Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

print
ல் நந்தி புல் தின்ற அதிசய சம்பவத்தை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது வேறு ஒரு சம்பவத்தை பார்ப்போம். சென்ற வாரம் சிவராத்திரி குறித்து நம் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் மகத்துவத்தை விளக்கி கடந்த கடந்த மூன்றாண்டுகளாக நாம் சிவராத்திரி விரதம் இருந்து வரும் விஷயத்தை சொல்லி அதன் மூலம் நமக்கு கிடைத்த மனநிறைவையும் உயர்வையும் சொன்னோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் குறித்து நாம் மேற்கொண்ட தேடலே நமது வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நல்லதை பற்றி நமது புத்தியில் தோன்றக் கூட நமக்கு பிராப்தம் இருக்கவேண்டும்.

“நான் வேணும்னா இந்த வருஷம் விரதமிருந்து பார்க்கிறேன். எனக்கு ஏதாவது நல்லது நடக்குதா பார்க்கலாம்! அப்படி நடந்தா அது அதிசயம் தான்!” என்றார்.

நாம் பதறிப்போய், “ஒரு போதும் அப்படிச் சொல்லாதீர்கள். விரதங்களை அவற்றின் மேன்மை உணர்ந்து நமது கடமையாகத் கருதித் தான் அனுஷ்டிக்கவேண்டுமே தவிர, அவற்றின் மகத்துவத்தை பரிசோதிப்பதற்காக அனுஷ்டிக்க கூடாது. அப்படி ஒரு எண்ணமும் நமக்கு வரக்கூடாது. அப்படி செய்தால் விரதம் அர்த்தமற்றதாகிவிடும்!” என்றோம்.

காசியில் உணவின்றி தவித்த வேத வியாசர்!

வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப் பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தியவர் வேத வியாசர். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார். பதினெண் புராணங்களை இயற்றியவரும் இவர் தான். மகா பாரதத்தை எழுதியதும் இவர் தான்.

இவர் ஒரு முறை சீடர்களோடு ஒரு ஊருக்கு சென்று கொண்டிருக்கையில் யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த ஒரு சிறு கூட்டத்தை கண்டார். அக்கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருந்தார்கள்.

Veda Viyasa Maharishiஅவர்களிடம் சென்று “அடியேன் பெயர் வேத வியாசன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே…” என்று ஆச்சரியத்தோடு வினவினார்.

அவர்கள் “வேத வியாசரே… சிவபெருமானின் தலைநகரம் என்கிற பெருமைக்குரிய காசி மாநகரத்திலிருந்து நாங்கள் வருகிறோம். அந்த நகரத்தின் மேன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும், காசியை பேசும் நாவே நாவாகும். காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும், காசியை இனிது காணும் கண்களே கண்களாகும் என காசிக்கண்டம் கூறுகிறது. நல்ல உணவையே கண்டறியாத நாங்கள் காசியில் இருந்த நாட்கள் முழுதும் அறுசுவை உணவு உண்டோம். அப்படி ஒரு உணவை இனி எங்கள் பிறவியில் உண்போமா என்று தெரியாது. அங்கே எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணியின் அருளால் எல்லாப் புண்ணியத் தலங்களுக்குள் காசியே மணிமுடி போல் தலைசிறந்து விளங்குகிறது.” என்றனர்.

காசி குறித்து சாதாரண பாமரர்கள் கூட இவ்விதம் சிலாகித்து பேசுவது வேத வியாசருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனது சீடர்களை அழைத்தவர், “அனைவரும் உடனே காசி புறப்படுவோம். இவர்கள் சொல்வது உண்மையா என்று அங்கே சென்று பரீட்சித்து பார்த்துவிடுவோம்” என்றார்.

அவரின் சீடர்களுக்கு “காசி போகலாம்” என்றவுடனேயே குதூகலம் ஏற்பட்டது. காரணம், கானகத்தில் பழங்களையும் கிழங்குகளையுமே புசித்துவந்தவர்களுக்கு காசியில் நாவுக்கு ருசியாக வயிறார சாப்பிடலாமே என்கிற எண்ணம் தான்.

இவர்கள் காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு பிக்ஷைக்கு புறப்பட்டார்கள்.

என்ன சோதனை இவர்களுக்கு ஒரு குண்டுமணி அன்னம் கூட பிச்சையாக கிடைக்கவில்லை. ஒரே குழுவாக செல்லாமல் ஒவ்வொருவரும் ஒரு தெரு என்று பிரிந்து சென்றார்கள். அப்போதும் பிக்ஷைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் இரண்டு நாளல்ல… பல நாட்கள் இந்நிலை நீடித்தது.

“மகத்துவம் மிக்க காசி நகரிலே அதிதிகளுக்கு ஒரு பருக்கை கூட அன்னம் கிடைக்கவில்லையே… இதென்ன அநியாயம்?” என்று சினந்த வியாசர் காசி நகரையும் அம்மக்களையும் சபிக்க நினைத்தார்.

கமண்டலத்தில் நீரை எடுத்து சபிக்க எத்தனித்தபோது, எதிரே இருந்த ஒரு மாளிகையின் கதவு திறந்தது.

அங்கிருந்த ஒரு பெண், வியாசர் கோபமாக இருப்பதை பார்த்து “நிறுத்துங்கள் சுவாமி. காசி மக்கள் மீது ஏனிந்த கோபம்?” என்று வினவினாள்.

வியாசர் நடந்ததை கூறி, “நானும் என் சீடர்களும் கடந்த பல நாட்களாக பட்டினி..!” என்றார்.

“நீங்கள் கவலைப்படவேண்டாம். என் வீட்டிற்கு வாருங்கள்… உங்களுக்கு அறுசுவை உணவு தயாராக உள்ளது!” என்று கூறி வீட்டிற்கு அழைத்தாள்.

உள்ளே சென்ற வியாசருக்கும் அவரது சீடர்களுக்கும் தலை வாழை இலை போடப்பட்டது.

“ம்….சாப்பிடுங்கள்!” என்று அந்த பெண்மணி கூற, வெறும் இலையை பார்த்த வியாசருக்கு கோபம் பொத்துக்கொண்டு  வந்துவிட்டது.

“என்ன கிண்டல் செய்கிறீர்களா? எதை சாப்பிடுவது? வெறும் இலையையா?” என்று கூறி அந்த பெண்மணியை கோபத்தோடு எரித்து விடுவதை போல பார்த்தார்.

“இதோ ஒரு நிமிடம்…” என்று கூறி அந்த பெண்மணி உள்ளே செல்ல, இங்கே தற்செயலாக மீண்டும் இலையை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவர் இலைகளிலும் அவரவருக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் காணப்பட்டன. பணியாளர்கள் ஓடிவந்து பரிமாற வியாசரும் சீடர்களும் என்ன ஏதென்று கூட யோசிக்காமல் வயிறார உண்டனர். சாப்பிட்டு முடித்தவுடன், அந்த பெண்மணிக்கு நன்றி கூறுவதற்கு சென்றனர்.

ஆனால் அங்கே அந்தப் பெண்மணி இல்லை.

இதென்ன அதிசயமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே காசி விஸ்வநாதரும் அன்னை அன்னபூரணியும் பிரத்யட்சமானார்கள்.

Kasi Annapoorani

“வியாஸா… நடந்தது கண்டு குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கு காசியிலேயே உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கும் நிலை ஏன் ஏற்பட்டது தெரியுமா? நீங்கள் அனைவரும் காசியின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்ந்து பக்தியோடு இங்கு வரவில்லை. மாறாக காசியின் மகத்துவத்தை சோதித்து பார்க்கும் எண்ணத்தோடு தான் நீ இங்கே வந்தாய்.  இங்கு வந்தால் அறுசுவை உணவு கிடைக்கும் என்கிற எண்ணம் மேலிடத்தான் உன் சீடர்களும் வந்தார்கள். ஒருவேளை நீங்கள் பக்தியோடும் நல்லெண்ணத்தோடும் காசிக்கு வந்திருப்பீர்களேயானால் உங்களுக்கு காசி வேறு விதமான அனுபவத்தை தந்திருக்கும்!” என்றார் பரமேஸ்வரன்.

வியாசரும் அவர் சீடர்களும் பரவசத்துடன் பணிந்து, “உமா மகேஸ்வரா… அறியாமல் நாங்கள் செய்த பிழையை பொருத்தருள வேண்டும்! ஷேத்ரங்களின் மகிமையை சந்தேகிப்பதே பெரும்பாவம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம்!” என்றனர்.

நித்யாநந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷமா ஹேச்வரீ
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுரா தீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

ஷேத்ரங்களின் மகிமையை மட்டுமல்ல, விரதங்களின் மகிமையைக் கூட ஒரு போதும் பரிசோதிக்ககூடாது. “நான் இந்த விரதம் இருந்தேனே அதனால எனக்கு என்ன கிடைச்சது… அந்த விரதம் இருந்தேனே அதனால எந்த பிரயோஜனமும் இல்லை…” போன்ற வாதங்களை அடியோடு நமது எண்ணங்களிலிருந்து அகற்றவேண்டும்.

முக்கிய விரதங்களை அனுஷ்டிப்பது நமது கடமை. அதுவும் சிவராத்திரி விரதம் போன்ற ஒரு மகத்துவமான விரதத்தை அனுஷ்டிக்கிறோம், அது பற்றிய அறிவு நமக்கு இருக்கிறது என்பதே நாம் செய்த பாக்கியம் தான்.

சாக்கடைக்குள் விழுந்து கிடந்து தத்தளித்த குடிகாரனை  அந்த வழியே சென்ற ஒருவன் கருணை கொண்டு, மேலே ஏற்றி, காப்பாற்றி கங்கை நீரால் குளிப்பாட்டிவிட்டு போனானாம். அப்படி போனவனைப் பார்த்து… “ஏனப்பா.. தூக்கிவிட்டா  போதுமா? வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் விருந்து கொடுக்க வேண்டியது தானே?” என்று கேட்டால் அது எத்தனை நகைப்புக்குரியதோ அத்தனை நகைப்புக்குரியது “சிவராத்திரி விரதம் அனுஷ்டித்த எனக்கு நீ என்ன தந்தாய்” என இறைவனிடம் கேட்பது. புரிந்ததா?

==============================================================

Also check :

மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12

==============================================================

[END]

12 thoughts on “இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

  1. மேலான வணக்கங்கள் சுந்தர் சார், நேற்றைய என் பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததற்கு நன்றி! மேலும் சேஷாத்ரி சுவாமி அவர்கள் பற்றிய பதிவு பற்றி நீங்கள் கூறி இருந்தது என்னை மிகவும் நெருட வைத்து விட்டது நானும் அதைப்படித்தேன், என்ன சொல்வது என்று தெரியவில்லை, என்னைப்போல் நிறைய பேர் படித்திருப்பார்கள் நானும் அந்த பதிவு தொடரும் என நினைத்திருந்தேன் ஆனால் தங்களின் பதில் என்னை மிகவும் கவலை அடைய வைத்து விட்டது அந்த பதிவை ஏன் அளித்தோம் என தாங்கள் நினைக்குமளவுக்கு வாசகர்களாகிய நாங்கள் நடந்து கொண்டோம் நிச்சயம் அது எங்கள் தவறுதான் அதற்காக தாங்கள் உழைத்த உழைப்புக்கு நிச்சயம் பலன் இருக்கும் என நம்புகிறேன்.

    எனதருமை வாசக சகோதர சகோதரிகளே நண்பர் சுந்தர் அவர்கள் சேஷாத்ரி சுவாமிகள் பற்றிய பதிவை யாரும் படிக்கவில்லை என நினைத்துக்கொண்டு அந்த பதிவை தொடரும் எண்ணம் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார் அந்த தொடர் வேண்டுமா இல்லையா என்பது வாசகர்களாகிய நம் கையில்தான் உள்ளது எனவே என்னுடைய சிறு விண்ணப்பம் யார் யார் அந்த பதிவை படித்து இருந்தீர்களோ அவர்கள் அனைவரும் அதைபற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் சேஷாத்ரி சுவாமிகள் பற்றி நான் அறிந்த வரையில் அவரும் ரமண மகரிஷிக்கு இணையானவர் அவரைப்பற்றி மக்கள் அறியச்செய்வதும் ஒரு புண்ணிய காரியமே அந்த புண்ணிய கைங்கர்யத்தில் நம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்,

    நான் கேட்பது இனி சேஷாத்ரி சுவாமிகள் பற்றிய பதிவு தொடர வேண்டுமா இல்லையா என்பதுதான் அதற்கு தங்களின் பின்னூட்டம் ஒன்றே சரியான பதிலாக இருக்கும் எனவே தயவு செய்து தங்களில் எத்தனை பேர் அந்த பதிவை படித்தீர்கள் என மகா சிவராத்திரி நன்னாளான இன்று தெரிவிக்கும்படி தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

    குறிப்பு: என் நேரம் பற்றி திரு. சுந்தர் அவர்களுக்கு தெரியும் 2 நிமிடத்தில் தட்டச்சு செய்ய வேண்டிய இதை நான் மாலை 5 30 மணிக்கு தொடங்கி இரவு 9 35 மணிக்குத்தான் முடிக்கிறேன் அத்தனை இடையூறுகள் என் பணி அப்படி, இருந்தும் இதை இங்கே சொல்வதற்கு காரணம் பாலைவனத்தில் உச்சி வெயிலில் நடந்து சென்றவன் இளைப்பாற ஒரு பசுஞ்சோலை எப்படியோ அப்படித்தான் நமக்கு இந்த தளம் இந்த தளம் வாட விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இதை சொல்கிறேன்

    நன்றி .

    1. அனைவருக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். சிவராத்திரி தினத்தில் ஓர் பொருத்தமான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி. நாம் இறைவனிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் பூஜைக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். இறைவனை நாம் சோதிக்க கூடாது. அப்படி சோதித்தால் அந்த பரம்பொருள் நம்மை சோதனைக்கு உட்படுதிவிடுவார். அந்த இறைவனுக்கு தெரியும் நமக்கு எதை எப்படி எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பது. வியாசருக்கே சோதனை என்றால் நாம் எம்மாத்திரம். இந்த பதிவை படிக்கும் பொழுது சாட்சாத் காசி விஸ்வநாதரையும் அன்னபூரநியையும் நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

      திரு ஹரிதாஸ் அவர்களே நான் ஷேஷாச்ரி சுவாமிகள் பதிவு குறித்து ஆசிரியர் கூறிய கருத்துக்ளும் உங்களின் ஆதங்கமும் நியாயமானது. எந்த ஓர் பதிவிற்கும் அதற்கேற்ற வரவேற்பு இல்லை என்றால் எப்படி அடுத்த பதிவு எழுத தோன்றும்?

      சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் பற்றிய பதிவை வாரா வாரம் நம் ஆசிரியர் தொடர வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மகான்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நம் தளம்பலர் மனத்திலும் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி மிக பெரிய வாசகர்கள் அடங்கிய தளமாக உருவாக வேண்டும் என இந்த இனிய நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

      நன்றி
      உமா வெங்கட்

  2. வேதவியாசருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரணமனிதர்களாகிய நாம் இந்தக் கோவிலுக்குச் சென்றால் இன்னின்ன பலன் கிடைக்குமென்று எதிர்பார்த்துச் சென்றால் அவை நடக்குமா?. புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதனை உணர்த்திய பதிவு. மிக்க நன்றி!.

  3. இறைவனிடமிருந்து எதையும் எதிர்பாராமல் உண்மையான உள்ளன்போடு செய்யும் பக்தியே சிறந்தது என்று உணர்ந்து கொண்டோம்…………நன்றி…………

  4. சுந்தர் சார் , நான் திருமதி உமா அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். சேஷாத்ரி சுவாமிகளின் கதைகளை படிக்க ஆவலுடன் இருக்கிறோம். அனைவருக்கும் சிவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்.

    நன்றி
    B.D.வெங்கடேஷ்
    பெங்களூரு

  5. சிறந்த பதிவு. இறைவனிடம் எப்படி பக்தி செலுத்தவேண்டும் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள் சுந்தர்.

    ஓம் சிவாய நம.

  6. உலகையே ஆள்பவனும் அவருக்கே அன்னமிட்ட அன்னபூரணியும் சேர்ந்து இருக்கும் படம் மிக அருமை.
    எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு பேர் தான் விரதம். நம் கடமை என்று நினைத்து இருந்து பாருங்கள். அதன் மூலம் கிடைக்கும் மன நிம்மதி உங்களுக்கு புடிக்கும்.
    உமா மேடம் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
    சேஷாத்ரி சுவாமிகள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  7. மகான்களின் வாழ்கை பற்றி தெரிந்துகொண்டால் தான் நமது மதம் பற்றிய புரிதல் ஏற்படும் .

    அதற்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள் .

    அதனால் சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றிய தொடரை எதிர்பார்க்கிறோம் .

    நன்றி

    ராஜாராம்

  8. சேசாத்திரி சுவாமிகளின் பதிவை எதிர்பார்கிறோம்.

    நன்றி
    ராஜாமணி
    .

  9. மகான்களின் சரித்தரங்கள் நம் மனதை பக்குவ படுத்தும் ஆற்றல் கொண்டவை.

    தங்களுடைய இந்த சீரிய பணிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

    இப்பதிவின் தொடரை ஆவலுடன் எதிர் நோக்கிஉள்ளோம்

    நன்றி

  10. Dear Mr.Sundar,
    All ur articles are so enlightening n an eye opener.
    Im reading ur articles now on the train travelling.
    Keep up ur good work n lead us also.

    Tks n regards,
    Ranjini

Leave a Reply to parimalam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *