Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

print
ந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்று தியாகங்கள் பல புரிந்த தொண்டர்களை கணக்கெடுத்தால் அது சொல்லி மாளாது. அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து இந்த வலைத்தளத்தில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஆசை அடியேனுக்கு இருக்கிறது. ஆனால் கையில் தட்டுப்படும் ஒரு சிலரைப் பற்றியாவது முதலில் கொடுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் சில அரிய தொண்டர்கள் பற்றி இங்கே தகவல்களை திரட்டி தருகிறோம். இவர்களின் வரலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது. இப்படியும் தியாகிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தில் கிடைத்த சுதந்திரம் இன்று என்ன பாடுபடுகிறது என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

பிரபல சுதந்திர போராட்ட வீரர் தீர்த்தகிரியாரின் சிலை தருமபுரியில் காணப்படும் நிலை
பிரபல சுதந்திர போராட்ட வீரர் தீர்த்தகிரியாரின் சிலை தருமபுரியில் காணப்படும் நிலை

பல ஊர்களில் சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்டவர்களின் சிலைகள் கவனிப்பாரற்று, அலங்கோலமாக கிடக்கின்றன. நாட்டை கெடுத்தவர்களின் சிலைகள் எல்லாம் அவ்வப்போது பரமாரிக்கப்பட்டு மாலை மரியாதைகள் சூட்டப்பட்டு அழகு பார்க்கப்படும் நிலையில், இந்தியா தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக எத்தனை எத்தனையோ தியாகங்கள் செய்த வீரர்களின் சிலைகள் இப்படி இருப்பதை பார்க்கும்போது கண்களில் ரத்தம் தான் வடிகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்றைக்கு நம் மாநிலத்தில் முடிவுக்கு வருகிறதோ அன்றைக்கு தான் உண்மையான சுதந்திர தினம்.

விஷயத்திற்கு வருகிறோம்…

தேசபக்தர்களை சுற்றி வளைத்த ஊர்மக்கள்… பிறகு நடந்தது என்ன?

1942 ஆம் ஆண்டு பம்பாயில் காந்தி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி பிரபலமான ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கத்தை அறிவித்தார். நாடு முழுதும் எழுச்சி அலை பரவியது. மக்கள் ஆங்காங்கே போராடினர். பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சஞ்சீவி ரெட்டி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைதாகினர். பெருந்தலைவர் காமராஜ் சிறிது காலம் தலைமறைவாகத் திரிந்து போராட்ட உத்திகளை வகுத்துத் தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டுத் தாமாகவே போலீசில் சரணடைந்தார்.

நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு “சுதந்திர சேனை” என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.

1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.

ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் “அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்” என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது. அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர்.

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர். நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர். கை விரலில் ஊசியால் குத்தி ரத்தக் கையெழுத்திட்ட பலரில் குறிப்பாக ஜி.மகராஜன், அமலிபுரம் எஸ்.பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு டி.சிவந்திக்கனி, பரமன்குறிச்சி டி.நாகமணி வாத்தியார், செட்டியார்பத்து எம்.அருணாசலம், வாழவல்லான் டி.பச்சப்பெருமாள், கொழுவைநல்லூர் வி.இரமலிங்கம் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.

புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர்.

மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று ‘வந்தேமாதரம்’ என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர்.

"

கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார்.

சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர்.

புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர். ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார்.

தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீசில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

புரட்சிக்காரர்கள் போலீசில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தான் . சத்தம் கேட்டு விழிப்படைந்த அவன் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களை வழிமறித்தார். குண்டுகள் இல்லாத காரணத்தால் தம் துப்பாக்கியின் பெய்னெட் பகுதியைக் கொண்டு குடிபோதையில் அவர்களைத் தாக்கத் தொடங்கினான்.

கூடியிருந்த விடுதலை வீரர்கள் தம் கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் லோன் துரையை வீழ்த்தினர். தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர். லோன் துரை அலறியபடி கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான்.

பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது.

லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது.

லோன் துரையின் கல்லறை
லோன் துரையின் கல்லறை

குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து “குரும்பூர் சதி வழக்கு” பதிவாகியது.

லோன் துரையின் கொலை “குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் கோபமோ தெரியவில்லை…. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நீதிபதி நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை.

மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், “நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?” என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது.

"

இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், “இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்” என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை.

மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று. அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் ஒரு முயற்சியில் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர். தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார்.

காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. ‘தினமணி’ பத்திரிகையும் வேறு பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன.

உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார். ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி.

லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது. அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர்.

"

இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் “தூக்குமேடை ராஜகோபாலன்”, “தூக்குமேடை காசிராஜன்” என்று வழங்கலாயினர்.

India flag

இந்தச் சுதந்திரப் பொன்னாளில் இவர்கள் போன்ற மாவீரர்களைப் போற்றி வணங்குவோம். அப்போதுதான் இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் இந்த மண்ணில் தோன்றுவார்கள். வாழ்க குலசேகரப்பட்டினம் தியாகிகள் புகழ்!!

================================================================

Also check : 

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? 

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

7 thoughts on “நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

  1. இப்படியெல்லாம் தியாகிகள் பாடுபட்ட சுதந்திரம் மோசமான அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சீரழிகின்ற நிலையினை பார்த்தால்
    மனம் வெம்புகின்றது. இந்த இனிய நாளில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகின்றேன். மிக விரைவில் நல்லாட்சி மலர இறைவனை வேண்டுகிறேன்.

  2. இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

    மிகவும் நெஞ்சை நெகிழச் செய்யும் உன்னத பதிவு . கஷ்டப் பட்டு வாங்கிய சுதந்திரத்தின் இன்றைய நிலையை நினைத்தால் கண்ணீர் வருகிறது . இந்த பதிவை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்

    நம் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை நம் தளத்தில் தாங்கள் பதிவாக எழுதவும்

    வாழ்க வளமுடன்

    நன்றி

    உமா வெங்கட்

  3. Nice compilation. But this hard earned freedom……. is it rightly used?
    The living conditions of the present generation of the freedom fighters are still pathetic….

    Its high time they are recognised and duly rewarded.

    Regards
    Ranjini

  4. சுதந்திரம் நோக்கி எழுச்சி குரல் எழுப்பி,
    நோக்கதிற்காக வாழ்ந்தும் வென்றும் காட்டிய தியாகிகளுக்கு வணக்கங்கள்.

    ரைட் மந்த்ராவின் நோக்கம் பன்முகப்பட்டது என்பதற்கு தேசியம் தாங்கி வந்திருக்கும் இந்த பதிவு ஒரு சான்று.

    நன்றி சுந்தர்.

    வாழ்க பாரதம்!

  5. எந்தஒரு பத்திரகையிலும் வெளி வராத ஒரு சிறந்த பதிவு.
    இவ்வளவு சிரமத்தில் பெற்ற சுதந்தரத்தை சீரிய முறையில் பேண வேண்டும்

    ஆசிரியர்க்கு மனமார்ந்த நன்றிகள்

  6. தேசபக்தியை கிளர்ந்து எழச் செய்யும் பதிவு. இன்றிரவு என் குழந்தைகளுக்கு இந்த கதையைத் தான் கூறப்போகிறேன்.

    குலசேகரப்பட்டினம் வழக்கு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆளவந்தார் கொலை வழக்கு போல் இதுவும் ஏதோ கொலை வழக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    இப்போது தான் தெரிகிறது அது நம் சுதந்திர போராட்டம் தொடர்புடையது என்று.

    உண்மையில் பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் இன்று பரிதாபமான நிலையில் இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.

    பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  7. குலசேகர பட்டினம் கலவர வழக்கு – கேள்விபடாத ஒன்று. கேள்விப்பட்டபின் , சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் ? எத்தனை எத்தனை உயிர்கள்? எத்தனை எத்தனை தியாகங்கள்? என்ன விலை கொடுத்து இப்போது நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்?
    இந்த பதிவு கண்டிப்பாக ஆவணபடுத்த வேண்டிய ஒன்று.

    Rightmantra வின் பதிவுகளில், கண்டிப்பாக இந்த பதிவு மணி மகுடமாய் மிளிரும்.

    தங்களின் உழைப்புக்கு நன்றி அண்ணா..

Leave a Reply to UMAVENKAT Cancel reply

Your email address will not be published. Required fields are marked *