Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

print
கா பெரியவா விஜயம் செய்த நாகங்குடி பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.  ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்த பின்னர் ஊருக்குள் பயணம். பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி..! சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது.

இந்த பதிவு தொடர்புடைய முந்தைய பாகத்தை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் நலம். (சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் 20)

இந்த கோவிலாக இருக்குமோ? அந்தக் கோவிலாக இருக்குமோ? என்று அவ்வப்போது வண்டியை நிறுத்தி இறங்கி ஓடிப்போய் பார்த்தபடி சென்றோம்… கடைசியில் நாம் மனதுக்குள் கற்பனையில் படம் பிடித்து வைத்திருந்தபடி ஒரு கோவிலை காண நேர்ந்தது. சுற்றிலும் அகழி போல தோற்றம். கோவில் பழமையாக இல்லாமல் புதுமையாக இருந்தது. நீண்டகாலம் முன்பு கட்டப்பட்ட கோவில் என்பதால் அதற்கு பிறகு ஓரிருமுறை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்திருப்பது புரிந்தது.

Nagangudi Temple 7

நாம் சென்ற நேரம் மதியம் சுமார் இரண்டு என்பதால் கோவில் பூட்டப்பட்டிருந்தது.

கோவிலுக்கு அருகே, ஒரு சிறிய குடிசை வீடு இருந்தது. குடிசையாக இருந்தாலும் அதில் தெரிந்த அந்த ஜீவன், அது ஒரு மாளிகை என்று புரிய வைத்தது. மகா பெரியவா காலடி பட்ட பூமியாயிற்றே…

Nagangudi Temple 6

அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரித்தோம். சென்னையிலிருந்து நாம் வந்திருப்பதாகவும், என்ன கோவில் எப்போது திறப்பார்கள், குருக்கள் வீடு பக்கத்தில் எங்கேனும் இருக்கிறதா போன்ற விபரங்களை கேட்டோம்.

குருக்கள் வந்துவிட்டு போய்விட்டதாகவும், மறுபடியும் 4.30 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் சொன்னார்.

Nagangudi Temple 1

Nagangudi Temple 4சென்னையிலிருந்து இதற்காகவே வந்திருக்கும் விஷயத்தை கூறினோம். நம்மை பரிதாபமாக பார்த்தவர், “அங்கே எதிரே ஒரு மாமி நிக்கிறாங்க பாருங்க. அவங்களை போய் கேளுங்க. அவங்ககிட்டே தான் சாவி இருக்கும்” என்றார்.

அவர் சொன்ன திசையில் பார்த்தபோது ஒரு வயதான பெண்மணி நின்றுகொண்டிருந்தார்.

அவரை நோக்கி சென்று வணக்கம் கூறி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கோவிலை பார்க்க வந்திருக்கும் விஷயத்தை கூறி, சுவாமி பெயர் என்ன, என்ன கோவில், கட்டப்பட்ட காலம் முதலியவற்றை கேட்டோம்.

“சித்த இருங்கோ… மாமவை கூப்பிடுறேன்…”

“ஏங்க… கொஞ்சம் இங்கே வாங்கோளேன்… கோவிலை பார்க்க யாரோ மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கா….”

மாமா உள்ளேயிருந்து வந்தார். அவரை வணங்கினோம்.

நம்மை பற்றி யார் என்ன என்று விசாரித்தார். நமது தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துக்கூறினோம்.

நாகங்குடி பற்றி கேள்விப்பட்டு நமது தளத்தின் ‘குரு தரிசனம்’ தொடருக்காக கோவிலை தரிசிக்க வந்திருப்பதாக சொன்னோம்.

ரொம்ப சந்தோஷப்பட்டார்.

Nagangudi Temple 3

Nagangudi Temple 9Nagangudi Temple 2மாமா பெயர் குருமூர்த்தி. இவருக்கு விவசாயம் தான் தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே தான் இருக்கிறார்.  வயது எப்படியும் 80 இருக்கும். மாமி பெயர் சுகந்தா (75). பூர்வீகம் மயிலாடுதுறை. விவசாயம் தான் இவர்கள் தொழில். இவர்களுக்கு மஹாலக்ஷ்மி (50) என்கிற மகளும் வைத்யநாதன் (46) என்கிற மகனும் உள்ளனர். திருமதி.மஹாலக்ஷ்மி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணமூர்த்தி (55) கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள். அவருக்கு திருமணமாகி கணவரோடு வசித்து வருகிறார். மகன் வைத்யநாதனுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். வைத்யநாதன் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கும்பகோணத்திலும் மகன் சென்னையிலும் இருக்கின்றனர்.

அந்த தெருவாசிகள் சிலர் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. நம்மை சூழ்ந்துகொண்டனர். நாம் வந்திருக்கும் நோக்கம் இன்ன பிற விஷயங்களை தெரிந்துகொண்டபின்னர் தான் நகர்ந்தனர்.

மாமாவிடம் பேசியதில் கோவிலைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

சுவாமி பெயர் கைலாசநாதர். அம்பாள் பெயர் சௌந்திரநாயகி. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இக்கோவிலை கட்ட முயற்சிகள் நடைபெற்றபோது அறங்காவலர்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டு போனதாகவும், நடமாடும் தெய்வம் ‘மகா பெரியவா’ இந்த ஊருக்கு வந்தபோது, கிராம மக்கள் அவரிடம் சென்று முறையிட்டு புலம்பியதாகவும், பெரியவா சென்று பார்த்துவிட்டு கோவிலை சுற்றி அகழி வெட்டச் சொன்னதாகவும், அதன் தொடர்ச்சியாக அகழி வெட்டப்பட்டு திருப்பணி இனிதே நடந்து முடிந்ததாகவும் சொன்னார்.

Nagangudi Temple 22

“பெரியவா ஏன் அகழி வெட்டச் சொன்னார்? புதியதாக இருக்கிறதே… இது போல கேள்விப்பட்டதில்லையே?”

சுகந்தா மாமி குறுக்கிட்டார்…. “தமது ஞானதிருஷ்டியினால் இறைவன் மிகவும் உக்கிரமாக இருப்பதை தெரிந்துகொண்டார் மகா ஸ்வாமிகள். எனவே தான் அகழி வெட்டச் சொன்னார். அதன் மூலம் அவர் சாந்தப்படுவார் என்பது அவர் கணிப்பு. பரமேஸ்வரனும் அதே போல சாந்தியடைந்தார். எனவே தான் அதன் பின்னர் தடையின்றி திருப்பணி நடைபெற்றது!” நாம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு பொறுமையாக விளக்கினார் மாமி.

Nagangudi Temple 27

கோவிலுக்கு அதற்கு பிறகு இரண்டு மூன்று முறை கும்பாபிஷேகம் ஆகியிருப்பது தெரிந்தது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கூட கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் தான் டிரஸ்டியாக இருந்து ஒவ்வொரு முறையும் நடத்தியிருக்கின்றனர். இவர்களின் குலகுரு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

“இந்தக் கோவில் வேலைகளை ஒவ்வொரு முறையும் இழுத்துப் போட்டு செய்தது எங்காத்து மாமா தான். போன கும்பாபிஷேகத்தப்போ, மயிலாடுதுறையிலே இருந்து அவர் டூ-வீலர்லே வரும்போது, பஸ் காரன் எவனோ ஒருத்தன் அவரை அடிச்சிட்டு போய்ட்டான். பேச்சு மூச்சில்லாம ரோட்டுல கிடந்தார். கும்பகோணத்துல பர்ஸ்ட் எய்ட் கொடுத்து அங்கேயிருந்து ஆம்புலன்ஸ்ல மெட்ராஸ் தூக்கிட்டு வந்து ரெண்டு மாசம் ட்ரீட்மென்ட் கொடுத்த பிறகு தான் உயிர் பிழைச்சார்.”

அவர் சொல்ல சொல்ல நமக்கு ‘பக்’ என்றது.

ரொம்ப கோபக்கார சிவன்போல இருக்கே. பேசாம அப்படியே திரும்பப் போய்டலாமா. நாம பாட்டுக்க அங்கேயிருந்து வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்திருக்கோம். ‘இவன் என்னடா எங்கேயிருந்தோ வந்து நம்மளை டிஸ்டர்ப் பண்றான்னு உடுக்கையண்ணன் கோபப்பட்டா என்ன செய்றது? நல்லபடியா ஊர் போய் சேரணுமே. என்னைப் பத்தி கவலை இல்லே. ஆனா என் கூட வந்திருக்குற நண்பர் சிட்டியை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணுமே… இப்படி சிந்தனைகள் பலவாறாக ஓடியது.

“அப்போ எந்த தைரியத்துல எந்த நம்பிக்கையிலே அடுத்த திருப்பணியை எடுத்து போட்டு செஞ்சீங்க மாமி? பயமா இல்லையா?” மிகவும் நிதானமாக நமது சந்தேகத்தை கேட்டோம்.

“அதெப்படி நான் சுவாமியை விட்டுக்கொடுக்க முடியும். அவர் சோதனையை தந்தாலும் முடிவில் நல்லதைத் தான் பண்ணுவார்!” என்றார்.

என்ன ஒரு பக்குவம் இவருக்கு… சுவாமி உக்கிரமூர்த்தி என்று தெரிந்தவுடன் பயந்து ஓட முற்பட்ட நாம் எங்கே… மாங்கல்யத்துக்கே பங்கம் வந்துவிட்ட போதும், சிவன் மீது நம்பிக்கை இழக்காமல் கணவனுக்கு தைரியம் கொடுத்து அடுத்த திருப்பணியையும் செய்ய உதவிய இவர் எங்கே… இறைவா என்னை மன்னித்துவிடு..

“மாமி… அடுத்து நாங்க கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனம் போகணும். அது அஞ்சு மணிக்கு தான் திறப்பாங்க. வந்தது வந்துட்டோம். சுவாமியை தரிசனம் பண்ணாம போக மனசு வரலை. உங்களுக்கு தொந்தரவு இல்லேன்னா குருக்கள் வர்ற வரைக்கும் நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்.”

சற்று யோசித்தவர்… “பாவம் நீங்க எதுக்கு அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்? கோவில் சாவி என்கிட்டே தான் இருக்கு. நான் சாவி தர்றேன். நீங்க வேணும்னா திறந்து சுவாமியை பார்த்துட்டு மறுபடியும் பூட்டிட்டு சாவி கொண்டாந்து கொடுங்க….” என்று சொன்னவர் நமது பதிலுக்காக காத்திருக்காமல் சாவியை எடுக்கச் சென்றார் மாமி .

நாம் பேச்சு மூச்சற்று நின்றுகொண்டிருந்தோம்.

அடுத்த சில நொடிகளில் சாவி கொண்டு வந்து கொடுத்தவர், “நீங்க போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க” என்றார்.

நன்றி கூறிவிட்டு சாவியை வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம்.

கோவிலை நெருங்க நெருங்க… கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது.

“ஐயனே…. நாங்க இதுவரை ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுடு. என்னைப் பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா என் நண்பனை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும்.” என்று பிரார்த்தித்தபடி தான் கேட்டை திறந்தோம்.

சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோவில் என்பதால் வர்ணங்கள் பூசப்பட்டு சன்னதிகள் அனைத்தும் பளிச் என்று இருந்தது.

Nagangudi Temple 20

கதவைத் திறந்து காசி விஸ்வநாதரையும், சௌந்திர நாயகியையும் தரிசித்தோம்.

இதுவரை எத்தனையோ கோவில்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் நாங்களே சாவி போட்டு திறந்து தரிசித்த முதல் கோவில் இது தான். இறைவன் என்ன உணர்த்த வருகிறான் என்று இந்த ஜடத்திற்கு புரியவில்லை.

Nagangudi Temple 29

விபூதி குங்கும பிரசாதம் எடுத்துக்கொண்டு, வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்து, நவக்கிரக பிரதக்ஷினம் செய்து விட்டு நமஸ்கரித்துவிட்டு கோவிலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். சுற்றிலும் அகழி உள்ள ஒரு கோவிலில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.

தேவையான புகைப்படங்களை பல ஆங்கிள்களில் எடுத்தோம்.

ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் சன்னதியை பூட்டிவிட்டு, கேட்டையும் பூட்டிவிட்டு சுகந்தா மாமியின் இல்லத்திற்கு நடந்தோம்.

திரும்பும்போது அந்த குடிசையில் ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டியையும் பார்க்க நேர்ந்தது. அவற்றை வாரியெடுத்து கொஞ்சி மகிழ்ந்தோம். (இதுல கிடைக்கிற அந்த சந்தோஷம்… வாவ்… அனுபவிச்சத் தான் புரியும்!)

Nagangudi Temple 10 Nagangudi Temple 28

தொடர்ந்து மாமாவிடம் சென்று… “நல்ல தரிசனம் மாமா. ரொம்ப நன்றி!”

“என்னோட மொபைலையும் காமிரா பேட்டரியையும் கொஞ்சம் சார்ஜ் போடணும்… போட்டுக்கவா?” என்றோம்

“தாராளமா…” என்று கூறி, பவர் சாக்கெட்டை காண்பித்தார்.

“காபி கொஞ்சம் சாப்பிடுறேளா? ரெண்டு பேருக்கும் காபி போட்டுத் தரவா?” என்றார் சுகந்தா மாமி.

அவர்களின் அன்புக்கு மறுப்பு சொல்லமுடியவில்லை. “நான் காபி சாப்பிடுறதில்லே. வேணும்னா உங்காத்து பசும்பால் இருந்தா ஒரு அரை டம்ளர் கொடுங்க” என்றோம் தயங்கியபடியே.

“இதோ… ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்… பேசிகிட்டு இருங்க” என்று கூறிவிட்டு சமையற்கட்டுக்கு சென்றார்.

“மகா பெரியவா இந்த ஊருக்கு வந்தது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றோம் குருமூர்த்தி மாமாவிடம்.

‘மகா பெரியவா’ என்ற பெயரைக் கேட்டதும் அவர் கண்கள் பனித்துவிட்டன.

“பெரியவா முதன் முதல்ல இந்த ஊருக்கு வரும்போது, இந்த வீட்ல தான் தங்கி அம்பாளுக்கு தினமும் பூஜை பண்ணினார்.”

“உள்ளே வாங்கோ அந்த ரூமை காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றார்.

ஜெய ஜெய சங்கர…. ஹர ஹர சங்கர…. என்று கூறியபடியே ஒரு வித சஸ்பென்ஸ்ஸோடு பின்தொடர்ந்தோம்.

Nagangudi Temple 11

உள்ளே ஒரு அறையை காட்டியவர், “இதோ இங்கே தான் பெரியவா தங்கினார். இதோ இடத்துல தான் காமாக்ஷி அம்மனை பூஜை பண்ணினார்.” அவர் கைக்காட்டிய இடங்களை வணங்கினோம்.

“1962ல இந்த வீட்டை நான் வாங்கினப்போ கொஞ்சம் ஆல்டரேஷன் பண்ணினேன். ஆனா அவர் தங்கிய ஒரே காரணத்துக்காக இந்த ரூமை தொடலை. அப்படியே விட்டுட்டேன். அவரோட சாநித்தியம் இன்னும் இங்கே இருக்கு. அதை எங்களால் உணர முடியுது” என்றார்.

அவரால் மட்டுமில்லை…. நம்மாலும் அந்த அதிர்வலைகளை உணர முடிந்தது.

“கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணலாமா மாமா?”

“கொஞ்ச நேரம் என்ன…எவ்ளோ நேரம் வேணும்னாலும் பண்ணுங்க…” என்றார்.

அங்கு அமர்ந்து பிரார்த்தித்தோம்.

“மகா பெரியவா… நீங்கள் வாழும்போது உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் உங்களை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு பிறவி கிடைத்தது சந்தோஷம். இனி உங்கள் காலடி சென்ற இடங்களில் எல்லாம் நானும் புறப்பட்டு சென்று எனது அனுபவங்களை இந்த உலகிற்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். நீங்கள் தான் உடனிருந்து வழி நடத்தித் தரவேண்டும்….” பிரார்த்தித்தபடி எழுந்தோம்.

Nagangudi Temple 16

மாமி கையில் இரண்டு டம்ப்ளர்களில் பாலோடும் காபியோடும் வந்தார். மேலும் கொஞ்ச நேரம் அங்கு பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தோம்.

வந்ததிலிருந்தே கவனித்தோம். சுகந்தா மாமின் முகத்தில் ஒரு வித சோகம் படர்ந்திருந்ததை.

“மாமி வந்ததுலே இருந்து உங்களை கவனிச்சிக்கிட்டு இருக்கோம். ஏன் டல்லா இருக்கீங்க?”

அப்போது தான் இவர் மருமகன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையிலேயே தொடர்ந்து இருப்பது பற்றி சொன்னார்.

Nagangudi Temple 23

Nagangudi Temple 25

(ஒரு நாள் பணியின்போது திரு.கிருஷ்ணமூர்த்தி திடீரென மூர்ச்சையடைந்து வீழ்ந்துவிட, மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோமாவில் விழுந்தவர் மீளவேயில்லை. பல்வேறு டெஸ்ட்டுகள் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளையில் கட்டி (BRAIN TUMOUR) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டியூப் மூலமாகத் தான் உணவு சென்றுவருகிறது. ஒரு நாளைக்கு சுமார் ரூ.15,000/- என்று பல நாட்கள் செலவழித்த நிலையிலும் மருத்துவர்கள் “தற்போது எதுவும் கூற முடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், இனி வீட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுங்கள்!” என்று கைவிட்டுவிட்டனர்.)

இது பற்றி கேள்விப்பட்டவுடன் அதற்கு அடுத்த வாரமே பிரார்த்தனை கிளப்பில் திரு.கிருஷ்ணமூர்த்தியின் நிலை பற்றி விளக்கி பிரார்த்தனை செய்யப்பட்டது. அந்த வாரம் தலைமை தாங்கியது நண்பர் சாணுபுத்திரன். (‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!)

காஞ்சி மகானை தவிர பெரியவர் குருமூர்த்திக்கும் அவர் மனைவி சுகந்தா அம்மாவுக்கு எதுவுமே தெரியாது. அவர் மீது உயிரையே வைத்துள்ளனர். (அருகிலுள்ள படத்தை பாருங்கள். அந்த சிறிய படத்தில் எத்தனை மகா பெரியவா படம் இருக்கிறது என்று!!) அப்படிப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா? குருவே இது உங்களுக்கு அடுக்குமா?

சுகந்தா அம்மா நம்மிடம் பேசும்போது மருமகன் பேச்சு மூச்சற்று கிடக்கும் நிலையை கூறி அழுதே விட்டார்.

“மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லுங்கள்” என்றோம்.

“24 மணிநேரமும் அதை சொல்லி வருகிறேன். என் மகளும் அதை சொல்லி வருகிறாள்!!” என்றார்.

“உங்கள் மருமகனைப் மருத்துவமனையில் பார்த்து மகா பெரியவர் குஞ்சித பாதத்துடன் இருக்கும் படத்தை தரவேண்டும். மருத்துவமனை வார்ட் மற்றும் இதர விபரங்களை கொடுங்கள்” என்றோம்,

“மகா பெரியவா படம் என்னிடம் மட்டுமல்ல என் மகளிடம் கூட இருக்கிறது. அதை அவள் பார்க்காத நேரமேயில்லை” என்றார்.

எதையுமே அவர்களிடம் நம்மால் கூற முடியவில்லை. எதைச் சொன்னாலும் அவர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கிறார்கள் அல்லது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நம்மால் மகா பெரியவாவை கடிந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?

தொடர்ந்து அவர்களிடம் வேறு பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.

மணி நான்கை எட்டியது. சார்ஜ் போட்டிருந்த மொபைல் மற்றும் காமிரா பாட்டரியை எடுத்துக்கொண்டோம்.

Nagangudi Temple 14

“மாமா… மாமி ரெண்டு பெரும் கொஞ்சம் அந்த ரூமுக்கு வர்றேளா?”

சுவாமிகள் தங்கியிருந்த அந்த அறைக்கு சென்றவுடன், “ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று கூறி அவர்கள் கால்களில் வீழ்ந்தோம்.

“இப்போ தான் என் பயணமே துவங்கியிருக்கு. நான் போகவேண்டிய தூரமும் செய்ய வேண்டிய சாதனையும் நிறைய இருக்கு. நானும் என் நண்பர்களும் வாசகர்களும் நல்லா இருக்கணும். என்னோட லட்சியத்துக்கும் பயணத்துக்கும் ஏற்றமாதிரி ஒரு நல்ல பெண் மனைவியா வரணும்” என்று கேட்டுக்கொண்டோம்.

“ஒரு குறையும் உனக்கு வராதுடா குழந்தே…. நல்ல ஷேமமா அமோகமா இருப்பே. உனக்கு மஹாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண் மனைவியா அமைவா…” என்றார்கள் இருவரும்.

அதை அவர்கள் சொல்லவில்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகா பெரியவாவே சொன்னதாக கருதுகிறோம். ஆகையால் தான் இங்கே பதிகிறோம்.

நம்மைத் தொடர்ந்து நண்பர் சிட்டியும் அவர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றார்.

விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.

புறப்படும் முன், நமது அன்புப் பரிசாக ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டத்தை கொடுத்தோம்.

என்னவோ அவர்களை விட்டு பிரிய மனமில்லை.

Nagangudi Temple 19

அங்கே எதிரே இருந்த ஒரு வில்வமரத்தை காண்பித்தார்கள். அதில் என்ன விசேஷம் என்றால் மகா பெரியவா அந்த ஊரில் தங்கியிருந்தபோது அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய இடமாம் அது. அந்த இடத்தில் பல வருடங்களுக்கு பிறகு தானாகவே ஒரு வில்வ மரம் உதித்திருக்கிறது.

வில்வம் சிவரூபம் அல்லவா? ஓடிச் சென்று அந்த மரத்தை விழுந்து வணங்கினோம்.

Nagangudi Temple 18

புறப்படும் முன்னர் மீண்டும் சில வினாடிகள் பேச நேர்ந்தது. திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ‘மகா பெரியவா’ உள்ளிட்ட சில புத்தகங்களை பற்றி கூறி, “குரு மகிமையை தொடர்ந்து படித்தது வாருங்கள்… நல்லதே நடக்கும் மாமா” என்றோம் ஏதோ புத்திசாலி போல.

“கொஞ்சம் இருங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றவர், கைகளில் இருந்து தனது நாசியை தொடும் அளவு உயரத்துக்கு ஒரு புத்தக மலையை தூக்கியபடி வந்தார். அனைத்தும் மகா பெரியவா தொடர்புடைய புத்தகங்கள். திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா’, ரா.கணபதியின் ‘தெய்வத்தின் குரல்’, ‘குரு மகிமை’, ‘காஞ்சி மகானின் கருணை நிழலில்’, ‘கருணைத் தெய்வம் காஞ்சி மகான்’ என அத்தனை புத்தகங்களும் அதில் இருந்தன. அதில் ஒரு புத்தகம் நமது கண்களை பறித்தது. வாங்கிப் புரட்டினோம். “சார்… இந்த புத்தகம் மட்டும் எனக்கு தர்றீங்களா? படிச்சுட்டு தர்றேன்…” என்றோம். (ஹி…ஹி…!)

Nagangudi Temple 17

“அவர் உயிரைக் கேட்டாக்கூட தந்துடுவார். ஆனா இந்த புத்தகங்களை தரமாட்டார். இதை படிச்சிட்டு தான் அவர் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்கார். இதெல்லாம் அவரோட சுவாசம் போல” என்றார் சுகந்தா மாமி.

உங்கள் மீது பக்தி கொண்டு உங்களையே சுவாசித்தபடி வாழும் ஒரு குடும்பத்தை ஏறெடுத்து பார்க்கூடாதா சுவாமி? இது உங்களுக்கே நியாயமா? உங்கள் அருட்பார்வை ஒன்று போதுமே. ஜென்ம ஜென்மாந்திரங்களாக தொடரும் கர்மவினைகளை சுட்டுப் பொசுக்கிவிடுமே…சோதித்தது போதும். இனி அருள் செய்யுங்கள்.

(இன்றும் இருவரையும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருகிறோம். அவர் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்திக்கு நிலைமை அப்படியேதான் இருக்கிறது. மகள் மகாலக்ஷ்மி யார் எந்த பரிகாரத்தை சொன்னாலும் முகம் சுளிக்காமல் சலிப்படையாமல் செய்து வருகிறாராம். பொதுவாக இது போன்ற நிலையில் இருப்பவர்கள் ஒரு வித விரக்தியில் இருப்பார்கள். ஆனால் அவர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகிறார். இந்த நிலையிலும் சுகந்தா மாமிக்கு மகா பெரியவா மீது பக்தி குறையவில்லை. துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது உண்மையானது என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?)

================================================================

Also check from our archives…

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

9 thoughts on “இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

  1. மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு.
    உங்கள் பதிவுகள் எத்தனையோ படித்து பிரமிப்பு மாறாமல் அதிசயபட்டு இருந்தாலும் இந்த பதிவு ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது.
    நாகங்குடி பதிவு எப்போ வரும் என்று காத்துகிடந்தவர்களுக்கு விருந்து சாப்பிட்ட உணர்வு வரும்.
    பெரியவாளே கதி என்று இருக்கும் அந்த குடும்பத்திற்கும் மிக பெரிய சோதனை. எல்லா வீடுகளிலும் மருமகன் என்ற உறவு மிக முக்கியமாக கருதப்படும். அப்படி இருக்கும் போது அவர் நிலை அந்த அம்மாவுக்கும். மகளுக்கும் மிக பெரிய வேதனை.
    விரைவில் அவர் நலம் பெற எல்லாம் வல்ல கடவுள் கருணை வைக்க வேண்டும்.
    கோவில் படங்களும், அகழியும், மாட்டு தொழுவமும் அருமை.
    கண்ணுகுட்டிகளும், உங்கள் கைக்கு அருகில் இருக்கும் ஆட்டு குட்டிகளும் பார்க்க பரவசமாக உள்ளது.
    எல்லா பதிவும் படித்த உடன் ஒரு உணர்வு வரும். அது இந்த பதிவில் அதிகமாகவே உள்ளது.
    மாமி ஆசீர்வாதம் பண்ணியது போல விரைவில் உங்களுக்கு ஒரு மகாலட்சுமி கிடைக்க வாழ்த்துக்கள்.
    இந்த மாதிரி ஒரு வெப்சைட், மற்றும் உங்கள் அறிமுகமும், உங்கள் தோழமையும் கிடைக்க எந்த ஜெனமத்தில் நம் வாசகர்களும் நானும் புண்ணியம் பண்ணினோமோ தெரியவில்லை.
    மிக்க நன்றி.

  2. ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர..

    திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைவில் நலம் பெற குருவருளையும் திருவருளையும் வேண்டி பிரார்த்திக்கிறோம்.

    ஓம் நம சிவாய

  3. மகா …பெரியவா … சரணம்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா வெங்கட்

  4. நேற்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது அளித்தாதால் விரிவாக பின்னூட்டம் அளிக்க இயலவில்லை. நாகங்குடி பதிவு போன முறை suspense உடன் முடித்து இருந்தீர்கள். அடுத்த பதிவிற்காக ரொம்பவும் ஆவலாக காத்திருந்தோம். காத்திருந்தது வீண் போகவில்லை. உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. தங்கள் பதிவிற்கு தாங்கள் தான் competitor. இந்த பதிவு மனதை மிகவும் உருக்கி விட்டது.

    நீர் நிறைந்த அகழியுடன் உள்ள கோவில் பார்க்க மிகவும் அற்புதமாக உள்ளது.

    திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெகு விரைவில் குணமடைய மகா பெரியவா அனுக்கிரகம் பண்ண வேண்டும். நாமும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.

    சிட்டிக்கு அடித்தது யோகம் தங்களுடன் ஒரு திரிலிங் ஆன கோவிலை தரிசனம் செய்ததற்கு.

    பெரியவர் குருமூர்த்தி – சுகந்தா அம்மா தம்பதியர் ஆசி நிச்சயம் பலிக்கும்.

    அனைத்து படங்களும் அருமை. (எங்கு சென்றாலும் தங்களுக்கு பசுக்களின் தரிசனம் கிடைத்துவிடுகிறது).

    நன்றி
    உமா வெங்கட்

  5. மிகவும் அருமையான பதிவு.

    திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நலம் பெற மஹா பெரியவா நிச்சயம் அருள்புரிவார்.

    ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர..

  6. Wish you all a wonderful happy new year and pongal.
    **
    It was really a wonderful experience to reach the village where the temple is in, then finding out the temple and got to know the history behind the temple etc.

    Earlier, in our first trip around the city (Aduthurai near Mayiladuthurai), we couldn’t see this temple. that too, it’s all for good only. If we’d seen it that time, surely we had only less time by then and so, wouldn’t have met this wonderful (g)old people.
    **
    It’s a really great experience – since no one (taxi drivers) almost was seems not knowing this city – nagangudi itself. Even we couldn’t find it in google itself.
    **
    Such a temple it’s and we were asking one person by one – trying to find the city, then temple. Finally we reached around noon and it was closed. I didn’t know by then such a terrific history of temple – Sundarji didn’t tell me all this – may be he would have thought that I would have felt uneasy.
    **
    Temple was very lovely – surrounded by water and after opening the temple, he told me a little of history behind the temple. Only we, two were inside the temple premises.

    So, no disturbance – was taking photos liberally, continuously, peacefully of that entirely different kind of temple we could ever see – surrounded by water.
    **
    After that, this (g)olden people – was gracefully good to us. After we got along well with them, Sugandha paatti was telling us her family problems and we suggested that pray mahaperiyava, Ragavendrar like that. For every one of our suggestion, paatti said that they were already doing that.

    And thatha is a die-hard devotee of mahaperiyava. He was having loads of books and pictures of periyava with him. When Sundarji asked about taking one book with him, he once were looking energyless person because of his olden age, was suddenly got up from his chair and he was like literally snatching books from Sundarji saying that he couldn’t give those books to anyone. Such a love he has with Mahaperiyava.
    **
    We both took blessings from them. Also had a darshan of their ko sala where atleaset a dozens of cow and calves are there.
    **
    Lot to tell. But considering the space, I will stop with this now.
    **
    Hope both gurus give their blessings to their entire family.
    **
    Thanks so much Sundarji for having taken me along with you to the temple. Was a great experience. God bless.

  7. very nice article.

    If Mr. krishnamoorthy’s wife can chant “Hare Rama Hare Krishna” , definitely,
    he will be cured. I had read that this mantra is called “Hospital Mantra” and if it is chanted, very soon the patient becomes alright and will be out of the hospital.

    shashi

Leave a Reply to shashikala Cancel reply

Your email address will not be published. Required fields are marked *