Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

print

‘When the student is ready teacher appears’ என்று ஒரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. அதாவது உங்களுக்கு பக்குவம் ஏற்படும்போது உங்களுக்குரிய குரு தானே தோன்றி உங்களை வழிநடத்துவார். ஆனால் இந்தப் பொன்மொழிக்கு இந்த ஒரு அர்த்தம் மட்டுமா உண்டு? இல்லை… இதன் அர்த்தம் மிக மிக பரந்து விரிந்த ஒன்று. எந்த ஒன்றையும் அடைவதற்குரிய தகுதியை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டால் போதும், பிரபஞ்சம் அதை அடைவதற்கு துணை நின்று தானே உதவி செய்யும். கடனை அடைப்பது, வேலையில் ப்ரோமோஷன், ஆன்மீகத்தில் ஏற்றம், இறையருளை பெறுவது என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

நமது எழுத்து ஆன்மீகத்தின் பக்கமும் சுயமுன்னேற்றம் பக்கமும் திரும்பி, ஓரளவு எழுதிவந்தோம். ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதில் சிரமம் ஏற்பட்டபோது, நமது தேடல் தீவிரமடைந்தது. அப்போதுதான் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா அவர்களைப் பற்றி தெரியவந்தது. அவர் ஏதோ தமிழறிஞர், தமிழுக்காக பாடுபபட்டவர்களுள் ஒருவர். இது தான் அதுவரை அவரைப் பற்றிய அனுமானமாக இருந்தது. ஆனால், அவர் அதற்கும் அப்பாற்பட்டவர் என்று அறிந்துகொண்டபோது அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. எனவே பிப்ரவரி மாதம் மகாமகம் செல்லும்போது அவர் சொந்த ஊரான உத்தமதானபுரத்திற்கே சென்று அவர் வாழ்ந்த இல்லத்தை தரிசித்து அவரது திருவுருவச் சிலைக்கும் நாம் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து உ.வே.சா அவர்களின் தொடர்புடைய பதிவுகள் பல நம் தளத்தில் அளித்திருக்கிறோம். ஒவ்வொன்றும் அத்தனை இனிமை. தவறவிடவேண்டாம். (FULL OF POSITIVE ENERGY!) இறுதியில் சுட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன.

dsc01812

இதற்கிடையே சென்ற வாரம் ஒரு நாள் சென்னை பெசண்ட் நகரில் உள்ள உ.வே.சா நூல் நிலையத்திற்கு சென்றிருந்தோம். சென்னையில் இப்படி ஒரு நூலகம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ… அத்தனையும் பொக்கிஷங்கள்.

உ.வே.சா அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர் அணிந்திருந்த ருத்ராட்சம், பயன்படுத்திய பேனா, எழுத்தாணி, விபூதி பேழை, அவர் எழுதிய டயரி என அனைத்தும் இங்கே பார்க்கலாம். அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும்.

அப்போது நாம் வாங்கிய ‘நினைவு மஞ்சரி’ என்னும் நூலில் படித்த சுவையான கட்டுரை ஒன்றை இங்கே உங்களுக்காக தருகிறோம்.

பதிவைப் படியுங்கள். எந்தக் காலத்திற்கும் இது பொருந்தும்.

ஆவலும் அதிர்ஷ்டமும்!

by டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்

ஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள சைவ மடங்களில் ஒன்றாகிய திருப்பனந்தாள் காசி மடத்தில் சில வருஷ காலம் குமாரசாமித் தம்பிரானென்பவர் தலைவராக இருந்து வந்தார். அவர் திருவாடுதுறையாதீனத்து மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் என்னுடன் பாடங் கேட்டவர். அவ்வாதீனத் தேசிகருடைய ஆதரவில் இருந்து வந்த நாங்கள் இருவரும் ஒரே காலத்தில் அம்மடத்தினின்றும் பிரிந்தோம். அவர் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவராகச் சென்றார். எனக்குக் கும்பகோணம் காலேஜில் தமிழ்பண்டிதர் வேலை கிடைத்தது.

குமாரசாமித் தம்பிரான் நல்ல அறிவாளி; சிறந்த சிவபக்தியுள்ளவர்; என்னிடம் பேரன்புடையவர். செய்யுள் நடையிலே கடிதப்போக்கு வரவு எங்களிடையே நடந்ததுண்டு. அவர் சில காலம் திருவாவடுதுறை மடத்திற்காறுபாறாக இருந்து வந்தார். அவருக்கு அம்மடத்தில் வித்துவான் தம்பிரானென்ற பட்டம் அளிக்கப்பட்டது.

அவர் காசிமடத்துத் தலைவராக இருந்த போது அவர் சம்பந்தமாகக் கும்பகோணம் ‘ஸப்கோர்ட்’டில் ஒரு வழக்கு நடைபெற்று வந்தது. அவரும் எதிர்க் கட்சியினரும் சிறந்த பாரிஸ்டர்களையும் அவர்களுக்கு உதவியாகப் பல பெரிய வக்கீல்களையும் நியமித்திருந்தனர். வழக்கு மிகவும் பெரியது. ஏறக்குறைய நானூறு சாட்சிகள் வரையில் விசாரிக்கப்பட்டனர். அந்த வழக்கு நடை பெற்று வந்த காலத்தில் கும்பகோணத்திலும், அதைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. சாட்சி விசாரணையைப் பற்றியும் குறுக்கு விசாரணையைப் பற்றியும் ஜனங்கள் அங்கங்கே உத்ஸாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு கட்சிக்காரரும் தங்கள் தங்கள் பக்கத்தில் வெற்றி உண்டாக வேண்டுமென்பதற்குரிய முயற்சி யெல்லாம் செய்து வந்தார்கள். தெய்வங்களைப் பிரார்த்தித்தார்கள். பணத்தை வாரி இறைத்தார்கள்.

இன்ன கட்சிக்குத்தான் ஜயமுண்டாகுமென்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை. பல நாள் நடந்துவந்த வழக்கு விசாரணை முடிவு பெற்றது. தீர்ப்புக் கூறுவதற்காக ஒருநாள் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தநாளை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இருந்த ஆவலும் பயமும் இத்தகையன வென்று சொல்ல முடியாது. ஜனங்களோ, ‘இவ்வளவு விரி வாக நடந்த வழக்கில் தீர்ப்பு எப்படியாகுமோ பார்க்கலாம்!’ என்று வியப்போடு எதிர்பார்த்தனர்.

வழக்கு முடிவடையும் காலத்தில் குமாரசாமித் தம்பிரான் கும்பகோணத்திற்கு அருகே காவிரியின் வடகரையில் இருக்கும் சத்திரம் கருப்பூர் என்னுமிடத்தில் உள்ள மடத்தில் தங்கியிருந்தார். அந்த மடம் திருப்பனந்தாள் காசி மடத்தைச் சார்ந்தது. அது கும்பகோணம் காலேஜுக்குக் கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் உள்ளது. காவிரியில் ஜலமில்லாதபோது ஸப் கோர்ட்டிலிருந்து குறுக்கே போனால் அந்த மடம் முக்கால் மைல் தூரந்தான் இருக்கும். காவிரியில் வெள்ளம் உள்ள காலத்தில் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்; அப்போது ஒன்றரை மைல் தூரம் இருக்கும்.

dsc02647
ஐப்பசியில் காவிரி!

தீர்ப்புக்கூறக் குறிப்பிட்டிருந்த தினம் காவிரியில் ஜலமுள்ள காலமாதலால் அவ்வாற்றின் தென் கரையிலுள்ள கோர்ட்டிலிருந்து சமாசாரம் வருவதை ஒவ்வொரு கணமும் தம்பிரான் எதிர்பார்த்திருந்தார். அங்கங்கே வேலைக்காரர்களை அரைப் பர்லாங்குக்கு ஒருவராக அஞ்சலில் நிறுத்தித் தமக்கு விரைவிலே சமாசாரம் எட்டும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

காலையில் பதினொரு மணியிருக்கும். காவிரியாற்றில் பூரணப் பிரவாகம் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு மனிதன் கோர்ட்டிலிருந்து வெகு வேகமாக ஓடி வந்தான். காலேஜுக்கு நேர் எதிர்கரையில் இறங்குந்துறை இருந்தது. அதற்குக் கீழே கச்சேரிக் கட்டிடங்கள் உள்ளன. அங்கிருந்து பாலத்தின் வழியே இக்கரைக்கு வருவதென்றால் நேரமாகும். வேகமாக ஓடிவந்த ஆள் தொப்பென்று செங்குத்தாக இருந்த கரையிலிருந்து கீழே காவிரியில் குதித்து நீந்தலானான். காலேஜில் கரையை நோக்கியுள்ள அறையில் நான் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆள் மிகவும் வேகமாக ஓடிவந்து குதித்ததை நான் பார்த்தேன். வழக்கில் குமாரசாமித் தம்பிரானுக்கு ஜயம் உண்டாயிற்றென்று அவன் சொல்லப் போவானென்பதை நான் ஊகித்து உணர்ந்து கொண்டேன். காவிரிநீரின் வேகத்தைக் காட்டிலும் அவன் வேகம் அதிகமாக இருந்தது.

அந்த மனிதன் தண்ணீரில் திடீரென்று குதித்ததுதான் தாமதம்; இந்தக் கரையில் இருந்த ஒருவன் விஷயத்தைப் பளிச்சென்று ஊகித்துக்கொண்டான். அவ்வளவுதான். உடனே கருப்பூர் மடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். அவன் ஓடி வருவதைக் கண்டு அவனுக்கு முன்னே இருந்த ஒருவன் ‘இதுதான் சமயம்’ என்று எண்ணி அவனுக்குமுன் ஓட ஆரம்பித்தான். இப்படியே ஒருவனைக் கண்டு மற்றொருவன் ஓடினான். பாலத் துறையிலிருந்த ஆட்களும் இவ்வாறே ஒருவன்முன் ஒருவனாக ஓடினார்கள்.

கருப்பூர் மடத்தில் முன்பக்கத்தில் இருந்த வாசற்காரன் கும்பகோணத்திலிருந்து வரும் சாலையிலேயே கண் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். நெடுந்தூரத்தில் தலைதெறிக்க ஒருவன் ஓடிவருவது அவனுக்குப் புலப்பட்டது; “எசமானுக்கு ஜயம்” என்று கோஷமிட்டுக் கொண்டு அவன் வந்தது தெரிந்தது. உடனே வாசற்காரன் உள்ளே ஓடினான்; “எசமானுக்கே ஜயம்” என்று தம்பிரானிடம் சொல்லி வணங்கினான்.

குமாரசாமித் தம்பிரான் தம்மை மறந்தார். பெரிய வழக்கில் யாருக்கு ஜயம் கிடைக்குமோ என்ற கவலையினால் குழம்பியிருந்த அவர் மனம் மெத்த ஆறுதல் அடைந்தது. அந்தச் சமாசாரம் சொன்ன வாசற்காரனுக்கு உடனே பணம் வேஷ்டி முதலிய நல்ல பரிசுகள் கிடைத்தன; அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது; சிரமமில்லாமல் பரிசு கிடைத்து விட்டது.

dsc01471

இரண்டு நிமிஷங்களுக்கு அப்பால் மற்றொருவன் ஓடி வந்தான்; “சாமீ! எசமானுக்கு ஜயம்!” என்று அவன் கூவினான். அவனுக்குச் சில பரிசுகள் கொடுக்கப்பட்டன. பின்பும் இரண்டு மூன்று பேர்கள் வந்து பரிசு பெற்றார்கள்; பரிசின் அளவு குறைந்துவந்தது. இப்படியே பலர் வரவே, தம்பிரானுக்கு அலுப்பு உண்டாகிவிட்டது; “போக்கிரிப் பயல்கள்! முதலில் நம்மிடம் சொன்னவனுக்கு இனாம் தருவதுதான் நியாயம். ஊரில் இருப்பவர்களுக்கெல்லாம் கொடுக்கமுடியுமா?” என்று அவர் சொல்லி விட்டார்.

“சாமி! நான் இரைக்க இரைக்க ஓடிவந்தேன். நான் வருவதைக் கண்டு தெரிந்துகொண்டு இவன் முன்னே வந்து சொல்லிவிட்டான்” என்று ஒவ்வொருவரும் சொல்லலாயினர். இந்தத் தொந்தரவு பொறுக்க முடியாமல், “இனிமேல் இந்தமாதிரி யாராவது வந்தால் உள்ளே விடவேண்டாம்” என்று தம்பிரான் உத்தரவிட்டார்.

கால்மணி கழித்து நனைந்த துணியுடன் வேகமாகக் காவிரியில் குதித்து நீந்தியவன் வந்து சேர்ந்தான். மடத்து வேலைக்காரர்கள் அவனை உள்ளே விடவில்லை. அவன் மன்றாடிப் பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை; எவ்வளவுக்கெவ்வளவு உத்ஸாகமாக ஓடிவந்தானோ, அவ்வளவுக்கவ்வளவு சோர்வு உண்டாகிவிட்டது அவனுக்கு. அப்படியே வாசற்படியில் உட்கார்ந்துவிட்டான். ‘கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லையே!’ என்று அவன் தன் தலைவிதியை நொந்துகொண்டான்.

ஒரு மணிக்குக் காலேஜ் பாடம் முடிந்தது. இரண்டுமணி வரையில் உள்ள இடைவேளைக்குள் கருப்பூர் மடத்திற்குச் சென்று தம்பிரானிடம் சந்தோஷம் விசாரித்து வரலாமென்று புறப்பட்டேன். கருப்பூர் மடம் வந்து சேர்ந்தேன். நீந்தி வந்த ஆள் அங்கே வாசற்படியில் தலையில் கையை வைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவனைப்போல உட்கார்ந்திருந்ததைக் கண்டேன்.

“ஏன் அப்பா, இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? எசமானைப் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன்.

அவன் தன் துக்க ஸ்வப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டான்; “ஐயோ சாமீ! நான் காவேரியிலே குதித்து நீந்தி ஓடிவந்தேன். என்னை உள்ளே விடாமல் அடித்துத் தள்ளுகிறார்கள். எனக்கு ஏதாவது இனாம் கிடைக்குமென்ற ஆத்திரத்தில் வெள்ளத்தைக்கூடப் பார்க்கவில்லை” என்று அவன் கூறினான்.

நான் சிரித்துக்கொண்டே உள்ளே போனேன். தம்பிரானைக் கண்டு சந்தோஷம் விசாரித்தேன். அப்பால், “பல பேருக்கு இனாம் கிடைத்திருக்குமென்று எண்ணுகிறேன்” என்றேன்.

“ஆமாம். பத்துப் பேர்களுக்குமேல் கொடுத்தோம். அப்புறம் எத்தனையோ பேர்கள் வந்தார்கள்.”

“யாருக்கு அதிகமாகக் கிடைத்ததோ?”

“முதலிலே எவன் சொன்னானோ அவனுக்குத் தான் அதிகம்.”

“இதிலே ஒரு வேடிக்கை; நியாயமாக முதலில் பரிசைப் பெறவேண்டியவனுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.”

“ஏன்? என்ன சங்கதி?”

“இப்போது இந்த மடத்து வாசலில் ஒருவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனுக்குத்தான் நியாயமாக முதற்பரிசு கிடைக்கவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து இந்தச் சமாசாரத்தை முதலில் வெளிப்படுத்தியவன் அவன்தான்” என்று சொல்லிவிட்டு அவன் ஓடிவந்ததையும், ஜலத்தில் திடீரென்று குதித்ததையும், அவனைப் பார்த்து மற்றவர்கள் அவனுக்கு முன்னே ஓடிவந்ததையும் விரிவாகச் சொன்னேன்.

தம்பிரான் புன்னகை பூத்தார்; “எங்கே, அவனை இங்கே அழைத்து வா” என்று ஒரு வேலைக்காரனுக்கு உத்தரவிட்டார். அப்படியே அவன் போய் அழைக்கவே ஏமாந்துபோய் உட்கார்ந்திருந்த ஆள் ஓடிவந்து தம்பிரான் காலில் விழுந்தான். விம்மி விம்மி அழுவதைத்தவிர அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் பட்ட கஷ்டமும், கொண்டிருந்த ஆவலும் அவனுக்கல்லவா தெரியும்?

தம்பிரான் உண்மையை உணர்ந்து அவனுக்கும் பணமும், வேஷ்டியும் அளித்தார்.

“இவன் இப்போது பரிசு பெற்றுவிட்டாலும் முதற்பரிசு மற்றொருவனுக்குப் போய் விட்டது. கடைசியிலே நின்றவன் அதைப் பெற்றுக்கொண்டான். அவனுடைய அதிர்ஷ்டம் அது. முதலில் பெற வேண்டியவன் கடைசியிலே பெற்றான்; பெறாமற்போய் இருந்தாலும் போய் இருப்பான்” என்றேன் நான்.

“உலக இயல்பு இப்படித்தான் இருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அருமை; உழைப்பில்லாதவர்க்கே அதிக ஊதியம் கிடைக்கிறது” என்று அவர் பதில் சொன்னார்.

  • ‘நினைவு மஞ்சரி’ | டாக்டர்.உ.வே.சா | ரைட்மந்த்ரா.காம்

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

========================================================

Also check :

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

========================================================

[END]

One thought on “கடைசியில் வந்தவன் முதல் பரிசை தட்டிச் சென்ற கதை!

Leave a Reply to Ravikumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *