Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > “எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

print
சிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்து தவிக்கும் சகோதரி வினோதினிக்கு சிகிச்சை செலவுக்காக தங்களால் இயன்ற பொருளுதவியை அவரது தந்தை ஜெயபாலன் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இறைவா… உனக்கு இரக்கமில்லையா? வினோதினி ஏற்பட்ட சோகம்
நம் முந்தைய பதிவு..
http://rightmantra.com/?p=1940
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

திரு.சிவா என்பவர் நமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில்….

“அண்ணா… நான் தங்கள் பதிவை பார்த்தேன். வினோதினிக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் பெரிய தொகை எதுவும் தந்து உதவிட முடியாது. ஏனெனில் நான் ஒரு மாற்றுத் திறனாளி. மேலும், வேலையின்றி சிரமப்படுகிறேன். என்னால் முடிந்த ரூ.100/- ஐ வினோதினியின் மருத்துவ செலவுக்கு அவர்கள் அக்கவுண்ட்டில் செலுத்தியிருக்கிறேன். தங்கள் முயற்சி குறித்து மகிழ்ச்சியைடைகிறேன்” என்ற ரீதியில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அவருக்கு நான் அளித்த பதிலில், “உடலில் குறைபாடுள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் அல்ல. தன்னம்பிக்கை அற்றவர்களே உண்மையில் ஊனமுற்றவர்கள். மேலும் நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் செய்திருப்பது மகத்தான ஒரு விஷயம். அது பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். இது பற்றி மகாபாரதத்தில் கூட ஒரு கதை இருக்கிறது. விரைவில் அதை பதிவு செய்கிறேன். நன்றி. முடிந்தால் இருகண்களிலும் பார்வையில்லாவிட்டாலும் மிகப் பெரும் சாதனைகளை அனாயசமாக செய்திருக்கும் திரு.இளங்கோ அவர்களை பற்றிய பதிவுகளை படிக்கவும். உங்கள் தன்னம்பிக்கை பன்மடங்கு பெருகும்!” என்றும் கூறியிருந்தேன்.

சிலர் அடுத்தவர்களுக்கோ நல்ல காரியங்களுக்கோ உதவுவது பற்றி கூறும்போது, “எனக்கு வசதியில்லே. ஆண்டவன் எனக்கு பெரிசா எதுவும் கொடுக்கலே அதனால செய்யலே. ஒருவேளை நல்ல வசதியிருந்தா நான் நிறைய செய்வேன். எல்லாரையும் விட செய்வேன்” என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். ஏன்.. ஆண்டவனிடம் கூட இது போன்று கண்டிஷன்களை போடுவது உண்டு. “எனக்கு நிறைய கொடு… நிறைய செய்றேன்….” என்று. ஏன்…. நானோ அல்லது நீங்களோ கூட இத்தகு வார்த்தைகளை கூறியிருப்போம்.

இப்படி சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது கீழ்கண்ட கதையை படியுங்கள் புரியும். (இந்தக் கதை உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் இருப்பினும் தெரியாதவர்கள் நன்மைக்காக தருகிறேன்.)

உதவுவதற்கு எண்ணம் மட்டுமே போதுமானது. அது தான் இறைவனால் கணக்கில் கொள்ளப்படுமே தவிர, நீங்கள் எவ்வளவு பெரிய உதவியை செய்கிறீர்கள் என்பது அல்ல.

உதவுவதற்கு எண்ணம் மட்டுமே போதுமானது. அது தான் இறைவனால் கணக்கில் கொள்ளப்படுமே தவிர, நீங்கள் எவ்வளவு பெரிய உதவியை செய்கிறீர்கள் என்பது அல்ல.

யாகசாலையில் விழுந்து புரண்ட தங்கக் கீரிப்பிள்ளை – மகாபாரதக் கதை!

இறைவனிடம் நமது பக்தியை செலுத்த வேண்டுமானால் கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கிறோம். சற்று சிறப்பாக பிரார்த்திக்கவேண்டும் என்றால் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம். கொஞ்சம் வசதியிருப்பவர்கள் தேங்காய், பூ, பழம் முதலியவற்றை வாங்கி அர்ச்சனை செய்கின்றனர். இன்னும் கொஞ்சம் வசதியிருப்பவர்கள் அபிஷேக ஆராதானைகள் செய்கின்றனர்.

இப்படி அவரவர் வசதிக்கேற்றபடி அனைத்தையும் செய்கின்றனர்.

இதற்கும் மேல் ஏதேனும் இருக்கிறதா என்றால் ஹோமங்கள் செய்யலாம். அதற்கும் மேல் என்றால் யாகங்கள் செய்யலாம். அந்தக் காலத்தில் சக்கரவர்த்திகள் அரசர்கள் என எல்லோரும் யாகங்கள் தான் செய்வார்கள். நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான  புரோகிதர்களையும் அந்தணர்களையும் கொண்டு ஏகப்பட்ட பொருட்செலவில் யாகங்கள் செய்வர். இறுதியில் அன்னதானம், கோ-தானம், சுவர்ண தானம்,  பூமிதானம் உள்ளிட்டவை நடைபெறும். இப்படி செய்யப்படும்  யாகங்களுள் முதன்மையானது அசுவமேத யாகம். குதிரையை கொண்டு செய்யப்படும் இந்த யாகம் மிக மிக பிரசித்தி பெற்றது.

பாரதப்போரின் போது பாண்டவர்கள் தர்மரின் தலைமையில் அது போன்று ஒரு யாகம் ஏற்பாடு செய்தார்கள். வெகு விமரிசையாக அனைவரும் பாராட்டும்படி அந்த யாகம் நடைபெற்றது. “இப்படி ஒரு யாகத்தை இது வரை கண்டதில்லை. இதுபோன்ற விருந்தும் சாப்பிட்டதில்லை” என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

எங்கே இது கர்வமாக மாறி யாகத்தின் பலன் பாண்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பகவான் கிருஷ்ணர் கவலையுற்றார். (செய்கின்ற தர்மம் குறித்து கர்வம் கொண்டால் அதன் பலன் கிடைக்காது போய்விடும்!). எனவே அவர்களின் கர்வத்தை ஒடுக்கவும்… அதே சமயம் இந்த உலகத்திற்கு அதன் மூலம் மிகப் பெரிய செய்தி ஒன்றையும் சொல்ல முடிவு செய்தான் பரமாத்மா.

ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து தர்மரை ஆஹா..ஓஹோ… என்று புகழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் அந்த யாகசாலைக்குள் திடீரென்று கீரிப்பிள்ளை ஒன்று வந்தது.

கீரிப்பிள்ளை என்றால் அது சாதாரணமான கீரிப்பிள்ளை அல்ல. அதன் உடலில் ஒரு பாதி முழுதும் தங்க நிறத்தில் இருந்தது.

யாகசாலைக்குள் நுழைந்த அந்த கீரிப்பிள்ளை…. அன்னதானம் நடைபெற்ற இடத்தில் விழுந்து புரண்டது. மேலும் அங்கிருப்பவர்களை பார்த்து சொன்னது, ”இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு கால் தூசிக்கு கூட இது ஈடாகாது”என்று தூக்கி எறிந்து பேசிற்று.

உஞ்சவ்ருத்தி என்றால் என்ன அர்த்தம் என்று முதலில் தெரிந்துகொள்வோம். ‘உஞ்சவ்ருத்தி’ என்றால் தற்காலத்தில் பிச்சை எடுப்பது, வீடு வீடாகப் போய்த் தான்ய பிச்சை வாங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி தெருத் தெருவாகப் போய் பாட்டு பாடி அரிசி வாங்குவதை உஞ்சவ்ருத்தி பஜனை என்று கூட சொல்வார்கள். தியாகராஜர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் இப்படி வாழ்ந்தவர்கள் தான். ஆனால் நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால், உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேறு. களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும். இதைத்தான் சோற்றுக்கு வேறு வழி இல்லாத பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ‘உஞ்சம்’என்றால் ‘சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது’என்றே அர்த்தம். இப்படி களத்திலே மிச்ச மீதி உள்ள நெல்லை பொறுக்கிக்கொண்டு வந்து அதை வைத்து உயிர் வாழ்பவர்களே உஞ்சவ்ருத்தி பிராமணர்கள் எனப்படுவர்.

கீரிப்பிள்ளை இவ்வாறு பேசியதும் அந்த பகுதியே பரபரப்படைந்தது.

“ஹே…. இதென்ன அதிசயம்? கீரிப்பிள்ளை பேசுகிறது? அதுவும் தங்க நிறத்தில் கீரிப்பிள்ளை? இங்கே ஏன் விழுந்து புரள்கிறது?” என்று அந்த இடமே பரபரப்பில் மூழ்கிவிட பஞ்சபாண்டவர்களும் தர்ம புத்திரர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள்.

“உன் உடலில் எப்படி தங்க நிறமாக ஒரு பாதி மாறியது? மேலும் நீ ஏன் இங்கு வந்து இப்படி புரள்கிறாய்? எப்படி உனக்கு பேசும் ஆற்றல் கிடைத்தது? யார் அந்த உஞ்சவிருத்தி பிராமணன்? அவன் அப்படி செய்தது என்ன” என்று தருமர் அடுக்கடுக்காக கேட்க…

அதற்கு அந்தக் கீரிபிள்ளை பதில் சொல்ல ஆரம்பித்தது.

குருக்ஷேத்திரத்தில் சில காலம் முன்பு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய செல்வந்தர்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்டியான நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு ஏழை உஞ்சவ்ருத்தி பிராம்மண்ணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமை கொஞ்சம் கை வசம் இருந்தது. அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்மணன், அவனுடைய பத்தினி, பிள்ளை, மாட்டுப்பெண் – இந்த நாலு பேருக்கும் சேர்த்து ஒரு வேளைக்குத்தான் இந்த மாவு போதும். ‘ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம்; அடுத்த வேளை அவன் படியளப்பான். அதுவும் இல்லாவிட்டால் ப்ராணன் போக வேண்டியதுதான்’என்று நினைத்துக்கொண்டார்கள். மாவை வைத்து மனைவி சப்பாத்தி இட்டாள். ஆளுக்கு ஒரு சப்பாத்தி வந்தது. அதையாவது சாப்பிடலாம் என்று உட்கார்ந்தார்கள்.

இந்த நேரம் பார்த்து ”பவதி பிக்க்ஷான் தேஹி!”என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார்.

“சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு அம்மா.. ஏதாவது சாப்ப்பிட இருந்தா கொடுங்களேன்….” என்று அந்த யாசகர் கேட்க்க…. அந்த ஸந்தர்ப்பத்திலுங்கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது விருந்தோம்பல் பண்பில் பின்வாங்கவில்லை. “நீங்கள் மூன்று பேரும் உங்கள் பங்கை சாப்பிடுங்கள். என் பங்கை நான் அதிதிக்கு தருகிறேன்” என்று அந்த இல்லத்தரசி கூறினார். “இல்லை… இல்லை…. நான் தான் தருவேன்” என்று மற்றவர்கள் கூற.. இப்படி பிராம்மணன், அவனுடைய பத்னி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு உணவை கொடுக்க முன்வந்தார்கள்.

கடைசீயில், அந்த பிராம்மணன், “நீங்கள் மூவரும் பட்டினி கிடந்து மடிந்து போனால் அந்த பாவம் என்னையே சாரும். ஏனெனில், குடும்பத் தலைவன் என்ற முறையில் உங்களை காப்பது என் கடமை. எனவே அதிதிக்கு நான் என் பங்கை தருகிறேன்.” என்று கூறி தன் ஒரு பங்கை வந்த அதிதிக்கு கொடுத்துவிடுகிறார்.

அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீரவில்லை என்றார். உடனே பத்னி தன் பங்கை அவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள். அதையும் சாப்பிட்டுவிட்டு, ‘இன்னமும் கொண்டா!’ என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி. கொஞ்சம்கூடக் கோபமே இல்லாமல் பிள்ளையும் தன் பங்கு உணவை அவருக்குக் கொடுத்தான்.அதையும் ஏப்பம் விட்டுவிட்டு, இன்னும் வந்தாலும் கொள்ளும் என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி. கடைசியில் மாட்டுப்பெண்ணும் அவருக்கு மனஸாரத் தன் பங்கு மாவைக் கொடுத்தாள்.

அதிதி அதைச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுவிட்டு போய்விட்டார்.

ஏற்கனவே சாப்பிடாது இருந்தபடியால் அடுத்த சில மணிநேரங்களில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்து விடுகிறார்கள்.

சற்று நேரத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.

”நான்தான் தர்மதேவதை. உங்களைப் பரிசோதிக்கவே யாம் யாசகராக வந்தோம். பரீட்சையில் நீங்கள் அற்புதமாக ஜயித்துவிட்டீர்கள். உயிரைக் கொடுத்தாவது விரும்தோம்பலை நடத்திக் காட்டுவதில் உங்கள் குடும்பத்தைப்போல் எங்குமே கண்டதில்லை. அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்கத்திலேயே இடம் ‘பிடி’த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான சுவர்க்கத்துக்கு  வந்து சேர்வீர்களாக”என்று அந்தக் குரல் கூறிற்று.

அடுத்த நொடி புஷ்பக விமானம் ஒன்று வந்து அவர்கள் நால்வரையும் மேலே ஏற்றிக்கொண்டு சென்றுவிடுகிறது.

இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ”அந்த நேரத்தில் நான் அந்த வீட்டருகே தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவு ஏதோ துளித் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே தங்க மயமாகிவிட்டது!”

“ஒரு பக்கம் தங்கமாகிவிட்டது. மற்றொரு பக்கமும் தங்கமாகிவிடாதா என்கிற ஆசையில் நான் அலைந்துகொண்டிருந்தேன். காட்டில் கண்ட ஒரு ரிஷியிடம் இது பற்றி கேட்டேன்… அவர் “அந்த உஞ்சவிருத்திப் பிராம்மணனின் மனை மிகவும் புண்ணியம் பெற்றது. பவித்த்ரமானது. அதை விட பெரிய தானம் நடக்கிற இடத்திற்கு நீ சென்றால் உன் மீதி உடலும் தங்கமாக மாறிவிடும்” என்றார்.

”நானும் முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் பெரிய பெரிய யாகசாலைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்ம புத்ரர் மஹா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே போனாலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!” என்று கீரிப்பிள்ளை முடித்தது.

உடனே தர்மபுத்திரர் வெட்கி தலை குனிந்தார்.

அஸ்வமேத யாகத்திற்கு ஆகும் பொருட்செலவில், முயற்சிகளில், பிரயாசைகளில், லட்சத்தில் ஒரு பங்கு பெறாத ஒரு சாதாரண அன்னதானம் இத்தனை புண்ணியம் தருகிறது, என்றால் அது எதைக் குறிக்கிறது ?

அஸ்வமேத யாகத்திற்கு ஆகும் பொருட்செலவில், முயற்சிகளில், பிரயாசைகளில், லட்சத்தில் ஒரு பங்கு பெறாத ஒரு சாதாரண அன்னதானம் இத்தனை புண்ணியம் தருகிறது, என்றால் அது எதைக் குறிக்கிறது ?

சும்மாவா சொன்னாரு வள்ளுவர்…. (இவர் ஒரு சுப்ரீம் கோர்ட்).

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

ஒரு செயலின் புண்ணியத்தின் தன்மை அதை செய்யப்படும் சூழல், செய்பவரின் நிலை, பெறுபவரின் நிலை இவை அனைத்தையும் வைத்தே அந்த ஆண்டவனால் கணக்கிடப்படுகிறது.  மிகப் பெரும் செல்வந்தன் செய்யும் தான தருமங்களை விட, ஒரு ஏழை செய்யும் மிகச் சிறிய தர்மம் பன்மடங்கு சக்திமிக்கது.

எனவே வசதி குறைந்தவர்கள் தாங்கள் செய்யும் உதவி பற்றி வருந்தத் தேவையில்லை. வசதிமிக்கவர்கள் தாங்கள் செய்யும் உதவிகள் பற்றி கர்வப்படத் தேவையுமில்லை.

இது பற்றி இன்னொரு மிகப் பெரிய சம்பவமும் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்.

[END]

12 thoughts on ““எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

  1. என்னதான் நாம் வசதிக்கு ஏற்ற மாதிரி கடவுளுக்கு செய்தாலும் ,அவர் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பார்ப்பான்.நாம் தான் பணம் இருக்கிறது என்று 50 ருபாய் கொடுத்தால் கடவுளை கொஞ்சம் கிட்ட பார்க்கலாம் ,300 ருபாய் கொடுத்தால் இன்னும் கிட்ட பார்க்கலாம் என்று பிரித்து வைத்து உள்ளோம்.

  2. எத்தனை கோடி செலவு செய்து மன அமைதி தேடி போனாலும் கிடைக்காதது மனதார ஒருவருக்கு உதவும் போது நம் மனது நிம்மதி அடைகிறது.

    சகோதரி வினோதினியின் இந்த முடிவிற்கு காரணமானவர்களை தண்டிப்பது மட்டுமல்லாமல் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க அரசாங்கத்தை மட்டும் சார்திராமல் அந்தந்த பகுதியில் ஒரு மக்கள் இயக்கமாகவே உருவாகவேண்டும்.

    தண்டனை மிக கடுமையாக இருக்கும் போது தவறுகள் குறையும்.

    இறை சட்டத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் குற்றங்கள் மிக குறைவு.

  3. அருமையான கதை !!!
    மிக்க நன்றி !!!
    எப்போது பொருளை தேடும் காலம் போய் அருளை தேடும் காலம் மலர்கிறதோ அன்றைக்கு தான் நம் மனம் பக்குவமடையும் !!!

  4. ///////அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு (ஸ்வர்கத்திலேயே) இடம் ‘பிடி’த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான சுவர்க்கத்துக்கு வந்து சேர்வீர்களாக”என்று அந்தக் குரல் கூறிற்று.
    அடுத்த நொடி (வைகுண்டத்திலிருந்து) நேரடியாக/////

    வணக்கம் சுந்தர், மீண்டும் தங்கள் கவனத்திற்கு. சொர்க்கம்- நரகம் Vs வைகுந்தம்/மோக்ஷம்/பரமபதம் வித்யாசத்தை மறுமுறை சிந்தித்துப் பார்க்கவும். முடிந்தால் தனிக் கட்டுரையாக எழுதவும். ஜீவாத்ம- பரமாத்ம உறவைப் பற்றி பேசும் பொழுது இந்தத் தெளிவு மிக மிக அடிப்படையானது. ஒன்றுமே செய்யா விட்டாலும் சொர்கமே/நரகமோ போகத் தான் போகிறோம், திரும்பி பிறக்கத் தான் போகிறோம். வைகுந்தமும் மோக்ஷப் ப்ரார்ப்தியும் அப்படியில்லை. அங்கு செல்பவர்கள் “திரும்பி வருவதில்லை, திரும்பி வருவதில்லை” (na cha PunarAvartatE na cha PunarAvartatE) என்று உபநிஷத் அறுதியிட்டுக் கூறுகிறது. The concept here is very simple and there is no confusion about it. இந்தத் தெளிவு மிக மிக அடிப்படையானது/அவசியமானது. – அடியேன் இராகவன்

    —————————————————
    இராகவன், நீங்கள் அன்று என்னிடம் ‘சொர்க்கவாசல்’ அல்ல ‘பரமபதவாசல்’ என்று கூறும் போது தான் சிந்தித்தேன்.

    சொர்க்கம் என்பது சாதாரண விஷயம். ஆனால் பரமபதவாசல் என்பது கிடைப்பதர்க்கரிய பேறு என்பதை புரிந்துகொண்டேன்.

    ஆன்மீகத்தில் நான் தற்போது தான் எல்.கே.ஜி. சேர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் டிகிரியெல்லாம் வாங்கிவிட்டீர்கள்.

    பிழையை பொறுக்கவும்.

    நீங்கள் கூறுவது போல, இது பற்றி தற்போது படித்துவருகிறேன்.

    அனைவருக்கும் புரியும்வண்ணம் விரைவில் ஒரு விரிவான பதிவை தருகிறேன்.

    – சுந்தர்

  5. இந்த கதையின் மூலம் நான் உஞ்சவ்ருத்தி என்றல் என்ன என்பதை தெரிந்து கொண்டேன். உங்கள் கதை மற்றும் தகவல் மிகவும் அருமை.

  6. இப்பதிவை இப்பொழுது தான் பார்த்தேன் — மிகவும் வேதனை அடைந்தேன் ..என்னுடைய பங்கை அனுப்பி உள்ளேன் …. இறைவன் அந்த சகோதரி க்கு துணை இருக்கட்டும் !

  7. இறைவன் தர்மம் செய்பவரின் தூய இதயத்தை பார்க்கிறான். அவர் தரும் பொருளைப் பார்பதில்லை.

  8. EXCELLENT STORY SIR. GOD BLESS YOU FOR LONG LIVE, HEALTH AND WEALTH .

    MANY MORE STORIES FOR OUR MIND PURIFICATION. HELPS A LOT FOR GOOD THINKING SIR.

    REGARDS.

    S. RAVICHANDRAN

Leave a Reply to Raghavan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *