Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

print
ரிஷிகளை தேடி புறப்பட்ட நமது பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் இது. ரிஷிமூலம் பார்ப்பது நமது நோக்கமல்ல. மகரிஷிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்பை பெற அவர்கள் எத்தகைய அருந்தவம் செய்தார்கள், தங்கள் வாழ்வின் மூலமும் வாக்கின் மூலமும் அவர்கள் இந்த வையத்துக்கு உணர்த்துவது என்ன என்பதை ஆராய்ந்து எடுத்துக் கூறுவதே நமது நோக்கம்.

சென்ற அத்தியாயத்தில் ததீசி மகரிஷியை பற்றி பார்த்தோம். இப்போது லோமச மகரிஷியை பற்றி பார்ப்போம்.

ஓம் குருப்யோ நமஹ!

எல்லாரும் எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ குருமார்கள் அருள்புரியவேண்டும்.

இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் இவரது சொத்து!

கரிஷிகளில் லோமசர் மிக மிக வித்தியாசமானவர். இவருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி இவர். இடுப்பில் ஒரு சிறு துண்டும், கையில் எப்போதும் சுருட்டப்பட்ட ஒரு பாயுமாகத் தான் காணப்படுவார் இவர். இவை தவிர இவருக்கு சொந்தமென்று எதுவும் கிடையாது. உடம்பெங்கும் அவருக்கு கரடி போன்று ரோமங்கள் இருந்தபடியால் அவருக்கு ‘லோமசர்’ என்கிற பெயர் ஏற்பட்டது.

இந்திரனுக்கு ஒரு முறை பதினான்கு லோகங்களிலும் “இப்படி ஒரு மாளிகை இல்லை” என்று அனைவரும் கூறுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான மிகச் சிறந்த மாளிகையை கட்டவேண்டும் என்கிற ஆசை எழுந்தது. உடனே தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை அழைத்தவன், “இதுவரை எங்கும் காணாத அளவிற்கு மிகப் பெரிய மாளிகை ஒன்றை உடனே கட்ட ஏற்பாடுகளை செய்யுங்கள். காண்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கவேண்டும் அது!!” என்று உத்தரவிடுகிறான்.

விஸ்வகர்மா பல வருடங்கள் செலவிட்டும் இந்திரனின் விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரு மாளிகையை கட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விஸ்வகர்மாவுக்கும் மாளிகையை கட்டிக்கொண்டிருந்த பணியாளர்களுக்கும் களைப்பும் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

தேவேந்திரனோ என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டிருந்தான். “சே…. தேவலோகத்துக்கு அதிபதியான எனக்கு என் விருப்பப்படி ஒரு மாளிகை கட்ட முடியவில்லையே…. வெட்கம் வெட்கம்” என்று பொருமினான்.

அந்த நேரம் பார்த்து அங்கு மகரிஷி லோமசர் வந்தார். இடுப்பில் ஒரு துண்டு, கையில் ஒரு பாய் என்று காணப்பட்ட அவரை விநோதமாக பார்த்தான் தேவேந்திரன்.

அவரை வணங்கிய தேவேந்திரன், “மகரிஷியே ஏன் எப்போதும் இடுப்பில் ஒரு துண்டுடனும் கையில் ஒரு பாயுடனும் காணப்படுகிறீர்கள்? நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூங்கவா?” என்று நக்கலாக கேட்டான்.

அவனது கேள்வியின் உட்கருத்தை புரிந்துகொண்ட லோமசர் புன்சிரிப்போடு பணிவோடு பதிலளித்தார்.

“தேவேந்திரா இந்த உடலோ ஒரு நாள் அழியக்கூடியது. இதை காப்பாற்ற ஆடைகள் எதற்கு? மானத்தை மறைக்க ஒரு முழம் துணியிருந்தால் போதாதா? மேலும் எனக்கிருக்கும் அற்ப ஆயுளில் எதற்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவேண்டும்? அதற்காகவே பாயுடன் இருக்கிறேன். வெயிலோ, மழையோ அடித்தால் இந்த பாயை தலைக்கு மேல் விரித்துக்கொள்வேன்” என்றார்.

அவர் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி என்று இந்திரனுக்கு தெரியும். எதிர்பாராத இந்த பதிலை கேட்டு அதிர்ந்த இந்திரன், “சிரஞ்சீவியான தாங்களா தங்கள் உடலை அழியக்கூடியது என்கிறீர்கள்?”

அதற்கு லோமசர், “சிரஞ்சீவியாக இருந்தாலும் படைத்தவன் விதிப்படி என் உடலும் என்றாவது ஒரு நாள் போக வேண்டியது தானே ? என் உடம்பிலுள்ள அத்தனை ரோமங்களும் உதிர்ந்ததும் இந்த உடல் அழிந்து விடும். என் மார்பு பகுதியை பார். அதில் காசு அளவுக்கு ரோமம் உதிர்ந்து விட்டது. இத்தனைக்கும் என் ரோமம் உதிர்வதற்கு அதிக காலம் ஆகும் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பிரம்மா மறையும் போதும் என் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்து விடுகிறது.

கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்).  அது போல 1000 சதுர் யுகங்கள் சேர்ந்தால் அது பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தால் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள்.  பதினாறு இந்திரர்களின் ஆயுட் காலம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள்.

இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயதாகி ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படியே ஒவ்வொரு ரோமமாக என் உடலிலிருந்து அனைத்து ரோமங்களும் உதிர்ந்ததும் என் ஆயுள் முடிந்துவிடும். இந்த அற்ப ஆயுளுக்காகவா என்னை வீடு கட்டி கொள்ள சொல்கிறாய்?” என்றார் மிகச் சாதாரணமாக.

இந்திரனுக்கு மயக்கம் ஏற்படாத குறை தான். மகரிஷி லோமசரின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது தன் ஆயுட்காலம் என்பது மிக மிக அற்பமானது என்பதை இந்திரன் உணர்ந்தான். அவரின் கால்களில் வீழ்ந்து தனது அகந்தை இன்றோடு ஒழிந்தது என்று கூறினான்.

உடனே அந்த பெரிய மாளிகை கட்டும் திட்டத்தை அப்படியே விட்டு விட்டு நற்காரியங்களில் கவனம் செலுத்த துவங்கினான்.

அண்டசராசரங்களையும் இறைவனின் படைப்புக்களையும் ஒப்பிடும்போது மனிதனின் ஆயுள் மிக மிக மிக மிக குறைவானது. புண்ணியத்தை சேர்க்க மனிதப் பிறவி போன்று வசதியுடையது எதுவுமில்லை. நாம் நிலையானவை என்று கருதும் எதுவும் நாளை நம்மோடு வரப்போவதில்லை. எனவே நாம் வாழும் இந்த கொஞ்ச காலத்தில் பணம், பொருள் என்று அழியக்கூடியதை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் கொஞ்சம் சேர்ப்போம்.

மகரிஷிகளை மனதில் வைத்து திருவள்ளுவர் சில குறட்பாக்களை இயற்றியிருப்பார் என்றும் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இதற்கு மறைபொருள் என்று பெயர். அப்படி லோமச மகரிஷியை மனதில் நினைத்து அவர் நமக்கு தந்த குறள் என்று நாம் கருதுவது :

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை (குறள் 331)

பொருள் : நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

==============================================================
Also check :
உலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)
http://rightmantra.com/?p=3999
==============================================================

 

11 thoughts on “இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

  1. அருமையோ அருமை

    மறுபடியும் . குருவாரத்தில் மற்றுமொரு மக ரிஷி பற்றி அறிந்து வாழும்

    நிச்சயம் வாழும் இந்த கொஞ்ச காலத்தில் பணம், பொருள் என்று அழியக்கூடியதை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் கொஞ்சம் உங்கள் புண்ணியத்தால் சேர்த்து கொள்வோம்.

    நன்றி

  2. எல்லா காலத்திற்கும் பொருந்தும் அருமையான கட்டுரை.

  3. ////அண்டசராசரங்களையும் இறைவனின் படைப்புக்களையும் ஒப்பிடும்போது மனிதனின் ஆயுள் மிக மிக மிக மிக குறைவானது. புண்ணியத்தை சேர்க்க மனிதப் பிறவி போன்று வசதியுடையது எதுவுமில்லை. நாம் நிலையானவை என்று கருதும் எதுவும் நாளை நம்மோடு வரப்போவதில்லை. எனவே நாம் வாழும் இந்த கொஞ்ச காலத்தில் பணம், பொருள் என்று அழியக்கூடியதை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் கொஞ்சம் சேர்ப்போம்.////

    100%உண்மை சுந்தர் சார்..

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ….
    கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று …..இந்த பதிவை படிக்கும்போது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது ..

  4. நாம் பூமியில் வாழும் காலம் மிக குறைவு. அந்த காலகட்டத்தில் கொஞ்சம் நல்ல காரியங்களையும் செய்து புண்ணியத்தை நமக்கும் நம் தலைமுறைக்கும் சேர்த்து கொள்ளும்படி போட்டிருக்கும் இந்த பதிவு அருமை.

    //”புண்ணியத்தை சேர்க்க மனிதப் பிறவி போன்று வசதியுடையது எதுவுமில்லை. நாம் நிலையானவை என்று கருதும் எதுவும் நாளை நம்மோடு வரப்போவதில்லை. எனவே நாம் வாழும் இந்த கொஞ்ச காலத்தில் பணம், பொருள் என்று அழியக்கூடியதை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் கொஞ்சம் சேர்ப்போம்.”//

    வரைபடம் அருமை. முனிவரின் கண்களில் கனிவும் முகத்தில் சிரிப்பும் அருமை.
    சார் நான் பெருமைக்காக சொல்லவில்லை. உங்களின் எல்லா பதிவும் படிக்க படிக்க கண்டிப்பாக படிப்பவர்களின் மனம் செம்மையாகும் . மனமது செம்மைஆனல் எண்ணங்கள் நல்லனவாகும்.எண்ணங்கள் நல்லதானால் செய்யும் காரியங்கள் அனைத்தும் புண்ணிய காரியங்களாகும் . நன்றி

  5. ரிஷிகள், ஞானிகளிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் பலப்பல உள்ளன. அதுமட்டுமின்றி அதை பின்பற்ற வேண்டியதும் பல உள்ளன.

    இந்த பதிவை படிப்போர் இதையும் நாம் நினைவுகொள்ளவேண்டும்

    பற்றற்ற தன்மையைப் பழகிக்கொள். சிறிது சிறிதாகப் பழகிக்கொள். ஏனெனில், மிகவும் நேசிக்கும் அனைத்தையுமே இழந்துவிட வேண்டிய வேளையொன்று வரும்… ஸ்ரீசத்யசாயி

  6. மிகவும் அருமையான பதிவு .நல்ல விரிவான விளக்கங்களுடன், நேர்த்தியான வரைபடம் .தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை மிஞ்சிவிட்டார் உங்கள் சிற்பி .
    எனது பாராட்டுக்களை சிற்பிக்கு தெரிவித்துவிடுங்கள் .

  7. இவர் பெயர் லோமச ரிஷியா அல்லது ரோமச ரிஷியா? (ரோமம் = முடி) இது ரொம்ப முக்கியமா என கேட்கிறீர்களா? நாம் இழந்து கொண்டிருக்கும் செல்வங்களில் சமஸ்க்ருத அறிவும் ஒன்று. அது ஏதோ பிராமணர் களுக்கு மட்டுமான பாஷை என்ற தப்பான கருத்து நிலவுகிறது (உபயம் அரசியல்). தமிழும் வட மொழியும் நமது இரு கண்ங்கள் என திரு முத்துராமலிங்க தேவர் சொன்னதை சுலபமாக இருட்டடிப்பு செய்து விட்டோம். இருக்கும் கொஞ்ச நஞ்ச இலக்கியங்களை காப்பாற்றுவது நமது கடமை. இதில் தயவு செய்து ஜாதி வேண்டாம்.

    1. எனக்கும் அது பற்றி சந்தேகம் இருந்தது. ரோமச மகரிஷி என்பது காலப்போக்கில் ‘லோமச’ என்று மருவியிருக்க கூடும். மற்றபடி அவர் பெயர் லோமச மகரிஷி தான்.

      – சுந்தர்

  8. சுந்தர்,

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல. குரு அருள் இல்லாமல் இதனை அழகான பதிவை எழுத முடியாது. உங்களுக்கும், rightmantra தளத்துக்கும் குருவருள் பரிபூர்ணமாக உள்ளது.

    – ராம்ஜி நடராஜன்

  9. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்கும் சிறு இடைவெளியை தான் நாம் வாழ்க்கை என்கிறோம் !!!

    கிடைத்தற்கு அறிய இந்த சிறு இடைவேளையில் மற்றவர் உள்ளத்திற்கும் உடலுக்கும் எண்ணத்திற்கும் தீங்கு எண்ணாமலும் செய்யாமலும் வாழ்தால் அதுவே மிக பெரிய புண்ணியமாகும் !!!

    சற்று கடினம் தான்
    இருந்தாலும் முயல்வோம் – முடிந்தவரை
    பிறருக்கு உதவ!!!

Leave a Reply to shivakumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *