Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

print
காமகம் பற்றிய செய்திகளை படிக்கும்போது பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் கமிட்மெண்ட்டுகளால் நாம் செல்லமுடியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். அவர்கள் கவலைப்படவேண்டாம். இந்த வருடம் 2016ல் முழு மாமாங்கம் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் மகாமகம் குளம் சென்று நீராடக்கூடிய சந்தர்ப்பம் இன்னும் இருக்கிறது. (விபரங்கள் பதிவில் தரப்பட்டுள்ளது.) அதையும் மீறி போக இயலாதவர்கள் குறையை இந்தப் பதிவு நிச்சயம் தீர்க்கும் என நம்பலாம்.

Mahamagam 2016 - 1

Mahamagam 2016 - 2* இன்று அவசியம் இந்த பதிவை அளித்தே தீரவேண்டும் என்கிற காரணத்தால் சற்று அவசரகதியில் தயாரித்த பதிவு இது. எனவே CONTINUITY இல்லாமல் இருக்கக்கூடும். அடுத்த பதிவில் அதை சரிசெய்துவிடுவோம். வாசக அன்பர்கள் பொறுத்தருள்க!

** புகைப்படங்கள் ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டுகொண்டே இருக்கிறது. எனவே பதிவை அடிக்கடி REFRESH (F5) செய்தபடி பார்க்கவும்.

கடந்த 19 மட்டும் 20 ஆகிய தேதிகளில் நாம் கும்பகோணம் சென்று மகாமகக் குளத்தில் நீராடியது தெரிந்திருக்கும். நாம் தனிப்பட்ட மனிதராக செல்லாமல், உங்கள் அனைவரின் பிரதிநிதியாகவே சென்றதாக கருதுகிறோம். எனவே தான் இரண்டு முறை மகாமகக் குளத்தில் நீராடினோம். அதே போன்று மிகச் சிறப்பாக நடைபெற்ற ஒரு அன்னதான கைங்கரியத்திற்கு சிறிய நன்கொடை ஒன்றை அனைவரின் சார்பாக அளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Mahamagam 2016 - 16

Mahamagam 2016 - 3

Mahamagam 2016 - 4இருப்பினும் உங்களையும் நேரே அந்த வைபவதிற்கே அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் இந்த பதிவை பல இடங்களில் இருந்து தகவல்களை திரட்டி அளித்திருக்கிறோம்.

நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். திருத்தல வரலாறு மற்றும் இது போன்ற திருக்கோவில் உற்சவங்களை பற்றி படிப்பதும் சிரவணம் செய்வதும் மிகவும் புண்ணியம் என்று. பதிவை படிக்கும் அந்நேரம் நீங்கள் மானசீகமாக கும்பகோணத்தில் இருப்பதாகவும் திருக்குளத்தில் நீராடுவதாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். மகாமக குளத்தில் நீராடி, அன்னதானம் செய்த பலன் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும். அந்த நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.

Mahamagam 2016 - 5

Mahamagam 2016 - 6சந்தர்ப்ப சூழ்நிலை அமையப்பெற்றவர்கள் வரும் மார்ச் 13 க்குள் ஒரு முறை சென்று நீராடிவிட்டு வாருங்கள். இனி கூட்டம் குறைந்துவிடும் என்பதால் கவலை இல்லை.

மற்றபடி நமது மகாமக அனுபவத்தை விளக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாது.

நாம் முன்னரே சொன்னது போல, இந்த மகாமகத்திற்கு நாம் செல்வதாகவே இல்லை. அந்நேரம் நாம் ஆழியாரில் இருக்கவேண்டியது. கும்பகோணத்தில் உள்ள நண்பர் பிரபு, நம்மை தொடர்புகொண்டு மகாமகம் நாம் வருகிறோமா என்று விசாரித்தார். அப்படி வருவதாக இருந்தால் தங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் அனைத்து சௌகரியங்களும் இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தான் மகாமகம் செல்லவேண்டிய எண்ணமே ஏற்பட்டது.

Mahamagam 2016 - 7

Mahamagam 2016 - 8Mahamagam 2016 - 9Mahamagam 2016 - 10ஆழியார் எப்போது வேண்டுமானாலும் போகலாம் ஆனால், மகாமகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் உற்சவம் அல்லவா? எனவே திடீரென்று புறப்பட்டோம்.

சென்னையிலிருந்து 18 இரவு புறப்படுவது தான் சவாலாக இருந்தது. இருப்பினும் எந்தை ஈசன் கருணை இருக்க, சாத்தியமில்லாததும் எதுவும் உண்டா என்ன? பேருந்து எங்களுக்காக காத்திருந்து எங்களை ஏற்றிச் சென்றது!

Mahamagam 2016 - 11

Mahamagam 2016 - 1219 காலை கும்பகோணம் சென்று இறங்கியவுடன் டவுன்ஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட சென்றோம். அங்கே குருவின் தரிசனம் கிடைக்க, மனம் குதூகலமடைந்தது. அருகே இருந்த நண்பர் வீட்டில் போய் இறங்கி முடித்து தயாராகி, நாமும் நண்பர் சிட்டியும் உத்தமதானபுரம் புறப்பட்டோம். முகுந்தன் மட்டும் வைத்தீஸ்வரன் கோவில் புறப்பட்டார்.

உத்தமதானபுரம் சென்று தமிழ்த் தாத்தா நினைவு இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் அங்கிருந்து திருநல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை தரிசித்துவிட்டு கும்பகோணம் திரும்பினோம். நண்பர் வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு, சற்று ஒய்வு எடுத்துக்கொண்டு பின்னர் மகாமகக் குளம் புறப்பட்டோம்.

காலணிகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வெறுங்காலுடன் நடந்து சென்றோம். கும்பகோணம் மண்ணை மிதிக்க கால்கள் சொல்லவேண்டும்.

எங்கு பார்த்தாலும் ஜனத்திரள் தான். சாரை சாரையாக மக்கள் மகாமாகக் குளம் நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர். குளம் நோக்கி செல்லச் செல்ல எங்கு பார்த்தாலும் மனித தலைகள் தான்.

Mahamagam 2016 - 14

Mahamagam 2016 - 15ஜனத்திரளுக்கு மத்தியில் நீந்திச் சென்று, குளத்தில் கால் பதித்த அந்த தருணம்… வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். கால் பதிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றதை போல ஒரு உணர்வு தோன்றியதை மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திய பரவசத்தை பார்க்க முடிந்தது. குளத்தில் இருந்த ஒவ்வொருவர் முகத்திலும் அந்த மகிழ்ச்சி ரேகையை பார்க்க முடிந்தது.

இது தாண்டா எங்க மகாகமகத்தின் பெருமை!

ஒரே ஒரு நிகழ்வு, இப்படி ஒட்டுமொத்த மக்களின் முகத்திலும் மகிழ்ச்சியை வரவழைக்க முடியுமா என்றால் முடியும் என்று நிரூபிக்கிறது மகாமகம்.

உற்சாகத்திற்கென்று ஒரு மின்சாரம் இருந்து அதை தொட்டால் தொடுபவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அந்தக் குளம்.

அந்த மகிழ்ச்சியையும் இனிமையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நம்முடன் இருந்த நண்பர் சிட்டியும் முகுந்தனும் அதை நன்கு உணர்ந்தார்கள்.

இத்தனை ஜனத்திரளுக்கு நடுவே மொபைலை எடுப்பதே சவாலான விஷயம் தான். அப்படியிருக்க காமிராவை எடுப்பது எத்தனை ரிஸ்க்? இருப்பினும் ஈசன் அருள் இருக்கும்போது என்ன சிரமம் இருக்கமுடியும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக புகைப்படங்கள் அத்தனை அருமையாக அமைந்தன. எடுத்த கைகளால் அல்ல. எடுக்கப்பட்ட பொருளால் அந்த மகத்துவம் அமைந்தது.

ஒரு விஷயம் சொல்லவேண்டும். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அத்துனை அருமை. ஒரு விஷயம் புரிந்தது. குறை சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் ஒரு விழாவிற்கான ஏற்பாடுகளை இதை விட சிறப்பாக செய்ய முடியாது என்பதே உண்மை. பெண்கள் உடைமாற்ற அறைகள், ஆண் பெண் இரு பாலாருக்கும் தனித்தனியாக கழிப்பிட வசதிகள், ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் என அனைத்தும் நம்பமுடியாத கச்சிதம்.

விலைவாசியெல்லாம் அப்படி ஒன்றும் அநியாயமாக இல்லை. சிலர் டீ விலை ரெண்டு மடங்கு, காபி விலை நாலு மடங்கு, இட்லி விலை பத்து மடங்கு என்றெல்லாம் அடித்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

Mahamagam 2016 - 21

பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அருமை. பல இடங்களில் போலீஸாரும், உளவுத் துறையினரும் கண்காணித்தபடி இருந்தனர்.

குளத்தில் நீர் அதிகம் இல்லை என்று பலர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். லட்சக்கணக்கானோர் நீராடக்கூடிய குளத்தில் பாதுகாப்பு கருதியே நீர்  குறைவாக விடப்பட்டுள்ளது.

ஒரு இடத்தை கூட கோட்டைவிட்டு விடக்கூடாது என்று கருதி, போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

நாம் நீராடியபோது இருந்த நிலவரம் இது. ஆனால் அதற்கு பிறகு வார இறுதி நாட்கள் என்பதால் கூட்டம் பன்மடங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு ஜனத்திரளை சமாளிக்கும் கட்டமைப்பு குடந்தை நகருக்கு இல்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு மேல் ஏற்பாடுகள் செய்ய முடியாது என்னுமளவுக்கு பார்த்து பார்த்து செய்திருக்கிறது.

நாம் செய்யவேண்டியதெல்லாம் விழா சிறக்க ஒத்துழைப்பது தான். மகாமகம் செல்வோர் குப்பைகளை கண்ட கண்ட இடத்தில் போடாமல் இருப்பது, கண்ட இடத்தில் மல ஜல அசுத்தம் செய்யாமல் இருப்பது, குளத்தில் ஸ்நானம் செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இவை தான். பெண்கள் பூ சூடிக்கொண்டு வந்து குளத்தில் ஸ்நானம் செய்யக்கூடாது. (குளத்தில் அவ்வளவு பூக்கள் குப்பைகளாக மிதக்கின்றன).

மது / பான்பராக் பழக்கமுள்ளவர்கள் மகாமகத்திற்கு வராமல் இருப்பதே பெரிய புண்ணியம்.

நாம் திருக்குளத்தில் இருந்தபோது ஒரு பெண், வாயைக் கொப்பளித்து உமிழ்ந்ததை பார்க்க நேர்ந்தது. சிறிதும் தயங்காமல் “ஏன்மா வாய் கொப்பளிக்குற இடமா இது? இந்த குளத்தோட மகத்துவம் தெரியுமா?” என்று அவரது செயலை கண்டித்தோம்.

நமது நீராடல் அனுபவத்தை பின்னர் விரிவாக பார்ப்போம். இப்போது மகாமக குளத்தின் மகத்துவத்தை விளக்கும் சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

Mahamagam 2016 - 19கும்பகோணத்தையும் கோவிந்த தீட்சிதரையும் பிரிக்க முடியாது. மகாமகம் இன்று இத்தனை சிறப்பாக நடைபெற் அடிகோலியவர் இவர் தான். இவரைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்போதைக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் சம்பவத்தை பார்ப்போம்.

தஞ்சையை ஆண்ட மூன்று நாயக்க மன்னர்களுக்கு இராஜகுருவாகத் திகழ்ந்தவர் பல்துறை அறிஞராகிய கோவிந்த தீட்சிதர் ஆவார். மன்னர் ஆட்சியையும் மக்களாட்சியாக நடத்தி, மக்களால், “எங்கள் ஐயன்” என்று போற்றப்பட்டவர் கோவிந்த தீட்சிதர். தஞ்சைக்கு அருகில் உள்ள ஐயன்பேட்டை என்ற ஊர் இவருடைய, ‘ஐயன்’ என்ற அன்புப் பெயரையே தாங்கி நிற்கிறது. கும்பகோணத்தில் இவருடைய பெயரால், ஐயன் குளம், ஐயன் கடைவீதி போன்றவை இன்றளவும் புகழ் பெற்று விளங்குகின்றன.

பதினாறாம் நூற்றாண்டில், அச்சுததேவராயர் விஜயநகரப் பேரரசின் மகாராயராக இருந்தார். அவர் ஆங்காங்கே சிற்றரசர்களை நியமித்திருந்தார். அவர்களை, ‘இராஜப் பிரதிநிதிகள்’ என அழைத்தனர். சின்னசெல்வா என்னும் சேவப்ப நாயக்கரை, தஞ்சைப் பகுதியின் பிரதிநிதியாக 1532இல் மகாராயர் நியமித்தார். தென்னகத்தில் நடந்த சில கலவரங்களை அடக்கிய சேவப்ப நாயக்கர் மகாராயரின் மதிப்பைப் பெற்றார்.

கும்பகோணம் மகாமகத்தின்போது, பூமியில் உள்ள அத்துணைப் புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்குள் வந்துவிடுவதாக ஐதீகம். ஒருமுறை கோவிந்த தீட்சிதருடன் குடந்தைக்கு வந்திருந்த ரகுநாத நாயக்கர், “இப்போதும் புண்ணிய நதிகள் இங்கு வருகின்றனவா?” என்று வினவினான். “ஆம்!” என்று கூறிய தீட்சிதர் சிறிது நீரைத் தெளித்து, நதியரசிகளைப் பிரார்த்தனை செய்தார். அப்போது, ஒரே நேரத்தில் மகாமகக் குளத்தில் ஒன்பது நதியரசிகளின் பதினெட்டுக் கரங்கள் தோன்றின.1624ஆம் ஆண்டு இந்த அதிசயம் நடந்தது!

ரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கத்தைத் துலாபாரமாகக் கொடுத்து கௌரவித்தான். சிறிதும் தன்னலம் இல்லாத மகானாகிய கோவிந்த தீட்சிதர் அப்பொன்னைக் கொண்டு மகாமகக் குளத்தில் புதிய படித்துறைகளை அமைத்தார். குளத்தைச் சுற்றிப் பதினாறு சிவாலயங்களையும் கட்டினார்.

இன்று கும்பகோணத்தில் மகாமகம். கொடியேற்றப்பட்ட நாள் முதலே நீராடலாம் என்பதால், நாம் ஏற்கனவே மகாமகம் சென்று நீராடிவிட்டு நேற்று சென்னை திரும்பிவிட்டோம். மகாமகம் குறித்த செய்திகளை பார்க்கும்போது அனைவருக்கும் கும்பகோணம் செல்லவேண்டும் என்கிற ஆவல் ஏற்படுவது இயல்பு. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் உற்சவம் என்பதால் மற்ற எல்லா உற்சவங்களைவிட இதற்கு தனிச் சிறப்பு உண்டு.

இதுவரை நடைபெற்ற மகாமகங்களைக் காட்டிலும் இப்போது நடைபெறும் மகாமகம் அருமையான கிரக அமைப்புகளுடன் திகழ்வதாக கூறப்படுகிறது.

எப்படியெனில் ஆத்மகாரகன் சூரியனுடனும் ஞானக்காரகன் கேதுவும், வேத மந்திரங்களுக்குரிய கிரகமான குருவுடன் ராகுவும் அமர்ந்திருக்கும் நல்ல கிரக அமைப்பில் இந்த மகாமகம் நிகழ்வதால் உலகெங்கும் சுபிட்சம் உண்டாகும். மழை பொழியும், மகசூலும் அதிகரிக்கும். ராஜகிரகங்களான குருவும், சனியும் பரஸ்பரம் கேந்திரம் பெற்று காணப்படுவதால் ஆன்மிகம் தழைக்கும். பூமிகாரகன் செவ்வாய், குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்கும் நேரத்தில் இந்த மகாமகம் நிகழ்வதால் மகாமகக் குளத்தில் நீராடுபவர்களில் பல வருடங்களாக வரன் பார்த்தும் அமையாமல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் திருமணம் முடியும்.

மார்ச் 13-ம் தேதி வரை மாசி மாதம் இருப்பதால் 13-ம் தேதி வரை மகாமகக் குளத்தில் புனித நீராடலாம். 1.3.1980, 18.2.1992, 6.3.2004-ல் நடைபெற்ற மகாமக கிரக அமைப்புகளைக் காட்டிலும் இந்த வருடம் மகாமக நிகழும் கிரக சேர்க்கைகள் சிறப்பாக உள்ளதால் புனித நீராடும் அனைவருக்கும் புண்ணியம் கைகூடும் என கே.பி.வித்யாதரன் தெரிவித்துள்ளார்.

இந்த மகாமக குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசிமகம் கொண்டாடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் வரும் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் நீராடி ஆன்மிகப் பலன் எய்துகிறார்கள். மகாமகம் நீராடல் என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைபிடிக்கப்படுகிறது.

Mahamagam 2016 - 18

ஜோதிடரீதியாக இந்த நாள் எப்படி கணக்கிடப்படுகிறது?

சூரியனுடைய ஆட்சி வீடு சிம்ம ராசி. இந்த சிம்ம ராசியில் சந்திரனும், குருவும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க, சிம்மராசிக்கு ஏழாவது வீடாகிய கும்ப ராசியில் சூரியன் அமர்ந்துகொண்டு அங்கிருந்தபடியே தன் சொந்த வீடாகிய சிம்மராசியில் இருக்கும் குருவையும், சந்திரனையும் பார்க்கும் நாள், இது. இத்தகைய கிரக அமைப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும். இந்த சமயத்தில் சந்திரன், மாசி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமியாக ஒளிருவார். இந்தநாள்தான் மகாமக தினம். இந்த தினத்தில் மகாமகக் குளத்தில் நீராடி தம் பாவங்கள் தொலையப்பெற்று நற்கதி அடைகிறார்கள், பக்தர்கள். இந்தக் குளத்திற்கு அமுதவாவி, கன்னியர் தீர்த்தம், அமுதத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம் ஆகிய பெயர்களும் உண்டு. இந்த மகாமகக் குளத்தினுள் மொத்தம் இருபது தீர்த்தங்கள் அதாவது, ஊற்றுகள் உள்ளன. ஒவ்வொரு ஊற்றும் ஒவ்வொரு வகையான பலனைத் தரக்கூடியது. மகாமக தினத்தன்று தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு கீழ்க்காணுமாறு நற்பலன்களை அளிக்க அந்தந்த தீர்த்தங்கள் தயாராக உள்ளன.

1. கன்னியா தீர்த்தம் (அறுபத்தாறு கோடி தீர்த்தம்): துன்பங்கள் நீங்கும், இன்பங்கள் பெருகும்.

2. வாயு தீர்த்தம்: உடல் பிணிகள் எல்லாம் அகலும்.

3. கங்கை தீர்த்தம்: நேரடியாக கங்கைக்குச் சென்று பதினாயிரம் முறை நீராடினால் என்ன பலன் உண்டோ அத்தனை பலன்களும் கிடைக்கும்.

4. பிரம்ம தீர்த்தம்: நம் மூதாதையரைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றும்.

5. யமுனை தீர்த்ர்தம்: ஐஸ்வர்யம் பெருகும்.

6. குபேர தீர்த்தம்: அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

7. கோதாவரி தீர்த்தம்: வளம் சேரும். இஷ்ட சித்தி ஏற்படும்.

8. ஈசான்ய தீர்த்தம்: மனதில் நினைத்த நல்லெண்ணங்கள் எல்லாம் கைகூடும்.

9. நர்மதை தீர்த்தம்: உடல் உறுதியான ஆரோக்கியம் பெறும்.

10. இந்திர தீர்த்தம்: வானுலக சொர்க்க வாழ்வு கிட்டும்.

11. சரஸ்வதி தீர்த்தம்: ஞானம் உண்டாகும்.

12. அக்னி தீர்த்தம்: அனைத்து தோஷங்களும் சாம்பலாகும்.

13. காவிரி தீர்த்தம்: மனதில் உறுதி கூடும்; எண்ணமெல்லாம் ஈடேற்ற இயலும்.

14. எம தீர்த்தம்: மரண பயம் போகும்.

15. குமரி தீர்த்தம்: அசுவமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.

16. நிருதி தீர்த்தம்: பேய், பூதம், பில்லி, சூனிய அச்சம் விலகும்.

17. தாமிரபரணி தீர்த்தம் (பயோஷிணி தீர்த்தம்): நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வந்தடையும்.

18. தேவதீர்த்தம்: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முடியும்.

19. வருண தீர்த்தம்: ஞானமும் யோகமும் சித்திக்கும்; ஆயுள் அதிகரிக்கும்.

20. சரயு தீர்த்தம்: மனக்கவலைகள் மாயமாகிப் போகும்.

Kumbeswarar Mangalambikai

ஒரே குளத்தில் வரைபடத்தில் காட்டியபடி உள்ள மேலே சொன்ன அத்தனை தீர்த்தங்களிலும் தனித்தனியாக நீராடுவது என்பது மகாமக நாளில் இயலாது என்பது யதார்த்தம். அன்று அக்குளத்தில் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இப்படி ஒவ்வொரு தீர்த்தத்தையும் தேடித்தேடிச் சென்று நீராட இயலாது தான். ஆனால், இந்த தீர்த்தங்களையெல்லாம் நிரப்பியபடி மொத்தமாக மகாமகக் குளத்தில் பொதுவாக நிறைந்திருக்கும் நீரில் நீராடினாலேயே மேற்சொன்ன அனைத்துப் பலன்களும் நமக்குக் கிட்டும். சிலர் குறிப்பாக மகாமகக் குளத்தின் வடமேற்கு மூலையில் அமைந்திருக்கும் கன்னியா தீர்த்தம் என்ற அறுபத்தாறு கோடி தீர்த்தத்தில் மகாமக தினத்தன்று நீராடி, குளக்கரையில் தம் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் விட்டு நீத்தார் கடன் நிறைவேற்றுவார்கள். இதனால் அவர்களுடைய முந்தைய நூறு தலைமுறையினர் நரகத் துன்பங்களிலிருந்து கரையேறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீர்தேவதை ஆட்சி புரிவதாகச் சொல்வார்கள். குறிப்பாக மகாமக தினத்தன்று, சூரியோதயத்தின்போது கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுபவர்களுக்கு பிரம்மஹத்தி மற்றும் அதுபோன்ற கொடிய பாவங்களையும் அந்த தேவதை நீக்கி அருள் புரிவதாகவும் கூறப்படுகிறது. மாசி மட்டுமல்லாமல், ஐப்பசி, கார்த்திகை, வைகாசி மாதங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது பாபங்களைப் போக்கும் என்கின்றன புராணங்கள். இப்படி புராணங்கள் வர்ணிக்கும்வகையில் பலனளிக்கக்கூடிய புனித நீராடலை மாமாங்க (மகாமக) குளத்தில் மேற்கொண்டால் அதுதான் எத்தனை பெரிய பாக்கியம்!

மகாமகக் குளத்தில் நீராடுவதற்கு முன்னர், கும்பகோணத்திலுள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள கடவுளர்களின் ஆசியைப் பெறவேண்டியது அவசியம் என்று சொல்வார்கள். அதாவது, மகாமக தினத்தன்று முதலில் சிவன் கோயில்களுக்குச் செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர், கும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கௌதமேஸ்வரர், அமிர்தகலசநாதர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், கோடீஸ்வரர், சோமேஸ்வரர், ஆதி கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் ஆகிய பன்னிரண்டு சிவத்தலங்களுக்கும் சென்று மனமுருக பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். இக்கோயில்கள், அமிர்த கலசத்திலிருந்த பொருட்கள் விழுந்த இடங்களில் உருவானவை. முக்கியமாக கும்பம் உடைந்து அமுதம் சிந்தியதாக கூறப்படும் பஞ்ச குரோச தலங்களான திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், திருவேரகம், திருபாடலவனம் தலங்களை தரிசித்த பின்னரே மகாமகக் குளம் செல்லல் வேண்டும். மேலும் சிவத்தலங்கள் மட்டுமல்ல, ஐந்து வைணவத் தலங்களையும் மகாமக தினத்தன்று தரிசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவை: சாரங்கபாணி கோயில், ராமஸ்வாமி கோயில், ராஜகோபாலஸ்வாமி கோயில், சக்ரபாணிஸ்வாமி கோயில், ஆதிவராகப் பெருமாள் கோயில்.

மகாமக தீர்த்தவாரி கொண்டாடும் சைவத் தலங்கள்
மகாமக தீர்த்தவாரி கொண்டாடும் சைவத் தலங்கள்

பன்னிரு சிவத்தலங்களும் மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி மேற்கொள்ளும் அதே நேரம் இந்த வைணவக் கோயில் இறை உற்சவர்கள் வந்து, காவிரி நதியில் தீர்த்தவாரி கொடுக்கும். அதுசரி, மகாமக நாளன்று எப்படி இத்தனைக் கோயில்களைச் சென்று தரிசிப்பது? இவ்வருட மகாமக தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கும்பகோணத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அத்தனை பேரும் அதே நாளில்தான் மகாமகக் குளத்தில் நீராடவேண்டும் என்று கட்டாயமில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. மகாமக தீர்த்தத்திற்கு ஆதாரமான ஒன்பது புண்ணிய நதிகளும், முப்பத்து முக்கோடி தீர்த்தங்களும் சிவபெருமான் வழிகாட்டலில் குருபெயர்ச்சி தினத்தன்றே மகாமகக் குளத்திற்கு வந்துவிடுவதாக ஐதீகம். அதனால் அந்த நாளிலிருந்தே மகாமகப் புனித நீராடலை மேற்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், 5.7.2015 அன்று முதல் அந்தப் புண்ணிய நதிகள் மகாமகக் குளத்தில் வாசம் செய்வதாக ஆகிறது. 2016ம் வருடம் நிகழும் குருபெயர்ச்சி அன்றுவரை இங்கு நீராடி புண்ணியம் தேடிக்கொள்ளலாம். மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்னால் காவிரியில் நீராடி, மேலே குறிப்பிட்ட சிவத்தலங்களையும், வைணவத் தலங்களையும் தரிசித்துவிட்டு, பிறகுதான் மகாமகக் குளத்தில் நீராட வரவேண்டும் என்ற நியதியைக் கடைபிடிப்பதனால் இவை அனைத்தையும் மகாமகத் திருநாள் அன்று ஒரே தினத்தில் மேற்கொள்ள இயலாது அல்லவா? அதனால்தான் சில தினங்களுக்கு முன்பே வந்து, இந்த நீண்ட சம்பிரதாயத்தை அனுஷ்டிக்கலாம் என்றும், மகாமக தினத்திற்கு முன்னாலேயே மகாமகக் குளத்தில் புனித நீராடலாம் என்றும் சொல்வார்கள். மகாமக ஆண்டு முழுவதுமே தீர்த்த யாத்திரைக்காக விதிக்கப்பட்ட ஆண்டு என்பார்கள். அதனால் அந்த ஆண்டு முழுவதும் மகாமகக் குளத்தில் நீராடுவதும், கும்பகோணத்துக் கோயில்களில் வழிபடுவதும் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக மகாமக ஆண்டில் திருமணம் போன்ற சுபவிசேஷங்களைச் செய்தல் கூடாது என்றும் ஒரு விதி இருப்பதாகக் கூறுவார்கள்.

Magamagam2
மகாமக தீர்த்தவாரி கொண்டாடும் வைணவத் தலங்கள்

இது ஆண்டு முழுவதற்குமான வழிபாடு, தீர்த்த நீராடல்களுக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே சொல்லப்பட்டிருக்கலாம். இந்த வருடம் முழுவதும் மகாமகம் பற்றிய சிந்தனை ஒன்றிலேயே மக்கள் ஆழ்ந்திருக்கவேண்டும், லௌகீக பந்தங்கள், அது சம்பந்தப்பட்ட விசேஷங்களில் மனம் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதற்காகக்கூட இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். (மார்கழி மாதத்தில் சுபவிசேஷங்களை மேற்கொள்ளாததுபோல). இந்த மகாமக ஆண்டில் இறைச்சேவைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், அந்த நோக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவகையில் திருமணம் முதலான விசேஷங்களை மேற்கொள்ளலாம் என்றும் அனுமதித்திருக்கிறார்கள். மகாமக தீர்த்த நீராடல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு. பல்வேறு காரணங்களால் கும்பகோணத்துக்கு வர இயலாதவர்கள், தத்தமது இல்லங்களிலேயே வழக்கம்போல நீராடி, மகாமகக் குளத்தில் உள்ள புண்ணிய நதிகள், தீர்த்தங்களை மனதில் இருத்தி, தம் பாபங்களையெல்லாம் போக்குமாறு இறைவனை வேண்டிக்கொள்ளலாம், பயன்பெறலாம். இந்த வருடம் 2016ல் முழு மாமாங்கம்!

மகாமக நீராடிய பலன்கள்!

மகாமக வருடத்திற்கு ஒரு வருடம் முன்னமே கங்காதி, 66 கோடி தீர்த்தங்களும், சமஸ்த தேவதைகளும், கும்பகோணத்திற்கு வந்துவிடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் வேறு தீர்த்தங்களில் நீராடவேண்டி க்ஷேத்ராடனம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மகாமகத்தன்று நீராடுவது கங்காதீரத்தில் 100 வருடம் வசித்து மூன்று காலமும் நீராடிய பலனைத் தர வல்லது. மேலும் ஏழு தலைமுறைகள் பல நலன்கள் பெற்று வாழ்வார்கள் என பவிஷ்யேத்ர புராணம் கூறுகிறது.

மகாமக குளத்தை ஒரு முறை வலம் செய்வது பூமியை 100 முறை வலம் வந்ததனால் கிடைக்கும் புண்ணியத்திற்கு ஈடானது. தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரிப்பது தேவர்கள் அனைவரையும் நமஸ்கரிப்பதற்கு ஒப்பானது.

மகாமக தினத்தன்று செய்யப்படும் சிறிதளவு தானம் கூட மேருமலைக்கு நிகரானது.

மகாமக குளத்தில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்தால் 16000 முறை கயா சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

குடமூக்கு என்பது கும்பகோணத்தின் பழைய பெயர். கும்பம் என்றால் குடம். கோணம் என்பது மூக்கு. உலகம் அழியும் பிரளய காலத்தில் இறைவன் ஆணைப்படி விடப்பட்ட அமுத கும்பம் இவ்விடத்தில் தங்கி அதன் மூக்கு வழியே அமுதம் பரவியதால் ‘குடமூக்கு’ என்ற பெயர் ஏற்பட்டது.

கி.பி. 1385ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி புதன் கிழமை இந்த நகருக்கு ‘கும்பகோணம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பெயரை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிநாதர். கி.பி.1547ஆம் ஆண்டு மகாமக தினத்தன்று விஜய நகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் புனித நீராடினார்.

வினையகலா மதியாப்பரமார்க்க விழைவகற்று
மனையகலா மதியாதாங்குடந்தை யனையிடத்தங்
கனையகலா மதியார்முடியாள மூக்கண்ணவென்ற்றேத்
தினையகலா மதியார்க்குஞ்ச மார்கஞ் செறிப்பதற்கே.

=======================================================

மகாமகம் செல்ல முடியாதவர் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

கும்பகோண கும்பேஸ்வரர் கோவில் தேவாரத்தில் திருநாவுக்கரசா் அருளிச் செய்த இப்பதிகத்தினை வீட்டில் நீராடுகையில் இறைவனை நினைத்து ஓதிவிட்டு நீராடினால், நீங்கள் கடல் நீராடியதற்கு சமமான பலன்களை பெறலாம் என்பது திருநாவுக்கரசரின் ஆணை.

ஏவிஇடா்க்கடல் இடைப்பட்டு  இளைக்கின்றேனே
இப்பிறவி அறுத்து ஏற வாங்கி  ஆங்கே
கூவிஅமருலகு  அனைத்தும் உருவிப் போகக்
குறியில் அறுகுணத்தது ஆண்டுகொண்டார் போலும்
தாவி முதல் காவிரி  நல்யமுனை  கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி  தெணநீா்க்
கோவியொடு  குமரி வரு   தீா்த்தம்  சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம்  கூத்தனாரே!

அனைவரும் இப்பதிகம் பாடி மகாமகத்தில் நீராடிய பலனை பெறுங்கள்

=======================================================

Support Rightmantra to sustain!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

2015 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

2014 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

2013 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

========================================================

[END]

7 thoughts on “மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

  1. மிக மிக அருமையான கட்டுரை இல்லை coverage என்று தான் சொல்ல வேண்டும். அவசரமாக வெளியிட்டதே இவ்ளோ சூப்பர் ??? மிக்க நன்றி. தங்கள் பனி சிறக்கட்டும். இந்த கட்டுரை மூலம், ஒவ்வொருவருக்கும் கும்பகோணம் மகாமகம் நீராட வேண்டும் என்ற அவா பெருகி இருக்கும். முடியாதவர்களுக்கு நாவுக்கரசர் தேவார திரு பாடல் கை கொடுக்கும். இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி….

  2. வாவ்.. அட்டகாசமான பதிவு. தாங்கள் மகா மகம் பற்றி தொகுத்து அளித்தது மிகவும் சூப்பர் ஆக உள்ளது. இன்று மாசி மகா மகத்தில் மகா மகம் பற்றிய பதிவை போட்டு. தளத்தை புனிதமாக்கி விட்டீர்கள். நாங்கள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. இவ்வளவு ஜனசமுத்திரத்தில் போட்டோ எடுப்பது என்பது சவாலான விஷயம். பாராட்டுக்கள். தங்களை திரு பிரபு மூலம் ஈசன் கும்பகோணத்திற்கு வர வழைத்து உள்ளார். ஜனத்திரள் , கோவில் கோபுரங்கள், குளம் அட்டகாசம். இந்த பதிவில் நீங்கள் எடுத்த உழைப்பு தெரிகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றங்கரையில் இறங்கும் பொழுது ஏற்படும் கூட்டம் போல் உள்ளது மகா மகம் குளத்தை பார்க்கும் பொழுது. மகாமக ஸ்லோகத்தை சொல்லி நாங்கள் புண்ணியம் தேடி கொள்கிறோம்.
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்
    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. மிகவும் அருமை. இப்படிஒரு பதிவு நாங்கள் எதிர்பார்கவில்லை
    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தங்களின் பங்களிப்பு தனியாக தெரிகிறது,
    உலகை திரும்பிபார்க்கவைக்கும் இந்த மாகமகம் மேலும் சிறப்பு.
    அதை எங்கிருந்தாலும் நினைக்க வைக்கும் தங்கள் பாங்கு அருமை .
    நன்றி

  4. இன்றைய தங்கள் பதிவின் மூலம் மகாமக உற்சவம் தரிசன அனுபவம் பெற்றோம்.. நேரில் காண முடியாத மனக்குறையை நீக்கியது என்றால் மிகையாகாது.
    வழக்கம் போல அருமையான படங்களும் அற்புதமான விளக்கங்களும் பார்க்கவும் படிக்கவும் மனதுக்கு இதமாக இருந்தன.

    கோவிந்த தீட்சிதர் பற்றிய செய்திகள் அருமை, இனிமை.
    சைவ, வைணவ கோயில்கள் தரிசனம் செய்தபின் நீராட வேண்டும் என்பது பயனுள்ள தகவல்.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு சான்றாக விளங்கும் தங்கள் மனது அழகோ அழகு.

  5. Hi ji,
    It was a wonderful trip – Tamil Thaththa U.Ve.Sa’s memorial, Nallur Temple, Mahamaham – two times holy water dipping into it, Kumbeshwarar temple, Sakkrapani Temple – all are lovely one.
    **
    First of all, Thanks so much for inviting me for such a spiritually phenomenal trip.
    **
    As you have said in the post, I felt great while I first dipped into the mahamaham. Interestingly, there were less crowd while we have gone first.

    And we were able to take holy water from all the above said 20 theerthams. It was a lovely feeling. Only water cures our body. And mahamaham theerthams – are way more special in it.
    **
    And about accomodation, such a lovely hospitality from Prabhu sir. It was a wonderful accommodation and hospitality – with lovely lunch in the first day of our trip. Such a nice person he is!
    **
    Punnyam I have received in this trip – is because of you. Thanks so much for it. I was very glad when I come to know that this mahamaham is way more special when compared with previous three mahamaham.
    **
    Being one time opportunity once in 12 years, this experience will stay longer in my memory. Thanks so much to you. God bless!
    **
    Readers, please visit kumbakonam – like the post says, you may get punnyam by taking dip into the holy water even now till this masi (tamil month) ends. Plus, crowd too won’t be there much hereafter.
    **

  6. சுந்தர்ஜி,

    Very well written article and insightful information too. Glad to have been able to host You, Chitti & Mukundan with just some basic comforts. Your devotion to service is so visible in the kind of efforts you take to get the message across to your readers. Best wishes for your continued success in this journey.

    Regards

  7. நாங்கள் செல்ல முடியவில்லையே என்கிற குறையை தீர்த்ததோடு மாசிக்குள் ஒரு முறை செல்லவேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த பதிவு.

    புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டு போல அர்த்தத்துடன் உள்ளது. நாமும் அங்கு இல்லையே என்கிற ஏக்கம் தான் மிகுதியாக ஏற்படுகிறது.

    எங்கள் சார்பாக நீராடியதாக சொன்னீர்கள். மிகவும் நன்றி. உண்மை தான் நீங்கள் நீராடிய பலன் எங்களுக்கும் நிச்சயம் உண்டு.

    மகாமகம் தொடர்பான விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம். அவசியம் அளிக்கவும்.

    படிக்க நாங்கள் எப்போதும் தயார்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *