Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > ஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்!

ஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்!

print
நாள் கிழமை விசேஷங்கள், திருக்கோவில் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் பற்றி தெரிந்துகொள்ளும் நாம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். நமது நாட்டின் விடுதலை போரின் முக்கிய நாட்கள் தான் அவை. எத்தனையோ தலைவர்களும் தொண்டர்களும் தன்னலம் கருதாது தங்கள் குடும்பத்தை, வீட்டை, உறவுகளை மறந்து, இந்நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதன் பயன் தான் இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரம்.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாரதி கூறியதை போல நமது சுதந்திர பயிர் தண்ணீர் விட்டு வளர்த்ததல்ல… கண்ணீர் விட்டு வளர்த்தது.

அதன் அருமையை நாம் உணரவேண்டும் அல்லவா? எனவே நிச்சயம் நமது விடுதலைப் போரின் முக்கிய சம்பவங்களை, தியாகசீலர்களை நாம் தெரிந்துகொண்டு அவர்களது தியாகங்களை ஒரு சில நொடிகளேனும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறுவது நாம் அவர்களுக்கு செய்யும் மிக பெரிய அஞ்சலி.

சினிமா கதைகளை குழந்தைகளுக்கு கூறி சினிமா மோகத்தை அவர்களிடம் பிஞ்சிலேயே திணிப்பதற்கு பதில் விடுதலை போரின் இது போன்ற முக்கிய நிகழ்வுகளை எடுத்துக் கூறுங்கள். இவற்றை கதை போல அடிக்கடி அவர்களுக்கு கூறுங்கள். நாட்டின் விடுதலை போர் வரலாற்றை ஒவ்வொரு குழந்தையும் அறிந்துகொள்வது அவசியம். பெரியவர்கள் நாமும் அறிந்துகொள்வது அதை விட அவசியம்.

அதே போல, வட இந்தியாவுக்கோ பஞ்சாப் மாநிலத்திற்க்கோ ஆன்மீக பயணமோ சுற்றுலாவோ செல்பவர்கள் அவசியம் இந்த தியாக பூமியில் உங்கள் காலடியை பதித்துவிட்டு வாருங்கள். விடுதலை போரில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்கு அங்கு ஒரு நிமிடம் நின்று மௌன அஞ்சலியை செலுத்திவிட்டு வாருங்கள்.

தேசபக்தியும் தெய்வபக்தியும் வேறு வேறு அல்ல!

ஏப்ரல் 13 – இந்திய விடுதலை போர் வரலாற்றில் ஒரு மிக மிக துயரமான நாள்.

அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் அஹிம்சா வழியில் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவிக்க கூடியிருந்த மக்களின் மீது ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவர் 50 காவலர்களோடு நடத்திய துப்பாக்கிசூட்டில் 389 பேர் கொல்லப்பட்டனர். 1,516 பேர் காயமுற்றனர்.

இது தொடர்பாக விகடன் பேஸ்புக்கில் படித்த செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்!

===============================================================

ஜாலியான்வாலா பாக் படுகொலையும் உத்தம் சிங்கும்!

ஏப்.13 : ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள்.

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநா. அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான்.

உத்தம் சிங்…

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள். இரு அதிகாரிகளையும் கொல்ல உத்தம் சிங் எனும் இளைஞன் உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டான்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் வந்ததும் குறிபார்த்து சுட்டான். இறந்து போனான் அவன். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன்.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல்.

(நன்றி : பூ.கொ.சரவணன் & www.facebook.com/anandavikatan)

4 thoughts on “ஜாலியன் வாலா பாக் படுகொலை – மறக்கக் கூடாத இந்திய விடுதலை போரின் கறுப்பு நாள்!

  1. விடுதலைக்காக தமது இன்னுயிர் ஈந்த
    தியாக திரு உள்ளங்களுக்கு
    எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

  2. “ஜனவரி 13 – இந்திய விடுதலை போர் வரலாற்றில் ஒரு மிக மிக துயரமான நாள்.” Correct it , its April 13

    1. மன்னிக்கவும். தவறு திருத்தப்பட்டுவிட்டது.

      சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *