Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > இசைச் சக்கரவர்த்தி திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் இறுதிப் பயணம்

இசைச் சக்கரவர்த்தி திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் இறுதிப் பயணம்

print
டி.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. டி.எம்.சௌந்தர்ராஜன், தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த மாணிக்கங்களில் ஒருவர். தேனினும் இனிய குரலில் பல்லாயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை, பக்தி பாடல்களை பாடியிருக்கும் ஒரு இசைச் சுரங்கம். கடவுள் மறுப்பு திரையுலகிலும் தமிழ் நாட்டிலும் தலை தூக்கிய காலகட்டங்களில், நெற்றி நிறைய விபூதியோடும், பளீச் குங்குமத்தோடும் வலம் வந்த  டி.எம்.எஸ். அவர்களை பார்ப்பதே கண்களுக்கும் இதயத்துக்கும் இதம் தருகிற உன்னதமான ஒரு விஷயமாகும். மேலும் டி.எம்.எஸ். என்றால் முருகன், முருகன் என்றால்  டி.எம்.எஸ். என்று நினைக்கும் அளவிற்கு முருகனின் சீரிய தொண்டர் இவர். தமிழ் நாட்டில் இவர் குமரனின் புகழ் பாடாத ஊர்களே இல்லையெனும் அளவுக்கு பல கச்சேரிகளில் பாடியவர். உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இவரது கச்சேரி நடைபெற்றுள்ளது. எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அரசியல் சிம்மாசனத்திற்க்கும் சிவாஜிக்கு கிடைத்த கலையுலக சிம்மாசனத்திற்க்கும் இவர் பின்னணி பாடிய பாடல்களும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சென்ற ஆண்டு இதே நேரம், திரு.டி.எம்.எஸ். அவர்களை ஒரு சிறப்பு  பேட்டிக்காக நாம் சந்தித்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். பேட்டியின் இறுதியில் அவரின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றேன். அந்த ஆசியினால் தானோ என்னவோ இன்று இப்படி ஒரு பக்தி + சுயமுன்னேற்ற தளம் நடத்திக்கொண்டிருக்கிறேன். (முழு பேட்டியும் அடுத்த பதிவில் வருகிறது).

‘ஓம் சரவண பவ’ என்னும் முருகனின் சடாக்ஷர மந்திதை கூறியபடி நம்மை ஆசீர்வதித்தார்.

இடையில்  உடல் நலம் குன்றி அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்தார். அவரது மகன் திரு.பால்ராஜை தொடர்பு கொண்டு அவ்வப்போது நலம் விசாரித்துவந்தேன்.

நேற்று மதியம் அவரது மறைவுச் செய்தியை கேட்டபோது நம்ப முடியாது தவித்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது  சென்று சனீஸ்வரருக்கும் ஆஞ்சநேயருக்கும் விளகேற்றுவது வழக்கம். ஆனால் நேற்று மாலை அதற்கு பதில் டி.எம்.எஸ். அவர்களுக்கு இறுதியஞ்சலி செலுத்த அவரது மந்தைவெளி இல்லத்துக்கு சென்றுவிட்டேன்.

பொதுமக்களும் திரையுலகப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வந்த வண்ணமிருந்தனர். ‘முருகா முருகா’ என்று ஆயுள் முழுதும் உருகிக்கொண்டிருந்த அந்த இசைச் சக்கரவர்த்தியை வணங்கி சிறிது நேரம் பிரார்த்தனை செய்தேன். அவரது பூதவுடலை நமஸ்கரித்துவிட்டு அவரது மகன் திரு.பால்ராஜுக்கு தனிப்பட்ட முறையில் சிறிது நேரம் ஆறுதல் கூறிவிட்டு, சென்ற ஆண்டு அவரை சந்தித்து  அளவளாவியதை நினைவுகூர்ந்தேன்.

முருகக்  கடவுள், பட்டினத்தார், அருணகிரிநாதர், மற்றும் திரையுலக பாடல் அனுபவங்கள்  என்று  திரு.டி.எம்.எஸ். அவர்கள் நமக்கு அளித்த விசேட பேட்டி அடுத்து நமது தளத்தில் வரவுள்ளது.  அள்ள அள்ள குறையாத தங்கச் சுரங்கம், திகட்டாத தெள்ளமுது அது.

திரு.டி.எம்.எஸ். அவர்கள் கடைசீயாக அளித்த பேட்டி அது தான். மிகப் மிகப் பெரிய ஊடகங்களுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு அது. இது வரை அவர் இத்தனை விரிவாக மனம் திறந்து எவரிடமும் பேசியிருப்பதாக நாம் கருதவில்லை. அந்த வகையில் நாம் பாக்கியசாலி தான்.

நடத்தித் தந்த எம்பெருமான் முருகனுக்கு என்றென்றும் எங்கள் நன்றிகள் உரித்தாகுக.

திரு.டி.எம்.எஸ். அவர்களுக்கு மகா பெரியவாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி நண்பர் பால்ஹனுமான் தனது தளத்தில் தந்திருக்கிறார். அதை கீழே தந்திருக்கிறேன். டி.எம்.எஸ். அவர்களுடனான நமது சந்திப்பு பற்றிய பதிவு அடுத்து வரும்.

‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்ன மகா பெரியவா!

‘‘எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தைத் தந்ததே முருகப் பெருமான்தான்.

சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி… அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்! எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்!

ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன்.

அவ்ளோதான்… பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. ‘கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்’னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்.

ஒருமுறை… காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும் அடுத்ததா… அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது.

சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார்.

இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’ – இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

(நன்றி : balhanuman.wordpress.com)

=================================================

திரு.டி.எம்.எஸ். அவர்கள் பாடிய பாடல் அனைத்தும் ஒன்றை ஒன்றை விஞ்சும் தன்மை கொண்டவை என்றாலும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.

‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’

ஆறு மனமே ஆறு

தர்மம் தலை காக்கும்

பார்த்தா பசுமரம்

பித்தா பிறை சூடி

எங்களுக்கும் காலம் வரும்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

கண் போன் போக்கிலே

நண்டூருது நரியூருது…

[END]

9 thoughts on “இசைச் சக்கரவர்த்தி திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் இறுதிப் பயணம்

  1. தெய்வீக குரல் மன்னன் திரு டி எம் சௌந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழகத்துக்கு ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். ஹிந்தியில் ஒரு கிஷோர், ஒரு முகேஷ், ஒரு மன்னாடே என்று சொன்னாலும் தமிழில் தனித் தலைவனாய் டி எம் எஸ் திகழ்ந்தார்.

    அவர் பாடிய பாடலின் வரிகளை நினைவு கூர்கிறேன்:

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.
    இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

    சொல்லானாலும் ஓம் என்று ஒலிக்கும் சொல்லாவேன்
    பழச்சுவையனாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
    அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
    மறு உயிரானாலும் முருகன் அருளால் மயிலாவேன்

    நான் மண்ணானாலும் திருசெந்தூரில் மண்ணாவேன்

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

    அன்பே சிவம்

  2. அறுபதுகளில் நாத்திகம் அரசியல் துறையிலும் சினிமா துறையிலும் பரவியிர்ந்த காலத்திலேயே ஆத்திக வழியில் சென்ற மகான்களில் tms அய்யாவும் ஒருவர். இனி உலகம் ஓயும் வரை tms அய்யாவின் புகழ் ஓயப்போவதில்லை. வாழ்க அவரது புகழ்!!

  3. சிம்ம குரலோன் திரு டி எம் சௌந்தரராஜன் அவர்களின் பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாதவை !!!

    எத்துனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுபவை !!!

    பட்டினத்தார் அருணகிரிநாதர் போன்ற காவியத்தில் அவர் நடித்திருந்தார் என்று சொல்வதை காட்டிலும் வாழ்ந்திருந்தார் என்று சொல்வது சால பொருந்தும் !!!

    இன்றும் அத்திரைக்காவியங்களை காணும்போது நம் மனதில் உள்ள ஈகோ அஹங்காரம் அனைத்தும் தீயில் எரிந்து பஸ்பம் ஆவதை நாம் உணர முடியும் !!!

    எத்தனையோ திரைப்பாடல்களை அவர் பாடி இருந்தாலும் அவர் பாடிச்சென்ற பக்திப்பாடல்கள் என்றென்றும் நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் !!!

    அதிலும் முருகப்பெருமானின் பாடல்களை திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் கிடக்கும் இன்பமே அலாதி தான் !!!!

    இத்துனை சிறப்பு மிக்க திரு டி எம் எஸ் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பதை உள்ளம் ஏனோ ஏற்க மறுக்கிறது !!!

    அவரது உடல் இந்த உலகை விட்டு மறைந்திருக்கலாம்
    அவர் நமக்கா விட்டு சென்ற அவரது குரல் அவர் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்கள் மூலம் என்றென்றும் நமது இதையத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் !!!

    முருகனின் திருவடியில் சேர்ந்துவிட்ட அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும் அவர்தம் குடும்பத்தர்ருக்கும் உறவினர்க்கும் அவரது இழப்பை தாங்கும் மனஉறுதியையும் மன ஆறுதலையும் வழங்கி என்றென்றும் அவர்களை துணை நின்று காத்திட அவர் என்றென்றும் போற்றி வணங்கிய அந்த தண்டாயுதபாணியை மனமுருக வேண்டி பிரார்த்திப்போம் !!!

  4. டிஎம் எஸ் அய்யா மறைத்த தகவல் கேட்டதும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவருடைய பக்தி பாடல்கள் நம்மை உருகவைக்கும். முருகன் அவரை தம்மிடம் அழைத்துக்கொண்டார். உலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலித்துககொண்டு இருக்கும்.

  5. என்னுடைய facebook ல் தெய்வத்திரு.TMS அவர்களுக்கு நான் அளித்த சிறு காணிக்கை

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    சமகால தமிழிசை வரலாற்றில் ஈடு இணையற்ற ஒரு அம்சம் தெய்வத்திரு TM சௌந்தராஜன் அவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல !

    தமிழிசை யில் மட்டுமே பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார் ..அதில் அநேகம் ஒலி சேர்ப்பில் உள்ள விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலக…ட்டத்தில் ..

    தெய்வத்திரு எம்.ஜி.ஆர் தமிழக முதல்வர் ஆனதுக்கு- இவருக்கு ஒரு பெரும் பங்கு உண்டு – தன்னுடைய தெய்வீக குரல் மூலம் மக்கள் மனதில் எம்,ஜி.ஆர் ஆகவே பதிந்தார் …

    நடிப்புலக மாமேதை தெய்வத்திரு சிவாஜி கணேசன் கூறியது – “எனக்கு காட்சிகளில் நடிப்பதை விட பாடல்களில் நடிப்பதே மிக கடினம்…காரணம் TMS அவருடைய குரலில் இருக்கும் உணர்ச்சியை முகத்தில் இதழில் கொண்டு வருவது மிக மிக கடினம் ”

    அது மட்டுமில்லாமல் இவர் குரலில் வந்த தமிழ் கடவுள் முருகன் பாடல்கள் மெய் சிலிர்க்க வைக்கும் …. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் ….” இந்த பாடலுடன் தான் என் அன்றாட பொழுது தொடங்கும் …ஆன்மிகம் , பக்தி தவிர ஒரு தனி உத்வேகம் தரும் பாடல் அது…

    அவரின் பாடல்கள் மற்றும் அதன் சிறப்பு சொல்ல ஆரம்பித்தால் அது முடியாதது அல்ல …. ஒவ்வொரு பாடலில் வரும் உணர்ச்சிகள் சொல்லில் அடங்காது ……

    ” அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா ..” – இதில் உள்ள வீரம்

    ” இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே …” இதில் உள்ள நய்யாண்டி

    ” ஆறு மனமே ஆறு …” – இதில் உள்ள தயாளம்

    “பொன்னை விரும்பும் பூமியிலே …” – இதில் உள்ள நன்றி

    “வந்த நாள் முதல் ..இந்த நாள் வரை …” – இதில் உள்ள தெளிவு

    “அமைதியான நதியினிலே ஓடம் …” – இதில் உள்ள கனிவு

    “அந்த நாள் ஞாபகம் ..நெஞ்சிலே வந்ததே …” – இதில் உள்ள ஏக்கம்

    “முத்துக்களோ கண்கள் ..தித்திப்பதோ கன்னம் ..” – இதில் ததும்பும் காதல்

    “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ..” – இதில் பொங்கும் பெருமை

    “உன் கண்ணில் நீர் வழிந்தால் … ” – இதில் உடைந்து வரும் அழுகை

    “கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா …” – இதில் உள்ள வர்ணனை

    “பொன் மகள் வந்தால் , பொருள் கோடி தந்தாள் …” – இதில் ததும்பும் உற்சாகம்

    “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் … ” – இதில் உள்ள கோபம்

    “போனால் போகட்டும் போடா …” – இதில் வருடும் சோகம்

    “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா …” – இதில் ததும்பும் நம்பிக்கை

    “பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா …” – இதில் ததும்பும் துள்ளல்

    …இப்படி சொல்லிக்கொண்டே போவேன் ….

    இவரது குரல் எத்தனையோ முறை நிம்மதி தந்துள்ளது ..எத்தனையோ முறை நம்பிக்கை…எத்தனையோ முறை தூக்கம் ..

    தெய்வத்திரு TMS அவர்களுக்கு என்னைப்போல் கோடிகணக்கானோர் நன்றி கடன் பட்டுள்ளனர் ….

    தமிழ் நெஞ்சங்களை ஆட்டி படைத்த இரு வேறு மாமேதைகள் TMS மற்றும் PBS ஒரே ஆண்டு இறைவனடி சேர்ந்தது பேரிழப்பாகும் …
    மக்களுக்காக பாடினது போதும் , எனக்காகவும் பாடுங்கள் என்று இறைவன் நினைத்தார் போலும் !

    # உள்ளம் உருகுதய்யா ……..

  6. டி.எம்.எஸ் அய்யா அவர்களின் மறைந்து விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…! முருக பக்தர்கள் வீட்டிலும், அனைத்து இந்துக் கோவில்களிலும் அவர் உலகுள்ள வரை வாழ்ந்து கொண்டே தானிருப்பார்…! நவரசம் ததும்பும் நடிப்பைப் போல, நவரசமும் பொங்கும் குரல் இவருடையது…! அய்யாவின் இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை நம் மனதில் ஏற்ப்படுத்தினாலும், அய்யாவின் பாடல்களில் அவரது ஜீவன் என்றும் நிறைந்திருக்கும்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

    விஜய் ஆனந்த்

  7. T M . S அவர்கள் மறைந்து விட்டாலும் அவர்
    கணீர் குரலில் எல்லோர் வீட்டிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
    அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

  8. T .M . S அவர்கள் மறைந்து விட்டாலும் அவர்
    கணீர் குரலில் எல்லோர் வீட்டிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
    அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

  9. எந்த நடிகருக்காக பாடினாலும் அவர்கள் தான் படுகிறார்கள் என்று நம்பும் அளவிற்கு குரலில் வித்தியாசங்களை காட்டியவர்

    அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

Leave a Reply to RAJA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *