Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
பாண்டவர்கள் துரியோதனனின் நிபந்தனைப்படி வனவாசம் இருந்த நேரம் அது. அகந்தை மனிதர்களுக்கு தலைதூக்குவது இயல்பு. அதுவும் கண்ணனைப் போல ஒருவனை நண்பனாக, வழிகாட்டியாக பெற்றவர்களுக்கு அகந்தை எழுவதில் வியப்பு இல்லையே.

பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்வம் இருந்தது. பீமனுக்கு தன்னைப் போல பலசாலி இந்த உலகில் எவரும் இல்லை என்கிற அகந்தை இருந்தது. திரௌபதிக்கோ கௌரவர் சபை நடுவே அவள் துகிலுரியப்பட்டபோது அவளது மானத்தை கிருஷ்ணன் சேலையை வளர வைத்து காத்ததிலிருந்து தன்னைப் போன்ற கிருஷ்ண பக்தி கொண்டவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை என்ற கர்வம் இருந்தது. இப்படி அனைவரும் கர்வத்தில் மூழ்கியிருந்தனர். பகவானுக்கும் பக்தர்களுக்கும் பெரும் இடைவெளி ஏற்படுத்துவது இந்த கர்வம் தானே.

பாண்டவர்களின் கர்வத்தை போக்க பகவான் முடிவு செய்தார்.

ஒரு நாள் அவர்களை கானகத்தில் பார்க்க வந்திருந்தார். அப்போது குளிர்க்காலம். அந்த பிரதேசம் முழுக்க பகல் நேரத்தில் கூட கடுமையாக குளிரடித்தது.

பாண்டவர்களின் நலனை பற்றி விசாரித்தார் பரமாத்மா.

“நீ இருக்க எங்கள் நலனுக்கு குறைவேது கிருஷ்ணா?” என்று வாஞ்சையுடன் கூறினார் பாண்டவர்கள்.

sRIRANGAM VIMANAM
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மூலவர் விமானம்

புன்முறுவல் பூத்த கிருஷ்ணர், பாண்டவர்களிடம், “சரி… சரி… மிக்க மகிழ்ச்சி. நீண்ட தூரம் தேரோட்டி வந்ததில் எனக்கு களைப்பாயிருக்கிறது. பசி வேறு. எனக்கு குளிக்க வெந்நீர் போடுங்கள். நீராடிவிட்டு பசியாறுகிறேன்!!” என்றார்.

“அருகில் உள்ள நதிக்கு போய் அண்டாவில் நீர் மொண்டு வந்து சுள்ளி பற்றவைத்து வெந்நீர் போட ஏற்பாடு செய்யுங்கள்!” என்று பீமனிடம் கூறினாள் திரௌபதி.

பீமன், உடனே ஒற்றை ஆளாக ஒரு பெரு பெரிய அண்டாவை அருகே உள்ள நதிக்கு கொண்டு சென்று அதில் நீரை மொண்டு வந்தான்.

அடுப்புக்காக மூன்று கற்களை வைத்து அதன் மேல் அண்டாவை வைத்தான். சுள்ளி இல்லையே… என்ன செய்வது… என்று யோசித்தவன், அருகே இருந்த ஒரு பட்டுப்போன மரத்தை அப்படியே வேரோடு பிடுங்கினான். தரையில் நாலு முறை அடித்தான். அடுப்பெரிக்க விறகும் கிடைத்துவிட்டது.

இதையடுத்து அடுப்பு பற்றவைத்து வெந்நீர் போடப்பட்டது.

வெந்நீர் காயும்வரை கண்ணனுடன் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“வனவாசம் சில சமயம் பயமுறுத்தினாலும் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வது ஒரு வகையில் சுகமே” என்றான் அர்ஜூனன். அவன் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர்.

அவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்ததில் சுமார் ஒரு மணிநேரம்  சென்றுவிட்டது.

“எனக்கு நேரமாகிவிட்டது…. வெந்நீர் தயாரா?” என்றான் கண்ணன்.

“தண்ணீர் காய்ந்துவிட்டதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறி புழக்கடை பக்கம் சென்றாள் திரௌபதி.

அங்கே சென்று  தண்ணீரில் கை வைத்து பார்த்தவள் குழம்பிப்போனாள்.

அடுப்பு நன்றாக எரிந்துகொண்டிருந்தது. ஆனால் தண்ணீர் சிறிது கூட சூடு ஏறாமல் எடுத்து வந்தபோது எப்படி இருந்ததோ அதே போன்று குளிர்ச்சியாக இருந்தது.

“இதென்ன அதிசயமாக இருக்கிறது? தண்ணீர் இந்நேரம் குறைந்தது வெதுவெதுப்பாகவாவது மாறியிருக்கவேண்டாமா? ஆனால் இப்படி ஜில்லென்று இருக்கிறதே… அனைவரும் இங்கே வந்து பாருங்களேன்…” என்று அனைவரையும் அழைத்தாள்.

Krishna leela

அனைவரும் வந்து பார்த்தனர். பீமன்  உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் கை வைத்து பார்த்தனர்.

“அடுப்பு நன்கு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் தண்ணீர் சிறிது கூட சூடேறவில்லை. இது அதிசயம் தான்!”

“ஒருவேளை விறகு போதாது போல… இன்னும் கொஞ்சம் விறகை போடுகிறேன்” என்று கூறி வேறொரு மரத்தை பெயர்த்து விறகாக்கி கொண்டு வந்து போட்டான் பீமன்.

நேரம் கடந்தது தான் மிச்சம்… பாத்திரத்தில் இருந்த நீர் சிறிது கூட சூடு ஏறவில்லை.

“கண்ணா இதென்னா அதிசயமாயிருக்கிறது? நீ தான் இதற்கு விடை சொல்லவேண்டும்…” என்று அனைவரும் பகவான் கிருஷ்ணரை தஞ்சம் அடைந்தனர்.

கிருஷ்ணர் புன்முறுவல் செய்தபடி “அந்த பாத்திரத்தில் உள்ள நீரை கவிழ்த்துவிடுங்கள்…” என்றார்.

பீமன் ஒரே தாவலில் சென்று அந்த அண்டாவை கவிழ்த்தான்.

அப்போது உள்ளேயிருந்து ஒரு சிறிய தவளைக் குஞ்சு வெளியே வந்து குதித்தது. “கிருஷ்ணா… கிருஷ்ணா” என்று அது கத்திக்கொண்டே தவ்வி தவ்வி ஓடியது அனைவருக்கும் கேட்டது.

கடகடவென அந்தப் பிரதேசமே அதிரும்படி சிரித்தார் கிருஷ்ண பகவான். “பீமன் ஆற்றிலிருந்து தண்ணீரை கொண்டு வந்தபோது உள்ளே அந்த தவளைக் குஞ்சு சிக்கிக்கொண்டுவிட்டது. அடுப்பை எரிக்க ஆரம்பித்தவுடன், என்ன செய்வது என்று தெரியாமல் என்னை பரிபூரண சரணாகதி  அடைந்துவிட்டது. ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று என் பெயரையே அது விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்தது. அதன் பக்தியை கண்டு அஞ்சிய அக்னி பகவான் நீரை சூடேற்றாமல் விட்டுவிட்டான். வேறொன்றுமில்லை!” என்றார்.

(தவளை ஒரு நான்கறிவு ஜீவன். அதற்கு கூட தெரிகிறது ஆபத்து என்றால் கோவிந்தன் நாமாவை சொன்னால் தப்பிக்கலாம் என்று. ஆனால் ஆறறிவு விலங்குகள் எங்களுக்கு தெரியவில்லையே…. இறைவா எங்களை மன்னித்துவிடு.)

ஒரு தவளையின் பக்தி முன்பு தனது வலிமையோ பராக்கிரமோ எடுபடாதது கண்டு பீமன் தலைகுனிந்தான். அதே போன்று உலகிலேயே தான் தான் பகவானிடம் அதிக பக்தி செலுத்துபவள் என்று கருதிக்கொண்டிருந்த திரௌபதியும் வெட்கி தலைகுனிந்தாள்.

அந்த தவளையை போன்றே எந்த சூழ்நிலை நம்மை சுட்டெரித்தாலும் எந்தப் பிரச்சனையில் நாம் சிக்கி வெந்துகொண்டிருந்தாலும், பக்தியோடு “கிருஷ்ணா உன்னையே சரணடைந்தேன்…” என்று அவனிடம் சரணாகதி அடைந்து பாருங்கள்… நிச்சயம் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். இது பொய்யில்லை. சத்தியம். ஏனெனில் அவனை நம்பினோர் கைவிடப்படார். இது நான்மறை தீர்ப்பு.

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை அனுப்பி நினைவூட்டவும். தொலைபேசியில் கூறியிருந்தால் மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தவும்.

** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் அடுத்த  வாரம் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : சென்னை மதனந்தபுரத்தை சேர்ந்த தலைசிறந்த ஹரிஹர பக்தரான திரு.ஸ்ரீராமுலு அவர்கள்.

Sree ramulu

இவரைப் பற்றி விரிவான தகவல் முந்தைய பதிவில் இடம்பெற்றுள்ளது. (ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!)

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

நண்பருக்கு குடும்பத்தில் அமைதி வேண்டும்!

நம் நெருங்கிய நண்பர் இவர். கடந்த சில காலங்களாக இவரது குடும்பத்தில் உறவினர் மூலம் ஏற்பட்ட பிரச்னை ஒன்றில் சிக்கி நிம்மதி இழந்து தவித்து வருகிறார்.

இவருக்கு ஆறுதலோ தேறுதலோ நாம் அளிக்க முடியாது என்னுமளவிற்கு பெரிய மனிதர். இருப்பினும் பிரச்சனை இல்லாதவர் யார்? வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கத்தானே செய்கிறது.

ஒருவருக்கு வீட்டில் அமைதி கிடைக்கவில்லை என்றால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அமைதி கிடைக்காது.

அவரது குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர் தம் குடும்பத்தினரோடும், மனைவி மக்களோடும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

முதுகு தண்டு வடத்தில் பிரச்னை!

நம் நெருங்கிய நண்பர் தர்மராஜன் என்னும் திரு.தர்மா (47). சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றிவருகிறார். நமது நலம்விரும்பிகளில் ஒருவர். இக்கட்டான பல நேரங்களில் நம்முடன் இருந்திருக்கிறார். உரிய வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக மூட்டுவலி, தொடை வலி, எலும்புகளின் இணைப்புக்களில் வலி என்று அவஸ்தை பட்டு வருகிறார். மருத்துவர்களிடம் சென்று காண்பித்ததில் இவரது முதுகு தண்டுவடத்தில் உள்ள DISC ஒன்று வீக்கமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலி நீங்குவதற்கு தற்காலிக சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்றாலும் அறுவை சிகிச்சை செய்தால் நிச்சயம் சரியாகுமா என்று சொல்ல இயலாது என்று கூறியிருக்கிறார்கள். லட்சக்கணக்கில் செலவும் செய்துவிட்டு பாதிப்பு தீருமா என்று உறுதியாக தெரியாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய இவர் தயாராக இல்லை. இப்போதைக்கு யோகா மற்றும் பிசியோதெரபி சிகிச்சை சென்று வருகிறார். இந்த பரபரப்பான சென்னை நகரில் அவசர யுகத்தில் நமது அத்தியாவசிய அன்றாட பணிகளுக்கே நேரம் செலவழிக்க முடியவில்லை எனும்போது இவற்றுக்கெல்லாம் நேரம் செலவழிக்க மிகவும் சிரமப்படுகிறார்.

இவரது பாதிப்பு பற்றி சமீபத்தில் கேள்விப்பட்ட நாம் எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புக்களை தீர்க்கும் ‘மட்டிட்ட புன்னை’ பதிகத்தை மின்னஞ்சல் அனுப்பி படிக்குமாறு கூறியிருக்கிறோம். இந்த வாரம் பிரார்த்தனை பதிவில் வெளியிடுவதாகவும் கூறியிருக்கிறோம்.

அவரது தண்டுவட பாதிப்பு நீங்கி, அவர் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்  பெற இறைவனை வேண்டுவோம்.

தலையில் பட்ட அடி – வலியில் துடிக்கும் பூ விற்கும் குப்பம்மாள்!

சுவாமி படத்திற்கு சூட்ட நாம் தினசரி அலுவலகம் வரும் வழியில், (மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோட்டில்) உள்ள முத்தாலம்மன் கோவில் என்னும் அம்மன் கோவில் ஒன்றின் வாசலில் உள்ள பூக்கடையில்  பூக்கள் வாங்குவது வழக்கம்.

சமீபத்தில் ஒரு நாள் பூ வாங்கும்போது, அந்த கடையில் இருந்த நடுத்தர வயது கொண்ட பெண் ஒருவர் கண்கள் கலங்கிய நிலையில்  இருந்தார்.

“என்னம்மா.. அழுவுறீங்க என்ன பிரச்னை?’ என்று கேட்டோம்.

“வலி தாங்க முடியாம அழுவுறேன்பா…” என்றார்.

என்ன ஏது என்று விசாரித்தபோது, அவர் பெயர் குப்பம்மாள் என்றும் வயது 48 என்றும், தினசரி கோயம்பேடு மார்கெட்டுக்கு சென்று பூ வாங்கி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என்றும், ஒரு நாள் காலை கோயம்பேடு சென்று பூ வாங்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவில் திரும்பும்போது, பூக்கள் இருந்த பைகளில் ஒன்று ஆட்டோவிலிருந்து நழுவி சாலையில் விழுந்துவிட்டதாகவும் அதை குனிந்து இவர் எடுக்க எத்தனித்தபோது பக்கவாட்டிலிருந்து வந்த வாகனம் ஒன்று தலையில் மோதிவிட்டதாகவும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்ததாகவும் கூறினார்.

எலக்ட்ரீசியன் வேலை செய்யும் தனது மகன் இது வரை ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து தன்னை கைப்பற்றியதாகவும், ஆனால் முற்றிலும் தமக்கு குணமாகவில்லை அடிக்கடி வலி ஏற்படுகிறது என்றும் இதனால் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாது கடையிலும் நஷ்டம் ஏற்படுவதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறி அழுதார்.

தற்போது அவரது மருமகளும் அம்மாவும் தான் வியாபாரத்தை கவனித்துக்கொள்வதாகவும் தன்னால் முன்பு போல பணிகளில் ஈடுபடமுடியவில்லையே என்று நினைத்து கண்ணீர் சிந்துவதாகவும் கூறினார்.

நமது தளத்தை பற்றியெல்லாம் கூறி அவருக்கு விளக்க முற்படவில்லை நாம். இந்த வாரம் உங்களுக்காக நாங்கள் பலர் பிரார்த்தனை செய்கிறோம். விரைவில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி சௌக்கியமாக வியாபாரத்தை கவனிப்பீர்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு வந்திருக்கிறோம்.

=================================================================

பொது பிரார்த்தனை

மங்கலப் பொருட்கள் விற்பவர்கள் வாழ்வில் மங்களம் பெருகவேண்டும்! !

நமக்கு தெரிந்தது ஒரு குப்பம்மாள் தான். ஆனால் கண்ணுக்கு தெரியாத பல குப்பம்மாள்கள் நம்மை சுற்றி உள்ளனர்.

குப்பம்மாள் நிலையாவது பரவாயில்லை. அவருக்கு ஒன்று என்றபோது அவர் செய்து வந்த வியாபாரத்தை கவனித்துக்கொள்ள யாரோ இருவர் இருக்கிறார்கள். ஆனால் யாருமே துணை இன்றி பிள்ளைகளை கரை சேர்க்கவும், குடிகார கணவனுக்கு வடித்துக்கொட்டவும் பல பெண்கள் சென்னையில் கோவில் வாசல்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வெயில் மழை பாராமல் பூ விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மற்ற பொருட்கள் போல அல்ல பூ. அன்று விற்கவில்லை என்றால் மறுநாள் விற்கமுடியாது. வாடிவிடும். பூ விற்கும் பெண்கள் பெரும்பாலானவர்கள் குடிசைவாசிகளே. (அவர்கள் வீட்டில் பிரிஜ் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை.) குடும்பத்திற்கு வருவாய் ஆதாரத்திற்கு தனி நபராக உழைப்பவர்கள் இவர்கள்.

இவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மேம்படவேண்டும். மங்களப் பொருட்கள் விற்கும் பெண்கள் சர்வ மங்களத்துடன் வாழவேண்டும். அவர்கள் குடும்ப சூழ்நிலை மேம்படவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகுடும்பத்தில் அமைதி இன்றி தவிக்கும் எம் நண்பரின் குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படவும், முதுதண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்டு முழங்கால், மூட்டு மற்றும் இதர இணைப்புக்களில் வலி ஏற்பட்டு அவஸ்தைப்படும் நண்பர் தர்மாவுக்கு அவரது பிரச்சனைகள் மற்றும் உடல் உபாதைகள் நீங்கவும், மேற்கு மாம்பலத்தில் பூ விற்கும் குப்பம்மாள் அவர்களுக்கு தலையில் ஏற்பட்டுள்ள காயம் முற்றிலும் நீங்கி அவர் முன்னைப் போல தனது பணிகளை செய்யவும், எஞ்சிய காலத்தை நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடனும் கழிக்கவும், குடும்பத்தை கேரசெர்க்க வெயில் மழை பாராமல் பூ வியாபாரம் செய்யும் மகளிர் ஏற்றம் பெறவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

அதே போன்று இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.ஸ்ரீராமுலு அவர்கள் எல்லா விட நலன்களும் வளங்களும் பெற்று அவர் நினைப்பதை போலவே 108 திவ்ய தேச திருத்தல யாத்திரையை வெற்றிகரமாக முடிக்கவும் இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 15, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு. துரைசாமி குருக்கள் (75) அவர்கள்.

8 thoughts on “நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

  1. மிகவும் அருமையான தவளை கதையை கூறி ஆபத்து காலத்தில் கிருஷ்ணா என்று அழைத்தால் ஓடோடி வந்து காப்பான் நம் கீதையின் நாயகன் கண்ணன் என்பதை மிகவும் அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.

    சர்வம் ….கிருஷ்ணார்ப்பணம் …..

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு ஸ்ரீராமுலு அவர்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். கண்ணன் அவர்களின் கோரிக்கையை கண்டிப்பாக செவி சாய்ப்பான். பூக்காரியின் கோரிக்கையை படிக்கும் பொழுது மனம் கனக்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் …

    மேலும் மங்கலப் பொருட்கள் விற்பவர்கள் வாழ்வில் மங்களம் பெருக வேண்டும்.

    ஸ்ரீ ரங்கம் மூலவர் விமானம் சூப்பர் ,……

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    மகா பெரியவா …சரணம் … மகா பெரியவா …கடாக்ஷம் …..

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. இந்த வாரம் கோரிக்கை வைத்த தாங்களின் நண்பர், தர்மா மற்றும் குப்பம்மாள் அவர்களின் நோய் குணமாகவும் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு , ஸ்ரீராமுலு அவர்கள் 108 திவ்ய தேசங்களை தரிசிக்கும் எண்ணம் ஈடேரவும்,பிரார்த்தனை செய்கிறேன் …

  3. டியர் சுந்தர்ஜி

    எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பிரார்த்தனைக்கு செவி

    மடுப்பான்

  4. வாழ்க வளமுடன்

    எனை ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி எனை நம்பினாரை ஆதரியாது இருக்கும்மோ

    ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் சொன்னது நம் தளத்தை நம்பியவருகும் பொருந்தும் .

    நன்றி

  5. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
    சரணாகதி தத்துவத்தின் மற்றும் ஒரு துளி.
    நம் வாசகர்கள் பல பேர் கடவுள் பாதத்தில் சரண் அல்ல முழு சரணாகதி அடைந்தவர்கள் தான்.
    இந்த வார பிரார்த்தனை கோரிக்கை வைத்த அனைவரின் துன்பமும், கவலையும் தீர்ந்து உடல் முழு ஆரோக்கியம் பெற்று வாழ நாம் பிரார்த்திப்போம்.
    ஸ்ரீராமுலு அவர்களின் நீண்ட நாள் எண்ணம் திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் விரைவில் ஈடேற அவர் தன் குடும்பமாய் நினைக்கும் அந்த சிவனும், பெருமாளும் நிறைவேற்றட்டும்.
    நன்றி.

  6. எனது மேலான வணக்கங்கள் சுந்தர் சார்,

    என்னை நினைவிருக்கும் என நினைக்கிறன் இல்லை என்றாலும் அது உங்கள் தவறில்லை ஒரு முறை மஹாளய அமாவாசை பற்றிய பதிவு படித்து விட்டு இன்று இதை ஒரு லட்சம் பேர் படித்திருப்பார்கள் என்று நான் சொன்னேன் அதற்கு நீங்கள் நம் தளம் அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லை என பதில் சொன்னீர்கள் ஆனால் இன்று ஒரு லட்சம் இல்லை என்றாலும் அன்று இருந்ததை விட மிக அதிகமானோர் வாசகர்களாக மாறி உள்ளனர் இதுதான் சீரான வளர்ச்சி , நிச்சயம் ஒரு நாள் லட்சம் தொடும் அன்று இந்த தளம் உச்சம் தொடும் அதை நோக்கிய பயணமே நீங்கள் அளிக்கும் இந்த பதிவுகள் “ஸ்ரீ ராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த சீனிவாசன்” இந்த பதிவை இன்றுதான் படித்தேன். முடிவில் தங்கள் குறிப்பிட்ட உங்களிம் ஆதங்கமே என்னை இன்று பின்னூட்டம் அளிக்க தூண்டியது. நான் ஒரு நாளில் 8 மணி நேரம் வலைத்தளத்தில் இருப்பேன் என் பணி அப்படி ஆனால் என் வேலையைத்தவிர மற்றதை பார்க்க எனக்கு நேரம் இல்லை எனவே கால தாமதம் ஆனாலும் அனைத்து பதிவுகளையும் படித்து விடுவேன் இது வரை எல்லா பதிவுகலும் படித்திருக்கிறேன். இன்னும் என்னைப்போல் பின்னூட்டம் அளிக்கக்கூட நேரம் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த தளத்தை படிப்பார்கள் என எண்ணுகிறேன் எனது தாழ் மையான கருத்து நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் இந்த தளத்தை வெற்றிகரமாக தொடருங்கள் (தங்கள் பொருளாதர சுதந்திரத்திற்கு பங்கம் இல்லாமல்) மற்றதை அவன் பார்த்துக்கொள்வான் அவனுக்குத்தெரியும் யாருக்கு என்ன எப்போது தர வேண்டும் என்று. உண்மையில் நான் செய்ய நினைத்து முடியாமல் போனதை நீங்கள் செய்து கொண்டிருக்கிரீர்கள் அதனால் இதில் உள்ள சிரமங்கள் எனக்கு நன்றாகவே தெரியும் அதனால்தான் சொல்கிறேன் இதெல்லாம் தங்களின் செயல் அல்ல எல்லாம் அவன் செயல் இதில் எதாவது தவறு இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் நான் தட்டச்சு செய்ய துவங்கும்போது மணி 8.15 am இப்போது 10 43 am இதைக்கூட என்னால் குறுக்கீடு இல்லாமல் செய்ய முடியவில்லை இதுதான் என் நிலை அதனால்தான் என்னால் பின்னூட்டம் எழுத முடிவதில்லை தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கும் வாசகன்.

    1. உங்களை எனக்கு நன்கு .நினைவிருக்கிறது. உங்கள் பின்னூட்டங்களும் நினைவிருக்கிறது.
      தாங்கள் ஒரு முறை உழவாரப்பணி செய்ய விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்கள்.

      நீங்கள் தளத்தை பார்ப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். காரணம், டிசம்பர் மாதம் ஆண்டுவிழா மற்றும் ரைட்மந்த்ரா விருதுகள் விழா நடைபெற்றபோது உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவும், அலைபேசியில் தங்களை அழைக்கவும் தங்களை தொடர்புகொண்டேன். எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் இப்படி எத்தனைய்யோ வழிகளில் உங்களை தொடர்புகொள்ள முயற்சித்தும் நோ யூஸ். அலைபேசியில் தொடர்புகொன்டாலும் நோ யூஸ்.
      இப்போது தங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின்பு தான் தாங்கள் தளத்தை தொடர்ந்து பார்த்துவருகிறீர்கள் என்பது புரிகிறது.

      இன்னின்னார் தளத்தை தவறாமல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் என்கிற தகவல் ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை எழுதும்போது மிகவும் உதவியாக இருக்கும். எப்படி எனில், படைப்பை எழுதும்போது அவர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் மற்றும் சிந்தனைகளுக்கும் பதிலை படைப்பிலேயே ஆங்காங்கே வைக்க அது உதவி புரியும்.

      சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றிய தொடரின் முதல் பதிவுக்கு கிடைத்த வரவேற்பு உண்மையில் என்னை அதை தொடர்ந்து அளிக்க வேண்டுமா என்று யோசிக்க வைத்தது. காரணம் வரவேற்பு உள்ள ஒன்றை தான் தொடர்ந்து அளித்திட ஒரு படைப்பாளி விரும்புவது இயற்கை.

      ஒவ்வொரு பதிவிலும் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவர் பணி சூழ்நிலை எப்படி மாறுபடும் கிடைக்கும் நேரமும் எப்படி மாறுபடும் என்று எனக்கு தெரியும். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவ்வப்போது என்னுடன் தொடர்பில் இருப்பது சிறந்தது.

      நன்றி.

      – சுந்தர்

Leave a Reply to A.T.RANGARAJAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *