Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

print
‘வேல்மாறல்’ நமது வாழ்விலும் வாசகர் ஒருவர் வாழ்விலும் நிகழ்த்திய அற்புதம் பற்றிய மற்றுமொரு பதிவு இது.

‘வேல்மாறல்’ பற்றிய பதிவை தளத்தில் பார்த்து நம்மிடம் வேல்மாறல் நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட வாசகர்கள் பலருக்கு கடந்த காலகட்டங்களில் அந்நூலை அனுப்பிவைத்தோம். எத்தனை பேர் அதை முறையாக தவறாமல் பாராயணம் செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை.

எந்த ஒரு பாராயண முறைக்கும் பலன் தெரியவேண்டும் என்றால் சிறிது அவகாசம் பிடிக்கும். குறைந்தது அரை மண்டலமோ அல்லது ஒரு மண்டலமோ அவகாசம் தேவை.

DSC06686-22

வேல்மாறல் ஒரு பரம ஔஷதம். நமது அத்தனை பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. வேல்மாறல் வரிகளை சற்று ஊன்றிப் பார்த்தாலே அது புரியும். எத்தனை பேர் ஊன்றிப் பார்த்தீர்கள்?

நோய், பகை, கடன், உறவுகளில் பிரச்னை என அனைத்திற்கும் அதில் தீர்வாக வரிகள் உண்டு. அது தான் அதன் சிறப்பு.

துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் |

இதன் அர்த்தம் பார்த்தாலே புரியும். முருகனை வணங்கும் அடியார்களுக்கு யாரேனும் தீமை நினைத்தால், அவர்களுடைய குலத்தையே வேல் சென்று அழித்துவிடுமாம். இந்த வரிகளை எழுதியது அருணகிரிநாதர். வேல் வகுப்பில் இதை அவர் கூறியிருக்கிறார்.

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில், சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளையையடுத்து சச்சிதானந்த சுவாமிகள் வள்ளிமலைக்கு வந்தபோது இதன் சக்தியை உணர்ந்து இதன் வரிகளை முன்னும்பின்னும் மாற்றிப்போட்டு வேல் மாறலை உருவாக்கினார். அப்படி மாற்றிப் போட மாற்றிப்போட இதற்கு சக்தி பன்மடங்காகிவிட்டது. (சூரியனுக்குள் ஏற்படும் அணுப்பிளவு, அணுசேர்க்கை போல!)

இதற்கு யந்த்ர வடிவம் கொடுத்து வேல்மாறல் யந்த்ரத்தை அறிமுகப்படுத்தியது ஸாதுராம் ஸ்வாமிகள். இவர் வள்ளிமலை சுவாமிகளின் நேரடி சீடர்.

கடந்த ஆண்டு நாம் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு பெற்றோருடன் சென்று வந்த நேரம், அப்பாவுக்கு உடல்நலம் குன்றியது என்று நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். (பார்க்க : காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை!)

வைத்தீஸ்வரன் கோவில், திருப்பாம்புரம் தரிசனம் முடித்து நாங்கள் சிதம்பரம் வரும்போது அப்பாவுக்கு மிகவும் முடியவில்லை. எனவே சிதம்பரம் முழுக்க அலைந்து வடக்கு கோபுரத்தின் எதிரே வீடும் கிளினிக்கும் ஒன்றாக வைத்திருந்த நடராஜ் (!) என்கிற டாக்டரை சந்தித்து அவசர சிகிச்சை அளித்தோம்.

“இப்போதைக்கு பிரச்னையில்லை. நான் இன்ஜெக்ஷன் போட்டு மருந்து மாத்திரை எழுதித் தர்றேன். சில டெஸ்ட் எழுதித் தர்றேன். சென்னை போனவுடனே அதை முதல்ல எல்லா டெஸ்ட்டையும் எடுத்திடுங்க” என்று முக்கிய டெஸ்ட்டுகள் சிலவற்றை எழுதித் தந்தார். (இவர் தினசரி தில்லை நடராஜர் சன்னதிக்கு சென்று தேவாரம் பாடுபவர். புவனகிரி ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தில் டிரஸ்டிகளில் ஒருவர். இவர் நமது பிரார்த்தனைக்கு கூட தலைமை ஏற்றிருக்கிறார். பார்க்க : விருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்!)

அவருக்கு நன்றி கூறி விடைபெற்று சென்னை திரும்பியதும் மறுநாள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றோம். அப்பாவிற்கு பிளட் சுகர், ஈ.சி.ஜி. உட்பட எல்லா முக்கிய டெஸ்ட்டுகளும் எடுத்தோம். அடுத்த நாள் ரிப்போர்ட்டை பார்த்தால், அப்பாவுக்கு சுகர் தாறுமாறாக அதாவது அபாயகட்டத்தையும் தாண்டி எங்கோ போயிருருந்தது.

அப்பா இத்தனைக்கும் உடல் பருமனானவர் அல்ல. நல்ல உழைப்பாளியும் கூட. (உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்!) அப்பா உணவை வேளாவேளைக்கு சாப்பிடமாட்டார் அது ஒன்று தான் பெரிய மைனஸ் அவரிடம். நாம் இது குறித்து எத்தனையோ சொல்லியும் அவரை வழிக்கு கொண்டு வரமுடியவில்லை. சிறுகுழந்தைகளை கூட நீங்கள் கட்டுப்படுத்திவிடலாம். வயதானவர்களை கண்ட்ரோல் செய்வது ரொம்ப கடினம்.

சுகர் அபாய கட்டத்தில் இருந்ததால் அப்பாவையம் டெஸ்ட் ரிப்போர்ட்டுகளையும் பார்த்த டாக்டர், “உடனே இங்கே அட்மிட் செய்துவிடுங்கள். இந்நிலையில் இவர் வெளியே செல்வது ஆபத்து. சுகர் குறைந்து கண்ட்ரோலுக்கு வந்தபிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வோம்” என்று கூறிவிட்டார்.

“சார்… இவர் வேளாவேளைக்கு சரியா சாப்பிடுறதில்லை. அதனால தான் சுகர் வந்திருக்கா?” என்று நமது சந்தேகத்தை தனியே கேட்டோம்.

“இல்லை… தவறான உணவு முறையால் அவருக்கு இது வரவில்லை. அவருடைய வயதின் காரணமாக வந்திருக்கிறது. இது AGE FACTOR ஆல் வரக்கூடிய சுகர்….” என்றார்.

பொதுவாகவே எழுபது வயது கடந்துவிட்டால் சுரப்பிகள் எல்லாம் பலவீனமாகிவிடும். இது போன்ற metabolic diseases முதுமையில் சகஜம். எனவே 50 வயதை கடந்தால் அடிக்கடி உடலை செக்கப் செய்துகொள்ளவேண்டும். எதுவுமே ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். முற்றிப்போனால் கஷ்டம்.

அப்பாவுக்கெல்லாம் சுகர் வராது என்று நாம் கருதியது எந்தளவு முட்டாள்தனம் என்று அப்போது நமக்கு உரைத்தது. (எனவே இன்றும் அம்மாவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று செக்கப் செய்து வருகிறோம்.)

அப்பாவிடம்… “உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருப்போம். கேட்டீங்களா? இப்போ பாருங்க சுகர்ல கொண்டு வந்துவிட்டிருக்கு” என்று நமது கவலையை சற்று பகிர்ந்துகொண்டோம்.

பொதுவாகவே நமக்கு இந்த மருத்துவமனை, டெஸ்ட், ஆப்பரேஷன் என்றாலே அலர்ஜி. இருப்பினும் விதி வலியதல்லவா?

சரி என்ன செய்வது… அப்பாவை ராமச்சந்திராவில் அட்மிட் செய்தோம். மருந்து மாத்திரைகள் வாங்க கீழே OP பிளாக் வந்தபோது முருகப் பெருமானின் மிகப் பெரிய படம் ஒன்று கண்ணில் பட்டது. படத்திற்கு முன்னே சென்று கண்ணைமூடி ஒரு சில வினாடிகள் பிரார்த்தித்தோம்.

DSC02115-22

‘யாமிருக்க பயமேன்?’ என்று முருகன் ஆறுதல் சொல்வதைப் போல தோன்றியது.

நாமும் அம்மாவும் மருத்துவமனையில் இருந்து மாறி மாறி பார்த்துக்கொண்டோம். தங்கையும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டாள். நண்பர் ராகேஷ் அவர்களின் தம்பி மனோ அந்நேரத்தில் மிகவும் உதவியாக இருந்தார்.

மருத்துவமனையில் இருந்தபடியால் எதிலும் மனம் லயிக்கவில்லை. நண்பர் முகலிவாக்கம் வெங்கட் விஷயம் தெரிந்து நமக்கு ஃபோன் செய்தார். அவரிடம் விஷயத்தை விளக்கி, நங்கநல்லூர் பொங்கி மடலாயத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஸாதுராம் ஸ்வாமிகளின் மூத்த சகோதரருமான திரு.எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் அவரது மகன் குஹானந்தன் அவர்களையும் நமக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்ளச் சொன்னோம். அவரும் அவர்களிடம் பேசி, விஷயத்தை எடுத்துக்கூறி நமது அப்பாவுக்காக பிரார்த்திக்கும்டி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, அட்மிட் ஆனது பிறகு அப்பாவுக்கு முதல் இரண்டு நாட்கள் இன்சுலின் போட்டும் சுகர் குறையவேயில்லை. இதனால் எங்கள் பதற்றம் அதிகரித்தது. அப்போது தான் ‘வேல்மாறல்’ நினைவுக்கு வந்தது. மருத்துவமனையில் இருந்தபடி வேல்மாறல் படித்து வந்தோம். அதுவரை குறையாத சுகர் அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசி நாளன்று அங்கு நடைபெற்ற வேறு ஒரு உத்சவத்திலும் கலந்துகொண்டோம். (அது பற்றி தனியே சொல்கிறோம்).

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்

ரத்தம், நாளம், உடைப்பு, நரம்பு என எத்தனை அர்த்தம் பாருங்கள இந்த வரிகளில்…

அப்பா மருத்துவமனையில் இருந்த எட்டு நாட்களும் எட்டு யுகங்களாக கழிந்தது. இத்தனை களேபரத்துக்கு இடையே தளத்தை வேறு தொய்வின்றி பார்த்துக்கொண்டோம்.

திருப்புகழ் சகோதரர்களில் மூத்தவர் திரு.எஸ்.வி.சுப்ரமணியம் அவர்கள்
திருப்புகழ் சகோதரர்களில் மூத்தவர் திரு.எஸ்.வி.சுப்ரமணியம் அவர்கள்

குஹானந்தன் அவர்களிடம் வெங்கட் விஷயத்தை சொன்னபோது நிச்சயம் அப்பாவுக்காக பிரார்த்திப்பதாகவும், பூஜை செய்வதாகவும் இரண்டொரு நாளில் அவருக்கு சரியாகிவிடும் என்றும் அருள்வாக்கு கூறியிருக்கிறார். (திருப்புகழ் பாடும் நா அது!) வெங்கட்டும் நம்மிடம் அந்த தகவலை தெரிவித்தார்.

இது போன்ற நேரத்தில் கிடைக்கும் ஆறுதல் மிகப் பெரிய ஒன்று. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல, ஊருக்கெல்லாம் ஒருவர் ஆறுதல் சொன்னாலும் தனக்கென்று வரும்போது அதை தாங்கிக்கொள்வது மிகவும் கடினம். மிகப் பெரிய மனிதர்களே இதற்கு தப்ப முடியாது எனும்போது நாம் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?

எப்படியோ நமக்காக கவலைப்படும் பிரார்த்திக்கும் சில நல்ல நண்பர்களை வாசகர்களை ஆண்டவன் நமக்கு அருளியிருப்பதால் இந்த கடினமான காலகட்டத்தை நாம் சுலபமாக கடந்து வந்தோம்.

வேல்மாறலை நாம் அப்போது இருந்த சூழ்நிலையில் படிப்பது சிரமமாக இருந்தது. (ஊசி போடுற டாக்டருக்கே ஊசி போட்டா கூட வலிக்கத் தானே செய்யும்?) ஏனெனில், மனம் மிகவும் சஞ்சலத்துடன் இருந்த நேரம் அது. எப்படியோ படித்து வந்தோம்.

முருகனருளால் அப்பா அதன் பிறகு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். தற்போது இன்சுலின் எடுத்துக்கொள்கிறார். பிரச்சனை எதுவும் இல்லை. அவர் அன்று இருந்த நிலைமையை ஒப்பிடும்போது இப்போது மிகவும் பெட்டர்.

IMG_5159

அதற்கு பிறகு குஹானந்தன் & எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்கள் யாத்திரை, சுற்றுப்பயணம் என்று பிஸியாக இருந்தார்கள். எனவே சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அடிக்கடி அலைபேசியில் பேசிவந்தோம்.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் நாம் சற்று மனசஞ்சலத்துக்கு உள்ளாகியிருந்த நேரம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். நமக்கு மட்டும் என்னவோ அது பல்லாயிரமாக இருக்கிறது! (கொஞ்சம் பொறுங்கள். நேரம் வரும்போது இதைப் பத்தியெல்லாம் ஒரு தொடரே அளிக்கிறோம்! அவ்ளோ விஷயம் இருக்கு!! )

இந்நிலையில் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்தபோது நண்பர் வெங்கட் ஃபோன் செய்து, குஹானந்தன் அவர்களையும் அவர் தந்தை எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் சந்திக்க மாலை நங்கநல்லூர் போகப்போவதாகவும் நம்மையும் வரமுடியுமா என்றும் கேட்டார்.

திருப்புகழ் ஒலிக்கும் அந்த வீட்டுக்கு ஒருமுறை சென்று வந்தாலே மனம் சற்று சாந்தியடையும் என்று தோன்றியது. நமக்கும் வேறு ஒரு முக்கிய விஷயம் குஹானந்தன் அவர்களிடம் கேட்கவேண்டியிருந்ததால் நாமும் திரு.வெங்கட்டுடன் நங்கநல்லூர் சென்றோம்.

அப்பப்பா… ஒரு அருமையான சத்சங்கம் அமைந்தது இறைவன் அருள். திருப்புகழ், வேல்மாறல், திருமுறை, வள்ளிமலை ஸ்வாமிகள் என பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். இவர்களிடம் என்ன ஸ்பெஷாலிட்டி என்றால் பேசும்போதே திருப்புகழ் பாடுவார்கள். நாளெல்லாம் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். அத்தனை இனிமையான குரல்வளம்.

நாம் வந்த நோக்கத்தை கூறியாதும் நம்மிடம் குஹானந்தன் அவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு சென்று வருமாறு கேட்டுக்கொண்டார். (இதையடுத்து தான் இந்த மாத துவக்கத்தில் பெற்றோருடன் திருச்சி சென்றுவந்தோம்.) தவிர மேலும் சில ஆலோசனைகள் சொன்னார்.

IMG_5156
திருப்புகழ் பாராயண திருநெறித் தவமுறை நூலை நமக்கு அவர்கள் பரிசளித்தபோது…

வேல்மாறல் பற்றிய பேசிக்கொண்டிருந்தபோது, அது எந்தளவு சக்திமிக்கது என்பதற்கு எடுத்துக்காட்டாக வேல்மாறல் நூலில் இடம்பெற்றுள்ள, வேல்மாறல் மஹாமந்த்ரப் பாராயணப் பலன் சுலோகத்தை பாடிக்காட்டினார் திரு.எஸ்.வி.சுப்பிரமணியம். (இதையெல்லாம் கேட்கவே புண்ணியம் செயதிருக்கவேண்டும்!) திருப்புகழ் சகோதரர்கள் என்றே இவருக்கு பெயர். மகா சுவாமிகள் இவரையும் இவரது தம்பி ஸாதுராம் ஸ்வாமிகளையும் எங்கே பார்த்தாலும் திருப்புகழ் பாடும்படி கேட்டுக்கொள்வாராம்.

மேற்படி ஸ்லோகத்தை பாடிவிட்டு ஒவ்வொரு வார்த்தையாக பொருள் விளக்கிச் சொல்லும்போது தான் நாம் நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

‘அட…. எத்தனை தடவை வேல்மாறல் படித்திருப்போம். இந்த ஸ்லோகத்தை நாம் ஊன்றி படிக்கவில்லையோ…’ என்று தோன்றியது.

அந்தளவு அற்புதமான வரிகள். இயற்றியது ஆசுகவி சாதுராம் ஸ்வாமிகள் ஆயிற்றே….! (ஆசுகவி என்றால் எந்த இடத்திலும் சூழலிலும் கவிபாட வல்லவர்கள்!)

வேல்மாறல் மஹாமந்த்ர பாராயணப் பலன்!

கால்மாறி ஆடும் இறை கால்முளையாம் கந்தர்கைவேல் வகுப்பைக் கண்டு
நூல்மாரி வரத்தொகுத்து நோய்பிலிபேய் ஸுனியம்எலாம் நூற வேண்டி
‘வேல்மாறல்’ எனும்பேரால் வகுத்தருளி வள்ளிமலை மேதை வள்ளல்
பால்மாறல் இன்றிஉத(வு) அரிய மந்த்ரஜபப் பயன்மிக் காமே!
– ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள்

இதன் பொருள் என்ன தெரியுமா?

மதுரையில் ராஜசேகரப் பாண்டியனுக்காக இடது காலை கீழே வலது காலை மேலே தூக்கி, காலை மாற்றி நடனம் ஆடிய நடராஜப் பெருமானின் (கால் முளை) மைந்தனாகிய கத்தாப் பெருமானின் கையில் உள்ள வேலைப் புகழ்ந்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். அந்த வேல் வகுப்பில் உள்ள அடிகள் மாறி மாறி வரும்படியாகத் தயக்கமின்றி தொகுத்து வியாதிகள், பேய், பில்லி, சூனியம், போன்றவையால் வரும் கஷ்டங்கள் எல்லாம் பொடிப் பொடியாக ஆகுமாறு வகுத்து, அதற்கு ‘வேல் மாறல்’ என்று பெயரிட்டார் மகாமேதையாம் வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதாநந்த ஸ்வாமிகள். அந்த அருமையான யந்த்ர மந்த்ரத்தை ஜெபிப்பதால் வரும் பயன் மிக மிக அதிகமாகும். * நூற வேண்டி என்றால் – சுக்கு நூறாக வேண்டி என்று பொருள்.

Velmaral Parayanap Palan

எப்படி… இந்த நூல் உங்களிடம் இருந்த இத்தனை மாதங்களில் மேற்கூறிய பாராயணப் பலன் ஸ்லோகத்தையோ அதன் பொருளையோ படித்திருக்கிறீர்களா?

‘வேல்மாறல்’ தற்போது மிகவும் பிரபலமடைந்துவிட்டதையடுத்து பல பதிப்பகங்கள் வேல்மாறலை வெளியிட்டு வருகின்றனர். வள்ளிமலை ஸ்வாமிகள் ராயல்டி கேட்கமாட்டார் என்கிற தைரியம் தான்.

ஆனால் அவர்கள் பதிப்புக்கும் நம் வாசகர்களுக்கு நாம் அனுப்பிவரும் பொங்கி மடாலயம் வெளியிட்டுள்ள பதிப்புக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அது வணிகம். இது சேவை.

இந்த நூலில் மட்டும் தான் ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள் இயற்றிய வேல்மாறல் பாராயணப் பலன் சுலோகம் உண்டு. மேலும் திருப்புகழ், கந்தரலங்காரம், தேவாரம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முத்து முத்தான பாடல்கள், வேல்மாறல் வரலாறு, யந்த்ரம் உருவான வரலாறு, ஸாதுராம் ஸ்வாமிகள் வாழ்க்கைக் குறிப்பு என பல விஷயங்கள் உள்ளது.

உதாரணத்திற்கு பாருங்கள்…

கந்தரலங்காரம்

விழி, மொழி, முன்பு செய் பழி, வழித் துணை குஹன்

விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.

மயிலின் திறம் சொல்லும் மயிலலங்காரம்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

பிரதான ஸ்லோகமான ‘திருத்தணியில் உதித்தருளும்’ துவங்கும் முன், இது போன்ற ஏகப்பட்ட ஸ்லோகங்கள், கணபதி ஸ்துதி என்று பல எளிய இனிய ஸ்லோகங்கள் உள்ளன. வேல்மாறல் பாராயணத்தின் போது இவற்றையெல்லாம் சேர்த்து படிப்பது பலனை விரைந்து பெற்றுத் தர உதவும்.

மருந்தை சாப்பிடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும்.

IMG_20160630_213804

இப்போது உங்களிடம் நாம் அனுப்பிய வேல்மாறல் இருந்தால் நூலை மீண்டும் எடுத்துப் பார்க்கவும். கைரேகை சாஸ்திரம் அறியாத ஒருவன் ரேகைகளை பார்ப்பதற்கும் அதுவே அவன் கற்றுக்கொண்ட பிறகு பார்ப்பதற்கும் எத்தனை வேறுபாடு உள்ளதோ அந்த வேறுபாடு உங்களுக்கு புரியும்.

முழு நூலையும் படித்து பாராயணம் செய்வதற்கு அதிகபட்சம் நாற்பது நிமிடங்கள் ஆகும். ஒரு அரை மண்டலமோ அல்லது ஒரு மண்டலமோ பாராயணம் செய்து பாருங்கள். கண்கூடான பலன் உண்டு.

தொடர்ந்து திருப்புகழ் பற்றியும் ஸாதுராம் ஸ்வாமிகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

நமது HOROSCOPE & PROFILE இரண்டையும் கேட்டுப் பெற்று அவர் பூஜையறையில் வைத்து ஆசி பெற்றுத் தந்தார்.

திருப்புகழில் உள்ள கீழ்கண்ட பாடலான,

விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிருந்து – வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் – வசை கூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடி தான துன்ப – மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே!

மற்றும் பல தேவார திருமுறை பதிகங்களை பாடினார். நாமும் சேர்ந்து பாட (?!) ஆசை. ஆனால் அவர்களின் குரலை மட்டும் கேட்க விரும்பியதால் நாம் வாயசைப்பதோடு நிறுத்தி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். (காணொளி இணைக்கப்பட்டுள்ளது). இந்த காணொளி மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்தவர் நண்பர் முகலிவாக்கம் வெங்கட் அவர்கள்.

குஹானந்தன் அவர்கள் வீட்டில், அவரது இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. சந்திப்பு ஏற்படுத்திய சுவாரஸ்யம் மனநிறைவை விட அக்குழந்தைகள் செய்த சேட்டை லூட்டி இது தான் சுவாரஸ்யம், மனநிறைவு.

பேசிக்கொண்டிருக்கும்போதே அப்பா, தாத்தாவின் மீது ஏறி உட்காருவது, அவர்கள் காதை கடிப்பது, குறுக்கே ஓடுவது, கைகளால் சைகை செய்வது, நாம் பேசும்போது அவர்கள் குறுக்கே ஏதாவது சொல்வது என இவர்களின் செயல் ஒவ்வொன்றும் கவிதை. கானொளியில் குழந்தைகள் செய்யும் குறும்பை பாருங்கள். காமிராவுக்கு முன்னால் சென்று மறைக்கக்கூடாதாம்… குனிந்தபடி செல்வாள். இப்படி ஒவ்வொன்றும் ஒரு கவிதை. குழந்தைகளின் செயல்களை ரசிக்க முடிந்தால் அப்படி ஒரு மனம் இருந்தால் அதுவே ஒரு வரம் தான்.

பொதுவாக இதுபோன்ற பெரியவர்களை சந்திப்பதென்றால் வேஷ்டி அணிந்து செல்வது தான் நம் வழக்கம். ஆனால், அன்று அலுவலகம் வந்தபிறகு தான் வெங்கட் நமக்கு தகவல் சொன்னதால் பேன்ட் ஷர்ட் அணிந்து செல்லவேண்டியதாகிவிட்டது.

இன்றைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வேல்மாறல் படித்து வருகிறோம்.

ஆக அப்பாவை குணமடையச் செய்தது முதல் நமக்கு ஒரு இன்ஸ்டன்ட் ஆறுதல் அளித்தது வரை வேல்மாறல் கைமேல் பலன் தந்துள்ளது.

இதற்கிடையே சென்ற வாரம் சேலத்திலிருந்து ஒரு வாசகி நம்மை தொடர்பு கொண்டு பேசினார். தளத்திற்கு தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை அளித்து வருபவர் அவர். நீண்ட நாள் நம்மிடம் பேச விரும்பியதாகவும் தற்போது சந்தர்ப்பம் அமைந்ததாகவும் பொதுத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவரின் கணவர் பல ஆண்டுகள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதனால் குடும்பத்தில் அமைதி தொலைந்து சண்டையும் சச்சரவுமே எப்போதுமே நீடித்து வந்ததாகவும் இரு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து, ஒருவனுக்கு திருமணமாகி சென்ற பின்னரும் அவருக்கு அப்பழக்கம் நிற்கவில்லை என்றும் தான் கலங்கி தவித்ததாகவும் அந்நேரத்தில் நமது தளத்தில் வேல்மாறல் பற்றிய பதிவுகளை பார்த்ததாகவும், அது முதல் வேல்மாறல் படிக்கத் துவங்கியதாகவும், சரியாக இரண்டு மாதங்களில் அவர் கணவர் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.கேட்கவே சந்தோஷமாக இருந்தது.

அவரது ப்ரைவசிக்காக பெயரை வெளியிடவில்லை.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால், அவரிடம் ஏற்கனவே ‘வேல்மாறல்’ இருந்தது. ஆனாலும் அதை அவர் படிக்கவில்லை. நமது பதிவுகளை பார்த்தவர் பின்னர் ஆர்வத்தினால் உந்தப்பட்டு படிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் பின்னர் பலன் கிடைத்திருக்கிறது.

உங்கள் நோய்க்கான ஒளஷதம் (மருந்து) உங்களிடம் இருந்தாலும், அதை வைத்துக்கொண்டிருப்பதால் நோய் தீர்ந்துவிடுமா? அதை அதற்குரிய பத்தியம் மற்றும் விதிமுறைப்படி உட்கொண்டால் தானே நோய் நீங்கும்? எனவே வேல்மாறல் வைத்திருந்தால் மட்டும் போதாது. அதை ஆராதிக்கவேண்டும். அன்புடன் நம்பிக்கையுடன் படிக்கவேண்டும். ஆனால் இதற்கும் ஒரு அருள் வேண்டும். (இப்படி சொல்ல காரணம் இருக்கிறது!)

முக்கிய குறிப்பு…

நம் வாசகியரில் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ குடிப்பழக்கம் இருந்து அதனால் குடும்பத்தில் அமைதி இழந்து துன்பத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் தவறாமல் வேல்மாறல் படித்து வந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். சம்பந்தப்பட்டவர்கள் மனம் மாறுவதுடன் குடும்பத்திலும் அமைதி ஏற்படும். மேன்மேலும் வரும் ஆபத்துக்கள் தடுக்கப்படும்.

அடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விஷேஷ பதிவு ஒன்று வரவிருக்கிறது… STAY TUNED.

திருப்புகழ் சகோதரர்கள் இல்லத்தில் சில மணித்துளிகள்… வீடியோ!

==========================================================

‘வேல் மாறல்’ அகண்ட பாராயணம்!

ரும் வெள்ளிக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு 28/07/2016 வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை நன்னாள். அன்று காலை 6.00 மணி முதல் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிவரை நங்கநல்லூரில் உள்ள பொங்கி மடாலயத்தில் ‘வேல் மாறல்’ அகண்ட பாராயணம் நடைபெறும். (தொடர்ச்சியான பாராயணம்).

DSCN7556

DSC03316
சென்ற ஆண்டு பொங்கி மடாலயத்தில் வேல்மாறல் அகண்ட பாராயணம் நடைபெற்றபோது…

இதில் கலந்துகொள்ளவிரும்பும் வாசக அன்பர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம். உணவு மற்றும் இதர அடிப்படை வசதி உண்டு. இதில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸாதுராம் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலேயே இது நடைபெருகிரபடியல் நிச்சயம் உடனடி பலன் உண்டு.

சென்ற ஆண்டு நடைபெற்ற அகண்ட பாராயணத்தில் நாம் சிறிது நேரம் கலந்துகொண்டோம். நண்பர் ராகேஷ் முழுமையாக இருந்தார்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

‘யாமிருக்க பயமேன்’ தொடருக்கு….

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

==========================================================

Related articles….

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

==========================================================

[END]

3 thoughts on “உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)

  1. வணக்கம் சார். இடையில் சில நாட்கள் வரமுடியவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு பதிவாக படித்து வருகிறேன். ஒன்றை தவறவிட்டால் கூட மிகப் பெரிய இழப்பு போலருக்கிறது. அந்தளவு ஒவ்வொரு பதிவும் ஒரு கல்வெட்டு.

    நீங்கள் கூறியிருப்பது போல, இந்தப் பதிவை படித்தவுடன் உடனே வேல்மாறலை எடுத்து புரட்டினேன். இப்போது அதன் ஒவ்வொரு வரியின் அர்த்தமும் வேறு மாதிரி தெரிகிறது.

    திருப்புகழ் மீது பேரார்வம் வந்துவிட்டது இந்த பதிவை படித்து முடித்த பின்னர்.

    இறுதியில் காணொளியை இணைத்தமைக்கு நன்றி. எந்தவித இசைக்கருவியும் இல்லாமால், மைக் இல்லாமல் திருப்புகழ் சகோதரர்கள் பாடும் அந்த பாடல்கள் அருமை அற்புதம். கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.

    நீங்கள் சொன்ன பிறகு அக்குழந்தைகளை கவனித்தேன். உண்மையில் கவிதை.

    உங்கள் அப்பாவையும் அம்மாவையும் கேட்டதாக சொல்லவும்.

    துவக்கத்தில் அளித்திருக்கும் முருகன் படம் பார்க்க எளிமையாக இருந்தாலும் அத்தனை அழகு.

    இப்படி ஒரு அருமையான பதிவை ஆத்மானுபவத்தை தந்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றிகள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. Ji excellent article i am reading very slowly like slokam each and every line. It looks like u were drowned in the அத்மானுபவம். While preparing this article. This reflects in readers too through ur narration. கோடானுகோடி நன்றிகள் ஈடாகாது. Pl use same comment in site. I a unable to paste it there. I should be thankful to u for attaching the video which made tears on eyes. Pl send the video in our RM group. We shall hear that daily. பிழை பொறுத்தருள்வாவாய் கச்சி ஏகம்பனே!!!

Leave a Reply to Prabu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *