Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

print
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது.

சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி  திருப்பின. நான் ‘என்னை’ அறியச் செய்தன.

நரசிம்மர் எனக்கு தந்தை போல. ஆனால் சிவபெருமான் என் உயிர் நண்பர். அவரிடம் நான் பேசாத விஷயம் கிடையாது. என்ன… இறைவனை நண்பனாக பாவித்து பக்தியா? பெரிய சுந்தரர்னு நினைப்போ என்று சிலர் முனுமுனுப்பது கேட்கிறது. என்ன செய்றது என் பேர் ராசி அப்படி. (தெரியாதவர்களுக்கு: சிவபெருமானை நண்பனாக கருதி பக்தி செலுத்தியவர் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர்!). அப்படி ஆண்டவனை நண்பனா பாவிச்சாலாவது நாம ஒழுங்கா இருக்கமாட்டோமான்னு நம்ம வாழ்க்கை நல்லா இருக்காதான்னு ஒரு நப்பாசை தான். வேற ஒன்னுமில்லீங்க!

இரண்டாண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் குறித்தும் சிவாலயங்கள் குறித்தும் இணையத்தில் நான் தேடியது தான் என் வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. தேடலின் பயனாக திரு.நாராயணசாமி அவர்களின் Shivatemples.com தளத்தையும் நண்பர் ரிஷியின் Livingextra.com தளத்தையும் தற்செயலாக பார்க்க நேர்ந்தது.

சென்ற வருடம் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இரவு முழுவதும் சிவாலயத்தில் தங்கியிருந்து, மூன்று கால பூஜைகளையும் கண்டு இறைவனை தரிசித்து, சிவராத்திரி பொழுதை கழித்தது உண்மையில் நான் செய்த பாக்கியம். திருவிளையாடற் புராணம், சிவமகா புராணம் உள்ளிட்ட நூல்களை படித்து ரசித்தேன்.

ஆண்கள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என பிரகாரத்தில் ஆங்காங்கே அமர்ந்து தேவாரம், திருவாசகம் முதலியவற்றை பாராயணம் செய்வதும் பாடல்கள் பாடுவதும் என்று நான் விரதம் அனுஷ்டித்த கோவில் களைகட்டியது. பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என மடப்பள்ளியில் அடிக்கடி பிரசாதம் ஒரு தொன்னையில் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

இம்முறை சிவராத்திரி அன்று திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் செல்வேன் என்று கருதுகிறேன். (இந்தக் கோவிலையும் அதோட அழகையும் பார்த்துகிட்டு இருந்தாலே போதுங்க. சிவராத்திரி விரதத்துக்கு சமமுங்க அது. அப்படி ஒரு அழகு. சான்னித்தியம்.)

“சிவராத்திரி விரதம் இருந்ததற்கு என்ன பலன்?” அப்படின்னு கேட்டீங்கன்னா… அடடா… அது என் கடமைங்க. (அதைக் கூட நான் தாமதமாத் தான் செஞ்சேன்.) கடமையை செய்றதுக்கு போய் பலனை எதிர்பார்க்கலாமா?

மற்றபடி அவன் நிறைய கொடுக்குறதுக்கு தயாராத் தான் இருக்கான். எனக்கு தான் பெறுவதற்குரிய பக்குவம் இல்லை. அது வரும்போது பார்க்கலாம்.

ஒ.கே. விஷயத்துக்கு வர்றேன்!

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

எல்லா விரதங்களை போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் உண்டு. மற்ற விரதங்களை போல இது கிடையாது. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது. சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.

சிவராத்திரிக்கு முதல் நாள் (09/03/2013 சனிக்கிழமை) ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு (சனிக்கிழமை இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் ஞாயிறு (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.

இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.

சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான (09/03/2013) திரயோதசி அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா ? அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் ?

அப்படி கேளுங்க…..

வேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா? எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.

மற்றபடி சிவராத்திரியன்று :

சிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம். தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.

போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.

அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ அல்லது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று உச்சரித்துக்கொண்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.

………………………………………………………………………………………….
சிவராத்திரி நெருங்கும் இந்த வேளையில் சிவராத்திரி விரதத்தை விட, மேன்மையான ஒன்றை சில மணி நேரங்கள் மட்டுமே நீங்கள் செலவு செய்து அளப்பரிய பலன்களை அள்ளிக்கொள்ள முடியும். தெரியுமா? அது என்ன??

முக்கியமான ஊர்களுக்கு, கோவில்களுக்கு, தூரதேசங்களுக்கு சென்று புகழ்பெற்ற கோவில்களில் சிவனை சிவராத்திரி அன்று தரிசித்துவிடவேண்டும் என்று பிளான் செய்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் இதை!!

விபரங்கள் அடுத்து வரும் சிவராத்திரி ஸ்பெஷல் 2 ல்

 

14 thoughts on “சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

  1. Hi,
    Nice to read this article. last year i tried to make this and dropped on the last minute. Now your article engarage me do to. But i am living in Norway where difficilt to visit a temple. Can you tell us(hope may help more people) how we can do tis fasting?

    Thank you for the help

    Cheers!
    Vivek

    1. நல்ல கேள்வி. உங்களைப் போன்றவர்களும் பயன்பெறும் வகையில் ஒரு கட்டுரை விரைவில் அளிக்கிறேன். (அநேகமாக சிவராத்திரி ஸ்பெஷல் 3)

      நன்றி….!

      – சுந்தர்

  2. நான் வருடா வருடம் விரதம் இருந்து இரண்டு காலம் பூஜை சிவன் சன்னதியில் இருப்பேன் . இந்த வருடம் நான்கு காலமும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு உள்ளேன். எல்லாம் சிவ மயம்.
    ஓம் சிவ சிவ ஓம். உங்களது தளம் கடல் தாண்டி பரவி உள்ளதை நினைத்து பெருமையாக உள்ளது. உங்களுக்கு திட வலிமையும் ,மன வலிமையும் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    வாழக …….. வளமுடன்.

  3. தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!
    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் !!!

  4. சுந்தர்ஜி, ரொம்ப ரொம்ப நன்றி, சிவராத்திரிக்கு முதல் நாள் ஏன் விரதம் இருக்கணும், நல்ல விளக்கம்,
    ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் ஓம் நமச்சிவாய

  5. நான் இதுவரை சிவராத்திரி விரதம் இருந்தது இல்லை இந்த பதிவை படிக்கும் போது இந்த வருடம் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

  6. நல்ல பதிவு.. சிவராத்திரி நெருங்கும் வேளையில் தங்களின் பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். நார்வேயில் வசிப்பவர் தங்கள் பதிவை படித்து இருப்பது தங்களின் சீரான வளர்ச்சியை காட்டுகிறது. சந்தோசமா நண்பரே.

    மேலும் சிவராத்திரி பற்றிய விவரங்கள் அறிய ஆவல்..சிவனின் சித்தம் இருந்தால் தங்களை வேதபுரிஸ்வரர் சன்னதியில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

    1. நார்வேயில் இருப்பவரும் இந்த பதிவு படித்து கமெண்ட் இடுவது இந்த தளத்தின் வளர்ச்சியினால் அல்ல. பார் முழுதும் பரவியிருக்கும் ஈசனின் புகழினால். அவனை அடைய வழிகாட்டும் ஆன்மீகத்தின் வீச்சினால்.

      மேலும் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முத்தமிழ் சங்கத்தின் முதல்வனுக்கு பக்தர்கள் இருப்பதில் வியப்பென்ன?

      திருச்சிற்றம்பலம்

      – சுந்தர்

  7. இது வரை நான் சிவராத்திரியை பற்றி தெரிந்து கொண்டது இல்லை! உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஜி!! நான் சிவராத்திரி அன்று ஒவ்வொரு முறையும் விரதம் இருந்திருக்கிறேன்!! எங்க ஊர்ல இரவு முழுவதும் ஒரே சினிமா டிக்கெட்டில் 3 திரை படங்கள்!! சிவ ராத்திரி சிறப்பு சலுகை என்று போஸ்டர் இருக்கும்!! ஆஹா ஒரே டிக்கெட்டில் 3 படமா!! சிவனின் கருணையே கருணை என்று வேண்டி கொள்வேன் 🙂 🙂 🙂 பின்பு விடியும் வரை படம் பார்த்து கலைத்து பகலில் நன்றாக தூங்குவேன் !! அவ்வளவு தான் சிவனின் அருள் கிடைத்தது என்று சந்தோஷமாக இருப்பேன்!! இதுவே என் சிவராத்திரி பக்தி 🙂 அது எவ்வளவு முட்டாள்தனம் என்று இப்போது புரிந்து விட்டது 🙁 காரணம் என் அறியாமை மட்டும் அல்ல; இந்த சமூகமும் தான்!! நான் கடந்த சில ஆண்டுகளாக இரவு பணியில் ஈடுபடுவதால் தூக்கமின்மை என்பது எனக்கு கொஞ்சம் கூட கஷ்டம் இல்லை!! எப்படியோ facebook இல் இருப்பதற்கு பதில் கோவிலில் இருக்க போகிறேன்!! சாப்பிடாமல் இருப்பது தான் மிக சிரமம்!!! பாப்போம்!!?!

  8. சிவராத்திரிக்கு விரதம் இருக்கன்ணும்னு தெரியும். ஆனா, இவ்வளவு விவரமா தெரியாது. இந்த பதிவை படிக்கும் போது இந்த வருடம் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கும் ஆண்டவன் அருள் இருந்தால், கண்டிப்பாக நடக்கும். சிவராத்திரி விரதம் முடிச்சுட்டு, என்னோட அனுபவத்தை உங்க கூட பகிர்ந்துக்கிறேன். மிக்க நன்றி.

  9. நண்பர் மனோஜ் குறிப்பிட்டதுபோல் பலபேருக்கு சிவராத்திரி என்பது இரவெல்லாம் கண்விழித்து சினிமா பார்பதுதான். என்ன செய்வது, இங்கு எல்லாமே சினிமா பார்த்து வளர்ந்த சராசரி மனிதர்கள்தானே. பக்தி படங்கள் பார்க்கலாமே.

    மன்னிக்கவும், நான் சிவராத்திரி விரதம் பற்றி பேசாமல் வேறு எங்கோ போய்விட்டேன். நானும் இதுவரையில் சிவராத்திரி விரதம் இருந்ததில்லை. இந்த பதிவை படித்தபிறகு விரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது. இந்தமாதிரி சத்விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கும் அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தின் தேடுதலுக்கு தூண்டுகோலாக இருப்பதற்கும் சுந்தருக்கு நன்றி.

  10. சிவராத்திரி விரதம் பற்றிய அருமையான செய்திகளை தொகுத்துகொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. இதை மற்ற உறவினர்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுதுகிறேன்

  11. நமச்சிவாய வாழ்க,,,,,,,,
    நல்ல ஒரு அருமையான விளக்கம் கிடைத்ததற்கு மிகவும் நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *