Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

print
சுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு நல்ல மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன.

பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம், பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன வீட்டிற்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியைத் தரும். ‘ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.

==================================================

நேற்று 28/05/2013 அன்று குருப்பெயர்ச்சி. அனைத்து சைவ ஆலயங்களிலும் நேற்றிரவு கூட்டம் அலைமோதியது. நேற்றைக்கு இரவு 9.30க்கு பணி முடிந்து திரும்புகையில் தெருவோரத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களில் கூட கூட்டம் நிரம்பி வழிந்தது. குருபெயர்ச்சி குறித்து அதீத நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக புரிந்தது.

குருப் பெயர்ச்சிக்கு என்ன செய்தோம்?

சரி… குருப் பெயர்ச்சிக்கு நாம் செய்தது என்ன? முக்கிய அசைன்மெண்ட் ஒன்று நமக்கு அலுவலகத்தில் தரப்பட்டுள்ள படியால் கடந்த ஒரு வாரகாலமாகவே தினசரி கூடுதல் நேரம் அலுவலகத்தில் ஸ்டே செய்து டூட்டி பார்த்துவருகிறேன். ஆகவே, குருப் பெயர்ச்சி அன்று ஆலயத்திற்கு செல்ல நேரமிருக்காது என்று தெரியும். அலுவலக நேரம் ஒத்துழைக்காது என்பதால் என்ன செய்வது என்று ஒரே குழப்பம். அரக்க பறக்க ஆலயத்திற்கு சென்று அவசர அவசரமாக திரும்பி வருவதில் எனக்கு என்றுமே உடன்பாடு கிடையாது. ஆலயம் என்பது ஆன்மா லயிக்கும் இடம் என்பதால் மிகவும் மனம் ஒன்றி தான் ஆலயம் செல்வேன். நினைத்தவுடன் திடுதிப்பென்று என்னால் எந்த ஆலயத்திற்கும் செல்ல முடியாது. மன ரீதியாக என்னை தயார் படுத்திக்கொண்டு தான் ஆலயம் செல்வது என் வழக்கம்.

ஆனால் குருப் பெயர்ச்சிக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று மனம் சிந்தித்தபடி இருந்தது. கடைசியில் ஒரு யோசனை தோன்றியது. மதிய உணவு இடைவேளையில், உணவை வேகமாக முடித்துவிட்டு, நேராக தி.நகர் மேட்லி ரோடு சந்திப்பின் கடைசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றேன்.

அங்கு கோ-சாலை ஒன்று உள்ளது. கடந்த அக்ஷய திரிதியை அன்று மாலை இங்கு தான் சென்றிருந்தேன். சுவாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு பசுகொட்டிலில் உள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை தந்துவிட்டு வந்தேன். இங்கு ஒரு காளை மற்றும்  ஐந்து பசுக்கள் உள்ளன. ஒரு கன்று உள்ளது.

நாம் சென்ற நேரம் மதியம் என்பதால் எவரும் இருக்கவில்லை. இருப்பினும் அங்கிருந்த ஒரு பெண்மணியை விசாரித்ததில், அவர் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் பெண்மணி என்பது தெரிந்தது.

பசுக்களுக்கு தீவனம் வாங்கி தரவிரும்புவதாகவும், எந்த மாதிரி தீவனம் தேவைப்படும் என்று விசாரிக்க வந்ததாகவும் கூறினேன்.

நல்லவேளை அவர்களுக்கு விபரம் தெரிந்திருந்தது. அருகில் முத்தாலம்மன் கோவில் என்று ஒரு அம்மன் கோவில் இருப்பதாகவும் அதன் எதிரில் மாட்டு தீவனம் விற்கும் கடை இருப்பதாகவும், அங்கு தான் இங்குள்ள பசுக்களுக்கு வாடிக்கையாக தீவனம் வாங்குவது வழக்கம் என்றும் அங்கு சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பசு கொட்டிலுக்கு தீவனம் வேண்டும் என்றால், அவர்களே தீவனங்களை மிக்ஸ் செய்து ஒரு மூட்டையில் கொண்டு வந்து போட்டுவிடுவார்கள் என்றும் பணம் மட்டும் நாம் கட்டினால் போதும் என்றும் கூற, அவர்கள் சொன்ன கடைக்கு சென்றேன்.

ஆனால் நாம் சென்ற நேரம் கடை பூட்டியிருந்தது. மதியம் 2.30க்கு தான் திறப்பார்களாம்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. லன்ச் டயம் முடியப்போகிறது. நாம் இப்போதைக்கு அலுவலகம் திரும்பிவிடலாம்….  எல்லாம் அந்த காசி விஸ்வநாதர் பார்த்துகொள்வார் என்று திரும்பிவிட்டேன்.

சரி.. அடுத்து என்ன செய்வது என்று யோசித்ததில்….. ஒரு 5.30 மணி வாக்கில் ஒரு 10 அல்லது 15 நிமிடம் எனக்கு நேரம் கிடைத்தால் போதும்… திட்டமிட்ட அனைத்தையும் முடித்துவிடமுடியும் என்று தோன்றியது.

ஒரு 15 நிமிடம் பர்மிஷன் கேட்டுப் பார்ப்போம்… கொடுத்தால் உடனே ஓடிச் சென்று அனைத்தையும் முடித்துவிட்டு திரும்பிவிடலாம் என்று கருதி பர்மிஷன் கேட்க விஸ்வநாதர் அருளால் பர்மிஷன் கிடைத்தது. (எனக்கு பணியின் இடையே பர்மிஷன் கிடைப்பது அரிது.)

ஒரு நொடி கூட தாமதிக்காது, உடனே தீவனம் விற்கும் கடைக்கு பைக்கில் பறந்தோம். ஒரு மூட்டை (50 கிலோ) தீவனம் ஆர்டர் செய்தோம். ரூ.1000/- ஆயிற்று. தீவனத்தை நம் எதிரிலேயே மிக்ஸ் செய்து சாக்குமூட்டையில் நிரப்பி, தைத்து கொண்டு வந்து கோவிலில் இறக்கினார்கள்.

தீவனம் வந்து இறங்குகிறது

இங்கே கோவிலில் பசுக்களை பராமரிப்பவர் நல்லவேளை வந்திருந்தார். அவரிடம் குருபெயர்ச்சியை முன்னிட்டு பசுக்களுக்கு நமது ரைட்மந்த்ரா வாசகர்கள் தீவனம் வாங்கி தந்திருப்பதாகவும், அதை கையோடு ஒப்படைக்க வந்திருப்பதாகவும் சொன்னேன்.

“ரொம்ப நன்றி சார்… ரொம்ப சந்தோஷம்” என்று மகிழ்ச்சியுடன் கூறியவர்… மூட்டை கொண்டு வந்த கடை ஊழியரிடம் “மூட்டையை வைக்கவேண்டாம். டிரம்ல பிரிச்சி எல்லாத்தையும் கொட்டிடுங்க. உங்க தீவனம் தான் இன்னைக்கு சாயந்திரமும், அடுத்த ரெண்டு மூணு நாளைக்கும்” என்றாரே பார்க்கலாம்…. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

காரணம் அங்கு ஏற்கனவே இரண்டு மூட்டை தீவனம் இருந்தது. இருப்பினும், நாம் வாங்கி தந்த தீவனம் குருபெயர்ச்சி அன்று சிவாயலத்தின் பசுக்களுக்கு செல்கிறது என்றால் நமக்கு அது எத்தனை பெரிய பாக்கியம்…!

பசுகொட்டிலில் ஒரு கணம் நின்று பிரார்த்தனை செய்தோம். “பெயரைக் கூட வெளியிட விரும்பாது நமது அறப்பணிகளில் மனமுவந்து தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள எல்லா நல்லுள்ளங்களுக்கும், நல்லதையே என்றும் நாடும் நம் வாசகர்களுக்கும் இந்த கைங்கரியத்தின் பலன் சேரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டேன். (பசுகொட்டிலில் செய்யப்படும் பிரார்த்தனை/ உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பன்மடங்கு பலன் தரவல்லது!)

பராமரிப்பாளரிடம் அங்கு பசுக்களுக்கு என்னென்ன எப்போது தேவை என்று கேட்டு தெரிந்துகொண்டேன். (சராசரியாக ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 மூட்டை தீவனம் தேவைப்படுகிறது.) பசுக்களுக்கு தீவனம் தவிர வைக்கோல் உள்ளிட்டவை ஏதேனும் தேவைப்பட்டால் மறக்காமல் என்னை தொடர்புகொள்ளுங்கள் என்று கூறி, என் நம்பரை கொடுத்திருக்கிறேன்.

என் கைகளால் தீவனம் மிக்ஸ் செய்து தர ஆசை எனக்கு. இருப்பினும் மாலை 6.30க்கு தான் அவைகளுக்கு ரெகுலராக தீவனம் வைக்கும் நேரமாம். ஆனால் நான் உடனே அலுவலகம் திரும்பவேண்டும் என்பதால், என்ன செய்வது என்று சற்று யோசித்தேன்.

“வெளியில அகத்திக் கீரை கிடைக்கும். உங்க திருப்திக்கு ஒரு கட்டு வாங்கி வந்து கொடுத்துடுங்கோளேன்” என்றார். அதன் படி அகத்திக் கீரை வாங்கி வந்து அனைத்து பசுக்களுக்கும் தந்தேன்.

விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் தருணம், சம்பிரதாயத்துக்கு அவருடைய பெயரை கேட்டேன்… அவர் தனது பெயரை சொன்னவுடன் எனக்கு ஒரு கணம் கண்களில் நீர் பெருக்கெடுத்துவிட்டது.

சர்வேஸ்வரா… எப்பேற்பட்ட பாக்கியத்தை எங்களுக்கு தந்திருக்கிறாய்…. …. ஒவ்வொரு கணமும் நீயே உடனிருந்து எங்களை இயக்குகிறாய்.. உன் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்…. என்று மனம் நன்றிப் பெருக்கில் துடித்தது.

அப்படி என்ன பெயர் அவருக்கு?

“குரு!”

குருப் பெயர்ச்சி அன்று சிவாலயத்தின் பசுக்களுக்கு ‘குரு’வின் மூலமே தீவனம் சென்றுவிட்டது.

இது போன்ற செயல்களில் நீங்களும் நீங்கள் வாழும் பகுதிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறியதோ பெரியதோ கோ-சேவை செய்யவேண்டும் என்பதே என் விருப்பம்.

எல்லாரும் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நரசிம்ம ஜெயந்தி எப்படி கொண்டாடினோம்??

நரசிம்ம ஜெயந்தியை அன்று பேரம்பாக்கம் சென்று லக்ஷ்மி நரசிம்மரை தரிசிப்பது என்று நமது வழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் இம்முறை வேறொரு தடுமாற்றம் வந்தது. மே 23 அன்று தான் நரசிம்ம ஜெயந்தி என்றால் பேரம்பாக்கம் ஆலயத்தில் மட்டும் அவர்கள் பஞ்சாங்கப்படி மே 24 அன்று தான் நரசிம்ம ஜெயந்தி என்று சொன்னார்கள். சரி….மே 24 அன்றே போவது என்று தீர்மானித்த வேளையில், 23 அன்று உலகமே கொண்டாடும் தினத்தன்று நாம் ஏதாவது செய்யவேண்டுமே….  என்ன செய்வது என்ற சிந்தனை எழுந்தது. நாம் செய்வது நிச்சயம் அவன் மகிழும்படி இருக்கவேண்டும் அதே சமயம் நம் தளவாசகர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமையவேண்டும் என்று கருதினேன். கடைசியில் ஒரு யோசனை தோன்றியது.

நம் அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி போன்ற நமது அன்புக்குரியவர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களுக்காக நாம் அன்னதானம் செய்கிறோம், நட்புக்கும் சுற்றத்துக்கும் விருந்து வைக்கிறோம் அல்லது ட்ரீட் தருகிறோம். இப்படி ஏதாவது செய்து பலவகையில் சந்தோஷப்படுகிறோம். அது போல என்றும் என்னை காக்கும் நரசிம்மரின் பிறந்தநாளை அவனுக்கு பிடித்த வகையில் கொண்டாடுவது என்று முடிவு செய்தபோது நினைவுக்கு வந்தது திருவேற்காடு பசுமடம் தான்.

http://rightmantra.com/wp-content/uploads/2012/10/Ko-Salai2.jpg

வயதான கறவை நின்று போன பசுக்கள் முதல் கசாப்புகடைகளுக்கு விற்கப்படும் அடிமாடுகள் வரை பல மாடுகள் மீட்கப்பட்டு இங்கு பராமரிக்கப்படுகிறது. கடந்த மஹாளய அமாவாசை அன்று இங்கு நாம் சென்று வந்தது பற்றிய பதிவை அளித்தது நினைவிருக்கலாம்.

(http://rightmantra.com/?p=755)

எனவே நரசிம்ம ஜெயந்தி அன்று இங்குள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கி தருவது என்று தீர்மானித்தோம்.

எனவே மே 23 அன்று வழக்கத்தை விட சற்று சீக்கிரமே எழுந்து தயாராகி நேராக திருவேற்காடு பெருமாள் அகரத்தில் உள்ள பசுமடத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு பசுக்களை பரமாரித்துவரும் பாலா என்கிற ஊழியரிடம் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நமது தளம் சார்பாக பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தரவிரும்புவதாகவும் அவர்கள் தேவை என்ன என்றும் கேட்டேன்.

“வைக்கோல் அல்லது தவிட்டு மூட்டை வாங்கித் தாருங்கள் போதும்” என்றார்.

“இரண்டிற்கும் சேர்த்து எவ்வளவு ஆகும்?” என்றேன். “சுமார் ரூ.2000/- வரை ஆகும்” என்றார்.

“உங்களுக்கு ரெகுலராக இவற்றை சப்ளை செய்கிறவர்களிடம் ஆர்டர் செய்தால் உடனே கொண்டு வருவார்களா? நான் இருந்து பணம் கட்டி உங்களுக்கு வாங்கித் தந்துவிட்டு செல்கிறேன்”

“வைக்கோல் உடனே கிடைக்காது. ஏன்னா… மட்டு வண்டியில கொண்டு வருவாங்க… அதனால லேட் ஆகும். தீவனம் வேண்ணா கேட்டுப் பார்க்கிறேன்” என்றவர் உடனே ஃபோன் டயரி கொண்டு வந்து தீவனம் சப்ளை செய்பவருக்கு ஃபோன் செய்தார். ஆனால் அவரது செல் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆகையால் உடனே தொடர்புகொள்ள முடியவில்லை.

“பணத்தை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்வதை விட நாம் இருந்து வாங்கித் தருவது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

“பக்கத்துல மளிகை கடைகளில் எங்காவது தீவனம் கிடைக்குமா?” என்றேன்.

திருவேற்காடு கோவில் அருகே உள்ள பெரிய மளிகை கடை ஒன்றில் கோதுமைத் தவிடு, நெல் தவிடு தலா ஒரு மூட்டை ஆர்டர் செய்தோம். கையோடு வண்டியில் ஏற்றி கொண்டு வந்துவிட்டார் பாலா.

உள்ளே அந்த தீவன மூட்டைகள் வைக்கப்பட்ட இடத்தை பார்த்தால் நீங்கள் சிலிர்த்துவிடுவீர்கள்… சாட்சாத் மகா பெரியவாவின் காலடிகளில் அம்மூட்டைகள் வைக்கப்பட்டது.

அங்கு புதிதாக மகா பெரியவாவின் படத்தை பல அரிய தகவல்களுடன் வினில் ஷீட்டில் பிரிண்ட் எடுத்து சுவற்றில் ஒட்டியிருக்கிறார்கள். மஹாளய அமாவசை அன்று நாம் வந்தபோது எள் போட்டால் எள் எடுக்க முடியாத அளவிற்கு கூட்டம். எங்கு பார்த்தாலும் தலைகள் தான். எனவே அந்த பரபரப்பில் நாம் இதை கவனிக்கவேயில்லை. தற்போது தான் பெரியவாவின் படத்தை கவனித்தேன். அவரே நம் பணிகளுக்கு ஆசி கூறுவது போல இருந்தது. சில நொடிகள் பிரார்த்தனை செய்தேன்.

நாம் வாங்கித் தந்துள்ள தீவன மூட்டைகள்

பசுக்களுக்கு நாம் செய்யும் இந்த கைங்கரியத்தின் பலனை நமது தர்மகாரியங்களில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டுவருபவர்களுக்கும், நமது பணிகளில் துணை நின்று உதவி வரும் நண்பர்களுக்கும் கொண்டு சேர்க்கும்படி மகா பெரியவாவை வேண்டிக்கொண்டேன். தீவனத்தை ஒப்படைக்கும்போது இதை கூறித் தான் சங்கல்பம் செய்தேன்.

பாலாவிடம் நன்றி கூறிவிட்டு கிளம்ப முயன்றபோது, “மூட்டையை பிரிச்சு கொஞ்சம் தீவனத்தை உங்க கையாலே கலந்து ஒரு மாட்டுக்கு வைங்க. மத்த மாடுகளுக்கு நான் அப்புறம் வெச்சிக்கிறேன்” என்றார்.

எத்தனை பெரிய பாக்கியம் என்று எண்ணி, இரண்டு மூட்டைகளையும் பிரித்து கைகளில் தீவனத்தை அள்ளி ஒரு டப்பில் போட்டு தண்ணீர்விட்டு கலக்கி, முதலில் இருந்த ஒரு மாட்டிற்கு வைத்தேன். கன்றுகளும் பசுவும் போட்டியிட்டு ஆனந்தமாக தீவனத்தை சாப்பிட்டன.

தீவனத்தை பசுக்கள் உட்கொள்ளும் காட்சி

நாம் வாங்கித் தந்த இரண்டு மூட்டை தீவனம் அங்கிருக்கும் மாடுகளின் ஜஸ்ட் ஒரு வேளை உணவு தெரியுமா? ஏனெனில் நூறு மாடுகளுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு மாடும் குறைந்தது ஒருவேளைக்கே இரண்டு கிலோ தீவனம் உட்கொள்ளும்.

“எப்படி சார் இவ்வளவு மாடுகளுக்கு தீனி போட்டு சமாளிக்கிறீங்க? அந்தளவு வருமானம், நன்கொடை வருதா?” என்று கேட்டேன்.

“ஓனர் ஏதோ கஷ்டப்பட்டு கிடைக்கிற டோனேஷன்ல சமாளிக்கிறார் சார். உங்களை மாதிரி யாராவது அப்பப்போ இப்படி தீவனம் வாங்கி தருவாங்க. வீட்டு விசேஷம்னா சிலர் வைக்கோல் வாங்கி தருவாங்க. அதை வெச்சி ஏதோ போய்க்கிட்டுருக்கு…” என்றார் பாலா.

“தீவனத்திற்கோ வைக்கோலுக்கோ தட்டுப்பாடு என்றாலோ அல்லது வேறு ஏதேனும் அவசர உதவி தேவை என்றாலோ உடனே என்னை கூப்பிடுங்கள். நானும் என் வாசகர்களும் எங்களால் இயன்றதை செய்கிறோம். பசுக்கள் எக்காரணம் கொண்டும் ஒரு வேளை கூட போதிய உணவின்றி தவிக்கக்கூடாது. மேலும் இதை தளத்திலும் பதிவு செய்கிறேன். விருப்பப்படுகிறவர்கள் செய்யும் உதவிகள் அனைத்தையும் இங்கு கொண்டு சேர்க்கிறேன்” என்றேன்.

“அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா ரொம்ப சந்தோஷம் சார்” என்றார்.

மீண்டும் கோசாலையை ஒரு முறை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு கிளம்பிவந்தேன்.

கோமாதா இருக்குமிடம் எங்கள் கோபாலன் இருக்குமிடமல்லவா?

நேற்று இரவு குருபெயர்ச்சி நேரம் சரியாக 9.00 மணிக்கு பசுமடம் பாலா அவர்களிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. பசுக்களுக்கு வைக்கோல் வேண்டும் என்றும் இருக்கும் வைக்கோல் நாளை மதியம் வரை தான் தாங்கும் என்றும், நம்மால் ஏதாவது உதவ முடியுமா என்றும் கேட்டார். ஆர்டர் செய்வதாக இருந்தால் வைக்கோல் சப்ளை செய்பவரின் நம்பரை நமக்கு தருவதாகவும் நாமே ஆர்டர் செய்யலாம் என்றும் கூறினார்.

குருபெயர்ச்சி நேரத்தில் இதை விட பெரிய பாக்கியம் கிடைக்குமா? உடனே நம்பர் வாங்கி சம்பந்தப்பட்டவரிடம் வைக்கோல் சுமார் 100 பிரி ஆர்டர் செய்துவிட்டேன். (மொத்தம் ரூ.1000/-). மறுநாள் காலை பசுமடத்தில் வைக்கோலை போட்டுவிடுவதாகவும், அங்கேயே பணத்தை கொடுத்துவிடுங்கள் என்றும் சப்ளையர் கூறினார்.

இன்று காலை அலுவலகம் செல்லும் முன், பசுமடம் சென்று வைக்கோலுக்கு பணத்தை கட்டி இரசீதும் வாங்கிவிட்டேன்.

============================================
கோ-ரக்ஷணம் என்பதே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையு போலத் தான்…!

உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்;அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது?ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்.

கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.

– தெய்வத்தின் குரலில் மகா பெரியவா

============================================

பேரம்பாக்கம் பயணம் எப்படி?

அடுத்த நாள் 24 மே அன்று அதிகாலையே எழுந்து தயாராகி பேரம்பாக்கம் கிளம்பிவிட்டேன். அதிகாலை சென்றால் தான் நடை திறக்கும்போது தரிசித்துவிட்டு உடனடியாக திரும்பி அலுவலகத்துக்கு 9.30குள் வர முடியும். எனவே காலை 4.30க்கு எழுந்து குளித்து முடித்து தயாராகி 5.30க்கு கிளம்பி சரியாக 6.45க்கெல்லாம் பேரம்பாக்கம் சென்றுவிட்டேன்.

இந்த சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரத்திலும் பேரம்பாக்கம் பசுமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (இணைக்கப்பட்டுள்ள படங்கள் இந்த முறை சென்றபோது எடுத்தது.)

இதற்கிடையே நண்பர் மனோகரன் திருவள்ளூரிலிருந்து தனது மனைவியுடன் வந்திருந்தார். நாம் சென்ற நேரம் அவர்கள் தரிசனம் முடித்து பிரகாரம் வலம் வந்து கொண்டிருந்தனர்.

நாம் வரிசையில் நின்று நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து கண்குளிர தரிசித்துவிட்டு வெளியே வந்தோம். வெளியே வந்தால், எதிரே ஒருவர், “சுந்தர் சார்….” என்று நம்மை அழைக்க…. நிமிர்ந்து பார்த்தால், நமது தளவாசகர் அருணோதயகுமார் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வேப்பம்பட்டிலிருந்து வருவதாகவும், நமது பதிவை பார்த்துவிட்டு இங்கு வந்திருப்பதாகவும் சொன்னார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்று கிளம்பினோம்.

வெளியே கோசாலையில் உள்ள பசுக்களுக்கு மறக்காமல் அகத்திகீரைகளை வாங்கித் தந்தோம்.

7.30க்கு கிளம்பிவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் கிளம்ப 8.15 ஆகிவிட்டது. அன்றைக்கு அலுவலகத்துக்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது. மற்றபடி அற்புதமான பயணம். திவ்ய தரிசனம்.

சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் அவசியம் குடும்பத்துடன் ஒருமுறை பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) சென்று வாருங்கள்.

[END]

8 thoughts on “கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

  1. சார் , அனைத்தும் மிக அருமை . பேரம்பாக்கம் விரைவில் செல்ல வேண்டும் என ஆவலாக உள்ளது . நரசிம்மர் தான் அருள் புரிய வேண்டும்

  2. குரு பெயர்ச்சி அன்று தாங்கள் செய்துள்ள சேவைகள் மிகவும் மகத்தானது .தாங்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் .மனித நேயம் குறைந்து வரும் இன்றைய காலத்தில் சுந்தர் ஜி பொது நலனுக்காக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    தங்களுடன் நாங்கள் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம் .

  3. சுந்தர்ஜி,
    குரு பெயர்ச்சி அன்று பசுக்களை பராமரிக்கும் இடத்துக்கு சென்று நம் தளத்தின் சார்பாக தீவனம் கொடுத்து அப்பப்பா இருக்கும் கொஞ்ச நேரத்தில் உங்களை தவிர வேறு யாருக்கும் இயலாது.உங்களை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது.

    அடுத்து

    பேரம்பாக்கம் வயல் வெளியை பார்க்கும் போது ………

    காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா(காக்கை)பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா(காக்கை)கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா – நின்றன்கீதம் இசைக்குதடா நந்தலாலாதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலஆ
    என்று பட தோன்றுகின்றது. இந்த சும்மரில் இதை விட அழகு வேறு உண்டோ. பேரம்பாக்கம் எப்போது நம் தளம் சார்பாக?

    அருமையோ அருமை

  4. அருமையான பதிவு !!!

    கோ சாலை பற்றியும் கோமாதா பராமரிப்பு பற்றியும் அதனை போற்றி பாதுக்கக்க வேண்டியதன் அவசியத்தையும் எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கியமைக்கு மிக்க நன்றி !!!

    ஆறறிவு படைத்த ஜீவராசியான நாம் வயிற்று பசி என்றால் அடுத்தவரிடம் வாய் திறந்து முறையிட்டு தீர்த்துக்கொள்கிறோம் !!!
    ஆனால் சகல சௌபாக்கியத்தை நமக்கு அளிக்க கூடிய கோமாதாவை கவனிக்க தவறி விடுகிறோம் !!!

    இனி ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது அங்குள்ள பசுக்கலாகட்டும் அல்லது கோவில் யானை ஆகட்டும் அவைகளுக்கு நம்மால் இயன்ற தீவனமோ, கீரையோ அல்லது பழங்களோ வாங்கி கொடுத்து அவற்றின் பசியில் ஒரு சிறு பகுதியை ஆற்ற முயல்வோம் !!!

    இப்பொழுது நடை பெற்றிருக்கும் இந்த குரு பெயர்ச்சி எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

    வாழ்க வளமுடன் !!!

  5. உங்களை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது.தங்களுடன் நாங்கள் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம் . பெருமையாக சொல்கிறேன் சுந்தர்ஜி, எனது நண்பர் என்று ..இப்பொழுது நடை பெற்றிருக்கும் இந்த குரு பெயர்ச்சி எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

    வாழ்க வளமுடன் !!!

  6. சுந்தர் சார், உங்களை நினைத்தாள் பெருமையாகவும், பொறாமையாகவும் உள்ளது. எவ்வளவு பெரிய விஷயம் செய்கிறீர்கள். பதிவு மிக அருமை. நன்றி சார்.

  7. நல்ல விஷயத்தை முழு மனதுடன் குரு பெயர்ச்சியன்று செய்திருக்கும் உங்களுக்கு மற்றும் உங்கள் வாசகர்களுக்கு குருவின் பரிபூரண அருள் என்றென்றும் கிடைத்து நல் வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்

Leave a Reply to ARUNOTHAYAKUMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *