Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

print
ன்று ஆடிகிருத்திகை. இந்நன்னாளில் இப்பதிவை அளிக்க முடிந்தது முருகன் திருவருளே. சென்னையில் அஷ்டலக்ஷ்மிகளும் கோயில் கொண்டுள்ள பெசன்ட் நகரில் அக்கோவிலுக்கு அருகே அதே கடற்கரை ஓரம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகளும் அடங்கிய அழகிய கோவில் ஒன்று உள்ளது தெரியுமா! அதுவும் காஞ்சி மகா பெரியவாவின் அருள்வாக்கிற்கிணங்க இந்த கோவில் கட்டப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

IMG_20160410_171521-233

பொதுவாகவே நமது ரைட்மந்த்ரா தளத்தில் பாரம்பரியம் மிக்க தொன்மையான ஆலயங்கள் பற்றியே நாம் ‘ஆலய தரிசனம்’ பகுதியில் பதிவுகளை அளிப்பது வழக்கம். இந்த ஆலயம் 1985 ல் இடம் கிடைத்து 1995 ல் தான் குடமுழுக்கு செய்யப்பட்டது. அப்புறம் எப்படி? இந்த ஆலயம் கட்டுவதற்கான உத்தரவை கொடுத்தது யார் தெரியுமா? கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கிய நம் காஞ்சி மகா பெரியவா! இது ஒன்று போதாதா இதன் பெருமையை பறைசாற்ற..!!

சென்னையில் இருந்தாலும் நாம் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்றதில்லை. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்றது. அதற்கு சில ஆண்டுகள் முன்பு ஒரு முறை. அவ்வளவே. நாம் இருக்கும் பகுதிக்கு அருகாமை என்பதால் குன்றத்தூருக்கு தான் அடிக்கடி செல்வது நம் வழக்கம். (அங்கும் பெரியவா மகிமை உண்டு!) இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நம் தள வாசகியும், முகநூல் நண்பருமான திருமதி.ஜெயா ரங்கராஜன் அம்மா அவர்கள் நம்மை பெசன்ட் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு   அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று சென்றிருந்தோம். அது ஒரு ஞாயிறுக்கிழமை. அந்நிகழ்ச்சியில்  பங்கேற்றுவிட்டு புறப்படும்போது நேரம் சரியாக மாலை 5.30 PM. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் 5.30 PM – 6.00 PM நமது பிரார்த்தனை கிளப் நேரம் என்பதால் அருகே உள்ள அறுபடையப்பன் ஆலயம் சென்று பிரார்த்திக்கலாம் என்று நினைத்தோம். பிரார்த்தனை செய்ய அதைவிட சிறந்த இடம் கிடைக்குமா ?

நமது பிரார்த்தனை கிளப் நேரத்தின்போது வீட்டில் இருந்தால் வீட்டில் சுவாமி படம் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்வோம். வெளியே எங்கேனும் இருந்தால் ஏதாவது கோவிலுக்கு சென்றுவிடுவோம்.

Maha Periyava
சுவாமிநாதா சரணம்… சரணம்…!

ஆலயத்தில் மிதமான கூட்டம். ஒரு பக்கம் திருப்புகழ் பாராயணம் ஒரு பக்கம் ஒவ்வொரு சன்னதியிலும் அர்ச்சனை என்று கோவில் பரப்பராக இருந்தது. ஒரு ஓரமாக அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு சன்னதியாக தரிசித்துவிட்டு புறப்பட்டோம். இது குறித்த அப்டேட்டை அப்போது நமது முகநூலில் கூட அளித்திருந்தோம்.

கோவிலை விட்டுக் கிளம்பிவர மனமே வரவில்லை எனுமளவுக்கு கோவில் அத்தனை அழகு. புகைப்படங்களிலேயே இப்படி இருக்கிறதே நேரில் எப்படி இருக்கும்… நீங்களே சொல்லுங்கள்!

அவசியம் அனைவரும் இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும். அருகிலேயே அஷ்டலக்ஷ்மி கோவில் இருக்கிறது. அங்கு சென்று மகாலட்சுமி தாயாரையும் தரிசிக்கலாம்.

இந்த கோவில் உருவான விதம் உண்மையில் உருக வைக்கும் ஒன்று. இதன் தல வரலாற்றை நீங்கள் படித்தால்…. படித்தேன், ரசித்தேன், துடித்தேன், சிலிர்த்தேன், நெகிழ்ந்தேன், அழுதேன், தொழுதேன் என்று தான் சொல்வீர்கள். அப்படி ஒரு ஆத்மானுபவம். ஒரு வரியை கூட தவற விடவேண்டாம். அதுவும், ஒரு கோவில் சாந்நித்யம் பெற்று திகழ என்ன காரணம் என்று கூறப்பட்டிருக்கும் பத்தியை மீண்டும் மீண்டும் படியுங்கள்…!

Besant Nagar Arupadaiyappan

ஒவ்வொரு வரியும் கல்வெட்டில் பொறித்து படிக்க வேண்டியவை. பதிவு பெரியதாக இருக்கிறதே படிக்க படிக்க வளர்ந்துகொண்டே இருக்கிறதே என்று எண்ணவேண்டாம்… திருவருள் பொங்கிப் பெருகி வழியும்போது, போதும் போதும் என்று யாராவது சொல்வார்களா? இன்னும், இன்னும் என்று தானே கேட்கவேண்டும்?

இந்தக் கோவிலின் ஆக்கத்தில் நம் காஞ்சி மகா சுவாமிகள் ஆற்றிய பங்கு மகத்தானது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (குறள் 517)  என்ற குறள் வழி நின்று, தகுந்த நபரிடம் அந்த பொறுப்பைவிட்டு இந்த மகத்தான ஆலயத்தை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தக் கோவிலை ஸ்தாபித்த திருமதி.அலமேலு அருணாச்சலம் அவர்கள் இதன் வரலாற்றை விவரிக்கிறார். அவருடன் அறுபடை வீட்டுக்கு செல்வோம் வாருங்கள்.

ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை தன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், Rightmantra.com

==========================================================

Before going to main article… ‘வேல்மாறல் அற்புதங்கள்’ தொடருக்கு….

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

=======================================================

அலைகடலோரம் அறுபடையப்பன் ஆலயம் வந்த வரலாறு!

– திருமதி.அலமேலு அருணாச்சலம், ஆறுபடைவீடு டிரஸ்ட், பெசன்ட்நகர்

திரேதா யுகத்தில் ஸ்ரீராமரும் துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் கலியுகத்தில் ஸ்ரீசுப்பிரமணியரும் வரம் அருளும் மூர்த்திகள் என்பதை அறிந்து தான் தருமமிகு சென்னை பட்டினத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் பரமாச்சாரியார் ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவாக்கின்படி ஆறுபடை வீடு சுப்பிரமணிய சுவாமிகளுக்கு ஒரே சுற்று சுவற்றுக்குள் ஆறு சன்னதி அமைத்து ஒரு நூதன கற்கோவில் ஓசையின்றி கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1985ம் ஆண்டு முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்த திரு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆணையை ஏற்று அமைச்சர் திரு. வீரப்பன் அவர்கள் மூலம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையோரம் 21 கிரவுண்ட் நிலப்பரப்பில் சாசனம் பண்ணி கொடுத்தார்கள்.

DSC03614-22

பெரியவா போட்ட பிள்ளையார் சுழி…

இந்த மகத்தான ஆறுபடைக்கோவில் தோன்றியதற்கான தல வரலாறு ஒன்று உண்டு. அமெரிக்காவில் வசிக்கும் நகரத்தார் சமூகத்தின் பிரசித்தி பெற்ற குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் அழகப்பா அழகப்பன் அவர்கள் தான் இந்த கோவிலின் ஸ்தாபகர். நகரத்தாரால் மட்டுமே கருங்கற்கோவில் கட்ட முடியும் என்ற மாபெரும் நம்பிக்கையுடன் அப்போது 1985ம் ஆண்டில் காஞ்சியில் வாழ்ந்து கொண்டிருந்த மகா பெரியவர் சங்கராச்சாரியார் அவர்கள் இந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும்படி டாக்டர் அழகப்பா அழகப்பனிடம் இந்த பொறுப்பை மேற்கொள்ளச் சொன்னார்கள். அதிலிருந்து வந்ததுதான் இந்த அறுபடைக் கோவில்.

DSC03573-22

தேகம் களைந்து தனி தெய்வமே தானாகி…

காஞ்சி மாமுனிவர் – அவதாரயுக புருஷர் – தேகம் களைந்து தனி தெய்வமே தானாகி, ஏகப்பரம் பொருளாய் எங்கும் நிறைந்துள்ளார் என்று எல்லோரும் எடுத்துரைத்தாலும் அரவிந்த பதங்களை, அபயகரத்தை, அருள் முகத்தை காணவொண்ணாது மதுரக்குரலைக் கேட்க வொண்ணாது மறுகும். பாமர பக்தையின் ஏக்கம் உலகை புரிந்துகொள்ள தெரிந்த வயதில் என்னை ஆட்கொண்டு அருள்புரிந்த காஞ்சி மாமுனிவரை நினைந்துருகி போகிறேன். தொடர்ந்து அவர் பெருங்கருணையாலே நான் வாழ்கின்ற சிறப்பையும் எனக்கு அவரளித்த ஆசிகளையும் அருட்கொடைகளையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

DSC03576-22
மகா பெரியவா உத்தரவினால் எழும்பிய அறுபடைவீடு!

முருகப்பெருமானுக்கு திருக்கோவில் எழுப்ப எனக்கு சக்தியை மாமுனிவர் அளித்ததுமே அத்திருப்பணியிலே இறங்கிவிட்டேன். முருகப்பெருமான் குருநாதனாக முதலில் சுவாமிமலையில் எழுந்தருளி எனக்கு அருள்புரிந்த மாட்சியையும், அப்பெருமானின் திருக்காட்சியையும் ஜனவரி 23ந் தேதி 1995ல் வசந்த நகரில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் அந்த அருட்காட்சியை மக்களுக்கு காட்டியபோது நான் பிறந்த பேற்றினை உணர்ந்து பரவசம் அடைந்தேன்.

கரையிலா கருணைக்கடல் முருகன்

கரையிலா கருணைக்கடல் முருகன், ஆனந்த அலைகள் வந்து வந்து அன்பர்கள் உள்ளும் புறமும் வீசி அவர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றது. நான் பெற்ற இறை அனுபவம் மிகவும் இனிமையானது. அந்தப் பேரின்பப்பேறு ஆனந்த நிலை அனுபவம் இப்படிப்பட்டது என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. நிலவு பிரகாசிக்கும் வேளையில், கரை காணாமல் பொங்கும் கடலில் அலை ஒன்று எழும்பும்போது அந்த அமுதத் துளி ஒன்று என்மேல் பட்டாற்போல் அற்புத உணர்வுகள் என் நெஞ்சில் படிந்து ஒரு இனம் புரியாத இன்பத்தை ஏற்படுத்துகிறது. அலைபாய்கின்ற மனம் சலனமற்று இறைவனை நினைத்து அதிலேயே லயிக்க வேண்டும் என்று ஒருமுகப்பட்ட மனதுடன் வழிபாடு புரியும் காஞ்சி மடாதிபதிகளுடைய திருவருளை எளியேன் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தேன். சிந்தை குளிர்ந்தது. ஞானம் மலர்ந்தது. களைப்பு, சோர்வு எல்லாம் போய் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது.

பேதமில்லாத அமுத மழை!

ஆறுமுகனுக்கும் தனித்தனியே திருக்கோயிலை அமைத்து மஹா வல்லப கணபதி ஆலயத்தை மத்தியில் அமைத்து குடமுழுக்கு விழா சிறப்பாக 2002 ஜூன் மாதம் நடைபெற்றது. வேறுபாடு இன்றி காற்று வீசுவது போன்றும், வெண்ணிலவு, காடு, மேடு, பள்ளத்தாக்கு, மலைச்சரிவு, கடல், குளம் என்றெல்லாம் பேதமில்லாமல் அமுத மழைப் பொழிவது போன்றும் அத்திரு சன்னதிகளுக்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். காலை நேரத்தில் கடற்கரை கோயிலில் கதிர்வேலன் தரிசனம் கண்டு வாருங்கள் என்று கைகுவித்து கனிவுடன் அழைக்கும் பேறு பெற்றேன். நாடிவரும் தொண்டர்களையும் பாடிவரும் பக்தர்களையும் சிரம் பணிந்து கரங்குவித்து வணங்கி வரவேற்கும்போது சுகமாக சிந்தனைகள் எல்லையில்லாமல் வந்து போகும்.

DSC03581

ஆறுமுகன் குடி கொண்டிருக்கும் ஆறுபடை வீடுகளின் மகிமையினை நெஞ்சிலே நிறுத்துவதன் மூலம் நாமும் முருகப்பெருமானின் அருளாசியினைப் பெற்று உய்வோமாக. இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கலியுக வரதன் என்ற குமரக் கடவுள்.

ரம்மியமான இளந்தளிர்கள் செழித்து இயற்கை வனப்பின் அழகும் நறுமணமும் நிறைந்த மலையும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலக்கடவுள் குன்றுதோறாடும் குமரன். இளமை, அழகு, மணம் எனப்பொருள்படும் முருகு என்று சொல்லையடுத்து குமரக்கடவுளுக்கு முருகன் என்ற பெயர் வந்தது.

முருகன் அறுபடைக் கோவில் கொண்ட வரலாற்றின் சுருக்கம்… 

தாராசுரனது துன்புறுத்தல்களால் அவதிப்பட்ட தேவர்களின் தூதுவனாக அக்னி தேவன் புறா வடிவம் எடுத்து ஈசனிடம் முறையிட கைலாயம் சென்றான். அச்சமயம் உமையவளுடன் அந்தப்புரத்தில் இருந்த பரமேசுவரன் தன் கண்களிலிருந்து தீப்பொறிகளை வெளியிட்டார். பின்னர் ஈசன் கூறியபடி அந்த தீப்பொறிகளை தாங்கி சென்ற அக்னி தேவன் அவற்றின் வெப்பம் தாங்காமல் கங்கையாற்றில் விட்டுவிட்டான். தொடர்ந்து கங்கையும் அந்த வெப்பத்தை தாங்க முடியாமல் தர்ப்பை புல் வளர்த்து அலைகள் தாமரை மலர்களாக வீசிய சரவண மடுவில் அத்தீப்பொறிகளை விட்டுவிட்டாள். தீப்பொறிகள் அழகிய குழந்தையாக மாறியது. அச்சமயம் அங்கு நீராட வந்த கார்த்திகை பெண்கள் குழந்தையை எடுத்துப் பாலூட்ட முயன்றபோது அந்த தெய்வீக குழந்தை ஆறு குழந்தைகளாக மாறி அப்பெண்களிடம் தாய்ப்பால் பருகின. அதைக் காணவந்த உமையவள் அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக்கட்டி அணைக்க ஆறு குழந்தைகளையும் ஆறுமுகம் பன்னிருக்கைகளுடன் அமைந்த ஒரே குழந்தையாக மாறின. இவ்வாறு தோன்றியவரே ஷண்முகனாகிய ஆறுமுகன்.

DSC03574-22

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்க்கை இன்னவிதமாக இருக்கும் என்ற தலையெழுத்தினை பிரம்மா எழுதிவிடுகிறார் என்பார்கள். நல்ல செல்வத்தோடு, வசதியோடு, வறுமை என்பதையே அறியாமல் ஒருவன் வாழ்கிறான். வறுமையை தவிர வேறொன்றையும் அறியாமல் இன்னொருவன் வாழ்கிறான். ஒருவன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கிறான். இன்னொருவன் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு வியாதியால் துன்புற்று நோகிறான். இவர்கள் தலையில் நான்முகன் இவ்வாறு எழுதிவிட்டதால் தான் இப்படி இருக்கிறார்களோ? அப்படியானால் தலையெழுத்தை மாற்ற முடியாதா?

“பிரம்மன் அன்று எழுதியதை அழித்து எழுத முடியுமா?” என்று ஒரு பழமொழி கூறுவார்கள் பெரியவர்கள். ஆனால் முடியும் என்கிறார் அருணகிரிநாதர். கந்தர் அலங்காரத்தில் சேந்தன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே என்று பாடுகிறார்.

Arupadaiveedu

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!

வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்றவை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்கள். அந்நாளிலே வடிவேலும் மயிலும் துணையென்று எண்ணி முருகப்பெருமானை வணங்கி வேண்டினால் நமது தலையெழுத்தினை அழித்து புதிதாக மாற்றி எழுதிக்கொள்ளலாம்.

உயர்ந்த இடத்தில் அமருவதில் விருப்பமுள்ள கந்தன் தன் பக்தர்களையும் வாழ்வில் உயர்த்த தவறுவதில்லை. ஈசனது பரப்பிரும்ம ஒளியே குமரனாகத் திகழ்வதால் அவருக்கு சுப்பிரமணியர் என்று பெயர்.

சரவணமடுவில் ஈசனது வீரிய தீப்பொறிகள் குழந்தையாக மாறியதால் சரவணபவன் எனப் பெயர் வந்தது.

கார்த்திகைப் பெண்களிடம் தாய்ப்பால் பருகின குமரன் கார்த்திகேயன் ஆனான்.

இளமையும் அழகும் நிறைந்த பொலிவுடன் விளங்கும் முருகனுக்கு குமாரசுவாமி என்று பெயர் வந்தது.

DSC03583-22

முருகனுடைய ஆறுபடை வீடுளிலே முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றம் தெய்வீக சிறப்பிற்கு சிகரம் வைத்தது போன்ற நிகழ்ச்சி முருகப்பெருமானுக்கும் தேவகுஞ்சரிக்கும் நடைபெற்ற திருமணமாகும். குமாரபெருமான் தேவகுஞ்சரியை திருமணம் செய்து கொண்ட திருநாள் பங்குனி உத்திரமாகும். முருகப்பெருமானின் திருமண நாளை பெருவிழாவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.

முருகப்பெருமானது ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு என்ற பெருமையினை பெறும் திருச்செந்தூர் பலவகையிலும் முதன்மையும் மகிமையும் பெற்றதாகும். முருகப்பெருமான் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றி அருள்புரிந்த தெய்வத்திருத்தலம் ஆகும். படைவீட்டில் இரண்டாவது இடத்தை பெற்றாலும் கந்தவேள் உண்மையிலேயே படைவீடு அமைத்த இடம் திருச்செந்தூர் தான். சிவபெருமான் முருகப்பெருமானை நோக்கி, “குமரா நல்லவர்க்கெல்லாம் தொல்லை தருவதையே நோக்கமாகக் கொண்டு அனைத்துலகத்தினருக்கும் பெருங்கொடுமை செய்து வரும் சூரபதுமனையும் அவன் கூட்டத்தையும் நிர்முலமாக்கி விண்ணவர் கோனுக்கு அவன் நாட்டை மீட்டளித்து அருள்புரிந்து திரும்புவாயாக” என்று அன்பாணையிட்டு அருளினார். எம்பெருமானின் ஆணையை ஏற்று அன்னை உமாதேவியின் ஆசியினைப்பெற்று போர்க்கருவிகளை தாங்கி திருமுருகன் போருக்கு புறப்பட்டார். சூரபதுமனின் தம்பியாகிய தாராகாசுரன் ஆட்சி, எல்லைக்கு அப்பாற்பட்ட மாயங்கள் செய்து முனிவர்கள் போன்றோரை வருத்தும் கிரௌஞ்ச மலையாகக் குறுக்கிட்டது. மலை உருவில் மாயங்கள் புரிந்து போரிட்ட தாராசுரனை நோக்கி வேலாயுதத்தை பிரயோகித்தார். வேலாயுதம் கிரௌஞ்ச மலையை பிளந்து தாரகனின் உயிரைக் குடித்துத் திரும்பியது.

சூரபதுமனை போர் முனையில் சந்திக்கும் பொருட்டு தென்னகம் நோக்கி புறப்பட்டார் திருக்குமார பெருமான். பரிவாரங்கள் புடைசூழ சிவத்திருத்தலங்களில் தங்கி சிவபெருமானை வழிபட்டு திருச்செந்தூர் பதியடைந்தார். சூரபத்மன் வரலாற்றை வியாழபகவான் மூலமாக அறிந்து கொண்டார். அதாவது தன்கொடுஞ்செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு இனி அறவழி நடக்க வேண்டும் என்றும் இந்திரன் மைந்தன் ஜயந்தன் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வீரவாகுத் தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். வீரவாகு தேவரின் உபதேசம் சூரபத்மனிடம் எடுபடவில்லை. அதனால் முருகப்பெருமான் வேலாயுதத்தை எடுத்து சூரபத்மனை நோக்கி செலுத்தினார். சூரபத்மன் வேலாயுதத்தைக் கண்டு நிலைக்குலைந்து கடல் நடுவே மாமரமாக உருமாறி நின்றான். ஆனால் வேலாயுதமோ மாமரத்தை ஊடுருவி இருபிளவாக்கியது. பிளவுபட்ட சூரனது உடல் ஒன்று சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் உருமாறியது. கருணையின் காரணமாக மயிலையும், சேவலையும் தனது வாகனமாகவும் வெற்றிக் கொடியாகவும் ஏற்று சூரனுக்கு உயர்ந்த பதத்தை அளித்தருளினார். முருகப்பெருமானின் சூரசம்ஹாரம் நிகழ்த்திய நன்னாள் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் (வளர்பிறை) சஷ்டியாகும். ஆகவே பிரதமை முதல் சஷ்டிதிதி முடிய ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் விரதங்களில் சஷ்டி விரமே தலைசிறந்ததென்றும் வேண்டுவோர்க்கு வேண்டும் நலன்களை குறைவற அளிக்க வல்லதென்றும் கந்தபுராணம் கூறுகிறது.

DSC03589

திருமுருகப்பெருமான் குடிகொண்டு அருளும் படை வீடுகளில் மூன்றாவது சிறப்பிடத்தை பெறுவது பழநிப்பதியாகும். திருக்கயிலாயத்திலே ஒருநாள் சிவபெருமான் உமாதேவியுடனும் விநாயகர், வேலவன் ஆகிய இரு மைந்தர்களுடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாழினை இசைத்து கானம் பாடியவாறு நாரதமுனிவர் திருக்கயிலாயம் வந்து சிவபெருமான் பார்வதி தேவி விநாயகர் வேலவர் பலரை வணங்கி நின்றார். நாரதர் வந்தார் என்றால் அவருடைய கலக சிந்தனையும் உடன்வரும் என்று தெரிந்தே வந்த காரணத்தை சிவபெருமான் நாரதரிடம் வினவினார். ”வரும் வழியிலே அதிமதுரமான மாங்கனி ஒன்று கிடைத்தது. அந்த மகிமை வாய்ந்த மாங்கனியை தங்களுக்கு சமர்பிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இங்கு வந்தேன்” என்று கூறி அம்மாங்கனியை அவர் பாதத்தருகே வைத்து பணிந்தார். சிவபெருமானும் மாங்கனியைப் பெற்றுக்கொண்டு நாரதருக்கு அருள்புரிந்து அனுப்பி வைத்தார். கலகம் ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. குழந்தைகள் விநாயகரும் வேலவனும் தந்தையின் கரத்திலிருந்த மாங்கனியை ஆவலோடு கவனித்தனர். இருவருமே தங்களுக்குத்தான் அந்தக்கனி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பத்தை தந்தையிடம் கூறினர். சிவபெருமானோ இக்கனியை வைத்து ஒரு திருவிளையாடல் நடத்தி உலகுக்கு ஓர் தத்துவத்தை உபதேசிக்கவேண்டும் என எண்ணினார். சிவபெருமான் புதல்வர்களை நோக்கி ‘என் கையில் இருப்பதோ ஒரே கனி இருவரும் முழுமையாக வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். எனக்கும் ஒருவரை விட்டு ஒருவருக்கு இந்த அறிய கனியை கொடுக்க விரும்பவில்லை. அதனால் உங்களிருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். யார் ஜெயிக்கிறீர்களோ அவர்கள் இக்கனியை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். உலகத்தை யார் ஒருவர் ஒருமுறை சுற்றி முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கு இந்த கனி என்று சொல்லுகிறார். இந்த எளிய போட்டியில் ஒரு வினாடியில் நான் வெற்றிப்பெறுவேன் என்று வேலன் தன் மயில் மீதேறி புறப்பட்டு விடுகிறார். ஏழு உலகங்களையும் எளிதில் கடந்து அய்யன் சிவபெருமான் முன்னால் வந்து நின்றபோது அங்கு விநாயகப்பெருமான் கையிலே கனியுடன் முகத்திலே களிப்புடன் நின்று கொண்டிருந்தார். கனியை பெற்ற விதத்தை சிவபெருமான் முருகனுக்கு எடுத்துக்கூறினார். ”வேலவா, விநாயகன் என்னிடம் சர்வலோகங்களும் அண்ட சராசரங்களும் தங்களுக்குள் தானே அடக்கம் என்று வினவினான். ”உண்மைதான்” என்றேன். அப்படியானால் ”உங்களை வலம் வந்தால் அண்ட சராசரங்களையும் வலம் வந்ததாகத்தானே அர்த்தம்” என்றான். நானும் ”உண்மைதான்” என்றேன். உடனே விநாயகன் என்னை வலம் வந்து வணங்கி போட்டியிலே ”நானே வெற்றி பெற்றேன்” என்றான். அதனால் அவனுக்கே கனியை அளித்தேன் என்று முருகனை நோக்கி கூறினார் பரமேசுவரன். கந்தனுக்கு வந்தது கடுங்கோபம். “என்னுடைய தகுதியை மகிமையை உலகுக்கு காட்டி தனியாக வாழ்வேன்” என்று கோபமாகக் கூறி பந்த பாசங்களை உதறிவிட்டு தன்னுடைய உடமைகளை ஆயுதங்களையும் போட்டுவிட்டு கையிலே தண்டமேந்தி கோவணாண்டியாக குமரன் கிளையை விட்டு நீங்கி தென்திசைக்குப் புறப்பட்டு தேவகிரி அருகிலிருந்த நெல்லிவனத்தையும் அதனைச் சேர்ந்த குன்றையுமே இருப்பிடமாகக் கொண்டார்.

DSC03590

பழனிபோல் இங்கும் (பெசன்ட்நகர் அறுபடையப்பன் ஆலயம்) தைப்பூசமே பெரும் விழாவாக நடத்தி வருகிறோம். முருகப்பெருமான் கடப்பா மரங்களின் உருவத்திலிருந்து தம்மை வழிபட வரும் பக்தர்களின் பிணிகளை அகற்றுகிறார் என்று சொல்லுவதற்கு தமிழ் சித்தர்கள் 18 பேரில் ஒருவரான போக முனிவரால் ஆராதிக்கப்பட்டவர் பால தண்டாயுதபாணியாகும்.

நான்காவது படைவீடான சுவாமி மலையிலே திருமுருகக் கடவுள் சுவாமிநாதனாக எழுந்தருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலிக்கின்றார். சிவபெருமானுக்கு நாதனாக – குருவாக இருந்து திருக்குமரன் தந்தைக்கே உபதேசம் அருளினார் என்பது இத்தலத்தின் பெருமையாகும். குருடன் ஒருவன் நின்றிருந்த இடம் விநாயகர் சந்நிதி என அறிந்து விநாயகரை குருடன் மெய்மறந்த பக்தியுடன் வழிபட்டான். விநாயகர் அருளால் குருடன் பார்வைப் பெற்று பேரானந்தமடைந்தான். நேத்திர விநாயகராக சுவாமிமலையில் விநாயகர் கண்ணுக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கு செம்மையாக தெரிய அருள்பாலிக்கிறார். இவரது சந்நிதி சிறப்பும் மகிமையும் வாய்ந்ததாக உள்ளது. பெருமான் பார்ப்போரை பரவசமூட்டும் விதத்திலே யோக குருநாதராக ஆறடி உயரத்தில் மிகவும் கெம்பீரமாக தோற்றமளிக்கிறார். சித்திரை மாதம் சித்திரை திருவிழாவும் திருகார்த்திகை பெருவிழாவும் பெருஞ்சிறப்பு வாய்ந்த விழாவாகக் கொண்டாடுகிறோம். தங்கத்தினாலான முழுக்கவசம் அணிந்து வைரவேல் தாங்கி ராஜ கம்பீரத்துடன் தருகின்ற காட்சி காணக்கண்கொள்ளாக்காட்சி. இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் கண்கண்ட தெய்வமாக திகழும் சுவாமிநாதப் பெருமானை துதித்து தொழுது அவர் அருளை பெற அன்றாடம் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். சுவாமி மலையிலும் திருத்தணியிலும் யானை வாகனம் இருப்பதைக் காணலாம்.

DSC03585-2

ஐந்தாவது படைவீடான குன்றுதோறாடல் என்றால் குமரன் ஒவ்வொரு குன்றிலும் திருவிளையாடல் புரிகின்றான் என்பதுதான். குன்றுதோறாடல் என்பது முருகன் எழுந்தருளியுள்ள மலைகள் மலைச்சாரல்கள் அனைத்துக்குமே பொருந்தும் என்றாலும் முதல் சிறப்பிடத்தைப் பெறுகின்றது திருத்தணியேயாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகையின் போது பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறோம். திருக்கல்யாணம் திருத்தணியில்தான் நடைபெற்று வருகிறது. குன்று தோறாடல் என்ற கணக்கில் குறிப்பாக மகிமை மிக்க சில மலைத்தலங்களை அருட்கவிஞர் நக்கீரரும் பிற அருட்புலவர்களும் குறிப்பிட்டு பாடியுள்ளனர். ”இமையவர் பணி திருத்தணி பொற்பதி” என்று அருணகிரிநாதர் திருப்புகழிலே பெருமையுடன் பக்தியுடன் போற்றி பாடியிருக்கிறார்.

விநோதமாகப் – பொழுதுபோக்காக ஞானப்பழம் உதிர்கின்ற சச்சிதானந்த சோலையாக விளங்குவது பழமுதிர்சோலை. இத்திருக்கோயிலில் முற்காலத்தில் ஒரு வேலின் சிலை வடிவத்தை அமைத்தே மக்கள் வழிபட்டு வந்தனர் என்று கூறப்பட்டதால் இங்கு சக்தி சொரூப வேலாகவே காட்சி அளிக்கிறார்.

ஆறுதலின்றி அநேக பிறப்புகளை எடுத்து அழைகின்ற ஆன்மாக்களாகிய நாம் ஆறுபடை வீடுகளையும் சென்று வணங்கி ஆறுதலையுடைய அண்ணலின் தண்ணருளைப் பெற்று ஆறுதலை அடைவோமாக. அகமுகத்தினால் ஆறு படைவீடுகளில் ஆறுமுகனை தரிசிக்க வேண்டும். அதற்கு அடையாளமாக புறக்கண்ணாலும் அன்பர்கள் கண்டு உயர்வுபெறும் பொருட்டு அவன் ஆறுபடை வீடுகளிலும் எழுந்தருளியிருக்கிறான்.

DSC03591-32

பைரவருக்கு சன்னதி வந்த அற்புதமான பின்னணி

பைரவருக்கு சன்னதி வரப்பெற்றதன் பின்னணியும் வெகு சுவாரஸ்யமானது. நான் அமெரிக்காவில் என் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது குறிப்பிட்ட சில நாட்களில் இரவு மூன்று மணியளவில் தலையில் ஒரு கறுப்பு கிரீடம் வந்து அழுத்துவதைபோல உணர்ந்தேன். சிந்தித்து பார்க்கும்போது சென்னையில் என் இல்லத்தில் பூஜை அறையில் கோயில் ஸ்தபதிகளால் கொடுக்கப்பட்ட பைரவர் காலண்டர் ஒன்றில் பைரவர் மேல் வைக்கப்பட்டிருந்த கிரீடம் ஒன்றின் சாயல் தெரிந்தது போல உணர்ந்தேன். ஏதோ பிரம்மை என்று தள்ளிவிட்டுப் பார்த்தும் இந்தக் கனவு விடாமல் வர ஆரம்பித்ததும் ஊரில்தான் ஏதோ கெட்ட சம்பவம் நடக்கப் போகிறதோ. இதற்கு என்ன அர்த்தம் இருக்கக் கூடும் என்று மனம் குழம்ப ஆரம்பித்தது. தொலைபேசியில் கணவரிடம் கூப்பிட்டு இதைக் கூறியதும் அவர், பூஜை அறையில் ஒரு பைரவர் காலண்டர் இருக்கிறது. அதில் ஒரு கறுப்பு கிரீடம் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஏதோ திரவம் வடிந்தாற்போல் இருக்கிறது என்றார். அதற்கப்புறம் அங்கு இருப்புக்கொள்ளவில்லை.

பாலும், தேனும் சொரிந்த…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பிடித்து சென்னைக்கு வந்து என் இல்லத்தில் பூஜை அறையில் போய் பார்த்தால் பைரவர் காலண்டரும் இருந்தது. அதில் இருந்து தேன் போன்ற திரவம் வழிந்திருந்தது. நான் பூவைத்து அது காய்ந்துபோய் தண்ணீர் ஏதாவது பட்டு வழிந்திருக்கலாம் என்று நினைத்து மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு மறுநாள் பூஜை ரூமிற்குள் நுழைந்தபோது மெய்சிலிர்த்தது. அந்த காலண்டரில் இருந்து பாலும் தேனும் வழிந்துகொண்டிருந்தது. அதை என் கணவர் வெளியில் சொல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டார். அந்த காலண்டர் கொடுக்கப்பட்டது அறுபடைகோவில் நிர்மாணப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்தபதி அவர்களால். மறுநாள் அவரைக் கூப்பிட்டு காண்பித்த போது சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து கண்ணீர் சொரிந்தார். அமெரிக்காவில் வசிக்கும் மைத்துனர் டாக்டர் அழகப்பன் வந்து பார்த்தார். பார்க்கவேண்டும் என்று நம்பிக்கையுடன் வந்தவர்க்கெல்லாம் பால் சொரிந்தது, தேன் சொரிந்தது.

DSC03600-223

தெளிவுபடுத்திய ஜெயேந்திரர்…

இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்பதற்காக காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சென்றோம். அவர் எந்தவிதமான ஆச்சரியமும் காண்பிக்காமல் “ஆறுபடை முருகனுக்கு ஆறு சந்நிதியும் விநாயகருக்கு சந்நிதியும் கட்டி இருக்கிறாய். அவர்களுக்கு காவல் தெய்வமாக ஒரு க்ஷேத்திர பாலகர் வேண்டாமா? பைரவருக்கு இந்த கோவிலில் தனி சந்நிதி வைக்க வேண்டுமென்று உனக்கு கட்டளை வந்திருக்கிறது” என்றார்.

அதன்படி பைரவர் சந்நிதி அமைக்கும்படி கூறினார். ஸ்தபதிகள் கூட பெரியவரிடம் “என் பைரவர் எனக்குச் சொல்லாமல் ஆச்சி வீட்டில் இப்படி காண்பித்திருக்கிறார்” என்று ஆதங்கப்பட்டபோது காஞ்சிபெரியவர் “உனக்கு காண்பிக்கப்பட்டிருந்தால் இதை ஸ்தாபகம் பண்ண முடிந்திருக்காது. அதனால்தான் அவரது இல்லத்தில் இது நடந்திருக்கிறது” என்றார்.

இந்த அற்புத சம்பவத்தினால் பைரவருக்கும் சன்னதி அமைக்கும்பொழுது காலண்டரில் இருந்தபடி யோக பைரவராகவே இங்கு பிரதிஷ்டை செய்தோம்.

பக்த கோடிகள் பால் தயிர் நெய் தேன் மலர் இளநீர் சர்க்கரை போன்றவற்றை காவடியாக சுமந்து வந்து இடும்பனை வணங்கிய பிறகுதான் கடம்பனாகிய முருகனை பழனி ஆண்டவனை வழிபடுகின்றனர். அதனால் இங்கு இடும்பனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் சன்னதியில் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இங்கு நவக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பிரதோஷமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு ஆலயத்தில் மக்கள் கூடுவதும், அங்கே சாந்தித்யம் பெருகுவதும் அங்கே உள்ள மூர்த்தங்கள் திருவருள் பெருகுவதும், பக்தர்கள் செலுத்தும் பக்தியை பொறுத்தே இருக்கிறது.

DSC03595-23w2

ஒரு ஆலயம் மகத்துவம் பெறுவது எப்படி? ஏன்??

ஆலயத்தில் செய்யப்படும் வழிபாட்டு முறைகள் நெறிமுறைகளுடன் கடைபிடிக்கப்பட்டால் அங்கே நிச்சயமாக தெய்வ சாந்தித்யம் பூரணமாக விளங்கும். அப்படிப்பட்ட சன்னதிக்கு மக்கள் வரும்போது அவர்களுடைய மனம் அமைதி பெறுவதோடு அது உடற்பிணிக்கு மருந்தாகவும் அமைகிறது. இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கலியுகவரதன் என்ற குமரக்கடவுள்.

குமரக்கடவுளுக்கு அவருடைய ஆறுபடை வீடுகளையும் ஓரிடத்தில் அமைக்க வேண்டும் என்று அவதார யுக புருஷரான காஞ்சிமுனிவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான் என் மைத்துனர் டாக்டர் அழகப்பா அழகப்பருக்கு கட்டளை இட்டார்கள். அதற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி இராமச்சந்திரன் இந்த அறுபடை வீட்டிற்காக ஓரிடம் தந்து உதவினார்கள். 1985-ல் இடம் கிடைத்து 1995ல் சுவாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோவில் கட்டி குடமுழுக்கு விழா நடந்தது. திருத்தணி, பழனி, விநாயகர் கோவிலுக்கு 1998ல் குடமுழுக்கு விழா நடந்தேறியது. 2002ல் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. அத்திருச்சன்னதிகளுக்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் முருகன் அருள்பாலிக்கிறார்.

DSC03580-323
தாயே உன்னை வணங்குகிறேன்…!

காலை நேரத்தில் கடற்கரை கோவிலில் கதிர்வேலன் தரிசனம் காண கண்கோடி வேண்டும். நாடிவரும் தொண்டர்களையும் பாடிவரும் பக்தர்களையும் வேண்டுவது அளித்து, அந்த வேலன் அருள்பாலிக்கிறார். இந்த நூதனமான கருங்கல் ஆலயம் எமனிடம் போராடி உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்ட நலிந்த உடலுடன் ஆனால் எஃகு போன்ற உறுதியான உள்ளமும் கொண்ட ஒரு பெண்மணியான நான் என் அயராத உழைப்பினாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மாமுனிவர் காஞ்சி பெரியவரின் ஆசியினாலும், டாக்டர் அழகப்பா அழகப்பனின் முழு மூச்சினாலும், பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதியின் கைவண்ணத்தாலும் அமைந்த ஒரு ஆன்மீக வெற்றி சின்னம்தான் இந்த கருங்கல் ஆலயம். இங்கு கந்தசஷ்டி விழா, தை பூசம், பங்குனி உத்திரம் நாட்களில், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருவதுண்டு. திருக்கார்த்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சண்முகார்ச்சனை, சத்ரு சம்ஹார திரிசதி, சஷ்டியில் வேல்மாறல் பாராயணம், தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் சிறப்பாக செய்து வருகிறோம். கிருத்திகை அன்று தேரில் சாமி புறப்பாடு செய்கிறோம்.

DSC03598-32w3

வினை தீர்க்கும் முருகன்!

பெசன்ட் நகரெனும் பெரும் பதியம், வையத்துள் முருகனின் சிறப்பிடமாம். மையார் தடங்கை மங்கையரெல்லாம் அழகன் முருகன் என்று வணங்குவர். காயாய் கிடந்த மனதையெல்லாம் கனியாய் ஆக்கும் புதுமையை கண்டோம். நோயாய் கிடக்கும் நெஞ்சினுள்ளே செந்தில் நாதனை நினைவில் வைப்போம். செந்நிறத் தமிழான செந்தில் ஆண்டவன் ஜெகத்தினில் வாழும் தெய்வம். தந்தையுமவனே. தாயின் தன்னெறி வாத்தன்மையுமனே! முந்தை வினை தீர முருகப்பனை மன்னிய சீரடி வணங்குவோம். குலம் காப்பான்! நற்செல்வமும் குன்றாமல் தந்திடுவான்! நம் நலம் காப்பான்! புகழ் தருவான்! நானிலத்தில் நிலைகாப்பான் வளந்தருவான். தாயெனப்பரிவும் செய்வான். பூ உலகில் பச்சை முகில் வண்ணன் முருகன் நிழலடி சேர்வார்க்கு என்றும் தேசமக்களுக்காக முருகபெருமான் பேசும் பெருமகனாக நின்று சாதிக்க கூடிய தெய்வம் அறுபடை முருகன் தான்.

நிலமெலாம் நன்மை சேர, நினைத்தது நடக்க, நாடிடும் பொருள் கைகூட, நலமெலாம் நாடி, எந்நாளும் வந்துற சென்னையே சொர்க்கமாக புகழ்சேர, இன்பமெல்லாம் ஓங்க ”அ” என்ற அகரத்தின் வார்த்தையிலே அகிலத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ”அழகனுக்கு” ஆலயம் அமைக்கும் பணியினை எமக்கருளிய ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யா ஸ்வாமிகள் பொற்பாதம் பணிந்து சிரம் தாழ்த்தி வணங்கி வழிபட்டு ஆசார்ய பக்தியின் ஆழத்தை பரிபூர்ணமாக உணர்கிறேன்!”

==========================================================

We are struggling… Please support Rightmantra in its functioning!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

ரைட்மந்த்ராவில் வெளியான முருகப் பெருமானைப் பற்றிய பல்வேறு பதிவுகளுக்கு….

என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ??

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் பற்றிய பதிவுக்கு :

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

5 thoughts on “மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

  1. அறுபடை வீடு கோயிலுக்கு சில முறை சென்று இருக்கிறேன். அதன் வரலாறை அறியும் போது மெய் சிலிர்க்கிறது! மிக அருமையான பதிவு சுந்தர் ஐயா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!

  2. சுந்தர்ஜி

    திகட்டாத தேள்அமுதம் உங்கள் பதிவு..தேனும் தினைமாவும் ,பஞ்சாமிர்தம் போல் சுவைஉடைய முருகன் அருள் பிரசாதம்.

  3. மிக அற்புதமான பதிவுகள் வாழ்த்துக்கள் நன்றி

  4. Dear Sundarji,

    Excellent article about Besant Nagar Murigan Temple.

    The Photos are Insting me go to that Temple . I am Planning to Visit that Temple.

    Thanks for your Good Info and Excellent Article..

    S.Narayanan.

Leave a Reply to Vinoth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *