Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

print
சென்ற வாரம் ஒரு நாள், தலைவர்கள் / சாதனையாளர்கள் பிறந்த நாள் பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தோம். யாராவது முக்கியமானவர்கள் பிறந்திருந்தால் அவர்களைப் பற்றிய பதிவை அளிக்கவேண்டும் என்பதற்காக. அதில் பிப்ரவரி 19 ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாள் என்று இருந்தது. உ.வே.சா. – இவர் ஒரு தமிழறிஞர். தமிழுக்கு அருந்தொண்டாற்றியிருக்கிறார். இவ்வளவு தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. அதாவது பெயர் தெரியும் அதன் வீரியம் தெரியாது.

Uththamadhanapuram 6

படித்த ஒன்றிரண்டு தகவல்களிலேயே அவரைப் பற்றிய பிரமிப்பு பன்மடங்கு கூடவே நேரே தி.நகர் சென்று அவரது சுயசரிதையான ‘என் சரித்திரம்’ நூலை வாங்கி வந்தோம். முதல் அத்தியாயம் (ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!) படித்தபோதே சிலிர்த்துவிட்டோம். அப்போது தான் புரிந்தது முதலில் செல்லவேண்டியது மகாமகம் அல்ல உத்தமதானபுரம் என்று.

உத்தமதானபுரம் எங்கே இருக்கிறது என்று தேடியபோது, கிடைத்த தகவல்கள் போதுமானவையாக இல்லை. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் (சுமார் 20 கி.மீ.) உள்ள பாபநாசம் அருகே தான் உத்தமதானபுரம் உள்ளது என்று மட்டும் தெரிந்தது.

சரி நேரே முதலில் பாபநாசம் போவோம் பிறகு மகாமகம் போகலாம் என்று உத்தமதானபுரம் புறப்பட்டோம். பயணத்தின்போது இந்த நூலையும் கூடவே கொண்டு சென்றோம். கிடைத்த சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்க படிக்க பல பொக்கிஷங்கள் அடங்கிய தங்கச் சுரங்கம் அது என்று மட்டும் புரிந்தது.

இந்த நூலை ஏதோ சாதாரண தமிழ் நூல் என்று கருதிவிடவேண்டாம். சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’ படித்தால் எப்படி நாயன்மார்கள் காலத்து பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளமுடிகிறதோ அதே போன்று இந்நூலை படித்தால் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு காலத்து நடைமுறைகளை பக்தியை அறிந்துகொள்ளமுடியும்.

en charithiramமகா பெரியவரின் தெய்வத்தின் குரலை படிக்கும்போது நமக்கு எத்தகையதொரு உணர்வு ஏற்படுகிறதோ அதே போன்றதொரு உணர்வு இந்த நூல் படிக்கும்போதும் ஏற்படுகிறது. தெய்வத்தின் குரலில் பெரியவாவின் நடை படிக்க சுகமாயிருந்தாலும் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால், உ.வே.சா. வின் ‘என் சரித்திரம்’ மிக மிக எளிமையாக கிரகித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மேலும் தனிமனித ஒழுக்கம், சமய ஒழுக்கங்கள் எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டன என்று உ.வே.சா. சொல்லும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்காலத்திய எந்திர மயமான வாழ்க்கை குறித்து வெட்கப்படவேண்டியிருக்கிறது.

இந்த நூலுக்கு பேசாமல் ‘என் சரித்திரம்’ என்பதற்கு பதில் ’19 ஆம் நூற்றாண்டில் சிவபக்தியும், காவிரிக்கரை மக்களும் அவர்கள் பழக்கவழக்கங்களும்’ என்று பெயரிட்டிருக்கலாம். உண்மையில் அது தான் பொருத்தமாக இருக்கும்!

நாம் உத்தமதானபுரம் சென்று வந்தது பற்றியும் அங்கே உ.வே.சா. அவர்களின் நினைவு இல்லத்தையும் உத்தமதானபுரம் அக்ரஹாரத்தை சுற்றிப் பார்த்தது பற்றியும் பதிவை அளிக்கலாம் என்று நேற்று கணினியில் அமர்ந்தபோது எழுத்தாளர் சாரு நிவேதிதா தினமணியில் எழுதிய ‘பழுப்பு நிற பக்கங்கள்’ என்கிற தொடரை பார்க்க நேர்ந்தது. வரலாற்றில் மறக்க(டி)க்கப்பட்ட எழுத்தாளர்களை பற்றிய தொடர் அது.

அதில் உ.வே.சா. பற்றியும் அவரது ‘என் சரித்திரம்’ பற்றியும் ஒரு அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். (நமது உத்தமாதானபுர அனுபவம் தனிப் பதிவாக வரும்!)

‘என் சரித்திரம்’ குறித்து இதை விட யாரும் அற்புதமாக கூற முடியாது. எனவே அதையே இங்கு தருகிறோம்.  படிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை இந்த கட்டுரையை விட மாட்டீர்கள். நூல் விமர்சனமே இப்படி என்றால் ‘என் சரித்திரம்’ முழுமையும் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்!

ஒரு வார்த்தைக் கூட விடவேண்டாம். 

*******************************************************************

‘பழுப்பு நிற பக்கங்கள்’ – உ.வே.சா.

– சாரு நிவேதிதா

துவரை நான்கைந்து பதிப்பாளர்கள் தினமணியில் வெளிவரும் இந்த ‘பழுப்பு நிற பக்கங்கள்’ தொடரைப் புத்தகமாகக் கொண்டு வர விரும்பி என்னைத் தொடர்பு கொண்டதிலிருந்து இந்தத் தொடர் பலரையும் கவர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கான காரணம் அனைத்தும் நம்முடைய முன்னோடிகள் செய்த அளப்பரிய தியாகம் மட்டுமே. இந்தத் தொடர் வெறுமனே ஒரு வழிகாட்டி; அவ்வளவுதான். இந்த வழியாகச் சென்றால் தங்கச் சுரங்கத்தை அடையலாம் என்று சொல்லும் வழிகாட்டி. சுரங்கத்தைச் சென்றடைந்து தங்கம் கொள்வதோ மறுப்பதோ உங்கள் விருப்பம். இந்தத் தொடரைப் பதிப்பிப்பதை விட அவசரமான ஒரு பொறுப்பு பதிப்பாளர்களுக்கு உள்ளது. அது, இந்தத் தொடரில் நான் குறிப்பிட்டு வரும் பல்வேறு நூல்களைப் பதிப்பிப்பதுதான். விற்குமா எனத் தயங்க வேண்டாம். சோழர் காலத்து ஒரு வெள்ளிக்கு இன்றைய மதிப்பு எவ்வளவோ அவ்வளவு மதிப்பு உண்டு நம் முன்னோடிகளின் நூல்களுக்கு. அதிலும் உ.வே.சா. போன்றவர்கள் வெறும் தங்கச் சுரங்கம் மட்டும் அல்ல; அவர் எழுத்தில் தங்கத்தோடு கூட வைர வைடூரியங்களும் நவரத்தினங்களும் கொட்டிக் கிடக்கின்றன. உ.வே.சா. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களான என் சரித்திரம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் (இரண்டு பாகங்கள்), மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபால கிருஷ்ண பாரதியார், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற நூல்களெல்லாம் இதற்கு சாட்சி. அதிலும் என் சரித்திரம் ஏதோ ஒரு சுவாரசியமான சரித்திர நாவலைப் படிப்பது போல் உள்ளது. பக்கங்கள் பறக்கின்றன. இது தவிர புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், சுப்ரமணிய பாரதியார், இசைப் புலவர் ஆனை ஐயா முதலியோர் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதியிருக்கிறார் உ.வே.சா. இவையெல்லாம் உடனடியாகப் புத்தகங்களாகப் பதிப்பிக்கத் தக்கவை. இவையெல்லாம் இன்று கிடைப்பதற்கு அரிதாக உள்ளன. இந்தத் தொடருக்காக என்னுடைய பல நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் பழைய நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியும் பல நூல்கள் கிடைக்கவில்லை. உ.வே.சா. எழுதிய மகா வைத்தியநாதையர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம். ஓலைச் சுவடியிலேயே வாழ்ந்த உ.வே.சா.வின் நூலை ஓலைச் சுவடி படிப்பது போலவே படித்தேன்!

Uththamadhanapuram 3

இந்தக் கட்டுரைகளை வெறும் வழிகாட்டி மட்டுமே என்று குறிப்பிட்டேன். ஏனென்றால், க.நா.சு., அசோகமித்திரன் போன்றவர்கள் மலைமலையாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். க.நா.சு. அறுபது ஆண்டுகள் எழுதினார். அதுவும் இரண்டு மொழிகளில். எல்லாவற்றையும் தொகுத்தால் 50000 பக்கங்கள் வரலாம். அதுவே குறைவான கணக்கு. அசோகமித்திரன் க.நா.சு.வை மிஞ்சியிருப்பார். க.நா.சு.வை விட அதிக ஆண்டுகள் – 60 ஆண்டுகளுக்கும் மேலாக – எழுதி வருகிறார். இப்போது 84 வயதில் எழுதும்போதும் அவர் எழுத்தில் ஒரு சிறிதும் தளர்ச்சி இல்லை. இப்பேர்ப்பட்ட மேதைகளை ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரையில் அடக்குவது கடினம். ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை.

ஆனால் உ.வே.சா.வுக்கு ஆயிரம் பக்கங்கள் கூடப் போதாது. ஏனென்றால், அவரது வாழ்நாளில் நூறு பேர் செய்ய வேண்டிய பணியை அவர் ஒருவராகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்திருக்கிறார். சிறிய வயதில் தான் படித்த விதம் குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதுகிறார்:

“பள்ளிக்கூடத்தில் படித்தது தவிர வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.”

இதெல்லாம் அவர் படித்ததில் ஒரு துளி. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எந்தெந்த வரிகள் காணோம் என்பதை வெறும் ஞாபகத்திலிருந்தே எடுத்துக் கொண்டு விடும் திறன் பெற்றிருந்தார் உ.வே.சா. இது ஞாபக சக்தியைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல. பல்வேறு உரை நூல்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

Uththamadhanapuram 5
உத்தமதானபுர அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் தற்போதைய தோற்றம்…

உ.வே.சா.வின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இருந்திராவிட்டால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது. வாகன வசதி இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளைத் தேடி நடையாய் நடந்திருக்கிறார் அந்த மகான். அவருடைய பணி எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய நல்லுரைக் கோவை என்ற நூலின் நான்காவது தொகுதியில் உள்ள உதிர்ந்த மலர்கள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

1889-ம் ஆண்டு. பத்துப் பாட்டை ஆராய்ந்து பதிப்பிக்கத் துவங்கிய போது அதில் வரும் குறிஞ்சிப் பாட்டில் ஒரு சிக்கல். அது சங்கப் புலவர்களில் தலைசிறந்தவரான கபிலர் பாடியது. அதில் 99 மலர்களின் பெயர் வரும் இடத்தில் சில வரிகளைக் காணவில்லை. ஏட்டுச் சுவடியில் அந்த இடம் காலியாக இருக்கிறது. பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி எங்கெங்கோ அலைகிறார். நம் தமிழர்களின் விசேஷம் என்னவென்றால், ஆடிப் பதினெட்டு அன்று வீட்டில் இருக்கும் பழைய சுவடிகளையெல்லாம் ஆற்றில் போட்டு விடுவது வழக்கம். இப்படி அடித்துக் கொண்டு போனதுதான் அகத்தியம் போன்ற அருந்தமிழ் நூல்களெல்லாம். உ.வே.சா. பத்துப் பாட்டின் மூலத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர். திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதரவில் இருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சுவடிகளைத் தேடியாயிற்று. மாயூரத்துக்கு அருகில் உள்ள தருமபுர ஆதீனத்தில் மட்டுமே தேடவில்லை. தேடவும் முடியாது. திருவாவடுதுறைக்கும் தருமபுரத்துக்குமான பகை நீதிமன்றம் வரை போய் விட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய மொழிக்காக தருமபுரம் செல்கிறார் உ.வே.சா.

Uththamadhanapuram 7

‘ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்ததார். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டும் அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்று எண்ணினேன்; ‘திருவாவடுதுறை மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா? எதற்காக வந்தீர்?’ என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரைமணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை. நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்…’ விலாவாரியாகத் தான் வந்த காரணத்தைச் சொல்கிறார் உ.வே.சா.

‘அவ்வளவையும் கேட்டபிறகு அவர் தலை நிமிர்ந்தார். ‘என்ன சொல்லுவாரோ?’ என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர் போலக் காணப்பட்டார். பிறகு, ‘நாளை வரலாமே’ என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. ‘பிழைத்தேன்’ என்று நான் எண்ணிக்கொண்டேன்; ‘இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே’ என்று மகிழ்ந்தேன். ‘உத்தரவுப்படியே செய்கிறேன்’ என்று சொல்லி மறுநாள் வருவதாக விடை பெற்றுக்கொண்டு மாயூரம் சென்றேன்.’

UVESA

மாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையின் வீட்டில் அன்று இரவு தங்குகிறார். வேதநாயகம் பிள்ளையும் உ.வே.சா.வைப் போலவே மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். உ.வே.சா. சென்ற போது பிள்ளை நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். (அதற்கு அடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விடுகிறார்.) அன்று இரவு முழுதும் உ.வே.சா. உறங்கவில்லை. பொழுது புலர்ந்ததுமே கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் தருமபுர ஆதீனம் வருகிறார். அன்றும் ஸ்ரீ மாணிக்கவாச தேசிகர் முதல் நாள் இருந்த கோலத்திலேயே இருக்கிறார். அதே சாய்வு நாற்காலி. அதே மௌனம். இவரும் முதல் நாளைப் போலவே அருகில் போய் நிற்கிறார். அதன்பிறகு அங்கே பணிபுரியும் ஒருவரது சிபாரிசில் உ.வே.சா.வுக்குச் சுவடிகளைப் பார்க்க அனுமதி கிடைக்கிறது. அங்கேயிருந்த ஆயிரக் கணக்கான சுவடிகளில் தொல்காப்பியம் உட்பட பல பழந்தமிழ் நூல்கள் உரையோடு இருக்கின்றன. ஆனாலும் உ.வே.சா.வின் கவனமெல்லாம் விடுபட்ட மலர்களின் மேல்தான். இரவு பத்து மணி வரை உயரமான குத்துவிளக்கு வெளிச்சத்தில் சுவடிகளை ஆராய்கிறார். (காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த தேடல்!) அப்பொழுது, முன்னே குறிப்பிட்ட மடத்தின் ஊழியர் அங்கே வருகிறார். உ.வே.சா. தனக்கு வேண்டிய சுவடி கிடைக்காததை வருத்தத்தோடு சொல்லவும் அவர், ‘சில தினங்களுக்குமுன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் கொண்டுபோய் விட்டு விடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக் கொண்டு போனார்கள். அதில் சில பழைய ஒற்றை ஏடுகளைக் கண்டேன். ஒருவேளை மடத்துத் தஸ்தாவேஜாக இருக்கலாமென்று எண்ணி அவைகளை மட்டும் எடுத்துக் கட்டி என் பீரோவின் மேல் வைக்கச் செய்தேன். அவைகளில் ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்’ என்று சொல்கிறார். அந்த ஏடுகளில்தான் உ.வே.சா. தேடிய விடுபட்ட மலர்கள் இருந்தன. இப்போது குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களின் பெயர்களைக் கண்டு நாம் ஆச்சரியம் அடைகிறோம் என்றால் அதற்கெல்லாம் காரணம், உ.வே.சா.வின் அர்ப்பணிப்பும் தியாகமும் மட்டுமே. ஓரிரு வரிகளுக்கே இவ்வளவு உழைப்பு எனில் சங்க இலக்கியம் முழுவதையும் தேடி எங்கெல்லாம் அலைந்திருப்பார் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

இப்படி உ.வே.சா.வைத் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தை நிலைநாட்டிய பிதாமகராக நாம் அறிவோம். அதற்காகச் சிலையெல்லாம் வைத்திருக்கிறோம். ஆனால் உ.வே.சா.வின் பங்களிப்பு அது மட்டும் அல்ல. சுமார் 15-ம் நூற்றாண்டிலிருந்து பாரதியின் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. புலவர்கள் சமஸ்தான அதிபதிகளைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். அல்லது, இறைவனைத் துதிக்கும் பாடல்களை இயற்றினார்கள். அப்படி வறண்டு கிடந்த தமிழ்ச் சூழலில் புதியதோர் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பாரதி. இது வரலாறு. ஆனால் நமக்குத் தெரியாத வரலாறு என்னவென்றால், தமிழ் உரைநடையை நவீனப்படுத்தியதில் பாரதி அளவுக்கு முக்கியமானவர் உ.வே.சா. என்பதுதான். (பாரதி பிறப்பதற்கு 27 ஆண்டுகள் முன்பே பிறந்தவர் உ.வே.சா.) உ.வே.சா.வின் எல்லா உரைநடை நூல்களுமே மாபெரும் இலக்கிய அனுபவத்தைத் தருவதாக இருக்கின்றன. Oscar Lewis எழுதிய La Vida என்ற மானுடவியல் நூல் இலக்கிய நூலாக வகைப்படுத்தப்பட்டது போல் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அனைத்தும் புனைவு இலக்கியத்துக்குச் சமமாக வைக்கப்பட வேண்டியவையே. என் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அது பெயருக்குத்தான் உ.வே.சா.வின் சரித்திரமாக உள்ளது. மற்றபடி அதன் 800 பக்கங்களும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதன் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

என் சரித்திரத்தில் ஒரு காட்சி:

‘இப்போது (1940) உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.

இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.

இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதேயொழியக் குறையவில்லை.

உத்தமதானபுரத்தின் செழிப்பு - இதுவல்லவோ வாழும் இடம்!
உத்தமதானபுரத்தின் செழிப்பு – இதுவல்லவோ வாழும் இடம்!

எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி ஆற்றுக்குப் போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையில் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் ஜபம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.’

உ.வே.சா.வின் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) கிருஷ்ண சாஸ்திரிகள் எந்நேரமும் சிவநாம ஜெபத்தைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவர். நாகை மாவட்டம் கஞ்சனூருக்கு வடகிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள சூரியமூலை என்ற சிற்றூரில் வசித்து வந்தார். (இந்த சூரியமூலையில்தான் உ.வே.சா.வும் பிறந்தார்.) இவ்வளவு சிறிய ஊரில் இருக்கிறீர்களே என்று யாரேனும் கேட்டால், ‘அனாச்சாரத்துக்கு இடமில்லாத ஊர். திரண காஷ்ட ஜல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்?’ என்று கேட்பாராம். திரணம் – புல்; காஷ்டம் – விறகு. பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும் என்பது பொருள். பசு கூட எதற்கென்றால் சிவபூஜை செய்வதற்குப் பால் வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இதே கிருஷ்ண சாஸ்திரிகள் சூரியமூலையை விட்டுத் தன் சொந்த ஊருக்குப் புறப்படுவதற்குக் காரணமாக ஒரு சம்பவமும் நடந்தது. அந்த ஊரில் ஒரு பிராமணர் இறந்தார். அவரை மயானத்துக்கு எடுத்துச் செல்ல நான்கு பிராமணர் தேவை. கிருஷ்ண சாஸ்திரிகள் முன்வந்தார். இன்னொருவரும் வந்தார். இருந்தும் இரண்டு கை குறைந்தது. பிறகு வேறு ஜாதிக்காரர்களை அழைத்துக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டனர். தனக்கும் அப்படிப்பட்ட நிலை வந்து விடுமோ எனப் பயந்துதான் சொந்த ஊருக்குக் கிளம்பினார் கிருஷ்ண சாஸ்திரிகள்.

உ.வே.சா.வின் உரைநடை நூல்களின் இன்னொரு விசேஷம், அவை தமிழ்நாட்டு நிலவியலின் அற்புதமான ஆவணங்களாகத் திகழ்கின்றன. உத்தமதானபுரம் உருவான வரலாறு, அதன் தென்கிழக்கு மூலையில் உள்ள கோட்டைச்சேரி, தென்மேற்கில் இருக்கும் மாளாபுரம், அதற்கு மேற்கே உள்ள கோபுராஜபுரம், வடமேற்கே அன்னிக்குடி, உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலமான நல்லூர், வடமேற்கில் பேஷ்வாக்கள் என வழங்கப்பட்ட மகாராஷ்டிரப் பிராமணச் செல்வர்கள் வாழ்ந்த திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற ஸ்தலம் என்று நூற்றுக் கணக்கான ஊர்களின் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலவியலை விளக்குகிறார் உ.வே.சா. ஸ்மார்த்த பிராமணர்களில் உள்ள அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்ற மூன்று பிரிவினர் பற்றிய விளக்கத்திலும் ஊர்களே வருகின்றன. நந்திவாடி என்பது இன்ன ஊர் என்று தெரியவில்லை. அருவாட்பாடி என்பது மாயூரத்துக்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை என்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூர் என்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது. அத்தியூர் தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அத்தியூரைப் பற்றி அந்தக் காலத்தில் வழங்கிய ஒரு கதை இது:

அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்ப சங்கைக்குப் (இயற்கை உபாதையை தணித்தல்) போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, ‘நீ எந்த ஊர்?’ என்று கேட்டான். அவர், ‘இந்த ஊர்தான்’ என்று கூறினார்.

காவற்காரன் அதை நம்பவில்லை; ‘நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்’ என்றான்.

அந்தப் பிராமணர், ‘நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?’ என்றார்.

‘இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!’ என்றான் அவன்.

இரவில் வடக்குத் திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான்.

இப்படியாக என் சரித்திரத்தில் மட்டும் சுமார் 500 ஊர்களைப் பற்றிய கதைகளும் விவரங்களும் வருகின்றன. எனவே உ.வே.சா.வைப் பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர் என்று மட்டும் அல்லாமல் தமிழ் உரைநடையை நவீனமாக்கிய முன்னோடி எழுத்தாளராகவும் அறிந்து கொள்வோம். உ.வே.சா.வின் இல்லத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார்; காந்தியின் கூட்டத்துக்கு உ.வே.சா. தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். உ.வே.சா.வின் பேச்சைக் கேட்ட மகாத்மா இந்த முதியவரின் பேச்சைக் கேட்டால் எனக்கே தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறதே என்று சொல்லியிருக்கிறார். காந்தியை விட 14 வயது மூத்தவர் உ.வே.சா. அவர் எழுதிய பிற உரைநடை நூல்கள்:

நல்லுரைக்கோவை (நான்கு பாகங்கள்), நினைவு மஞ்சரி (இரண்டு பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், மணிமேகலை கதைச் சுருக்கம், புத்தசரிதம், திருக்குறளும் திருவள்ளுவரும், மத்தியார்ச்சுன மான்மியம் என்று ஏராளமான உரைநடை நூல்களையும் ஏழு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். இவை எல்லாமே அந்நாளைய ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளில் வெளிவந்து பல்லாயிரக் கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டவை.

என்ன நண்பர்களே… படித்துவிட்டீர்களா? எப்படி இருக்கிறது? இனி நம் உத்தமதானபுர அனுபவங்களை சொல்வதே பொருத்தமாக இருக்கும். அடுத்தடுத்து ஒன்றிரண்டு பதிவுகளில் அது பற்றி விளக்குகிறோம். நன்றி.

To download ‘என் சரித்திரம்’ in pdf format :
http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-UVeSa-EnCarittiram-0047.pdf

*******************************************************************

வாசக அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்!

இந்த மாதம் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கான பிராட்பேண்ட் கட்டணம் ரூ.3100/- உடனடியாக செலுத்தவேண்டியுள்ளது. (வீட்டிலும் நாம் ரைட்மந்த்ராவுக்காகவே இணையம் பயன்படுத்துகிறோம்). இன்றே கடைசி நாள். மாதத் துவக்கத்தில் சில சமயம் செலுத்துவோம். அப்போது தான் ‘விருப்ப சந்தா’ ஓரளவு சேர்ந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் தாமதமாக கட்டுவதால் தேவையின்றி LATE FEE யாக சில நூறு ரூபாய்கள் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. அதை தவிர்க்க விரும்புகிறோம். மேலும் தற்போது தளம் சற்று நிதி நெருக்கடியில் உள்ளது. வாசகர்கள் யாரேனும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி. நன்றி!

* டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தின்போது கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் இணைப்பு பழுதடைந்திருந்ததால் அதற்கு WAIVER பாக்கி வரவேண்டியுள்ளது. எனவே அதைக் காரணம் காட்டி CUSTOMER CARE ல் பேசி அபராதமின்றி செலுத்த ஒரு நாள் கூடுதலாக அவகாசம் கேட்டிருக்கிறோம்.

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்

========================================================

Also check :

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

========================================================

[END]

One thought on “பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

  1. “ஆஹா அருமை அருமை”. பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது.

    நீங்கள் உத்தமதானபுரம் சென்றபோதே தெரிந்தது, ஏதோ ஒரு மிகப் பெரிய அறிவுப் புதையலை தேடித் தான் சென்றிருப்பீர்கள் என்று. இப்போது தான் புரிகிறது.

    பச்சை பசேல் வயல்வெளிகள், திண்ணையுடன் கூடிய வீடுகள், சிதிலமடைந்த அந்தக் காலத்து வீடு உத்தமதானபுரமே ஒரு சொர்க்கபுரி தான்.

    “நமது வேகம் அதிகரிக்க அதிகரிக்க சாந்திக்கும் நமக்கும் இடையேயான தூரம் அதிகரிக்கிறது” – உ.வே.சா இதை எழுதய காலம் எப்படியும் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும். அப்போதே அப்படி என்றால் இப்போதைய நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

    முழு நூலையும் படிக்க pdf லிங்க் அளித்தமைக்கு நன்றி. இருப்பினும் நீங்களும் உத்தமதானபுரம் பற்றியும் ‘என் சரித்திரம்’ பற்றியும் அடிக்கடி பகிரவும். நம் தளத்தில் அதை படிக்கும்போது ஏற்படும் அனுபவமே தனி.

    வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் தொண்டு

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *