Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

print
“நவராத்திரி சிறப்பு பதிவுகள் எதுவும் அளிக்கவில்லையா?” என்று சில வாசக அன்பர்கள் கேட்டார்கள்.

சென்ற ஆண்டே நாம் நவராத்திரி தொடர்பாக பல பதிவுகள் அளித்தபடியால் அளிக்கவில்லை. மற்றபடி அம்மையப்பனை பற்றி எழுதுவதைவிட நமக்கு இனிமையான விஷயம் வேறு கிடையாது. அதை படிப்பதைவிட உங்களுக்கு மகிழ்ச்சியைப் தரக்கூடிய விஷயமும் வேறு இருக்காது என்பது நமக்கு தெரியும்.

thiruvanaikkaval2

நாம் பிறந்த ஊரான திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் ஆனைக்கா அண்ணலை பற்றியும் அங்கிருந்தபடி அகிலத்தையே ஆண்டுகொண்டிருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி பற்றியும் சுவாரஸ்யமான ஒரு கதை + தகவல்.

அதற்கு முன்னே சில மாதங்களுக்கு முன்னே நாம் திருவானைக்கா சென்றது பற்றி கூற விரும்புகிறோம்.

அடியேன் பிறந்த ஊர் திருவானைக்கா. பஞ்சபூத தலங்களில் இது நீருக்கு உரிய தலம். எம் வாழ்க்கையில் இதுவரை பெருமைக்குரிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது இந்த ஊரில் பிறந்தது தான்.

நாம் சென்ற நாளன்று வயலூரிலும், குழுமணி அருகில் உள்ள புலிவலத்திலும் சுப்ரமணிய சுவாமிக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் பூஜையிலும் பெற்றோருடன் கலந்துகொண்டோம். மாலை திருவானைக்காவில், அன்னை அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதி அலங்காரத்தில் அருகே இருந்து தரிசித்தபோது தான் அதுவரை அமைதியின்றி தவித்த மனம் சற்று அமைதியடைந்தது.

அடுத்து சுவாமி சன்னதிக்கு சென்று ஆனைக்கா அண்ணலை அருகே இருந்து தரிசித்த அந்த தருணத்தில் தான் அந்த இனம் புரியாத வாட்டம் அகன்றது. சிவதரிசனம் தரும் அந்த உணர்வை, அந்த மகிழ்ச்சியை, அந்த ஆறுதலை இந்த பிரபஞ்சத்திலேயே வேறு எதுவும் தரமுடியாது! அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!!

குருக்கள் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சுவாமிக்கு முன்பாக அந்த இடுக்குகளில் இருந்து நீரை கைகளால் அள்ளி ஜம்புகேஸ்வரரை பிரத்யட்சமாக ஜலகண்டேஸ்வரராக நம்மிடம் காண்பித்தார்.

ஏதோ மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்திய பின்னர் ஒரு வித பரவசத்திற்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சி ஏற்படுமல்லவா அப்படி ஒரு நெகிழ்ச்சி.

சரி பதிவின் மையக்கருத்துக்கு வருகிறோம்…

thiruvanaika

சர்வம் சிவார்ப்பணம்!

திருவானைக்காவல் கோவிலை கட்டியவன் கோசெங்கட் சோழன். அவனுடைய காலத்துக்கு பின் தமிழ்நாட்டை ஒரு சோழ மன்னன் ஆண்டு வந்தான். சோழர்கள் சிவபக்திக்கு பெயர் பெற்றவர்கள்.

ஒரு நாள் வெளிநாட்டு முத்து வணிகன் நட்சத்திரங்களைப் போன்று ஒளிவீசும் முத்துமாலை ஒன்றைக் கொண்டு வந்தான். மன்னன் உரிய விலை கொடுத்து வாங்கி அந்த முத்துமாலையைத் தனது மனைவி பட்டத்து ராணியின் கழுத்தில் சூட்டி மகிழ்ந்தான்.

மறுநாள் காலை தம்பதிகள் இருவரும் உறையூர் அருகே காவிரி படித்துறையில் நீராடி மகிழ்ந்தனர். அரசி முத்துமாலையை கழற்றாமலேயே நீராடினாள். முத்து மாலை ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.

மன்னன் ஆட்களை அனுப்பி ஆற்றில் இறங்கி தேடுமாறு கூறினான். எவ்வளவு தேடியும் முத்துமாலை கிடைக்கவில்லை. ஆசை ஆசையாய் மாலையை வாங்கிய மன்னனும் சூடி மகிழ்ந்த அரசியும் வருந்தினர்.

“ஆனைக்கா அண்ணலே… அந்த முத்துமாலையை நீரே ஏற்றருளும்!” என்று அதை ஈசனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு சென்றான்.

இரண்டொரு நாட்கள் சென்ற பின் சோழமன்னன், அரசியோடு ஆனைக்கா அண்ணலை வழிபட வழக்கம் போல் சென்றான்.

நண்பகல், உச்சி கால வழிபாட்டு நேரத்தில் வெள்ளிக் குடங்களிலிருந்து திருமஞ்சன நீரை எடுத்து சிவாச்சாரியார் சிவலிங்கத் திருமேனியில் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு குடத்திலிருந்து முத்துமாலை பெருமான் கழுத்தில் ஆரம்போல் விழுந்தது. சிவார்ப்பணம் என்று அதை கூறியதால் அதை ஏற்றுக்கொண்ட எம்பெருமான், மன்னனுக்கு அருள்புரிந்தார். அந்த அதிசயம் கண்டு எல்லோரும் பிரமித்தனர்.

இந்த திருவிளையாடலை எம்பெருமான் நிகழ்த்தியதற்கு பின் ஒரு காரணம் உண்டு. சோழர்கள் பரம்பரை சைவத்தில் ஊறித்திளைத்த குலம். அரசர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை எல்லாம் சிவார்ப்பணமாகத் தந்துவிட்டுத் தங்களையும் சிவபாத சேகரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்வு கொள்வார்கள் என்பது வரலாறு. இந்த வழக்கத்திற்குமாறாக, இவ்வரசன் மட்டும் தான் பெற்ற சிறந்ததொரு முத்தாரத்தை மனைவிக்குத் தந்ததின் மூலம் தவறு செய்துவிட்டான். அதை அறிவுறுத்தித் திருத்தவே ஆண்டவன் அவ்விளையாட்டை மேற்கொண்டான். அரசன் இறுதியில் தன் தவறை உணர்ந்து திருந்தினான்.

அது முதல் “சர்வம் சிவார்ப்பணம்” என்று அனைத்தையும் ஈசனுக்கே அர்ப்பணித்து   வாழ்ந்தான்.

இந்த சுந்தரர் தனது பதிகத்தில் மிக அழகாக கூறுகிறார்… சுந்தரத் தமிழ் அல்லவா?

தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே!

thiruvanaikkaval-3

அப்பன் மட்டுமா இங்குள்ள அன்னையும் திருவிளையாடலில் கைதேர்ந்தவள் தான்.

பஞ்சபூத தலங்களில் இது அப்புத் தலம். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய பலரால் பாடல் பெற்றுள்ளது என்றால் இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னையின் சிறப்பை அளவிட்டு கூறமுடியுமா?

திருவானைக்கா பிழைபொறுக்கும் எந்தை ஈசனின் துணைவி அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

தமிழ் இலக்கியத்தில் ‘அசதியாடல்’ என்ற ஒரு வகை பாடல் உண்டு. ஆண்டவனின் அருள் விளையாட்டை, வேடிக்கையாகப் பார்த்து, அவனோடு ஊடியும் கூடியும் களித்த அருளாளர்கள் பலரின் அனுபவங்கள் பாடல்களாக வெளிப்பட்டுள்ளன. அந்த வகையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் ‘அசதியாடல்’ பாடல் ஒன்றைக் காண்போம். (தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் குருநாதர் தான் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை)

ஈசனுக்குத் எத்தனை பெயர்கள்! அழைப்பவரின் விருப்பத்திற்கேற்ப இறைவனுக்குப் பெயர் அமைந்துவிடுகிறது. ஆண்டவனின் ‘பித்தா’ என்னும் திருப்பெயருக்கு ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் உதித்த காரணத்தைக்கூற, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் எழுதிய “திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை’ என்னும் நூலில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு காரணத்தைக் கூறுகிறார்.

“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
யணியுருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியன் மதியஞ்சூடிய பெருமான்
பித்தென்றொரு பெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக்
காவலகி லாண்டநாயகியே.’
– மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருவானைக்காவில் உறையும் இறைவனையும் இறைவியையும் நோக்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை, “அகிலாண்ட நாயகியே, சுந்தரமூர்த்தி சுவாமிகள் உன் கணவனைப் பித்தன் என்று பாடியது சரிதான். ஏனெனினில் யாரை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. அன்னையே! நீ எத்தகைய அருங்குணம் உடையவள்? கங்கை எத்தகைய குணம் உடையவள்? “நீரும் முப்பிழை பொறுக்கும்’ என்பது பழமொழி! நீரிலே யாரேனும் மூழ்கினால் மூன்று முறை மட்டுமே அது (கங்கை) பிழை பொறுக்கும்; வயல் சூழ்ந்த திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற அகிலாண்ட நாயகியே! நீயோ அளவற்ற பிழைகளைப் பொறுத்துக் காத்து அருள் புரிகின்றாய். மூன்றே பிழை பொறுக்கும் கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் ஈசன் அளவற்ற பிழைகளைப் பொறுத்து அடியார்களுக்கு அருள்புரியும் உனக்கு பாதியிடம் கொடுத்தது எந்த வகையில் நியாயம்? ஆகவேதான் உன் கணவனுக்குப் ‘பித்தன்’ என்று பெயர் வந்ததோ?” என்று பாடினார்.

உயிர்கள் செய்யும் எல்லா குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளும் அன்னை, அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனே திருவருள் பாலிக்கிறாள்.

ஆம், இவள் குற்றங்களை பொறுப்பவள். ஒரு முறை தரிசியுங்கள்… பலப் பிறவிகளில் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check : 

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்!

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

==========================================================

 

[END]

3 thoughts on “சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

  1. அருமையான பதிவு. படித்து மகிழ்வுற்றேன். அதுவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் கற்பனை அருமை. நன்றி

  2. தமிழில் இது போன்ற பாடல்கள் இருப்பதே எங்களை போன்றவர்களுக்கு தெரிவதில்லை.பாடல் மிகவும் அருமை.எப்படி தேடிப் பிடிக்கறீங்க ?.

    1. நன்றி…நன்றி…! நம் சைவ சமயம் ஒரு மகா சமுத்திரம் போல. உள்ளே செல்ல செல்ல அள்ள அள்ள குறையாமல் முத்துக்கள் கிடைக்கின்றன.

      அடியேன் கற்றது கடுகளவு. இனி கற்கவேண்டியது உலகளவு.

Leave a Reply to GS.Akila Cancel reply

Your email address will not be published. Required fields are marked *