Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2

சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2

print
சென்னை மயிலையில் திருவள்ளுவர் அவதரித்த இடத்தில் அவருக்கென்று உள்ள மிகப் பழமையான கோவில் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். கோவிலின் அமைப்பு மற்றும் இதர விஷயங்களை அதில் விளக்கியிருந்தோம்.

பார்ப்பதற்கு சற்று சாதாரணமாக தெரியும் இந்த கோவிலில் அதிசயங்கள் பல உள்ளடங்கியிருக்கிறது. ஆலய வளாகத்துக்கு உள்ளே கால் வைத்ததுமே ஒரு வித வைப்ரேஷனை உணர முடிகிறது. பரபரப்பான சென்னையின் மையப்பகுதியில் அதுவும் மயிலை போன்ற ஒரு ஜனத்திரள் மிக்க பகுதில் இப்படி அமைதி தவழும் சோலை போன்ற கோவில் இருப்பதே அதுவும் திருவள்ளுவருக்கு இருப்பது பலருக்கு தெரியாது.

அமைதி தவழும் சூழல், நிழல் தரும் மரங்கள், ஆன்மாவை தூண்டும் ஒரு சான்னித்யம், அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற ஒரு குளிர்ந்த தட்ப வெப்பம், இப்படி ஒரு முறை சென்றால் திரும்ப திரும்ப செல்ல தூண்டும் ஒரு இடம் இந்த வள்ளுவர் அவதாரத் திருத்தலம்.

பள்ளிகளில் பாடநூல்களிலும் இக் கோயிலைப் பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற வேண்டும். தமிழக மக்கள், தமிழறிஞர்கள், இசை, நடனக் கலைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் வள்ளுவருக்கு பிரம்மாண்ட விழா நடத்த அரசு நடவடிக்கை என்பதே மக்களின் விருப்பம். சென்னை மயிலையில் பிறந்த வள்ளுவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இதை அரசு நிறைவேற்றுமா?

கோவிலில் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் மற்றும் இதர சிறப்புக்கள் பற்றி பார்ப்போம்.

கோவிலின் வரலாறு மற்றும் இதர விஷயங்களை பற்றி ஆறுமுகம் குருக்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், மூலஸ்தானத்தின் பிரதான விக்ரஹம் முன்பாக வள்ளுவர்-வாசுகி உற்சவ விக்ரகங்கள் காணப்பட்டன.

அது பற்றி குறிப்பிடும்போது “அன்னை வாசுகியின் இந்த  உற்சவ மூர்த்தத்தில் அதிசயம் ஒன்று உள்ளது தெரியுமா?” என்று கூறி அன்னையின் மேல் நெற்றியை காண்பித்தார். அங்கே சிறிய சிவலிங்க உருவம் ஒன்று தென்பட்டது. பார்த்த மாத்திரத்தில் கன்னத்தில் போட்டுக்கொண்டோம். அவர் பாட்டனார் காலத்தில் 70 ஆண்டுகளுக்கும் முன்பு செய்யப்பட்ட உற்சவர் இதுவென்றும் கூறினார் குருக்கள். திருவள்ளுவரே ஒரு சித்தர் தானே. அவரது துணைவியின் நெற்றியில் சிவலிங்கம் இருப்பதில் வியப்பென்ன? (சிவபெருமானோ சித்தர்களுக்கெல்லாம் குரு தானே!)

“நிச்சயம் காரணமின்றி அவர்கள் அன்னையின் நெற்றியில் சிவலிங்கத்தை பொறித்திருக்க வாய்ப்பில்லை… ஏதேனும் உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும்!” என்றேன்.

“திருவள்ளுவரின் நெற்றியில் கூட சிவலிங்க உருவம் இருப்பதாக ஐதீகம்….சடை அதை மறைத்துக்கொண்டுள்ளது” என்று ஒரு தகவலை சொன்னார்.

திருவள்ளுவரை தரிசித்த பின்னர் அருகிலேயே இருக்கும் வாசுகி அன்னையின் சன்னதிக்கு சென்றோம். வாசுகி அன்னை மாங்காடு காமாட்சி அன்னையை போன்ற ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இங்கும் அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

வாசுகி அன்னையை தரிசிக்க அருவ வடிவில் வரும் சித்தர்கள்

வாசுகி அன்னையை தரிசித்து அவரது ஆசி பெற சித்தர்கள் பலர் அருவ வடிவில் இங்கு வந்து செல்வார்களாம். அவர்கள் பாட்டனார் இது பற்றி அடிக்கடி கூறியிருக்கிறாராம். மேலும் பலப் பல தகவல்களை சொல்லிக்கொண்டு வந்தார் ஆறுமுகக் குருக்களும் அவரது மகன் பாலகுமாரும்.

“மேற்கூறிய விபரங்கள் அனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இந்நேரம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்?” என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

“உண்மை தான்…. எங்கள் பாட்டனார் காலத்தில் இருந்த பல விபரங்கள் தற்போது இல்லை. இருப்பதை ஏதோ கொஞ்சம் கட்டி காத்து வந்ததாலேயே இவ்வளவு விஷயம் தெரிகிறது” என்றார்.

“அது தான் வள்ளுவரே உங்களை தேர்ந்தெடுத்து இங்கே வரவழைத்திருக்கிறாரே… நீங்கள் இணையத்தில் பதிவு செய்து வைக்கப்போவதும் ஒரு வகையில் காலத்தால் அழியாத ஆவணம் தானே…?” என்றார் ஆறுமுகம் குருக்கள்.

“என் பாக்கியம்” என்றேன்.

வாசுகி அன்னையை தரிசித்து குங்குமப் பிரசாதம் பெற்ற பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்தோம்.

கோவில் முழுக்க சுவற்றில் திருக்குறள் எழுதப்பட்டிருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திருக்குறளை படித்து வருகிறேன். பல குறள்களின் அர்த்தத்தை கண்டு சிலிர்த்துப் போயிருக்கிறேன்.  பல குறள்களை அவ்வப்போது எனது எழுத்துக்களில் பயன்படுத்தி வந்தாலும் சில குறள்கள் புதிதாக இருந்தன.

ஏற்கனவே படித்திருந்தாலும் இந்த கோவிலில் அவற்றை காணும்போது புதிது போல தோன்றின. மற்றொரு முறை அதன் பொருளை படித்து உணரவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது.

“அட இது நல்லாயிருக்கே… இதற்கு என்ன பொருள்? இந்த குறளை
படிச்ச ஞாபகம் இருக்கே … என்ன பொருள் இதற்கு ?” இப்படி பல சந்தேகங்கள் தோன்றின. எனவே இந்த கோவிலுக்கு செல்பவர்கள அவசியம் திருக்குறள்-தெளிவுரை ஒன்றை கையோடு எடுத்து செல்லவும்.

நவநாத சித்தர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம்

திருவள்ளுவர் கோவிலின் மிகப் பெரிய சிறப்பம்சம் அங்கிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருச்சன்னதி தான். நவநாத சித்தர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கமாம் இது.

அதென்ன நவ நாத சித்தர்கள்?

சித்தர்களில் பல பிரிவினர் உண்டு. அவர்களில் விசேட சிறப்புக்கள் பெற்றவர்கள் தான் இந்த நவநாத சித்தர்கள். அநாதி நாதர், ஆதி நாதர், சடேந்திர நாதர், கோரக்க நாதர், சகோத நாதர், மச்செந்திர  நாதர், சத்ய நாதர், மாதங்க நாதர், வகுளி நாதர் என்பவர்கள் நவ சித்தர்கள்.

இவர்கள் ஸ்தாபித்த லிங்கம் தான் இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் என்று கூறப்படுகிறது. எகாம்பரேஸ்வரருக்கு அருகிலேயே அருள்பாலித்து வருகிறாள் அன்னை காமாட்சி.

இந்த கோவிலில் மூன்று திருக்கல்யாண உற்சவங்கள் மிக மிக விமரிசையாக நடைபெறும்.

ஒன்று : ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்றும் நடைபெறும் வள்ளுவர் வாசுகி திருக்கல்யாண உற்சவம்.

இரண்டு : தை மாதம் வரக்கூடிய சதய நட்சத்திரத்தில் நடைபெறும் ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி திருக்கல்யாணம்

மூன்று : கந்த சஷ்டி அன்று நடைபெறக்கூடிய முருகன் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்.

(இதில் சென்ற பிப்ரவரி 11 – ‘தை’ சதயம் அன்று நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி திருக்கல்யாணத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டோம். பரம்பொருளின் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு பின்னர் திருமண விருந்தை ருசிக்கும் வாய்ப்பு எத்துனை பெரிய பாக்கியம்? அந்த தெய்வீக அனுபவத்தை அடுத்து வரக்கூடிய பதிவுகளில்  பகிர்ந்துகொண்டு உங்களையும் திருமணத்திற்கு மானசீகமாக அழைத்துச் செல்கிறேன்.)

விஷ்ணு, சிவன், பார்வதி – மூவரும் இணைந்து காட்சி தரும் அதிசய விருட்சம்

அடுத்து நாம் வந்த இடம் தல விருட்சம் அமைந்திருக்கும் பகுதி. இந்த கோவிலில் எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது இங்குள்ள சங்கரநாராயண விருட்சம் தான்.

விஷ்ணுவுக்குரிய அத்தி மரம், சிவனுக்குரிய அரசமரம் மற்றும் பார்வதிக்குரிய வேம்பு இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கும் அதிசயம் இங்கு மட்டுமே காணக்கிடைப்பது.


ஆறுமுகம் குருக்கள் இந்த மரத்தின் தாத்பரியம் பற்றி நம்மிடம் விளக்குகையில், பார்வதியின் சகோதரரான மஹா விஷ்ணு தமது தங்கையை சிவபெருமானுக்கு மணமுடித்து தரும் கோலத்தில் இந்த மரம் அமைந்திருப்பதாக கூறினார்.

சற்று உற்றுப் பார்த்தோம். அட ஆமாம் உண்மை தான் என்பது போல… மூன்று மரங்களும் வளர்ந்திருக்கும் அமைப்பு காட்சி தருகிறது.

பொதுவாக இருமரங்கள் சேர்ந்து வளர்வது ஆங்காங்கே காணக்கூடியது தான். அதுவும் திருக்கோவில்களில் அதை சர்வசாதாரணமாக காணலாம்.

ஆனால்…இங்கே அத்தி மரத்தை துளைத்து அதுனுள் சென்று கிளைவிட்டு வளர்ந்திருக்கிறது அரசமரம்…. இது எங்குமே காணக்கிடைக்காத காட்சி. (அரியும் சிவனும் ஒன்னு என்பதற்கு இதை விட பெரிய சாட்சி வேண்டுமா…!)

அருகிலேயே சகோதரரையும் கணவரையும் பிரிய விரும்பாத அன்னை உமையவள் வேம்பாக மாறி காட்சி தருகிறாள்… காண கண் கோடி வேண்டும்.

வேடுவர்கள் பூஜித்த விநாயகர்

அடுத்து பிரகாரத்தை சுற்றி வரும்போது வெண்மை நிற பளிங்கு கல்லால் செய்யப்பட்ட விநாயகர் நம்மை ஈர்க்கிறார். இவர் பெயர் கஜசக்தி விநாயகர். அந்த காலத்தில் இப்பகுதி வனமாக இருந்தபோது இங்கே வசித்த வேடுவர்களும் காட்டுவாசிகளும் வணங்கி வந்த விநாயகராம் இவர். பிற்காலத்தில் வள்ளுவர் நீர் இறைத்ததாக கூறப்படும் கிணற்றில் இது கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டார்கள்.

வள்ளுவர் – வாசுகி வாழ்ந்த எடுத்துக்காட்டு வாழ்க்கை முறை
ஐயன் வள்ளுவரும் அவர் தம் துணைவி அன்னை வாசுகியும் நடத்தி வந்த ‘உதாரண வாழ்க்கை’ குறித்து பல செவி வழி தகவல்கள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முறையான ஆவணங்கள் இல்லை. இருப்பினும் காலம் காலமாக இவை கூறப்பட்டு வருகின்றன.

ஆனால் உலகையே இரண்டடியால அளக்கத் தெரிந்த திருவள்ளுவருக்கு தனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க தெரியாதா? அப்படி ஒரு கணவரை கிடைக்கப்பெற்ற அன்னை வாசுகியும் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்.

இருவர் வாழ்விலும் நடைபெற்ற சில சம்பவங்களை ஆறுமுகம் குருக்கள் நம்மிடம் கூறினார். நாம் இது பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் திருவள்ளுவரின் அவதாரத் திருத்தலத்தில் அவர் கதையை கேட்பது சிறப்பல்லவா? அதுவும் அவருக்கு தினந்தோறும் பூஜை முதலானவற்றை செய்து வரும் ஒரு வேதியர் தன நாவால் கூறக்கேட்பது இன்னும் சிறப்பல்லவா?

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், தனது அன்பு மனைவி வாசுகிக்காக  மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

அன்னை வாசுகி நீரிறைத்த கிணறு தான் நீங்கள் மேலே காண்பது.

ஏகாம்பரேஸ்வரர் – காமாட்சி தவிர, பாலமுருகன், நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், காலபைரவர், ஆஞ்சநேயர், வல்லமை விநாயகர், கருமாரியம்மன், சப்த கன்னிகள், இப்படி பலர் இங்கு உண்டு.

சனீஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு. சப்த கன்னிகளை அம்மனுடன் சேர்த்து வலம் வரலாம். இந்த அமைப்பு இந்த கோவிலில் மட்டுமே காணக் கிடைப்பதாகும். மற்ற கோவில்களில் சப்தகன்னிகள் திருவுருவம் தனியாக  இருக்கும்.

இப்படி அதிசயங்கள் பல உள்ளடக்கிய திருவள்ளுவர் கோவிலுக்கு அவசியம் ஒரு முறை குடும்பத்தோடு சென்று வாருங்கள். வள்ளுவரின் அருளை பெறுங்கள்.

முகவரி : அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 600 004.

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை : 6.30 – 12.00 மாலை 4.30 – 8.00

பஸ் ரூட் : மயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் லஸ் சிக்னலுக்கு முன்பாக ‘வள்ளுவர் சிலை’  என்று கேட்டு இறங்கவேண்டும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்பாக சமஸ்கிருந்த கல்லூரிக்கு அருகே உள்ளது இந்த ஸ்டாப் .

வள்ளுவர் சிலை பஸ் ஸ்டாப், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலை

(வள்ளுவர் கோவிலுக்கும் இந்த திருவள்ளுவர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு பஸ் ஸ்டாப் மற்றும் லேண்ட்மார்க் அவ்வளவு தான்.) அங்கிருந்து இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி நடந்து வந்தால் முண்டகக் கண்ணியம்மன் கோவில் தெருவை அடையலாம். அங்கு தான் திருவள்ளுவர் கோவில் உள்ளது. கச்சேரி ரோடு ரோடு வழியாகவும் வரலாம்.

………………………………………………………………………………………………………..

அடுத்து வருவது (பாகம் 3 & 4)

* அதே போல் வள்ளுவரின் ஞானத்தையும் தபோ வலிமையையும் குறிக்கும் மற்றொரு சம்பவமும் உண்டு. சிவபெருமானே சம்பந்தப்பட்ட நேரடி சம்பவம் அது….அடுத்த பதிவில் அதை காணலாம்…. (காணக்கிடைக்காத வள்ளுவர்-வாசுகி திருக்கல்யாண புகைப்படங்களுடன்)

* வள்ளுவர் திருக்கோவிலில் அருள்பாளித்து வரும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி திருக்கல்யாண உற்சவம் – புகைப்படங்களுடன் முழு கவரேஜ்

………………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………..
இந்த தொடரின் பாகம் 1 படிக்க விரும்புகிறவர்கள் :
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்
………………………………………………………………………………………………………..

4 thoughts on “சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2

  1. அருமையான பதிவு. படங்கள் அற்புதம். குறிப்பாக அரச அத்தி வேம்பு மரங்கள் ஒனெற்றொடு ஒன்று பினைந்திருப்பது. அவசியம் நேரில் தரிசிக்க வேண்டிய திருத்தலம். பல பேருக்கு தெரியாத இந்த கோயில் தங்களால் தெரிய வந்துள்ளது. அரசு ஆவன செய்தால் மேலும் புகழ் அடையும். செய்யுமா.

  2. உலகத் தமிழர்கள் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் காண வேண்டிய புண்ணிய தலம் இது…! உலகப் பொதுமறை தந்த பொய்யாப் புலவனின் ஆலயத்தை தரிசித்த உணர்வை உங்கள் பதிவு அளிக்கிறது….! எல்லோருடைய இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய வேதம் திருக்குறள்…! அறம், பொருள், இன்பம் என்று உலக வாழ்வை அய்யன் போல் விளக்கிச் சொன்னவர்கள் யாரும் இல்லை…! உலகை ஈரடியில் அளந்தவரின் புகழ் உலகளவில் பரவி இருந்தாலும் அவர் வாழ்ந்த இடத்தை பாதுகாப்பது நம் கடமை….!

    நாமும் நம் பங்கிற்கு முடிந்த வரையில் இந்தப் பதிவை நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மின்னஞ்சல் மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ கொண்டு சேர்ப்போம்..!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  3. இந்த கோவிலில் அமைந்துள்ள வெண்மை விநாயகருக்கு இருக்கும் மற்றும் ஒரு பெருமை வெளிநாடு அல்லது நல்ல வேலை வேண்டும் நபர்கள் அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று எனக்கு ஒரு சித்தர் தெரிவித்தார். நீங்கள் குருபிடது அத்தனையும் உண்மை. மேலும் ஒரு நூலகமும் இருக்கிறது. வாசுகி கிணறு மக்களால் மாசு படுத்த பட்டுஇருகிறது.

  4. நான் படித்த பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளி (வடக்கு )
    யின் பின்புறம் உள்ளது தான் திருவள்ளுவர் திருக் கோவில்
    பல நாட்டகள் அங்கேயே பழி கிடப்போம் ;
    அங்குள்ள மிக முக்கிய மான தகவல் விடுப பட்டுள்ளது
    தற்பொழுது செப்பு தடால் மூடப் பெற்றுள்ள அடி மரத்தின் அருகில் தான் திருவள்ளுவர் பிறந்தார் ; குறிப்பு அங்கேயே இருக்கும்
    மற்றைய விவரங்கள் படிக்கும் போது எனது நினைவுகள் பழமையை நோக்கி செல்கின்றன ;

Leave a Reply to lL.N.SUNDARAM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *