Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

print
ந்த உலகில் ஒவ்வொரு பூட்டும் படைக்கப்படும்போதே அதற்கு சாவியும் படைக்கப்பட்டுவிடுகிறது. அது போல பிரச்னை தோன்றும் போதெல்லாம் அதற்கு தீர்வும் தோன்றிவிடுகிறது.

திமிரிலும், அகம்பாவத்திலும், அறியாமையினாலும் மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பிரச்னைகளுக்கும் துன்பங்களுக்கும் வேண்டுமானால் தீர்வுகள் கடினமாக இருக்கலாம் அல்லது இல்லாமலே கூட போகலாம். ஆனால் இறைவன் தரும் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு. காரணம் அவன் நோக்கம் நம்மை கஷ்டப்படுத்தி பார்ப்பது அன்று. நம்மை பக்குவப்படுத்துவதே.

முன்னம் எத்தனை ஜென்மமோ இனி எத்தனை ஜென்மமோ? எந்த பிறவியில் என்ன பாவம் செய்தோமோ? அவன் ஒருவனே அறிவான். எனவே தான் ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஈஸ்வரன் கருணை கொண்டு மறுபடியும் நமக்கு ஜென்மத்தை அளிக்கிறார். பாவங்களை அனுபவித்துக் கழிப்பது மட்டுமின்றி அவற்றை அடியோடு துடைத்தெறியும் வாய்ப்பு இந்த மனித ஜென்மத்தில் மட்டுமே உண்டு. எனவே கிடைப்பதற்கரிய இந்த மனித ஜென்மாவை பயன்படுத்தி புண்ணியங்களை பெருக்கி பாவங்களை தொலைத்து பிறவி பெருங்கடலில் இருந்து கரையேறிவிடவேண்டும்.

நாம் உய்யும்பொருட்டு எத்தனையோ தீர்வுகளை இறைவன் நம் முன் வைத்திருக்கிரான். தீர்வை கண் எதிரிலேயே வைத்துக்கொண்டு நாம் தான் அஞ்ஞானத்தால் அதை புறக்கணிக்கிறோம்.

இந்த மானிடப் பிறவி உய்ய இறைவன் எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, ஜப வேள்விகளை காண்பித்திருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில் உழவாரப்பணி.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நம்மை காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு தான் என்ன? உழவாரப்பணி ஒன்றே அது.

பிரசாதம் படைக்கிறோம். கடைசியில் அவற்றை நாம் தான் சாப்பிடுகிறோம். மேலும் பூஜைகள் செய்வதாலோ பக்தி செய்வதாலோ கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. அவர்கள் மகிழ்வதும் இல்லை. லாபம் எல்லாம் நமக்குத் தான். நமது நன்மைக்கும் மனசாந்திக்கும் தான் இவைகளை செய்கிறோம்.

அவனுக்கு நாம் செய்யக்கூடியது என்ன என்று பார்த்தால் அது இந்த உழாவாரப்பணி தான். நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.

தீராத தோஷங்களை தீர்க்கும், தீவினைகளை அகற்றும், நவக்கிரகங்களை சாந்தி செய்யும், ஜென்ம ஜென்மங்களாக தொடர்ந்து வரும் பாவங்களை துடைத்தெறியும்…. உழவாரப்பணியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

கடந்த மகா சிவராத்திரி முதல் நமது குழுவின் உழவாரப்பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் பாரம்பரியமும் தொன்மையும் மிக்க கோவில்களில் இந்த பணி நடைபெறும். கூடுமானவரை போதிய வருமானம் இன்றி தவிக்கும் கோவில்களிலேயே இந்த கைங்கரியம் நடைபெறும்.

இந்த மாதத்தின் உழவாரப்பணி வரும் ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 வரை பூவிருந்தவல்லியை அடுத்துள்ள திருமழிசை அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள் கோவிலில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேன்மை பொருந்திய இப்பணியின் போது திருக்கோவில் வளாகத்தில் உள்ள குப்பை கூளங்களை அகற்றி கோவிலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்தல், தண்ணீர் விட்டு தரையை கழுவுதல், ஒட்டடை அடித்தல், கோவில் பாத்திரங்களை கழுவி கொடுத்தல், கோ-சாலையை சுத்தம் செய்தல், பசுக்களை குளிப்பாட்டுதல், புற்களை வெட்டி சீர்படுத்துதல், தேவையற்ற செடிகொடிகளை புதர்களை அப்புறப்படுத்துதல் என பல்வேறு பணிகள் செய்யப்படும்.

யார் என்ன பணி செய்ய விரும்பினாலும் அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். முடிந்தால் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வரலாம். இது போன்ற கைங்கரியங்களில் சிறு வயது முதலே அவர்களை ஈடுபடுத்துவது அவர்களை செம்மை படுத்த உதவும்.

திருமழிசை – உலகில் தவம் இயற்றுவதற்கு தலை சிறந்த இடம்!

திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சி தந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் “மத்திய ஜெகந்நாதம்’, “பூர்ணஜெகந்நாதம்’ என்ற சிறப்பு பெயரைப்பெற்றுள்ளது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் அவதரித்ததால் இவ்வூர் அவரது பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது. பல சிறப்புக்களை பெற்ற தலம் இது.

அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர், ஆங்கிரஸ், புலஸ்தியர், குத்ஸர் முதலிய பிரம்ம ரிஷிகள் சத்ய லோகத்திற்குச் சென்றனர். சத்ய லோகம் என்பது படைக்கும் கடவுளான பிரம்மாவின் உலகமாகும். பிரம்மா வந்திருந்த ரிஷிகளை வரவேற்றார். தான் பெற்ற பிள்ளைகளைப்போல் பாவித்து அவர்களை அன்புடன் உபசரித்தார். அவர்கள் ஒன்றுகூடி வந்ததன் காரணத்தை வினவினார்.

நான்முகனின் அடிதொழுது, “உலகில் தவம் இயற்றுவதற்கு தலை சிறந்த இடம் எது?’’ என ரிஷிபுங்கவர்கள் கேட்டார்கள். உடனே பிரம்மா, தேவதச்சன் என்ற புகழுக்குரிய விஸ்வகர்மாவை வரவழைத்து ஒரு துலாக்கோலின் தட்டில் பூமியின் எல்லா பாகங்களையும் வைக்கச் சொன்னார். மற்றொரு தட்டில் திருமழிசை என்னும் தலத்தையும் வைக்கச் சொன்னார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. திருமழிசை வைத்த தட்டு கனம் மிகுதியாலே தாழ்ந்து நிற்க, பூமியின் பிற பாகங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டு லேசாகி மேலே நின்றது. பூலகில் திருமழிசையே தலைசிறந்த தலம் என்று உணர்ந்த முனிசிரேஷ்டர்கள், நான்முகனிடம் விடை பெற்று, திருமழிசைக்குச் சென்றனர்.

திருமழிசையில் பிரசித்தி பெற்ற ஒத்தாண்டீஸ்வரர் என்னும் சிவன் கோவிலும் உள்ளது. உரிய அனுமதி பெற்ற பின்னர் அங்கும் நமது உழவாரப்பணி அடுத்த மாதம் நடைபெறும்.

====================================================
இந்த மேன்மை பொருந்திய தலத்தில் நம் தளம் சார்பாக வரும் ஞாயிறு (ஏப்ரல் 7, 2013) காலை 7.00 முதல் பகல் 12.00 வரை உழவாரப்பணி நடைபெறவுள்ளது.  இந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பயனடையுமாறு அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். வருபவர்களுக்கு நம் செலவில் மதிய உணவு வழங்கப்படும்.

சுத்தம் செய்வதற்குரிய கருவிகள் (மண்வெட்டி, சிறிய பெரிய பிரஷ், முதலானவை) தங்களிடம் இருந்தால் தயவு செய்து எடுத்து வரவும்!

தொடர்புக்கு:

Mobile : 9840169215  | E-mail  : simplesundar@gmail.com

====================================================

பஸ்  ரூட் :

பிராட்வே – திருமழிசை ரூட் – 153

திருவள்ளூர் – திருமழிசை ரூட் – 501, 538, 566A, 596, 596A, 597

கோயம்பேடு – திருமழிசை ரூட் – 596, 596 A

தாம்பரம் – திருமழிசை ரூட் – 566A

தி.நகர் – திருமழிசை ரூட் – 54V, G54, 154A, 597

வேளச்சேரி  – திருமழிசை ரூட் – 54L

பஸ் ஸ்டாப் : திருமழிசை கோவில்

====================================================

12 thoughts on “தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

  1. உழவாரப்பணியின் சிறப்பை மிக அழகாக சொல்லி உள்ளிர்கள்.
    இந்த முறை உழவாரப்பணி செய்ய யாருக்கு வாய்ப்பு உள்ளது
    என்பதை இறைவன் முடிவு செய்வார்.

  2. பாமா ருக்மிணிக்காக மட்டுமே துலாபாரம் நடந்தது என்பது
    வரலாறு ..

    \\ துலாக்கோலின் பூமியை பகுதிகளாக தரம் கண்டு,

    திருமழிசை வைத்த தட்டு { பூமி } கனம் மிகுதியாலே தாழ்ந்தது \\

    கோயிலின் தலவரலாறு சேகரித்து வழங்குவதில் சுந்தர்க்கு நிகர்
    சுந்தர்ஜிதான் .

    இந்த தலத்தில் உழவாரப்பணியில் நானும் என்னுடைய மகன் மொனேஷ் ராஜ் அவர்களும் கலந்து கொள்ள இறைவனின் பாதங்களில் வின்னப்பிகிறோம் .
    அனைத்தும்
    \\அவன் அருளாலே அவன் தாழ்பணிந்து \\

    அவன் கட்டளைக்காக காத்திருக்கும்

    ” ஓம் ஹரி ஹரி ஓம் “

  3. சுந்தர்ஜி,

    பெருமாள் என்னை கூபிடுவாரா? கைங்கர்யத்தில் பங்கு பெற ஆசையாக உள்ளது. அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து நானும் விண்ணப்பிக்கின்றேன்.

    1. என்ன தான் அவன் கூப்பிட்டாலும் நமக்கும் சுய விருப்பம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? எனவே வர விரும்புகிறவர்களை நிச்சயம் அவன் வரவழைப்பான். மனமுவந்து முயற்சிக்கவும். நன்றி.

      – சுந்தர்

  4. இறையவனின் சேவைக்கு நானும் வருகிறேன்..
    இந்த ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
    மிக்க நன்றி சுந்தர் அண்ணா.

  5. இம்முறை அந்த பாக்கியம் கிட்டவில்லை …நான் இந்த வாரம் வெளியூர் செல்கிறேன் …. கண்டிப்பாக விரைவில் கலந்து கொள்ள அந்த ஆண்டவன் அருள் புரிய வேண்டும் !

  6. திருப்பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!
    எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் எப்போதும் துணை நின்று வழி நடத்துவானாக !!!

  7. உங்களுக்கு கிட்டிய பேறு மகத்தானது. அப்பர் ஸ்வாமிகள் செய்த தொண்டு போல் தாங்கள் செய்யும் தொண்டு எங்களுக்கும் கிடைக்காதா என்று ஏங்குகின்றேன். நான் 72 வயது முதியவன். மூட்டு வலி உள்ளவன். என்னால் இப்பணி செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. இறை அருள் இருந்தால் என்னையும் இப்பணிக்கு இறைவன் அழைப்பன் என நம்புகிறேன்.
    இப்படிக்கு,
    கே.ஆர் . சநதிரசேகரன்.

  8. திரு சுந்தர்ஜி

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு வயது 63. ரிட்டைர் ஆகியும் கன்சாலிடேட் சம்பளம் பெறுகிறேன். தொலைதூரம் வந்து உழவார பணி மேற்கொள்ளும் சூழல் கஷ்டம் என்று நினைக்கிறேன். எனவே கோவையில் உழவாரபனியில் தாங்கள் ஈடுபடுவீர்களானால் என்னால் முடிந்தவரை தங்களுடன் திருக்கொவில்களுக்காக தொண்டு செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களுடைய உழவாரப்பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.

    தவறாமல் என்னுடைய வேப்ச்சைட்டுக்கு தகவல் அனுப்பவும்.

    என்றும் நன்றியுடன்
    வரதராஜன்-கோவை.

Leave a Reply to Vivek Raam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *