Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 23, 2024
Please specify the group
Home > Featured > விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

print
றைவன் மீதும் பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல விலங்குகள். மனிதர்களோ, தேவர்களோ அல்லது ரிஷிகளோ சாபம் காரணமாகவோ அல்லது வேறு நோக்கத்தின் காரணமாகவோ விலங்குகளாகவோ பூச்சிகளாகவோ பிறந்து இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகள் பல இருக்கின்றன. இவை எதுவும் கதையல்ல. உண்மையினும் உண்மை.

முன்ஜென்மங்கள் தொடர்பு அல்லது  சாபம் எதுவும் இன்றி விலங்காகவே இருந்து அறிந்தோ அறியாமலோ இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. (உதாரணத்திற்கு யானையும், சிலந்தியும் பூஜித்து அவன் தரிசனம் பெற்ற திருவானைக்கா!)

மூன்றறிவும் நான்கறிவும் பெற்ற விலங்குகளுக்கே உய்ய வழி இருக்கும்போது ஆறறிவு பெற்ற நமக்கு அதற்கான வாய்ப்புகள் எத்தனை எத்தனை?

ஆனால் நாம் செய்வது என்ன? சூதும் வாதும் கொண்டு இறைவனின் விருப்பத்திற்க்கெதிரான ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, கடைசியில் நமது வினைகளே நம்மை வறுமையின் வடிவிலோ, கொடுநோயின் வடிவிலோ, பிள்ளைகளின் வடிவிலோ, அல்லது துரோகத்தின் வடிவிலோ, முதுமையின் வடிவிலோ நம்மை துரத்தும்போது இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

அப்படி இருந்தும் கூட அவன் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறான். எத்தனை முறை பட்டாலும் திரும்ப திரும்ப தவறு செய்வது மனிதனின் குணம். அப்படி அவன் எத்தனை முறை தவறு செய்தாலும்  திரும்ப திரும்ப மன்னிப்பது இறைவனின் குணம். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.

வாழ்ந்த சுயநல வாழ்க்கைக்கு ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு இனியாவது அவன் விருப்பப்படி ஒரு வாழ்க்கை வாழ அனைவரும் உறுதி ஏற்போம். ஏற்கனவே அத்தகைய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஒரு சல்யூட்!

கீழ்கண்ட பதிவுக்காக இணையத்தில் புகைப்படங்களை தேடியபோது தொன்மையும் சிறப்புக்கும் மிக்க அந்தந்த கோவில்களின் இப்போதைய நிலை கண்டு கண்ணீர் தான் பெருகுகிறது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி பக்தி வளர்த்த, தமிழகத்தில் கோவில்களுக்கு இந்த நிலைமையா?

பாடல் பெற்ற புண்ணிய தலங்கள் இப்படி பராமரிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில் நாட்டில் நல்லாட்சி மலர்வது எப்படி சாத்தியம் அல்லது பருவம் தவறாது மழை பொழிவது எப்படி சாத்தியம்?

என்று மாறும் இந்த நிலை? இறைவா…. நீ தான் எம்மக்களை தடுதாட்கொள்ளவேண்டும்.

இதில் என்னால் உங்களால் செய்யக்கூடியது என்ன? மாதம் ஒரு கோவில் என என் இறுதிக்காலம் வரை இது போன்ற கோவில்களை அடையாளம் கண்டு என்னால் இயன்ற துப்புரவு, கட்டுமானம் மற்றும் உழவாரப்பணியை செய்ய உறுதி பூண்டிருக்கிறேன். நிச்சயம் எம் பிறவி இதன் மூலம் அர்த்தமுள்ளதாக மாறுவதோடு மட்டுமல்லாமல், எம் காலத்திற்கு பிறகும் எம் பேர் சொல்லும் வகையில் இருக்கும் என திடமாக நம்புகிறேன். அதற்குரிய சக்தியையும் ஆற்றலையும் சுற்றத்தையும் நட்பையும் இறைவன் வழங்கியருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

விலங்கினங்கள் பூஜித்து பேறு பெற்ற தலங்கள்

புலி – திருப்புலிவனம்

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உரு மாறிய முனிவர் இங்கே பூஜித்திருக்கிறார்.

திருப்புலிவனம்

பசு – சங்கரன்கோவில்

நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோயிலில், அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.

சங்கரன்கோவில்

சிலந்தி, யானை – திருவானைக்காவல்

திருச்சிராப்பள்ளியில் காவிரியாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் அமைந்துள்ள தலம்  இது. (அடியேன் பிறந்த ஊருங்க இது!) சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

திருவானைக்கா

எறும்பு – திருவெறும்பூர்

திருச்சி, திருவெறும்பூரில் சிவசக்தி வடிவ ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

திருவெறும்பூர்

ஈ – திருஈங்கோய்மலை

ஈ பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.

திருஈங்கோய்மலை

 

 

பாம்பு – திருப்பாம்புரம்

பாம்பு பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.

திருப்பாம்புரம்

அணில், குரங்கு, காகம் – திருக்குரங்கணில்முட்டம்

அணில், குரங்கு, காகம் மூன்றும் பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும், சாபவிமோசனம் பெற்ற இத்தலம், காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.

திருக்குரங்கணில்முட்டம்

மயில் – மயிலாடுதுறை

சாபம் காரணமாக மயில் உருவில் அம்பிகை பூஜை செய்த தலம், மயிலாடுதுறை. இங்கு ஈசனின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு த்ரிதளமாக உள்ளதும் நடராஜர் கௌரி தாண்டவம் ஆடுவதும் தனிச் சிறப்புகள்.

மயிலாடுதுறை

கழுகு – திருக்கழுக்குன்றம்

கழுகு பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

திருக்கழுக்குன்றம்

சிலந்தி – திருக்காளத்தி

சிலந்தி பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக இது போற்றப்படுகிறது.

திருக்காளத்தி

வண்டு – திருவண்டுதுறை

திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.

திருவண்டுதுறை

நண்டு – நண்டாங்கோயில்

சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.

நண்டாங்கோயில்

சக்ரவாகப் பறவை – திருச்சக்கராப்பள்ளி

தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.

திருச்சக்கராப்பள்ளி

யானை – திருக்கொட்டாரம்

திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.

திருக்கொட்டாரம்

பசு – பட்டீஸ்வரம்

தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.

பட்டீஸ்வரம்

ஆமை – திருக்கச்சூர்

காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

திருக்கச்சூர்

கிளி – சேலம் சுகவனேஸ்வரர்

கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.

சேலம் சுகவனேஸ்வரர்

வானரம் (ஜடாயு) – வைத்தீஸ்வரன் கோயில்

ராமாயணத்தில் முக்கிய பங்கேற்ற ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில். இத்தல சாந்துருண்டையும் சித்தாமிர்த தீர்த்தமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சார்த்தப்பட்ட சந்தனமும் தீரா நோய்களைத் தீர்க்கும் அருமருந்துகள்.

வைத்தீஸ்வரன் கோயில்

யானை – கபிஸ்தலம் கஜேந்திரவரதர்

தஞ்சாவூர், கபிஸ்தலத்தில் அருளும் கஜேந்திரவரதர், சாபத்தால் யானையாக மாறிய இந்திரத்யும்னனுக்கும், முதலையாக மாறிய கந்தர்வனுக்கும் சாப விமோசனம் அளித்தவர். இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்று.

கபிஸ்தலம்

தவளை – திரு அன்பில்

திருச்சி, அன்பில் தலத்தில் அருளும் சுந்தரராஜப் பெருமாள், சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக முனிவருக்கு அருள் புரிந்து, சுயவுரு கிட்டச் செய்தவர். இத்தல தீர்த்தம் மண்டூக தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

திரு அன்பில்

சிட்டுக்குருவி – வடகுரங்காடுதுறை

தன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக வணங்கப்படுகிறார். இவர், தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் கோயில் கொண்டிருக்கிறார்.

வடகுரங்காடுதுறை

தீவிர ஆராய்ச்சி செய்தால் இந்த பட்டியலில் இன்னும் பல கோவில்களை சேர்க்க இயலும். இருப்பினும் இப்போதைக்கு இந்த பட்டியலை தந்திருக்கிறோம்.

(Photographs courtesy : www.shivatemples.com, www.shaivam.org)

7 thoughts on “விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

  1. விலங்குகலே பூஜித்து சாபவிமோசனம் பெற வாய்ப்பு இருக்கும் பொது, மனிதர்களாகிய நாம் இக் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பெரும் பாக்கியும்.

    //”நாம் சுவாசிப்பதானால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.”//

    உண்மையான வார்தைகள். உங்கள் மன உறுதியை பார்த்து நம் தளம் நண்பர்கள் அனைவரும் உழவாரப்பணியில் ஈடுபட நீங்கள் உதாரணமாக உள்ளீகள்.

    வாழ்த்துக்கள்.
    விவேக் ராம் .

  2. இப்படி பராமரிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில் நாட்டில் நல்லாட்சி மலர்வது எப்படி சாத்தியம் அல்லது பருவம் தவறாது மழை பொழிவது எப்படி சாத்தியம்?

    இது தான் எழுத்தடி என்பதோ???

    நல்லதே செய்வோம் …

    நல்லதே நடக்கும் …

  3. பெரும் முயற்சி எடுத்து கொடுக்கப்பட்டுள்ள அருந்தொகுப்பு இது. இறைவனின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்த விலங்கினகளுக்கும் முக்தி அடைந்து அதற்கு கோயிலும் அமையப்பெற்றிருக்கிறது. விலங்குகளுக்கு நாம் உணவு கொடுப்பதற்கும் இதுதான் காரணம். கடவுளும் தன்னுடைய வாகனமாக விலங்குகளை வைத்திருப்பதும் ஒரு விசேஷம் (விநாயகருக்கு மூஞ்சூர், அய்யப்பனுக்கு புலி, முருகனுக்கு மயில் மற்றும் சேவல், துர்கைக்கு சிங்கம், பரமசிவனுக்கு காளை/நந்தி). இவ்வளவு ஏன், மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ஹ அவதாரம் பாதி மனிதன் பாதி விலங்கு அல்லவா. இறைவனுக்கு உயிரினங்களில் பாகுபாடு இல்லை.

  4. அருமையான பதிவு !!!
    அழகான விளக்கங்கள் !!!
    இனிய புகைப்படங்கள் !!!

    பெறுதற்கு அறிய இந்த மானிட பிறவியை
    பயனுள்ள வகையில் பணி செய்து கடைத்தேற
    இனிய மார்கத்தை வாசகர்க்கு எடுத்துரைத்து
    தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என திருப்பணி புரியும்
    சுந்தர் அவர்களே – உங்கள் பணி சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

  5. //நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.//

    Excellent வார்த்தைகள். உங்கள் பணி தொடர நல்ல உள்ளங்கள் பல ஒன்று சேரும் இறைவன் கருணையால்.

  6. ……………………………………………………………..
    அப்படி இருந்தும் கூட அவன் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறான். எத்தனை முறை பட்டாலும் திரும்ப திரும்ப தவறு செய்வது மனிதனின் குணம். அப்படி அவன் எத்தனை முறை தவறு செய்தாலும் திரும்ப திரும்ப மன்னிப்பது இறைவனின் குணம். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.
    …………………………………………………………………………………………………………….

    உண்மையிலும் உண்மை சுந்தர். மிக்க நன்றி.

Leave a Reply to Vivek Raam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *