அவர் இல்லாவிட்டால் என்ன? அவர் நம்முள் விதைத்துவிட்டு சென்ற லட்சிய தீ கொழுந்துவிட்டெறிகிறதே… அது போதாதா?
இப்படியும் ஒரு ஜனாதிபதி நம்மிடையே இருந்தார் என்பதை எதிர்காலம் நம்புவது கடினம் தான்!
கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளாராக பணிபுரிந்த திரு.பி.எம்.நாயர் அவர்கள் எழுதியுள்ள ‘கலாம் காலங்கள்’ என்னும் நூலிலிருந்து சில பகுதிகளை தருகிறோம்.
வீட்டில் மின்சாரமில்லாத நிலையில் கலாம் எப்படி படித்தார் தெரியுமா?
அந்தக் கூட்டத்தில் 300 மாணவர்கள் இருந்தார்கள். கலாம் உரையை முடித்துவிட்டு கேள்விகள் கேட்கலாம் என்றார். ஒரு அமைதி நிலவியது. பிறகு ஒரு மாணவர் எழுந்தார், ”மிஸ்டர் ஜனாதிபதி, நீங்கள் ஐன்ஸ்டீனின் பாதிக்கப்பட்ட குழந்தை பருவத்தைப் பற்றி சொன்னீர்கள். அது அவர் சிறந்த புகழடன் விளங்குவதற்கு தடையில்லாமல் இருந்தது. ஆனால் உங்களுடையது எப்படி?”
கலாம் புன்னகைத்தபடி சொன்னார், “என்னுடைய இளைய பருவமும் ஓரளவு கடினமாகத்தான் இருந்தது தெரியுமா. நான் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். மூன்று பள்ளிகளுக்கு போக வேண்டும் – அதாவது மசூதிக்கள் – பிறகு திரும்பி வரவேண்டும், பள்ளியில் கொடுத்த வீட்டுப் பாடங்களை அவசரமாக முடிக்க வேண்டும். சைக்கிளில் போய் வீடு வீடாக செய்தித்தாள் போடுவதற்கு முன்பாக. அதற்கு பிறகு நான் பள்ளிக்கு போவேன். நான் மதியம் திரும்புவேன். பிறகு என் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் காலையில் நான் செய்தித்தாள் போட்ட இடங்களில் போய் பணம் வசூலிப்பேன். உங்களுக்குத் தெரியுமா அப்போது எங்கள் இடத்தில் மின்சாரம் கிடையாது. நான் மாலையில் தான் படிக்க முடியும். என் தாயார் என்னிடம் அன்பாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதை காட்டிலும் எனக்கு கூடுதல் மண்ணெண்ணெய் கொடுப்பார்கள் (அவர் ஒன்னரை இஞ்ச் அதிகம் என்பதை தன்னுடைய பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் வைத்து காட்டினார்.) அதன் மூலம் நான் இரவில் படிப்பேன். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அதிகாலையில் நான் எழுந்து மறுபடியும் போக வேண்டும். புரிந்ததா?”
அங்கே திடீரென்று ஒரு மௌனம். நான் சுற்றிலும் பார்த்தேன். மாணவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அது ஒரு உணர்ச்சி பூர்வமான தருணம். சிலர் அழுவதை போல இருந்தார்கள். ஆனால் அங்கே கலாம், இன்னும் புன்னகைத்தபடி, அடுத்த கேள்விக்காக காத்திருந்தார்.
கலாமை சோதித்த அவரது செயலாளர்!
கலாமுக்கு எல்லாமே முக்கியமானது – எல்லாமே.ஒரு துண்டு காகிதத்தை கூட பார்த்து கவனமாக படிக்க வேண்டும். ஏதாவது காகிதத்தைப் புறக்கணித்து விட்டு அவரை முட்டாளாக்க முடியாது. அவருடைய நினைவாற்றல் அபாரமானது – புகைப்படம் எடுப்பது மாதிரி. பதிவு செய்ய ஏராளமான ஃபிலிம்கள் இருக்கும்.
நான் சொல்லப்போகும் ஒரு சம்பவம் அதற்கு ஒரு உதாரணம். குடியரசுத்தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் போயிருந்தார். கடிதங்களும், மனுக்களும் குவிந்து விட்டன. ஒரு நாளைக்கு சராசரியாக 70-லிருந்து 100 கடிதங்கள் வரும். எல்லாமே காலை சந்திப்புக்காக எனக்கு குறிக்கப்படும். அவர் பயணம் கிளம்புவதற்கு முன்பாக கடிதங்கள் ஏற்கனவே காலை சந்திப்பிற்காக எனக்கு குறிக்கப்பட்டுவிட்டன. அவர் இல்லாதபோது வந்த கடிதங்களை இரவு பத்து மணிக்கு அவர் ‘மதிய’ உணவின் போது பார்த்துவிடுவார். காலை உணவு மதியம் என்றால், மதிய உணவு அதற்கு பல மணிக்கு பிறகு என்பது இயற்கைத்தானே. இரவு உணவு என்பது அடுத்தநாள் அதிகாலையிலே!
எல்லா தாள்களும் வந்தது. வழக்கம்போல் நான் எல்லாவற்றையும் பார்த்து அவருடன் விவாதிப்பதற்காக குறித்துக்கொண்டேன். தஞ்சாவூரிலிருந்து ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலிருந்து ஒரு மனு வந்திருந்தது. நான் ஜனாதிபதியிடம் அந்த மனுவிலுள்ள சாரத்தை விளக்கிவிட்டு அதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி பிரச்னையை அவர் எப்படி தீர்க்கப் போகிறாரென்று கேட்போம் என்றேன். கலாம் பொறுமையாக கேட்டுவிட்டு சொன்னார் “அது பற்றி இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது!”
நான் சொன்னேன், “இல்லை சார், ஒரே ஒரு பிரதிதான்’
அவர் “இல்லை இன்னொன்று உண்டு”
நான் “இல்லை ஒன்று தான்”
அவர் மறுபடியும் “இல்லை மிஸ்டர் நாயர் அதில் இன்னொன்ரு கடிதமும் உண்டு”
கடந்த மூன்று நாட்களாக எல்லா கடிதங்களும் என்னிடம் தான் இருக்கின்றன என்னுடைய நினைவாற்றலில் எனக்கு நம்பிக்கை இருந்தால் இறுதியாக, “இல்லை சார், நீங்கள் சுற்றுப்பயணத்தில் இருந்தீர்கள். நான் எல்லாக் கடிதங்களையும் பார்த்துவிட்டேன். நீங்கள் சொல்வது இந்தக் கடிதத்தின் நகலாக இருக்கலாம்”
குடியரசுத்தலைவர் சொன்னார் “சரி, நாம் மத்த விஷயங்களை பேசலாம்”
அப்படியே செய்தோம். பிறகு கோப்புகளையும் முடித்து விட்டு, நான் என் அறைக்குத் திருப்பினேன். கலாம் ஐந்து முறை இன்னொரு கடிதம் இருக்கிறது என்றதும், நான் ஆறு முறை இல்லை என்று சொன்னதும் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எல்லாக் கடிதங்களையும் மறுபடியும் பார்க்க முடிவு செய்தேன். நான் உறைந்து போனேன். அதே தஞ்சாவூரிலிருந்து அதே தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலிருந்து இன்னொரு பிரிவு மாணவர்களிடமிருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. நான் சரியாக பார்க்காததில் அவமானப்பட்டேன். மறுபடியும் அவரது அறைக்கு ஓடிப்போய் சொன்னேன் “சார் நான் சொன்னது தவறு. இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சொன்னதுதான் சரி நான் சொன்னது தான் தவறு. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்படியோ பார்க்கத் தவறிவிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கள். இது போல் இனி நடக்காது”
கலாம் சிரித்துவிட்டு சொன்னார் “அது பரவாயில்லை, கவலைப்படாதீங்க. அந்த மனு மீதும் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
நான் குறுகிப்போய் திருப்பினேன்.
அவர் பாணியில் சொல்ல வேண்டுமானால் அவருடைய நினைவாற்றல் ‘அற்புதம்’. அவருடைய விமர்சனத்திற்காக அவருக்கு பல புத்தகங்கள் வரும். கருணையோடு அதை எனக்கு பதிலாக, அதை அவர் மங்கோத்ராவிடம் கொடுப்பார். அடுத்த நாள் காலை சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் விவாதிக்க அவர் இரவு முழுக்க அந்த புத்தகங்களைப் படித்து குறிப்பெடுப்பார். அது ஒரு நிரந்தர நிகழ்வு என்பதால், நானும் அப்போது இருப்பேன். மங்கோத்ரா அந்தப் புத்தகம் எப்படி, அது நல்லதா கெட்டதா என்று விவாதிப்பார்.
திடீரென்று ஜனாதிபதி “மங்கோத்ராஜி நீங்கள் 24-வது பக்கத்தில் 2வது பத்தியை கவனீத்தீர்களா? என்ன அருமையான சிந்தனை! அந்த நல்ல சிந்தனைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!”
நான் மங்கோத்ராவிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி பக்கம் 24 ஆம் பக்கம் பத்தி 2ஐ பார்ப்பேன், அதிலிருக்கும் பத்தி உண்மையிலேயே ஒரு அருமையான பத்தியாக இருக்கும்! இப்படி பலமுறை நடந்திருக்கிறது.
எல்லாருமே நேர்மையற்று இருக்கிறார்கள். ஒரு அரசில்வாதியால் நேர்மையானவன் என்று வாழ்த்தும்போது சந்தேகம் வருகிறது. மேலும் ஒரு அதிகாரியாக எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என் வழக்கம். அதனால் கலாமை சோதிக்க நினைத்தேன். இன்னொருப் புத்தகம் விமர்சனத்திற்கு வந்தபோது, அவர் பக்கம் 96 ஐ பார்க்கச் சொன்னார். ‘அந்த ஆசிரியர் சொன்னது உண்மைதான்’ என்றார்.
பிறகு நான் சொன்னேன் ‘சார் அவர் பக்கம் 96-ல் சொன்னதை உண்மையிலேயே அந்த ஆசிரியர் நம்புகிறாரா?’
‘இல்லை, மிஸ்டர் நாயர், பக்கம் 154-ல் அவர் தான் சொன்னதிலேயே முரண்படுகிறார். அவர் பக்கம் 96-ல் சொன்னதற்கு நேரெதிர் கருத்துக்களைச் சொல்கிறார்’ – இப்படி வந்தது பதில்!
- கலாம் காலங்கள் | பி.எம்.நாயர்
==========================================================
மகிழ்ச்சி – அன்றும், இன்றும்!
சென்ற ஆண்டு கலாம் அவர்களின் நினைவு நாளைமுன்னிட்டு அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் விதமாக நண்பர் முல்லைவனம் அவர்களின் உதவியுடன் சென்னை நெசப்பக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நம் கைப்பட ஒரு பூவரச மரக்கன்றை நாம் நட்டது நினைவிருக்கலாம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த கன்றின் வளர்ச்சியை அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்தோம்.
இதோ சரியாக ஒரு வருடம் கழித்து கன்று மரமாகி வளர்ந்து நிற்கும் அந்த அழகு… கண்கொள்ளா காட்சி அது. மற்ற மரங்களை விட அடியேன் நட்ட மரம், நன்கு வளர்ந்திருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி!
வாழ்க்கையில் எத்தனையோ விதவிதமான சந்தோஷங்கள், மனநிறைவுகள் இருக்கலாம். ஆனால் நாம் நட்ட செடி ஒன்று சிறு மரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்போது அதை தடவிக்கொடுப்பதில் உள்ள சந்தோஷம் இருக்கிறதே… அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இன்று மாலையும் கலாம் அவர்களின் நினைவாக ஒரு மரக்கன்றை நடவிருக்கிறோம். நாம் நேசிக்கும் தேசத் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக ஆரவார கொண்டாட்டங்களை தவிர்த்து, ஒரு விதையை நட்டு அது மரமாக வளரும் அழகை ரசித்துப் பாருங்கள். உண்மையான மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் புரியும். நாம் வளர்வதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்.
==========================================================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check from our archives:
வள்ளுவர் + பாரதி + விவேகானந்தர் = கலாம்!
அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!
ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
==========================================================
[END]
Dear SundarJi,
Super..
Rgds,
Ramesh
வாழ்த்துக்கள் சுந்தர் சார்!
நீங்கள் நட்ட மரமும் வளர்ந்து இருக்கிறது! கலாம் அய்யா விதைத்த விதையும் வளருகிறது.
வெல்க பாரதம்!!!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்
அருமை !!
கலாம் காலத்தை கடந்தவர்!! அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மட்டும் தான் எனக்கு (நமக்கு என்று கூட சொல்லலாம் ) பெருமை. .
நீங்கள் நட்ட மரம் நன்கு வளர்ந்ததற்க்கு காரணம் நட்டது மட்டுமல்ல, அடிக்கடி சென்று பார்த்து செலுத்திய அன்பும்தான் !! (ஜெகதீஷ் சந்திரா போஸ் தியரி !!!)
அன்புடன்
நெ வீ வாசுதேவன்
டியர் சுந்தர்ஜி ,
வணக்கம் . டாக்டர் கலாம் ஒரு சரித்திரம் .அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை .அவர் நமக்கு சொல்லி விட்டு சென்ற கனவுகளை நனவாக்குவோம் .
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்