Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

print
சிவராத்திரி அன்று காலையில் நாம் ஆற்றிய உழவாரப்பணியின் மூலமாக நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது செய்யும் சிறு சிறு தவறுகள் கூட ஆலயத்தை எப்படி அசுத்தப்படுத்துகின்றன என்று நன்கு தெரிந்துகொண்டோம். கோவிலை பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்றும் அறிந்துகொண்டோம். அந்த வகையில் இந்த உழவாரப்பணி இனி நாங்கள் கோவிலுக்கு செல்லும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எங்களுக்கு புரிய வைக்கும் பாடமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

உதாரணத்திற்கு முன்பு கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் விளக்கேற்றியபின்னர் அணைந்த தீக்குச்சியை அதே இடத்தில் போட்டுவிடுவேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பது அங்கு நாங்கள் வாரிய அணைந்த தீக்குச்சிகள் உணர்த்தியது. இனி தீக்குச்சிகளை கூட குப்பைத் தொட்டியில் தான் போடவேண்டும் என்பது நாங்கள் கற்றபாடம்.

மேலும்  விளக்கேற்றும்போது அதற்கு என்று ஆலய நிர்வாகம் ஒதுக்கியுள்ள இடங்களில் ஏற்றாமல் அவரவர் மனம் போனபடி இஷ்டத்திற்கு விளக்கேற்றி சம்பந்தப்பட்ட இடத்தை அசுத்தப்படுவிடுகிறார்கள். விளக்கேற்றுவது ஒரு புண்ணியச் செயல் அதை கூட ஒரு பாவச் செயல் போல செய்யலாமா? அதை சுத்தப்படுகிறவர்களுக்கு அது எவ்வளவு கடினம் தெரியுமா?

அதே போல குங்குமம் மற்றும் விபூதி நெற்றியில் இட்ட பிறகு கைகளில் மிகுதியாக உள்ளவற்றை தூண்களில் போடுவது. பல தூண்கள் இவ்வாறு குங்குமம் மற்றும் விபூதிகளால் பூசப்பட்டு அதன் ஒரிஜினல் தோற்றத்தையே அந்த தூண்கள் இழந்திருந்தன. அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இனி கோவிலுக்கு செல்லும்போது அவசியம் ஒரு சிறு துண்டு பேப்பரோ அல்லது சிறிய டப்பாவோ எடுத்துச் சென்று அதில் குங்குமம் விபூதி இவற்றை வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து கண்ட கண்ட இடங்களில் போடவேண்டாம்.

கோவிலில் நாம் பசியாற தரப்படுகிற ஒரு உன்னத விஷயம் பிரசாதம். அதை சாப்பிட்டவுடன் நன்றி மறந்து அந்த இலைகளையும் தொன்னைகளையும் அதே இடத்தில் போடுவது எவ்வளவு பெரிய தவறு? பலர் நேற்று அதை செய்ததை கண்கூடாக பார்த்தபோது மனம் பதறியது. நாங்கள் பெருக்கி சுத்தம் செய்ய செய்ய திரும்ப திரும்ப குப்பைகள் சேர்ந்துகொண்டே இருந்தன. ஒரு இலையை எடுத்துப் போடுவோம் அதற்குள் இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு அதே இடத்தில் இலையை போடுவார். அட போங்கப்பா… அந்த ஈஸ்வரன் தான் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்.

வாசகிக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்

நமது பணிகளுக்கு உதவிட நமது தள வாசகி ஒருவர் வந்திருந்தார். வெளிப் பிரகாரத்தை கூட்டுவது, பெருக்குவது, கழிவு நீரை அப்புறப்படுத்தியது என அவர் செய்த தொண்டு அருந்தொண்டு. கிளம்பும்போது, “வந்திருந்து உதவியதற்கு ரொம்ப நன்றியம்மா” என்றேன். “என் அப்பாவோட வீட்டுல நான் வேலை செய்றதுக்கு எதுக்கு சார் நன்றி சொல்றீங்க. இது என் கடமை” என்றார். சிவபெருமானை தந்தை போல பாவித்து அவரால் பக்தி செலுத்துவது புரிந்தது. பேசுகையில் அவர்கள் சிவபெருமான் மீது எந்தளவு அன்பும் பக்தியும் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

அவர்களுக்கு ஈசன் தந்த உடனடி பரிசு என்ன தெரியுமா?

கீழே படியுங்கள்.

ஒரளவு பணிகள் நிறைவு பெற்றதும், சிறப்பு தரிசன வழியில் விடு விடுவென உள்ளே சென்று குருக்களிடம் “வேறு ஏதாவது செய்யவேண்டுமா?” என்று கேட்டேன்.

“மூலவரை தரிசித்து முடித்தவுடன் மாலைகளிலிருந்து பூக்களை கத்தரித்து பக்தர்களுக்கு தருவதற்கு ஒருவர் வேண்டும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் தொடர்ச்சியாக ஆட்கள் தேவை” என்றும் கூறினார்.

இந்த பணிக்கு முதலில் சென்றது அந்த வாசகி தான். தன் கைகளால் அன்று குறைந்தபட்சம் சுமார் 1000 பேருக்காவது அவர் பூக்கள் கத்தரித்து கொடுத்திருப்பார். எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது?

‘நீ சாதிக்கப் பிறந்தவன்’ – நூல் + கும்பமேளா தீர்த்தம் நண்பர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது

‘நீ சாதிக்க பிறந்தவன்’

இதற்கிடையே நம்மை உற்சாகப்படுத்தவும் நமது பணிகளில் பங்கேற்கவும் ‘ஆத்மசேவா தர்ஷன சமிதி’ என்ற அமைப்பின் நிர்வாகிகள் திரு.சிவகுமாரனும், ராமஜெயமும் வந்திருந்தனர்.

நமது பணிகளில் பங்கேற்றுவிட்டு எங்கள் எளிய சிற்றுண்டியும் அருந்திவிட்டு அவர்கள் கிளம்பும்போது, “சுந்தர் உங்களுக்கு ஒரு பரிசு கொண்டுவந்திருக்கிறோம்” என்று கூறி, சுவாமி விவேகானந்தர் எழுதிய ‘நீ சாதிக்க பிறந்தவன்’ என்ற நூலை கொடுத்தனர். வேதங்களுக்கே தலைவனான அந்த வேதநாயகத்தின் ஆலயத்தில் ‘நீ சாதிக்க பிறந்தவன்’ என்று சுவாமி விவேக்கானந்தரே நம்மிடம் கூறுவதை போல நான் உணர்ந்தேன். “என்னை விட என் நண்பர்கள் இதை பெற்றுகொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என் நண்பர்களுக்கு கொடுங்கள்” என்றேன். உடனே தனது வாகனத்திற்கு சென்று, மேலும் சில நூல்கள் எடுத்து வந்து கொடுத்தார்.

தேடி வந்த கும்பமேளா தீர்த்தம்

திரு.ராமஜெயம் அவர்கள் சமீபத்தில் கும்பமேளா சென்றிருந்தபோது கொண்டு வந்த கும்பமேளா தீர்த்ததையும் ஒரு பாட்டிலில் கொடுத்தார். நேற்றைக்கு தான் கும்பமேளா நிறைவு நாள். நிறைவு நாளன்று வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் வைத்து கும்பமேளா தீர்த்தம் நம்மை தேடி வந்ததை நாம் என்னவென்று சொல்ல? எல்லாம் அவன் செயல்.

அனைவரும் ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். பின்னர் உழவாரப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு நம் செலவில் உப்புமா மற்றும் சட்னி தரப்பட்டது. அனைவரும் திருப்தியாக சாப்பிட்டனர். ஒரு சிறுவன் தனக்கும் வேண்டும் என்று கேட்க அவனையும் உட்கார வைத்து வயிறார பரிமாறினோம். அடுத்து ஒரு பெரியவர் மற்றும் கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும் ஒரு அம்மா என அனைவரும் பசியாறினோம். உப்புமா+சட்னி பிரமாதமாக இருந்தததாக நண்பர்கள் கூறினர்.

இதற்கு முன்பு ஒரு முறை ஆத்மசெவா அமைப்பினர் உழவாரப்பணி செய்த பொது ஒரு சிவலிங்கம்  என்று கூரியிருந்தோமல்லவா? இம்முறை அந்த லிங்கத்தை சுற்றியுள்ள பகுதி சுத்தம் செய்யப்பட்டு கற்கள் பதித்து, கிட்டத்தட்ட ஒரு தனி சன்னதி போல செய்துவிட்டோம். சற்றைக்கெல்லாம் அந்த லிங்கத்துக்கு அலங்காரம், பூஜைகள் என் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் அமர்க்களப்படுத்திவிட்டனர்.

நம் நண்பர்கள் அந்த லிங்கத்தின் அருகில் நின்று கொடுத்த போஸ்களை பாருங்களேன்….

அனைவரும் புறப்படத் தயாரானோம். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தபடிஇருந்ததால் “கூட்டத்தை ஒழுங்குபடுத்து ஒருவராவது இருந்து உதவவேண்டும்” என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். நண்பர்கள் அனைவரும் கிளம்பிவிட, குட்டி சந்திரன் மட்டும் தான் இருந்து கவனித்துகொள்வதாக கூறினார். இதையடுத்து நாங்கள் கிளம்பிவந்துவிட்டோம்.

மாலை வந்த பெருங்கூட்டம்

மாலை நண்பர்கள் எவரும் வர இயலாத நிலையில் இருந்தனர். எனவே நான் சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை 6 மணிக்கு மீண்டும்  கோவிலுக்கு சென்றபோது அங்கே கூட்டமென்றால் கூட்டம் அப்படியொரு கூட்டம். எள் போட்டால் எள் எடுக்க இடமில்லை என்னுமளவிற்கு ஜனத்திரள். காலையில் நாம் பார்த்த கோவில் தான இது என்று சந்தேகம் ஏற்பட்டது. கோவில் குளம் அருகிலேயே தடுப்புகள் வைத்து வாகனங்களை தடுத்துவிட்டார்கள்.

அதற்கு பிறகு ஊர்ந்து தான் கோவிலுக்குள்ளேயே செல்லவேண்டியிருந்தது. காலை நாங்கள் செய்ததெல்லாம் ஒன்றுமேயில்லை என்னுமளவிற்கு ஆக்கிவிட்டார்கள் மாலை பெருந்திரளாக வந்த பக்தர்கள். பலர் பிரசாதம் சாப்பிட்டவுடன் இலைகளை ஆங்காங்கே போட்டிருந்தனர். நல்லவேளை திருவேற்காடு கருமாரியம்மன கோவில் ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த தனியார் கான்ட்ராக்ட் பெண் ஊழியர்கள் நான்கைந்து பேர் பம்பரமாக சுழன்று குப்பைகள் விழ விழ பெருக்கி சுத்தம் செய்து கொண்டேயிருந்தனர். கோவிலை சுத்தமாக வைத்துகொள்வது கோவில் பணியாளர்களின் கடமை மட்டுமல்ல. நம் கடமையும் கூட என்பதை உணர்ந்து இனி ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.

நம் தளம் சார்பாக சுண்டல் விநியோகம்

சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்திருந்த சுண்டல் அண்டாவில் வர, ஒரு தொன்னையில் அதை கொடுத்தனுப்பி நிவேதனம் செய்துவிட்டு விநியோகத்தை ஆரம்பித்துவிட்டோம். 15 நிமிடத்தில் மொத்த சுண்டலும் காலியாகிவிட்டது. கிட்டத்தட்ட 500 பேர் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அதற்க்கு பின்னர் வந்தவர்களுக்கு கொடுக்க இயலவில்லை.



அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றது எங்களுக்கு என்னவோ போலிருந்தது. ஆனால் இந்த பெரும் கூட்டத்திற்கு நாம் இது போல 10 அண்டாவாவது தயார் செய்தால் தான் அனைவருக்கும் தரமுடியும். அந்தளவு கூட்டம். எங்கு பார்த்தாலும் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் தான். சுண்டல் விநியோகிக்கும்போது பல வேடிக்கைகள் நடந்தன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம் நடைபெற்றது. சுண்டல் பிரமாதமாக இருந்ததாக பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சாப்பிட்டுவிட்டு கூறினார்.

எளிய சேவை

நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியபடி, இந்த கூடத்தில் பல பக்தர்கள் அவர்களால் இயன்ற அளவிற்கு சிறு சிறு பாத்திரங்களில் தூக்குகளில் கேசரி, பாயசம், பால், சுண்டல் முதலியவற்றை கொண்டு வந்து அங்கு கூட்டத்தில் விநியோகித்துக்கொண்டிருன்தனர். அவர்கள் முகங்களில் தான் அப்படி ஒரு திருப்தி.

அதற்கு பிறகு அந்த கூட்டத்தில் இருந்தால் சரிப்பட்டு வராது. நாம் திருப்தியாக சுவாமி தரிசனம் செய்ய முடியாது என்று தோன்றியது. சென்ற வருடம் நாம் விரதம் அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளையும் கண்டு ரசித்த பூவிருந்தவல்லி தையல் நாயகி சமேத அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமியை தரிசிக்க சென்று விடலாம் என்று தோன்றியது. அங்கே மூலவர் அப்படி ஒரு அழகு. “இங்கேயும் கொஞ்சம் வேலையிருக்கு. வரக்கூடாதா?” என்று அவர் கேட்பது போல எனக்கு தோன்றியது.

@ பூவிருந்தவல்லி தையல்நாயகி சமேத அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி கோவில்

எனவே சுண்டல் அண்டாவை ஆட்டோவில் ஏற்றி எனுப்பிவிட்டு என் வீட்டுக்கு சென்று இரவு முழுவதும் படிக்க அங்கு அறுபத்து மூவர் கதைகள் புத்தகமும், அர்ச்சனைக்கு வில்வ இலைகளும் எடுத்துகொண்டு பூவிருந்தவல்லிக்கு கிளம்பினோம்.

நாங்கள் சென்ற நேரம் ஒரு அமைப்பின் சார்பாக பல வேன்களில் சுமார் 500 பேர் வந்திருந்தனர். அவர்களின் பஜனைகளும் பாடலும் என கோவிலே களைகட்டியது. அவர்கள் சென்றபிறகு, முதலில் வைத்தியநாத ஸ்வாமியை தரிசித்துவிட்டு வந்தோம்.

ஆலய தரிசன விதிமுறைகள் குறித்த நமது தளத்தின் நோட்டீஸை படிக்கும் பக்தர் ஒருவர்

பின்னர் அறுபத்து மூவர் கதைகள் படிக்க ஆரம்பித்தேன். மிகவும் சோர்வாக தூக்க கலக்கத்துடன் இருந்தபடியால் ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. தூக்கம் தூக்கமாக வர ஆரம்பித்துவிட்டது. இப்படியே இருந்தால் விரத பங்கம் வந்துவிடும். ஏதேனும் வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தோம்.

அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி கோவில் வளாகத்தை சுத்தம் செய்து…

வளாகத்தில் ஆங்காங்கே தொன்னைகள் மற்றும் பால் மற்றும் டீ சாப்பிட்ட கப்கள் சிதறிக்கிடந்தன. எங்கெங்கு பார்த்தாலும் குப்பைகள் தான். அடுத்து உடனே செயலில் இறங்கினோம். சந்திரன் ஒரு கூடையை கொண்டு வர, இருவரும் சேர்ந்து வளாகத்தில் உள்ள குப்பைகள் ஒன்று விடாமல் அகற்றினோம். குப்பைகளை போட குப்பைத் தொட்டிகள் இருந்தும் பலர் ஆங்காங்கே போட்டிருந்தனர். குர்குரே மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளின் கவர்கள் எல்லாம் ஆங்காங்க கீழே கிடந்தன. சிவராத்திரி அன்று சிலர் பிக்னிக் வந்து சென்றதை போல இருந்தது. (மாறுங்கப்பா…!)

தொடர் முயற்சியில் ஒரு அரை மணிநேரத்தில் மொத்த பிரகாரமும் சுத்தமடைந்தது.

சற்று நேரத்தில் மடப்பள்ளி கவுண்டரில் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட, எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை அவ்வளவு பெரிய க்யூ. நாங்களும் வரிசையில் நின்றோம். எங்கள் முறை வந்தபோது கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இருந்தாலும் கொஞ்சம் கிடைத்தது. தேவாமிர்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இந்த பஞ்சாமிர்தம் தான்.

“தாராளமா செய்ங்க….. எவ்வளவு பெரிய கைங்கரியம்..”

அடுத்த கால பூஜை அடுத்து தொடங்கிவிட, பெருங்கூட்டத்திற்கு இடையே எப்படியோ அவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. விபூதி வாங்கும்போது குருக்களிடம் சிறிது பேசினோம். சென்ற முறை சிவராத்திரி பூஜைக்கு வில்வம் மற்றும் மலர்கள் வாங்கித் தந்திருந்தபடியால் நம்மை சட்டென்று அடையாளம் தெரிந்தது. காலை திருவேற்காடு கோவிலில் செய்த உழவாரப்பணியை பற்றி கூறி, இங்கு பிரகாரத்தை சுத்தம் செய்யலாமா? என்று கேட்டேன். “தாராளமா செய்ங்க. எவ்வளவு பெரிய கைங்கரியம்…. எதுக்கும் ஆஃபீஸ்ல  ஒரு வார்த்தை ஆபீஸ்ல சொல்லிடுறேன்” என்று கூறி நம்முடன் கோவில் அலுவலகத்துக்கு ஒருவரை அனுப்பி வைத்தார். அங்கு எங்களை அழைத்து சென்றார். சென்ற வருடம் பிரசாதத்திற்கு சமையல் எண்ணை உள்ளிட்ட சில மளிகை பொருட்கள் வாங்கித் தந்திருந்தேன். அது தொடர்பாக இரண்டு மூன்று முறை அவரை சந்தித்திருந்தபடியால் அவருக்கும் நம்மை சட்டென்று அடையாளம் தெரிந்துவிட்டது. தாராளமா செய்க சார் என்றார்.

அருந்தொண்டில் நம் நண்பர் குட்டி சந்திரன் @ பூவிருந்தவல்லி வைத்தியநாத ஸ்வாமி கோவில்

பசியோடிருப்பவனுக்கு நல்ல வேட்டை கிடைத்ததைப் போன்று, எங்களுக்கு பிரகாரத்தை சுத்தம் செய்ய வாய்ப்பு கிடைக்க அடுத்த அரை மாநிறத்தில் இருவரும் பிரகாரத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்துவிட்டோம்.

நந்திக்கு ஏற்பட்ட சோதனை

பின்னர் வெளியே, நந்தி பகவான் அருகே உள்ள விளக்குகளை அப்புறப்படுத்துமாறு ஆலயத்தில் (அடுத்து வருபவர்கள் ஏற்றுவதன் பொருட்டு) கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைந்த அகல் விளக்குகளை அகற்றி, (நந்தி பகவான் பின்புறம் உள்ள பலி பீடம் அருகே) அந்த இடத்தை சுத்தம் செய்தோம். பலர் விளக்குகளை கண்ட கண்ட இடத்தில் வைத்திருந்தனர். (இதற்கு பெயர் விளகேற்றுவது அல்ல. அசுத்தம் செய்வது.)

இப்படியே கோவிலை சுற்றி சுற்றி வந்து கைங்கரியம் செய்துகொண்டிருக்க, அதற்குள் நான்காம் கால அபிஷேகமும் பூஜைகளும் தொடங்கிவிட்டன. அவை முடிந்து, இறைவனை திவ்ய அலங்காரத்தில் கண்டு ரசித்தோம்.

வெளியே மடப்பள்ளி கவுண்டரில் சூடான வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கியூவில் நின்று வாங்கி சாப்பிட்டுவிட்டு, ஒரு முறை பிரதட்சிணம் வந்து நமஸ்கரித்துவிட்டு ஆலயத்தில் நன்றி கூறி விடைபெற்றுவிட்டு கிளம்பினோம்.

நம் நோட்டீஸை படிக்கும் பக்தர்கள் சிலர்…

சிவராத்திரி அன்று விரதம் அனுஷ்டிக்கவில்லை என்றாலும் கண்விழிப்பது, சிவன் கோவிலில் இருப்பது, சிவனை தரிசனம் செய்வது, அன்று முழுக்க பல்வேறு சிவன் கோவில்களுக்கு செல்வது என அனைத்தும் விசேஷம் தான். இம்முறை எம் விரதத்துடன் உழவாரப்பணி என்கிற கைங்கரியமும் சேர்ந்ததால் மனதில் அப்படி ஒரு திருப்தி சந்தோஷம். ஏதோ முழுமையாக இல்லையென்றாலும் அரைகுறையாக விரதம் இருந்து முடித்தேன். (சிவபெருமான் கூட்டி கழிச்சு பார்த்து பார்டர் பாஸ் மார்க்காவது போடுவாருன்னு நினைக்கிறேன்!)

பொதுவா வீட்டுல என் ரூமை கூட இதுவரை நான் பெருக்கினதில்லை. ஒரு சின்ன வேலை செய்வதற்கே உடம்பு அப்படி அலுத்துக்கொள்ளும். நாலு தடவை குனிஞ்சி எழுந்தாலே பெரிய விஷயம். ஆனா இங்கே மிகப் பெரும் வளாகத்தை சுத்தம் செய்கிறோம்… எங்களுக்கு அலுப்போ களைப்போ சிறிதும் ஏற்படவில்லை. பசியும் எடுக்கவில்லை. இது அனுபவப் பூர்வமாக நாங்கள் உணர்ந்த உண்மை. மேலும் இந்த செயலை செய்கையில், அகற்றப்படுவது வளாகத்தில் உள்ள குப்பைகள் மட்டுமல்ல. ஜென்ம ஜென்மாக நாம் செய்த பாவங்களும் தீவினைகளும் தான் என்பதால் மனதிற்கு அப்படி ஒரு சந்தோஷம். திருப்தி.

…………………………………………………………………………………..

தன்னையறியாமல் சிவன் கோவிலின் விளக்கை தூண்டிவிட்ட எலி மகாராஜாவாக பிறந்த வரலாறு

ஒரு முறை ஒரு சிவன்கோவிலில் பூஜை முடிந்ததும் கோவிலின் அர்ச்சகர் வீட்டுக்குப் போய் விட்டார். நீட்டிக்கொண்டிருந்த திரி நேரம் கழிந்து எரிந்துவிட்டதால் தீபம் மங்கத் தொடங்கியது. விளக்கின் நல்லெண்ணெய் வாசத்தால் கவரப்பட்ட பெருச்சாளி ஒன்று சிதறிய எண்ணையை சுவைக்கும்போது அதன் உடல்பட்டு அதனையறியாமல் திரி தூண்டி விடப்பட்டது. திரியைத் தூண்டி விளக்கின் ஒளி அதிகமாக ஏற்பட வழி செய்ததால் அடுத்த பிறவியில் அந்த எலி மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

ஒரு ராத்திரையன்னைக்கு அனைய இருந்த விளக்கை தூண்டிவிட்டதுக்கே இப்படி ஒரு புண்ணியம்னு சொன்னா…. சிவராத்திரியன்னைக்கு சிவன் கோவிலை கூட்டி பெருக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் பண்ணினா எவ்வளவு புண்ணியம்னு யோசிச்சி பாருங்க.

சிவராத்திரியன்று தெரிஞ்சு செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் நிச்சயம் என்பதையே மேற்கண்ட கதை நமக்குக் கூறுகின்றன. இந்தக் கதைகள் சிவ ரகசிய காண்டத்திலும் அருணாசல புராணத்திலும் இருக்கிறது.

உழவாரப்பணியின் மேன்மையை உணர்த்திவிட இதைவிட சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியுமா?

உழவாரப்பணி மூலம் இறைவன் நமக்கு கடனாளியாகிவிடுகிறான்

ஒரு நிமிஷம் நீங்க யோசிச்சி பாருங்க… உங்க வீட்டுக்கு யாராச்சும் வந்து இந்த மாதிரி கூட்டி, பெருக்கி, குப்பைகளை அள்ளி போட்டு சுத்தம் செய்ற வேலையை செஞ்சிட்டு போனா அவங்களை சும்மா அனுப்புவீங்களா? ஏதாவது கூலி கொடுத்து தானே அனுப்புவீங்க? அப்படி கொடுக்கலேன்னா என்ன ஆகும்? நீங்க அவங்களுக்கு கடனாளி ஆகிவிடுகிறீர்கள். உழைப்புக்கு கூலி கொடுக்காதபோது உழைத்தவர்களுக்கு நாம் கடனாளியாகிவிடுகிறோம். அது போல தான் இந்த உழவாரப்பணியும். இதன் மூலம் ஆண்டவனை நாம் கடனாளியாக்கிவிடுகிறோம். நிச்சயம் அவன் நமக்கு ஏதேனும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறான். HE IS INDEBTED TO US. நிச்சயம் அவன் கடனாளியாக இருக்க விரும்பமாட்டான்.

இது போன்ற உழவாரப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் பல நன்மைகளை நாம் செய்கிறோம். ஒருவர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி + பணத்தை சேர்த்தால் மட்டும் போதாது. இது போன்ற செயல்கள் மூலம் புண்ணியத்தை சேர்க்கவேண்டும். அவர்களின் நல்வாழ்வுக்கு அதுவே ஆதாரம். வரவிருக்கும் பல ஆபத்துக்களிலிருந்து இந்த பணி காப்பாற்றும். மேலும் உழவாரப்பணி என்பது சேவை மட்டுமல்ல நமது கடமைகளுள் ஒன்று என்றே நான் கருதுகிறேன். கடமைக்கும் கூலி கொடுக்க அவன் தயாராகவே இருக்கிறான். பயன்படுத்தி பலனடையவேண்டியது நம் கைகளில் இருக்கிறது.
…………………………………………………………………………………..

* இனி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை நம் தளம் சார்பாக தொன்மையான கோவில்களில் உழவாரப்பணி நடைபெறும். அவரவர் சௌகரியப்படி தாங்கள் விரும்பும் போது வரலாம். ஞாயிறு காலை 6.30 to 12.00 வரையே இந்த பணி இருக்கும். விரும்புகிறவர்கள் ‘TEMPLE CLEANING VOLUNTEER’ என்று தங்கள் பெயருடன் சப்ஜெக்டில் டைப் செய்து தங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் உங்கள் மொபைல் எண்ணுடன் எனக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உழவாரப்பணி செல்லும்போது முன்னதாக உங்களுக்கு தகவல் தரப்படும். (அல்லது) எனக்கு தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணுடன் Temple Cleaning Volunteer என்று டைப் செய்து எனக்கு 9840169215 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். விரைவில் சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களிலும் இந்த பணி நடைபெறவிருக்கிறது. ஆகையால் மற்ற மாவட்டத்தினரும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

* பிற மாவட்டத்தினர் சென்னையில் நடைபெறும் நமது உழவாரப்பனிக்கு வந்திருந்து சேவைகள் செய்ய விரும்பினாலும் தொடர்புகொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை  அரை நாளுக்குள் முடிந்துவிடும் என்பதால் அவர்கள் சென்னையில் மற்ற பணிகளை மதியத்துக்கு மேல் நிறைவேற்றிக்கொள்ளலாம.

………………………………………………………………………
அடுத்து….

கோவில் பணியார்களின் சிலரின் நெகிழ வைக்கும் சேவை + நாம் அவர்களை கௌரவித்தது!
………………………………………………………………………

14 thoughts on “மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

  1. நம்ம மக்கள் கோவிலுக்கு சென்றால் எதையாவது சாப்பிடுவது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. கடவுளை தொழுவதற்கும் அமைதியாக உட்கார்ந்து தியானிப்பதற்கும் கோவிலுக்கு போனால் இவ்வளவு குப்பைகளை நாம் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. கோவிலுக்கு செல்வதே பிக்னிக் போல் ஆகிவிட்டது. பின் எப்படி சுத்தம் இருக்கும் ஆன்மிகம் தழைக்கும். முதலில் Self Discipline, அப்புறம்தான் Spirituality. அதனால்தானே குளித்துவிட்டு சுத்தமாக கோவிலுக்கு செல்கிறோம். நாம் மட்டும் சுத்தமாக இருந்துவிட்டு கோவிலை அசுத்தப்படுத்துவது மிகவும் அநாகரீகமான செயல். ஒரு சில பெரிய கோயில்களில் சிலர் குடும்பம் குடும்பமாக வந்து தின்பண்ட மூட்டையை பிரித்து சாப்பிட்டு பிரகாரத்தை அசுத்தம் செய்வதை நாம் பார்த்திருப்போம். இதைவிட ஆன்மீகத்தை கேவலபடுத்தும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த மனோநிலை மாறும்போது நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுபோல் இறைவனின் வீடாகிய கோயிலையும் சுத்தமாக வைப்பது நம் கடமை.

    1. வாழ்த்துக்கள். இறையருள் தந்த இனிய இன்பம் தொடரட்டும் ,மனங்கள் எல்லாம் மலரட்டும் . சுந்தர் மற்றும் பாபா ராம் உங்கள் கருத்துக்களில் லேசான கோபம் தெரிகிறது . ஆனால் அது வேண்டாம். 100 சுந்தர்கள் போதும் இந்த தேசத்தையே கூட மாற்றி விடலாம் .நம் தேசத்தின் இன்றைய நிலைக்கு இதுவும் ஒரு காரணம் .
      புனிதமான ஆலயங்களை ஏ இப்படி செய்கிற போது …..? நம்புவோம் நம்மால் முடியும் என்று பணிகள் தொடர்வோம்

      1. என்ன சார் செய்வது… பாரதி சொன்னது போல…. நெஞ்சு பொறுக்குதில்லையே…

        – சுந்தர்

  2. தங்களின் மேன்மையான பணியில் நானும் நமது தல வாசகர்களும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் .

    நன்றி

    மனோகரன்

  3. You had planned for one temple, But LORD SHIVA made you do for two temples..dis itself shows that u scored centum in ur exams anna:) else how will the ALMIGHTY give another chance?:)

    For a very long time I was thinking/wondering how to get rid of our past karma-because that is what decides what u are now or what happens to u now!!
    Now found the answer through our RIGHTMANTRA.com..its simple but very powerfull..!!

    If we engage ourselves whole heartedly in doing service to HIM..that is enough..no other method or form of devotion will equal it.

    As u said people must start thinking -which we generally don’t do..If we start to think we get solutions to all d problems!!
    Only GOD can save these irresponsible people and move them from the Tamasic state of mind to Rajasic!!For that to happen concerned individual’s effort is a must.

    There is a undescribable sense /feeling for the past 2 days–think it is because of our work:) It must be!!

    Waiting for the next chance!!

    Regards
    R.HariHaraSudan.
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL.”

  4. நம் மக்கள் பல பேர் அறியாமையால் செய்யும் தவறு தான் பல,ஒரு சில பேர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழி கேட்டுவிட்டு சிவனுடைய பிரசாத விபூதிகூட எடுத்து போக கூடாது என்று தவறான எண்ணங்களை கொண்டு ஆங்காங்கே தூண்களில் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். அவர்களுக்கு முதலில் புரிய வைத்துவிட்டாலே பாதி வேலை முடியும்

    சிவன் சொத்து குல நாசம் என்பது அவனுடைய சொத்துக்களை அபகரிப்பதை தான் குறிக்கிறதே தவிர அவனுடைய விபூதி குங்குமப் பிரசாதத்தை அல்ல என்று புரிய வைக்க வேண்டும்.

  5. உண்மையான சிவத்தொண்டனை நேரில் பார்த்து ஆசி பெற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது உடல் நலமின்மையால் உங்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது வீட்டின் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு என்னால் முயன்ற பொருட்களையும் சிறு உதவிகளையும் செய்தேன்.
    தென்னாடுடைய சிவனே போற்றி.,

    1. தாங்கள் எம் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி சார். ஆனால் நான் சிவ பக்தன் என்று சொல்லிக்கொள்வதைவிட சிவ பக்தர்களுக்கு சேவை செய்யும் ஒரு சிறு வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்ளவே தகுதி பெற்றிருக்கிறேன்.

      இந்த இரண்டு மூன்று நாட்களில் உண்மையான சிவபக்தி என்றால் என்ன? சிவத் தொண்டு என்றால் என்ன? என்பது குறித்து பல விஷயங்களை தெரிந்துகொண்டதால் இவ்வாறு கூறுகிறேன். அடுத்து வரப்போகும் பதிவை பார்த்தால் அனைவருக்கும் புரியும்.

      – சுந்தர்

  6. உங்கள் வீட்டுக்குள் எவராவது நினைத்தவுடன் வந்து வேலை செய்ய முடியுமா? அல்லது நீங்கள் தான் அனுமதிப்பீர்களா?

    நாம் நினைத்தவுடன் ஒரு கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்து விட முடியாது , அதற்கு ஆண்டவன் அருள் வேண்டும்.

    Rightmantra.com தளம் வழியாக நான் இரண்டு மணி நேரம் அன்று சுந்தர் சார் அவர்களுடன் பணி புரிய வாய்ப்பு வந்தது . இத் தளம் நண்பர்கள் அனைவரும் அடுத்த உழவாரப்பணியில் கலந்துகொண்டு இறைவன் அருள் பெற வேண்டுகிறேன்.

    – விவேக் ராம்

  7. நானும் கோவிலுக்கு சென்று வந்தேன் . இருந்தாலும் உங்களுடன் கலந்து கொள்ள முடியவில்லையே என்கின்ற வருத்தம் இரண்டு நாளாக மனதை போட்டு அரிக்கிறது. விவேக் ராம் சொன்னது போல் எனக்கு ஆண்டவன் அருள் இல்லை போலும்.

    1. நீங்க வேற மேடம். நானே ஏதோ அரைகுறையா விரதம் இருந்தோமேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நீங்கல்லாம் கரெக்டா இருக்கிற ஆளு. நம்ம கூட வந்து இருந்துட்டு அப்புறம் என்னைய ஏசுறதுக்கா? (இது தெரிஞ்சி தான் நண்பர்கள் எல்லாம் சாயந்திரம் கழண்டுகிட்டாங்க போல!).

      அடுத்த தடவை நீங்க போற கோவிலுக்கு வேணா வர்ரேன். அப்படியாவது முழுசா இருக்க முடியுதான்னு பார்க்குறேன்.

      – சுந்தர்

  8. காலையில் செய்த தொண்டின் காரணமாக, மாலையில் வடபழனியில் இருக்கும் சிவன் கோவிலுக்கு என் குடும்பத்துடன் செல்லும்போது என் குழந்தைக்கும் ஆலயத்தின் தூய்மை பற்றி விளக்கி, தொன்னையை எடுத்து குப்பைதொட்டியில் போடும்படி செய்தேன்..
    .
    முழுமையக இல்லாவிட்டாலும் சிறதளவு என் கடைமையை செய்ய பனித்த உங்களுக்கு நன்றிகள்…
    .
    மாரீஸ் கண்ணன்

  9. உங்கள் தொண்டு மேலும் மேலும் நம் நாட்டுக்கு தேவை. என்னால் பங்கு பெற முடிவில்லை என்று வருத்தமாக உள்ளது. Hats of You & our Friends

    KannanV

  10. வாழ்த்துக்கள் சுந்தர். தற்போதுதான் படித்தேன். மிகப் பெரிய பணியை மிகச் சாதாரணமாக செய்து இருக்கிறீர்கள். தொடரட்டும்.

Leave a Reply to Vivek Raam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *