியாகி விடுகிறான். என்பது முன்னோர் வாக்கு.

நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம்.

பரம்பொருளின் சந்நிதானத்தில் எங்கள் பாபங்களைக் கழுவிவிட்டு, நிம்மதியை வாங்கிப்போக வந்திருக்கிறோம்.

இறைவா!

உன் சந்நிதியில் கற்பூரம் ஏற்றப்படுகிறது!

உனக்குச் செய்யப்படும் நைவேத்தியத்தில் வாழைப்பழமும் தேங்காயும் வைக்கப்படுகின்றன.

இவை ஏன் என்பதை, இப்போதுதான் நாங்கள் அறிந்துகொண்டோம்.

கற்பூரம் தன்னை அழித்துக்கொள்கிறது.

அது எரிந்து முடிந்த பிற்பாடு ஒரு கரித்தூள் கூட மிஞ்சுவதில்லை. வாழை மட்டை, தண்டு, இலை, பூ, காய், பழம் அனைத்தையும் தந்து உதவுகிறது.

தென்னைமரம் கீற்று, இளநீர், தேங்காய் அனைத்தையும் தந்து உதவுகிறது.

இவற்றில் எந்தப் பாகமும் வீணாவதில்லை.

மனிதனும் அப்படி உலகிற்குப் பயன்பட வேண்டும் என்ற இந்துக்களின் ஆசையையே இது குறிக்கிறது.

நாங்களோ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம்; நாங்கள் பயன்படவில்லை.

எங்கள் கண்கள் திறந்துவிட்டன்.

நாங்கள் இனி எந்தச் சேவையைச்செய்ய வேண்டுமென்று நீ கனவில் வந்து கட்டளையிடுகிறாயோ, அந்தச் சேவையைச் செய்யக் காத்திருக்கிறோம்.

எங்கள் கனவில் உன்னை எதிர்பார்க்கிறோம்.

லௌகீக வாழ்க்கையாக எவருக்கும் வேதனை இல்லாமல் வேடிக்கையாக நடத்தலாம்.’ என்று முதலுதாரணம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா!

‘லௌகீக வாழ்க்கையில் சில சட்டதிட்ட வரம்புகள் இருந்தால் காலங் கடந்தாவது வெற்றி வரும்’ என்று நிரூபித்த ஸ்ரீராமர்!

‘ஒழுக்கம் மிகுந்த பக்திக்கு உருவகம் கொடுத்த முருகா!’

‘இவை மூன்றிலும் எதை நீ தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் நானுனக்குத் துணை நிற்பேன் என்று உறுதி கூறும் சிவபெருமானே!’

‘அந்த நால்வர் வழியில் ஒன்றைப் பின்பற்றும் முன்பு, அந்த வழியில் தொல்லையில்லாமலிருக்க அனுமதி வழங்கும், விநாயகப் பெருமானே!

இந்துக்களின் பல தெய்வ வணக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை என்பதை நாங்கள் கண்டு கொண்டுவிட்டோம்.

எங்கள் பாவங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம். மன்னிப்பை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.

(நன்றி : கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’)
RightMantra Exclusive!!
==================================

3 thoughts on “கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல்…

  1. \\\\\ எங்கள் கண்கள் திறந்துவிட்டன். நாங்கள் இனி எந்தச் சேவையைச்செய்ய வேண்டுமென்று நீ கனவில் வந்து கட்டளையிடுகிறாயோ, அந்தச் சேவையைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கள் கனவில் உன்னை எதிர்பார்க்கிறோம். \\\\\

    “எங்கள் பாவங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம். மன்னிப்பை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.”

    படிக்க படிக்க எத்தனை இன்பம் .

    நன்றி .நன்றி .நன்றி…

  2. சுந்தர்ஜி,

    அருமையான சிந்திக்க வாய்த்த பதிவு.

    கண்ணதாசன் அவர்களை பற்றிய அடுத்த பதிவுகளுக்காக ஆவலோடு காத்திரிகிறோம்.

    நன்றி

  3. அர்த்தமுள்ள இந்துமதம் – ஒரு கருத்துக்கருவூலம் !!!

    ஒவ்வொரு ஹிந்துவும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய அறிய பொக்கிஷம் !!!

    நாம் அறிந்தும் அறியாமல் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்ணதாசன் அவர்கள் அளித்துள்ள விளக்கம் அபாரம் !!!

    இதை விட எளிமையாக பாமரனுக்கும் புரியும் வகையில் சாஸ்திர சம்ப்ரதாயங்களையும் அவற்றின் பலன்களையும் சொல்ல அவரால் மட்டுமே முடியும் என்றால் அது மிகை ஆகாது !!!

    நாம் என் பிறந்தோம்? வாழ்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் ? செல்ல வேண்டிய இலக்கு என்ன அன்பதை அறிந்துகொள்ள அர்த்தமுள்ள ஹிந்துமதம் நிச்சையம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை !!!

    தேனை ருசிக்க கூலி தேவையா?

    சுந்தர் அவர்களே கண்ணதாசன் அவர்களைப்பற்றிய உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் !!!

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *