Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

print
* “விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்? அப்போ அவசியம் இந்த பதிவு உங்களுக்கு தான்.

* “என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால என்ன சார் புண்ணியம்…?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான்.

* “வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்…. வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா” என்ற கொள்கையுடைய உத்தமரா நீங்கள்? இந்த பதிவு அவசியம் உங்களுக்கும் தான்.

இது ஒரு உண்மை சம்பவம்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை இரத்து செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

31st President of US – Herbert Hoover and Poland’s Paderewski

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதுனால நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

[button style=”info” bg_color=”#0044ff”]ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.[/button]

பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே….. காலம் குறித்து வைத்துகொண்டது.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

After World War I, the American Relief Administration, established by Hoover, fed 2 million starving Poles daily, including the children pictured here.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : http://news.stanford.edu/news/2006/july26/hoover-072606.html)

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

அதனால் தான் நம் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான். அவன் தீர்க்கதரிசி.

இந்த சம்பவம் உணர்த்தும் நீதி ஒன்றா இரண்டா?

……………………………………………………………………………………………..
* ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவி செய்துகொள்கிறீர்கள்.

* நீங்கள் எதை விதைத்தாலும் அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

* அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

* காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.

* எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும்.

* எல்லாம் நன்மைக்கே

* விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர் விட்டுக்கொடுப்பதில்லை

* தர்மோ ரஷதி. ரஷித. (தர்மத்தை நீங்கள் காப்பாற்றினால் அது உங்களை காப்பாற்றும்.)
……………………………………………………………………………………………..
அதுமட்டுமல்லாமல் நாம் இதுவரை அளித்த பதிவுகளில் அதிகபட்ச திருக்குறள்களை தன்னகத்தே கொண்டது இந்த பதிவு தான். அதாவது இந்த ஒரு பதிவிலேயே பல திருக்குறள்கள் புதைந்திருப்பதை காணலாம்.

சாம்பிளுக்கு சில குறள்களை மட்டும் தந்திருக்கிறேன்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (குறள் 103)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (குறள் 104)
……………………………………………………………………………………………..

எனவே அடுத்த முறை, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் எவருக்கேனும் நீங்கள் உதவ நேர்ந்தால், உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த  படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!

28 thoughts on “விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

  1. \\விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\\
    நெகிழ வைத்துவிட்டது .
    \\இக்கட்டில் சிக்கித் தவிக்கும் எவருக்கேனும் நீங்கள் உதவ நேர்ந்தால், உண்மையில் நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
    ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!\\

    தேடல் உள்ள தேனீக்களுக்காக தங்களின் உழைப்பு அபாரம் .

    ஒரு ஒரு பதிவும் புதுபுது கோணக்களில் வழங்குவது அற்புதம் .
    நன்றி ஜி

  2. விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!

    அற்புதம்… அற்புதம்…. மிக மிக அற்புதம்…….

    உதவி செய்வதனால் நாம் பெரும் நன்மைகளை எடுத்து கூறி எங்களுக்குள் உத்வேகத்தினை ஏற்படுத்தி மாபெரும் உதவி செய்துள்ள உங்களுக்கு எல்லாம் வல்ல அந்த பரம் பொருள் ஆசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

    நன்றியுடன்
    ப.சங்கரநாராயணன்

  3. இந்த மாதிரி பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு ரைட் மந்திர வில் சூ……ப்பர் ,விதைத்து விட்டு அறுவடை நமக்குத்தான் வரும் என்று இருப்பதில் புண்ணியம் ஒன்றும் இல்லை,நமக்கோ நமது சந்ததியினர் கண்டிப்பாக பலன் கிடைக்கும் நன்மை செய்தால் வேண்டுமன்றல் தாமதமாகும் ,ஆனால் வினை ஸ்பாட் பய்மேன்ட் அதனால் MAXIMUM நன்மை செய்ய முடியாவிட்டாலும் நன்மை செய்ய யோசிப்போம்

  4. பிறருக்கு உதவி செய்ய தயங்குபவர்களை உசுப்பிவிடக் கூடிய ஒரு செய்தி.

    1. மன்னிக்கவும். ‘உசுப்பிவிடுதல்’ என்பது தவறான செயல்களை செய்ய தூண்டுவதையே குறிக்கும்.

      வேண்டுமானால் பிறருக்கு உதவி செய்ய தயங்குபவர்களை ‘யோசிக்க வைக்கும்’ பதிவு என்று கூறலாம். சரியா?

      – சுந்தர்

      1. உசுப்பிவிடுதல் என்பது “தூண்டிவிடுதல்” என்று பொருள்படும் . அதனை நல்ல விதத்திற்கும் எடுத்துக்கொள்ளலாம் கெடுதலான வற்றிற்கும்
        எடுத்துக்கொள்ளலாம் . அநேகர் இதனை தவறான தூண்டுதல் போன்றவற்றிற்கே உபயோகிக்கின்றனர்.

        1. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
          – சுந்தர்

  5. அருமையான பதிவு !!!
    பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி !!!

    எந்திரமயமான இன்றைய வாழ்கையில் அருகினில் வசிப்போரின் பெயர் கூட தெரியாதவர்கள் பல பேர் !!!

    இங்கே நமது பிரச்சனையை சமாளிப்பதற்கே நேரம் இல்லை இதில் அடுத்தவர் பிரச்சனையை தீர்ப்பதா என்ற எண்ணம் கொண்டோர் பலர் !!!

    யாரையும் குறை சொல்வதற்கில்லை – அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி !!!

    இருப்பினும் கிடைத்தர்க்கரிய இந்த மனித பிறப்பில் ஒவ்வொரு நாளிலும் ஒரு மணி நேரமேனும் அதுத்தவர் படும் துயரை நினைத்து பார்த்து அவருக்கு நம்மால் ஆன ஒரு சிறு உதவி அது அவருக்கு ஆறுதலான நம்பிக்கை ஊட்டும் வார்த்தையாக கூட இருக்கலாம் கூறுவோமேயானால் அது பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அருமருந்தாக அமையும் !!!

    அவ்வாறு செய்யும் போது தான் நம்மை அந்த இறைவன் எவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறான் என்பது புலப்படும் !!! படைப்பின் நோக்கம் தெளிவாகும் !!!

    அதுத்தவர் துயர் துடைக்க நினைத்த அந்த கணமே இறைவன் நமது கரம் பற்றி விடுவார் – நான் இருக்கிறேன் உன்னோடு – நீ மற்றவர் துயர் துடை – நான் உன்னோடிருந்து உன் துயர் துடைக்கிறேன் என்று!!!

    எனவே இயன்றவரை உதவுவோம் – இல்லாதோர்க்கு !!!

    வாழ்க வளமுடன் !!!

  6. அன்பரே இத்தருணத்தில் கவிஞர் வாலி அவர்களின் வரிகள் நினைவு கூர்கிறேன்

    எந்த ஒரு வேர்வைக்கும்
    ஒரு நாள் வேர் வைக்கும்.

    எனவே
    நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்
    நல்லதே நடக்கும்

    அன்பே sivam

  7. மிகவும் அருமையான பதிவு.
    ***
    நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பலன் மற்றும் எதிர்வினை உண்டு. மதர் தெரசா கூறியது போல்,
    “நாம் எவ்வளவு பிறர்க்கு உதவி செய்கிறோம் என்பதை விட, எவ்வளவு அன்பை கொண்டு அந்த உதவியினை செய்கிறோம் என்பது தான் மிக முக்கியம்”
    ***
    நாம் செய்யும் இன்றைய செயல்கள் தான் நம்முடைய நாளைய கர்மாவினை தீர்மானிக்கிறது.
    ***
    எனவே, எல்லோர்க்கும் நம்மால் முடிந்த வரை உதவி செய்வோம். இன்னும் சொல்ல போனால், நம்மால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் கூட உபத்திரம் செய்யாமல் இருந்தால் (இன்றைய உலகில் – கலியுலகில்) அதுவே போதுமானது.
    ***
    பதிவிற்கு மிக்க நன்றி!!!
    ***
    **சிட்டி**.

  8. பிரருக்கு உதவி செய்தால் என்ன பயன் ?
    அதற்கு விடை இந்த பதிவு .
    நன்றி.

  9. மிகவும் அருமையான பதிவு
    அனைவரும் யோசிக்க வேண்டிய விசயங்களும் அடுத்தவர்க்கு உதவ வேண்டியதன் முழு அர்த்தத்தையும் உணர்த்தும் பதிவு. மிகவும் நன்றி சார்.

  10. அழகா அறிவாக தெளிவாக மனதில் நிறுத்தி வைத்து கொண்டால் எல்லோரும் நல்ல மனித பண்போடு வாழமுடியும் என்று புரிய வைத்த இந்த கதைக்கும்,திரு .சுந்தர் அவர்களுக்கும் நன்றி ……. இப்படிக்கு க.பாரதிதாசன்

    1. உங்களின் (நல்லதை) பாராட்டும் குணத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  11. ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு……”காலத்தி னாற்செய்த நன்றி” இந்த குறளுக்கு இதைவிட சிறந்த எடுத்துகாட்டு என்ன இருக்க முடியும்…பிறருக்கு உதுவும் மனபன்மையின் பலன் என்ன என்பதை மிகதெளிவாக எடுதுகட்டியுள்ளது இந்த பதிவு…அதுவும் இந்த தலைப்பு……..
    .
    மாரீஸ் கண்ணன்

  12. Welcome back chitti..U r comments were missing for a long time in our website, glad that u have started putting in ur comments

    Regarding the motto of the article-“We help ourselves if we help others”.. It’s a nice one, but I personally feel that who so ever helps someone will not do it with a thought of getting back some thing—because then it becomes a business not a service.

    The law of Karma is valid here also as pointed out in the article, but the intention while helping is what is important and nothing else other than it.

    As chitti said “Udhavi seyala nalum paravayilay, Upadravam seyya vendam..”..If all follow this then I am sure things will look brighter for all.

    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

    1. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  13. சுந்தர்ஜி,

    அருமையான பதிவு.

    உதவி செய்தவர்கள் செய்யும் உதவிக்காக எதையும் எதிர்பார்பதில்லை.ஆனால் உதவி செய்தவர்களுக்கு கஷ்டம் வரும்போது அவர்கள் எதிர் பாராமல் உதவுவதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் பிரதி உபகாரம், மனித நேயமும் கூட. அனால் இன்றைய கால கட்டத்தில் யாரும் செய் நன்றி நினைப்பதில்லை.

  14. காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.
    முற்றிலும் உன்மை…

  15. திரு நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் . அப்போது ஏழை என்னிடம் தர்மம் செய்ய எந்தப் பொருளும் இல்லையே நான் எப்படி தர்மம் செய்வது என்றார். பிறருக்கு தர்மம் செய்ய பொருள்தான் வேண்டும் என்பதில்லை . தாங்கள் பிறருக்கு நல்ல செயல்களால் , நல்ல பேச்சால், நல்ல எண்ணத்தால் செய்யும் செயல்களும் பெரும் தர்மம் ஆகும் என்றார்கள். நீங்கள் ஒரு உதவி செய்தால் பத்து உதவி திரும்பக்கிடைக்கும் என்பது வேத வாக்கு
    பாரிஸ் ஜமால்

  16. சுந்தர் மிகவும் காலம் தாழ்த்தி இந்த அருமையான பதிவைப் படித்தமைக்கு என்னை மன்னிக்கவும்.

    இந்த கட்டுரையைப் படித்த பின் கமெண்ட் எழுத மனம் வரவில்லை. கண்ணீர்தான் வருகிறது.

    தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் இதைவிட பொருத்தமான பதிவு வேறு எதுவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

    இப்படித் தேடி தேடி அருமையான பதிவுகளை கொடுத்து உங்கள் வாசகர்களை புடம் போடுகிறீர்கள்.

    நன்றி
    பி. சுவாமிநாதன்

  17. சுந்தர் சார்,
    ரியலி கிரேட் வொண்டெர் புல் மெசேஜ்.
    தேங்க்ஸ்

Leave a Reply to bharathi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *