Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 23, 2024
Please specify the group
Home > Featured > விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

print

புண்ணிய ஷேத்ரங்களுக்கும் திருத்தலங்களுக்கும் வயதாகி பேரன் பேத்திகள் எடுத்த பின்பு தான் செல்லவேண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. இதைவிட மிகப் பெரிய அபத்தம் வேறு எதுவும் இல்லை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே திருத்தலங்களுக்கு சென்று புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைக்கும்போதே சேமிப்பு கணக்கில் பணம் சேர்ப்பது போலத் தான் இது. அது பணம். இது புண்ணியம். புண்ணியம் சேர்க்க பல மார்க்கங்கள் இருந்தாலும் திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து சேர்க்கும் புண்ணியமானது தனித்தன்மை மிக்கது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர் பிள்ளைகள் என அனைவருக்கும் ரட்சை போன்றது அது.

அப்படிப்பட்ட புண்ணிய ஷேத்ரங்களில் மிகவும் முக்கியமானது ராமேஸ்வரம் ஆகும். வாழ்வில் அனைவரும் அவசியம் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய தலம் ராமேஸ்வரம்.

ராமேஸ்வரத்தில் பார்க்கவேண்டிய இடங்கள் எத்தனையோ இருக்கிறது. அவற்றுள் மிக முக்கியமான இடம் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கும் கோதண்டராமர் கோவில்.

இது ராமேஸ்வரத்தின் தெற்கில் கடைசியாக அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புரட்டிப்போட்ட புயலில் எஞ்சி நிற்பது இந்தக் கோவில் மட்டுமே. இப்போதும் இந்த தலத்தை சுற்றிலும் கடல்நீர் உண்டு. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடாவிற்கு நடுவே இந்த தீவு அமைந்துள்ளது.
இந்த கோவில் செல்லும் வழியே ரம்மியமான ஒன்று. தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் (BACKWATERS) பலவித அயல்நாட்டு பறவைகளை பார்க்கமுடியும்.

சமீபத்திய பதிவு ஒன்றில் கூறியபடி விபிஷீணன் ராமரிடம் சரணாகதி பெற்ற பின்பு அவரை உடனே லக்ஷ்மணனை கொண்டு கடல்நீரால் “இன்று முதல் நீ தான் இலங்கை வேந்தன்” என்று கூறி பட்டாபிஷேகம் செய்த இடம் இது.

“ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகைகூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும் நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்”.

இராமபிரான் விபீஷணனை கருணையோடு நோக்கி, விபீஷணா! இந்த ஈரேழு உலகங்களும், எனது பெயரும் வாழுகின்ற நாள் வரையிலும், அரக்கர்கள் வாழும் கடல் சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன், என்று திருவாய்மலர்ந்தருளினான்.

இராமனது சொற்களைக் கேட்ட உலகத்து உயிர்கள் எல்லாம் “வாழ்ந்தோம்” என்று ஆரவாரம் செய்தன. அது இராமனது அருளுக்காகவா? அன்றி அவனால் விபீஷணன் பெறப்போகும் அறத்தோடு கூடிய நல்வாழ்க்கைக்காகவா?

“அடியேன் உய்ந்தேன்” என்று விபீஷணன் இராமனை வணங்கினான். உடனே இராமன் இலக்குவனை நோக்கி “தம்பி! தூய்மையான இந்த விபீஷணனுக்கு, இலங்கை வேந்தனாக முடிசூட்டுவாயாக!” எனப் பணித்தான்.

விபீஷணன் இராமபிரானிடம் “ஐயனே! அளவற்ற பெருமையுடைய இலங்கைச் செல்வத்தை எனக்கு அளித்தாய். ஆனால் நீ எனக்கு பொன்னால் ஆன கிரீடத்துக்குப் பதிலாக, இராவணனுக்குத் தம்பியாகப் பிறந்த என்னுடைய பாவம் தீரும்படி, பரதனுக்குச் சூட்டிய உனது பாதுகையாகிய திருவடியையே சூட்டுவாயாக!” என்றான்.

விபீஷணனுடைய அன்பையும் பக்தியையும் பாராட்டி இராமபிரான் சொல்லுகிறார்:

“குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை”.

இராமனுடைய கருணையால் தம்பி இலக்குவனை தனக்கு முடிசூட்ட பணித்தமைக்கும், தன்னையும் தன் தம்பியருள் ஒருவன் என்று சொல்லியதைக் கேட்டு விபீஷணன் என்புருக உள்ளம் கசிய, அவனிடம் சொல்லுகிறான்.

“நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையா நின்றாய்
அடிமையில் சிறந்தேன்! என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்”.

இப்படிச் சொல்லிக் கொண்டு, இராமபிரானின் பாதுகைகளைத் தன் தலையில் வைத்துக் கொண்டான். கூடியிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். விபீஷணனை வாழ்த்தினார்கள். விபீஷணன் முடிசூட்டிக் கொண்ட காட்சி கண்டு ஏழு கடல்களும் மண்ணும், விண்ணும், முரசங்களும், சங்குகளும் ஆரவாரம் செய்து வாழ்த்தொலி எழுப்பின.

இப்படி விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இலக்குவன் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் படைகள் தங்கியிருந்த இடங்களைக் காண்பிக்க அழைத்துச் சென்றான். விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு அவனை இலக்குவன் நகர்வலம் வந்து, படைகளை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் அவனுக்கு ஒரு தனி வீடு ஒதுக்கப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டான்.

ராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி நிற்கிறார். ராமர், லக்ஷம்னர், சீதாப்பிராட்டியுடன் காணப்படும் இக்கோவிலில் விபீஷணர் கிரீடத்துடன் காணப்படுகிறார். இது அபூர்வமான காட்சியாகும். ராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, “விபீஷணாழ்வார்’ என்கின்றனர் வைணவத்தில்.

அளவில் சிறிய இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் மட்டும் உள்ளனர்.

கோவிலில் சுவர்களில் ராமாயணம் மற்றும் விபீஷண சரணாகதி தொடர்புடைய பல சித்திரங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் அத்தனை அற்புதம். இதைப் பார்க்கவே நாம் இந்த கோவிலுக்கு சென்றோம்.

இந்த கோவில் சுமார் 500 – 1000 ஆண்டுகள் வரை பழமையானது என்று கூறப்படுகிறது. சிக்காகோவில் இருந்து திரும்பிய சுவாமி விவேகானந்தர் சிறிது காலம் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தார். (அந்த இடத்தையும் நான் சென்று பார்த்தோம்!) அப்போது அவர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது.

குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம்.

தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இந்தக் கோவில் காலை 7.00 முதல் மாலை 6.00 வரைதான் திறந்திருக்கும்.

விபீஷணர் பட்டாபிஷேகம், ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது. வங்காள விரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர்.

ஆலயத்தில் பட்டராக இருக்கும் சூரியநாராயணன் என்பவரை நமது தளம் சார்பாக கௌரவிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. தல வரலாற்றை நமக்கு விளக்கியவர் பல சந்தேகங்களுக்கு விடை அளித்தார். அவருடன் செலவிட்ட நேரம் மறக்கமுடியாத ஒன்று என்றால் மிகையாகாது.

முகவரி : ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயம், இராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலை,  இராமேஸ்வரம் -623 526.

*********************************************************************

உங்கள் உதவியை எதிர்நோக்கி… 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check :

‘அபாயம்’ என்று வந்தவனுக்கு கிடைத்த ‘அபயம்’ – உங்களுக்கும் கிடைக்கும்!!

ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

==========================================================

[END]

One thought on “விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

  1. படங்கள் கண் கொள்ளா கட்சியாக உள்ளன. அற்புதமான தகவல்களுடன், அழகிய கடல் பின்னணியில் தெரிய, ராமாயண வரலாற்றுப் படங்களை பார்க்கப் பார்க்க, நேரில் தரிசனம் செய்தாற்போன்ற பரவசம் கிடைத்தது..

    ஓர் சொல், ஓர் வில், ஓர் இல் என்று வாழ்ந்த இராமபிரான்;
    “எப்படிப்பட்டவர் ஆனாலும் சரணம் என்று வந்தோர்க்கு அடைக்கலம் தந்தே தீருவேன். இது என் விரதம்” – நினைக்குந்தோறும் நெஞ்சம் உருகியது.. அவன் திருவடிகளில் சரண் அடைவோம்.

Leave a Reply to Parthasarathy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *