Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

print
நீண்ட நாட்கள் பூஜை செய்யாமல், அபிஷேகம் காணாமல், விளக்கு ஏற்றப்படாமல் இருக்கும் பிள்ளையார்களுக்கு ‘வறண்ட பிள்ளையார்’ என்று பெயர். தெரு முனைகளிலும், குளக்கரையிலும், மரத்தடிகளிலும் நம்மை சுற்றி பல வறண்ட பிள்ளையார்கள் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து பூஜை & அபிஷேகங்கள் முதலானவை செய்து, விளக்கேற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து நான்கு பேருக்கு கொடுத்தால் அதைவிட பெரிய புண்ணியம், திருப்பணி வேறு எதுவும் இல்லை. இதற்கு ஒன்றும் பெரிதாக பொருட்செலவு ஏற்படாது. ஆனால் இதை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும். செல்வம் குவியும், தொழில் வளம் காணும், வியாபாரம் அபிவிருத்தி அடையும், தடைகள் விலகும், கிரக பீடைகள் மற்றும் தோஷங்கள் யாவும் விலகும். மொத்தத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பிள்ளையாரை பொருத்தவரை குறைவாக எதிர்பார்ப்பவர். ஆனால் நிறைவாக திருப்பிச் செய்பவர். கடுகளவு செய்தாலே கடலளவு பெற்று மகிழ்பவர். (வறண்ட பிள்ளையார் பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். சமீபத்தில் திரு.ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் கூட தொலைக்காட்சியில் கூறினார்.)

Pillaiyar 2

தேவாதி தேவர்களே கூட தங்களுக்கு பிரச்னைகள் தோன்றியபோது விநாயகரைத் தான் அணுகி தீர்வு கண்டனர். விநாயகரை வழிபட்டதாலும் விநாயகரை பூஜித்ததாலும் மாறிய புராண சம்பவங்கள் பல உண்டு. திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புக்களும் அநேகம் உண்டு. அதையெல்லாம் விரிவாக வேறு வேறு பதிவுகளில் பார்ப்போம்.

நம் தளம் சார்பாக வறண்ட பிள்ளையாரை தேடி கண்டுபிடித்து அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய இருக்கிறோம். நமது குழுவினர் சார்பாக பிள்ளையாருக்கு விளக்கேற்றி, பூஜை அபிஷேகங்கள் முதலானவை செய்து, பிரசாதமும் விநியோகிக்க இருக்கிறோம். அனைத்தும் மிக மிக எளிமையாகவே நடைபெறும். உங்கள் பகுதிகளில் இப்படி வறண்ட பிள்ளையார் யாரேனும் இருந்தால் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது குழுவினருடன் மேற்கூறிய எளிய பூஜைகளை செய்கிறோம். பூஜைக்கு அர்ச்சகர் இல்லையெனில் வேதியர் ஒருவரையும் அழைத்து வருவோம். (* இப்போதைக்கு சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டும் இது நடைபெறும்!)

இதை நாம் தான் செய்யவேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் பகுதிகளில் உள்ள வறண்ட பிள்ளையார்களுக்கு மேற்கூறிய அபிஷேக ஆராதனைகளை குறைந்தது மாதம் ஒருமுறையேனும் செய்து வாருங்கள். அதற்கு பிறகு பாருங்கள்…!

தீபாவளிக்குள் எப்படியேனும் ஒரு வறண்ட பிள்ளையாரை தேடிக் கண்டுபிடித்து தீபாவளியன்று அபிஷேக ஆராதனை செய்துவிடவேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக வறண்ட பிள்ளையாரை தேடி வந்தோம். குறுகிய கால அவகாசம் என்பதால் வறண்ட பிள்ளையார் கிடைக்கவில்லை. திருமுறை விநாயகர் தான் கிடைத்தார். குன்றத்தூரில் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் கந்தழீஸ்வரர் கோவிலுக்கும் இடையே உள்ளவர் இந்த திருமுறை விநாயகர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த விநாயகரிடம் தான் உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வந்தாலும் இது அதிகம் பிரபலம் ஆகாத கோவில். எனவே ஒரு வகையில் வறண்ட பிள்ளையார் தான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.

குன்றத்தூர் அடிவாரத்தில் திருவூரகப் பெருமாள் மற்றும் கந்தழீஸ்வரர் கோவில் இடையே உள்ள திருமுறை விநாயகர்
குன்றத்தூர் அடிவாரத்தில் திருவூரகப் பெருமாள் மற்றும் கந்தழீஸ்வரர் கோவில் இடையே உள்ள திருமுறை விநாயகர்

இந்த பிள்ளையாருக்கு திருப்பணி செய்தால் பிள்ளயாருக்கு மட்டுமின்றி சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த பலனும் கிடைக்கும். காரணம், இந்த பிள்ளையாருக்கு கீழே சிவலிங்கம் உள்ளது மேலே திருமுறை உள்ளது. (இந்த விநாயகரை பற்றி தான் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு பதிவு அளிக்க நினைத்திருந்தோம். ஆனால், நேரமின்மையால் முடியவில்லை.)

வறண்ட பிள்ளையார் கிடைக்கவேண்டும் என்றாலும் அதற்கும் ஆனைமுகன் அருள் வேண்டுமல்லவா? எனவே தீபாவளி திருநாளில் இந்த கைங்கரியத்தை துவக்க வேண்டி மேற்கூறிய திருமுறை விநாயகருக்கு தீபாவளி அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யவிருக்கிறோம்.நேற்றைய பதிவில் அது பற்றிய அறிவிப்பை பார்த்து நம் உழவாரப்பணி குழு நண்பர்கள் சிலரும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பிள்ளையார் கோவிலை கட்டியது யார்? திருமுறை இவரிடம் வந்தது எப்படி ?என்பது உள்ளிட்ட விபரங்களை தனிப் பதிவில் அளிக்கிறோம். நேரில் வரும்போது மேற்படி சிவலிங்கம் & முதல் திருமுறை ஆகியவற்றை தரிசிக்கலாம்.

வறண்ட பிள்ளையார்களுக்கு இது போல செய்யவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு எப்போதுமே உண்டு. அதற்கு ஒரு வடிவம் கொடுத்து திருப்பணியாக செய்ய இப்போது தான் வேளை வந்திருக்கிறது. இதுவும் கூட ஆனைமுகன் அருள் தான். இந்த வறண்ட பிள்ளயார் திருப்பணியை பொருத்தவரை நம் தளம் சார்பாக தொடர்ந்து நடைபெறும். ஒருவர் வந்தாலும் நடக்கும். நான்கு பேர் வந்தாலும் நடக்கும். பத்து பேர் இருபது பேர் வந்தாலும் நடக்கும்.

வறண்ட பிள்ளையாருக்கு பூஜை செய்து அதனால் தீர்ப்பு திருத்தி எழுதப்பட்ட ஒரு கதையை பார்ப்போம். இது விநாயகர் புராணத்தில் உபாசனா காண்டத்தில் உள்ள கதை. உங்களுக்காக சுருக்கி, சற்று எளிமையான நடையில் தந்திருக்கிறோம்.

  • வறண்ட பிள்ளையாரை தேடிச் செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக நடுக்காவேரி காவிரிக்கரை பிள்ளையாரையும்  அடுத்த சில மாதங்களில் தரிசிக்கவிருக்கிறோம்.

வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

=========================================================

பஞ்சமா பாதகங்களும் தீர்ப்பை திருத்திய பிள்ளையார் கோவில் திருப்பணியும்!

முன்பொரு காலத்தில் இயற்கை எழில் நிறைந்த சௌராஷ்டிர தேசத்தை சோமகாந்தன் என்கிற மன்னன் அரசாண்டு வந்தான். மிக சிறப்பான முறையில் ராஜ்யத்தை பரிபாலனம் செய்து வந்த அவனுக்கு சுதன்மை என்கிற மனைவி இருந்தாள். அழகில் ரதியையும் மகாலக்ஷ்மியையும் ஒத்திருந்தாள் அவள். அவர்களுக்கு ஏமகண்டன் என்கிற புத்திரன் இருந்தான்.

நீதி நெறி தவறாமல் அரசாட்சி செலுத்தி வந்த காலகட்டங்களில் சோமகாந்தனுக்கு முன்வினைப்பயனால் திடீரென்று குஷ்டம் எனப்படும் தொழுநோய் ஏற்பட்டது. எத்தனையோ மணிமந்திரங்கள் ஔஷதங்கள் கொடுத்தபோதும் அந்த நோயை குணப்படுத்தமுடியவில்லை. மிகத் தீவிரமாக பெருகிய நோயின் காரணமாக அவன் உடல் முழுதும் அழுகி ரத்தமும் சீழும் வடிய மிகவும் அவதிப்பட்டான்.

அரசனாகிய தானே இப்படி காட்சியளித்தால் அரசு குறித்த மக்களின் எண்ணம் தவறாக மாறிவிடும் என்கிற காரணத்தால் தனது ஏமகண்டனுக்கு முடிசூட்டி தான் வனவாசம் செல்ல முடிவெடுத்தான். மகன் ஏமகண்டன் இதை விரும்பாவிட்டாலும் தந்தையின் உத்தரவை மறுதலிக்க முடியாமல், அரியணையை ஏற்றுக்கொள்ள சம்மதித்தான்.

கற்பில் சிறந்தவளான அவனது மனைவியான சுதன்மையும், “நீங்கள் கானகத்தில் இருக்கும்போது எனக்கு மட்டும் பட்டு மெத்தை எதற்கு? உங்கள் சுக துக்கத்தில் எனக்கும் பங்குண்டு. எனவே நானும் உங்களோடு வருவேன்” என்று சோமகாந்தன் எவ்வளவோ சொல்லியும் தானும் அவனுடன் வனவாசத்திற்கு வருவதில் உறுதியாக இருந்தாள்.

ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் தனது மகனுக்கு முடிசூட்டிவிட்டு, காட்டிற்கு புறப்பட்டான் சோமகாந்தன்.

அவனுடைய மந்திரி பிரதானிகளும் இதர குடிமக்களும் அவனை பிரிய மனமின்றி அவனுடனே வந்தனர்.

அது கண்டு நெகிழ்ந்த சோமகாந்தன், “ஏன் என்னுடன் வருகிறீர்கள்? வனவாசம் அத்தனை எளிதானதல்ல. நீங்கள் சென்று உங்களுக்குரிய கடமைகளை செய்து மகிழ்ச்சியோடு இருங்கள். ” என்றான்.

மந்திரி பிரதானிகள், “அரசே முன்வினைப்பயனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடுநோய், நீங்கள் செய்துள்ள பல்வேறு புண்ணிய காரியங்களினால் ரிஷிகளின் தரிசனத்தினாலோ புண்ணிய தீர்த்தங்களினாலோ நீங்கிவிடும். அதுவரை நாங்கள் உங்களுடனே இருந்து உங்களுக்கு பல்வேறு பணிவிடைகளை செய்துவருகிறோம்” என்றனர்.

சோமகாந்தனுக்கு அவர்களது வார்த்தைகள் ஆறுதல் அளித்தது. இருப்பினும் பிடிவாதமாக தன்னுடன் யாரும் வரக்கூடாது என்று கூறிவிட்டான்.

Pillaiyar

தனது மகனாகிய ஏமகண்டனிடம், “மகனே… சகல விக்னங்களையும் நீக்கி, வேண்டிய வரங்களை தந்து காத்தருள்பவர் விநாயகப் பெருமான். அவரை தினசரி பூஜித்து வா… என் கொடுநோய் தீரவும் அவரை பிரார்த்தித்து வா…. ஆனைமுகனின் அருளால் நல்லதே நடக்கும்!” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

நாட்கள் கழிந்தன. அரச தம்பதிகள் காட்டில் கிடைக்கும் கனி, கிழங்கு, தேன், திணை முதலியவற்றை உண்டு வாழ்ந்து வந்தார்கள். அங்கே இவர்கள் மகன் ஏமகண்டன் தந்தையின் அறிவுறைப்படி நல்ல முறையில் அரசாட்சி செலுத்தி வந்ததோடு, தினசரி விநாயகருக்கு பூஜையும் செய்து வரலானான்.

இப்படியாக கானகத்தில் வாழ்ந்து வந்த காலகட்டங்களில் சோமகாந்தனின் நல்வினைப் பயனின் காரணமாகவும், ஏமகண்டன் செய்து வரும் விநாயக பூஜையின் மகத்துவம் காரணமாகவும், சோமகாந்தன் ஒரு நாள் தவசிரேஷ்டரான பிருகு முனிவரின் ஆஸ்ரமம் உள்ள பகுதிக்கு வந்து சேர்ந்தான்.

அங்கு ஒரு தடாகத்தின் அருகே இளைப்பாறும் வேளையில், பிருகு மகரிஷியின் புத்திரனான சிவனன் என்னும் முனிகுமாரன் நீர் எடுக்க குடத்துடன் வந்தான்.

திருமகள் போன்ற அழகுடன் காட்சியளித்த சுதன்மையையும் அருகே தொழுநோய் பீடித்த நிலையில் சோமகாந்தனையும், பார்த்து வியப்படைந்தவன், “பெரியோர்களே தாங்கள் யார்? இந்த வனத்தில் என்ன செய்கிறீர்கள்??” என்று விசாரித்தான்.

சுதன்மை வடியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே நடந்த அனைத்தையும் அவனிடம் தெரிவித்தாள்.

அதைக் கேட்டு வருந்திய அந்த முனிகுமாரன், அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு ஆஸ்ரமத்துக்கு திரும்பினான். அங்கே தனது தந்தையான பிருகு முனிவரிடம் சோமகாந்தன், சுதன்மை இருவரைப் பற்றியும் எடுத்துக்கூறி, அவர்களின் நிலை பற்றிய தனது வருத்தத்தை தெரிவித்தான். “உங்கள் ஒப்புதலின்றி அவர்களை அழைக்கக்கூடாது என்பதால் அழைக்கவில்லை தந்தையே.” என்றான்.

“நல்லது குழந்தாய். நீ உடனே அவர்களை சென்று அழைத்து வா” என்று கட்டளையிட்டார் பிருகு மகரிஷி.

உடனே ஓடோடிச் சென்று சோமகாந்தன் – சுதன்மையிடம் “எங்கள் தந்தை உடனே உங்களை அழைத்து வருமாறு கூறினார்” என்று சிவனன் கூறியபோது, அந்த நொடியே தங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிட்டதைப் போல பூரிப்படைந்தனர் தம்பதிகள்.

சிவனனை பின்தொடர்ந்து ஆஸ்ரமத்துக்கு வந்தவர்கள் பிருகு முனிவரை வணங்கி அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.

“மன்னா… தற்போது உணவருந்தி ஓய்வெடுத்துக்கொள். நாம் காலை பேசுவோம்.” என்று கூறி தனது சீடர்களை அழைத்து தம்பதியினரை சிறந்த முறையில் உபசரிக்கும்படி கட்டளையிட்டார்.

மறுநாள் காலை எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை அணிந்து, நித்ய கர்மானுஷ்டானங்களை செய்து முடித்துவிட்டு சோமகாந்தனும் சுதன்மையும் பிருகு முனிவரை தரிசிக்க வந்தனர்.

அனைவரையும் தனக்கு முன்னே அமரும்படி சொன்ன பிருகு முனிவர் சோமகாந்தன் நடந்த அனைத்தையும் சோமகாந்தன் கூறும் வரை அமைதியாக இருந்தார். பின்னர் சோமகாந்தனின் முற்பிறவி கதையை கூறலானார்.

“சோமகாந்தா நீ முற்பிறவியில் விந்திய மலைக்கு அருகே, கொல்லம் என்னும் பட்டணத்தில் பிறந்தாய். காமந்தன் என்று பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தாய். உரிய காலத்தில் மணம் செய்துகொண்டு பல பிள்ளைகளை பெற்றாய். உன் தாய் தந்தையர் மரித்துப் போன பிறகு, உனக்கு புத்தி கூறுவோர் யாருமில்லாத காரணத்தால் பெண்ணின்பதில் மூழ்கி பல விலை மகளிரை தேடிச் சென்றாய். உன் தாய், தந்தையர், மூதாதையர் அனைவரும் பாடுபட்டு சேர்த்து வைத்த செல்வங்களாய் வேசிகளுக்கு கொடுத்தே அழித்துவிட்டாய். உன் மனைவி உன்னை எவ்வளவோ தடுத்தும் கூட நீ அவள் பேச்சை கேட்கவில்லை. சிற்றின்பத்தில் மூழ்கி, வீடு, நகை, தோட்டம், துரவு இப்படி அனைத்தையும் விற்று பெண்ணின்பம் நாடினாய். ஒரு கட்டத்தில் தரித்திரனாகி விற்பதற்கு எதுவுமில்லை என்கிற கட்டத்தில் பிச்சையெடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கூட விலை மகளிற்கு கொடுத்து வந்தாய். ஒரு கட்டத்தில் பொய்சாட்சி, கோள், பித்தலாட்டம் முதலியவற்றை செய்து பொருளீட்டி அதை கொண்டு சுகபோகம் அனுபவித்தாய். அதன் பிறகு சூது, களவு, வழிப்பறி முதலியவற்றை செய்து வந்தாய். தனியே வரும் பெண்களின் கைவளையல்கள், காற்சிலம்புகள், தோடுகள் முதலியவற்றை பறித்து அதை வேசிகளிடம் கொண்டு போய் கொட்டினாய். அது மட்டுமல்ல குடும்பப் பெண்களை கெடுத்து, பிறர் மனையாள்களை பலவந்தமாக கெடுத்தும் இன்பம் அனுபவித்தாய். உன் துர்ணடவடிக்கை பொறுக்காமலும், ஊரார் உன்னைப் பற்றி கூறும் அவச் சொல் தாங்க முடியாததாலும் உன் மனைவி உன்னைவிட்டு பிரிந்து தாய்வீட்டுக்கு சென்று விட்டாள்.

அதன் பிறகு உன் பாடு இன்னும் கொண்டாட்டமாகிவிட்டது. மதுவருந்தி இஷ்டபடியெல்லாம் உன் ஆட்டங்களை தொடர்ந்தது. நாட்டு மன்னனிடம் உன்னைப் பற்றி புகார்கள் படையெடுக்க அவன் உன்னை நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.

காட்டில் சென்று தஞ்சமடைந்த நீ, எங்கு சென்று கள்வர்களுடன் கூட்டு வைத்துகொண்டு, நாட்டில் செய்த அத்தனை பாதகங்களையும் காட்டிலும் செய்து வந்தாய். பல பட்சிகளையும் மிருகங்களையும் வேட்டையாடி உயிரோடு அவற்றை புசித்தாய்.

இதனிடையே கானகத்தில் தனியே கண்ட பிராமணணன் ஒருவனை வழிப்பறி செய்து, அவன் எவ்வளவோ கெஞ்சியும் கேளாமல் அவனிடம் கொள்ளையிட்டபின்பு அவனை கொன்றுவிட்டாய். இதனால் உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துகொண்டது. ஒவ்வொரு நொடியும் அதற்கு பின்பு உனக்கு ஒரு யுகமாய் கழிந்தது. இதனிடையே நீ செய்த புண்ணியங்களின் பலனும் உனக்கு கிடைக்கவே அரசனாக பிறந்தாய்.” என்றார் பிருகு மகரிஷி.

தனது முற்பிறவி கதையை கேட்ட சோமகாந்தன் திடுக்கிட்டான்.

“சுவாமி… எத்தனை ஜென்மாகள் எடுத்தாலும் தீர்க்கவே முடியாத பாபங்களை நான் செய்திருக்கிறேன். அப்படியிருக்க நான் அரசனாக பிறக்க காரணமான புண்ணிய பலன் என்ன? அதை அறிய ஆவலாக உள்ளேன்”

“மன்னா.. இந்த உலகில் முழுக்க முழுக்க பாவம் செய்தவர்கள் என்று யாரும் கிடையாது. அதே போன்று புண்ணியம் செய்தவர்களும் கிடையாது. எப்பேற்ப்பட்ட துராத்மாவும் ஏதேனும் ஒரு புண்ணியம் செய்திருப்பான். எப்பேர்ப்பட்ட தர்மவானும் தன்னையுமறியாமல் பாபம் செய்திருப்பான்.

பிரம்மஹத்தி தோஷத்தினால் நீ மிகவும் பாதிக்கப்பட்டாய். உன்னை முதுமையும் தள்ளமையும் பல்வேறு நோய்களும் ஆட்கொண்டன. உன் மனைவியிடம் நீ மீண்டும் சேர விரும்பிய உன் முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் யாரும் உன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை.

இதற்கிடையே நீ முற்பிறவியில் செய்த நல்வினைப் பயன் ஒன்று உன்னை நெருங்கிக்கொண்டிருந்தது.

நீ தங்கியிருந்த காட்டின் வழியே ஒரு வேதியன் வந்தான். நீ யார் என்றோ உன் வரலாறு என்ன என்றோ அறியாத அவன் உன்னிடம் யாசகம் கேட்டான். நீ அவனிடம் உன்னிடமிருந்த பொருட்களில் ஆடை ஆபரணங்கள் கொஞ்சம் மற்றும் துணிமணிகள் ஆகியவற்றை கொடுத்தாய். மேலும் சிலரை அழைத்துக்கொண்டு வந்தால் அவர்களுக்கும் தருவதாக சொன்னாய்.

இதையடுத்து அவன் பல்வேறு இடங்களுக்கு சென்று தனக்கு தெரிந்த பல்வேறு வேதியர்களை அழைத்து வந்தான். அவர்களில் சிலர் உன்னை அடையாளம் கண்டுகொண்டனர்.

“ஐயோ… பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் கூசாமல் செய்தவனாயிற்றே இவன். இவன் முகத்தில் விழிப்பதே பாவம். இவனிடம் யாசகம் செய்வது அதைவிட பாவம். இவனை பார்த்த பாவத்தை தொலைக்க இப்போதே சென்று நதியில் மூழ்கி ஸ்நானம் செய்யவேண்டும்” என்று கூறி திரும்பிச் செல்ல முற்ப்பட்டார்கள்.

அதன் பிறகு நீ அதுவரையில் செய்து வந்த பாவங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. உன்மனைவி மக்கள் உட்பட உற்றார் உறவினர்கள் அனைவரும் உன்னை கைவிட்டதும் உன்னிடம் தருமம் வாங்குவது கூட பாவம் என்று அந்தணர்கள் கூறிச் சென்றதும் உன்னை மிகவும் பாதித்துவிட்டது.

ஓடிச் சென்று, “என்னை மன்னித்து என் தானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். கடைசி காலத்தில் நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்று அவர்கள் கால்களை பிடித்துக்கொண்டு கெஞ்சினாய். அவர்கள் உன்னை தொடக்கூட அஞ்சி, ஒதுங்கி சென்றார்கள்.

உன்னிலை கண்டு இரக்கப்பட்ட அவர்களில் ஒருவர், “காமந்தா உனக்கு உண்மையில் நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், இந்த கானகத்தின் எல்லையில் முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் கோவில் ஒன்று சிதிலமடைந்து செடி, கொடிகள் சூழ்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. அந்த ஆலயத்தை உன் செலவாலும் முயற்சியாலும் புதுப்பித்து அதையே பெரிய தர்மகாரியமாக நினைத்துக்குள். விநாயகப் பெருமானின் பேரருள் கிடைக்கும்.” என்று கூறிவிட்டு சென்றார்.

தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பவன் ஒரு கயிற்றை போட்டால் எப்படி அதை பிடித்து மேலே வர முயற்சிப்பானோ அதே போல நீ அந்த சொல்லை கருதினாய்.

நீ பல்வேறு வழிகளில் சேர்த்து வைத்த செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து விநாயகப் பெருமான் முன்பு போட்டு, அவரை வணங்கி நின்றாய்.

பட்டணம் சென்று சிற்பிகள், மேஸ்திரி, சித்தாள் என பல்வேறு ஆட்களை கூட்டி வந்து அந்த ஆலயத்தை புனரமைக்க ஆரம்பித்தாய். பின்னர் அந்தணர்களை கொண்டு பிள்ளையாருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வித்தாய். இப்படியே விநாயகரின் வழிபாட்டில் உனது எஞ்சிய காலம் முழுதும் கழிந்து இறுதியில் மாண்டும் போனாய்.

உன்னை எம கிங்கரர்கள் எமலோகத்தில் எமதர்மன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினார்கள். உன் பாவ புண்ணிய கணக்குகளை பார்த்த சித்திரகுப்தன், “இவன் தன் வாழ்நாள் முழுக்க பாவங்களே செய்துவந்திருக்கிறான் என்றாலும் தன் இறுதிக்காலத்தில் சிதிலமடைந்து பூஜையின்றி காணப்பட்ட பிள்ளையார் கோவில் ஒன்றை புனரமைத்து அங்கு பூஜைகள் ஏற்பாடு செய்தான்.” என்றார்.

எமதர்மராஜன் சிந்தித்தான். “நீ எண்ணற்ற பாவங்கள் செய்தாலும் அந்த பாவங்கள் அனைத்தும் நீ அந்திம காலத்தில் செய்த விநாயகர் கோவில் திருப்பணியால் பஞ்சு பொதியில் பட்ட நெருப்பு போல எரிந்தொழிந்தன. இருந்தாலும் பஞ்சமா பாதகங்களை கூசாமல் செய்தபடியால் நீ பாவத்தின் பலனையும் அனுபவிக்கவேண்டும். உன் அடுத்த பிறவியில் எதை முதலில் அனுபவிக்க விரும்புகிறாய்? பாவத்தின் பலனையா? அல்லது புண்ணியத்தின் பலனையா ? என்று கேட்டான். நீ முதலில் புண்ணியத்தின் பலனை அனுபவிக்க விரும்புவதாக சொன்னாய். அதன்படி முதலில் மன்னனாக பிறந்து உன் புண்ணியப் பலனை முதலில் அனுபவித்தாய். இப்போது தீவினைப் பலனின் காரணமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாய்.”

“இருப்பினும் இந்த பிறவியிலும் நீ செய்த விக்னேஸ்வர பூஜையாலும் உன் மகன் செய்து வரும் விக்னேஸ்வர பூஜையின் பலனாலும் என்னை சந்திக்கும் வாய்ப்பை பெற்றாய். உன் தொழுநோய் முற்றிலும் நீங்குவதற்குரிய உபாயத்தை சொல்கிறேன். கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு பிருகு முனிவர் கமண்டலத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்து மஹா கணபதி மந்திரத்தை 108 முறை தியானித்து, சோமகாந்தன் மீது தெளித்தார்.

இதைத் தொடர்ந்து, அதுவரை சோமகாந்தனை பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமானது ஒரு பூதத்தின் உருவெடுத்து வெளியேறியது. தொடர்ந்து அந்த பூதத்திற்கு மோட்சத்தை அளித்த பிருகுமுனிவரிடம் சோமகாந்தன் “சுவாமி… பிரும்மஹத்தி என்னைவிட்டு நீங்கும்படி செய்துவிட்டீர்கள். இந்த தொழுநோயும் என்னைவிட்டு போகுமாறு செய்யவேண்டுகிறேன்” என்றான்.

“முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமானின் பெருமையை உரைக்கும் விநாயகர் புராணத்தை கேட்பாய் என்றால உன் உடலிலிருந்து தொழுநோய் உன்னைவிட்டு நீங்கும்!” என்றார்.

மறுநாள் தூய நீரில் நீராடி, நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்த பின்னர் பிருகு முனிவரை பணிந்து வணங்கி தக்க ஆசனத்தில் அமர்ந்தபடி விநாயகர் புராணத்தை கேட்க ஆரம்பித்தான் சோமகாந்தன்.

ஓரிரு சர்க்கம் சொல்லி முடித்தநிலையில் சோமகாந்தனின் உடலில் மாற்றப் ஏற்படத் துவங்கி, அவனது தொழுநோய் முற்றிலும் மறைந்தே போனது.

நண்பர்களே காமந்தன் தனது பெயருக்கு ஏற்ப காமந்தகாரனாக உழன்று பஞ்சமா பாதகங்களை கூசாமல் செய்த நிலையில், மரணகாலத்தில் மனம் திருந்தி விநாயகருக்கு திருப்பணிகள் செய்து அதன் பலனாக அடுத்த ஜென்மத்தில் சோமகாந்தன் என்னும் அரசனாக பிறந்து தொழுநோய் பாதிப்பிலிருந்து தக்க சமயத்தில் மீண்டு நல்வழியை அடைந்தான் என்றால், அனுதினமும் தன்னை துதிப்போருக்கு விநாயகர் எத்தகைய நன்மைகளை செய்வார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்! பொய்யில்லை கண்ட உண்மை.
– கவிஞர் கண்ணதாசன்.

=========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

தீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் !

தீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

Thirumurai Pillaiyaar
திருமுறை விநாயகர், குன்றத்தூர்

வரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.

சிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் :  காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே)

அனைவரும் வருக! ஆனைமுகனின் அருளைப் பெறுக!

=========================================================

Also check :

மகத்துவம் மிக்க தமிழக பிள்ளையார்கள் 

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)

=========================================================

[END]

6 thoughts on “வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

  1. அருமையான விஷயம். சென்னையில் இருந்தால் நிச்சயம் தவறாமல் கலந்துகொள்வேன். இங்கே எங்கள் பகுதியில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. அங்கு காலை எல்லோரும் சென்று வருகிறோம்.

    பிள்ளையாரைப் பற்றி நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. பல புராணங்களில் பிள்ளையாரின் மகத்துவம் பற்றி செய்திகள் இருக்கின்றன.

    திருமுறை விநாயகர் பற்றிய தகவல் அருமை. விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். விரைவில் அளிக்கவும்.

    சோமகாந்தன் கதை இதுவரை கேட்டதில்லை. அருமையான கதை. நிச்சயம் அத்தனை பாவங்கள் செய்த ஒருவர், அடுத்த ஜென்மாவில் அரசனாக பிறக்கிறார் என்றால் பிள்ளையாருக்கு செய்யும் தொண்டு தான் எத்ததனை சக்தி மிக்கது.

    நல்வினைப் பயன் இருந்தால் தான் நல்லவர்களே கண்களில் படுவார்கள் என்பதையும் பதிவில் அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள். எங்கள் நல்வினைப் பயன் தான ரைட்மந்த்ரா கண்ணில் பட்டு இன்று பல நல்ல விஷயங்களை அரிய விஷயங்களை தெரிந்துகொள்கிறோம்.

    எங்கள் ஊரில் வறண்ட பிள்ளையார் இருந்தல தெரிவிக்கிறேன். அவசியம் குழுவினருடன் நேரில் வரவேண்டும்.

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. நல்ல அருமையான கதை சார், உங்கள் தளம் படிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை நல்ல நல்ல அருமையான விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    இன்றும் எங்கள் வீட்டின் கிழே உள்ள விநாயகருக்கு முடிந்த வரையில் தினமும் விளக்கு போட்டு வருகிறார் என் மனைவி

    நீங்கள் சொன்ன வறண்ட பிள்ளையார் எங்கே கண்டாலும் என்னால் முடிந்ததை செய்வேன் சார்,

    இந்த நல்ல நேரத்தில் நாங்கள் உங்களுடன் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு சார்,
    நீங்கள் நலமோடு நீண்ட ஆயுளுடன் வாழ்க/

    உங்களுக்கும் நம் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் //

    தங்களின்
    சோ. ரவிச்சந்திரன்

  3. எனக்கு தங்களின் ஏற்பாடு தெரிந்தும், வர முடிய வில்லை. ஆனால் எப்போதும் போல் என் எண்ணம் பூராவும் அங்கேயே இருந்தது. தங்கள் பதிவு பிள்ளையாரை நேரில் தரிசனம் செய்த புண்ணியத்தை தந்து விட்டது. எப்படி ஒரு குடுக்பதையும் கவனித்து கொண்டு பொது சேவை, தெய்வ வழிபாடு, rm பதிவுகள், முன்னேற்பாடுகள், எப்படி சார் முடிகிறது. எப்பவே கண்ண கட்டுதே…. வழி இருந்தால் சொல்லவும். நாங்களும் முயன்று பார்க்கிறோம்.

  4. Hats off Sundar for the great initiative. I vaguely remember a follower of SRi Sri SRi Mahaperiyaval, sharing his similar experience with me, where in Sri Sri Sri Mahaperiyval had asked the devotee to go and perform abhishekams to 100+ ( I do not remember the exact number) such Pillayars .

Leave a Reply to Arunothayakumar Ayothiraman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *