Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்!

இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்!

print
பிரேமவாசம் – ஆதரவற்ற, ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் (முதல் கட்டம்) வாங்கித் தந்து அவர்கள் முன்னிலையில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை செய்தது பற்றிய பதிவு இது.

பிரேமவாசத்தில் எழுந்திருக்கவே முடியாத மனநிலை பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகள் முதல் ஆதரவற்ற சராசரி குழந்தைள் வரை பலர் பராமரிக்கப்படுகின்றனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாகவும், பெற்றோருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் பள்ளி செல்லும் பருவம் வந்தும் கூட  படிக்க வசதியின்றி அவதிப்படும் குழந்தைகள் நம் நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர்.  இதுவும் தவிர சொல்ல இயலாத காரணத்தினால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளும் எண்ணற்றோர் உள்ளனர். (இவர்களை SINGLE PARENT CHILD என்பார்கள்).

தவிர திருமணத்திற்கு முந்தைய உறவுகளால் / தகாத உறவுகளால் பிறந்து அதனால் அனாதையாக விடப்படும் (வீசப்படும்) குழந்தைகளும் எண்ணற்றோர் உள்ளனர்.

(இங்கு புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பது இங்குள்ள குழந்தைகளின் முழு STRENGTH அல்ல. நடக்கக்கூடிய நிலையில் உள்ள குழந்தைகளில் ஒரு பகுதியினர் மட்டுமே..!)

இந்த குழந்தைகளுக்கு வேண்டியதெல்லாம் அடிப்படை தேவைகள் எனப்படும்  மூன்று வேளை உணவும், உடுக்க உடையும், கல்வியும் தான்.

பிரேமவாசத்தில் சேரும் இத்தகைய குழந்தைகளுக்கு இவை மூன்றும் குறைவின்றி வழங்கப்படுகிறது.

இதுவரை பிரார்த்தனை கிளப்பில் விண்ணப்பித்திருந்த அனைவரின் பெயர்களும் படித்து காட்டப்படுகிறது

சிறுவயதிலேயே இங்கு அடைக்கலம் புகும் குழந்தைகள் எல்.கே.ஜி. முதல் ஆங்கில அனைத்து வகுப்புகளும் இங்கிலீஷ் மீடியம் (மெட்ரிக்) பள்ளியில் தான் படிக்க வைக்கப் படுகிறார்கள். இடையில் சேரும் குழந்தைகளை தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் சேர்க்கிறார்கள். காரணம் அக்குழந்தைகளால் திடீரென்று ஆங்கில மீடியத்தில் சேர்ந்து படிக்க முடியாது என்பதே.

குழந்தைகளுடன் ஒரு பிரார்த்தனை – நம் அனைவரின் நலன் வேண்டி!

பள்ளி செல்லும் குழந்தைகள் தவிர பிரேமவாசத்தில் 70க்கும் மேற்ப்பட்ட SPECIAL CHILDREN உள்ளனர். அவர்களில் பாதி பேர் உடல் ஊனமுற்ற மனவளர்ச்சியற்ற குழந்தைகள். இவர்களிலும் கிட்டத்தட்ட பாதி பேர் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வரமுடியாது. மீதமுள்ள MOVABLE குழந்தைகளுக்கு பிரேமவாசத்திலேயே சிறப்பு கல்வி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. (REHABILITATION EDUCATION).

பிரேமவாசத்தில் தங்கி அருகே உள்ள பள்ளிகளுக்கு கல்விக்காக மட்டும் சென்று திரும்பும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு தான் நாம் தற்போது யூனிபார்ம் எடுத்து தந்து உதவி வருகிறோம்.

இங்குள்ள சுமார் 80க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் 1) St.Ann’s School, Madhanandhapuram 2) Sri Ragavendra Mat.Hr. Sec.School 3) Govt. School ஆகிய இந்த மூன்று பள்ளிகளிலும் படிக்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்ய விரும்பினாலும் பிரேமவாசம் நிர்வாகத்தில் அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது யூனிபார்ம் தான். எனவே நம் தளம் மூலம் அவர்கள் முதலில் கேட்ட வாஷிங் மெஷின் வாங்கித் தந்ததையடுத்து தற்போது யூனிபார்ம் வாங்கித் தருவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

மேலே முதலில் குறிப்பிட்டுள்ள St.Anns’s பள்ளியில் படிக்கும் பிரேமவாசம் குழந்தைகளுக்கு நாம் சீருடைகள் எடுத்து தந்தாகிவிட்டது. மொத்தம் 40 மாணவ-மாணவிகளுக்கு தலா இரண்டு செட் சீருடைகள் எடுத்து தந்திருக்கிறோம்.

யூனிபார்ம் நாம் நினைக்கும் இடத்தில் வாங்க முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளி பரிந்துரைக்கும் கடையில் வாங்கினால் தான் பேட்ஜ்  கிடைக்கும். எனவே தி.நகரில் பள்ளி நிர்வாகம் பரிந்துரைத்த ஒரு கடையில் யூனிபார்ம் வாங்கினோம். கடை உரிமையாளரிடம் நாம் நம் வாசகர்கள் சிலருடன் சேர்ந்து நிதி திரட்டி அதன் மூலம் மாணவர்களுக்கு சீருடைகளை வாங்கி தருவதாக சொன்னதும் பெரிய மனதுடன் 20% டிஸ்கவுன்ட் கொடுத்தார். (இதன் மூலம் 7,000/- நமக்கு மிச்சமானது). ரூ.39,000/- செலுத்தவேண்டிய இடத்தில் ரூ.32,000/- செலுத்தினோம்.

யூனிபார்ம் வாங்கும்போது பிரேமவாசத்தில் இருந்து சம்பந்தப்பட்ட சூப்பர்வைசர் மற்றும் இரண்டு மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் உதவியுடன் தான் வாங்கினோம்.  அதை பிரேமவாசத்திற்கு அனுப்பியதும், அவர்களுக்கு ஃபோன் செய்து, மாலை இதை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன்.

என்னுடைய திட்டம் என்னவென்றால் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை அங்கு வைத்து முடித்துவிட்டு பின்னர் ஒரு எளிய நிகழ்ச்சி மூலம் அவர்களுக்கு அந்த சீருடைகளை ஒப்படைத்துவிடலாம் என்பது தான். ஆதரவற்ற இந்த குழந்தைகள் நமக்காகவும் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அது ஆண்டவன் செவிகளில் கேட்கும் என்பது எனது நம்பிக்கை.

எனவே இரண்டு வாரத்திற்கு முன்னர் அதாவது 05/05/2013 அன்று பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருந்த திரு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி, மாலை பிரேமவாசம் வந்துவிடும்படியும், அங்கு தான் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது என்றும் வரும்போது அக்குழந்தைகளுக்கு அவர் விரும்பினால் பரிசளிக்க பேட் மிண்டன்  பேட் & பால் செட் வாங்கிவரும்படியும் கூறினேன்.

தவிர நண்பர்கள் சிலரிடமும் விபரத்தை கூறி பிரேமவாசம் வந்துவிடுமாறு சொன்னேன்.  நண்பர்கள் ராஜா, மனோகரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வந்திருந்தனர்.

குழந்தைகளின் குதூகலம்!!!

அனைவரும் மாலை குறித்த நேரத்தில் வந்துவிட, அறிமுகங்கள் முடிந்த பிறகு நிகழ்ச்சி துவங்கியது. பிரார்த்தனையிலும் சீருடை ஒப்படைக்கும்போதும் குழந்தைகள் சிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நமது அபிப்ராயத்தை தெரிவித்தோம். தூங்கிக்கொண்டிருக்கும், ஓய்விலிருக்கும் குழந்தைகளை தொந்தரவு செய்யவேண்டாம் என்றும், ரிலாக்ஸாக இருக்கும் குழந்தைகளை மட்டும் அழைத்து வந்தால் போதும் அதுவும் ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் வந்தால் போதும் என்றும் கூறினேன்.

எனவே அந்த நேரத்தில் டைனிங் ஹாலில் உள்ள டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் மட்டும் சிலர் வந்தார்கள். அவர்களில் பலர் நம்மை பார்த்தவுடன் அடியாளம் கண்டுஓடிவந்து கட்டிக்கொள்ள…. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

டேபிளில் வைக்கப்பட்டிருந்த யூனிபார்ம் உடைகளையும், பேட்மிண்டன் செட்களையும் பார்த்தவுடன் அவர்களுக்கு தான் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி.

மாணவர்கள் அமர்ந்ததும் அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “தாங்களும் தங்கள் குடும்பமும் மட்டும் நல்லாயிருந்தா போதும் – மத்தவங்களை பத்தி எங்களுக்கு கவலைப்பட நேரமில்லைன்னு எல்லாரும் நினைக்கிற இந்த  – அவசர – சுயநல உலகத்துல உங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தேவைப்படுதுன்னு  சொன்னவுடனே எங்கோ வசிக்கும் முகம் தெரியாத உங்கள் சகோதர சகோதரிகள் எம்  தள வாசகர்கள் செல்வி.சாந்தி, திரு.சிவக்குமார், திரு.ராகவேந்திரன் இவங்கல்லாம் உங்களுக்கு யூனிபார்ம் எடுத்துகொடுத்து அனுப்பியிருக்காங்க. அவர்களுக்கு நன்றி சொல்லிட்டு  அவங்களும் அவங்க குடும்பத்தினரும் நன்றாக சௌக்கியமாக சந்தோஷமாக வாழ அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பது நம் கடமையல்லவா? அதற்கு தான் குழந்தைகளே இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி.

ஈத்துவக்கும் இன்பம்…. நண்பர் மனோகரனின் மகன் மாஸ்டர் மோனிஷ்

தவிர எங்கள் RIGHTMANTRA.COM சார்பாக ஒவ்வொரு வாரமும் நாங்கள் இருக்கும் இடத்திலேயே கூட்டு பிரார்த்தனை செஞ்சிட்டு வர்றோம். இதுவரை அந்த பிரார்த்தனைக்கு தங்கள் கோரிக்கைகளை சுமார் 20 க்கும் மேற்ப்பட்டவங்க எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செஞ்சிட்டோம்.

இருந்தாலும், இதோ அவர்கள் பெயரையும் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளையும் உங்களிடையே படிச்சி காட்டுறேன். அவர்களுடைய பிரச்னை தீர்ந்து அவர்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். உங்கள் பிரார்த்தனைக்கு இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். இவர்கள் வருங்காலத்தில் உங்களுக்கும் உங்களை போன்றவர்களுக்கும் அனேக உதவிகளை செய்யவிருக்கிறார்கள். எனவே இவர்களுக்காகவும் உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும் என்று கூறி, இதுவரை நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கைகள் அனுப்பியிருந்த அத்துணை பேரின் பெயரையும் அவர்கள் மத்தியில் படித்து காட்டினேன்.

அந்த குழந்தைகள் அந்த பெயர்களை உள் வாங்கினார்களா இல்லையா? நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த குழந்தைகள் மத்தியில் நம் பெயர் உச்சரிக்கப்படுவதே ஒரு வகையில் பாப விமோசனம் தான்.

பின்னர் அன்றைய பிரார்த்தனைக்கு விண்ணப்பித்திருந்த திரு.சந்திரசேகரன் அவர்களை அக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, “இந்த அங்கிள் உங்களுக்காக பேட்மிண்டன் பேட் ரெண்டு செட் வாங்கிட்டு வந்திருக்கார். அவருக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் கூட நீங்க பிரார்த்தனை செய்யணும். உங்களுக்கு உதவனும், நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கித் தரனும் அப்படின்னு நினைக்குற இவருக்கு இவரோட பிரச்சனைகள் தீர்ந்தா தானே அவர் உங்களுக்கு நிறைய செய்யமுடியும்? எனவே சந்திரசேகரன் அங்கிள் நல்லா சௌக்கியமா சந்தோஷமா இருக்க கடவுளை வேண்டுங்க” என்றேன்.

அடுத்து, “எங்களையெல்லாம் உங்களையெல்லாம் இணைக்கிறது RIGHTMANTRA.COM என்னும் வெப்சைட் தான். இந்த சைட் நல்லபடியா பங்க்ஷன் ஆகுறதுக்கு எத்தனையோ நண்பர்கள் எனக்கு உதவி பண்ணியிருக்காங்க. பண்ணிக்கிட்டு வர்றாங்க. அந்த நல்ல உள்ளங்களுக்காகவும் நீங்க பிரார்த்தனை செய்யவேண்டும்” என்று கூறி தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி மௌனம் அனுஷ்டித்தோம்.

குழந்தைகள் கண்களை மூடி பிரார்த்தித்தது உண்மையில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒன்று. (ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க….. நாம நல்லாயிருக்கனும், சந்தோஷமா இருக்கணும்னு நமக்காக இந்த உலகத்துல யார் சார் பிரார்த்தனை பண்றாங்க? நம்ப நெருங்கின சொந்தக்காரங்க கூட நமக்காக பிரார்த்தனை பண்ண மாட்டாங்க.) எனவே இந்த ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளின் பிரார்த்தனை நிச்சயம் அனைவருக்கும் ப[பலன் தரும். அதை உணர ஆரம்பித்துவிட்டதாக ஏற்கனவே ஓரிருவர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

பிரார்த்தனை முடிந்ததும்…. யூனிபார்மை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குரிய பொறுப்பாளரிடம் யூனிபார்ம் துணிகளை லேபிளுடன் ஒப்படைத்தோம்.

தொடர்ந்து பிள்ளைகளிடம், “உங்க அண்ணன்களும் அக்காவும் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு இதை வாங்கி தந்திருக்காங்க. இதை ஒழுங்கா யூஸ் பண்ணனும். ஸ்கூல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை கிண்டை போட்டு கிழிக்கக்கூடாது. அழுக்கு பண்ணக்கூடாது. யூனிபார்ம் போட்டுக்கிட்டு விளையாடக்கூடாது. மொத்த வருஷமும் இதை பத்திரமா வெச்சிக்கணும். என்ன?” என்று கேட்க…. கோரஸாக “ஓ.கே. அங்கிள்….” என்றனர் குழந்தைகள்.

அடுத்து சந்திசேகரன் வாங்கி வந்த பேட்மிண்டன் செட்களை காண்பித்து “இங்கு யாருக்கு பேட்மிண்டன் விளையாடத் தெரியும்? யாருக்கு இது வேணும்?” என்று கேட்க, கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் கைகளை தூக்க, களேபரமானது அந்த பகுதி.

ஹையா…இது என்னோட பேட்!!

அதுவும் பேட் உயரம் கூட இல்லாத குட்டீஸ் ஒருவன், “எனக்குத் தான் முதல்ல வேணும்” என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டான். அவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி.

நண்பர் சந்திரசேகரன் தன் கையாலேயே அந்த பேட்மிண்டன் செட்களை கொடுக்க, குழந்தைகள் ஒவ்வொருவராக மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர். நண்பர் மனோகரன் தனது மகன் மோனிஷை அழைத்து வந்திருந்தார். அவனை அக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவனை விட்டு ஒரு சில குழந்தைகளுக்கு பேட் கொடுக்க செய்தோம்.

“உங்களுக்குள்ளே சண்டை போட்டுக்காம ஒத்துமையா ஒழுங்கா விளையாடனும். இந்த பேட்மிண்டன் செட் எல்லாருக்கும் சொந்தம். ஒரு சிலர் மட்டும் உரிமை கொண்டாடக்கூடாது” என்றோம். “சரி… சரி… அங்கிள்” என்று வேகமாக தலையாட்டினர்.

இதற்கிடையே,பேட்மிண்டன் செட் கொடுத்த பின்பு “உங்களுக்கு வேற என்ன வேண்டும்?” என்று கேட்க, ஒரு பெரிய பட்டியலை குழந்தைகள் அவரவர் மழலை மொழிகளில் சொல்ல சொல்ல அதை கேட்க கேட்க தான் எத்தனை ஆனந்தம். பல குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் நாம் விழிக்க அருகிலிருந்து சீனியர் மாணவிகளும் அவர்களது கேர்-டேக்கர்களும் நமக்கு அதை புரியவைத்தார்கள். சைக்கிள், கேரம் போர்ட், செஸ், கிரிக்கெட் பேட் & பால், ஃபுட் பால் என பல அதில் அடங்கும்.

“நிச்சயம்…. எல்லாத்தையும் வாங்கித் தர்றேன்… ஒவ்வொன்னா வாங்கித் தர்றேன்… ஓ.கே…?” என்று கூறியிருக்கிறேன்.

அடுத்து SPECIAL CHILDREN இருக்கும் அறைகளை பார்வையிட சென்றோம். நாம் ஏற்கனவே அந்த அறைகளை இதற்கு முன்னர் வந்தபோது பார்த்திருந்தாலும் நண்பர்கள் பார்வையிட விரும்பியதால் அவர்களை அழைத்து சென்றேன். மேலும் நண்பர்கள் மனோகரன், ராஜா ஆகியோர் பரணிகாவை பார்க்க விரும்பினார்கள்.

ஒவ்வொரு முறையும் எனக்கு புது அனுபவம் தான். படிப்பினை தான்.

முதலில் கீழே உள்ள அறைக்கு சென்றோம். நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியது போல.. அங்கு அறையில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் தொட்டில் போன்று உள்ள பெட்டில் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறைபாடு. பல குழந்தைகளால் எழுந்திருக்க கூட முடியாது. வயது ஒன்று முதல் பத்து வயது வரை இருக்கும். இவர்கள் அனைவரும் உடல் ஊனமுற்ற மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள். இவர்களுக்கு சோறு ஊட்டுவது முதல் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அனைத்தும் இந்த அறையை கவனித்துக்கொள்ளும் இரு கேர் டேக்கர்களின் பொறுப்பு. இரண்டு கேர்டேக்கர்களில் ஒருவர் பிரேமவாசம் தொடங்கிய நாள்முதல் இருக்கிறாராம். அவர்கள் பணியை பெரிதாக பாராட்டி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னேன்.

நண்பர்கள் சந்திரசேகரன், ராஜா, மனோகரன் ஆகியோருக்கு இது புதிது என்பதால் அந்த அறையில் இருந்த குழந்தைகளை பார்த்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். “இப்படியும் குழந்தைகள் இந்த உலகில் பிறக்கிறார்களா?” என்கிற அதிர்ச்சி அவர்களுக்கு.

எலும்பு தொடர்பான குறைபாடால் பெற்றோரால் அனாதையாக விடப்பட்ட பரணிகா !!

அடுத்து, மேலே சென்றோம்… பரணிகா இருக்கும் அறையில் அவளையும் சேர்த்து சுமார் 15 குழந்தைகள் இருக்கிறார்கள். சற்று வளர்ந்த குழந்தைகளும் உண்டு. அனைவரும் மனநிலை உடல் ஊனம் மட்டுமல்லாமல் மனநிலையும் பாதிக்கப்பட்டவர்கள்.

பரணிகாவை பார்த்ததும், “ஹாய் பரணி குட்டி எப்படி இருக்கே…?” என்று கேட்க, ஏற்கனவே ஓரிருமுறை அவளை பார்க்க சென்றபடியால் குழந்தை நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டது. அவளை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு சந்திரசேகரன் உள்ளிட்ட நண்பர்களிடம் பரணிகா  பற்றியும் உடல் குறைபாடு காரணமாக அந்த குழந்தை அனாதையாக விடப்பட்ட கதையையும் எடுத்துக் கூறினேன்.

நண்பர்கள் சிறிது நேரம் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து அந்த அறையில் உள்ள குழந்தைகள் பலர் ஏற்கனவே நமக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டுவிட்டபடியால்… ஒவ்வொருவரையும் பார்த்து “ஹாய்… பாஸ் எப்படி இருக்கீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” தலையை உடலை தடவியபடி கேட்க, அவர்களுக்கு தான் எத்தனை மகிழ்ச்சி… கேட்பதற்கு ஒன்றுமில்லை… கேட்கவும் தெரியாது… கேட்டு வாங்கினாலும் பயன்படுத்த தெரியாது இவர்களுக்கு. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வெறிச் பார்வையும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் தான். ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். ஆனால் நமது பரிச்சயமும்  அன்பான வார்த்தைகளும் தான் அவர்களுக்கு எத்தனை சந்தோஷத்தை தருகிறது தெரியுமா? அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும் இந்த சந்தோஷத்தோடமதிப்பு. ஈடு இணையற்றது அது.

ஒரு சிறுவன்… பெயர்… அவனுடைய பெட்டில் அவன் சுருண்டு படுத்து கிடக்க… அருகே சென்றேன்… முகத்தில் காணப்பட்ட வெறுமை என்னவோ செய்ய.. பெயரை குறிப்பிட்டு “எப்படி இருக்கீங்க சார்? என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…? என்ன கோவம் சாருக்கு???” என்று உரிமையுடன் கன்னத்தை வருடி கொடுக்க…. என்ன தோன்றியதோ…. என் கைகளை பற்றி தடவ ஆரம்பித்தான்… கைகோர்க்க விரும்புவது தெரிந்தது… என் இரண்டு கைகளையும் அவன் கைகளுடன் கோர்த்து சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த கேர் டேக்கர் சொல்லும்போது தான் தெரிந்தது… அவனுக்கு நாம் பேசுவது, செய்வது எதுவும் புரியாது…. தெரியாது… அவனுக்கு புரிந்ததெல்லாம் தொடு உணர்ச்சி மட்டுமே. அன்புக்காக எங்கும் அந்த கரங்கள் நமது கரங்களை பற்றிக்கொண்டு விட மறுத்தன…. இந்த நெகிழ்ச்சியான போராட்டத்தில் எம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, கவனித்துக்கொண்டிருந்த நண்பர்களும் கண் கலங்கினர்.

பிரேமவாசத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பின்னாலும் ஒரு மிகப் பெரிய சோகக்கதை இருக்கிறது. தாங்கள் வறுமையின் காரணமாகவே அல்லது உடல் ஊனம் மற்றும் மன நல பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவோ அனாதரவாக விடப்பட்டு, இங்கு அடைக்கலம் பெற்றுள்ளோம் என்கிற உணர்வே அங்கு பல குழந்தைகளுக்கு இல்லை. அது அவர்களுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்கள் கருவறை, விளையாட்டு மைதானம், குடும்பம் இந்த உலகம் எல்லாம்.

வெளியே வரும்போது நண்பர் சந்திரசேகரன் என் கைகளை பற்றிக்கொண்டு சொன்னது…. “சார்… என்னுடைய பிரச்னை தான் பெரிய பிரச்னை என்று நினைத்துக்கொண்டு இறைவனை அடிக்கடி நொந்துகொள்வேன். ஆனால் இறைவன் என்னையும் என் குடும்பத்தாரையும் எந்தளவு உயரமாக வைத்துள்ளான் என்று இப்போது புரிந்துகொண்டேன். முதலில் இறைவனுக்கு அதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்!” என்றார்.

இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்…! ALWAYS COUNT YOUR BLESSINGS. NOT TROUBLES.

இங்குள்ள குழந்தைகளின் முகத்தில் நீங்கள்  நினைத்தால் ஒரு சில நிமிடங்களாவது புன்னகையை வரவழைக்க முடியும்….! அப்படி உங்களால் முடிந்தால் அதற்கு உங்களுக்கு பதிலுக்கு கிடைக்கும் வெகுமதி என்ன தெரியுமா?

“என்ன சாதித்தாய் இது வரை நீ?” என்று எவரேனும் உங்களிடம் கேட்க நேர்ந்தால், நெஞ்சை நிமிர்த்தி “ஒரு ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழைத்தேன்” என்று கூறவாவது சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?

அப்படி இவர்கள் முகத்தில் உங்களால்  புன்னகையை வரவழைக்க முடிந்தால் நீங்கள் தான் அவர்களுக்கு கடவுள்!! ஒரு சில நிமிடங்கள் இவர்களுக்கு கடவுளாக இருந்துவிட்டு போவோமே..!

SPECIAL CHILDREN இருக்கும் அறையில்

இறுதியாக ….

இவர்கள் பக்கம் நீங்கள் திரும்பினால் ஆண்டவனின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும்!

இவர்களை கவனித்துக்கொள்ளுங்கள்…. ஆண்டவன் உங்களை கவனித்துக்கொள்வான் என்பதே…………. நான் சொல்வது அல்ல, வள்ளுவர் சொல்வது!!

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை… (குறள் 244)

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்டுள்ளோர்களுக்கு தமது உயிரைப்  (வாழ்வை) பற்றிக் கவலை அடைய வேண்டிய அவசியம் ஏற்படா.

========================================================
குறிப்பு : பிரேமவாசத்தில் அடைக்கலம் பெற்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடைகள் முதல் தவணை கடந்த வாரம் வாங்கி தந்திருக்கிறோம். அடுத்து இன்னும் இரண்டு பள்ளிகளின் சீருடைகள் வாங்கித் தரவேண்டும். இந்த தொண்டில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் விரைந்து நம்மை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
========================================================

15 thoughts on “இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்!

  1. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு
    ஒரு நிமிடம் இவர்கள் முகத்தில் புன்னகை வர வைத்தால் நம் வாழ்நால் முழுக்க இறைவன் நம்மை சந்தோஷப்பட வைப்பார்.

    “என்ன சாதித்தாய் இது வரை நீ?” என்று எவரேனும் உங்களிடம் கேட்க நேர்ந்தால், நெஞ்சை நிமிர்த்தி “ஒரு ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழைத்தேன்” என்று கூறவாவது சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?
    அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை அருமையாக உணத்தியதர்க்கு நன்றி சார்.

  2. மிக அருமையான நிகழ்வு . ஒவ்வொரு weekend , எந்த படத்துக்கு போகலாம், எந்த ட்ரிப் போகலாம்னு நிறைய பேர் பிளான் பண்ணா, உங்க Weekend பிளான் எப்பவுமே ஒரு inspirational தான்.

  3. மிக அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு.

    நேரமின்மை காரணமாக என்னால் சில விழாக்களில் பங்கேற்க இயலவில்லை… எனினும் நம் தளத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்..

    மிக்க மகிழ்ச்சி….

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்…

    PVIJAYSJEC

  4. இந்த பதிவை போட்டு மீண்டும் அழ வைத்துவிட்டீர்கள் சுந்தர் சார். இந்த பதிவை என் மனைவியிடமும் கண்பித்தேன் அவரும் கண்கலங்கிவிட்டார். உண்மையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் அன்று.

    நீங்கள் கூறியது போல நம்முடைய பிரச்சனைகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் எந்த நல்ல காரியமும் நம்மால் செய்யமுடியாது என்று எனக்கு புரிந்தது. இனி கூடுமானவரை சென்ற பிரார்த்தனை பதிவில் குறிப்பிட்டது போல, மற்றவர்களின் துயரை துடைப்பதையே பிரதானமாக எண்ணி செயல்படுவேன்

  5. பிரேமவாசதில் நுழைந்த உடன் எனக்குள் ஒரு அதிர்வை உணர்ந்தேன். அவர்கள் நம்மை ஆண்டவன் அனுப்பிய தொண்டர்கள் என்றே நினைக்கிறார்கள். அந்த குழந்தைகளது கண்களில் தெரியும் ஏக்கங்களை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை? எழுத வாக்கியமும் இல்லை?….புகைப்படத்தை பார்த்தாலே புரியும் !!

    RIGHTMANTRA.COM – ஆசிரியர் சுந்தர் ஜி அவர்கள் இதுவரை நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கைகள் அனுப்பியிருந்த அத்துணை பேரின் பெயரையும் அவர்கள் மத்தியில் படித்து கட்டினார்.

    அந்த குழந்தைகள் அந்த பெயர்களை உள் வாங்கினார்களா இல்லையா? நாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு புரிந்ததா? இல்லையா?!! கவலைப்படவில்லை.

    ஏனெனில் இந்த குழந்தைகள் மத்தியில் நம் தல வாசகர்கள் பெயர்கள் உச்சரிக்கப்படுவதே ஒரு வகையில் பாப விமோசனம் தான். சுந்தர் ஜி சொல்வதை குழந்தைகள் ஆர்வமுடனும் கண்களை மூடி மௌனமாக இருப்பது எத்துனை சமத்து .

    எனது மகன் மோனிஷை அழைத்து வந்திருந்தேன் .அவன் வரும்போது இருந்த சுட்டித்தனம் கொஞ்சம் குறைதுக்கொண்டன். இரண்டு வாரம் கடந்த பிறகும் அவர்களின் {SPECIAL CHILDREN } இன்னும் என் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது ! ! ! ..

    எனக்கு, சந்திரசேகரன், ராஜா, மோனிஷ் ஆகியோருக்கு இது புதிது என்பதால் அந்த அறையில் இருந்த குழந்தைகளை பார்த்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.

    அடுத்து, பரணிகா இருக்கும் அறைக்கு சென்றோம் .பரணிகாவை பார்த்ததும் எங்கள் அனைவரின் கண்களும் மீண்டும் குளமாகின ..
    பரணிகாவை பார்க்க வார வாரம் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது .

    இதற்குள் நான் கண்ட காட்சி மிக அதிர்ச்சியை தந்தது.

    என்னவெனில்,

    {{{ ஒரு பெட்டில் “ஹாய்… பாஸ் எப்படி இருக்கீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” தலையை உடலை தடவியபடி கேட்க,

    அடுத்த பெட்டில் பெயரை குறிப்பிட்டு “எப்படி இருக்கீங்க சார்? என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…? என்ன கோவம் சாருக்கு???” என்று உரிமையுடன் கன்னத்தை வருடி கொடுக்க…. என்ன தோன்றியதோ…. சுந்தர் ஜி கைகளை பற்றி தடவ ஆரம்பித்தான்… கைகோர்க்க விரும்புவது தெரிந்தது கண்டு அவர் இரண்டு கைகளுடன் கோர்த்து சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தார். }}} சுந்தர் ஜி .

    குழந்தைகளோடு குழந்தையாக நெகிழ்ச்சியான போராட்டத்தில் எல்லோர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அந்த அறையை விட்டு வெளியே வந்தும் மனம் பிரேமவாசம் உள்ளது .

  6. ரொம்ப அற்புதம் ஜி. நமது தளம் மூலம் விரைவில் மிக பெரிய நல்ல மாற்றம் சமூகத்தில் உருவாக எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றலை பிரார்த்திக்கின்றோம்.

    ப.சங்கரநாராயணன்

  7. சுந்தர்ஜி,

    திரு சந்திரசேகர் சொன்னது போல் மறுபடியும் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள். அந்த குழந்தைகளுக்கு தேவை அன்பு ஒன்றுதான். நம்மால் முடிந்த வரை அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்வோம்.பரணிகா கண்களை உருட்டி உருட்டி பார்த்து எல்லோரையும் கவர்ந்து விட்டாள்.அவள் சீக்கிரம் குணமாக வேண்டும்.

  8. நெகிழ்ச்சியான பதிவு !!!

    தொண்டுகள் புரிந்திடவும்
    துயர்கள் துடைத்திடவும்
    மனச்சுமைகள் நீங்கி
    மகிழ்ச்சி என்றென்றும் பொங்கிட
    எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவாராக !!!

  9. ரொம்ப அற்புதம் ஜி.

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  10. வாழ்கையில் சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் நிறைய பேர் துவண்டு விடுவார்கள் அவர்கள் இது போன்றவர்களை பார்த்தால் கடவுள் நமக்கு எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று புரியும்

    இந்த குழந்தைகளுக்கும் & பிரேமவாசத்திற்கும் இனி ரைட் மந்திர நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்

  11. சுந்தர் சார், ரியலி கிரேட். மனம் நெகிழ்கிறது.

  12. திரு.சுந்தர் அவர்களுக்கு ,என் மனம்முவந்து உங்களை பாராட்டி உங்களை நேசிக்றேன். எனக்கும் இது போல் சேவை செய்ய கடமை உண்டு என்பது தெரியும்..ஆனால் நான் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ?…..உங்கள் பதிலுக்காக,,,,க.பாரதிதாசன்

    1. இது குறித்து உங்களுக்கு விபரங்களை ஈ-மெயில் அனுப்பியிருக்கிறேன். நன்றி.

  13. மிக நல்ல முயற்சி. உங்கள் பனி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எனக்கு (ஏன் எல்லோருக்குமே) ஒரு ஆதங்கம். நம் நாட்டில் இது போல உதவி தேவைப்படுபவர்கள் ஒருபுறம் அல்லல் படுகிறார்கள் மற்றொருபுறம் எல்லா இலவசங்களையும் பெற்று ஒரு வேலையும் செய்யாமல் வெட்டி பொழுது போக்கிக் கொண்டிருப்பவர்கள் பல லட்சம் பேர்கள். அரசாங்கங்களும் / அரசியல்வாதிகளும் அதுபோன்ற மனிதர்களுக்கு இலவசங்களை அள்ளி வீசியும் / மலிவு விலையில் தந்தும் ஊனர்கலாக்கிக் /வீனர்கலாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இலவசங்களின் பலன் விலைவாசி ஏற்றம். மறைமுகமாக எல்லோர் தலையிலும் விலைவாசி ஏற்றம் திணிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகள், தன்னைச் சார்ந்திருப்போரை கவனிக்காமல் கைவிடும் போக்கு என்கிற அபாயம் எழுந்துள்ளது. சிந்திபீர்!! என்றைக்கு நம் சமூகத்தில் இலவசங்கள் ஒழிந்து, உழைத்து வாழ்ந்தும், பிறருக்கு (தேவை உள்ளவர்களுக்கு) உதவி செய்யும் மனிதர்களும் அரசும் அமைய போகிறதோ, அதற்கான எனது பிரார்த்தனையை முன் வைக்கிறேன். தனி மனிதர்கள் நல்லெண்ணத்துடன் சிறு குழுக்களாக செய்வதும், அதனையே ஒரு வலிமையான அரசாங்கம் செய்தால் இந்த நாடு முன்னேறிய நாடாக விளங்கும். ஒரு பக்கம், இலவசங்களும் மற்றொரு பக்கம் போதை (டாஸ்மாக்) வஸ்துக்களும் கொடுத்து இந்த சமூகம் கெட்டு குட்டிச் சுவராக மாற்றும் செயல் மிகவும் வருந்தத்தக்கது. நாம் ஒவ்வொருவரும் இந்தச் செயலை நம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் எடுத்துக்கூறி/ காலில் விழுந்தாவது இலவசங்களை மறுத்தும், போதையை மறுத்தும்/ஒதுக்கியும் முன் நிற்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலம் பிரகாசமாக ஆகும். இறைவனே!! நீரே கவனியும்.

    1. நல்ல சிந்தனைக்கு என் வாழ்த்துகள். என் ஆதரவு உங்கள் எண்ணங்களுக்கு என்றும் உண்டு.
      – சுந்தர்

Leave a Reply to RAJA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *